நேர்காணல் - பா.செயப்பிரகாசம்

ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் 'உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்' முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர். ஒரு ஜெருசலேம், ஒரு கிராமத்து ராத்திரிகள், காடு, இரவுகள் உடையும் முதலான பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், வனத்தின் குரல், நதிக்கரை மயானம், தெக்கத்தி ஆத்மாக்கள், ஈழக்கதவுகள் உள்ளிட்ட ஆறு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்களில் ஒருவரான பா.செ, முதலில் கல்லூரி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். மனைவி மணிமேகலையுடன் தற்பொழுது சென்னையில் வசித்துவருகிறார். மகன்: சூரியதீபன், மகள்: சாருலதா. பா.செ., தமிழகத்தில் இயங்கிவரும் மார்க்சிய-லெனினிய இயக்கமொன்றின் பண்பாட்டுத்தளத்தின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டதோடு அதன் கலை இலக்கிய இதழான 'மனஓசை'க்குப் பொறுப்பேற்றுப் பத்தாண்டுகள்வரை அதனை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவர். இந்நேர்காணல் சென்னை, எம்.எம்.டி.ஏ குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் பதிவுசெய்யப்பட்டது.


வழக்கமான ஒரு கேள்வியிலிருந்தே தொடங்கலாம்னு நினைக்கிறேன். அதாவது உங்களுடைய குடும்பப் பின்னணி, கல்விச் சூழல் குறித்து...
சாதாரண ஏழை விவசாயக் குடும்பப் பின்னணிதான் என்னுடையது. எங்களுடைய ஊர் அப்போது நெல்லை மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லை. இப்போது தூத்துக்குடி மாவட்டம். புஞ்சை விவசாயம்தான். வானத்தை எதிர்பார்த்திருக்கும் நிலங்கள். அந்த நிலங்களில் கம்பு, சோளம், கேழ்வரகு, நவதானியங்கள், வணிகப் பயிர்களான பருத்தி, மல்லிதான் பயிரிடுவோம். மழை பெய்தால் ஆண்டுக்கு ஒருமுறை விவசாயம். மழை இல்லாவிட்டால் அதுவும் இல்லை. அது வானத்துக்குக் கீழே நடக்கும் ஒரு சூதாட்டம். இப்ப சமீபமாப் போயிருந்தபோதுகூட 'உங்க ஊருப் பக்கம் மழை எப்படி?' எனக் கேட்டதற்கு 'ஒரு நம்பர்ல போயிருச்சுன்னு' ஒரு விவசாயி ரொம்ப நல்லாச் சொன்னாரு. லாட்டரிச் சீட்டு மாதிரியான சூதாட்டம் அது. ஒரு ஆண்டில் விவசாயம் மிக அதிகமாக இருக்கும். பிறகு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு இல்லாமலும் போகும். அப்பத்தான் பஞ்சம் பிழைக்கப்போவதெல்லாம் நடக்கும். அப்படி ஒரு கட்டத்தில் நாங்க எங்களுடைய பாட்டியின் (அம்மாவின் அம்மா) ஊருக்குப் பஞ்சம் பிழைக்கப் போயிருந்தோம். எங்க ஊரு விளாத்திக்குளத்திற்குப் பக்கத்தில் உள்ள ராமச்சந்திராபுரம். எங்க பாட்டி ஊரு வடக்கே அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சென்னம்மரெட்டிபட்டி. எங்க அய்யா அப்ப மாடு, வண்டி வச்சிருந்ததால உப்பளத்திற்குப் போனாரு.

நீங்க குறிப்பிடுவது குறிப்பாக எந்தக் காலம்?
1950. அப்போவெல்லாம் தீர்வை கொடுப்பது ஊர்ப் பொது மடத்தில் வைத்து நடக்கும். தீர்வை வசூலிக்கப் பெரும்பாலும் கிராம முன்சீப், கர்ணம் போன்ற நிலையில இருக்கிற அதிகாரிகள்தான் வருவாங்க. வரும்போது ஊர்க்காரங்களெல்லாம் கூடியிருப்பாங்க. அப்ப ஏன் தீர்வை செலுத்தலன்னு கேப்பாங்க. அப்படி ஒரு தடவை தீர்வை கேட்கும்போது எங்க அய்யா எந்தவிதப் பதிலும் சொல்ல முடியாமல் கண்களில் நீர் ததும்ப நிற்கும் ஒரு காட்சியைப் பார்த்தேன். அப்படி ஏழ்மையான குடும்பம். ஏழ்மை நிலையில் இருந்தாலும் நேர்மையாகவும் இந்தச் சமூகத்திற்கு நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற ஒரு மரபார்ந்த குணம் எங்கள் குடும்பத்திற்கு இருந்தது.

இது போன்ற ஒரு சூழலில் உங்க கல்வி எப்படி இருந்தது?
எங்க சொந்த ஊருல ஐந்து வயதுவரை இருந்தேன். அப்புறம் என்னோட தாயாரின் ஊருக்குப் போனேன். நாங்க மொத்தம் நாலு பேரு. நான், அண்ணன், இரு பெண்கள். கடைசிக் குழந்தை பால்குடி மறக்காத குழந்தையாக இருந்தபோது என்னோட சிறுவயதிலேயே என்னோட தாய் இறந்துடுறாங்க. அதுதான் 'ஒரு ஜெருசலேம்' கதை.

'மயானத்திலிருந்து ஊருக்குத் திரும்புகிற பாதை அவளை இன்னொரு மயானத்திற்குக் கூட்டிச் செல்வதாயிருந்தது' அப்படின்னு அதில் வரும். பாட்டியின் இடுப்பில் அந்தக் குழந்தை இருக்கும்.

ஆமாம். பாட்டியின் ஊர்லதான் நானும் அண்ணனும் படிச்சோம். ஏன்னா அந்த ஆண்டுதான் அங்கே உயர்நிலைப் பள்ளி வந்தது. வசதி படைத்த ஒரு விதவைப் பெண்மணி ஊருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று தொடங்கியது அது. அரசின் உதவி பெற்ற அந்தத் தனியார் பள்ளியைக் காமராஜர் தொடக்கிவைத்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை நான் தான் பள்ளியின் முதல் மாணவன் என்பதால், காமராஜர் தொடக்கிவைத்த மதிய உணவுத் திட்டத்தில் காமராஜரிடமிருந்து முதல் மதிய உணவுப் பொட்டலத்தைப் பெற்றேன். காமராஜரிடம் கையேந்திய முதல் மாணவன் நான். ஆனால் அதற்கு அன்றைக்கு இரவில் என்னோட பாட்டி திட்டிய திட்டு இருக்கு பாருங்க. . .

அந்த அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதி இருக்கீங்க, இல்லையா?
ஆமா, 'கோபுரங்கள்'ன்னு ஒரு கதை. சாதாரண மனிதர்கள் உழைப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். உழைப்பின் காரணமாகத் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றணும்னு நினைக்கிறாங்க. வேறோரிடத்திலிருந்து வரும் உதவி, தானம் என்பதைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்கிற மனப்போக்கு இருக்கு பாருங்க, அதனோட வெளிப்பாடாத்தான் அதை நான் பார்க்கிறேன். பாட்டி ஒரு சாதாரண உழைப்பாளி. வேற நிலபுலம் ஒண்ணும் கிடையாது என்பதால் தொடர்ந்து அங்கே படிப்பதற்கான சூழல் இல்லை.

நீங்க பஞ்சம் பிழைக்கப்போனபோது அப்பா கூட இருந்தாரா?
பஞ்சம் பிழைக்க ஊரவிட்டு வர்றதுங்கிறதே மழை இல்லாததுனாலதான். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிஞ்சதும் ஊருக்குத் திரும்பிப் போயிருவாங்க.

உங்க ஊருல மழை பேஞ்சிருக்கு, விவசாயம் பண்ணலாம்ங்கிற மாதிரி செய்திகள் வரும். தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி இப்படிப் பல இடங்களுக்கும் போயிருப்பாங்க. போயிருக்கிற எடத்துக்குத் தகவல் வரும். சரி பழையபடி விவசாயம் பண்ணலாம்ங்கற நம்பிக்கையோட திரும்பிருவாங்க. இது புலம்பெயர்தலோ குடிபெயர்வோ அல்ல அதனால் பஞ்சம் பிழைக்கப்போயிட்டு நாங்க திரும்பிவந்துட்டோம். ஐந்து வயதுக்கப்புறம் படிக்கணும்ங்கிறதுக்காகத்தான் அங்க போனோம்.

அப்ப நீங்க மட்டும்தான் போனீங்களா?
எங்க அண்ணன் ஏற்கனவே அங்க பாட்டிகூட இருந்து படிச்சிட்டு இருந்தாரு. மதுரையில் என்னோட சித்தப்பா மீனாட்சி மில்லில் தொழிலாளியா இருந்தாரு. அங்க போய்ப் படிக்கலாம். ஏன்னா இங்க படிக்கிறதுக்குப் பொருளாதாரச் சூழல் இல்ல. ஏற்கனவே அண்ணன் மதுரைக்கு வந்துட்டாரு. அதனால நானும் வரலாம்னு. அப்ப எங்க பள்ளியில் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. திருமணமாகாத, தலித் கிறித்தவரான காந்திமதி டீச்சர் தான் தலைமையாசிரியர். அவங்க தான் எங்களுக்கு ஆதர்சம். மாணவர்களுக்காக நிறைய உழைச்சாங்க. அவங்ககிட்ட நான் மதுரைக்குப் படிக்கப் போக டிசி கேட்டேன். மோசமாப் படிக்கிற பையன்னா டிசி கொடுக்கலாம், நீ நல்லாப் படிக்கிற பையனாச்சே எப்படி டிசி கொடுக்கறதுன்னு கேட்டுட்டு மாணவர்களைப் பார்த்து இவனுக்கு டிசி கொடுக்கலாமான்னு கேட்டாங்க. மாணவர்கள் கம்முன்னுதான் இருந்தாங்க. கேட்டுட்டுக் குடுக்க முடியாது போன்னு சொல்லிட்டாங்க. அப்ப நான் கேட்டேன், நேத்துத்தான அன்னலட்சுமிக்குக் கொடுத்தீங்கன்னு. "அவ சடங்காயிட்டா கொடுத்தேன். நீயும் சடங்காகு, கொடுக்கறேன்"னாங்க. அப்புறம் நான் மதுரைக்கு வந்துட்டேன். மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி. மீனாட்சி மில்லிலிருந்து அந்தப் பள்ளிக்கு ரயில் தண்டவாளம் வழியேதான் போகணும். கைகோத்துட்டே நடந்துபோவோம். கால் சுடுகிறபோது இறங்கி நடப்போம். ஓரத்துல சில இடங்களில் புல்தரை இருக்கும். அப்ப சனிக்கிழமை அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் இருக்கும். மதிய வெயிலில் திரும்பிவருவது ரொம்பக் கொடூரமா இருக்கும். இதுதான் என்னுடைய பள்ளி வாழ்க்கை. என்னுடைய படைப்புக் களம் என்பதுகூடக் கிராமம். கிராமம் சார்ந்த விஷயங்கள், நகரத் தொழிலாளர் சார்ந்த விஷயங்கள், பிறகு சென்னை அலுவலக உத்தியோகம் சார்ந்த விஷயங்கள் என்ற மூன்று தளங்களில்தான் பெரும்பாலும் நடந்திருக்கும்.

நீங்க 70களோட தொடக்கத்துலதான் எழுத ஆரம்பிச்சீங்க, இல்லையா?
அதுக்கு முன்னாடி ஒரு செய்தி சொல்லிடறேன். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறபோதே இந்தியில் ராஷ்ட்ரபாஷா வரைக்கும் படிச்சேன். அது ஒரு பிராமணப் பள்ளிக்கூடம்ங்கிறதால அங்கேயே இந்தி சொல்லித் தந்தாங்க.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குறதுக்கு முன்னாடியா?
ஆமா, 1957இலிருந்து 1961 வரைக்கும். பள்ளியில் இந்தி ஒரு பாடமாயில்ல. ஆனா தேர்வுகளுக்குப் போறதுக்காக இந்தி வகுப்புகள் நடத்தினாங்க. அதில் சேர்ந்து படிச்சேன். தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமா நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிற போது முற்றிலும் ஒரு தமிழ் மாணவனாக மாறிட்டேன். அதனால ராஷ்ட்ரபாஷா தேர்வுக்குத் தயாராயிட்டிருந்தபோது மத்திமா தேர்வுக்காக நான் பெற்றிருந்த சான்றிதழையே கிழிச்சுப் போட்டேன். அந்த மொழி நமக்கு நல்லாப் புரியணும்கிறதுக்காக அப்ப இந்திப் படங்கள்லாம் நிறையப் பார்ப்பேன். புரியும். அப்புறம் வேணும்னே மறக்கடிக்கப்பட்ட மொழிதான் இந்தி. கல்லூரியில் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழ்தான் எடுத்தேன். இளங்கலையிலும் தமிழ்தான். அது நான் திட்டமிட்டே எடுத்தது. அதோட தொடர்ச்சியாத்தான் 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம். இதில் நாங்க மாணவர் தலைவர்களா அறியப்படுறோம். நா.காமராசன், கா.காளிமுத்து, நான் மூன்று பேரும் மதுரையில் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துனோம். அப்புறம் மூன்று பேருமே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைதானோம். அப்போ நாங்க முழுக்க முழுக்கத் திமுக.

இந்தக் காலகட்டத்துல இலக்கியம் சம்பந்தமான புரிதல் எப்படியிருந்தது? யார்யாரை வாசிச்சீங்க?
வாசகன். தேர்ந்த வாசகன். வாசிப்பின் காலம் அது.

தொடக்கத்தில் நிறைய மொழியாக்க நூல்கள். அப்பொழுது எனக்குப் புதுமைப்பித்தனோ ஜெயகாந்தனோ மற்றவர்களோ அறிமுகம் கிடையாது. குறிப்பாக சரத்சந்திரர், காண்டேகர். காண்டேகர் மொழிபெயர்ப்பு நூல்கள் வாசித்ததால்தான் மு.வவுக்கு வந்தேன். மு.வ. என்னை ஈர்த்ததுக்குக் காரணமே அவர் காண்டேகரைப் பிரதிபலித்ததுதான். பின்னர் ரஷ்ய இலக்கியங்கள். அதன் பின்னர்தான் தமிழில் வாசிக்கத் தொடங்கினேன். கவிதைகளில்கூட மொழியாக்கக் கவிதைகளைத்தான் முதலில் வாசித்தேன்.

60கள் மொழியாக்கங்களின் காலம். கலீல் கிப்ரான், இக்பால் போன்றவர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருந்தன. அவற்றில் கவித்துவ வரிகளை நான் தேடித்தேடிப் படிப்பேன். கவித்துவமான வரிகள் என் எழுத்துக்களில் தாக்கங்களை ஏற்படுத்தின. நாவல்களில்கூடக் கவித்துவம் நிரம்பிய நாவல்களையே விரும்பிப் படித்தேன். எனக்குத் தமிழ் எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை. சரத் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, பஷீர், உருபு, பொற்றேகாட், தகழி போன்றவர்களின் படைப்புகள் என்னைப் பாதித்தவை. அவர்களது எழுத்துக்களைப் படித்த பின்புதான் எனக்கும் எழுதணும்னு தோணுச்சு. சரத்சந்திரர் படைப்புகளிலே பெண்கள் அழுபவர்களாக மட்டுமே வந்தார்கள். பாலபருவத்தில் எனக்குள் கூடுகட்டியிருந்த துயரம் சரத்சந்திரரை வாசிக்கக் காரணமாயிருக்கலாம்.

நீங்க ஒரு படைப்பாளியா உருவானது பற்றிய உங்களது சொந்த மதிப்பீடு என்ன? நீங்க எப்படி ஒரு படைப்பாளியா உருவானீங்க?
வாழ்க்கை சார்ந்த தாக்கம்தான் இதற்கு முதல் அடிப்படைன்னு நினைக்கிறேன். அப்புறம் வாசிப்புரீதியான தாக்கம். வாழ்க்கையும் வாசிப்பும் இணைகிற போது எழுதுறது இயல்பா வந்துடுது. ஏன்னா ஒரு வாசகன் நீண்ட காலத்திற்கு வாசகனாகவே இருக்க முடியாது. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கட்டத்திற்கு அவன் வரவில்லையெனில் ஒரு வாசிப்புச் சோம்பேறியா மாறிடுவான். வாசிப்பு என்பதே ஒரு சுகமானதாக மாறிவிடும். நான் ஒரு வாசகனா இருந்ததன் தாக்கம் உள்ளுக்குள்ளே இருந்து படைக்கணும்னு தோணியது. நான் பிறந்து வாழ்ந்த குடும்பத்தின் நேர்மை இயற்கையாகவே உள்ளுக்குள்ள இருந்தது. படிக்கிற காலத்திலேயே என்னுடைய பார்வை சமூகப் பார்வையாக இருந்தது. அதனாலதான் முதல் கதையான 'குற்றம்' சமூகப் பார்வையில் சொந்த அனுபவங்களைக் கொண்ட ஒரு கதையா வந்தது.

