கைவிட முடியாத கனவு!


தமிழீழம் - தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.

விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது.

புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி?

ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை நடவேண்டும். மண்ணுக்குக் கீழும் மண்ணுக்கு மேலும் தன் செயல்களை நிகழ்த்திக்கொண்டு போகிற செயல்பாட்டின் பெயர் பெருமரம்.  ஈழ நிலத்தில் கிரிசுடோபர் பிரான்சிசு; தமிழகத்தில் பத்து ஆண்டுகளாய் சுந்தர்; புகல் நாடான பிரான்சில் கி.பி.அரவிந்தன் -  மூன்று களங்களிலும் இந்த நல்வித்து போராளிப் பெருமரமாய் நிறைவாகியது. கி.பி.அரவிந்தன் என்ற போராளிப் பெருமரத்தின் கனவு இன்னும் மீதி இருக்கிறது.

அவர் ஒரு முடிவிலா வளரும் இலட்சியம். அவர் இல்லை. ஆயினும் என்ன? அவரின் இலட்சியம் காலக் கைகளால் பாதுகாத்து எடுத்துச் செல்லப்படும்.

தமிழீழ விடுதலை - இறுதிவரை அவர் இலட்சியம். அவர் இல்லை என்பதால் இலட்சியமும் முடிவுபெறுவதில்லை. அவரே சொன்னதுபோல் - அது தொடர் அஞ்சல் ஓட்டம்; முன்னர் ஒரு தலைமுறை அதற்கு முட்டுக்கொடுத்து, இந்தத் தலைமுறை அந்த இலட்சியத்தைக் கைவிடும் என்பதல்ல. கைவிடக் கூடாதெனும் பெருங்கனவு அவருக்கிருந்தது.

“ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கோரிக்கை விடுதலைப்புலிகளுடன் தோன்றிய ஒன்றல்ல - அவர்களுடனேயே அழிந்துபோவதற்கு. அஞ்சலோட்டத் தொடர் ஒன்றில் அவர்களும் நெருப்பேந்தி ஓடினார்கள். இனியும் அந்த அஞ்சலோட்டம் தொடரும். நம் பணி அதுவாகத் தான் இருக்கவேண்டும்.’’

ஈழவிடுதலை அஞ்சலோட்டத் தொடர் இன்னும் முற்றுப்பெறவில்லை.

பொதுவுடைமையாளர் என்றால் என்ன? பொதுவுடைமைச் சமுதாயம் காணப் போராடுகிறவர் என்று பொருள். இப்பொருள் முழுமையான தில்லை.

“ஒரு பொதுவுடைமையாளர் என்பவர் தன்னைத் தொடர்ந்து பொதுவுடைமையாளராக வைத்திருப்பதற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்’’என அச்சொல்லுக்கான மெய்ப் பொருள் கூறுவார்கள் மார்க்சியர்.  நேற்று பொதுவுடைமைப் புரட்சியாளனாக இருந்தார்; இன்று இருக்கிறார்; நாளையிருப்பார் என்பது அல்ல, சமுதாய மாற்றத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறபோதே அதற்காக வாழ்நாள் முழுவதும்  தன்னைத் தகவமைத்துக்கொண்டே இருப்பவர் எவரோ அவரே பொதுவுடைமையாளர்.

போராளி என்ற சொல்லுக்கும், பொதுவுடைமையாளர் என்ற சொல்லுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. நேற்றுப் போராளி; இன்றும் போராளி; நாளையும் போராளி என்பதே அதன் பொருள். போராளியாகவே தன்னை தகவமைத்துக் கொண்டு இயங்கினார். போராளியாக வாழ்ந்து போராளியாக நிறைவெய்தினார். போராளி மறைந்துவிட்டாலும் விடுதலைப்போர் தொடரும் என்பதனை சொல்லிச் சென்றிருக்கிறார்.

“எந்தக் கனவிற்காக, எந்த நம்பிக்கைக்காக, எந்த உரிமைக்காக இத்தகைய பேரவலத்தை இந்தச் சமூகம் சந்தித்ததோ அவற்றை நாம் கைவிட்டுவிட முடியமா? மண்ணுக்குள் தாம் மறைந்தாலும் மறையாத விடுதலை இலட்சியத்தை மேற்கொண்டு செல்வது எப்படி? கேள்வியெழுப்புகிறார் அரவிந்தன்.

அதற்கான நிலைப்பாடுகள் எவை? 2009, மே 17 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின் மூன்று நிலைப்பாடுகளைக் கருதிப் பார்க்கிறார்.

“மூன்று தெரிவுகள் நம்முன் உள்ளன.

முதலாவது: சரணடைதலை ஏற்றுக்கொண்டு, அதாவது சிறீலங்காவின் வெற்றியை அங்கீகரித்து அப்படியே முகமிழந்து போதல்.

