புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?

“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதி “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் வெளிவந்து உள்ளது.

1

25 – வயதில் இளவட்ட மணிமுத்துவுக்கு கல்யாணம் நடந்தது. வீட்டு வேலை, சமையல் வேலையில் பதனம், பக்குவம், கருத்தாயிருப்பார்கள் சில பெண்கள். சிலருக்கு காட்டுவேலை, விவசாய வேலை எடுப்பாய் அமையும். இரண்டையும் மேலெடுத்துப் போட்டு, சளைக்காமல் செய்கிற கூடுதல் உழைப்பாளியாக நல்லம்மா வந்து சேர்ந்தாள். உழைப்பைச் சீதனமாக உடன்கொண்டு வருகிறவள், தன்னோடு சீதேவியையும் கூட்டி வருவாள் என்று அம்மா சொல்வாள். கலயாணத்தின்போது அம்மா இல்லை. வாக்கப்பட்டு வந்தவள் குடும்பத்தின் தலையெழுத்தை நல்லபடி கையெலெடுத்துப் போனாள். சம்சாரி பயணத்துக்கு தோதான ஆள் வாய்த்துப் போனாள் என்று மணிமுத்து கொண்ட புளகாங்கிதம், புடைத்து மேல்வந்த நீர்க்குமிழி போல் உடைந்து போயிற்று. விவசாயிகளைப் பிடிச்ச சனியன் கொஞ்சம் நஞ்சம் இல்லை, விடுவனா என்று மல்லுக் கட்டி தோள்மேல் ஏறி உட்கார்ந்து நல்லா வசக்கி எடுக்குகிறது.

பக்கத்து வீட்டு அழகர்சாமி மணிமுத்துவுக்கு சித்தப்பா மகன். அவனுடைய இரண்டு பையன்களும் சேலத்தில் சிறு கடையில் வேலை பார்த்து, பிறகு சொந்தமாய்க் கடை வைத்து ’வியாபாரம் போட்ஸாக’ நடக்கிறது. பிள்ளைகளுக்கு ஒத்தாசையாய் இருக்க, அழகர்சாமியன் சம்சாரம் மகன்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டது. பையன்களுக்கும் சம்சாரத்துக்கும் ஊர்ப்பக்கம் விட்டுப் போனது. ஒத்தப்பாரி அழகர்சாமி சமையல், சாப்பாட்டுக்கு ஊரில் தவிதாயப் பட்டுக் கொண்டிருந்தார். விவசாயத்தை தூக்கி எறிந்து விட்டு, சிவனேன்னு எங்களோட வந்து உக்காருங்க என்று இரண்டு பையன்களும் சொல்லிப் பார்த்தார்கள். உழைத்த உடம்பு, நகரத்தில் போய் கை நீட்டி கால் நீட்டிப் படுப்பதை ஏற்கவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதை இந்த விவசாயத்தில் தான் பார்க்கவேண்டும். நிலத்துக்கும் விவசாயத்துக்கும் தாலி கட்டிக் கொண்டு வாழ்ந்த தலைமுறைக்கு அயனான நிலங்களை அனாதையாக்கி விவசாயத்தை அறுதலியாய் ஆக்கிவிட்டுப் போகச் சம்மதமில்லை.

அழகர்சாமி மலைத்துக் களைத்து இருந்ததை ஒரு நாள் கூட கண்டதில்லை. எந்நேரமும் சுளிப்பாய், சுறு சுறுப்பாய் இருக்கிறவன். ஒருநாள் கதவு, சன்னல் எல்லாமும் மூடப்பட்டுக் கிடந்தன. மூன்றாவது நாள் வீட்டுக்குள்ளிருந்து வீச்சம் எடுக்க ஆரம்பித்தது. ஆள் நடமாட்டம் காணம் என்ற சம்சயம் அக்கம் பக்கம் எல்லோருக்கும் எழுந்தது.

“இப்படி செய்திட்டியடா பாவி”

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மணிமுத்து தன்னறியாமல் விக்கினார்.

“ஏம், அழுறீங்க. நம்ம கண்ணீரையெல்லாம் தொடைக்கிறதுக்காகத் தானே டெல்லிக்குப் போய்ட்டிருக்கோம்” – எதிரில் அவருடன் பயணம் செய்து கொண்டிருந்த விவசாயி மணிமுத்துவின் முழங்கால்கள் மேல் இருகைகளையும் வைத்து அமர்த்தினார்.