இந்தச் சமூகப் பொறுப்பு எப்படி, எங்க இருந்து உருவாகுது? அது ஒரு மரபுலயிருந்து உருவாகுற விஷயமா?
இல்லயில்ல. குடும்பப் பின்னணி ஒரு காரணமாயிருந்தாலுங்கூட யோசிச்சுப் பார்க்கும்போது இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம்தான் அடிப்படைன்னு நினைக்கிறேன். எழுத்துக்கும்கூட அதுதான் அடிப்படை.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சமூக அரசியல் பின்னணி பற்றிய புரிதலோடுதான் அதுல ஈடுபட்டீங்களா?
இந்தி ஆதிக்கம் வருவதன் மூலம் தமிழினம் அடிமையாக்கப்படும் அப்படிங்கிற புரிதல் இருந்தது. தமிழ் மொழியின் எல்லாப் பயன்பாடுகளும் குறுக்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்பினேன். வாழ்வின் மீதான பிடிப்புகளை உதறிவிட்டு ஒரு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபட்டேன். ஆனா அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட்ட பல மாணவர்கள் பிறகு அதன் வாயிலாகக் கிடைத்த புகழை சுயநலத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

தமிழ்நாட்டுல மாணவர்கள் முழுமையாப் பங்கெடுத்துக்கிட்ட, தலைமை தாங்கி நடத்திய முக்கியமான போராட்டம்ன்னு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம் இல்லையா? அது மாணவர்களை அந்த அளவு ஈர்த்ததற்கான காரணம் என்ன?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான உணர்வுகளைத் தூண்டியதுல இரண்டு சக்திகளுக்கு முக்கியப் பங்கு இருக்கு. ஒன்று திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அரசியல் தலைமையும். இரண்டாவது தமிழாசிரியர்கள். அப்போது பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சமஸ்கிருத எதிர்ப்பாளர்களா இருந்தாங்க. எப்படி வடமொழியின் ஆதிக்கம் தமிழைச் சிதைத்ததோ அதுபோல இந்தியும் தமிழை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வையே சிதைக்கும்ங்கிற கருத்துத் தமிழாசிரியர்களுக்கும் இருந்தது. பல தமிழாசிரியர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களா இருந்தாங்க. மாணவர்களுக்குத் தமிழுணர்வ ஊட்டியதுல, இந்தி ஆதிக்கம் பற்றிய எச்சரிக்கைகளை உருவாக்கியதுல அப்போதைய தமிழாசிரியர்களுக்குப் பெரிய பங்கு இருந்தது. தமிழை அழிக்கறதோட தமிழருடைய வாழ்வையும் இந்தி சிதைச்சுரும்னு எச்சரிச்சாங்க.

ஒரு மொழியோட தாக்கம் இன்னொரு மொழியை, மொழி பேசற சமூகத்தைப் பாதிக்கும்னா ஆங்கிலமும் பாதிக்கிறதாத்தானே இருக்க முடியும்? அப்படி இருக்கும்போது இந்தி தமிழருடைய வாழ்வை அழிச்சிரும்ங்கிற அந்த உணர்வு, புரிதல் எப்படி ஏற்பட்டது?
அப்போதைய நடுவண் அரசுக்குத் தொடர்பு மொழியா இந்திதான் இருந்தது. இந்தி படிச்சாத்தான் வேலைங்கிற நிலைமை இருந்தது. எல்லாத் தேசிய இன மக்களுக்கும் அது கட்டாயம்ங்கிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம். பிராமணர்களுடைய நிர்வாகத்துல இருந்த பள்ளிகளில் இந்தித் தேர்வுகள் ரொம்பப் பரவலா நடக்கும். இதன் விளைவா நிறையப் பேர் இந்தி படிச்சிட்டு வேலைக்குப் போறதுங்கிற நிலை இருந்தது. தமிழ் படிச்சா வேலை இல்லைங்கிற உணர்வு வந்தது. இந்தி மூலம் வேலைவாய்ப்பு என்பது தமிழரின் வாழ்வியலைச் சிதைக்கும்ங்கிற கருத்தாக்கத்திற்கு மாணவர்கள் இயல்பா வந்தாங்க.

உங்க கல்லூரியில் போராட்டத்தோட தாக்கம், போக்கு எப்படி இருந்தது?
மொழிப் போரின் முதல் கட்டமா 1962இல் திமுக சட்ட எரிப்பு, மறியல் போராட்டங்களை அறிவிச்சுது. இந்தப் போராட்டங்கள் கல்லூரிகளுக்கு வெளியே நடந்தவை. அப்ப நாங்க திமுக ஆதரவாளர்களா இருந்தோம். இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டபோது வெளியான செய்திகளைக் கல்லூரிகளுக்குள்ள இருந்தபடி நாங்க வாசிக்கிறோம். மதுரையில் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்துக்குத் தலைமைவகித்தவர்கள் 5 பேர். மதுரை முத்து, அக்னி ராசு, காவேரி மணியன், பி. எஸ். மணியன் அப்புறம் இன்னொருத்தர். (இவங்கள்ல இரண்டு மூன்று பேர் பின்னாலே சட்டமன்ற உறுப்பினர்களா ஆனாங்க.) அவங்கள வழியனுப்பி வெக்கறதுக்காகப் பெரிய கூட்டம் திரண்டது. அதுல எங்க கல்லூரியில இருந்து நிறையப் பேர் கலந்துகிட்டோம். ஆனா ஒரு கட்டத்துல திடலுக்குப் போகவிடாம அதைத் தடுத்து நிறுத் திட்டாங்க. அப்பக் கலைஞர் திடீர்னு அங்க வந்து அவங்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துச் சொல்றாரு. இதைப் போன்ற அனுபவங்கள்தான் எங்களத் தயார்படுத்துச்சு. உண்மையில் இந்தி எதிர்ப்புங்கற வெடி மருந்தத் தயாரிச்சவங்க திமுகவும் தமிழறிஞர்களும். அதன் திரியைக் கொளுத்திப்போட்டவர்கள் மாணவர்கள். நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிச்சிட்டிருந்தேன் .


மாணவர்களிடையே திமுகவுக்கு அமைப்புரீதியான செல்வாக்கு இருந்ததா?
மாணவர் திமுகன்னு ஒரு அணியை உருவாக்கியிருந்தாங்க. அதில் நான் உறுப்பினர் இல்லை. ஆனா 1965இல் மாணவர் அணி மதுரையில் உருவானபோது அந்தக் கூட்டத்துல நான் கலந்துகிட்டேன். பேராசிரியர் அன்பழகன்தான் அதைத் தொடங்கிவைத்தார்னு நினைக்கிறேன். கல்லூரிக்கு வெளியேதான் அந்தக் கூட்டம் நடந்தது. 65இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. எங்க கல்லூரி மாணவர்களான கா. காளிமுத்து, நா. காமராசன் ரெண்டு பேரும் சட்டத்தை எரிக்கிறதா முடிவாயிருந்தது. மதுரைக்கு மத்தியில் உள்ள ராஜாஜி திடல் அதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் கைதாயிறக் கூடாதுங்கறதுக்காக அவங்க ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தலைமறைவான இடம் கீழக்கரை. இன்குலாப்புடைய ஊர். அப்ப மாணவரா இருந்த ஹசன்முகமது என்பவர் அவங்களைத் தலைமறைவா வச்சிருந்தாரு. அவர்கள் சட்டத்தை எரிக்கப் போறாங்கங்கிறது எங்களுக்குத் தெரியும். அதன் முன்னர் நடந்த கலந்தாலோசனையின் போது நான் என்னையும் சட்ட எரிப்புப் போராட்டத்துல சேர்த்திருக்கலாமேன்னு சொன்னேன். இல்லை இல்லை அது வேண்டாம், நீங்கள்லாம் வெளிய இருந்து போராட்டத்தை நடத்தணும், உங்க குடும்பமெல்லாம் அடக்குமுறையைத் தாங்காதுன்னு சொல்லி மறுத்துட்டாங்க. சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் நாளில் அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஊர்வலமாக வந்து ராஜாஜி திடலில் கூடுவது என ஏற்பாடு. ஊர்வலமும் போராட்டமும் திட்டமிட்டபடி நடந்து அவங்க கைதானாங்க. ஊர்வலமாப் போனபோது மதுரை வடக்கு மாசி வீதியில் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்த குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினாங்க. அங்க இருந்த வீரைய்யா என்பவர் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்னு சொன்னாங்க.

1965 ஜனவரி 25இல் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தின்போது நடந்த சம்பவங்கள் இவை. பிறகு மதுரையில் மாணவர்கள் எல்லா இடங்களுக்கும் போய்க் காங்கிரஸ் கொடிகளை எல்லாம் வெட்டுனாங்க. அங்கங்க போலீஸ் தடியடி. மாணவர்கள் எல்லாம் அங்கங்க சிதறிப்போயிட்டோம். நானும் மதுரைக் கல்லூரி மாணவரான அ. ராமசாமியும்-அவர் "என்று முடியும் இந்த மொழிப்போர்"னு ஒரு புத்தகம் எழுதியவர். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரா இருந்தவர், இப்போ உயர் கல்வி மன்றத்தின் தலைவராக இருக்காரு - ஒரு இடத்தில் சந்திச்சோம். தீர்மானங்களையாவது நாம நிறைவேற்றிரலாமேன்னு கொஞ்சப் பேரைச் சேர்த்துட்டுத் திலகர் திடலுக்குப் போய் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவான தீர்மானங்களைப் படித்து நிறைவேற்றினோம். மாணவர் தலைவர்கள் சிறைக்குப் போயிட்டதால வெளியிலிருந்து போராட்டங்களை நடத்துற பொறுப்பை நாங்க எடுத்துக்கிட்டோம்.

யாரெல்லாம் அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டீங்க?
நான், இன்குலாப், சேடப்பட்டி முத்தையா, ஐ. செயராமன், அமெரிக்கன் கல்லூரியைச் சார்ந்த சதாசிவம், பரமசிவம், செந்தமிழ்க் கல்லூரி ஆறுமுகம், மறவர்கோ எனச் சிலர்.


பெ.சீனிவாசன் போன்றவர்கள் அந்தப் போராட்டத்தில் தீவிரமாப் பங்கெடுத்துக்கிட்டாங்க இல்லையா?
பெ.சீனிவாசன் சென்னையில் சட்டக் கல்லூரியில் இருந்தார். மதுரையில சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த அதே நாளில் சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சென்னையிலும் போராட்டம் நடந்தது. அங்கே வெங்கடேஸ்வரா மாணவர் விடுதியில் பயங்கரமான தாக்குதல் நடந்தது. மாணவர்கள் உள்ளேயிருந்து விறகுக்கட்டைகளால் போலீசாரைத் தாக்கத் தொடங்கினார்கள். மதுரையில் மாணவர்களை வெட்டினதுதான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை. வெட்டிட்டாங்க வெட்டிட்டாங்கன்னு எல்லா இடத்துலயும் தகவல் பரவியது. சென்னைச் சட்டக் கல்லூரி மாணவர் சீனிவாசன், ரவிச்சந்திரன், தியாகராய கல்லூரி மாணவர் நாவளவன், மாநிலக் கல்லூரி மாணவர் ராமன், பச்சையப்பன் கல்லூரி மாணவர் துரைசாமி என ஆங்காங்கே முனைப்பான பலர் தலைமையில தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடிச்சுது. மதுரையில் நான், இன்குலாப், சதாசிவம், அப்புறம் பின்னாளில் அமைச்சர்களாயிருந்த பரமசிவம், சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் முன்னின்று போராட்டத்தைத் தொடர்ந்தோம்.

போராட்டத்தின் இந்தக் கட்டம் எதுவரை நீடிச்சுது? நீங்க கைது செய்யப்பட்டீங்க, இல்லையா?
போராட்டம் ஒன்றரை ரெண்டு மாதம் வரை நடந்துது. எல்லாப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. அதுக்கு மேல போராட்டத்தை எடுத்துச் செல்வது சாத்தியமில்லைன்னு மாணவர்கள் குழு கூடித் தீர்மானம் போட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் அந்தக் குழு கூடியது. இதற்குப் பின்னணியில் இருந்த திமுக தலைமை இதுக்கு மேல இந்தப் போராட்டம் நீடிச்சா அது சரியில்லைன்னும் தன் கட்டுப்பாட்டிலிருந்து மாணவர்கள் தாண்டிப் போய்விட்டார்கள் என்று கருதியது. போராட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்ங்கிற முடிவுக்கு அது வந்தது. அடுத்து வந்த தேர்தலுக்கு அது தயாராக வேண்டியிருந்தது.

சரியில்லைன்னா எந்த ரீதியில்? போராட்டம் தன் கையை மீறிப் போய்விட்டதாகக் கட்சி கருதியதா?
மாணவர்கள் ஆயுதம் ஏந்துகிற அளவுக்குக்கூட வந்துட்டாங்க. அப்ப திமுக தலைமை திமுகவைச் சார்ந்த மாணவர் தலைவர்களிடம் குறிப்பாகப் பெ. சீனிவாசன், எல்.கணேசன் போன்றவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியது. அப்போது சட்டம் படித்து முடித்துவிட்டிருந்தார் எல்.கணேசன். ஆனா அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மூலமா இருந்து தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைத்தது அவர் தான். முன்னாள் மாணவர்ங்கிறதால அவர் தன்னை முன்னிறுத்தாமல் மற்ற மாணவர் தலைவர்களை முன்னிறுத்தி எல்லா வேலைகளையும் செய்தார். திமுக தலைமையோட கருத்தை நாங்களும் ஏத்துகிட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் கூடிய மாணவர்கள் போராட்டக் குழு, போராட்டத்தைக் கைவிடவும் கல்லூரிக்குச் செல்லவும் மீண்டும் கல்லூரி தொடங்கும்போது இந்தப் போராட்டத்தைத் தொடரவும் முடிவெடுத்தது. பின்பு அங்கங்கே மாணவர் கூட்டம் நடந்துது. அங்கே நாங்க பேசுறோம். விடுமுறை முடிந்தபின் மீண்டும் இந்தப் போராட்டம் தொடரும்னு வலியுறுத்தறோம். சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலும் அப்படிப் பேசினோம். இதனால நாங்க மீண்டும் போராட்டத்தைத் தொடங்கப்போறோம்னு உளவுத் துறை கொடுத்த அறிக்கையை வச்சுக்கிட்டுத் தமிழகம் முழுவதும் பத்து மாணவர் தலைவர்களைக் கைதுசெஞ்சாங்க. கோவையில் ஒருவர், தஞ்சவூரில் ஒருவர், சென்னையில் நாலு பேர், மதுரையில் நாங்க மூணு பேர் இப்படி 10 மாணவர் தலைவர்களை இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணினாங்க. அப்ப அதே பாளையங்கோட்டைச் சிறையில் கலைஞரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணி வச்சிருந்தாங்க. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்ட உடனே அவரை விட்டுட்டாங்க. கலைஞரைத் தனிமைச் சிறையில் வச்சிருந்தாங்கன்னு சொல்வாங்க இல்லையா? அவர் இருந்த அதே அறையில் தான் காளிமுத்து இருந்தாரு. பக்கத்து அறையில் நாங்க இருந்தோம். அதுதான் அதனுடைய பின்னணி. யார் இந்தப் போராட்டத்திற்கு மூலமா இருந்தார்களோ அவர்களே இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அஸ்ஸாம் மாதிரி மாணவர் தலைமைகளே சுயமாகப் போராடியிருந்திருந்தால் அது தேசிய இன எழுச்சிக்கு வழி வகுத்திருக்கும். அப்படி ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாறிவிடக் கூடாது என்பதற்காக அவங்க போராட்டத்தைக் கைவிட்டாங்க. அதற்கு முன்பே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டிருந்தது திமுக தலைமை.


பிறகு மாநில சுயாட்சின்னு ஒரு கோரிக்கை வச்சாங்களே?
ஆமா. அதிலும்கூட அவர்கள் உறுதியா நிக்கல. தேர்தலுக்கான அரசியல் பாதைன்னு வர்றபோதே கொள்கைகளை ஒவ்வொன்றாகக் கைவிடுவது நிகழ்கிறது. திமுக தலைமையையும் தாண்டி அடுத்த கட்டமாக ஓராண்டு கழித்துக் கோவையில மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமா வெடிச்சுது. நாங்க 67இல் முடிச்சிடுறோம்.