இரண்டாவது: எல்லோர் மேலும் வெறுப்பு கொண்ட அடிப்படைவாதிகளாய், அந்நியப்பட்டவர்களாய் - அதாவது நம்முன் மாற்றம் எதனையும் நிகழ்த்தாதவர்களாய் அழிந்துபோதல்.

மூன்றாவது: இருப்பைக் கணக்கெடுத்து மாற்றுத் தெரிவுகளுக்கு ஊடாக, புதிய படிநிலைக்கு, அதாவது பன்னாட்டுச் சமூகத்திற்கான மொழியூடாகப் போராட்டத்தை நகர்த்துதல், இலக்கை எட்டுதல்.”

“நண்பர்களே! முதல் இரண்டையும் நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? மூன்றாம் வழியைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும். இதில் மாற்றுக்கருத்து நமக்குள் இருக்காதென்று நினைக்கிறேன்” என்கிறார்.

பன்னாட்டுச்சமூகத்தின் மொழியூடாகப் போராட்டத்தை நகர்த்துதல் என்பதன் பொருள் என்ன?

“சிரீலங்காவோ தனது வெற்றிக்காக மிக நுட்பமாகத் திட்டமிட்டது. உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளை திறமையாகக் கையாண்டார்கள். அரசச் சூழ்ச்சி (இராசதந்திரக்) காய்நகர்த்தலில் தங்களின் 2500 ஆண்டுகால முதிர்ச்சியை அவர்கள் பெற்றிருந்தார்கள். நமது அரசச் சூழ்ச்சிப் பரம்பரையம் (இராசதந்திரப் பாரம்பரியம்) முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. போராட்ட வழிமுறைக்குள் நாம் அரசியலை இணைக்கவில்லை’’

விடுதலைப்போரை சர்வதேச மொழியினூடாக முன்னகர்த்துதல் இன்றைய நிலையில் இராசதந்திரங்களின் வழியாக நடைபோடக் கற்பது மட்டுமே.  உள்ளூர் அரசியல் உலக அரசியலால் தீர்மானிக்கப் படுகிறது. ஈழவிடுதலை ஐ.நா. அவையில் பலியாடாக நிறுத்தப்பெற்றது என்கிறபோதே நாம் இராசதந்திர காய்நகர்த்தலைச் செய்யவேண்டியவர்களாய் நிறுத்தப்பட்டோம்.

பன்னாட்டு மொழியினூடாக முன்னெடுத்தல் என்ற அடிப்படையில் ஈழத்தமிழ் தேசிய விடுதலையை முன்வைத்த 1976 வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மீது, பிரான்சில் வதிந்தாலும் உலகெங்கும் பரந்துகிடக்கும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு என்ற செயல்பாட்டினை அரவிந்தன் முன்மொழிந்தார். புகல் நாடுகள் அனைத்திற்கும் சென்று தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தினார். இன்றைக்கு ஈழத்தமிழர், தாயகத்தமிழர், புலம்பெயர் தமிழர் என அனைவரும் கோருகிற பொது வாக்கெடுப்பு என்னும் முழக்கத்தை முன்வைத்தலுக்கு அவர் முதன்மைக் காரணர்.

கி.பி.அரவிந்தன் போன்ற ஈழப்போராட்ட முன்னோடிகளின் வழிகாட்டல் அவசியப்படுகின்ற காலமிது. 2009, மே 17-க்குப் பின்னான காலம் இதை  உணர்த்தி நம்முன் நடக்கிறது. ஈராண்டுகளுக்குமுன் அவரது உடலைக் கவர்ந்துகொண்ட புற்று நோய் கொஞ்சங் கொஞ்சமாக அவரைத் தின்று, கடந்த மார்ச்சில் அவரை முழுமையாகத் தீர்த்துவிட்டது. நம்மையெல்லாம் அதிர்ச்சி அடையச்செய்தது அவர் மரணம்.



கி.பி. அரவிந்தன் மறைவையொட்டி அவரது நண்பர்கள், தோழர்களின் நினைவுப் பகிர்தல்கள் ‘கி.பி. -அரவிந்தன் ஒரு கனவின் மீதி‘ என்னும் தொகுப்பு நூலாக வெளியாகியுள்ளது. ஈழத்தின் முதல் தற்கொலைப் போராளி சிவகுமாரனுடன் உடன்போராளியாய் இணைந்தார். தலைமறைவு வாழ்வு, காவல்துறை, இராணுவத் தேடுதல் வேட்டை இவற்றினூடே அவர் சுந்தராய்த் தமிழகம் வந்தடைகிறார். தமிழீழப் புரட்சி அமைப்பின் முன்னணித் தளகர்த்தராய்த் தமிழகத்தை ஈழ விடுதலைப் பின்தளமாக்க ஏறத்தாழ பத்துஆண்டுகள் பாடுபட்ட சுந்தரைப் பலரும் நினைவோடையில் ஈரமாய் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

