குடிபெயர்வு

இடையில் எட்டிப் பார்க்க முடியாதபடி ஒரு வருடம் கடந்துவிட்டது. நகரத்தில் முன்கூட்டி முழுவருட விடுமுறைக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுகிறார்கள். கிராமத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, இங்கு பள்ளிக்கூடம் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதை சீனிவாசன் கண்டான்.
இடதுகை மடிப்பில் மார்போடு தழுவிப் புத்தகக் கட்டு, அத்தனை லாவகமாய்ச் சுமையைப் பெண்ணால் மட்டுமே சுமக்க முடியும்; இந்த ஒரு சுமை மட்டும்தானா? எல்லாச் சுமைகளும் அவர்களைக் கழுத்து ஒடியச் செய்கின்றன என சீனிவாசன் நினைத்தான்.பள்ளி தொடங்கியிருந்தது. முதல்வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்புக்கு நீண்டு அகன்ற கண்மாய்க் கரை மேல் வந்தாள் சௌந்தரம். வெள்ளைச் சீருடை. சூரியோதயத்திலிருந்து பெயர்த்து வந்த ஒளித்தகடு போல் கரைமேல் தெரிந்தாள். சந்திப்பை சீனிவாசன் எதிர்பார்க்கவில்லை. அவன் வந்தடைந்த சேதி அவளுக்கும் கிட்டியிருக்கிறது. முகம் ஆச்சரிய மலர்ச்சி எதுவும் காட்டவில்லை.

“மேலுக்குச் சேட்டமில்லையா?” அவனைப் பார்த்துக் கேள்வி வைத்தாள். சீனிவாசன் தன்னைத் தானே ஒரு தடவை சுற்றிப்பார்த்துக்கொண்டவன், “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அப்படியா தெரியுது?” என்று கேட்டான்.

“ஒரு பார்வைக்கு சட்டடியா சுகமில்லாம படுத்துக் கிடந்த ஆள் மாதிரித் தோணுது” நயமாக வீசியது அவள் பார்வை.

காலம் அவளுக்குள் ஓராண்டுக்குள் கட்டுக்கடங்கா அழகைச் சேமித்து வைத்திருந்தது. பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்னுக்குப் போவதற்குள் ஒரு வருடக் கணக்கு முடிந்திருக்கிறது.

இருவருக்கும் அது நல்யோகம். நீண்ட கரை மேல் ஒரு ஈ, காக்கை கூடதென்படவில்லை. அப்படியிருந்தும் சௌந்தரத்தின் விழிகள், கிழக்கும் மேற்கும் ஓடி மிரண்டன.

“ஏன், கண்ணு கெடந்து அப்படிப் பதறுது?” அவன் மெல்லிசாய்ச் சிரித்தான். அந்த நேரத்தில் காதலின் பிரியமான மொழி தேவையில்லை போல; அவனைக் கடந்து போய்க்கொண்டே பேசினாள், “எதனாச்சும் மனுசு உரு தென்படுமேன்னுதான் கிழக்கே மேற்கே பாக்கேன். பெறகு பாப்பம், என்ன?”

மறந்துபோனதை எடுத்துக்கொடுப்பவன் போல் பேசினான். “எங்கேன்னு சொல்லலை?”

அதை அவள் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவன்தான் தொடர வேண்டியதாயிற்று.

“நாளைக்கு லீவுதான?”

“ஐயோ, நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ். அதுவும் பிஸிக்ஸ் பாடம்” பதற்றமாய்ச் சொன்னாள், தப்பிக்க முடியாதவள் போல்.

“சரி, ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சி வர்றேன், என்ன”.

மடமடவென பள்ளித் திசை நோக்கி மறைந்தாள்.

எதற்கெடுத்தாலும் ‘புனுக்புனுக்’கென்று அழுத்திக் கொள்கிற கைப்பேசியோ கால்பேசியோ இல்லாத காலம். ஊர் முழுதும் அரித்தாலும் ஆகமாய் ஒரு தொலைபேசி அகப்படாது. அக்காலத்தின் ஊர்த் தகவல் பரிமாற்றம் ஒரு பெட்டிக்கடையில்தான் நடந்தது. பெட்டிக்கடை வைக்க லாயக்கான எட்டுக்கு எட்டு சதுர அடி இடத்தில் அஞ்சலகம்; அது ஒரு பேருக்குத்தான். வெள்ளை மாமா தாட்சண்யத்தின் காரணமாய் அஞ்சலகம் உயிர்தரித்துக்கொண்டிருந்தது. காலையில் கிணற்றுக்குப் போய் நீராடி, கதர் வேட்டி சட்டை அணிந்து வெள்ளைமாமா ஜமீந்தார் மாதிரி அமருவார். அவரே வரவழைக்கும் தினத்தந்தி வாசிப்பது முதல்வேலை; நாள் முழுக்க அதே வேலை. தபால் பட்டுவாடா செய்யும் ‘போஸ்ட் மேன்’ இல்லை. தாயாய்ப் பிள்ளையாய் இருக்கட்டும்; முன்னே சாப்பிடும் சோறுக்குப் பின்னே சாப்பிடும் சோறே வெஞ்சனம் (தொடுகறி) என்னுமாப்போல தொடரும் சொந்தமாகவும் இருக்கட்டும். ஒருத்தரை நம்பித் தபால் கொடுத்து அனுப்பும் காரியம் கூடாது. ஆளை வரச் சொல்லி அல்லது வீட்டுக்குப் போய் நேரில் முகம் பார்த்து, அதுஅது அந்தந்த
ஆளிடம் சேர்த்தல் வேண்டும் என்பது அவருக்குக் கிடைத்த படிப்பினை. ஊருக்குள் வரும் ஒன்றிரண்டு கடிதங்களை அஞ்சலகத்தை மூடிக்கொண்டு போகிறபோது அவரே கொண்டுபோய் நேரில் செலுத்திவிடுவார்.

விரலுக்கு விரல் கைப்பேசி இல்லாத பள்ளிக்கூடப் பிள்ளைகள் ஒருமுறை சுற்றுலா போயிருந்தார்கள். பயிரிடுதல், பாதுகாத்தல், மகசூலைப் பெருக்குதல் என வேளாண்மையைச் சுற்று வட்டார விவசாயிகளுக்குக் கற்றுத் தருகிற நவீன விவசாயப் பண்ணை கோவில்பட்டியில் அரசாங்க முயற்சியில் உண்டுபண்ணப்பட்டிருந்தது.