67இல் அரசியல் ரீதியாப் போராட்டம் முடிவுக்கு வந்ததுன்னு சொல்லலாமா? இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று 1964இல் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படும்னு நடுவணரசு உறுதியளிச்சுது இல்லையா?
வாக்குறுதி சட்டமாக்கப்படனும்ங்கறது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. அது நிறைவேறல. இன்றைக்குவரை நிறைவேறல. ஆனாப் போராட்டத்தை 1967இல் முடிச்சுக்கிட்டது திமுக தலைமை.

68இல் கோயம்புத்தூரில் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியபோது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது இல்லையா? அந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன?
ஆமா. 68 போராட்டத்தின்போது நான் மாணவன் அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தபோது கோடைக்கானலில் நாங்கள் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தினோம். காரைக்குடியில் ஒரு மாநாடு நடந்தது. நாங்க அந்தப் போராட்டக் கனலைத் தொடர்ந்து கொண்டுபோயிட்டு இருந்தோம். கோடைக்கானலில் நடந்த மாநாட்டில்கூட இந்த அரசு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மாணவர் தலைவர்களேகூட அந்த அடிப்படையில் சமாதானம் அடைந்தார்கள். அதை எதிர்த்து நான், திருச்சி மாணவர் தலைவர் அஜ்மல்கான் போன்ற சிலர் மாநாட்டிலிருந்து வெளியேறினோம். இதோட தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் 68இல் கோவையில் தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றினார்கள்.

திமுக அரசு இருக்கிறபோதே கோவை அரசுப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தனித் தமிழ்நாடு கொடியை ஏத்துனாங்க. அந்தச் சமயத்துல நான் முரசொலியில துணையாசிரியரா இருந்தேன். அப்ப, 68இல் மாணவர்கள் சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காகப் போனாங்க. போராட்டம் எல்லாக் கல்லூரிகளிலும் நடந்துக்கிட்டு இருந்தது.

இரண்டாம் கட்டமாக நடந்த இந்தப் போராட்டத்தைத் திமுக தலைமை எப்படி அணுகியது?
திமுகவின் மேல் நம்பிக்கை இழந்ததன் காரணமாகத் தான் மாணவர்கள் போராடுனாங்க. இப்ப உலகப் பேரவைத் தலைவரா இருக்கற இரா.ஜனார்த்தனம்தான் அப்ப மாணவர் தலைவர். அவர் திமுகவைச் சார்ந்தவர்தான். அதனால திமுகவைச் சார்ந்தவங்க அவரைப் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று முன்னிறுத்தி இனி இந்தப் போராட்டம் வேண்டாம். நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம். இனி நாங்க பார்த்துக்கிடறோம்னு சொன்னாங்க. மாணவர் தலைவர்களான துரைமுருகன், ஜனார்த்தனம் போன்றவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் மாணவர்களைச் சமாதானப்படுத்திப் போராட்டம் வேண்டாம்னு திருப்பி அனுப்புனாங்க. ஆக மீண்டும் மாணவர்கள் மத்தியில் எழுந்த எழுச்சியை நீர்த்துப்போகச் செய்தது திமுகதான். அவர்களுக்கு இதைப் பயன்படுத்தி ஆட்சிக்குவருவது மட்டுமே நோக்கமாக இருந்தது. மொழியைக்கூட அவங்க அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டாங்க. 67 போராட்டத்துல முன்னணிப் பாத்திரம் வகித்த சீனிவாசன் காமராஜரை எதிர்த்து நின்னு தேர்தல்ல வெற்றிபெற்றார். ஆனா தேர்தல்ல வெற்றிபெற்றதற்கப்புறம் எல்லாருடைய இயல்புகளும் எப்படி மாறுமோ அப்படித்தான் அவரது இயல்பும் மாறியது. அப்ப அதைக் குறித்துக் கடுமையா விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். திமுக ஆட்சிக்கு வந்தப்பக்கூட அதைக் கடுமையா விமர்சனம் செய்தவன் நான். திமுக அரசியலிலிருந்து நான் விலகிச்செல்லத் தொடங்கியது அப்போதுதான். அந்தக் காலகட்டத்துல இன்குலாப் சென்னைப் புதுக் கல்லூரியில பயிற்றுநர் பணியில் சேர்ந்திருந்தார். அவருடைய திமுக சார்பும் அந்தக் காலகட்டத்துலதான் உடையத் தொடங்கியது. மார்க்சியத்தின்பால் எங்களிருவருக்கும் ஈடுபாடு ஏற்பட்டதும்கூட அந்தக் கட்டத்துலதான்.

உங்களப் போல இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் நிறையப் பேர் பிறகு திமுக சார்பு உள்ளவர்களா சிறிது காலம் இருந்திருக்காங்க. பிறகு அவர்கள் பொது வாழ்விலிருந்தும் சமூகப் போராட்டங்களிலிருந்தும் விலகிப்போயிட்டாங்க இல்லையா?
திமுக சார்பு மாணவர்கள் ஒருவகை. திமுக சார்பற்றவர்களாய் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்பாகப் பங்கெடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்கள் இன்னொரு வகை. ரவிச்சந்திரன், ராமன் போன்றோர் சென்னையில் இந்த வகை மாணவர் தலைவர்களாக விளங்கினார்கள். மற்ற நகரங்களிலும் பல மாணவர் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் அதற்குப் பிறகு ஒதுங்கிவிட்டார்கள். ராமன் மாநிலக் கல்லூரி மாணவர் தலைவரா இருந்தவர். இப்போது நீலமலைராஜா என அறியப்படுபவர். அவர் ஊட்டி படகர் இனத்தைச் சார்ந்தவர். மிகப் பெரிய பணக்காரர். குதிரைப் பந்தயம் போன்ற விஷயங்களின் மீது ஈடுபாடுகொண்டு அநேகமாகப் பொது வாழ்விலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ரவிச்சந்திரன் சட்டக் கல்லூரி மாணவர். அவர் இப்போது வழக்குரைஞராக இருக்கார். அதேபோல துரைசாமியும் வழக்கறிஞராக இருக்கார். படிக்கிற காலத்துலயே திராவிடர் கழகச் சார்புடையவராக இருந்தவர். இப்போது பெரியார் திராவிடக் கழகத்தின் மூத்த வழக்குரைஞராக இருக்கிறார். பெ. சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினரானார். இப்ப எந்தக் கட்சியிலும் இருக்கறதாத் தெரியல. காமராஜரைத் தோற்கடித்த அந்த மாணவர் தலைவர் ஓரிரு வருடங்களுக்கு முன்னால் இந்தியை எதிர்த்து மாணவர்கள் போராடியதே முட்டாள்தனம்னு சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அந்த அளவு அவரோட பார்வை மாறிப்போயிருக்கிறது. போராட்டத்தின் பலன்களை முழுமையாக அனுபவிக்க நினைத்த மாணவர் தலைவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அது நிறைவேறவில்லை. அதேபோல் பயனை எதிர்பார்த்து மனச்சிதைவுக்கு ஆளானவங்க நிறையப் பேர். போராட்டத்தில் ஈடுபட்டு அதிலிருந்து பெற்ற புகழையும் முக்கியத்துவத்தையும் சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் நிறையப் பேர். குறிப்பாச் சொன்னா காளிமுத்து, சேடப்பட்டி முத்தையா, பரமசிவம், துரைமுருகன், கா. ராஜாமுகம்மது போன்றவர்கள் பின்னாட்களில் அதிகார மையங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தங்களை வெற்றிகரமா நிலை நிறுத்திக்கிட்டாங்க. நான் குறிப்பிட்ட எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அமைச்சர்களா ஆனாங்க. நாவளவன்னு ஒரு மாணவர் தலைவர் இருந்தார். சென்னைத் தியாகராயர் கல்லூரி மாணவர். படிக்கும்பொழுது விடுதிக் கட்டணம் கட்டக்கூட முடியாத நிலையில இருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல முனைப்பாப் பங்கெடுத்துக் கிட்ட மாணவர் தலைவர் அவர். பூவளவன்னு பேர் மாத்திவச்சுக்கிட்டு ஆன்மீகவாதியா மாறிட்டார். இப்படிப் பலரும் பலவகையா சிதைஞ்சுபோயிட்டாங்க. நானும் இன்குலாப்பும் மார்க்சியத்தின் மேல் ஈடுபாடுகொண்டதால் நிலைத்தோம். அது எங்க செயல்பாடுகள அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோச்சு.

காளிமுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி நிறையப் பேசியிருக்காரு. அவருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஒரு நூல் எழுதலாம்னு திட்டமிருந்தது. எல்லாத்தையும் பதிவுபண்ணலாம்னு நெனச்சாரு. முதல்ல அதுல முன்னணிப்பாத்திரம் வகித்த மாணவர்களுடைய அனுபவங்களப் பதிவுசெய்ய விரும்பினாரு. உங்ககிட்ட அது பற்றி ஒரு விரிவான நேர்காணல் எடுக்கணும்னு சொன்னாரு. அப்ப அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர்னு இறந்துட்டாரு.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கிட்டு அதிகாரிகளானவங்க நிறையப் பேர் இருக்காங்க. நான் தற்செயலா அரசுத் துறைக்கு வந்தேன். அப்ப நான் மதுரையில வேலை பார்த்துக்கிட்டிருந்த கல்லூரியில சம்பளம் கொடுக்கல, போராடினோம். ஒண்ணும் நடக்கல. அப்பத் தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கிட்ட பழைய மாணவர்களுக்குப் பணிநியமனம் வழங்கறதாக் கேள்விப்பட்டு நானும் அணுகினேன். உடனே கிடைச்சுது.

இதன் மூலம் போராட்டத்துல பங்கெடுத்துக்கிட்ட மாணவர்களுக்குத் திமுக அரசு வெகுமதி அளிச்சுடுச்சு, இல்லையா? போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டுப்போக விரும்பாதபோது இது போன்ற வெகுமதிகள் தேவைப்படுது.
ஆமா, திமுக தலைமை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அதற்கு மேலே எடுத்துச்செல்ல விரும்பவில்லை. அந்தப் போராட்டத்தைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக எப்படிப் பயன்படுத்துவது என்ற ஒரு நோக்கில் மட்டுமே அது சிந்தித்தது. தேசிய இன விடுதலை என்ற லட்சியத்தில் திமுக உணர்வுபூர்வமான பற்றுக்கொண்டிருந்திருந்தால் போராட்டத்தை வேறொரு திசையில் எடுத்துச் சென்றிருக்க முடியும். அதைப் பயன்படுத்தி திமுக தலைமையேகூட வேறொரு பரிமாணம் பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதே அவர்கள் வார்த்தை வியாபாரிகளாகவும் சுகவாசிகளாகவும் மாறிவிட்டிருந்தார்கள். அவர்களுடைய அடிப்படை இயல்பே போராட்டத்திற்கு ஆதரவானதாக இருக்கவில்லை. கூட்டங்களுக்குப் போக வேண்டியது. வருமானம் வரும். திரும்பவந்து உட்கார்ந்துகொள்ள வேண்டியது. இப்படி அவர்கள் வாழ்க்கை மாறிவிட்டது. இந்தப் போக்கே அவர்களுடைய பிழைப்புவாத அரசியல் பார்வைக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. அஸ்ஸாமிலும் அயர்லாந்திலும் நடந்த போராட்டங்களில் மாணவர்கள் பெரும்பங்காற்றியிருக்காங்க. அந்த இயக்கங்களுக்குத் தேசிய இன விடுதலை குறித்த புரிதல் இருந்தது. தேசிய இன விடுதலைங்கிறதே மக்களோட விடுதலைதான். மக்கள் தம் ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பெறுவதற்குத் தேசிய இன விடுதலை ஒரு முன்நிபந்தனைன்னு சொல்லலாம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மாணவர் தலைவர்களுக்குத் தேசிய இனப் பிரச்சினைகள் பற்றிய புரிதல் இருந்ததா?
அந்தப் புரிதல் எந்த அளவில் இருந்ததுன்னு தெரியல. அப்படியான ஒரு தலைமையே மாணவர்கள் மத்தியில் உருவாகல. நாங்க அந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்றபோதுகூட உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டங்கள் வரலாற்று நிகழ்வுகள் இவற்றையெல்லாம் படித்து ஆராய்ந்து அதன் பிறகு போராட்டக் களத்திற்குச் சென்றவர்கள் அல்ல. உணர்ச்சிபூர்வமாக அர்ப்பணிப்பு உணர்வோடு அதில் ஈடுபட்டவங்க. உலகம் முழுவதும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களை உள்வாங்கியிருந்தால் எங்கள் போராட்டத்தின் போக்கு மாறியிருந்திருக்கும். கோவையில் தமிழ்நாடு விடுதலைக் கொடியேற்றிய மாணவர்கள்கூடப் பிறகு ஒன்றுமில்லாமல் போய் விட்டார்களே.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு அளவுல பல கல்லூரி மாணவர்கள் கலந்துருக்காங்க, துப்பாக்கிச்சூடு நடந்து பலபேர் செத்துப்போயிருக்காங்க. அடிபட்டுருக்காங்க. இந்த மாதிரி நிறைய நடந்திருக்கு. இதைப் பற்றிய பதிவுகள் இருக்கா? குறிப்பிட்டுச் சொல்லும்படியான நூல்களோ கட்டுரைகளோ வந்திருக்கா?
அது மாதிரியான பதிவுகள் தமிழில் வந்திருக்கு. போராட்டம் முடிவடைந்த ஓரிரு வருடங்களுக்குள்ளேயே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரைக் கல்லூரி மாணவரும் எனது நண்பருமான ராமசாமி 'அந்த நாற்பத்தியெட்டு நாட்கள்' அப்படின்னு ஒரு நூல் எழுதினாரு. அதை அவரே வெளியிட்டார். இரண்டாவதாய் 'என்று முடியும் இந்த மொழிப் போர்'ங்கிற புத்தகம். அவரே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கார். வேறு சிலவற்றையும் அதில் சேர்த்திருக்கார். கலைஞர்தான் சென்ற ஆண்டு அந்தப் புத்தகத்தை வெளியிட்டாரு. என்னுடைய படமெல்லாம்கூட அதில் இருக்கு. அந்தப் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். அதைவிட வேறொரு முக்கியமான புத்தகம் இருக்கு. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு முன்னால் 1938இல் பெரியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பிறகு மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் முதலானவர்கள் கலந்துக்கிட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாறு இதைப் பத்தியெல்லாம் ஆலடி அருணா 'இந்தி எதிர்ப்புப் போர்'ன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. ஆனா படைப்புகளாகத் தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான பதிவுகள் இல்லை. வரலாறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனா அதுகூட விமர்சனப் பார்வையுடன் கூடிய வரலாறாக வரவில்லை.

திருப்பூர்ல 100க்கும் மேற்பட்டவர்கள் குண்டடிபட்டதாச் சொல்றாங்க. பலரது பிணங்கள ஒரு கிணற்றுக்குள்ள போட்டதாகவும் சொல்றாங்க. அந்த அளவுக்கு எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கின பதிவுகள் நீங்க குறிப்பிட்ட புத்தகங்கள்ல இருக்கா?
அந்தத் திருப்பூர் நிகழ்வுலதான் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். அதேபோல ஒரு சம்பவம் கம்பத்துல நடந்தது. இப்படிப் பல சம்பவங்கள் நடந்ததாகத் தகவல்கள் இருக்கு. ஆனா அவையெல்லாம் அப்படியே பதிவு செய்யப்படவில்லை.

நான் அப்போது வந்த எல்லாப் பத்திரிகைகளையும் செய்திகளையும் சேர்த்து வச்சிருந்தேன். மதுரையில கல்லூரி விரிவுரையாளராக இருந்தவரையிலும் அவற்றைப் பாதுகாத்து வெச்சுருக்க முடிஞ்சுது. அதுக்கப்புறம் பணி நிமித்தமாப் பல்வேறு ஊர்களுக்குப் போக வேண்டியிருந்ததுனால பாதுகாக்க முடியல. தொடர்ச்சியாப் பாதுகாக்க வேண்டிய ஆவணங்கிற உணர்வு எனக்கு அப்ப இல்ல. ஆனா அது எவ்வளவு பெரிய இழப்பு.

தமிழ்ப் படைப்புலகில் இந்தப் போராட்டத்தின் தாக்கம் என்ன? முக்கியமான பதிவுகள்ன்னு எதையாவது சொல்ல முடியுமா?
இல்லை.

வானம்பாடி மாதிரியான கவிஞர்கள் கூட இதைப் பதிவு செய்யலையா?
இல்லை.