டெல்லிக்கு இப்போது விவசாயிகள் ரயிலில் பயணம் போகிறார்கள். மணிமுத்துவை டெல்லிக்கு விரட்டி அடித்ததில் சொந்த பயம் மட்டுமில்லை, அழகர்சாமியின் மரண பயமும் சேர்ந்திருந்தது. இப்போது நிஜமாக அவரை டெல்லிக்கு விரட்டியடித்தவன் அழகர்சாமி.

யாரென அறியாது எதிரில் உட்கார்ந்திருந்த விவசாய நண்பர்களிடம் அழகர்சாமியின் கதையை வைத்த போது, அவர்கள் ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு நிறையக் கதைகள் இருந்தன. மூன்று நேரமும் கெடாமல் இருக்கிற கட்டிச் சோற்றுப் பொட்டலம் போல், எக்காலத்தும் சொல்லித் தீராத துன்பத்தைக் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். அழகர்சாமி இல்லாமல் இருண்டு கிடக்கும் வீடு போல் - இருளடைந்து போய்விட்டது விவசாயிகள் வாழ்க்கையும்.

எதிரில் அமர்ந்திருந்தவர்கள் காளியப்பன், போத்தையா, நல்ல பெருமாள். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் காளியப்பனை வழியனுப்ப ரயிலடிக்கு ஒரு வாலிபன் வந்திருந்தான். “யாரு, ஒங்க பையனா?” மணிமுத்து கேட்டார்.

“ ஆமா, இங்ஙன ஒரு மெடிகல் ஷாப்பில இருக்கிறான்”

பிறகு அவரே சொன்னார் “இன்னைக்கு கிராமத்தில் நம்மள வழியனுப்ப ஒரு இளவட்டமும் இல்லை. எல்லாம் வெளியேறிட்டாங்க”

காளியப்பன் சொல்வது நிஜம்; இளரத்தம் பிழைப்புக்காக நகரம் தேடிப் பாய்ந்துவிட்டது. இனி வேலைக்கு ஆகாதென்று, கிராமத்தைக் காலி செய்து நகரங்களுக்குள் இளம் பிராயத்தினர் புகுந்த போது, அப்படியாச்சும் விருத்திக்கு வரட்டுமே என்று பெற்றவர்களும் விட்டு விட்டார்கள். கிராமத்தை கிழடு கெட்டைகள் காவல் காத்துக் கொண்டு கெடக்கிறார்கள்.

2

ஐந்து வயதுள்ள சிறுபயல் மணிமுத்து துண்டை எடுத்து நீட்டுவாக்கில் இரண்டாக மடித்தான். மேற்கில் 40 கி.மீ தொலைவிலுள்ள ‘தாம்போதி’ மாட்டுச் சந்தைக்கு அய்யா போனபோது தலையில் கட்டிக் கொண்டு போயிருக்க வேண்டியது. தலைப்பாக் கட்டுக்குத் தோதான நீளத்துண்டு.

தாயின் மாரில் பாலைச் சப்பிக் குடித்தபடி பாப்பா அவனை ஒரு தடவை ஏறிட்டாள். பாப்பாவுக்கு கண் அழகாயிருந்தது. செம்பாகமான தரையில் ‘சல்’லென்று உருட்டி விடப்படுகையில் ஓடிஓடி உருளும் சோழிகள் போல் சின்னஞ்சிறு முழிகள் சுழன்று அதிசயத்தோடு பார்த்தன. பால்குடிக் கிறக்கத்தில் இமை பொருந்தி மூடியது.

துண்டை நீட்டு வசத்தில் ரெண்டாய் மடித்து - ஒரு முனையை இடது தோளில் போட்டான். நடு மார்பில் மடிப்புக் கொடுத்து வலது தோளில் போட்டுக்கொண்டான். இடுப்பில் அரைக்கால் டவுசர்.

மேலுக்குத் துணி இல்லாமல் ஏத்தாப்பு போட்டுக்கொண்டு போகிற ‘மகாராஜாவை’ பால் கொடுத்துக் கொண்டிருந்த அம்மா ஒருக்கணித்து நோக்கினாள். ஒரு அரைச் சிரிப்பு உதட்டில் தொங்கட்டம் போட்டு ஆடியது.

“ஐயா,எங்க பொறப்பட்டீக வெள்ளனவே. ஏத்தாப்பு போட்டுக்கிட்டு” தலை குணக்கட்டம் போட்ட குழந்தையை நார்க்கட்டிலில் துணிவிரித்து தூங்கப் போட்டாள்.