சூரியத் தகடுகளை விரித்துவிட்டதுபோல வெயிலடிப்பு. ஒவ்வொரு பிள்ளையும் வீட்டிலிருந்து மதியத்துக்குக் கட்டிச் சோறு கட்டிக்கொண்டு வந்துவிட உத்தரவு. விவசாயப் பண்ணையில் மதியம் கட்டிச் சோறைப் பிரித்துச் சாப்பிட்டுவிட்டு மரநிழல்களில் இளைப்பாறி னார்கள். இந்தப் பிள்ளைகள் என்ன பேசி, என்ன சொல்லி, என்ன சிரித்து, என்ன பாட்டுப் பாடி குலுங்கிக்கொள்கிறார்கள் என்று விரிந்து குளிர்ந்த குடைகளாய்க் கவிந்த மரங்கள் கவனித்துக்கொண்டிருந்தன. குளுகுளுப் புங்கைமரம் நிறைய பெண்பிள்ளைகளாய்த் தன்கீழ் சேர்த்துவைத்துக்கொண்டு கர்வம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தது. வெள்ளி முத்துக்களை விசிறியடிப்பதுபோல் அடிக்கடி பூக்களைச் சிதறிச் சிப்பாணிக் கூத்து ஆடியது. இரு கைகள் சேர்த்துச் சிறுசுகள் கொட்டிய ‘தத்தாங்கியால்’, புங்கைமரம் ஒரு சுத்துப் பெருத்துவிட்டது போல் தோன்றியது.

வீட்டுக்குள் கிட்டாத உல்லாசக் களிப்பு சுற்றுலாத் தலத்தில் வசப்பட்டிருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் எந்தப் பெண் பிள்ளையும் உம்மணா மூஞ்சி இல்லை என்பதை விவசாயப் பண்ணை தத்ரூபமாக்கியது.

“அவசரம் இல்ல; வேகமா ஓடாதீங்க. நேரமிருக்கு”

அவ்வப்போது நாலுகால் பாய்ச்சலில் பறிகிற பெண் பிள்ளைகளையும் பார்த்துக் கூட்டிப் போன ஆசிரியமார் இருவரும் சத்தம் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆடு மாடுகளை மேய்ப்பது போல் பிள்ளைகளை அமர்த்திக்கொண்டிருந்தபோதும், கேட்கவில்லை. திறந்த வெளியாயிருந்த விவசாயப் பண்ணையில் யாரும் பொடிநடையாய்ப் போகவில்லை. வீட்டில் வீதியில் அசைந்தசைந்து நடக்கிற நடையை ஏறக்கட்டி விட்டவர்கள்போல் நெட்டோட்டமாய் ஓடினார்கள். அன்னநடை என்று சொல்வார்களே அதை அன்றைக்கு மறந்துபோனவர்கள் பெண்பிள்ளைகள் .

கோவில்பட்டி திரை அரங்கில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு, அங்கேயே தூங்கி, முதல் பஸ் பிடித்து, ஊருக்கு வந்து இறங்கத் திட்டம். பெண் பிள்ளைகளுக்குத் துணையாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பது போல் கொண்டம்மா டீச்சர் வந்திருந்தார்.

சூரிய மறைவு வெட்ட வெளி விவசாயப் பண்ணையை அற்புதமாக்கியிருந்தது. குன்று, மலை எனத் தடுப்பு எதுவுமில்லாமல் ‘குபுக்கென்று’ தலைகீழாய்ப் பாய்ந்து சூரியன் மறைந்தான். தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த சௌந்தரம் “போய்ட்டியா, எங்கிட்ட சொல்லாமச் செய்யாமப் போய்ட்டயில்லே, நாளைக்கு வா பாத்துக்கலாம்,” என்று அனிச்சையாய் முணுமுணுத்தாள். விநோதமாய்ப் பார்த்தார்கள் மற்றப் பிள்ளைகள். “சூரியன் பாவம். அவன் வேலை முடிஞ்சு ஊருக்குப் போறான். அவனோட போய் வாப்பாறுறே?” என்று கைப்பிடியாய் கண்ணம்மா டீச்சரிடம் கூட்டிப்போனார்கள்.

“இவள என்னன்னு கேளுங்க, டீச்சர்” என்று பிராது கொடுத்தார்கள். கண்ணம்மா டீச்சருக்குப் புரிந்தது. ஒரு ஊர்; ஒரு தெரு; பக்கத்துப் பக்கத்து வீடு. வேறு யாரையும் விட சௌந்தரத்தை அவளுக்குத் தெரியும். சௌந்தரத்தின் ரசனை, ஏதாவது எதற்காவது பரவசமாகிவிட்டால் அவளுக்கெனச் சில சொல்லாடல்கள் குபுக்கென்று கொட்டும். தன்னறியாத லயிப்பில் ஒரு பாட்டாக, - தன்னறியாமல் சிந்தும் சிரிப்பாக, தன்னறியாத சிற்றசைவு நாட்டியமாக - அம்மாதிரியான தருணங்களில் உள்ளுக்குள் வெடிக்கும் மலர்ச்சி முகத்தில் கொட்ட உண்மையான சௌந்தரவல்லி தெரிவாள். சூரிய மறைவுப் பொழுதில் அவள் பண்ணியது பெரிய சேட்டையாகப் படவில்லை டீச்சருக்கு.

இரவுச் சாப்பாட்டுக்கு ஒரு உணவுக் கடைக்கு அழைத்துப்போனார்கள். பெரிய ஓட்டல் அது. அவரவர் விரும்பியதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட அனுமதி இல்லை. பரிமாறுகிற ஆட்கள் கணக்கு வைக்க, ‘பில்’ போட சிரமமாகி விடுமாம். அதற்காக சாப்பிடுகிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ருசி இருக்குமே? இந்த சிரமத்தை வாத்திமார்கள் கணக்கில் கொள்ளவில்லை. ஓட்டல்காரனுக்கு ‘ஏன்டுக்கிட்டு’ எல்லோருக்கும் ஒரே மாதிரி சப்ளை செய்யச் சொன்னார்கள். வேறு பண்ட பதார்த்தம் பற்றி எவரும் மூச்சுக் காட்டவில்லை. ‘வரட்டி’ மாதிரி தடித்தடி தோசைகள்.