திராவிட இயக்கப் படைப்பாளிகள் இதைப் பதிவு செஞ்சிருக்காங்களா?
ஆட்சிக்கு வந்த பிறகு அவங்களும் நீர்த்துப்போயிட்டாங்க. அந்த உணர்வுகளோட இயங்குறவங்க ஒண்ணு ரெண்டு பேர்தான். இந்திய விடுதலைப் போராட்டம் , ஈழ விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் தாக்கங்களினால் நிறைய நல்ல படைப்புகள் வந்திருக்கு. ஆனா அதுபோல இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கத்தினால் உருவான படைப்புகள்னு நம்மால எதையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

நீங்க படித்த காலத்துல தமிழ் படிப்பது பற்றிய பொது மதிப்பீடு என்ன? இன்னைக்குத் தமிழ் படிப்பது ஏளனமாகப் பாக்கப்படுது. அது பயனற்ற படிப்புங்கிற பார்வை இருக்கு. தமிழ் படிக்கறவங்க எண்ணிக்கையும் குறைவா இருக்கு. வேற எந்தப் படிப்புக்கும் இடம் கிடைக்காதபோது தமிழ் படிக்க வர்றாங்க. நீங்க படிச்ச காலத்துல தமிழாசிரியர்களுக்கெல்லாம் ஒரு மதிப்பு இருந்ததுன்னு சொன்னீங்க. போராட்டத்துக்கு அவங்க ஒரு பின்னணியா, உந்து சக்தியா இருந்தாங்கன்னு சொன்னீங்க. அப்ப தமிழ் படிக்க நிறைய மாணவர்கள் வந்தாங்களா? என்ன கண்ணோட்டத்துல படிக்க வந்தாங்க? வேலைவாய்ப்பெல்லாம் எப்படி இருந்தது?
அன்னைக்குத் தமிழ் படிக்க வந்தவங்கள்லகூடப் பாதிப் பேர்தான் அந்த ஆர்வத்தோட தமிழ் உணர்வுவோட வந்தவங்க. மீதி எல்லாரும் நீங்க சொன்ன மாதிரி இடம் கிடைக்காம வந்தவங்கதான். நான், செ.ரவீந்திரன் தில்லில இருந்தாருல்ல அவரு, அப்புறம் ம.பெ.சீனிவாசன் இப்படியான சில பேருதான் தமிழ் உணர்வு காரணமா முதுகலையில் சேர்ந்தோம்.

தியாகராய கல்லூரியில படிச்ச காலத்துல உங்களுக்குத் தாக்கங்கள் ஏற்படுத்திய ஆசிரியர்கள்...
ஒளவை துரைசாமி, பேராசிரியர் இலக்குவனார், அ.கி.பரந்தாமனார் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பாகச் சொல்லலாம். மாணவர்களுக்கு மொழிப்பற்று, போராட்ட உணர்வு போன்றவற்றை ஊட்டியவர் பேராசிரியர் இலக்குவனார். ஆனால் நவீனச் சிந்தனை, நவீன இலக்கியம் இதெல்லாம் குறித்து எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவ்வை நடராசன் தான். அவர் அந்தக் கல்லூரிக்கு விரிவுரையாளராக வந்தபோது திமுக சார்பு உடையவராக இருந்தாக்கூட புதிய சிந்தனைகளையும் அவற்றைச் சிறப்பாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும் ஆற்றல் பெற்றவராயிருந்தார்.

கல்லூரி வாழ்க்கை உங்க வாசிப்பை எவ்வளவு தூரம் விரிவுபடுத்தியது? உங்க கூடப் படிச்ச பெரும்பாலானவங்க பின்னாடி கவிஞர்களா அறியப்பட்டிருக்காங்க. அங்க வாசிப்புச் சூழல் எப்படி இருந்தது? நல்ல நூலகம் இருந்ததா? அறிவார்ந்த விவாதங்கள் நடந்துச்சா?
கலை இலக்கியச் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் இருந்தன. உரையாடல்கள் இருந்தன. அறிவார்ந்த விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருந்தன. ஏறக்குறைய எல்லோருக்குமே திமுக அரசியல் சார்பு இருந்ததால் அந்தப் பார்வையில் இருந்துதான் எதையும் அணுகக்கூடிய சூழல் இருந்தது. அப்புறம் எல்லோருமே நிறைய வாசிப்போம். மதுரைத் தியாகராசர் கல்லூரி நூலகம் நல்ல நூலகம். நான் பெரும்பாலும் மதுரை மாவட்ட மைய நூலகத்தைப் அதிகமாகப் பயன்படுத்துவேன். நா. காமராசன், கா. காளிமுத்து, இன்குலாப் இவங்கெல்லாம் மாலையில சந்திக்கிறபோது கலை இலக்கியம் பற்றித்தான் நிறையப் பேசுவோம். நா.காமராசன் முதுகலை இறுதியாண்டு படித்தபோது கவிதைகள் எழுதத்தொடங்கிட்டாரு. 'தாமரை'யில் அவருடைய கவிதைகள் வந்தன. அந்தக் கட்டத்துல 'கண்ணதாசன்' இதழும் வந்தது.

அப்பவே உங்களுக்கு இந்த இதழ்களோட அறிமுகம் இருந்துதா?
ஆமா, 'சரஸ்வதி'கூட. 'சரஸ்வதி'யை ஜி.நாகராஜன் எனக்குக் கொடுப்பாரு. நான் புகுமுக வகுப்புப் படிச்சு ஓராண்டு தோல்வியுற்று வெளியே இருந்தேன். தனிப் பயிற்சிக் கல்லூரியில் படிச்சேன். அப்ப நாகராஜன் அதில் ஆசிரியர். அவர் முதல்ல சேதுபதி உயர்நிலைப் பள்ளில ஆசிரியராக இருந்தார். பிறகு அவருடைய நடவடிக்கைகள் காரணமாக சேதுபதி உயர்நிலைப் பள்ளில அவரால் நீடிக்க முடியல. அதன் பிறகு தனிப் பயிற்சிக் கல்லூரியில அவரு ஆசிரியராப் பணிபுரிந்தாரு. அந்தப் பயிற்சிக் கல்லூரிய முதல்ல எஸ்.டி.சிங்கற பேர்ல சங்கர நாராயணன்னு ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் நடத்தினாரு. நான் அவர்கிட்ட கணிதப் பாடம் படிச்சேன். அப்ப சினிமா தியேட்டர்ல ஜி.நாகராஜன் படத்தைப் போட்டு இவர் எங்கள் தனிப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றுகிறார்னு சிலைடு போடுவாங்க. அந்த அளவுக்குப் பிரபலமா இருந்தாரு. நல்லாப் பாடம் நடத்துவார். அவர் ஒயெம்சிஏல தங்கி இருந்தார். அப்ப ப.சிங்காரமும் அங்கே தங்கி இருந்தார். அப்பவே குடும்பத்துல இருந்து பிரிஞ்சிட்டார் நாகராஜன். அப்புறம் மதுரையில் நான் கல்லூரியில விரிவுரையாளரா இருக்குறபோதெல்லாம் பார்த்திருக்கேன். 'சரஸ்வதி', 'எழுத்து' இதெல்லாமே அவர் மூலமா அறிமுகமாச்சு.

நாகராஜன் ஒரு எழுத்தாளர்ங்கிறதெல்லாம் அப்பத் தெரியுமா? இலக்கியம் சார்ந்த விஷயங்களை அவர் மாணவர்களுக்குச் சொல்றது உண்டா?
தெரியும். நாகராஜன் எழுதுனதுல ஒண்ணு ரெண்டு வாசிச்சிருக்கேன். சரஸ்வதில்ல வந்தது. அவர் அதிகமாச் சொல்லமாட்டார். அதப் பத்தி அதிகமாப் பேசமாட்டாரு. நான் என்ன நினைக்கிறேன்னா இவன் சின்னப்பையன் இவங்கிட்டயெல்லாம் பேசி என்ன ஆகப்போகுதுன்னுகூட நினைச்சிருக்கலாம். அந்த மாதிரியான உரையாடல்களை அவரோட மட்டத்துல வச்சிக்குவார்னு நினைக்கிறேன். என்கிட்ட அந்த இலக்கிய இதழ்கள் கொடுக்கிறதோடு சரி.

நீங்களே கேட்டு வாங்குவீங்களா?
ஆமா. நான் கேட்டு வாங்கிக்கிடுவேன். அப்புறம் அவர்ட்ட கொடுத்துருவேன். அந்த அளவுலதான் எங்களுடைய உறவு இருந்தது. பிறகு அவரைப் பார்த்த போது மிகமோசமான நிலையில் இருந்தார். வேலை போயிருச்சு. எந்நேரமும் கஞ்சா போதை. நான், காளிமுத்து எல்லாம் அம்பாசிடர் லாட்ஜ் முன்வராந்தவுல உக்காந்து பேசிட்டிருப்போம். அப்ப காளிமுத்து எம்எல்ஏ ஆகல. கூட்டங்கள்ல மட்டும் பேசிட்டிருந்தாரு. வெற்றி தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலை பார்த்துட்டு இருந்தார். ஒரு சமயம் நாகராஜன் குடிச்சிட்டு வந்து லாட்ஜுக்கு முன்னாடி எலக்ட்ரிக் கம்பத்துல மோதிக் கீழ விழுந்ததைப் பாத்தேன். அப்ப காளிமுத்து 'நாகராஜன்ல்ல நாகராஜன்ல்ல தூக்கிவிடுங்கையா தூக்கிவிடுங்கையா'ன்னாரு. அப்புறம் நானும் இன்னொருத்தரும் போயி அவரத் தூக்கிவிட்டு ஒரு ரிக்ஷாவுல ஏத்தி அனுப்பினோம். அவரு எங்க போகனும்னு சொல்றாரோ அங்க கொண்டு போய்விடுன்னு சொன்னோம். ரிக்ஷாக்காரருக்கும் தெரியும் போலிருக்கு, இவரு இந்த மாதிரித்தாங்க அப்படின்னார். அது மாதிரி சில நிகழ்வுகள். அதுக்கப்புறம் மு.ராமசாமியின் அறைக்கு அடிக்கடி வருவார்.

அதுக்கப்புறம் அவரைக் கடைசியாச் சந்திச்சது 78இல். வள்ளுவர் கோட்டத்தில் நான் வரவேற்பு அலுவலரா இருந்தபோது அங்க வந்தார். மத்தியானம் நான் சாப்பிட்டுட்டிருக்கிறேன். சாப்பிட்டுட்டிருக்கிறபோது பியூன் வந்து 'உங்களைப் பாக்கிறதுக்கு நாகராஜன்னு ஒருத்தர் வந்திருக்காரு'ன்னாரு, நான் நினைச்சேன் நாகராஜன்னு சொன்னா இவரு வர்றதுக்கு வாய்ப்பில்ல. இன்னொரு நண்பர் நாகராஜன்னு மதுரையில இருக்காரு. அவருன்னு நெனச்சு 'அவர உள்ள உக்காரச் சொல்லுங்க'ன்னு சொன்னேன். இவரு நேரா நான் சாப்பிட்ர இடத்துக்கு வந்துட்டார். பின்னால் அறையில்தான் சாப்டுட்டிருந்தேன். வந்து 'சாப்பிடலாமா' ன்னாரு. பார்த்தா நாகராஜன். 'வாங்க உக்காருங்க, நீங்க சாப்பிடலையா'ன்னு கேட்டேன். 'நான் சாப்பிடலை சாப்பிடலாமா'ன்னாரு. அப்புறம் 'நீங்க சாப்பிடுங்க'ன்னு சொல்லிட்டு இன்னொரு செட் வாங்கிட்டுவரச் சொல்லி நான் சாப்பிட்டேன். அப்புறம் கையில் பத்து ரூபாயோ இருபது ரூபாயோ கொடுத்தனுப்பினேன். அதுதான் நான் அவரைக் கடைசியாய்ப் பார்த்தது.

மாணவராயிருந்தபோது திமுக பின்னணி கொண்டிருந்த நீங்க பிறகு மார்க்சியத்தின் மேல் எப்ப ஈடுபாடுகொண்டீங்க? பின்னாட்களில் உங்க கலை இலக்கியப் பார்வையையும் அரசியலையும் தீர்மானிச்சது மார்க்சியம்தான் இல்லையா?
1971இல் சேலத்தில் மக்கள் தொடர்பு அலுவலராப் பணியில் சேர்ந்தேன். அப்ப தமிழ்நாடனோட நட்பு ஏற்பட்டது. அவர் மார்க்சியச் சார்புடைய இலக்கியங்கள் பற்றியெல்லாம் நிறைய அறிந்திருந்தார். அந்தத் தொடர்பு மார்க்சியத்தோட ஒரு அறிமுகம் கிடைக்கறதுக்கு முக்கியக் காரணமா இருந்ததுன்னு சொல்லலாம்.

நீங்க அப்பவே எழுதத் தொடங்கியிருந்தீங்களா?
சேலத்தில் இருந்தபோதுதான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நாடனோட அறிமுகத்துக்கப்புறம் நடந்த என்னுடைய திருமணம் மார்க்சியத்தின் மேல் செயலூக்கமுள்ள உறவு ஏற்படறதுக்கு முக்கியக்காரணமாக இருந்துது. என் மனைவியின் குடும்பம் ஒரு மார்க்சியக் குடும்பம்னே சொல்லலாம். அந்தக் குடும்பத்தோட தொடர்பு என்னோட புரிதலைப் பெரிய அளவில விரிவுபடுத்தியது. அந்தக் கால கட்டத்தில்தான் இளவேனிலின் 'கார்க்கி' இதழ் வந்தது. இங்கே சென்னையில பணிபுரிந்துகொண்டிருந்த இன்குலாப் அதில் எழுதத் தொடங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து நானும் எழுதினேன். எஸ்.கே.எஸ்.சாகுல்ஹமீது இன்குலாப்பா மாறுனதும் பா.செயப்பிரகாசம் சூரியதீபனா மாறுனதும் 'கார்க்கி' வழியாத்தான். பா.செயப்பிரகாசம்ங்கிற பேர்ல நான் சிறுகதைகள் எழுதினேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதும்போது சூரியதீபன்ங்கற புனைபெயரில் எழுதினேன். அந்தப் பெயரில் 'சிகர'த்துல நாடகம் எழுதியிருக்கேன். 'பட்ட மரங்களும் பூப்பூக்கும்' என்பது என் முதல் கட்டுரை. 'கார்க்கி'யில் வந்தது. அப்ப என் படைப்பு மொழி கவித்துவமானதாகவும் வீரியமானதாகவும் இருக்கும். கற்பனாரீதியான புரட்சிகரத்தன்மை அதுல இருக்கும். அப்படித்தான் தொடங்கினேன்.

புகழ்பெற்றிருந்த கரிசல்காட்டு இலக்கியத்தின் முக்கியமான பிரதிநிதியாக வாசகர்களுக்கு அறிமுகமானீங்க. கரிசல்காட்டு வாழ்வின் உயிர்ப்பான கூறுகளை நீங்க உங்க கதைகளின் மூலமாகத் தொட்டிருக்கீங்க. அப்ப உங்க கதைகளில் ஒரு நேர்த்தி இருக்கும். பிறகு உங்க படைப்புகளில் பிரச்சாரத் தன்மை மேலோங்கத் தொடங்குது. 'காடு' தொகுப்புல அதற்கான விதைகள் தென்படத் தொடங்குது. கடைசிக் கதையான 'விடிகிற நேரங்கள்'ல வெளிப்படையான பிரச்சாரம் இருக்கும். அதுக்கு முன்னாடி உள்ள கதைகள்ல விளிம்புநிலை வாழ்க்கைமீது, கிராமத்து வாழ்க்கைமீது, ஏழை விவசாயிகள்மீது ஒரு பரிவு இருக்கும், சாதிய அமைப்புக்கு எதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குரல் இருக்கும். எல்லாமே அந்த வாழ்க்கையின் பகுதிகளாத்தான் இருக்கும். 'தெக்கத்தி ஆத்மாக்கள்' கதையக்கூடச் சொல்லலாம். அதுல பிரச்சாரம் இருந்தாக்கூட அது கலையாத்தான் இருக்கு. 'விடிகிற நேரங்களுக்குப் பிறகு' வந்த கதைகள் குறிப்பா உங்களோட நான்காவது தொகுப்பான 'இரவுகள் உடையும்' தொகுப்புல இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே நேரடியாகப் பிரச்சாரம் பண்ற கதைகள்தான். அநேகமாகப் படைப்பிலக்கியம் சார்ந்து உங்ககிட்டப் பேச வேண்டிய விஷயம் இதுதான். இதை மையப்படுத்திப் பேசறது முக்கியமானதா இருக்கும் இல்லையா?
சுய அனுபவங்களச் சமூகரீதியான அனுபவங்களோடு இணைத்து அந்த எதார்த்தத்தை வெளிப்படுத்துபவை தான் என்னுடைய தொடக்ககாலக் கதைகள்னு நெனைக்கறேன்.

