சமத்துவ தீர வாசம்


(எல்லாக் கிராமங்கள் போலவே சமத்துவபுரமும் சாதி நாற்றம் மேலெழுகிற இடமாக ஆகிவிட்டது. சிவகங்கை மாவட்டம், அரசனூர் சமத்துவபுரத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த தலித் குடும்பத்தாரைத் தாக்கி, பஞ்சாயத்து கூட்டி ஊரைவிட்டே தள்ளி வைத்தார்கள் உயர்சாதிக்காரர்கள். இன்றைய செய்தி – இன்னும் வரலாறு; நாளையும் வரலாறு)

பள்ளன் எந்தக் காலம்
பல்லக்கு ஏறினது?
பகுத்தறிவுச் சுடரொளிரும்
இந்தப் பகலிலும்
பழமொழி உலவும்

சதியால் சரிந்த சாதிகள்
பல்லக்கு ஏறினதாய்
சரித்திரத்தின்
கிழ்ந்த பக்கமும் இல்லை
சிறுக்குப் பிடித்ததா
நம் சரித்திரம்?

பல்லக்குத் தூக்கிகளும்
இன்றில்லை; பல்லக்குகளும்.

சந்திர சோதி
கிளம்பிடும் நேரம்
நட்ட நடுச்சாமத்து
வேளையில்
சமத்துவபுர தைலி
பொத்திப் பொத்தி நடப்பாள்
பொதுக்குழாயில் நீர் பிடிக்க

அவளொரு
கணாக் கண்டாள்
வெளிச்சம் விளையாடும் பகல்;
சாதிச் சங்கிலியறுத்த
சமத்துவப்புரத்து
பொதுக்குழாயில்
தைலி
தைரியமாய்த் தண்ணீர் பிடிப்பதாய்.

- சூரியதீபன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