“சுட்ட தோசை கெணக்காத் தெரியலை. தட்டித்தட்டி போட்டு எடுத்து வர்றாங்க” கொண்டம்மா டீச்சர் மேசைக்குக் கீழ் தலையை ஒளித்துக்கொண்டு முணுமுணுத்தார். ஒரு சுவையும் இல்லாத ‘வறட்டியை’ இலையோடு சேர்த்து தொட்டியில் வீசியெறிந்து விட்டு வந்தார். டீச்சருக்கு முன்னதாகவே அந்தக் காரியத்தை சௌந்தரம் செய்திருந்தாள். நினைத்ததைச் சட்சட்டென்று செய்துவிடும் குணம் வாய்த்திருந்தது.

காய்ந்து ‘அவக்காச்சி’யெடுத்துப் போயிருந்த பிள்ளைகள் வேற வழியில்லாமல் தின்று தீர்த்தனர். “கல்லைத் தின்னாலும் ஜிரணிக்கிற வயசு. நல்ல சீருக்குச் சாப்பிட்டிருப்பாங்க. ஒன்னும் முடியாம மேமூச்சு கீமூச்சு வாங்குது பசங்களுக்கு” என்று இரண்டு வாத்திமார்களும் பையன்களைக் கேலி செய்தார்கள். நொம்பலப்பட்டுப் போனார் கொண்டம்மா.

இரண்டுநாள் முன்னால் பள்ளியிலிருந்து ஓவிய ஆசிரியர் தருமர், உடற்பயிற்சி ஆசிரியர் சோதிமுத்து சோடியாய்க் காணாமல் போயிருந்தார்கள். மாணவர்கள் சீனிவாசனும் துளசிராசும் பல்ளி வளாகத்துள் தட்டுப்பட வில்லை. ராணி மங்கம்மா மடத்தைச் சுற்றி மண்டியிருந்த செடி கொடி புல் பூண்டு செதுக்கித் தரை ஒன்னுபோல ஆக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நாளில் விளையாட்டுத் திடல் தயாராகியிருந்தது. நாலுபேரும் கூலியாட்களுடன் வந்து காலைமுதல் மாலைவரை ஓடிஓடி வேலை செய்து மங்கம்மா சத்திரத்தைத் தயார் பண்ணியிருந்தார்கள்.

இம்முறை சுற்றுலாப் பொறுப்பு ஓவிய ஆசிரியர் தர்மரிடம் வந்தது. தொலைவெட்டான தலங்களுக்கு எடுத்தேறிப் போகத் திட்டமிடவில்லை. ஊரிலிருந்து மேலத்தூர் போகும் பாதையில் 3 கி.மீ தொலைவில் ஒரு சத்திரம். மதுரை அரசி ராணிமங்கம்மா உபயத்தில் உண்டாகியிருந்த ஒரு பக்கத் திறப்புள்ள நீள்சதுர மடம். புங்கை, வேம்பு, ஆல், அத்தி, வில்வை, மஞ்சனத்தி மரங்கள் என்று தாவரங்கள் பச்சைச்சேலை கட்டிய தோப்புக்குள் கல் மடம். ராணி மங்கம்மாவுக்குப் பிறகு வளர்த்துக் காத்து பச்சைப் பசேல் என்று யாரோ எவரோ ஆக்கியிருக்கிறார்கள். உச்சிப் பகலிலும் குளிந்த நிழல் சொதசொதவென ஈரஞ் சுவர்ந்து கிடக்கும்.

வேணா வெயிலில் எச்சி இளைச்சி வருகிறவர்கள் தண்ணீர் சேந்தி கைகால் உடம்பை நனைத்துக்கொள்ள சத்திரத்துக்கு முன் ‘தெலா’ வைத்த இறை கெணறு; “ஆத்தா மனசு மாதிரியே ஊறிக்கிட்டிருக்கு கிணறு” பெண்களுக்கு ராணி மங்கம்மா நினைவில் வந்தாள். என்றோ போய்ச் சேர்ந்துவிட்ட அந்த அன்னையின் கண்காணாச் சமாதிக்கு காணிக்கையாக்கும் காவடிகளாய் அவர்கள் நாக்குகள் ஆடும். புங்கையும் வேம்பும் குளிச்சிக்கு; புளி பயன்பாட்டுக்கு. இணுக்கு வெயில் தீண்டாமல் மக்கள் நடக்க, போகவர மதுரைக்குத் தெற்கேயுள்ள எல்லாச் சாலைகளும் சாலைகளின் மரங்களும் ஆத்தா வைத்தது .

ஒன்னுபோல அனைவருக்கும் களிப்பை வார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சுற்றுலாவுக்கு நான்கு பேர்களின் இருநாள் தலைமறைவு அர்ப்பணிப்பு ஆகியிருந்தது.

ஒரு காரியத்தில் ஈடுபாடு, நேர்மை இருந்துவிட்டால் திட்டமிடுதல் தன்னாலே நிறைவேறும் என்பதற்கு ஓவிய ஆசிரியர் தர்மரின் முன்னெடுப்புகள் சாட்சியமாகியிருந்தன. அந்த நீதிவானுக்கு மாணவர்கள் தோள் மாப்பிள்ளை மாதிரி காரியம் செய்தார்கள். ஆட்டத் தரைகளில் முதல்நாளே தளும்பத் தண்ணீர் தெளித்து வந்துவிட்டார்கள். துடிப் புழுதி மேல் கிளம்பவில்லை. பையன்களுக்குக் கைப்பந்து: பெண்களுக்கு டென்னி காய்ட், பேட்மின்டன், ஷட்டில் காக் என்று விளையாட்டுப் பொருட்கள் சுற்றுலா நிதியில் வாங்கிக் குவித்திருந்தார்கள் தர்மரும் உடற்பயிற்சி ஆசிரியரும். பள்ளிக்கூடத்துக்கு இன்னும் இரண்டு வருடத்துக்கு விளையாட்டுச் சாமான்களுக்குப் பஞ்சமில்லை.

பையன்களும் பெண்களுமாய்ப் பள்ளிக்கூடத்திலிருந்து நிரை பிடித்தது மாதிரி மங்கம்மா மடம் வந்தடைந்தபோது, இளவெயில் வழியனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருந்தால்தான் என்ன, நாங்களில்லையா என்பதுபோல் ராணி மங்கம்மா வைத்த சாலை மரங்கள் அவர்களைத் தாங்கிக்கொண்டு பேசிக்கொண்டு அவர்களுடன் கூடவே வந்தன.

ரெண்டு புஞ்சைக்கு அந்தாக்கில் வருகிறபோதே பிள்ளைகள் மூக்கில் பலகார மணம் மோதிற்று. எண்ணைச் சட்டியில் வடை குதித்துக்கொண்டிருக்கும் வாசனை. பிள்ளைகள் போய் உட்கார்ந்ததும் மலம்பூவரசு இலைகளில் கேசரி, வடை, பொங்கல். பிள்ளைகள் கையில் ஒரு பையில் அவரவர் வீட்டிலிருந்து ஒரு தம்ளர் கொண்டுவந்திருந்தார்கள்.