ஒரு வளர்ந்த ஆளுக்குத் தக்கன மதிப்புக் கொடுத்து அம்மா கேட்டாள்.

“அய்யா, வர்றாகள்ளே, இன்னைக்கு”

“அது யாரு சொன்னா” அம்மாவுக்கு ஆச்சரியம் தந்தது.

“ஆவுடைச் சின்னையா. நேற்று ராத்திரியே ‘தாம்போதி’ சந்தையிலிருந்து திரும்பீட்டாரு. ஒங்க அய்யா காலையில வர்றாருன்னு அவருதான் எங்கிட்ட சொன்னாரு. நா அய்யாவைக் கூப்பிட்டு வரப் போறேன்”

“மேல மந்தையில போய் கொஞ்ச நேரம் நில்லுங்க; அப்படிக் கூடி தான் அய்யா மாடு பத்தீட்டு வரணும்”.

வெயில் ஏறிக் கொண்டிருந்தது. இன்றைக்குச் சூரியன் இருக்கிற இருப்பைப் பார்த்தால் வெயில் கெட்டாப்பாய் சுளிச்சி அடிக்கும் என்று ருசுவானது. மேற்குத் திசை நோக்கி உட்கார்ந்திருந்த சிறுபயலின் பிடரியில் வெயில் கைபோட்டது. மேலுக்குச் சட்டை போடாமல் வந்திருக்கக் கூடாது என நினைத்து, கண்களை சுருக்கி பார்வையை மேலைத் திசையில் அலையவிட்டான்.

“ஏ, யய்யா, எந்திரி. வந்து கஞ்சி குடிச்சிட்டு பள்ளிக் கூடம் போ” பின்னாலிருந்து அம்மாவின் குரல் எழுப்பியது.

மேற்குத் திசையில் கை நீண்டது “அய்யா?”

“அவஹ இப்ப வரலை. இனி ராத்திரிக்குத் தான்”

பழைய மாடுகளை விற்றுவிட்டு புது மாடுகள் அமர்த்திவர ‘தாம்போதி’ மாட்டுத் தாவணிக்குப் போனது: மாடு விலை திகைந்து விட்டதென்றால் வண்டியில் பூட்டி, ஊர் வந்து சேர வேண்டியது: 40 – கல் தொலைவுள்ள தாம்போதி சந்தையிலிருந்து பின்னேரம் மாடுகள் பூட்டி வண்டி பத்தி வந்தால், ஊரெல்லையில் முன்சாமம் அழைத்துப் போக நிற்கும்.

அவன் போட்டிருந்த ஏத்தாப்பை அம்மா கலைத்தாள். “தலைக்குக் கட்டிக் கோய்யா” துண்டை கழற்றி தலைப்பாகை கட்டிவிட்டாள். ஒரே ஒரு ஆண்மகன்: இப்போது பால் குடியாயிருக்கிற பாப்பா, இரண்டு போதும்; மூத்தது தலையெடுத்து, இளையதைக் கரையேத்த சரியாயிருக்கும். அவனைக் கைப்பிடித்தபடி ஊருக்குள் கூட்டிப் போகையில், “ஆம்பிளையக் கூட்டீட்டுப் போறீகளாக்கும்” விசாரித்தாள் மீனா மதினி.

“ஆமா” கை பிடித்து தாமதித்தாள் அம்மா.

“தலைப்பாக் கட்டைப் பாத்தா ஆம்பிள உண்டாகிட்டாருன்னு தெரியுது. மருமகனே, எம் பொண்ணு ஒனக்குத் தான். கட்டிக்கீறீகளா?”

“அதெல்லாம் முடியாது தாயீ. கோடீசுவரன் வீட்டில தான எங்களுக்குச் சம்பந்தம்” அம்மா மறுதலித்தாள்.

“இருக்கும், இருக்கும்” – தலைப்பாகையோடு தடவிவிட்டாள் மீனா அத்தை.

மணிமுத்து குய்யப்பட்டு நெளிந்து அம்மாவின் முந்தானையைச் சுற்றிக் கொண்டு பின்னால் மறைந்தான்.

