இந்தியை எதிர்த்துவிட்டு ஆங்கிலத்தை புகுத்தியதுதான் தி.மு.க-வின் சாதனை!

பொன்விழா பொருமல்!

மிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாணவர்களாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள், பின்பு பேராசிரியர்களாக உயர்ந்து இன்று பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் மீண்டும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு எடுத்த முடிவை எதிர்த்து 1965-ல் ஜனவரி 25-ம் தேதி மதுரையில் கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டத் தீ, தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிந்தது. மாணவர்களின் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிய அரசு, இறுதியில் ராணுவத்தை ஏவிப்பார்த்தது. அப்படியும் மாணவர்களின் எழுச்சியைச் சமாளிக்க முடியாத அரசு, தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியது. தமிழக மாணவர்களால் நடத்தப்பட்ட மொழிப்போருக்கு இது பொன்விழா ஆண்டு. தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமைந்த இந்த மொழிப்போரில் மாணவர்களை ஒருங்கிணைத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.


''1965-ல் நடைபெற்ற மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு வரலாற்று வெற்றி என்றாலும், ஏராளமானோரை பலி வாங்கிய ஒரு துன்பியல் சம்பவம். இதில் தமிழகம் முழுவதும் 150 பேர் பலியானதாக அரசுக் குறிப்பு சொன்னாலும், 500-க்கு மேல் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் மதுரை தியாகராசர் கல்லூரியில் நானும், மறைந்த சட்டப்பேரவைத் தலைவர் கா.காளிமுத்து, கவிஞர்கள் இன்குலாப், நா.காமராசன் ஆகியோர் படித்துக்கொண்டிருந்தோம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜனவரி 25-ம் தேதி இந்திய அரசியல் சட்டத்தை எரிப்பது என்ற முடிவை காளிமுத்துவும் காமராசனும் சொன்னபோது, 'மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். காளிமுத்து, காமராசன் இருவர் மட்டும் அரசியல் சட்டத்தை எரிக்கட்டும். மற்ற அனைத்து மாணவர்களும் ஊர்வலமாகச் சென்று மதுரை திலகர் திடலில் தீர்மானம் நிறைவேற்றலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி 25-ம் தேதி காலையில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஊர்வலம் புறப்பட்டோம். தியாகராசர் கல்லுரியில் இருந்து நாங்கள் புறப்பட்டு ராஜாஜி திடலை அடைந்ததும் காளிமுத்துவும் காமராசனும் சட்டத்தை எரித்துக் கைதானார்கள். மாணவர்களின் ஊர்வலத்தின்போது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை மூர்க்கமாக அரிவாளால் தாக்கினர். இதைக் கேள்விப்பட்டதும் முன்னே சென்றுகொண்டிருந்த மாணவர்கள், காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கினர். மதுரை நகர் முழுவதிலும் இருந்த காங்கிரஸ் கொடிகளைத் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவங்கள் பத்திரிகைகளிலே வந்ததால், தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் கல்லூரியைப் புறக்கணித்து, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் குதித்தனர். இந்த நேரத்தில்தான், காஷ்மீரைத் தவிர, வேறெங்கும் சென்றில்லாத ராணுவத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு எதிராகக் களம் இறக்கியது.

அடுத்து, தமிழகத்தின் அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கு வரும் கடிதங்களையும் காவல் துறை பிரித்துப் படிக்கும் என்ற அஞ்சல் தணிக்கை சட்டத்தைப் பிறப்பித்தது. இதில்தான் பலரும் பாதிக்கப்பட்டனர். கடிதங்கள் கிடைக்கப்பெறும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்பது போன்ற அடக்குமுறைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் போராட்டம் தொடர்பாக பத்திரிகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜனவரியில் தொடங்கிய போராட்டம் மார்ச் வரை நடந்தது.

மாணவர்களுக்குத் தேர்வு நேரம் என்பதால் சிறையிலிருந்த மாணவர்கள் தேர்வெழுத விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து நடந்த ஆட்சி மாற்றத்தில் தி.மு.க பதவியில் அமர்ந்ததும் மாணவர்களிடம், 'இந்தி எதிர்ப்பு எங்கள் கைகளில் இருக்கிறது. அதனால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று சொன்னது. 1963-ல் இருந்தே தி.மு.க இந்தி எதிர்ப்பில் இருந்ததால், அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தத் திராவிட இயக்கங்கள் இந்தி எதிர்ப்பு என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தை ஆதரித்தது மட்டும்தான் சாதனை. தி.மு.கவுக்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த ஆங்கிலப் பள்ளிகள் இன்று கணக்கிட முடியாத அளவுக்குப் பெருகிவிட்டன. இந்தி என்பது நம்மேல் திணிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலம் என்பது நமக்கு நாமே திணித்துக்கொண்டது. எப்படி இருந்தாலும் இந்தித் திணிப்புக் கொள்கை இன்னும் முடிந்துவிடவில்லை. மாறாக, 'சமஸ்கிருத வாரம், குரு உத்சவ்’ என்ற பெயர்களில் ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் விரோதிகள் அல்ல. மொழித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஓர் இனத்தின் மீது குறிப்பிட்ட மொழியைத் திணிப்பது அந்த இனத்தையே அழிப்பதற்குச் சமம். அதனைத் தமிழ்ச் சமுதாயம் தடுக்க வேண்டும். இந்த மொழிப்போராட்டம் நினைவாக இந்த ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்று முடித்தார்.

- ஜெ.முருகன்
படம்: அ.குருஸ்தனம்
நன்றி: ஜூனியர் விகடன் - 28 Jan, 2015

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