நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா - தொகுப்பாளர் உரை
எஸ்.எஸ்.போத்தையா என்னவாக இருக்க நினைத்தார்? “உள்ளத்தால் உயர்வுள்ளல்” - எனும் அறமொழிக்குப் பொருத்தமாய் - நினைப்புக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது என்பது பொதுவான நம்பிக்கை. நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைய வேண்டுமென்று நினைப்புக்களில் விதை போடுகிறோம். பெரும்பாலான வாழ்க்கைகளில் விதையொன்று போட சுரையொன்று முளைக்கிறது. சமூக அமைப்பில் கணவன் என்பதும் மனைவி என்பதும் வேறுபாடான யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நினைப்பு நிறைவேறாத பட்சத்தில். “திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” - இவ்வாறு சொர்க்கத்துக்கோ, கடவுளுக்கோ, பொறுப்பைத் தள்ளி விடுகிறோம். கனவினும் கூடுதலான புனைவு இது. போத்தையா காலத்தின் கிராமப்புற ஆசிரியர்களுக்கு அவர்கள் என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதுவாக ஆகிற வாய்ப்புகள் சூழ இருந்தன. 1950, 60-களின் ஆசிரியர்கள் சுதாரிப்பானவர்கள். கிராமங்களில் இருந்தாலும், அவர்களுக்கு நகரவாழ்வின் சூழ்ச்சி தட்டியிருந்தது. கைக்கும் மெய்க்கும் இல்லாமல் (அன்றாடச் செலவுக்குமில்லாமல்) இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றிரு...