ஆயுத எழுத்து அகரமுதல்வனும் ஆணவ எழுத்து ஜெயமோகனும்

(மார்ச், 2019 - உயிரெழுத்து இதழில் வெளியான கட்டுரையிலிருந்து)

16-02-2019 அன்று சென்னையில் நடைபெற்ற அகரமுதல்வனின் நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை ஏற்று உரையாற்றினேன். அப்போது அவருக்கும் ஜெயமோகனுக்குமான உறவு பற்றி கேள்வி எழுப்பினேன். ஏற்புரையில் அதற்கான பதிலில் எனக்கு உடன்பாடில்லை. அண்மைக்கால அவரது நடவடிக்கைகள் எந்தக் கருத்தியலோடும் சமரசம் செய்து தன்னை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதமாக அமைந்திருப்பதாகக் கருதுகிறேன்.

ஈழ விடுதலைக்கான முன்னெடுப்புகள் உச்சத்தில் நிகழ்த்தப்பட்ட போரில், அவருடைய சொந்த சகோதரர்கள் பலியாக்கபட்டனர்; அவர்கள் யாழ்ப்பாணத்தில், முகமாலையில், பூநகரியில் வேட்டையாடப்பட்டனர்; அவர்கள் மணலாறுகளில், வன்னிக் காடுகளில் கொலையாக்கப்பட்டனர்; அவர்கள் கிளிநொச்சியில், புதுக்குடியிருப்பில், முல்லைத்தீவில் வேட்டையாடப்பட்டு, கட்டக்கடைசியாய் இனியொரு துளி உயிரும் துடிக்கக் கூடாது என்ற முனைப்பில் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டனர்.

நரபலிகளின் போது தமிழகம் கொந்தளித்து அலறி அழுத காலத்தில், தன் தொண்டைக்குழியில் சிறு முணகலும் கிளப்பாத ஒரு நபர் ஜெயமோகன். ‘இதற்கெல்லாம் காரணம் நீவிர் தானே, நீங்கள் கையேந்திய ஆயுதம் தானே’ என்று ஜெயமோகனின் சிந்திப்பு புலிகள் மேல் பாய்ந்தது. ஆனால் முன்னைக்கும் முன்னையாய் மூலப்பொருளாய் வன்முறைக்கு வித்திட்ட 2500 வருடங்களுக்கு முன்னரான பௌத்த மகாஜன சங்க இடத்துக்கு ஜெயமோகன் சிந்திப்பை நீட்டிக்கமாட்டார்.

ஈழத்தமிழர் என்பதில் மட்டுமல்ல, யாதொரு தேசிய இன விடுதலையின் பக்கமும் மூச்சுக் காட்டாதவர். ‘இந்திய அமைதிப்படை அத்துமீறல் செய்யவில்லை‘ என்று எழுதி வாதாட்டம் செய்தார். படையெடுப்பு என்றால் ஆக்கிரமிப்பு: ஆக்கிரமிப்புக்கு அப்பால் எந்தப் படையும் அமைதிப்படையல்ல. இராணுவச் சிப்பாய்கள் காந்திகள் என்றால், அவர்கள் கையில் துப்பாக்கி எதற்கு? கவிஞர் சுதீர் செந்தில் தனது உயிரெழுத்து இதழில் பதிலளித்து இவரை வறுத்தெடுத்தார். அதற்கான ஆதாரங்களைக் குவித்து இரு உயிரெழுத்து இதழ்களையும் உபயமாக்கினார்.

பிரான்ஸில் ஏதிலியாக இருக்கும் எழுத்தாளர் ’சாத்திரி’ எழுதி வெளியாகியுள்ள நூல் ”ஆயுத எழுத்து”( 2015). தமிழீழத்துக்கான போராட்டம் நடந்து முடிந்த நிலையில் ’சாத்திரி’ பார்த்த, கேள்வியுற்ற, அனுபவப்பட்ட, நேரடித்தொடர்புடைய முக்கியமான விசயங்களை, 1983 –காலப்பகுதியிலிருந்தது வரலாற்று பூர்வமாக நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறார். இலங்கை ராணுவ அடக்குமுறை, ஆயுதப் போராளிகளின் தோற்றம், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்கள் அனைத்தையும் உள்ளடக்கி , குறிப்பாக இந்திய ஆக்கிரமிப்புப் படையின் நபும்சகத்தை ஆண்டு, இடம், நாள். நேரம் முதலாக ஆதாரபூர்வமாய்க் கொடுத்துள்ளார்.

