இன்குலாப் இருந்திருந்தால் இதையே செய்திருப்பார்

21-12- 2017 மதியம் இன்குலாபின் ’காந்தள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி விருது டெல்லியிலிருந்து அறிவிக்கப்பட்டது. ’விருது மறுப்பு’ என அறிவித்து, மாலையில் அதற்கான அறிக்கையையும் அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு அளித்துள்ளனர். ஊடகங்களின் நெருக்குதல்  அமைய, அவர்கள் முடிவு செய்து அறிவிக்க வேண்டியவராயினர்.


விருது மறுப்பு அறிக்கை
”ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒலித்த குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு  சாகித்ய அகாதமி விருது வழங்குவது  என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும்.அவர்களது  எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.

இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:
’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’
’’ அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.
….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம்."

இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபுக்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். ஆனால் இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.

அரசு முகங்கள் மாறலாம்.அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாதமும்,வர்க்கபேதமும்,வன்முறையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களையெல்லாம்  படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும். இன்குலாபுக்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்.

இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை. 

இறுதியாக இன்குலாபின் வரிகளில் -
‘’விருதுகள் கௌவரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’.
                
இவண்,
இன்குலாப் குடும்பத்தினர்.,
கமருன்னிஸா
சா.செல்வம்
சா.இன்குலாப்
சா.அமினா பர்வின் 
******************** 

இவ்வாறன ஒரு அறிக்கையினை அவர்கள் வெளியிட வேண்டியோராயினர்.

1989, சனவரி முதல் நாள் - டெல்லியில் தொழிற்சாலைகள் அடர்ந்துள்ள  ’காசியாபட்’ பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு நடுவில் வீதி நாடகம் நிகழ்த்திய மக்கள்  கலைஞர் ’சப்தர் ஹஷ்மி’ படுகொலை செய்யப்பட்டார். டெல்லியில் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் அரசுவிழா அதே சனவரியில் நடைபெற்றது. அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருந்த ஷப்னா ஆஸ்மி, விருது வழங்கும் விழாவில் மேடையேறி சப்தர்ஹஷ்மியின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து அவர் எழுதி வைத்திருந்த அறிக்கையை வாசித்தார்: வாசித்துவிட்டு விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்து வெளியேறினார். அவரது புறக்கணிப்பின் நோக்கமே, விருது வழங்கும் நிகழ்விலேயே, செய்தி ஒலிபரப்புத் துறை  கண்டணம் தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது தான்.

அதுபோலவே சாகித்ய அகாதமி விருது வழங்கும் நிகழ்வுக்காகக் காத்திருந்திருக்கலாம். விழாவில் அறிக்கையை வாசித்த பின் புறக்கணிப்புச் செய்திருக்கலாமே என்று வினவக் கூடும். ஷப்னா செய்தது எதிர்ப்பின் ஒரு வடிவம்: விழா நடக்கும் காலம் வரை காத்திருந்தால் விருதுக்கு ஒப்புதல் தருவதாக ஆகிவிடும் என்பதும் உண்டு.

”அத்தா (அப்பா) அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் எந்தவொரு வடிவத்திலும் எங்கும் எதிர்த்து வந்தவர். குடும்பத்தில் அவரவர் விருப்பத்திற்கு மாறாக ஏதும் நடந்ததில்லை – அடுத்தவரின் விடுதலையைப் பறிக்காதவரை."


“ஒரு வீட்டில் ஒருவன் இசுலாத்தையோ, பௌத்தத்தையோ கிறிஸ்துவத்தையோ, இந்துத்துவத்தையோ அல்லது கடவுள் மறுப்பாளனாகவோ இருப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.” என்று, "குடும்ப அதிகாரத்தை வேருடன் களைய வேண்டும் என்பார் அப்பா" என இன்குலாப்பின் மகள் ஆமினா பர்வின்   ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். (தளம் - காலாண்டிதழ்: அக்-டிசம்பர், 2016)

எந்தவொரு அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எந்தவொரு வடிவத்திலும் எதிர்த்து வந்த இன்குலாப், குடும்ப அதிகார எதிர்ப்பை முதற்புள்ளியாகக் கருதினார். அதிகார எதிர்ப்பு என்பது அவரைப் பொறுத்தவரை – சனநாயகம் அங்கெல்லாம் நிலை நிறுத்தப்பட்டுச் செழிக்க வேண்டுமென்பதற்காகவே.

