ஒரு பெயர் சொல்லுக


பனி படர்ந்த மலையின் கீழ்
பச்சைப் பட்டு  வனவெளி;
குதிரையோட்டிக் களிக்கும்
குட்டிச்   சிறுபூவை
கிழித்துச் சிதைத்து உயிர் கொய்க
அவள் பெயர் ஆசிபா.
கற்றது கைம்மண்ணளவு
கல்லாததது உலகளவு;
கற்றலும் தேடலுமாய்க் கல்வியா?
அதிகார மையத்தின் கீழ்
ஒற்றைத் தேர்வாய் அடக்குக
இவள் பெயர் அனிதா
தூய இனிய கனவின் ஓடைகளை
நச்சுக் கழிவின் நதியாய்ப் பெருக்கியதால்
தொண்டைக் குழியில் ஒரு குரலும்
தோள்கள் மேல் இரு கரமுமாய்
உயர்ந்து திமிறும் மக்கள் கடலை
துப்பாக்கியால் தூர்த்திடுக-
இவர்கள் பதின்மூன்று உயிர்கள்.
எதுவெனினும் கேள்வியாய்
உயிர்க்கும்   அறச்சீற்றம்
நிமிருமொரு எழுத்துலக மேதமை
சிறு மூச்சும் பறிய விடாது
முளையில் திருகி எறிவீர்
பன்சாரே, தபோல்கர்
கல்புர்கி, கவுரி லங்கேஷ்
வேறு மதத்தவர் எதிர்வந்தால்
மனப்புலம் எரிச்சல் தரும்;
சின நெருப்பில் மூக்காந்தண்டு
விடைக்கும்;முக்கனியும் கசக்கும்
மாட்டுக்கறி ’கவுட்டில் ’மறைத்து
வைத்திருந்ததானென  மரணம் அருள்க
உயிரோடு கோழிக்கு
ரோமம் பறிப்பது போல்
நிலம் பறித்து வாழ்வு சிதைத்து
எட்டுவழி பசுமைச்சாலை எழும்;
 குரல் கொடுக்க  இதழ் திறந்திடின்
இருக்கிறது சிறைச்சாலை  திறக்கும்.
எல்லாம் சரியாய்த்தான் செல்கிறது;
இத்தனைக்கும் மொத்தமாய்ச் சொல்ல
மீதமிருக்கிறது ஒரு சொல் !
பாஸிசம் எனப் பெயரிடுவோமா
பாரத மாதா என்போமா !
- சூரியதீபன்
- காக்கைச் சிறகினிலே (ஆகஸ்ட் 2018)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?