அய்யா காலத்தில் நிலமிருந்தது;விவசாயவேலைகளுக்கு மாடுகளிருந்தன: குடிக்கத் தண்ணீர் இருந்தது. அனைத்துமிருந்தும் தாம்போதி சந்தையில் பிடித்து வந்த மாடுகளுக்கு நல்லகாலமில்லை. கண்ணீர் மறித்தபார்வையுடன் சபையில் அமர்ந்திருந்தார் அய்யா. திடமான நெஞ்சழுத்தமுள்ள ஆளான அய்யாவின் கண்களில் முதன்முதலாக மணிமுத்து நீரைக் கண்டான். கிஸ்தி (நிலத்தீர்வை) வசூலிப்பதற்காக வந்திருந்த அதிகாரிமார்களும் ஊர்ப் பெரியவர்களும் பொதுமடத்தில் கூடியிருந்தனர்.

“ஒங்க அய்யா,அழுறாரு” – கண்ணீர் பிதுங்க மலைத்த அய்யாவின் கோலத்தை சின்னப்பன் சுட்டிக் காட்டினான். அவனுடைய தொனியில் கேலிமின்னியது. அய்யாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “என்ன சொல்றே,பாலையா” என்று கிஸ்திபோட வந்த ஊர்க்கார பெரிசுகள் கேட்டார்கள். கிடுக்கிப் பிடி தப்பிக்க முடியாததாக இருந்தபோது, “ஒருவாரத்தில் கொடுக்கிறேன்யா” என்று எழுதிக் கொடுப்பதாகச் சொன்னார் அய்யா. “அது நாக்கு வழிக்கவா” பட்டென்று வில்லுத்தெறித்தது போல் பேசினார்கள் அதிகாரிகள். கட்டவேண்டிய தீர்வை, மாடு வாங்க வாங்கிய ’சொசைட்டி’ கடன் என்று மாடுகள் விற்றானது.

மாடுகள் போன கவலையில் மறுகி சட்டடியாய்ப் படுத்தார். உனக்கு விதிச்சது அவ்வளவுதான்; உன்னோடு வாழ்ந்தது போதும் என்று உயிர் அவரிடமிருந்து நடந்துவிட்டது.

சிறு பையனாயிருந்த போது நடந்தவை நினைவுகளில் மிதந்து இந்த ரயில் பயணத்தில் காட்சிப் படமாகின.

விவசாயத்தை தனி ஆளாய் கட்டி இழுத்துக் கொண்டு கடன் புற்று வளர்ந்து, உள்ளிருந்த பாம்பு அழகர்சாமி வாழ்வைத் தீண்டிவிட்டது. மணிமுத்துவோட வாழ்க்கையும், எதிரில் அமர்ந்து பயணிக்கும் விவசாயிகளின் வாழ்வும் அந்தப் பாம்பின் தொடர்ச்சி தான். பாம்புகள் ஒன்னாகக் கூடி படையெடுத்து டெல்லி நோக்கி விரட்டுகின்றன.

“நாளைக்கு சூரியோதயம் உண்டென்றால், அதற்குள் நான் போய்விட வேண்டும்” ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருந்தான் அழகர்சாமி. மணிமுத்துக்கு அது தெரியாது.

3

நல்லம்மா தலையை ஆட்டி மறுத்தாள்

“எதுக்கு அங்க டெல்லி பட்டணத்துக்கு. எந்தலை இந்த மண்ணுக்குள்ளயே முடியட்டும்”

பராமரிக்க வேண்டிய நாலைந்து ஜீவராசிகளும் வீட்டில் உண்டு. ஒரு பசு, கன்னுக் குட்டி, ஐந்து ஆடுகள். அவைகள் குடிக்கவும் சேர்த்து காசு கொடுத்து தண்ணீர் வாங்கினார்கள்.

“ஒவ்வொன்னாக் கழிச்சாச்சி. இந்த ஜீவன்களையும் கழிச்சிட்டு, கையில கிடைக்கிறதை எடுத்துக் கிட்டு ரெண்டு பேரும் டெல்லி போய் வருவோம்” என்றார் மணிமுத்து.

”நல்லா இருக்கா, நீங்க சொல்றது” என்று அவர் முகத்தைப் பார்த்தாள். சொன்ன மனுசனைத் தேடினால் ஆள் இல்லை. மெகால் பிடித்தவர் போல், எங்கோ வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தார்.
இருக்கிற வாயில்லாச் சீவன்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி யார்ட்டயாவது கேட்டுப்பாப்பமே என்றதற்கு, நல்லம்மா “அட ராம, ராம” என்றாள் தலையில் கைவைத்து.