கவிஞர் வைரமுத்துவிடம் விருது பெற்றது என் போன்றோருக்கு உடன்பாடில்லை. “இந்த விருது வழங்கலில் உங்களுக்கான அங்கீகாரம் என்பது முதன்மையல்ல: உங்களை முன்னிறுத்தி, தனக்கு ஒரு அங்கீகாரமாக ஆக்குதல் நோக்கம்: அந்த ஆபத்து இதில் அடங்கியுள்ளது” என எடுத்துரைத்தேன். விருது பெற்றுக் கொண்டமைக்கான விளக்கத்தை ஒரு நேர்காணலில் அவர் சுட்டியிருப்பார். “விருதுகள் ஒருபடைப்பாளியைக் கூடுதலாக அறியச் செய்வதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் உதவுகின்றன. என் இலக்கிய முயற்சிகளை இடதுசாரிகள் கூட மறந்த, புறக்கணித்த ஒரு காலம் இருந்தது. இப்பொழுதும் அது முழுமையாக மாறிவிட்டது என்று சொல்லமாட்டேன். புறக்கணிப்பின் வன்மத்தை மறக்க விரும்புகிறேன். அந்தச் சூழலில் என்னை வேண்டிக் கேட்டுக்கொண்ட விருதை எப்படி மறுப்பேன் நான்?
         
“சிந்தித்துப் பார்த்தால் விருது வழங்கும் எந்த நிறுவனமும் செல்வாக்கு வட்டம் கடந்ததாய் இல்லை. சாகித்ய அகாதெமி, ஞானபீடம் இவற்றின் பீடங்கள் கேள்விக்கப்பாற்பட்டதாகி விடுமோ? இன்று விருதுகள் குறித்து எனக்கு மயக்கம் இல்லை. இருட்டடிப்புச் செய்யப்படாது, வட்டங்கள் கடந்து ஒரு படைப்பு பயிலப்படுவதும், திறனாய்வு செய்யப்படுவதுந்தான் மிகச் சிறந்த விருதாக இருக்கும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” (அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவிமடுப்பதில்லை – பக்கம் 31)

இங்கு சாகித்ய அகாதமி, ஞானபீடம் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்: உண்மை தான்:  சாகித்ய அகாதமி விருது இலக்கிய அரசியலில் இருக்கிறது; ஞானபீட விருது அளிக்கிற மனசு வட இந்தியாவில் இருக்கிறது; நோபல் விருது வழங்கும் மனம் அமெரிக்காவில் இருக்கிறது. ’புக்கர் பரிசு’ வேறெங்கோ இருக்கிறது.

“இன்று விருதுகள் குறித்து எனக்கு மயக்கம் இல்லை”  - என்னும் அவரின் தெளிவிலிருந்து, சாகித்ய அகாதமி விருது மறுப்பை குடும்பத்தினர் வந்தடைந்திருக்கிறார்கள்.


சாகித்ய அகாதமி அமைப்பு தன்னாட்சியானது, சுயமானது என்கிறார்கள் சிலர். இசை, நாடகக் கலைகளுக்காக  இயங்கும் சங்கீத நாடக அகாதமி, ஓவிய நுண்கலைக்கான லலித கலா அகாதமி, இலக்கியத்துக்கென சாகித்ய அகாதமி போன்றவை நடுவணரசினால் இயக்கப்படுகின்றன. அரசு நிதி நல்கையில் இயங்கும் எந்த ஒரு அமைப்பும் சுயாட்சி நிறுவனமாக எவ்வாறு இயங்க இயலும்? சனநாயக உணர்வுடன், நேர்குறிக்கோளுடன் இயங்கும் சிலர் தலைமையால், செயற்பாடுகளால் அதற்கு சனநாயக வடிவம் கிடைக்குமே தவிர, எந்த ஒரு அரசு நிறுவனமோ, அரசு சார் நிறுவனமோ தானே தன்னாட்சியுடன் இயங்கமுடியாது.