“இந்திய அமைதிப்படை பற்றி பெருமளவில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுகள் உருவானது - இந்தியா மீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக் கொண்டார்……..… ராஜீவ்காந்தி கொலைக்குப் பின்னர் தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.

ஆனால் புலிகளின் இந்தப் பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த் தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்திய விரோத அன்னிய அமைப்புகள். இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான், பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம்.“

மே, 16, 2012–ல், இந்திய ராணுவம் கற்பழித்ததா? என்று முகநூல் பதிவிட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ராணுவர்கள் சிலரின் பதிவுக்கு இவ்வாறு பதிலளித்தவர் ஜெயமோகன்.

16-02-2019 அன்று நடைபெற்ற நூல் வெளியீடு அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகத்தால் நடத்தப்பெற்றது. மார்ச் 2, 2019 அன்று சென்னை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் நுழைவுக்கட்டண அடிப்படையில் ஜெயமோகன் பேசுகிற உரை நிகழ்ச்சியினையும் ஆகுதி பதிப்பக அகரமுதல்வன் ஏற்பாடு செய்கிறார். ஈழத்தை, ஈழ மக்களை எழுதுகிறபோது பா.செயப்பிரகாசம் என்ற தமிழ்த் தேசியவாதி தேவைப்படுகிறார்: மற்ற எல்லா நேரங்களிலும் இந்துத்வ கருத்தாளன் தேவைப்படுகிறார்.

ஈழத்து அரசறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு இலங்கை அரசியல் யாப்பு பற்றி எழுதிய “யாப்பு – டொனாமூர் முதல் சிறிசேன வரை” என்ற நூலினை செப்டெம்பர் 2016- ல் வெளியிட்டவர் அகரமுதல்வன்தான். இந்நூலை அதன் ஆசிரியர் “ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கான அரசியல் பாதையை செப்பனிடுவதற்காக உழைக்கும் அனைவருக்கும்” காணிக்கையாக்கினார். இந்த நூலை வெளியீடு செய்து விற்பனை செய்யும் அகரமுதல்வன், இப்போது ஜெயமோகன் தம்பட்டமடிக்க ’மேளாவையும்’ ஏற்பாடு செய்துள்ளார்.

முரண் கருத்துக்களை விதைத்து, அதன் மூலம் பரபரப்பான எதிர்வினைகளைச் சேகரித்துக் குவித்து, தன்னை உயரமாக்கிக் கொள்வது ஜெயமோகனின் தந்திரம். ஜெயமோகனின் இந்தத் தந்திரம் தமிழிலக்கிய உலகின் பிரதான அவலப் பெருக்கெடுப்பாக இன்று ஆகியிருக்கிறது. இத்தகைய தந்திரக்காரர்களை ஊஞ்சலில் அமரச்செய்து ஆட்டுவிக்கிறது ஊடக உலகம். முரண், எதிர்முரண் – என்பதற்கான தளங்களை உண்டு பண்ணுவதில், ஊடகங்களுக்கு ஒரு காரியநோக்குண்டு: அது வணிக நோக்கு.

முல்லைத் தீவுக்கடற்கரையில் – “இருட்டு விலகாத அந்த அதிகாலையிலும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பிணங்கள் அலைகளில் எழுந்து விழுந்தன. யுத்தத்தின் சத்தத்தில் உலகம் உறங்கிற்று.” என்று எழுதினார் அகரமுதல்வன். ஆனால், உலகம் தன் இதயத்தைக் கருங்கற்பாறை கொண்டு அடைத்து, கல் நெஞ்சாய்க் கண்டுகொண்டிருந்தது: ஒரு லட்சத்துக்கும் மேலான தொண்டைக்குழிகளிலிருந்து வீறிட்ட - பத்து லட்சத்துக்கு மேலான ஓலங்களால் அசையாத இருவர் - ஒன்று இந்தியா போன்ற வல்லரசுகள். மற்றொன்று ஜெயமோகன் போன்ற பேர்வழிகள்!

அகரமுதல்வன் தனது சொந்த மக்கள் வேதனையை, கள அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். இதனோடு எள்ளளவும் உடன்படாத பேர்வழியை, தானே ஏற்பாடு செய்த, “பரியேறும் பெருமாள்” திரைப்படப் பாராட்டு, “வெயில்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு எப்படி அழைத்தார்? “அதில் மட்டும்தானே எதிர்நிலை: அந்த ஒன்றில் தானே முரண்: மற்றமைகளில் முரண்பாடில்லையே” என முதல்வன் தருக்கம் நிகழ்த்தலாம்: அந்த ஒன்றில் முரண் கொள்ளுதல் என்பது, மானுட இனத்தின் அறத்தில் முரண்படுதல் அல்லவா? மனித குலத்துக்கு எதிரான அந்த ஒன்றில் நின்றுதானே, இட்லர் பாசிசத்துக்கு நடந்தார். இட்லர் பாசிசம் வேறு, இந்துத்வா பாசிசம் வேறா?