எழுதத் தொடங்கியபோதே உங்களுக்கு அப்படி ஒரு புரிதல் வந்துருச்சா?
எழுதத் தொடங்குறபோது ஒரு பொதுவான சமூக அக்கறை இருந்துது. சமூக நெருக்கடிகள், கிராம வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அது உருவாக்குகிற வாழ்வியல் நெருக்கடிகள் குறித்த அக்கறையும் கோபமும்தான் என் தொடக்ககால எழுத்துக்கான அடிப்படையாக இருந்தவை. ஆனா அவற்றுக்கான காரணம், தீர்வு குறித்தெல்லாம் போதிய தெளிவு கிடையாது. தீர்வுகள் வைக்கப்பட வேண்டும்ங்கிற புரிதல், தேவை வர்றபோது எழுத்து இயல்பாவே பிரச்சாரத் தன்மை கொண்டதா மாறிடுது.

உங்களுக்கு முந்தைய தலைமுறை கரிசல் இலக்கிய முன்னோடியான கி. ராஜநாராயணன் தொடங்கி உங்க சமகாலக் கரிசல் எழுத்தாளர்களான பூமணி, வீர.வேலுசாமி, சுயம்புலிங்கம் போன்றவர்கள் தவிர வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயந்தன், அசுவகோஷ் என 70களின் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வரிசையில் தமிழ் வாசகர்கள் மத்தியில உங்களுடைய பெயர் இருக்கு. சமூக அக்கறைங்கிறதை எல்லாருமே ஏதோ ஒருவிதத்துல அவங்க எழுத்துல பிரதிபலிச்சிருக்காங்க. அதன் காரணமாகத்தான் அவங்க படைப்புகள் தீவிர இலக்கியத் தளத்துல விவாதிக்கப்பட்டதாகவும் இருக்கு. அவங்க எழுத்துக்கள்ல பிரச்சாரம் மிகையா இல்ல. அப்படியரு இடத்தை நோக்கி நகர்ந்து போற முனைப்பும் அவங்ககிட்ட இல்ல. பிரச்சாரத் தன்மையற்ற உங்களோட தொடக்ககட்டப் படைப்புகள்தான் தமிழ் இலக்கிய வாசகர்களோட மனதில் இடம்பெறக்கூடிய கதைகளாக இருக்கு. சிறுபத்திரிகைகள் எல்லாத்துலயும் கலை கலைக்காகவா மக்களுக்காகவாங்கிற விவாதம் நடந்துருக்கு. எந்தக் கட்டத்துல பிரச்சாரம் இலக்கியத்தை உங்களுக்கான கோட்பாடாகத் தேர்ந்தெடுத்தீங்க?
இலக்கியம் ஒரு பிரச்சார வடிவங்கிற முடிவுக்கு நான் எப்போதும் வரல. மற்றவங்க யாராவது அப்படியரு தீர்மானத்தோட எழுதுனாங்களான்னும் சொல்ல முடியல. ஆனா பிரச்சினைகளப் பேசறபோதே அதுக்கான தீர்வையும் தேட வேண்டியது ஒரு எழுத்தாளனுக்குள்ள தார்மீகப் பொறுப்பாயிடறதுன்னு நெனச்சேன். அந்த மாதிரியான என் கதைகள்ல அதற்கான தேடல் இருக்கும். வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீர்வு அந்தப் படைப்புக்குள்ள இருக்கும். தீர்வைப் பத்தி பேசும்பொழுது அது பிரச்சாரமாகப் பார்க்கப்படுதுன்னு நெனைக்கறேன்.

சிறுகதைங்கற வடிவத்துக்குள்ள ஒரு விஷயத்தை முழுமையாகப் பரிசீலிக்கறது, அதற்குள்ளேயே தீர்வைச் சொல்றதுங்கற பார்வை சிறுகதைங்கற செறிவான இலக்கிய வடிவத்தைச் சிதைக்கறதா ஆகாதா?
இல்லை. அந்த வடிவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா வெளிப்படுத்துறாங்க. உள்ளடங்கி வெளிப்படுத்துதல் அல்லது உரக்கப் பேசுதல் அப்படிங்கிறது வெவ்வேறு உத்திகள். என் கதைகளில் வெளிப்படையான பிரச்சாரத்தன்மை இருந்ததற்குக் காரணம் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் பற்றி பேசியதுதான். இந்தச் சமூகம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டுப் போகனும்ங்கற ஆசை. இந்த மாதிரியான புரிதல் காரணமாகப் பிரச்சாரத்தன்மை மேலோங்கிவிடுகிறதுன்னு நெனைக்கறேன்.

'அக்னிமூலை'ங்கிற ஒரு கதையில நடக்கற சம்பவங்கள் எந்தவொரு கிராமத்திலும் நடைபெறக்கூடிய இயல்பான ஒரு விஷயம்தான். அதை எழுதறதுக்கு, வாசிக்கறதுக்கு இந்த அமைப்பு சார்ந்த தத்துவம், அரசியல் சார்ந்த தெளிவு தேவையில்லை. அது கிராமத்து வாழ்வின் ஒடுக்குமுறைக்கு ஒடுக்கப்பட்டவன் கொடுக்கிற ஒரு பதிலடி. அதில் கலை சார்ந்த மீறல்கள் இல்லை. பிரச்சாரம் இல்லை. ஆனா அதுக்குள்ள ஒரு சார்பு இருக்கு. அரசியல் இருக்கு. பிறகு 'விடிகிற நேரங்கள்' கதைல ஒரு இயக்கம் அடையாளம் காட்டப்படுது. 'இரவுகள் உடையும்' தொகுப்புல வர்ற கதைகள்ல மார்க்சிய லெனினிய போதம் பெற்ற பாத்திரங்கள், அமைப்போட தொடர்புகொண்ட, அமைப்புரீதியான செயல்பாடுகளை முன்னெடுத்துட்டுப்போற பாத்திரங்கள் கதைகளோட போக்கைத் தீர்மானிக்கறவையா இருக்கும். 'பிணந்திண்ணிகள்'னு ஒரு கதை. அதுலயும் வேற சில கதைகள்ளயும் அதிகாரவர்க்கம், காவல் துறை, நீதிமன்றம், மார்க்சியலெனினியம் சார்ந்த முடிவுகளை நேரடியான வாக்கியங்களிலேயே கொண்டுட்டு வர்றீங்க. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாச்சு. அதை எப்படிப் பாக்குறீங்க?

சமூக விமர்சனங்களைப் படைப்பாக்குவதற்குப் பதிலா சமூக விமர்சனங்களைப் படைப்புக்குள்ளேயே நேரடியாகப் பேசுவதுங்கிறது கலையாக முடியாது. அது ஒரு தத்துவார்த்தப் பார்வை, தத்துவத் தெளிவு வேண்டியதில்லை எனச் சொல்ல முடியாது. அதைப் பற்றிய தேடல் இருக்கணும். அதை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கணும். படைப்பாக்கம்னு வர்றபோது அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு நிறுத்திட்டு, நீங்கதான் ஏறி உட்கார்ந்திருக்கணும் அப்படின்னு தொ.மு.சி. ரகுநாதன் சொல்வார். அதுபோல சமூக விமர்சனங்கள் முடிவுகள் இவற்றை நேரடியாக முன்வைக்காமல் படைப்பாக மாத்துறதுங்கறது அந்தக் கதைகள எழுதின காலகட்டங்கள்ல குறைஞ்சு போயிருந்ததுன்னுதான் நான் நினைக்கிறேன். ஆனா அப்பவும்கூடச் சில கதைகள் அதனதன் இயல்புத் தன்மைலயே வெளிப்பட்டுதுங்கற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

'இரவுகள் உடையும்' கதை கூடப் புரட்சிகர இயக்கங்கள் முன்னெடுத்துச் சென்ற பெண்ணியக் கோட்பாட்டு நிலையில இருந்து எழுதப்பட்ட கதை. அதிலும்கூட நிறைய இயல்புத்தன்மைகள் இருக்கு. அது அடிப்படையாகவே கலைஞனுக்குள்ள விழிப்புநிலையில் இருந்து உருவான ஒரு விஷயம். மார்க்சிய-லெனினியத் தத்துவப் பிரச்சாரத்துக்கான ஒரு கருவியா நீங்க உங்க சிறுகதைகளைக் கையாண்டபோது, அது உங்களுடைய படைப்பூக்கத்தைத் தூண்டியிருந்தாலுங்கூடப் படைப்புங்கிறரீதியில அவை வாசகனைப் பாதிச்சுதுன்னு நினைக்கிறீங்களா?
அதை வாசகர்கள்தான் சொல்லணும். வாசகர்களைப் பற்றிய கணிப்பே அந்தக் காலகட்டத்தில் வேறொன்றாக எனக்கு இருந்தது.

நீங்க சொல்ற அந்த இயல்பான வெளிப்பாடுகள வீரியமான வாக்கியங்கள், பகுதிகள் சில அந்தக் கதைகள்ல இருந்தாக்கூட அது காலத்தோடு வளர்ந்து வராம வறட்டுக் கற்பனையா பல இடங்களில் தேங்கிடுது. ஒரு இருபதாண்டு காலத்துல நாம எதிர்பார்த்த மாதிரி சமூகத்துல ஒரு புரட்சி தோன்றிரல. சமூகத்துல புரட்சிகரச் சிந்தனைகள் வலுப்பெறல. மேலும் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கு. மேலும் மோசமான கூறுகள் சமூகத்தைக் கட்டமைச்சுக்கிட்டுப் போயிட்டேயிருக்கு. புரிந்துகொள்ள முடியாத நிறையச் சிக்கல்கள்ல மாட்டிட்டிருக்கோம். அதுக்கு நம்ம படைப்புகள் வழியா தீர்வு காண்பது சாத்தியம்னு நினைக்கறீங்களா?
அந்தக் காலகட்டத்துல அப்படி ஒரு நிலைப்பாடு தேவைப்பட்டது. அன்றைக்கு அத்தகைய புரட்சிகரமான நடவடிக்கைகள் இருந்தன. நான் அந்தப் புரட்சிகர நடவடிக்கைகள ஒரு முன்மாதிரியாத்தான் எடுத்துகிட்டேன். அந்த அடிப்படையில்தான் எழுதினேன். ஆனா கலையாக அது வெற்றி பெற்றதாங்கிற கேள்வி இருக்கு. வெற்றிபெறாமல் போயிருக்கலாம். ஆனா ஒரு எழுத்தாளன் தன் கொள்கைகள வெளிப்படுத்திய அடிப்படையில் அது எழுதியவனுக்கு ஒரு மனநிறைவைத் தர்ற விஷயம்தான். குறிப்பாப் படைப்பிலக்கியவாதிகள், தீவிர வாககர்களின் கடும் விமர்சனத்திற்கும் புறக்கணிப்புக்கும் உள்ளானவை அவை. ஆனா அமைப்புசார்ந்த, புரட்சிகர உணர்வு கொண்டவர்களுக்கு அவை மிக உயர்ந்த படைப்புகளாகத் தோன்றியிருக்கலாம். நான் அப்படித்தான் பாக்கறேன். இரண்டு வகையாப் பிரிக்கலாம். ஒன்று படைப்பிலக்கியவாதிகள், தீவிர வாசகர்கள் பார்வை. இன்னொன்று இந்த சமுதாயத்தைப் பற்றிய முற்போக்கான, புரட்சிகர எண்ணங்கள் கொண்டவர்கள், களப்பணியாளர்களின் பார்வை.

அப்படிப் பிரித்துப் பார்க்க முடியுமா? அப்படிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்குமா?
அதைப் பற்றி நிறைய விவாதங்கள் தேவைப்படுது. மாவோ, லெனின் போன்ற மார்க்சிய மூலவர்கள்கூட அதைப் பத்தி நிறைய விவாதிச்சுருக்காங்க. கட்சி இலக்கியம் என்றும் கட்சிக்கும் அப்பாற்பட்ட இலக்கியமென்றும் இருவகையாப் பார்த்திருக்காங்க.

ஒரு அமைப்பு சார்ந்தவர்கள் அல்லது புரட்சிகர எண்ணம் கொண்ட வாசகர்கள், அவர்களுக்கான இலக்கியம்ன்னு மனசுல வச்சுக்கிட்டு எழுதுறபோது ஏற்கனவே எழுதி வெற்றிபெற்ற உங்க சிறுகதை வடிவத்துல நிறைய மாற்றங்கள் வந்துருது. கிட்டத்தட்ட அந்த வடிவம் இல்லாமலே போய் வேறோர் வடிவம் வருது. நிறையக் கதைகள்ல கதை ஒரு இடத்தில் முடிஞ்சுபோயிரும். அதுக்கப்புறம் நீங்க ஒரு பத்தி சொல்லுவீங்க, அந்தக் கதையிலிருந்து என்ன விஷயத்தை வாசகர் எடுத்துக்கணும்னு சொல்வீங்க. நல்ல உதாரணம் 'மூன்றாவது முகம்'. மூணு முகமும் என்னன்னு நீங்க தொகுத்துச் சொல்வீங்க. வாசகனாலயே கதையைப் படிச்சுப் புரிஞ்சிக்க முடியும். உங்க தொடக்ககாலக் கதைகள்ல இப்படிப்பட்ட தன்மை இருக்காது. பொதுவாகவே பிரச்சார இலக்கியம் வாசகனுக்கு எந்தவிதமான இடத்தையும் தர்றதுல்ல. வாசகனுக்கு ஈடுபாட்டை உருவாக்கறதும்கூடப் படைப்பு வாசகனுக்கு வழங்கியிருக்கிற அந்த இடம்தான். உங்களுடைய பல படைப்புகள்ல இந்தக் குறை தென்படுது.

பின்னாடி வந்த படைப்புகளில் வாசகர்களுக்கான இடம் படைப்பாளி பேசுவதற்கான இடமாக மாறிடுது. அது நிகழ்ந்திருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி வாசகனுக்கு அவனுக்குரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கணும். என் பிந்தைய கதைகளில் அது இல்லைங்கிறதை நான் உணர்றேன். இப்ப எடுத்துக்காட்டா 'காடு' கதையில கடைசில் அந்த ஊரைவிட்டு இரண்டு ஜோடிக் காலடித் தடங்கள் நீங்கிவிடுகின்றனன்னு முடியும். அதையே நான் பிற்காலத்தில் எழுதியிருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன்னு நெனைக்கறேன்.

இப்ப உங்களுக்கோ உங்களைப் போன்ற மற்ற படைப்பாளிகளுக்கோ இந்த மாதிரியான தீர்மானங்கள் ஏற்படக் காரணம் என்ன? நல்ல கதைகள்னு சொல்லத்தக்க சில சிறுகதைகள் எழுதுன ஒருவர் அதுலயிருந்து விலகிப்போறதுக்கான காரணம் என்ன?
ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது இலட்சியத்தின் மீதான பிடிப்பு அதை வெளிப்படுத்த வேண்டும் அப்படிங்கிற வெறி. அது படைப்பு சார்ந்த அடிப்படைகளைப் பின்னுக்குத் தள்ளிருது. படைப்பு பற்றிய இந்த உணர்தலுக்கும் செயல்முறைக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. பிந்திய ஆண்டுகளில் படைப்பு வெளிப்பாடுகள் குறைந்துபோய்விட்டதையே குறிப்பிடுகிறேன்.

மார்க்சியம் போன்ற தத்துவங்களோ கட்சி சார்போ படைப்புக் கலையைச் சிதைச்சிரும் அப்படீன்னு ஒரு பார்வை இருக்கு. உங்க பதில் அந்தப் பார்வை நியாயமானதுதான்னு சொல்ற மாதிரி இருக்கு இல்லையா?
இல்ல ரொம்பச் சுருக்கமா சொல்றதுன்னா ஒண்ணு தான், கட்டுரையில வெளிப்படுத்த வேண்டியதெல்லாம் கதைகள்ல வெளிப்படுத்துனோம். இவையெல்லாம் கட்டுரைகளில் சொல்லப்பட வேண்டியது. சொல்லப்பட்டிருந்தா விவாதத்துக்குரியதா மாறியிருந்திருக்கும் ஆனா ஒரு கலைப் படைப்புக்கு அதற்குரிய நியாயங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கட்சி சார்ந்த உங்க தொடர்புகளிலிருந்து இப்படியரு பார்வை உருவானதாகக் கருதலாமா?
கட்சி சார்ந்த, அமைப்பு சார்ந்த செயல்களிலிருந்துதான் இந்த மாதிரியான போக்கு உருவாகுது. கட்சிக்கு அல்லது அமைப்புகளுக்கு கலை, இலக்கியம் பற்றிய புரிதல் அதிகம் கிடையாது. இருப்பதாக நினைத்துக்கொண்டு நமது சுயசிந்தனைகளை, தேடல்களை முடக்கிக்கொள்வது ஆபத்து. ஒரு படைப்பாளியின் புரிதலுக்கும் ஒரு குழுவினுடைய அல்லது கட்சியினுடைய புரிதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அவங்க எதையுமே கட்டளையிடுகிற நிலையில் இருப்பார்கள். அமைப்புச் செயல்பாடுகள்ள தீவிரமாப் பங்கெடுத்துக்கறபோது படைப்புகள்ல ஒரு பிரச்சாரத் தன்மை இயல்பா வந்துருது.