“சாகித்ய அகாதமி விருதுக்கும், அரசுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பது யாருக்கும் புரியவில்லை. இது முழுக்க முழுக்க அறிஞர்கள் கூடித் தீர்மானிக்கும் விருது. யாருடைய அங்கீகாரமும் இதற்குத் தேவையில்லை. இதைப் புரியாமல் சாகித்ய அகாதமி விருதையும், அரசையும் இணைத்துப் பார்க்கிறார்களே” என்று  சிலர் கருத்துக் கூறியுள்ளார்கள். இதன்பேரில் விரிவான ஒரு விவாதம் அவசியமாகிறதெனினும், விருதுத் தேர்வில், தேர்வுக்குழுவினருக்குள் அவரவருக்கென ஒரு உள் அரசியல் செயல்படுகிறதா இல்லையா? விருதுக்கு உரியவர் யார், எவரெனத் தீர்மானிக்கும் முன்கூட்டிய நோக்குக்கு ஏற்பவே தேர்வுக்குழு நியமிக்கப்படுகிறது என்பது உண்டா இல்லையா? என்னும் கேள்விகள் தவிர்க்க முடியாதன.

விருது மறுப்புச் செயல்பாட்டின் காரணமாய், விருது பெறும் எழுத்தாளரின் நூல் பிற மொழிகளில் பெயர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்படுவதுடன் ,அவரது கருத்துப்பரவலும் முற்றாகத் தடுக்கப்பெறுகிறது என்றொரு தர்க்கமும் வைக்கப்படுகிறது. விருது பெறும் நூல்கள் அனைத்தும் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பது ஒரு  எவ்வளவு தூரம் நடைபெறுகிறது எனக் கணக்கெடுத்தால், அவ்வாறு இல்லை என்பது விடையாக அமையும். அது ஒரு கட்டாயமில்லை; எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு 1991-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைக்கிறது. ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டதாக விவரமில்லை. தெலுங்கிலும் தனிப்பட்டவர்களே மொழியாக்கம் செய்துகொண்டுள்ளார்கள். காரணம் அது இந்திய விடுதலையை காந்தி பெற்றுத் தந்தார் என்ற ‘கோரஸை’ அது மறுக்கிறது. கப்பற்படை எழுச்சியே விடுதலைக்கு தலையாய காரணம் எனப் பேசுகிறது. விடுதலைப் போராளி நேதாஜி இந்நாட்டின் குடியரசுக்குத் தலைவராக வேண்டுமென வாதிடுகிறது. இதை எப்படி பிறமொழிகளுக்குக் கொண்டு போவார்கள்.

அதுபோலவே ’மாபூமி’ என்ற விருது பெற்ற தெலுங்கு நாவல். அது  நிஜாமிடமிருந்து விவசாயக்கூலிகள் போராடிப்பெற்ற நிலத்தை, இந்தியா விடுதலை பெற்ற பின், அவர்களிடமிருந்து பறித்து மறுபடி நிஜாமிடம் அரசு ஒப்படைத்ததைச் சித்தரிக்கிறது. தேர்வு செய்த பின்னர் அந்நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அரசைப் பயம் கொள்ளவைத்தது. அந்நூலும் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இன்குலாப் நூலுக்கும் இக்கதியே ஏற்பட்டிருக்கும்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’  2015 ஆகஸ்டில் கொலை செய்யப்பட்டார்.  நான்கு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில் இந்துத்துவ வெறியர்கள் புனெயில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். 2013-பிப்ரவரியில் மராட்டிய மாநிலத்தில் கோலாப்பூரைச் செர்ந்த பன்சாரே என்ற  அறிஞரைக் கொலை செய்தனர். இவர்களோடு முற்றுப் பெறாத கொலைக்களக் காதை, எழுத்தாளர் கல்புர்கியின் உயிரைப் பறித்ததோடு அல்லாமல் கௌரி லங்கேஷ் வரை தொடர்கிறது. இந்த எழுத்தாளர்கள், அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி - சாகித்ய அகாதமி ஆற்றிய எதிர்வினை எத்தகையதாக இருந்தது? அங்கங்குள்ள எழுத்தாளர்கள் 65-க்கு மேற்பட்டோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பியளித்தார்கள் என்பது தவிர வேறொன்றும் அடக்கவில்லை: சாகித்ய அகாதமி அமைப்பில் அசைவில்லா அடக்கம் நிலவியது என்பது ஒன்றே அந்த அமைப்பின் சுயத்தன்மைக்குச் சான்றாகும்.

இன்குலாப் குடும்பத்தினரும் இதை ஒரு பொதுப் பாடமாக்கிக் கொண்டு, ”அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாதமும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை யெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்.” எனச் சுட்டியுள்ளனர்.
  