நீங்கள் இனப்படுகொலை என்கிறீர்கள்: ஜெயமோகன் ‘இனப்படுகொலை இல்லை’ என்கிறார்.

“முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது, அதை ஒரு போராகப் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது” (ஜெயமோகன் – தடம் – ஆகஸ்ட், 2016)

துக்ளக் சோ போல், நடிகர் ரஜினிகாந்த் போல் வெளிப்படையாய் அரச வன்முறையை ஆதரிக்கின்ற இந்த கருத்தியல்வாதி.

“இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்த்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான நக்சலைட் இளைஞர்களைக் கொன்றுதானே, இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது?” என்கிறார். (தடம் இதழ் -ஆகஸ்ட், 2016, நேர்காணல்)

ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றொழித்ததை நியாயப்படுத்துகிறார் ஜெயமோகன்; ஒரு நடப்புச் சித்திரத்தை அவர் காணவேண்டும். இன்றுவரை - இந்த மணித்துளி வரை - நக்சலைட்டுகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த ‘சைதன்ய நிதியின்’ போதனையும் அவர்கள் பெருக்கத்துக்குத் தடுப்புச் சுவர் எழுப்பவில்லை. அரச பயங்கரவாதத்தை நக்சலைட்டுகள் அரசு இயந்திரத்தின் வன்முறையாக மட்டுமே காணவில்லை. ஆதிக்க மேலாண் சக்திகளின் வன்முறை, அரசு என்ற கருவியால் செயல்படுத்தப்படுகிறது எனத் தெளிவு கொண்டுள்ளார்கள். அவ்வாறு கருத்தால், சிந்தனையால் எண்ணுகிற அனைவரும் நக்சலைட்டுகள்தாம்.

“இம்மாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே அரசு தனக்கு எதிரானவர்களாகக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக்கூடாது” ( தடம் இதழ்: ஆகஸ்ட் 2016)

அகரமுதல்வன் அவர்களே, இப்போது கேள்வி உங்களை நோக்கியது: ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று குவித்த நிகழ்வை இனப்படுகொலை அல்ல என்று அபத்தமாய் பேசும் ஒருவரை எப்படி மேடையேற்றினீர்கள்? “தேசிய இனப் போராட்டங்களை இந்தியாவைப் பிளக்க நினைக்கும் சதி” – என்று விமரிசிக்கிறார். யாதொரு இன விடுதலைப் போராட்டத்தையும் ‘பிளக்கும் சதியாகக்’ காணுகிறார். இந்துத்வா கருத்தில் ஊன்றி நிற்கிற கூட்டம் தான், இந்தியாவை ஒற்றை நாடாகக் காணுகிறார்கள்: ஒற்றை மதமாக எண்ணுகிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆளுமுன் ‘இந்தியா’ என ஒரு தேசம் இருந்ததில்லை; அதுபோல் ‘இந்து’ என்ற ஒரு மதம் இருந்ததில்லை. ஈராயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் தமிழர் மரபு, தமிழர் வழிபாட்டு முறைமை, சமணம், பௌத்தம், சைவம், வைணவம் எனப் பல சமய நெறிகள் இருந்துள்ளன. சமூக நீதிகொண்ட சமணத்தை, பௌத்தத்தை விலக்கி, சைவம், வைணவ சமயங்களை உள்ளிணைத்து, வைதீகக் கருத்தாளர்கள் ஒரு இருநூறு ஆண்டுகளுக்குள் உருவாக்கியது இந்து மதம்:

ஜெயமோகன் துணிந்து வரலாற்றாசிரியர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்:

“பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த தேசம் இது. இதில் ஆயிரக்கணக்கான கடவுள்களும் நூற்றுக்கணக்கான வழிபாட்டு முறைகளும் இருந்திருக்கின்றன. இவற்றிற்கான மையம் சார்ந்த ஒரு தொகுப்பு முயற்சி ஆரம்பிக்கிறது. அந்த முயற்சி பல ஆயிரம் வருடங்கள் நடந்த பிறகுதான் ரிக் வேதமே உருவாகியது ……..………. அதன் பிறகு இந்தத் தொகுப்புச் செயல்பாடு இன்றுவரை நடந்து கொண்டுதானிருக்கிறது” (தடம் – ஆகஸ்ட், 2016)

பல்லாயிரம் வருடங்கள் முன்பிருந்தே, இந்து மத உருவாக்கம் தொடங்கிவிட்டது என்கிறார். இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்னும்போது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிசித் போன்ற இந்துத்வ அமைப்புகளுக்கு வந்து நிற்கிறார்.