அப்போதுதான் கொண்டம்மா டீச்சர் பெண் பிள்ளைகளிடம் ஒரு ரகசியம் பகிர்ந்தாள். “கோவில்பட்டி விவசாயப் பண்ணைக்குச் சுற்றுலா போனபோது, மதியச் சாப்பாடு வீட்டிலிருந்து பிள்ளைகளைக் கொண்டு வரச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. மதியச் சாப்பாட்டுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு ஆகியிருந்தது. உண்டான பணத்தைச் சுற்றுலா ஏற்பாடு செய்த இரண்டு வாத்திகளும் சேர்ந்து ‘மொங்கான்’ போட்டுவிட்டார்கள்.”

அந்த அதிர்ச்சி பெண்பிள்ளைகளை ரொம்ப நாள் புலம்பவைத்தது. நேரில் கேட்டுவிடவேண்டுமென்று ஆளாளுக்குத் துடித்து அடங்கிப்போனார்கள். கேட்டது சௌந்தரம்தான் “ஏஞ்ச் ஸார் இப்படிச் செய்தீங்க?” இந்தக் கேள்வியை இரு வாத்திகளும் எதிர்பார்க்கவில்லை பதில் சொல்ல ஏலாமல் திக்குமுக்காடிப்போனார்கள்.

கிராமத்தில் கல்யாணம்;பூப்புனித நீராட்டு; காதுகுத்து; சீமந்தம் என எந்த விசேடம் என்றாலும் சமையலுக்கு முதல் ஆளாய் நிற்பவர்கள் தாயாரம்மா, ஆண்டாளக்கா. காய்கறி வாங்கப் போகிறது முதல் காய்கறி நறுக்குவது, அரைப்பது, உரலில் இடிப்பது, சமையல் வேலை பூரா சீராக நடக்கிறது எனில், இந்த அம்மணிமார்கள் இரண்டு பேர்தாம். ஆண்டாளுக்கு “புளிச்சாறு ஆண்டாள்” என்பது பெயர். புளிச்சாறு இல்லாமல் சாப்பாட்டுப் பந்தியா என்று பேச்சாகிவிட்டது. “ஆண்டாள்’ இல்லாமல் பந்தியா? போய் புளிச்சாறைக் கூட்டீட்டு வா” என்று கூப்பிடு பெயராகிவிட்டது.

“அக்கா புளிச்சாறு எப்படி வைக்கிறதென்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்கக்கா”ன்னு கேட்டு, ஆண்டாளக்கா எல்லாப் பக்குவமும் சொல்லிக்கொடுத்து, பிறகு தலைகீழாய் நின்னும் புளிச்சாறு வைக்க ஒரு பெண்டுக்கும் கொடுப்பினையற்றுப் போனது.

கூழுப்பானை-மேலத்தெரு தாத்தா. பதநீர் குடிக்க பனைஓலையை மடித்துப்பிடிப்பதுபோல் இரு கைகளையும் கூட்டி ஏந்திப் பந்தியில் ஆண்டாளிடம் ‘இன்னும் கொஞ்சம் விடு மருமகளே’ என்று கேட்டு வாங்கி உருட்உருட்டென்று உறிஞ்சிஉறிஞ்சிக் குடிப்பார். “கூழுப் பானையா, புளிக்குழம்புப் பானையா” என்று ஒரு பக்கம் பகடி. அந்த நேரத்தில் ஆண்டாளக்காவும் கூழுப்பானைத் தாத்தாவும் பேசிக்கொள்வது அத்தனை சுவாரசியம்.

“மருமகளே, இன்னும் கொஞ்சம் வுடு. எம் பேரனுக்கு ஒன்னையக் கட்டி வச்சிர்றேன்” என்பார் கூழுப்பானை.

ஆண்டாளக்கா நிமிர்ந்துபார்த்தாள்.

“சொன்னா செஞ்சிருவீகள்லே மாமா” கேட்டாள்.

“ஆமா. பின்னே என்ன வெறும் வாப்பாறவா நான் சொல்றது?”


“எதுக்கும் ஒங்க பக்கத்துல உக்காந்திருக்காகள்ளே ஒங்க மகன், அவர்ட்ட ஒரு வார்த்தை சொல்லீருங்க மாமா”.

ஒரு பெரு மழைக்குக் குப்பென்று மலரும் காடுபோல் விசேஷ வீடு குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கும். ஆண்டாளக்கா வீட்டுக்காரர் வெட்கத்துடன் நெளிவார்.

ஆண்டாளும் தாயாரம்மாவும் இன்று இந்த அறுபது பிள்ளைகளுக்கும் சமையல் பொறுப்பு. காய்கறி மளிகைச் சாமான்கள் காலையிலேயே டவுனுக்குப் போய் வாங்கி, கடைக்காரனோட அதே டெம்போ வேனில் இறக்கிவிட்டார்கள்.

ஆடு மாடுகள் அலைந்த இடமாகையால் நிறைய உண்ணிகள். உண்ணியா வேற விஷக்கடியா என்று கண்டுசொல்ல முடியவில்லை. சீனிவாசனுக்கு முன்னத் தங்கால் பாதம் பொதபொதவென்று வீங்கிப்போனது. குளிர்காய்ச்சல் வந்ததுபோல் குதுகுதுப்பாய் இருந்தது. வெயிலடிக்கும் கிணற்றுச் சுவரில் சாய்மானம் கொண்டு மறைவாகிவிட்டான். வெயில் சுகம் உடலில் இறங்கிக் கிறங்கிப்போய்க் கிடந்தான்.

“பிள்ளை கிடக்கிற கிடையைப் பாரு,”

விலக்குப்பாதை வழியாய் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு பெரியம்மா நிலைகுலைந்து போனாள்.

‘எம் பாதகத்தி மக்கா’ என்று கூப்பாடு போட்டுவிட்டாள். அவள் போட்ட பெருஞ்சத்தம் போய்ச் சேர்ந்ததா, இல்லை நேரேபோய்ச் சொன்னாளா எதுவும் சீனிவாசனுக்குத் தெரியாது. சீக்கு வந்த கோழிக்குஞ்சாட்டம் சுணங்கி, வெயிலில் கிடந்தவன், ஏதோ சத்தம் கேட்கவும் விழித்தான்.எதிரில் சௌந்தரம். அவள் வந்ததைத் தொட்டு பிறகு வடிவாம்பாள், மோகனா - இன்னும் சிநேகிதிகள் .

“எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாப்பா?” நா தழுதழுக்க கேட்டாள். எங்களை யாரோன்னு நெனைச்ச இல்லே என்பது போல் பார்த்தாள்.

“பெரியம்மா என்ன சொல்லீட்டுப் போகுது பாத்தியா?” கண்ணில் நீர்க்கசிவு தென்பட்டது.

“சூதானமா பாத்துக்கணுமாம், யாரு? நாங்க. யாரை? ஒன்னைய. ஒரு தடவை விட்டுட்டா அம்மான்னாலும் வராதாம், அப்பான்னாலும் வராதாம்னு மாரடிச்சிக் கிட்டே போகுது”.

அவளுக்கு ஆங்காரம் பொங்கி வருகிறது. அவன் சிரிக்கிறான். படிப்பில்லாத பெண்டுகள்தாம் அப்படிப் பேசுகிறார்கள் என்றால் இந்தப் படித்த கழுதையும் படபடன்னு வந்து நேருக்குநேர் நிற்கிறாள். அலையக் குலைய நிற்கிற இந்தப் படபடப்பு எங்கிருந்து பிறந்தது? விவசாயப் பண்ணையில் கண்ட சௌந்தரம் மனசில் வந்தாள்.

“அப்படி நாங்க விட்டிருவமா,” இரக்கமாய்ப் பார்த்தாள். “கஷ்டமாயிருக்காப்பா?” என்றாள்.

“ஒண்ணுமில்ல, நீ போ, நா வர்றேன்,”

எழுந்திருக்க பிரயத்தனம் செய்து மறுக்கவும் சொளக்கென்று கீழே உட்கார்ந்தான். வடிவாம்பாளிடம் “ஆண்டாளக்கா கிட்ட கொஞ்சம் ரசம் வாங்கிட்டு வா,” கட்டளையிடுகிறாள். இந்த மாதிரி சுற்றுலாப் போகும் நாளுக்காக, அவள் சேர்த்துச்சேர்த்துவைத்த அத்தனை களிப்பையும் தாரை வார்த்தது போல் சொங்கிப்போய் நின்றாள்.

அவனுக்குக் கோபம் வந்தது, “எதுக்கு இப்படி எடுக்காத எடுப்பெல்லாம் எடுக்கிறே? அதாம் ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல,”
சௌந்தரம் மீண்டும்மீண்டும் அந்த வார்த்தையை உச்சரித்தாள். “கஷ்டமாயிருக்கில்லப்பா, பெறகு ஏன் வேண்டாங்கிற?”

சற்றுப் பொழுதின் முன் தலைதடவி விட்டுச்சென்ற பெரியம்மாவின் கைகளினும் நீவுதல் தந்தன சௌந்தரத்தின் வார்த்தைகள். அரை மனதுக்காரியாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அஞ்சு நிமிசம் ஆகியிருக்காது; ஓவிய ஆசிரியர் தருமர் மடமடவென்று வந்தார். இத்தனை நேரமாய்க் கூடமாட இருந்த பயல் திடீரென எங்க காணாமல் போனான் என்று தேடிக்கொண்டிருந்தார்.அவனைப் பார்த்துக் கை நீட்டினார். அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கிணற்றடியிலிருந்து எழுந்து லொங்கிப்போய் நடந்தான். ஆளை லப்பிவிட்டிரும்போலத் தெரிந்தது.அவனை ஆதரவாய்க் கொண்டுபோய் மடத்தில் சன்னலிருந்த ஒரு ஓரத்தில் படுக்கச்செய்தார். “இங்கனயே இரு, நா வந்து பாக்கிறேன்,”

எதையோ தேடிப்போனவர் போல் தெரிந்தது. அநேகமாய் ஊருக்குள் அவர் ஆள் அனுப்பக் கூடும். வழக்கமாய் நீண்டநாள்ப் பழக்கமுள்ள அந்த ஹோமியோபதி மருத்துவ நண்பரை அழைத்துவரச் சொன்னார் என்பது பின்னர் தெரிந்தது.

“நீ சொன்னா நா போகணுமாக்கும்” என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள் சௌந்தரம். பொடிப்பொடியாய் முகம் வியர்த்தது. இதுதான் அவனுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவளைப் பிடித்தது. சன்னலைப் பிடித்தபடி அதன்வழியே தெரிந்த வெளி உலகை அவள் கண்டுகொண்டிருக்க, படுத்திருந்த அவன் பின்புறமாய்த் தெரிந்தவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அப்படி நிற்பது ஒரு பாவனை என அவனுக்குப் பட்டது.

சுற்றிலும் எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தார்கள். உலகம் தன் போக்கில் போவது போல் தெரிந்தது. குறுக்க மறுக்க விழிகளை ஓடவிட்டவள், யாருமில்லாததை நோட்டமிட்டு, அவன் பக்கத்தில் வந்து குத்துக்காலிட்டு “கஷ்டமாயிருக்கில்லப்பா,” என்றாள். எங்கயோ பராக்குப் பார்ப்பது போல் மெதுவாய் அவனிடம், “என் கையத் தொடு,” என்றாள். கை மட்டும் அவன் பக்கம் நீண்டது. முகம் வேறுபக்கம் திரும்பியிருந்தது. அவன் லேசாய்ப் புன்னகைத்தபடி கையைப் பிடித்தான். “இது போதும்” என்பது போல் அவ்விடம்விட்டு நகர்ந்தாள்.அவளுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவன் அங்கீகரித்துவிட்டான்.

சீனிவாசன் சிநேகிதர்களை ஊரிலேயே விட்டுவிட்டுப் பத்தாம் வகுப்புக்கு மதுரைக்குப் படிக்கப்போனான். மதுரைக்குப் போகையில் சகமாணவர், மாணவிகளிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல வகுப்புக்குப் போனான். தருமர் அப்போது வகுப்பில் இருந்தார்.“இங்க எல்லாப் பாடத்திலும் முதல்ல வந்த மாதிரி போகிற இடத்தில் நல்ல பேர் வாங்கிக் காட்டணும்” வாழ்த்தி விடை தந்தார். கைதட்டி வாழ்த்தை வழங்கும்படி எல்லோரையும் கேட்டுக்கொண்டார்.

வகுப்பறைக்குள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு போனதுபோலவே,சௌந்தரத்திடமும் விடை பெற்றது சரியில்லை; அத்தனை பெரிய வகுப்புக்குள் பார்வையை மட்டுமே வீசி சௌந்தரத்திடம் விடை பெற இயன்றது.