உங்களோட சமகாலப் படைப்பாளிகளோட செயல்பாடுகள், எழுத்துக்களை எப்படி மதிப்பிடுறீங்க?
தத்துவார்த்த விசாரணைகளிலும் அமைப்புரீதியான செயல்களிலும் என்னை நானே சுருக்கிக்கொண்டுவிட்டபோது, என் சமகாலப் படைப்பாளிகள் சுதந்திரமாகத் தம் படைப்புச் செயல்பாடுகளை மேற்கொண்டு என்னைத் தாண்டிப் போனாங்கன்னு சொல்லத் தோணுது. அவங்க தங்களுடைய படைப்புலகத்தோடு சரியான தொடர்பு கொண்டிருந்தாங்க. பூமணி, வண்ணநிலவன், பிரபஞ்சன், வண்ணதாசன், ஜெயந்தன், தமிழ்ச்செல்வன் போன்றோர் படைப்பாளிகளாகத் தம்மைச் செழுமைப்படுத்திக்கொண்டு மேலெழுந்து நின்றார்கள்.

படைப்புக்கு ஒரு பயன் மதிப்பு இருந்தா போதும்ங்கற ஒரு எண்ணம் உருவாகிடுது, இல்லையா?
ஆமா அப்படிங்கிற கருத்து எனக்கு இருந்தது. அதுதான் என்னுடைய பிந்தைய காலப் படைப்புகள்ல தென்பட்ட குறைபாடுகளுக்குக் காரணமா இருந்ததுன்னு நான் பாக்கறேன்.

அமைப்பு சார்ந்த செயல்பாடு ஒரு படைப்பாளியின் பார்வையை விரிவுபடுத்தக்கூடியது, அப்படிங்கிற மாதிரியான கருத்துகளோடதான் நீங்ககூட இருந்துருக்கீங்க. ஆனா இப்ப நீங்க அந்தச் செயல்பாடு படைப்புகளச் சுருக்கிருச்சு அப்படின்னு சொல்றீங்க. அப்ப அமைப்பு சார்ந்து இயங்கக்கூடிய ஒரு படைப்பாளிக்கு நேரக்கூடியது இதுதான்னு நாம முடிவுக்கு வரலாமா?
என் சுயானுபவத்துலிருந்து அதைக் கணிக்கிறபோது நம்முடைய படைப்பாற்றல் என்பதைச் சுருக்கிக்கொண்டு அமைப்புக்கான செயல்பாடுகளை நாம் விரிவுபடுத்துறோம். அமைப்புக்கான செயல்பாடுகள் என்பது படைப்பாற்றல் மட்டுமே அல்ல. அமைப்பு பல்வேறு தளங்கள்ல செயல்படுது. அதன் தேவைகள் பலவிதமா இருக்கு. சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையை நோக்கி அது போகுது. அப்ப அந்த ஒட்டுமொத்த விடுதலைக்கு நம்முடைய படைப்பாற்றல் மூலம் என்ன செய்ய முடியுமோ அந்த வகையில் மட்டும் நின்றிருந்தம்னு சொன்னா நம் படைப்புகள் வெற்றி பெற்றிருக்கும். ஆனா அமைப்பினுடைய தேவைகள் நிறைவேறாமல் போயிருக்கும். அமைப்பினுடைய பிரதான செயல்பாடாகக் கலை இலக்கிய அமைப்பு உருவாக்குறோம். அந்த அமைப்பை எடுத்து நடத்துவது. பத்திரிகை நடத்துவது. இப்படியான அதன் தேவைகளை நிறைவேற்றுவது. அந்த இடத்தில்தான் ஒரு படைப்பாளிக்குரிய கேள்வி வருது. ஒரு படைப்பாளியின் செயல்பாடுகளை ஒரு அமைப்புச் செயல்பாடாகக் குறுக்கிவிடுவது படைப்புச் செயல்பாடுகளைப் பாதிக்கும். இது என் அனுபவம். ஏன்னா படைப்பாளியின் சிந்தனை, நேரம், உழைப்பு இவையெல்லாவற்றையும் அமைப்பு எடுத்துக்கொள்கிறது.

படைப்பு அல்லாத அமைப்புக்குத் தேவைப்படும் வேறு என்னென்ன செயல்பாடுகள்ல ஈடுபட்டீங்க?
பத்திரிகை. பத்திரிகை நடத்துவதுங்கிறது படைப்பு அல்லாத ஒரு செயல்பாடுதான் இல்லையா? அப்புறம் அமைப்பின் ஒரு பிரச்சாரகனாக இருப்பது. கூட்டங்களில் பங்கேற்பது. அப்ப மக்கள் கலாச்சார கழகம்ங்கிற அமைப்பு முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருந்தது.

ஒரு எழுத்தாளனின் அமைப்புரீதியான செயல்பாடுகள் அவனது படைப்புச் செயல்பாடுகளுக்குத் தடையாயிருக்குமா?
விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம். அது பற்றிய தெளிவுகளுக்காகவாவது இதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கு. எழுத்தாளனா தன்னை ஏதாவது ஒரு அமைப்புல இணைத்துக்கொள்வது முக்கியமானதல்லன்னு சொல்ல முடியாது. சுற்றுச்சூழல், மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளில் பல எழுத்தாளர்கள் முனைப்போட பங்கு பெற்றுக்கொண்டுதான் இருக்காங்க.

எந்த அமைப்போடும் தொடர்பு இல்லாத, அரசியல் கட்சியோட கொள்கையோடோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத பல எழுத்தாளர்கள் அது மாதிரியான காரியங்கள் செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஒரு எழுத்தாளன்கிற முறையில் தீவிரமாச் செயல்படும் யாரும் மனிதாபிமானம் சார்ந்த, ஜனநாயகம் சார்ந்த அக்கறைகளோடுதான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

ஒரு படைப்பாளிக்குத் தன்னைப் படைப்புச் செயல்பாடுகள்ல ஈடுபடுத்திக்கப் போதிய நேரம், உழைப்பு தேவைப்படுகிறது. அமைப்புச் செயல்பாடுகள் அந்த நேரத்தை உழைப்பையும் எடுத்துக்கொள்கின்றன. அந்த அடிப்படையில இவனுடைய படைப்பாற்றலை அது சுருக்குவதாக அல்லது கட்டுப்படுத்துவதாக மாறிவிடுகிறது. எனக்குக்கூட அப்படித்தான் நிகழ்ந்தது. என் படைப்பாற்றல் கைநழுவிப் போனது இதன் காரணமாகத்தான். அமைப்புரீதியான செயல்பாடுகள் கோட்பாடுகள் என்று வருகிறபோது அதற்கு உள்ளடங்கியே சிந்திப்பதால், அது நம்முடைய சொந்தத் தேடலைத் தடுத்துருது. புதிய விஷயங்களை வாசிப்பதற்கோ விவாதிப்பதற்கோகூட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. செயல், சிந்தனை, வாசிப்பு எல்லாமே அமைப்போடத் திட்டத்தின் ஒரு பகுதியா மாறிடுது. அப்படி ஒரு வரையறை, எல்லை உருவாகிவிடுது. தேடுவதிலும் உள்வாங்கிக்கொள்வதிலும் எல்லையற்ற தன்மைதான் ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத் தேவை. அமைப்புச் செயல்பாடுகள் அவற்றை இல்லாமல் செய்துவிடுகின்றன.

ஒரு அமைப்புல இணைந்து செயல்படக்கூடிய படைப்பாளி அமைப்புக்கு எந்த விதத்தில் பங்களிப்பு செஞ்சா தன் படைப்பாற்றலைத் தக்கவச்சுக்க முடியும்?
எந்தவகையான பணிகள்னு நாம் தீர்மானிக்க முடியாது. எல்லாப் பணிகளையுமே அமைப்பு திட்டமிட்டுக் கொடுத்துடுது. படைப்பாளிங்கறவன் அமைப்புக்கு மற்ற ஊழியர்களைப் போன்ற ஒருவன்தான். இந்தக் கூட்டம் இங்கே ஏற்பாடு பண்ணியிருக்கு அதுக்கு நீங்க போங்க, இங்கே கலாச்சாரக் கழகத்துடைய கிளையக் கட்ட வேண்டியிருக்கு அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க இப்படி அமைப்பு திட்டமிட்டுக் கொடுக்குதுல்லையா எல்லாப் பணிகளையுமே ஒரு கலைஞன் எடுத்துச் செய்ய வேண்டியிருக்கு. அப்படி அவன் செய்வதற்கான மறுப்பு வெளிப்படும்போது அமைப்புச் செயல்பாடுகளில் சந்தேகம் எழுவதற்கான வாய்ப்பு இருக்கு. இந்தப் பணியைச் செய்வதற்கு ஏன் இவர் மறுக்கிறார்? தான் ஒரு கலைஞனா இருக்குற காரணத்தினாலேயே இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறாரா? தொடக்ககாலத்துல மின்ரயில்ல சுவரொட்டிகள் ஒட்டிட்டு இருந்தோம். அதை மக்கள் கலாச்சாரக் கழகத் தோழர்கள் செஞ்சிட்டிருந்தாங்க. அதுல இருந்த ஒரே ஒரு படைப்பாளி நான் ஒருத்தன்தான். நானும் அவர்களோட போயி ஒட்டினேன். சுவரொட்டிகள் ஒட்டாம நான் விலகி நின்னிருப்பேன்னா இவர் தன்னை ஒரு அறிவுஜீவியா எல்லாரையும்விட உயர்ந்தவரா நினைக்கிறார். மற்ற தோழர்களையெல்லாம் இவர் சாதாரணமாப் பாக்குறார். அப்படிங்கிற மாதிரியான கருத்து உருவாகுறதுக்கான வாய்ப்பு இருக்குது இல்லையா? இவங்கெல்லாம் இந்தப் பணிகளைச் செய்வாங்க இவர் செய்யமாட்டார். அப்படிங்கிற மாதிரி பாக்குற ஒரு பார்வை. அது ஒரு அமைப்புக்குப் பொருத்தமானது அல்ல. அமைப்புகளோட கட்டளைகளுக்கேற்ப நாம் செயல்களில் இறங்குகிறபோது நம்முடைய படைப்பூக்கம்ங்கிறது முழுக்கக் குறைஞ்சுபோற வாய்ப்பு இருக்கு. ஆனா ஒரு அறிவுஜீவியை, சிந்தனையாளனை எந்த நிலையிலே வைத்து வேலை வாங்குவது என்ற பிரச்சினை அமைப்புகளுக்கு இன்னும் தொடருது.

அமைப்புரீதியான செயல்பாடுகள் படைப்பாற்றலை முடக்கக்கூடியவைதான் என்பதுபோன்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கு.

அமைப்பாக இயங்குவது தேவையானது என நான் பார்க்கிறேன். ஏனென்றால் இந்தச் சமூகத்தில் கருத்துரீதியான எதுவுமே அமைப்பு மூலம்தான் மக்களைச் சென்றடையுது. ஒரு கருத்து மட்டும் தனியா உருவாகுறதுல்ல. அதோடு நாலு பேர் சேர்ந்து ஒரு செயலும் உருவாகுது. அப்படி ஒன்று உருவாகிறபோது ஒரு கலைஞன் தன்னை ஒன்றில் இணைத்துக்கொள்வது சரிதான். அப்படி ஏதாவது ஒன்றோடுதான் இணைத்துக் கொள்ளனும்னு இல்ல. அவன் பல்வேறுவகையான அமைப்புகளுக்குப் பங்களிப்புச் செய்கிறவனாகவும் இருக்கலாம்.

ஒரு எழுத்தாளரா இருக்குற உங்களுக்குப் படைப்புக்கு நேரம் ஒதுக்க முடியாதது, அதுக்கான தனிப்பட்ட வாசிப்புகளிலோ உரையாடல்களிலோ விவாதங்களிலோ ஈடுபட முடியாம இருக்கறது காரணமா ஒரு படைப்பாளியா தேக்கமுற்றுப்போனதான மன உளைச்சல்களோ வருத்தங்களோ ஏற்பட்டிருக்கா?
அது பிற்காலத்தில் ஏற்பட்டது. அதில் ஈடுபடுறபோது ஆர்வத்தின் காரணமா இழப்பாத் தெரியல. ஆனா அதுதான் மிகப் பெரிய இழப்புங்கிற மாதிரி நான் பின்னால் உணர்ந்தேன். முழுக்க முழுக்கக் களப்பணிகள் காரணமா தேடல் என்பது நமக்குச் சுத்தமாக இல்லாமல் போயிருது. அறிவு சார்ந்த தேடல் ஒரு கலைஞனுக்கு மிக அவசியமான விஷயம்.

ஒரு படைப்பாளியா அதை மீட்கறதுக்கு உண்டான முயற்சிகள் எதுவும் செய்தீர்களா?
ஆமா அதுக்குப் பிறகு அதை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளத்தான் செய்தேன். பிற்காலத்துக் கதைகள் - குறிப்பாகப் 'புயலுள்ள நதி', 'கள்ளழகர்' தொகுப்புல உள்ள கதைகள் எல்லாம் அதுல இருந்து மீண்டுவருவதற்கான அடையாளங்கள்.

அந்தக் கதைகளிலும் பிரச்சாரம் குறைந்திருந்தாக்கூட மொழி சார்ந்த ஒரு வளர்ச்சியை நீங்க எட்டவே இல்லை. ஒரு நாற்பதாண்டு காலம் படைப்பாளியா செயல்பட்டிருக்கீங்க. இந்தக் காலகட்டதுல தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழல்ல பல விவாதங்கள் நடந்திருக்கு. குறிப்பா தொண்ணூறுகளின் தொடக்கத்துல தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழல்ல நடந்த விவாதங்கள் கவனத்துக்குரியவை. பின்-நவீனத்துவம்ங்கிற பார்வை, அதே சமயத்தில் தலித்தியம் பெண்ணியம் போன்ற உரையாடல்கள் வருது. படைப்பாளிகள் மொழியில் பெரிய மாற்றங்கள் நிகழுது. தொடக்க காலத்தில் உங்க சிறுகதைகளில் நீங்க பயன்படுத்தின மொழியேகூட ரொமான்டிஸம்னு நிராகரிக்கப்படுற சூழல் உருவாகுது. சாதி ஒரு முக்கியமான மையமா மாறுது. பெரியார் மீண்டும் முக்கியமான விவாதப் பொருளா மாறுகிறார். சொல்லாடல்ல இருக்கக்கூடிய அரசியல், பெண்ணிய அரசியல் உடல் அரசியல் இது மாதிரி பல்வேறுவித நுண்ணரசியல் பற்றி விவாதங்கள் விரிவாக வருது. அந்த விரிவான விவாதங்களில் இருந்துதான் தீவிரத் தமிழ்ப் படைப்புச் சூழல் வலிமை பெற்றது. இந்த விவாதங்கள நீங்க எப்படிப் பாத்தீங்க? அது உங்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துச்சு?
என் படைப்புகள் அப்படின்னு சொன்னா முதல் காலகட்டம் கவித்துவமான இன்னொரு வகையில் சொன்னா எதார்த்தவாதப் படைப்புகள். இரண்டாவது காலகட்டம் முழுக்க அந்த எதார்த்தத்திலிருந்து விலகி, நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தொனியுடைய அல்லது பிரச்சாரத் தன்மையுடைய புரட்சிகர எதார்த்தவாதப் படைப்புகள் மூன்றாவது கட்டம் தொண்ணூறுகளுக்குப் பிறகு அப்ப நீங்க சொல்ற மாதிரி மொழி என்பதைத் தவறவிட்டுட்டேன். மொழின்னு நான் இங்க சொல்றது வெளிப்பாட்டு முறை. அதுலயே மற்ற படைப்பாளிகள் மாதிரி தொடர்ந்திருந்தேன்னா நான் வேறோர் இடத்திற்கு வந்து இவற்றை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனா அதுக்காகத் தொண்ணூறுகளில் நடந்த விவாதங்களை நான் கவனிக்கல அப்படிங்கிறது அல்ல. பெண்ணியம் தொடர்பாகவோ தலித்தியம் தொடர்பாகவோ மீண்டும் பெரியாரியம் எழுச்சியுற்றது தொடர்பாகவோ நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவற்றை உள்வாங்கிக்கொண்டிருந்தேன். அரங்கங்களிலோ கட்டுரைகளிலோ படைப்புகளிலோ வெளிப்பாடுகளாக நான் செய்யவில்லை. ஆனா இந்தப் படைப்புகள் வர்றபோது அந்த மொழியைத் தவறவிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக நான் இனி எழுதும்போது புதுமொழியைக் கையாளணும்கிறது எனக்குத் தெரியும். இது முற்றிலும் இது நான்தான் என்று என்னை அடையாளப்படுத்த முடியாத ஒரு மொழி. அதை நான் கண்டுபிடிக்கணும்.