”நாம டெல்லி போக, அவங்க இந்த ஜீவன்களப் பாத்துக்கீற. மத்தவங்க நம்ம வெச்ச ஆளா?” எதிர்க்கேள்வி வைத்தாள்.

மணிமுத்து சொல்வார். “இங்ஙன சாகிறதை அங்ஙன போய்ச் சாவமே”.

மூன்று திசையும் கரிசல் மண்; தென்திசையில் பனைவிடலி செறிந்த மணல் தேரி. கரிசல் சமவெளியிலிருந்து காணுகையில் பனை விடலிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தேரிமேடு தெரியும். கீகாற்றுக்கு பனைவிடலிகள் கூக்குரலிடுகிற போது தேரி மேடு ஆடுவது போலிருந்தது. ஊரிலிருந்து ஒரு கீ.மீ.தொலைவுள்ள தேரிக்காட்டில் குடிக்க நன்னீர் கிடைத்தது. தலையில் கொதி மணலை சுமந்துகொண்டு கீழே தன் சனத்துக்கான குளுந்த தண்ணீர் மடியை வைத்திருந்தது.

ஊரைக் கையில் வைத்திருந்த சாதிகளுக்கு தேரியில் பொதுக்கிணறு. மற்ற சாதிகளுக்கு தனித் தனீ சமுதாயக் கிணறு. பொதுக் கிணற்றில் முதலில் சுரப்பு மட்டுப்பட்டது. உயர்சாதிகள் பொதுக்கிணறு கடந்து சமுதாயக் கிணறுகள் பக்கம் கால்வைக்கவில்லை. தேரிமேட்டில் ஆழ்துளைக் கிணறு போட்டு மேநிலைத் தொட்டி கட்டி, தெருவுக்கு தெரு சிண்டெக்ஸ் தொட்டிவைத்து தண்ணீர் வழங்கல் ஆரம்பமானது; ஊராட்சி வளர்ச்சி நிதியில் கட்டியதால் மற்ற சாதிகளின் வளைவுகளுக்கும் பகிர்ந்தார்கள். அவர்களாய்ப் பார்த்துக் கொடுத்ததில்லை; கொடுக்காவிட்டால் சண்டைவருமே என்று பயந்து கொடுத்தது. தொடக்கத்தில் அன்றாடம், அடுத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள், பிறகு வாரம் இருமுறை, ஒரு முறையாகி இப்போது அதுவும் இல்லை.

இருபது முப்பது கீ.மீ சுற்று வட்டாரத்தில் ஆழ்துளைக் கிணறு போட்டு உறிஞ்சி எடுக்கிறான் ‘வாட்டர் டேங்கர்’ லாரிக்காரன். தாவு (பள்ளம்) கண்ட இடம் நோக்கி ஓடுவது தண்ணீரின் பிறவிக் குணம். பள்ளம் நோக்கிப் பாய்தல் நிலத்தின் மேல் மட்டும் நடப்பதில்லை. நிலத்தடியின் கீழுள்ள நீரோட்டத்திலும் நடக்கிறது. ஒரு லாரித் தண்ணீர் ரூபாய் ஐயாயிரத்துக்கு நகரத்துக்குப் போகிறது. தண்ணீர் உறிஞ்சி எடுக்க எடுக்க, இங்க இருந்த தண்ணீர் அங்கே தண்ணீர் வியாபாரிக்கு ஐயாயிரமாய், பத்தாயிரமாய், லட்சமாய் ஓடிச்சேர்கிறது. வட்டாரமெங்கும் தேங்கியிருந்த குடிநீர் தண்ணீர் வியாபாரிகளின் பாக்கெட்டில் போய்ப் பாய்ந்த கதை இங்கே மட்டுமா, தமிழ்நாடு முழுக்க நடந்தது.

மழை முகம் தென்படாத அந்த பூமியில் நாலைந்து வருசங்களுக்கு இங்கிட்டுத் தான், ஒரு வித்தியாசமான காட்சி தென்பட ஆரம்பித்தது. மனுச உயிர்களே கதியென வீட்டுக்குள் வாழ்ந்த கால் நடைகளைக் கழித்த பின், வெற்றிடமான தொழுவத்தை சமன் செய்து சிமிண்ட் தரை இட்டார் மணிமுத்து: நான்கு தூண்கள் எழுப்பி, மேலே தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டது. குடிக்கவும், குளிக்கவும், சோறு, கறி ஆக்கவும், கூடவே ஒரு பசு, நாலைந்து ஆடுகள் குடிக்கவும் நன்னீர் பயன்பட்டது. ஒரு தொட்டித் தண்ணீர் ஆயிரம் ரூபாய்.