மலையாளத்தில் ‘பால் சக்கரியா’ என்ற பிரபல்யமான எழுத்தாளர். அனைத்துச் சமூகப் பிரச்சினைகளிலும் முனைமுறியாது கருத்துரைத்து இயங்குபவர். “மதச்சார்பு சக்திகளுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்களுடன் என்னால் எந்த மேடையிலும் பங்கேற்க இயலாது; அத்தகையவர்கள் பங்கேற்கும் மேடையில் நான் பங்கேற்பதில்லை. அந்த வகையில் இலக்கியம் எங்களைப் பிரிக்கவிலை; அரசியல் பிரிக்கிறது. அவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருக்கலாம்.ஆனால் அவர்கள் சங் பரிவார்களுடன் இருக்கின்றனர். அதனால் அவர்களுடன் எத்தகைய நிகழ்விலும் பங்கேற்கமாட்டேன்” (தடம்- மார்ச் 2017, பக்கம் 22)

தன் எழுத்துக்கள் வழி சங் பரிவாரங்களின் கருத்தியலுக்கு சங்கூதும் வெண்முரசுக்கு, ஒன்றல்ல, நீங்களே இரண்டு அரங்கங்களுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்து அழைத்தீர்கள்? அவ்வாறாயின் அவருடைய அங்கீகாரம் தேவை என்ற உள்ளார்ந்த வேட்கை உங்களுக்குள் ஓடுகிறதா? அதன் சாட்சிதான் 02.03.2019 அன்று சென்னையில் ஜெயமோகன் உரை நிகழ்த்த ஆகுதி பதிப்பகம் அமைத்துத் தருகிற ”இலக்கியப் பெருவெளி” நிகழ்வா?

தடாலடிக் கருத்து, விட்டேற்றியாகப் பேசுதல், எழுதுதல் அனைத்தும் ஜெயமோகனுக்கு கைவந்த வித்தை.

“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான். பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா?” என நெதர்லாந்தில் வாழும் விரட்டப்பட்ட ஈழத்தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர் குணா.கவியழகன் கேள்வி தொடுத்தபோது, பதிலேதும் அளிக்காமல், தர்க்கத்தை முன்னெடுக்காமல் சட்டியைக் கழுவிக் கவிழ்த்தவர் ஜெயமோகன்.