எல்லா அதிகாரங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது இன்குலாபின் கவிதைகள்: கவிதை மட்டும்தான் அவ்வாறு ஒலிக்க வேண்டுமா என்ன? செயல்பாடும் அவ்வாறே ஒலிக்கக் கூடாதா? மக்களுக்காக இந்தவாழ்வு என நிர்ணயமாகிவிட்ட பின், அதையும் தாண்டி தங்களுக்கு  வேறு வாழ்வா என்ற புத்திப்பூர்வமான கேள்வியை எழுப்பி, செயல்முறையில், சுய முரண்களற்ற வாழ்வாய் ஆக்கிக்கொண்ட ஒரு வாழ்வியல்ப் போராளி. அவர் கவிதையால் நினைக்கப்படுவார்: எழுதிய எழுத்தால் நினைக்கப்படுவார். எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார். எல்லோராலும் நினைக்கப்படும் வாழ்வினும் மேலானது உண்டோ? நினைக்கப்படும் தகுதி அறுந்துபோய் விடல் கூடாது என்பதற்காகவே குடும்பத்தினர் இந்த விருதை மறுத்துள்ளனர்.

”தலித் மொழியாக இருக்கட்டும், பெண்ணியம் சார்ந்த மொழியாகட்டும், இது முட்டையை உடைக்கிற காலம். இது கூண்டை உடைக்கிற காலம். அதை உணர வேண்டும். ரொம்ப அடிப்படையானது நாம் யாரோடு மனத்தால் ஒன்றுபடுகிறோம் என்பது தான். அதைத் தடை செய்வதற்கு வழி வழியாக வந்த பண்பாட்டின் அதிகாரம் இருக்கிறது. மதத்தின் அதிகாரம் இருக்கிறது. சாதியின் அதிகாரம் இருக்கிறது. அரசியல் அதிகாரம் இருக்கிறது. இவ்வளவுக்கும் அப்பால் நான் யார்? யாரோடு நிற்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பும்போது ஒரு நியாயம் எனக்குத் தெரியவருகிறது. அந்த நியாயங்களுக்கு இந்த அதிகாரங்களெல்லாம் தடையாக இருந்தால் அந்த அதிகாரத்தை உடைத்துவிட்டு, தாண்டி விட்டுப் போய் அவர்களுடன் நின்றாக வேண்டும் என நான் நினைக்கிறேன்.” (மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்- பக்கம் 73-74)

இந்த அதிகாரத்துக்கு எதிராகத் தான் பிரான்சின் ’ழீன் பால் சாத்தரே’ இலக்கியத்துக்காக வழங்கப் பெற்ற நோபல் விருதை நிராகரித்தார் (1964). சாத்தரேயின் வழியில் இன்குலாப் பயணம் செய்தார்: இப்போது அவரது குடும்பத்தினர் பயணத்தைத் தொடருகிறார்கள்.

தமிழ் மொழியின் அதிகாரக் குணம் பற்றியும் இன்குலாப் கவனித்திருக்கிறார்; அதுபற்றிப் பல சொற்பொழிவுகளிலில் குறிப்பிட்டுள்ளார்.

”ஆணதிகாரம் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளது. தமிழ்மொழி ஆண்களின் வசதிக்காகக் கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கிறது. பெண்களுக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே தமிழில் இருக்கிற ‘மரியாதை விகுதிகளை’ எடுத்துவிடவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சங்கராச்சாரியான் வந்தான் என்று சொன்னால் என்ன தவறு? தோட்டக்காரன் வந்தான் என்று சொல்வது சரி என்றால் இதுவும் சரிதானே? அதைப் போல அப்பா வந்தார் என்று சொல்கிறவர்கள் அம்மா வந்தார் என்று சொல்ல வேண்டியதுதானே?"

“தமிழிலிருந்து கிளைத்த மொழிதான் என்றாலும், பால் விகுதி காட்டாமலிருப்பதால் மலையாளம் முற்போக்கான மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழோ மிகவும் பிற்போக்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. காலகாலமாகப் படிந்த அழுக்கைக் களைய வேண்டுமானால் ஜெர்மானிய மொழியைச் சலவை செய்யவேண்டும் என்றார் பெட்ரொல்ட் பிரக்ட். அது போல் தமிழ் மொழியை வெள்ளாவிப் பானையில் போட்டு அவித்து எடுக்க வேண்டும்” (மேற்படி நூல்: பக்-131-132)

வெறுமனே மொழியின் பகுதி, விகுதி, வினைமுற்று, வினையெச்சமாக மட்டும் அவை இல்லை என்பது உறுதி. அவை மேல்கீழ் என்ற ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை. ர்,ன்,ள் என்பன எல்லாம் மேல்கீழ்  நிலையை உருவாக்கப் பண்ணப்பட்டவை. மொழி உருவாக்கம் என்பதும் அதன் இலக்கண வரையறுப்புகள் யாவையும் சமூகத்தின் மாற்றப் படிநிலைகள் உறுதியாக்கப்பட்ட பின்னரே உண்டானவை என்ற மொழியியல் அறிவியலும் யதார்த்தமாகிறது.