'வானம்பாடி' இதழ்ல கவிதை எழுதியிருக்கீங்க. 'வானம்பாடி' இயக்கதோட சேர்த்து உங்க பேரும் சொல்லப்படுது. அவங்களோட உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க.
நான் சேலத்துல இருக்கும்போது 1971ல் 'வானம்பாடி' முதல் இதழ் வந்தபோது அந்தக் கவிஞர்கள் எனக்கு அறிமுகமாகுறாங்க. அதற்குப் பிறகு கோவை வேளாண்மைக் கல்லூரில ஒரு கருத்தரங்கம் நடந்தது. அது ஒரு முத்தமிழ் விழா. அதுல கலந்துக்கறேன். அப்ப 'வானம்பாடி' கவிஞர்கள் பங்கேற்கிறாங்க. பிறகு நான் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியிருக்கேன். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வுகளே. 'வானம்பாடி' இதழ் உருவாக்கத்திலோ இயக்கச்செயல்பாட்டிலோ என்னை நான் இணைத்துக்கொள்ளவில்லை. அப்ப நான் கோவையிலேயே இருந்தேன்.

'வானம்பாடி' கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க? சாத்தியமில்லாத கனவுகள், அதீதக் கற்பனை, உணர்ச்சிமயமான மொழி, கவிதைக்கும் நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடுன்னு அவங்களப் பத்தின மதிப்பீடுகள் இருக்கு. 'வானம்பாடிகள்' இயக்கத்தையும் அந்தக் கவிஞர்களோட கவிதைகளையும் தமிழ்க் கவிதை வரலாற்றில் எந்த இடத்தில் வைத்து மதிப்பிடுவது?
வார்த்தை ஜாலங்கள், அதீதக் கற்பனைகள், அதீத முழக்கங்கள் இதெல்லாம் வானம்பாடிக் கவிஞர்களின் அடையாளம். அவர்களது வாழ்க்கைக்கும் கவிதைக்கும் தொடர்பில்லைன்னு எழுந்த விமர்சனங்கள் சரியானவைதான். பாசாங்கான சொற்கள் மூலம் 'நான் கவிஞன், என் கவிதை மூலமாக அதைப் புரட்டிருவேன் இதைப் புரட்டிருவேன்' அப்படி அதீதமாக ஆரவாரம்செய்யும் கவிதைகள். அதெல்லாம் ஆரவாரங்கள்தானே தவிரக் கவிதை கிடையாது. உண்மையில் அதில் ஈடுபாட்டோடு கொள்கைப்பிடிப்போடு ஈர்ப்போடு ஞானி போன்ற சிலர் இருந்தார்கள். அவர்களுக்கும் இந்த ஆரவாரங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.

என்ன காரணங்களால் அந்த இயக்கம் இல்லாமப்போச்சு?
அடிப்படைக் கோட்பாடு வரையறுக்கப்படவில்லை. இலக்கிய இதழோ கலை இலக்கிய அமைப்போ அதற்கென வரையறைகள், கோட்பாடுகள் தம்முடைய இலக்கு பற்றிய தெளிவைக் கொண்டிருக்கணும்னு நெனைக்கறேன். அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் அவங்க அவங்க தன்னெழுச்சியா வந்து சேர்ந்தாங்க. அந்தத் தன்னெழுச்சியே அதை இல்லாமல் செய்துவிட்டது. உள்ளீடற்ற ஒரு இயக்கத்துக்கு என்ன நேருமோ அதுதான் வானம்பாடிகளுக்கும் நேர்ந்தது. அப்புறம் எல்லாரும் ஒரே கொள்கை உடையவங்க இல்ல. ஆளாளுக்கு ஒரு கொள்கை வெச்சுருந்தாங்க. நெருக்கடி நிலையை ஆதரிச்சது அவங்களோட முரண்பாடுகளுக்குச் சரியான உதாரணம். நெருக்கடி நிலையை ஆதரிச்சுக் கவியரங்கமே நடத்துனாங்க. எந்தக் கூட்டுக்குள்ளும் அடங்காதவர்கள்னு சொன்ன வானம்பாடிகள் எப்படி எமர்ஜென்ஸி கூட்டுக்குள் அடங்கினாங்கன்னு இன்குலாப் கேட்டார்.

வானம்பாடியின் கவிதை மொழி உங்க உரைநடைலகூடச் சில தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குன்னு தோணுது.
இல்லை, என்னுடைய உரைநடைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்காது. தொடக்க காலத்தில் மொழியாக்கம் நிறைய வாசிச்சேன். அதுல சில சொற்கள் வந்திருக்கும். நா. காமராசன் கவிதைகளில் சொர்க்கம், கனவு, புஷ்பம் இந்த மாதிரி நிறைய இருக்கும். அவை என்னோடதுலயும் வரும்.

தொடக்கத்துல 'தாமரை'லதான் நிறையக் கதைகள் எழுதியிருக்கீங்க அதுமூலமாத்தான் வெளியில அறியப்பட்டிருக்கீங்க. அந்த இதழ்ல நீங்க எழுதிய காரணம் தி.க.சியோட தொடர்பு. அது பற்றிச் சொல்லுங்க
தமிழ்நாடன்தான் எனக்கு 'தாமரை'யை அறிமுகப்படுத்தினார். மதுரையில் இருக்கும்போதே 'தாமரை' வாசிச்சிருக்கேன். தமிழ்நாடன்தான் 'தாமரை'ல எழுதவும் தூண்டியவர். நான்கைந்து கதைகள் வெளிவந்ததற்கப்புறம்தான் திகசியைச் சென்னையில் சந்தித்தேன். அவர் என்னை வெகுவாக ஊக்கப்படுத்தினார். 'தாமரை'யிலும் 'கண்ணதாச'னிலும்தான் நான் அதிகமா எழுதுனது. அப்புறம் 'சிகரம்', 'சுவடு', 'நீலக்குயில்' 'சதங்கை' போன்ற இதழ்களில் எழுதினேன்.

'மனஓசை' இதழ் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் வெளி வந்ததில்லையா? அதனோடு உங்க தொடர்பு, பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்.
'மனஓசை' வரத்தொடங்கியதற்குப் பின்னர்தான் எனது படைப்புப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடக்கத்துல சில சிறுகதைகள் எழுதினேன். அப்புறம் ரொம்ப நாள் நான் அதுல கதைகளே எழுதல. கட்டுரைகள், உருவகங்கள்னு நிறைய எழுதினேன். 'மன ஓசை' தொடங்கப்பட்டுப் பல வருடங்களுக்கு அதை ஒரே ஆளாகத்தான் நடத்த வேண்டியிருந்தது. ஆசிரியர் குழு என்ற ஒன்று இருந்தாலும் நடைமுறைப் பணிகளில் அவங்களால பங்களிப்புச் செய்ய முடியல. படைப்புகளைப் படித்துப் பாத்துத் தேர்வு செய்யறது, இதழ் அச்சாக்கத்தின்போது புரூப் பாக்கறது, அச்சானதுக்கப்புறம் எடுத்துக்கிட்டு வந்து கட்டுகளாகக் கட்டி விநியோகத்துக்கு அனுப்பறதுன்னு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. நிர்வாகம் சம்பந்தமான வேலைகளும் அதிகம். கடைசியில என்னோட அலுவலகப் பணியக்கூட 'மன ஓசை'க்குத் தேவைப்படறதுக்கு ஏற்ற மாதிரி மாத்தியமைச்சுக்கிட்டேன்னு சொல்லலாம். தனிப்பட்ட முறையில் படைப்புப் பணியச் செய்யறதுக்கான நேரமே இல்லாமல் போயிருச்சு. முழுமையா என்னை அந்தப் பணியில ஈடுபடுத்திக்கிட்டேன்.

'மனஓசை'யோட தாக்கம்ன்னு எதைச் சொல்வீங்க?
குறிப்பிட்டுச் சொல்லணும்னா அந்தச் சமயத்துல சமூக அரசியல் சார்ந்த விமர்சனங்கள 'மன ஓசை' அளவுக்குக் கூர்மையாக முன்வெச்ச இதழ்கள் வேற எதுவும் இல்லாம இருந்தது. 'மனிதன்', 'புதிய மனிதன்' போன்ற இதழ்களுக்கப்புறம் அந்த அளவுக்கான தாக்கத்த ஏற்படுத்தற வேற இதழ்கள் இல்ல. அதனால அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நான்கைந்து வருடங்களுக்கப்புறம் அமைப்பே இதழோட விநியோகத்த ஏத்துக்கிச்சு. அந்தச் சமயத்துல 20 ஆயிரம் பிரதிகள்வரை விற்பனையாச்சு.

'மனஓசை'யோட இலக்கியப் பங்களிப்பு என்ன?
சிறப்பான சில கதைகள் வந்தன. சில மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் குறிப்பிடத்தக்கன. கோ. கேசவன், ஞானி, அ. மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், கலை இலக்கியப் பிரச்சினைகள் குறித்து நடத்திய உரையாடல்கள், விவாதங்கள் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். கோ. கேசவன் தொடர்ந்து 'மனஓசை'க்கு எழுதினார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்த அவருடைய தொடர் கட்டுரை, வரலாற்றின் பக்கங்கள் என்ற மற்றொரு தொடரும் முக்கியமானவை. சோழர் காலத்தில நடந்த கலவரங்கள் பற்றியெல்லாம் அதில் எழுதியிருப்பார். அதேபோல் பெட்ரோல்ட் ப்ரெக்ட் பற்றி அ. மார்க்ஸ் எழுதிய தொடர். அதெல்லாம் 'மனஓசை'யின் வாசகத் தளத்துக்கு மேல் இருக்கும்னு நெனச்சோம். ஆனா வாசகர்களிடமிருந்து அதுக்கு நல்ல வரவேற்பு கெடச்சுது. அந்தச் சமயத்தில பிரக்டப்பத்தித் தமிழ்ல அறிமுகங்கள் நடந்துக்கிட்டிருந்தது. திராவிட இயக்கக் கலாச்சாரம் குறித்து வசந்தகுமார் எழுதிய தொடர் குறிப்பிடத்தக்க ஒன்று. இப்படிப் பல.

இப்பொ நெனச்சுப் பாக்கறப்பொ 'மன ஓசை' குறித்து என்ன உணர்வுகள் உங்களுக்கு இருக்கு?
தனிப்பட்ட என்னோட எழுத்துப் பணி பாதிக்கப்பட்டாலும்கூட, ஒரு பத்து வருஷம் அதைத் தொடர்ந்து நடத்த முடிஞ்சது ஒரு சாதனைன்னுதான் சொல்லணும். மன நிறைவை உருவாக்கும் நினைவுகள் அது சார்ந்து இருக்கு.

சந்திப்பு: பெருமாள் முருகன், தேவிபாரதி
நன்றி: காலச்சுவடு - அக்டோபர் 2008


காலச்சுவடு - எதிர்வினை

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். அக்டோபர் மாதக் காலச்சுவட்டில் வந்துள்ள பா.செயப்பிரகாசம் நேர்காணலின் தன்மை குறித்துப் பெரிதும் எரிச்சலும் வேதனையும் அடைந்தேன். உடனே என் எதிர்வினையைப் பதிவு செய்ய முயன்றேன். ஆனால் எரிச்சலோடு வார்த்தைகளைக் கோர்க்கவேண்டாம். ஆறப்போட்டு எழுதலாமென்று விட்டுவிட்டேன். அதன்படி மீண்டும் ஒரு 15 நாள் கழித்து வாசித்துப் பார்த்தேன். எரிச்சல் கூடியதோடு என்னத்த எழுதி, என்னத்தப் பண்ணப்போறோம் என்று எழுதாமல் இருந்து விட்டேன். எழுதியே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தம் எனக்குள் திரண்டுவிட்ட நிலையில் தவிர்க்கமுடியாமல் இந்த மடலை எழுதுகிறேன்.

முதலில் கார்க்கி சொன்னது போல எவ்வளவு ஒரு மோசமான மனிதனாக அறியப்படுபவன்கூட, எந்தவொரு உயர்ந்ததரமான புத்தகத்தைவிட உன்னதமானவன் தான். மனிதன்தான் மகத்தானவன். இந்தப் பார்வையோடுதான் ஜெபியிடம் நெருங்கியிருக்க வேண்டும் பேட்டி கண்டவர்கள். அவருக்குள் திரட்சிபெற்று இறுகியிருக்கும் இந்தப் பண்பாடு சேமித்துத் தந்திருக்கும் மனிதம் சார்ந்த உன்னதங்களை வெளிக்கொணர்வது என்ற நோக்கில் அணுகியிருந்தால் அற்புதமான நேர்காணலாக அமைந்திருக்கும். அப்படித்தான் நேர்காணல் தொடங்கியது போல் எனக்குப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் அவருடைய பங்களிப்பினை வெளிக்கொணர்ந்துள்ள முதல்பகுதி அப்படிப்பட்டது. ஆனால் அதற்கு விலையாக அரசு தந்த பதவியை ஏற்றுக் கொண்டார் என்ற யதார்த்தத்தை வேறொரு சூட்சுமமான மொழியில் ஆழமான ஒரு கேலியுணர்வோடு முன்வைக்கத் தொடங்கியதிலிருந்து நேர்காணல் அவருக்|கு எதிரான ஒன்றாக வடிவம் எடுப்பதை உணரமுடிந்தது. தேவிபாரதி, பெருமாள் முருகன் இருவரும் நேர்கண்டதாகக் குறிப்பு கூறுகிறது. முதலில் தேவிபாரதி கேட்ட வினாக்கள் எவையெவை, பெருமாள் முருகன் எழுப்பிய வினாக்கள் எவையெவை என்றவிவரம் நேர்காணலில் பதிவாகியிருக்கவேண்டும் (எதிர்காலத்திலாவது இதைச் செய்யவேண்டுதிறேன்). ஏன் இப்படிக் கருதுகிறேன் என்றால், தமிழ் இலக்கியம், அரசியல், அமைப்பு, சமூகம் குறித்த புரிதலில் தேவிபாரதியும் பெருமாள் முருகனும் ஒரே அலைவரிசையில் இருக்கிறார்கள் என்று எந்தவொரு தீவிர வாசகனும் ஒத்துக்கொள்ளமாட்டார். பெருமாள் முருகன் ஜெபியோடு மனஓசையில் பணியாற்றியவர். (மனஓசையில் என்னுடைய பங்களிப்பும் இருந்தது) அதனாலேயே ஜெ.பி. மேல் எத்துணையோ கேள்விகளை வைக்க தேவிபாரதியை விட அதிகவாய்ப்புகள் பெருமாள் முருகனுக்கு இருந்திருக்குமென்று நான் நம்புகிறேன். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், தேவிபாரதியின் க.நா.சு.காலத்துக் கலைஅழகியல் சார்ந்த தூய்மைவாதத்தை, புனிதவாதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு ஜெபியை அணுகியுள்ள போக்கே நேர்காணலில் முழுக்கப் பரவிக் கிடக்கிறது. பெருமாள்முருகன் மட்டும் இந்த நேர்காணலை எழுத்திருந்தால் இந்த அளவிற்கு, ஒரு படைப்பாளியின் 40 ஆண்டுக்கால ஒட்டுமொத்த வேலைப்பாட்டினையும் ‘ஒன்றுமில்லை’ என்று அந்தப் படைப்பாளி வாயாலேயே சொல்லவைத்துவிடும் தந்திரச் செயல்பாடு அரங்கேறியிருக்காது. படைப்பாளியைத் தங்களுடைய திறமையான பழக்கப்பட்ட நுட்பமான தந்திரங்களின் மூலம் அவருக்குஎதிராகவேஅவரைத் திருப்பிவைத்துக் கொண்டுமுதுகிற்குப் பதிலாக முகத்தில் குத்துகிற வேலையை இவ்வளவு செம்மையாகச் செய்துமுடித்துள்ளது தமிழகநேர்காணல் வரலாற்றில் காணக் கிடைக்காதது. எனக்கு ஏற்படும் வருத்தமெல்லாம் அ.முத்துலிங்கத்தின் நேர்காணல்களின் தொகுப்பு தமிழில் வந்தபிறகும் அந்த நேர்காணலுக்குள் ஓடும் அறத்தையும் தொனியையும் படைப்பாளியைக் கொண்டாட முயலும் மேன்மையையும் ஒரு சிறிதும் உள்வாங்காமல் இயங்கி உள்ளனரே என்பதுதான்.