அது போதுமானதில்லை என உணர்ந்தான். வகுப்பறையை விட்டு வெளியேறுகையில் அவள் முகம் எப்படி இருக்கிறது என்று காண ஆசைப்பட்டான். “நீ எனக்கு யாரோ,” என்று சுண்டிப்போன முகம் எங்கோ திரும்பிக்கொண்டிருந்தது.

சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்: பின் வசமாய்க் கழுத்தில் போடப்பட்ட பூமாலை போல் பின்புறத்தில் கைகள் கோத்து நின்றாள். சொந்தக்காரத் தங்கை ரதிமாலாவின் வீட்டில் சந்திப்பு நடந்தது. ரதிமாலாவுக்குத் தாய் உண்டு. காட்டு வேலைக்குப் போயிருந்தாள்.
நனைந்த ஈரத்துணியை உடல்மேல் போர்த்தி உடல் வெப்பத்திலேயே உலர்ந்துவிடுதல் போல் இன்னதென அறியாத பிரியத்தில் நின்று உளவெப்பத்தை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். இனிமேப்பட்ட நாட்களில் சந்திக்க இயலுமா என அவன் முகத்திலிருந்து பதிலை லாவி எடுக்க முயலுகின்றன முகத்துக்கு அடங்காத கண்கள். “இடைப்பட்டு நீங்க வருவீங்களா,” சௌந்தரம் தன்னுள்ளிருந்ததை வெளிப்படுத்தினாள்.

“வராமலயா?”அவனால் அதற்குமேல் கூறப் பதிலேதும் இல்லை.

அவன் அளித்த பதிலை அவள் ஏற்கவில்லை; லகுவாய்த் தட்டிவிட்டாள்; எனக்கு ஒங்களப் பாக்காம இருக்க முடியாது என்பது போல் வேறுபக்கம் முகம் திருப்பினாள். பார்வை வெறித்து நின்றது.

“கடிதம் எழுதட்டுமா?”

“வேற வெனையே வேண்டாம்,” கலவரப்பட்டாள்.

“நீங்க எப்படிக் கூடி அனுப்பினாலும், இந்த போஸ்ட் ஆபீஸுக்குத் தானே வந்தாகணும். சும்மாவே பொசும்பலா இருக்கு. இதுவும் கைவசம் கிடைச்சா, பெருமழையா கொட்டித் தீத்துருவாங்க”.

அவள் கொள்ளும் பயத்தில், தட்டிக்கழிக்க இயலாத பெரிய காரணம் மலைவடிவில் எதிரில் நின்றது. அது இதுதான்;


ஒரு ஊர், தெரு தனித்தனி. கோட்டு ரெட்டி, பண்டு ரெட்டி என்று இரு பிரிவாய் இருந்தார்கள். ஒரு ஊர், ஒரு சாதி, ஒரு கூட்டம் என்பது போல் வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், உட்சாதிப் பகை ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டு நின்றது. இரண்டு பிரிவுகளும் ஒரு திக்கில் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். ரெண்டு பேருக்கும் பொதுவாய்த் தென்பட்டது ஒரே ஒரு விசயம் - தெலுகு மொழி. அதிலும் சொற்களும் உச்சரிப்புத் தொனியும் வேறுவேறு.

கோட்டு ரெட்டிகள் கோட்டைக்கு, அரசு குடும்பத்துக்கு காவல்காரர்களாய் இருந்த இனம். வடக்கேயிருந்து நாயக்க மன்னர்கள் படையெடுத்து வந்த காலத்தில் கூடவே பாதுகாப்பு நாயகர்களாக வாள் ஏந்தி வந்தவர்கள். கோட்டைக் காவலர்களாக இருந்தவர்களாம். கோட்டை ரெட்டி என்ற பெயர் கோட்டு ரெட்டியாகியிருக்க வேண்டும். அடிதடிச் சண்டைக்கு அஞ்சாத முரட்டு ஆட்கள். சேர்ந்தமானைக்கு வடக்கு கிழக்குத் தெரு ரெண்டும் அவர்கள் வசிப்பிடம்.

தெற்குத் தெரு, மேலத் தெரு இரண்டும் பண்டா ரெட்டி. பண்டு என்றால் பழமை. பூர்வீக ரெட்டிகள்; ஆனால் விவசாயிகள். தோளில் கலப்பை சாத்தி நிலம் உழப்போகிறவனுக்கும் அரிவாளைத் தோளில் தொங்கவிட்டு அலைகிறவனுக்கும் குண மாறுபாடு உண்டு. விவசாயிக்கு - சம்சாரி ஒழுங்கு என ஒன்றுண்டு. விளைந்த புஞ்சையில் பயிர் பிரிப்புக்குப் பொழிமிதிக்கிற போது, இந்தப் பக்கம் அந்தப்பக்கம் ஒரு இணுக்கு கூடாது குறையாது மிதித்துப் பகிர்ந்தான். நடு உச்சி எடுத்து போல் பொழி பிரித்த புஞ்சை தென்படும்.

“எங்கனேன்னு தெரியலே.ஒரு பண்டு ரெட்டிப் பய நம்ம பிள்ளை கையைப் பிடிச்சிருக்கான்,”

கிராமத்தில் எந்த ஒரு சேதிக்கும் பூர்வீகம் ஒன்றாக இருக்கும். ஒரு நாக்கிலிருந்து இன்னொரு நாவுக்குப் போகிற வேளை நிறைய இறக்கைகள் துளிர்த்துவிடும். “அந்தப் பயலுக்கு கறி வெறாய் ஏறிருக்கு,’’ முறுக்கிக்கொள்கிற எல்லைக்குப் போய்நின்றது.

அது அப்படியாகத்தானா? அவள் கையை நீட்டித் தன் பிரியத்தைப் பரிவர்த்தனை செய்துகொண்டாள். அது பிரியங்களின் பரிமாற்றம். கவைக்குதவாத இந்தப் பேச்சு அவள் காதுகளை எட்டியதும் அவளுக்குச் சட்டென்று எரிச்சல் வந்தது.

“அது எந்தப் பய? எம் முன்னால வந்து நிக்கச் சொல்லு?” என்றாள். நிமுச்சலாய் எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலை அவளுக்குத் தந்தது இப்போது இந்தப் பிரியம்.