மற்றுமொரு ஆவணபூர்வமான சான்று; ஈழ இலக்கிய உலகில் இயங்கும் கவிஞர்கள், விமரிசகர்கள் பற்றி ஜெயமோகன் சர்ச்சைக்குரிய கருத்துரைத்தபோது, லண்டனிலிருந்து ஆதவன் வானொலி அதற்கான விவாதக்களத்தை ஒருங்கிணைத்தது. ஆதவன் வானொலியின் கலந்துரையாடலில் சாத்திரி (பிரான்ஸ்), கவிஞர் மு.பொன்னம்பலம் (கொழும்பு), கவிஞர் அ.யேசுராசா (யாழ்ப்பாணம்). எழுத்தாளர் மு.நித்தியானந்தன் (இலண்டன்), எழுத்தாளர் கருணாகரன் (கிளிநொச்சி), கவிஞர் சோ.பத்மநாதன் (யாழ்ப்பாணம்), எனச் சிலரைப் பங்கேற்க இறுதி செய்து, ஜெயமோகனையும் பங்கேற்க அழைத்தார் ஒலிபரப்புப் பொறுப்பாளர் இளையதம்பி தயானந்தா.
“வணக்கம் ஜெயமோகன் அவர்களே!
எனது பெயர் இளையதம்பி தயானந்தா. புலம்பெயர்ந்த ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளன். தற்போது லண்டனிலுள்ள லைக்காவின் ஆதவன் தொலைக் காட்சி / வானொலியில் பணியாற்றுகிறேன்; கடந்த ஆண்டு “மீண்டு நிலைத்த நிழல்கள்” நூல் வெளியீட்டில், நீங்கள் ஆற்றிய உரையில், ஈழத்து படைப்பாளிகள் பற்றிய உங்கள் குறிப்பு, திடீரென சமூக வலைத் தளத்தில் ஈழத் தமிழர்களால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.
ஆதவன் வானொலியில் என்னால் செய்யப்படும் வாராந்தர நேரலை நிகழ்ச்சியில் இந்த விடயத்தை, அடுத்த வாரம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். குறித்த நிகழ்ச்சி இலங்கை/இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. அடுத்த வார நிகழ்ச்சியில் உங்களால் பங்கேற்க முடியுமா? குறித்த நேரலை நேரத்தில் பங்கேற்க முடியாத நிலையிருப்பின், அதற்கு முன்னராக உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா? உங்கள் பங்கேற்பில்லாமல் இந்நிகழ்ச்சியைச் செய்தால் அது அர்த்தமற்றதாக அல்லது ஒரு பக்கச் சார்புடையதாக அமையும் என நினைக்கிறேன்.
அன்போடும், பதிலுக்கான எதிர்பார்ப்போடும்,
இளையதம்பி தயானந்தா
0044 77027 43011.
இத்தனை முன் மரியாதைகளோடும் மதிப்பளித்தும் இளையதம்பி ஒலிபரப்புக்கு அழைத்தார். ஜெயமோகன் அளித்த பதில்:
“அன்புள்ள இளையதம்பி அவர்களுக்கு,
நான் சொன்ன கருத்து இலக்கிய விவாதம் என்னும் களத்திற்குள் நிகழ்வது. இலக்கியத்தில் ரசனை சார்ந்த கூரிய மதிப்பீடு எவ்வளவு தேவையானது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பவர்களின் குரல்களைக் கேட்டால் குமட்டலும் பரிதாபமும்தான் வருகிறது. அவர்களுக்கு இலக்கியம் என்பதே அறிமுகமில்லை. நகைச்சுவையை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் இல்லை. அதேசமயம் எளிய மனிதர்களாக, தங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் தலையிடாமல் விலகி விடவேண்டும் என்ற அடிப்படைப் பண்பும் இல்லை. வெறும் ‘வெட்டி வம்புக் கும்பல்’.
..... இப்படி தலையும் காலும் தெரியாத கும்பல்களிடம் இலக்கியவாதி அமர்ந்து ‘விவாதிக்கவேண்டும்’ என்பதுபோல அசட்டுத்தனமும் வேறில்லை. எந்தத் துறையிலும் அதில் அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களின் குரல்களை புறக்கணிப்பதே ஊடகங்கள் உண்மையில் செய்யவேண்டியது. சமூகவலைத்தளங்களின் உளச்சிக்கல்களை திரும்பப் பதிவு செய்வது ஊடகங்களின் வேலை அல்ல. உங்கள் பரபரப்புத் தேவைக்கு வம்புகள் உதவுமென்றால் செய்க. எனக்கு ஆர்வமில்லை”
மறுத்ததெல்லாம் கூடப் பெரிதில்லை: ஆனால் “வெட்டிக் கும்பல்” என ஒரு பட்டம் சூட்டுகிறார். இவர்கள் அனைவரும் ஜெயமோகன் எழுத வருவதற்கு முன்பே எழுத்தில் சாதனை படைத்தவர்கள்.

ஒரு எழுத்தாளன் தான் எழுதும் ஒரு எழுத்து, தான் உதிர்க்கும் ஒரு சொல் – அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். இது சாதாரண மனிதர்களுக்கும் வலியுறுத்தப்படுவது: இதன்வழி சுயவிமரிசன மரபு நீரூற்றப்பட்டுச் செழிக்கும். ஆனால் தன்னை ஆகப்பெரிய மகானுபாவனாக நினைத்துக்கொண்டு, அருளாசிகளை மந்திரித்து வீசுகிற ஜெயமோகனுக்கு இதெல்லாம் பிழையான கோட்பாடு.

கலை, அழகியல் என்னும் மாயச்சொற்களால் உரையாடும் ஒரு கூட்டத்தால் கடத்திக் கொண்டு போகப்படுகிறார் அகரமுதல்வன்.

நாம் தோழமை உணர்வுடன் சொல்ல விரும்புவது – ஒரு அகரமுதல்வன் மட்டும் அல்ல, பல அகரமுதல்வன்கள் தமிழிலக்கியப் பரப்பில் உருவாகிவிடக்கூடாது என்பதுதான்!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