அமைப்பிற்கும் படைப்பாளிக்கும் படைப்பிற்குமானஉறவைக் குறித்துப் பேசத்தான் உங்களிடம் நிறையவாய்ப்பு இருக்கிறதுஎனக் கருதுகிற பேட்டியாளர் அதை வளர்த்தெடுக்கவாவது முயற்சி செய்திருக்கிறாரா என்றால் இல்லை. அமைப்பு என் படைப்பிற்குக் குந்தகம்தான் விளைவித்துவிட்டது என்று படைப்பாளியே ஒப்புதல் வாக்குமூலம் தரும்போது பேட்டியாளர் நாங்கள் என்ன செய்யமுடியுமெனக் கேட்கலாம். அங்கேதான் நேர்காணல் கண்டவர்களின் திறமை இருக்கிறது. தங்களுக்குச் சாதகமாகச் சூழ்நிலையைக் கைப்பற்றிக் கொள்ளுதல் என்கிற வினை நடந்தபிறகு படைப்பாளி என்ன செய்து விடமுடியும்? கேள்விக் கணைகளுக்குள் புதைந்து போவதைத் தவிர! இதுதான் நடந்துள்ளது. படைப்பிற்கும் அமைப்பிற்குமானஉறவைக் குறித்தெல்லாம் இரவு பகலாகப் பல்வேறு ஆளுமைகளுடன் புத்தகங்களுடன் விவாதிக்காதவரல்லர் ஜெ.பி. விவாதிக்கத் தெரியாதவரும் அல்லர். ஆனால் விவாதத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாதபடி வியூகங்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்பதை அவர் உய்த்துணரத் தவறிவிட்டார். அதன் விளைவுதான் அந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பதுதான் என் கணிப்பாக இருக்கிறது.

கருத்துச்சாராத தூய அழகியல் என்பதும்,கருத்துச்சார்ந்த அரசியல்அழகியல் என்பதும் இங்கு என்றென்றும் விவாதத்திற்குள் வந்துகொண்டே இருக்கக்கூடிய ஒன்றுதான். புதியசரக்கல்ல. எல்லாவற்றையும் இப்படி இணைமுரணாக நிறுத்திக்கொண்டு ஒற்றைவாதம் பேசமுடியாது. எல்லாம் குழப்பமாகக் கலந்துகிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் உடன்பாட்டுநிலை எதிர்நிலை என்றெல்லாம் வகுக்க முடியாதபடி மறைந்தும் மறையாமலும் ஒவ்வொன்றிலும் பன்முகப்பட்டுக் கிடப்பதுதான் பொருட்களின் தன்மை என்று உலகைப்பற்றிய புரிதல் வேகமாக நடந்துகொண்டிருக்கக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் ஒருசின்ன தூர்ந்துபோன அளவுகோலை வைத்துக்கொண்டு ஜே.பி.யின் ஒட்டுமொத்தப் படைப்பையும் மறுதலிக்க முயன்றிருப்பது வேடிக்கையாகப் பட்டது. எல்லாம் வேடிக்கைதான். மொழிவிளையாட்டுதான். சார்புநிலைகளின் தன்னைமறந்த மனஉலக வினைகள்தான் என்றெல்லாம் நான் இந்த நேர்காணலை உள்வாங்கிக் கொண்டு ஜீரணிக்கமுயன்றாலும்,என்னை மீறி எனக்குள் நிகழும் நிர்ப்பந்தத்தால் இவ்வளவையும் எழுத நேர்ந்தது. தீராநதியில் கடற்கரையின் நேர்காணல் ஒன்றைக் குறித்து மதுரை அய்யனார் இன்னொரு விதமாக எதிர்வினை ஆற்றியிருந்தார். கடற்கரையும் கொதித்துப்போய்ப் பதில் கொடுத்திருந்தார். இந்நேரத்தில் அது நினைவுக்கு வருகிறது. நம்முடைய இலக்கியப் படைப்புகளைக் குறித்து மட்டுமல்ல. நம்முடைய நேர்காணல்களைப் போன்று படைப்பிற்கு வெளியே நடக்கும் தன்மைகளைக் குறித்தும் நாம் அதிகம் விவாதிக்கவேண்டும்போல் எனக்குப் படுகிறது. அப்பொழுதுதான் அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் போல நம்முடைய நேர்காணல்களையும் ஓர் இலக்கியத் தரத்திற்கு இட்டுச் செல்லமுடியும்போல் படுகிறது.

நன்றி
தங்கள் உண்மையுள்ள,
க.பஞ்சாங்கம்


பா.செவுடனான நேர்காணலின் பெரும் பகுதியில் அவர் படைப்புகளில் கட்சிப் பிரச்சாரம் மேலோங்கி இருப்பதால் படைப்பாற்றல் நிறைவானதாக இல்லை என்ற கருத்தை அவரை ஏற்கச்செய்ய முற்பட்டது தேவையற்றது. கொள்கைச் சார்புடையோர் படைப்புகளில் கொள்கை பிரதிபலிக்கத்தான் செய்யும். இல்லையென்றால் அவை போலித் தன்மை கொண்டவை.

எஸ்.எஸ்.ராஜகோபாலன்
சென்னை


இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துச் சில செய்திகள் இதுவரை பதிவு செய்யப்படாதவை. சுயவிமர்சன நோக் கோடு அந்த நிகழ்வுகளைக் கூறுகிறார் பா. செ. இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அவரிடம் கூடுதலான தகவல்கள் உண்டு. அவரே இந்த வரலாற்றை எழுதுவாரேயானால், இது பற்றிய ஒருசில நூல்களைவிடக் கூடுதலான வெளிச்சம் கிடைக்கலாம்.

நேர்காணலில் ஒரு தகவல் தவறு. காமராசனும், காளிமுத்துவும் தலை மறைவாய் இருந்த ஊர் கீழக்கரை என்று வருகிறது. அது கீழக்கரை அல்ல என்பது எனக்குத் தெரியும். அது நண்பர் ஹசன் முகமது அவர்களுடைய இடைக்காட்டூராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அப்போது எங்கிருந்தார்கள் என்பது எனக்குக்கூடத் தெரியாது. நாங்கள் படித்த மதுரை, தியாகராசர் கல்லூரியில் இன்னும் பலர் முன்னணியில் நின்று போராட்டத்தை எடுத்துச்சென்றனர். போடிநாயக்கனூர் சுருளிவேலு, சொக்கன், முருகையா, கன்னியப்பன் என்று பல முகங்கள் நினைவில் உடனடியாக வருகின்றன. தோழர்கள் சிறைப்பட்டபிறகு தொய்வில்லாமல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது ஓர் அறைகூவலாகவே இருந்தது. பட்ட காயங்களும் வலியும் அவமானங்களும் சிறைவாசக் கொடுமைகளுக்கு இணையாகவே இருந்தன. இந்த மாபெரும் போராட்டத்துக்கு ஒரு முறையான வரலாற்றுப் பதிவு இல்லை என்பது உண்மைதான். அதற்கு முன்பே 1938இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ‘தமிழன் தொடுத்த போர்’ என்று விரிவாக எழுதப்பட்டுள்ளது. அந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பாரதிதாசன் எழுதிய பாடல்கள், 1965 இந்தி எதிர்ப்புப் போரிலும் உணர்வூட்டின.

இந்த நேர்காணலின் பிற்பகுதி அவருடைய படைப்பு சார்ந்தது. கேள்விகள் விமர்சனப்பூர்வமாக இருந்தன. ஆனால் அவருடைய நோக்கங்களையும் வெளிப்பாட்டு முயற்சிகளையும் அதற்கு அவர் செய்த கலை நியாயங்களையும் அவரே முன்மொழியும் வகையில் கேள்விகள் அமையவில்லை. கேள்வியாளர்களுடைய நோக்கங்களுக்கு இழுத்துச் செல்கிற வகையிலேயே கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். பா.செ.யிடமிருந்து ஒரு வகையான ஒப்புதல் வாக்குமூலம் பெறும் முயற்சிதான் நடைபெற்றதாகத் தோன்றுகிறது. கேள்வியாளர்கள் சுட்டிக்காட்டிய பா.செ.யின் குன்றுதல்களுக்கு அப்பாலும் விரிந்து செல்லும் வெளிப்பாடுகள் அவர் எழுத்துக்களில் உண்டு.

இடதுசாரி, முற்போக்கு முகாமில் இருப்பவர் அனைவரும் ‘இலக்கியமற்றவர்கள்’ என்ற நிலைப்பாட்டில் கேள்வியாளர்கள் நிற்காதது ஒரு வகையில் ஆறுதலளிக்கிறது. பா.செயின் நிலைப்பாட்டை ஏற்காதவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு நேர்காணல் என்பது அத்தகைய நிலைப்பாட்டின் நியாயங்களைப் பேசவிடுவதாக அமைய வேண்டும்.

பின்நவீனத்துவங்களைத் தொடர்ந்து படைப்பாளிகளின் மொழியில் ஏற்படும் மாற்றங்களைக் கேள்வியாளர்கள் வற்புறுத்துவது விமர்சனப்பூர்வ மற்றது என்றுதான் தோன்றுகிறது. நுண்மையான சிக்கல்களையும் பலதரப்பட்ட பார்வைகளையும் படைப்பாளி எதிர்கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதற்கான ஒரு கட்டளை மொழியை யாரும் ஏற்படுத்திவிட முடியாது. பின்நவீனத்துவம் சார்ந்துவரும் எழுத்துக்களின் மொழி ஒரே தன்மையாய் வெளிவரும் போக்காக உற்றுநோக்கினால் காண முடியும்.

பிறகு ‘வானம்பாடிகள்’ குறித்து அவர் செய்யும் மதிப்பீடு முழுக்கச் சரியானது அன்று. வானம்பாடி இயக்கத்தில் நானும் இருந்ததில்லை. அவர்களுடன் உடன்பாடும் மறுப்பும் சார்ந்தே என் தொடர்புகள் இருந்தன. குறையாகக் காட்டப்படும் அதீத கற்பனைகளை எதிர்ப்பக்கமும் காண முடியும்; பிரகடனங்களும் உண்டு. பொதுவாக கவிஞர்களிடமுள்ள புனைவியல் தன்மையின் தொடர்ச்சிகள்தாம் வானம்பாடிகளும். அவர்களில் பலரின் மானுடநேயம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஒருவகையில் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வழித்தோன்றல்கள்தாம் வானம்பாடிகளும். கவிஞர்கள் மீரா, ஞானி, புவியரசு போன்றோரிடம் இருந்த தனித்துவப் போக்கை, வானம்பாடியின் தீவிர எதிர்ப்பாளர்கள் கண்டுணரத் தவறிவிட்டார்கள். மீராவின் ஊசிகளின் அங்கதம் இன்னும் கூர்மழுங்காதது. பா.செ. வானம்பாடிகள் குறித்த விமர்சனத்தை இன்னும் கவனமாக முன்வைத்திருக்க வேண்டும்.

சார்பற்றவர்கள் என்று யார் இருக்கிறார்கள்?

இன்குலாப்,
சென்னை



பா.செவின் நேர்காணல் அருமை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி மேலும் அறிய முடிந்தது.

தென்றல் கோ.சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்



பா.செவின் இலக்கிய வழிப்பயணம் என்பதே அரசியலோடு தொடர்புடை யதுதான். 60களில் எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 70களில் உரு வான நெருக்கடிநிலை இரண்டிலும் பா. செவின் பங்களிப்பு அசாதாரண மானது. தமிழ் மொழியின் மீதுள்ள பற்று, பொதுவுடைமைக் கருத்துகள்மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கை இரண்டில் முன்னது இந்தி எதிர்ப்புக்கான காரணமாகவும் பின்னது நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்யப் பட்டபோது உருவானதாகவும் இருக்கக்கூடும். ‘இரவுகள் உடையும்’ நூலில் குறிப்பிடப்பட்ட மேற்கோள் ஏற்படுத்திய தாக்கம் மறக்க இயலாதது. அந்நூலின் மேல் அட்டை கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இயல்பை மீறிய அக்கதைகள் உருவாக்கிய எழுச்சிக்கு, இன்று என்னால் விளக்க மளிக்க முடியவில்லை.

‘மனஓசை’ இதழ், தமிழகத்தில் பல படைப்பாளிகளை உருவாக்கியது. தேவிபாரதி, பெருமாள்முருகன், கோ. கேசவன், விழி.பா. இதயவேந்தன் எனப் பலரையும் உருவாக்கியுள்ள ‘மனஓசை’ ஏற்படுத்திய தாக்கம் மிகவும் முக்கிய மானது. இயக்கரீதியிலான இதழாக விளங்கியபோதும் அன்றைய கால கட்டத்தில், வெகுமக்கள் வாங்கி வாசிப்பதென்பது இயல்பாக நடந்தது. குறிப்பாக அவ்விதழில் இடம்பெற்ற முகப்புப் படங்கள் வாசகனுக்குக் கொந்தளிப்பை, சிந்தனையை ஏற்படுத்தின.

கே.ரவிச்சந்திரன்,
ஈரோடு


பா.செவின் நேர்காணல் குறித்து: ‘வாழ்விலிருந்து எனது இலக்கியம்’ படித்தேன். இன்றைய உலகமய- தனியார்மய- தாராளமயத் தத்துவ நடைமுறை தமிழகக் கலை, இலக்கிய உலகிலும் ஒட்டுமொத்த ஊடகத் துறையிலும் தமிழர் வாழ்விலும் கடுமையான ஆனால் கண்ணுக்கும் கருத்துக்கும் அவ்வளவு எளிதில் புலனாகாத பண்பாட்டுச் சீரழிவுகளையும் தரக்குறைவுகளையும் அடிமையின் மோகத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில், படைப்பாளியின் தன்மானமும் சமுதாய நல உணர்வும் மனிதநேயமும் விலை பேசப்பட்டு விற்பனைப் பண்டமாக்கப்படும் இக்காலகட்டத்தில், வாழ்விலிருந்து புதுமை இலக்கியத்தைக் கலை அழகுடனும் பன்முகப் பார்வையுடனும் பொதுமை அறச்சார்புடனும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் படைத்துவரும் பா. செவின் நேர்காணலைக் ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. கவிஞர் இன்குலாபின் நேர்காணலையும் இது போன்ற செறிவுடனும் விரிவாகவும் வெளியிடுக.

தி.க.சி,
நெல்லை

பா. செயப்பிரகாசத்தின் நேர்காணல் குறிப்பிடத்தகுந்தது. இலக்கியத்தைச் சமூகத்தில் எந்த மூலையிலிருந்து தேடிப்பிடித்து வாழ்வின் ருசியை எவ்வாறு உணர வேண்டும் என்பதையும் எப்படிப் பதிவுசெய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரமாகவும்தான் அவரது எழுத்துக்களை உணர வேண்டியுள்ளது. சூரியதீபன் பெயரில் வெளிவந்த படைப்புகளும் அதன் நெருக்கடி நிறைந்த காலகட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவரது தொடக்க கால வாழ்வு, இந்தி எதிர்ப்புப் போராட்டம், பின்னாளில் முற்போக்கு இலக்கியம், புரட்சிகர இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை முழுவதுமாகப் பதிவானது சிறப்பு. குறிப்பாக ஆரம்பகால என் எழுத்துக்கள் பா.செ.யின் எழுத்துக்களினால் பாதிப்புக்குள்ளாகி வெளிப்படையாகச் சொல்லப்போனால் கண்ணீர் சிந்திக் கதறியபடி வெளிவந்தன. அதற்குக் காரணம் அவர் படைப்பும் ‘மனஓசை’ இதழின் தொடர்பும்.

நிறையப் பேர் சமூகத்தில் வாழ்வைத் தொலைத்துவிட்டு விடுதலைக்காக ஏங்கிக் கிடக்கையில் வாழ்விலிருந்து இலக்கியம் படைக்க முடியும் என்பதை என்னைப் போன்று பல முற்போக்குக் கலைஞர்களுக்குக் கற்றுத்தந்தவர் பா.செ. உழைக்கும் வர்க்கம் - ஒடுக்கப்படும் வர்க்கம் ஆகியவை சமூகச் சுரண்டல்களிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு ஆந்திர மாநில செரபண்டராஜீ, கத்தார் போன்றே நாமும் கால இலக்கியத்தை அடிமை விலங்கொடிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

விவசாயி, பஞ்சை, பராரி, அடிமைப்பட்ட பெண்கள் என எல்லாப் பாத்திரங்களும் மண் மனம் சார்ந்து விடுதலை வாழ்வை முன் மொழிபவை. அதிகார வர்க்கங்களை அம்பலப்படுத்துபவை. தோழர் பா.செ.யின் எழுத்துக்களின் பின்னால் மிகப் பெரிய ஆளுமை உள்ளதையும் அவர் மக்களுக்கான கலைஞராய் இன்றும் உள்ளதையும் இந்நேர்காணல் உணர்த்துகிறது.

விழி. பா. இதயவேந்தன்
விழுப்புரம்

நன்றி: காலச்சுவடு - நவம்பர் 2008 , ஜனவரி 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்