ஒரு பதிலும் அந்த நேரத்தில் தென்படக் காணோம். “இடைப்பட்டு நீங்க வருவீங்களா, சீனி”  சௌந்தரம் உச்சரித்த அந்தச் சொல்லை அப்படியே உள்வழுக்கித் தனக்குள் பத்திரப்படுத்திக்கொண்டான். இனிவரும் நாட்களில் நினைப்பு தோன்றும்போதெல்லாம் அந்த ரத்தினக்கல்லை எடுத்துப்பார்த்துக்கொள்வான். அவர்கள் பிரிந்தார்கள்.

இப்போது ஒருவருட காலம் கடந்து பிரியக்காரியை, கண்மாய்க் கரையில் தன்னைக் கடந்துபோக முயன்றவேளையில் சந்திக்கிறான். அவன் முழுவருடப் பரீட்சை முடிந்துவந்துவிட்டான். இவர்களுக்கு இங்கு இன்னும் பள்ளி நடந்துகொண்டிருக்கிறது.

கண்மாய்க்கரையில் கொடுத்த வாக்குறுதி, பள்ளிக் கூடத்தில் போய் மறைந்துகொண்டதும் அத்தோடு அத்துப்போய்விடுமா? குறித்த நேரத்தில் அவள் பிரசன்னம் கிட்டவில்லை. சௌந்தரம் வரத் தாமதமாகியது.

“ஏன் இத்தனை நேரம்?” அவனுக்குள் கோபம் முகம் காட்டியது.

“எங்கயாவது போய், வாய் பேசிக்கிட்டிருப்பா” ரதிமாலா வின் குரல் இழைந்து வந்தது. ஒருவருடம் முன்னர் அவளிடம் விடைபெற்றுப் போன அதே ரதிமாலாவின் வீட்டில் வந்து காத்திருக்கிறான். சொந்தக்காரத் தங்கை ரதிமாலாவுக்கும் அவனோடு பகிர்ந்துகொள்ள நிறைய உண்டு. சௌந்தரம் வரத் தாமதமான இடை நேரத்தில், ரதி தன் மனக்கதவுகளைத் திறந்துவைத்திருந்தாள். லேசுபாசாய், தொட்டும்தொடாமலும், அவள் திறந்து வைத்த - சில சேதிகள் சீனிவாசனை உலுக்கி எடுத்தன. திகில் பிடித்தவனாட்டம் கேட்டுக்கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருக்கையில் “கஷ்டமாயிருக்காப்பா?” என கேட்டுக்கொண்டே உள் நுழைந்தாள் சௌந்தரம்.

எங்கேயோ, எப்போதோ கேட்ட குரல் நினைவில் பீறிட்டது. ஒரு வருசம் முன்னுக்கு ராணி மங்கம்மா சத்திரம் சுற்றுலாத் தளத்தில் கிணற்றடியில் வெயிலுக்கு இதமாய்ப் புழுப்போல் சுருண்டிருந்த வேளையில் காதில் நீவிய குரல். ஒரு வருடகாலமாய் மனக்காதுகளில் நீடித்து ஒலித்துக்கொண்டிருந்த குரல். முன்னம் அன்றிருந்த பரிவு சற்றுத்துடைத்துவிடப்பட்டிருந்த மாதிரி தெரிந்தது. அவசரமோ படபடப்போ கரிசனமோ அற்ற நிதானம் குரலில்.

உள் நுழைந்தவள், தாமத வருகைக்கான காரணம் எதுவும் சொல்லவில்லை. முதலில் அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நேரம் கடந்ததுக்கு உண்டான பின்னணி ரதிக்குத் தெரிந்திருக்கிறது. பட்டும் படாமலும் ரதி வீசிய சில சேதிகள் வழி சீனிவாசனால் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதைப் போய் ஏன் விசாரிக்க வேண்டும்? கேட்கப்போய் எதிர்த்தரப்பு எடக்கு முடக்காய் திமிறிப் பேசி, வம்பு வழக்கடியாக ஆகவா? அதற்காகவா இவ்விடம் வந்தது? அப்படியே தகராறு பண்ணினால் என்ன?

அவன் நேரடியாக முகம்பார்த்துச் சொன்னான், “ஏன் தாமதமா வந்தேன்னு எனக்குத் தெரியும்,”

“தெரிஞ்சு போச்சா? ஒங்களுக்கு யாரு சொன்னா?”

அவளுக்குப் பின்புறம் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ரதிமாலா “நா சொன்னது சரியாப் போச்சா,” என்று இவனை நோக்கிக் கண் சிமிட்டினாள்.

சௌந்தரத்திடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. படபடவென எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டாள்

“எல்லாம் ஒங்க சிநேகிதர்தான். எவ்வளவு திமிரிருந்தா ஒரு கோட்டு ரெட்டிப் பெண்ணை, பண்டு ரெட்டி சிநேகிப்பார்? சொன்னாக் கேட்டால்தானே.”

சாவதானமாய் சீனிவாசன் கேட்டான், “யாரு அப்புக்குட்டியா?”

சௌந்தரம் சட்டென்று அமைதியானாள். அந்த அமைதி இவனைக் குடைந்து, குற்றம் சாட்டுவது போலிருந்தது. நீ இடையில் வந்து கண்டு போயிருந்தா நா இப்படி ஆகியிருப்பனா என்று கனத்த கேள்வியைச் சுமந்து நின்றுகொண்டிருந்தது. “எனக்கென்னேன்னு விட்டுட்டுப் போயிட்டே ஒரு வருசம்!எவ்வளவுநீளமான வருசம் அது. இளமனசை வச்சிக்கிட்டு பதகளிப்பா நா இருந்த இருப்பு” என்று அவள் கடைப்பிடித்த அமைதி பேசியது. அவளுடைய நீடித்த அமைதியும் சிந்திப்பும் சிந்திப்பின் தர்க்கமும் அவனைக் குற்றம் சாட்டி நின்றன.

முகம் மனசுக்கான திறவுகோல். முகம் பார்த்துப் பேசுதல் என்பது மனசு பார்த்துப் பேசுதல். அந்த நேரத்தில் இன்னொருவர் அவ்விடத்திலிருப்பது மனசு பார்த்துப் பேச தடை செய்வதாக அமையும்: அவனுக்குச் சைகை செய்து விட்டு வெளியேறினாள் ரதி.

“சீனி” சௌந்தரம் மெல்ல உச்சரிப்பது போலிருந்தது. நாக்கு தழுதழுத்தது.