ஈழ நிலத்தில் தொடங்கி, தமிழகம் வழியாய் நடந்து புகல் நாட்டில் நிறைவெய்திய அவரது போராளி  வாழ்வின் தடம்போலவே ஈழம், தமிழகம், புகல்நாடுகள் என மூன்று பகுதிகளாக கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஈழம்- 5,
தமிழ்நாடு- 21,
புகல்நாடுகள்- 17

என்றவாறாக மொத்தம் 47 பதிவுகள் உள்ளன. மறவன்புலவு சச்சிதானந்தன், காசிஆனந்தன், எசு.வி. இராசதுரை, சி. மகேந்திரன், வைகறை, ஓவியர்கள் சந்தானம், மருது, புகல்நாடுகளின் சத்தியசீலன் (இலண்டன்), முகிலன் (பிரான்சு), கபிலன் (செருமனி), சண் தவராசா (சுவிசு), உரூபன் சிவராசா, இளவாலை விசயேந்திரன், கலாநிதி சருவேந்திரா (நோர்வே)முதலான 43 ஆளுமைகள் பதிவுசெய்துள்ளனர்.

ஈழம், தமிழகம், புகல்நாடுகளின் தமிழறிஞர்களிட மிருந்து  கட்டுரைகளைத் தொகுத்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், ‘மணற்கேணி‘ இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான இரவிக்குமார் ஆகியோர்  ‘கி.பி. அரவிந்தன்: ஒரு கனவின் மீதி‘ என்னும் நூலாக ஆக்கியிருக்கிறார்கள். பலரும் ஒருசேர அவரது வாழ்வின் வெவ்வேறு பக்கங்களையும் விவரித்திருப்பதால், தன்னளவில் தன்வரலாறாக இந்நூல் வெளிப்பட்டுள்ளது. கி.பி. அரவிந்தன் தொடர்பிலான ஏராளமான ஒளிப்படங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

தமிழர் வாழ்வியலின் குறியீடான கி.பி.அரவிந்தன் பற்றிய  இத்தொகுப்பினைக் கொண்டுவருதலில் முன்னின்றவன் என்னும் வகையில் சில கடமைகளைப் பேணியுள்ளேன். முதலில் நான் மனிதன்; ஒருமனிதன் இன்னொரு மனிதனை, அதிலும் முழுமையாய்த் தன்னை உயர்மானுடனாகத் தகுதிப்படுத்திக்கொண்ட ஒருவரை மதிக்கக் கற்கவேண்டும்; எனவே நூல் தொகுப்பில் முனைந்தேன்.

இரண்டாவதாய் நான் தமிழன்: வாழ்நாள் முழுமையும் தன்னை ஒரு போராளியாய் தகுதிப்படுத்திக் கொண்ட இன்னொரு தமிழனைப் பெருமைப்படுத்துவது கடமை.

மூன்றாவதாய் நான் பன்னாட்டு மனிதன்: பூபாக மெங்கும் எங்கெங்கு ஒடுக்கப்பட்டவருக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றனவோ, அதனையெல்லாம் வரவேற்ற குரல் அரவிந்தனுடையதாக இருந்தது. அந்தப் பன்னாட்டு மனிதனின் நூல் தொகுப்பினைக் கொண்டுவருதலில் பங்குகொண்டதில் பெருமையடைகிறேன்.

கிறிசுடோபர் பிரான்சிசு தொடங்கி, சுந்தர் வழியாக, கி.பி.அரவிந்தன் வரை அவருடைய ஒவ்வோர் அடியெடுப்பையும், தலை மறைவையும், சிறை வாழ்வையும், பட்ட சிறைக் கொடுமைகளையும், புலம்பெயர் பிரான்சு தேசத்தில் தனக்குக் குடியுரிமை வேண்டா என மறுத்து, ஈழக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பேன் அல்லது அகதியாகவே உயிர்விடுவேன் என்ற அவரது அகதி மரணமும் அறியத் தருகிறது தொகுப்பு. ஈழத்தின் பெறுமதியான  மனிதருக்கு - போராளிக்கு - கவிஞனுக்கு - ஒரு மக்கள்நாயகவாதிக்கு - இலட்சியக்காரனுக்கு - பன்னாட்டு மனிதனுக்கு நாம் செய்யும் காலக்கடன் இது.

‘கி.பி. அரவிந்தன்: ஒரு கனவின் மீதி’ என்னும் இந்நூல் -  வாழ்வு ஒழுங்கையும் போராளி வாழ்வையும்  நிறைவு செய்து நம்மைப் பிரிந்து விட்ட ஒரு மானுட ஆளுமைக்குச்  செலுத்தும் தகவுடைய சிறு காணிக்கை.

நன்றி: அகர முதல - 24 சனவரி 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