2006-ல், தமிழக அரசின் கலைமாமணி விருதை அவர் பெற்றுக்கொண்டது பற்றி கேள்வியெழுந்தது. அவ்வாறு செய்வது ஒரு சமரசம் என விமர்சிக்கப்பட்டது.

”மக்கள் வரிப்பணத்தில் நிறுவப்பட்டு வழங்கப்படுகிற விருதுகளை ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு வழங்கினால் உண்மையான கலை இலக்கியம் எப்படி வளரும் என்று பல தளங்களில் நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். நான் எனக்காகக் கேட்கவில்லை. கலை இலக்கியப் படைப்பாளிகள் அனைவருக்காகவும் பேசி வந்துள்ளேன். இப்போது தகுதி அடிப்படையில் எனக்கு விருது வழங்கத் தேர்ந்தெடுத்த பின், கேள்வி எழுப்பிய நானே மறுப்பது சரியில்லையென்று எண்ணுகிறேன். கிட்டத்தட்ட நான் புறக்கணிக்கப்பட்டவன். முன்பு இடதுசாரிகளாலும் பின்பு தமிழ்த் தேசியக் கலை இலக்கியவாதிகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில் என்னை இனங்கண்டு விருது வழங்கும்போது அவர்கள் மோசமான பிற்போக்குவாதிகளாக இல்லாத பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வது எனது இருப்பிற்கு அவசியமாகிறது."

”கலைமாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசிடமிருந்து மடல் வந்த சில நாட்களிலேயே, நான் பொது மேடையில் பேசியதற்கு 1987-ல் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் நேர் நிற்க (ஆஜராக) ஆணையும் வந்துள்ளது. நான் விருதையும் அரசு தொடர்ந்த வழக்கையும் ஒன்றுபோலத்தான் பார்க்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார்.

இந்நேர்வில் விருது மறுப்பையும் அவர் செய்து காட்டினார். ஈழத்தமிழா் படுகொலையைக் கண்டுகொள்ளாத அன்றைய தமிழக அரசைக் கண்டித்து கலைமாமணி விருதையும் தங்கப் பதக்கத்தையும் திருப்பி அளிக்கும் யோசனையை முதலில் என்னுடன் பகிர்ந்தார். அவ்வாறு செய்தல் சரியே என்றேன்.

“கலைமாமணி விருது கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதை எனக்குத் தந்த தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதாக அமையும். தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடுகையில் இது நிரம்பச் சாதாரணமானது.”

விருதைத் திருப்பி அனுப்பித் தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டார்.

விருதுகள் பற்றி இன்குலாப் கூறிய கருத்தினை குடும்பத்தினர் தம் அறிக்கையில் சுட்டியுள்ளனர். ’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்."

"அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.
….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம்.‘’

பரிசுகள், விருதுகளுக்காக நம் படைப்பாளிகள் பலர் படும் பாடுகளும், ஒவ்வொரு முறையும் இவை தொடர்பாக எழும் சர்ச்சைகளும் அதிகாரத்துக்கு எதிரான குரலாய் விருதுப் புறக்கணிப்பைக் கையாண்ட இன்குலாபின் செயல்பாடுகளுக்கு எதிரானவை.

”இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும். இன்குலாபுக்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்” என்று மக்களின் பரப்புக்கு நடந்துள்ளார்கள் குடும்பத்தினர். மக்கள் பரப்புக்கு நடத்தல், எடுத்துச் செல்லல் என்பது நம்  போல் மாந்தர் அனைவருக்கும் ஏற்புடையதுவே என்னும் அடிப்படையில் அவர்கள் தங்கள் கடமையை மிகச் சரியாக நிறைவுசெய்துள்ளனர்.

இக்கட்டுரை இந்து தமிழ் - 23 டிசம்பர் 2017 வெளியானது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