சீனிவாசன் திடுக்கிட்டான். பன்னிரண்டு மாதம் நினைவுகளின் ரங்குப் பெட்டியில் வைத்துக் காத்த அந்த ரத்தினக் கல்லை, அவள் வருகைக்குச் சற்று முன் 5 நிமிடம் ஆகியிருக்காது, தூக்கி வெளியில் வீசியெறிந்திருந்தான்.

“கஷ்டமாயிருக்காப்பா?”

இந்தச் சொற்கட்டும் தொடர்ந்து வருகிறது. போன வருடம் ராணி மங்கம்மா சத்திரத்தில் பார்த்த வேளையில் பரிதவிப்பாய் அவளிடமிருந்து வெளிப்பட்டது. இச்சொல் தந்த அவள், போன வருடம் இதே மாதத்தில் விடைபெறலுக்கு முன் சந்தித்த அந்த சௌந்தரம் அல்ல. இடைப்பட்ட நாட்களின் வேகத்தில் இன்னொரு ஆண்மனசுக்குத் தானே குடிபெயர்வு ஆகிக் கொண்ட பெண். ஒரு வருடம் எந்தச் சொல்லை அவன் தனக்குள் ஈரச் சதசதப்பு குறையாமல் வைத்திருந்தானோ - ஒரு வருட காலம் அவள் எச்சொல்லை மறந்து போயிருந்தாளோ அச்சொல்லை சௌந்தரம் மீண்டும் ஒலிக்கிறாள்.

ஒரு விதை வேரூன்றிட மனசு என்னும் மண் பொதுமித் தானே இடம் கொடுத்தது. இலை சிறகு விரிக்க ஆரம்பித்த வேளை, காலம் அதை வேறொரு இடத்தில் பெயர்த்து நட்டுவிடுகிறது இருவருக்கும் இடையில் எந்தத் தொடர்புமில்லாமல் மறக்கச் செய்த காலம் மெல்லமெல்ல அவளை வேறு திசையில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.

“ஒங்களுக்குக் கஷ்டமாயிருக்கில்ல. பருத்திக்காட்டில் வெள்ளைமொச்சி அடிவாங்குகிற அளவுக்குப் போயிருச்சி. நா ஏத்துக்கிட்டேன்.”

முரட்டு ஆட்களின் அடி, உதை, இம்சை எல்லாவற்றுக்கும் பழக்கமாகிவிட்டது: அப்புக்குட்டியின் இடத்தில் இருந்திருந்தால் இவனும் பருத்தி காடும் பரசிப்பரசி, விரட்டிவிரட்டி அடிக்கும் வெள்ளைமொச்சி விளார் விளாசலும் வாங்கிக்கொண்டிருப்பான்.

இந்த சௌந்தரம் நிமிச்சலாய் எதிர்த்து நிற்கிறாள்.

சௌந்தரம் வெளியேறியதும் வாசற்படியில் உட்கார்ந்திருந்த ரதிமாலா “என்ன சொல்லீட்டுப் போறா” விசாரித்தபடி உள்ளே வந்தாள். “ஏதோ சொல்லீட்டுப் பெருவழி போறா” என்பது போல் அண்ணாந்து அவனை நோக்கினாள். அதிர்ச்சியில் உறைந்திருந்த சீனிவாசன் தன் முகத்தைத் துடைத்து சீர் செய்தான். ஒரு நோக்கில் மனதைச் சீர் செய்கிற முயற்சி அது என்று தங்கை அறிவாள்; “அவ கொடுத்து வச்சது அவ்வளவுதான்,” தங்கை அவனுக்காக இரக்கப்பட்டாள்.

ஒன்று நடந்துவிடுகிறபோது அதை ஏற்றுக்கொண்டு அடுத்த காரியத்துக்கு நகர வேண்டும். சௌந்தரம் மனப்பூர்வமாக ஏற்று, அடுத்த செயலுக்கு எட்டுப் போட்டுவிட்டாள். அவளோடு மல்லுக்கட்டி மனதை மீட்டெடுக்கும் யுத்தம் தேவையா என்ன? தோல்வி அதன் இறுதிக் கதி என அறிவான்.

ரதிக்கு சிநேகிதி மேல் கோபம் வந்தது. “கோவேறுக் கழுதை” என்று கூட திட்டியிருக்கலாம். ஆனால் சாதிப்பேரைச் சொல்லி வைதாள். இன்னும் வசவு நோங்கியிருப்பாள். அவன் இருக்கிறானே என்ற நினைப்பு அவளை விலக்கியிருந்தது.

மனசு சம்பந்தப்பட்ட ஏதொரு அசைவையும் பருவட்டாய்ப் பார்க்கக் கூடாது: ஒரு இடத்தில் பகிரப்பட்ட மனம், இன்னொரு இடத்துக்கு பெயர்வு ஆகக்கூடாது என்ற நியதி எதுவும் இல்லை. மனிதன் அதைத் தீர்மானிக்க முடியுமா? காலம் அதைத் தீர்மானிக்கிறது. சூழல், இடம், வாழ்நிலை, மனநிலை எல்லாவற்றின் குவியம் காலம்.

அவன் எந்த இடத்தில் பிழைவிட்டான்? காதலிக்கத் தெரிந்த அளவுக்கு, அதை வாழவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பிழை விட்ட இடத்தை அவன் ஏற்றுக்கொண்டான்.

நன்றி: காலச்சுவடு - மே 2017

(இன்றைய காலத்தில் காதல், ஒருதலைக் காதல் போன்ற காதல் கொலை, அக்கினித் திராவக வீச்சு என பெண் மீது நிகழ்த்தப்பெறும் வன்முறைகள் கருதி, ஒரு ஆணின் மனதைப் பண்படுத்தும் நோக்கில் இக்கதை உருவாக்கப் பட்டது. அல்லது அவ்வாறு நினைத்ததும் தானே உருவாகிக் கொண்டது.
- பா.செயப்பிரகாசம்)


வாசகர் கடிதம்
பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள ‘குடிபெயர்வு’ மீண்டும் மீண்டும் வாசித்து, எழுத்து நுட்பங்களை உணர வேண்டிய அருமையான கதை. பள்ளி வயது மாணவ, மாணவியரின் உணர்வுகளையும் புறச்சூழல்களையும் யதார்த்தத்தையும் உள்ளடக்கிய அற்புத எழுத்தோவியம். வட்டார வழக்குச் சொற்கள் ‘அது பாட்டுக்கு’ வந்து விழுந்துகொண்டேயிருப்பது சுவையூட்டுகிறது. உளவியல் நோக்கில் வாசிக்கும்போது புதிர்கள் விலகுகின்றன.

- தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு (காலச்சுவடு, ஜூன் 2017)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