இந்த வறட்சியைத் தாண்டிவிட்டால் போதும்: அடுத்த வருசம் மழை சக்கைப் போடு போடும் என்ற சம்சாரி நம்பிக்கை அவரிடமும் கிடந்து சீழ்ப்பட்டது.

நல்லம்மாவை ஆதாரவான பெண் என்று சொல்லலாம். விவசாயிகள் போராட்டத்துக்கு டெல்லி போக முடிவெடுத்து “நீயும் வா, ரெண்டு பேரும் போய் வருவோம்” என்று சொன்ன போது, “நீங்க என்ன பேசறீங்க” என்று லேசாய்த் தட்டிவிட்டு விட்டாள். அன்பான மனைவி தட்டிப் பேசியது அது தான் முதல்.

டெல்லி இப்படி எட்டாக் கையாக இருக்கும் என்று மணிமுத்து நினைத்துப் பார்க்க வில்லை. வடமேற்கிலிருந்து மொகலாயர் வந்து குதித்த போது, அவனுக்கு உட்காரச் செய்ய, வரப் போக வாய்ப்பாக அமைந்தது டெல்லி. அவன் நில வழி வந்தவன்; நீர்வழி வந்து சென்னையைத் தலைநகராக்கிய கிழக்கிந்தியக் கம்பனிக்காரர்கள் என்ற இந்த விருதாப்பயல்களும் ஏன் டெல்லியை தலைநகராக்கினார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. தென்கோடியிலிருந்து கண்ணுக்கும் எட்டாத தொலைவு; குத்துக்கல்லும் தாங்க முடியாத குளிர்; வெட்டரிவாளும் தாங்க முடியாத வெயில். மனுசப் பிறவிகள் வாழ்த் தகுதியில்லா இப்படியொரு சபிக்கப்பட்ட பிரதேசத்தில் ஏன் தலைநகரை வைத்தார்கள்.

“எப்படி, இங்ஙன கொண்டு போய் தலைநகரத்தை வச்சான்” – ஆச்சரியமாய் அலைபேசியில் கேட்டார் மணிமுத்து. இந்தப் பெண் பிள்ளை என்ன பதில் வைத்திருந்தது? ஒரு மறுமொழி இல்லை.

வெப்பமும் குளிருமாய் இருமுனைகளின் நரகமாக இருந்த டெல்லியில் ‘ஜந்தர் மந்தர்’ பகுதியில் போராடத் திரண்டபோது ஒரு உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது. அரசியல் சாதுரியங்களிலும் சாகஸங்களிலிலும் பழந்தின்று கொட்டை போட்ட வௌவால்கள் டெல்லியில் தொங்கிக் கொண்டிருந்தன; முந்தின கைக்கு மந்திரவாள் பெற அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆட்சி என்னும் மந்திரவாள் கிடைத்துவிட்டால் பிறகு எல்லாம் அற்புதம் தான்.

சும்மா பாவலாவுக்குக் கூட ஒரு மத்திய அமைச்சரும் வந்து விசாரிக்கவில்லை. நம்மைக்கேட்டுக் கொண்டா விவசாயி இங்க போராட வந்தான் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலில் இருந்தார்கள். மறுநாள் மண்டை ஓடுகள் ஏந்தி விவசாயிகள் பரபரப்பைத் தந்தார்கள். யாருடைய மண்டை ஓடுகள் அவை? “உழுதவன் கணக்குப் பாத்தா உழக்கும் மிஞ்சாது” என்ற சொலவத்திலிருந்து உதித்த மண்டை ஓடுகள்; இதுமாதிரிச் சொலவமெல்லாம் அத்துப்படியாய் அறிவார்கள் என்ற போதும், எட்டாத தூரத்திலிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்திருந்து உட்கார்ந்து நீங்கினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஓரொரு முறையில் போராட்டத்தை முன்னெடுப்பாகத் தெரிவித்தார் மணிமுத்து. இடைக்கிடையே இதையும் பேசினார். “இங்கே ராசலட்சுமியம்மா, ராசம்மா, நாச்சம்மா, செல்லம்மான்னு நாலு பேர் வந்திருக்காங்க. நீயும் வந்திருக்கணும் நல்லம்மா” புலம்பினார். ம், ம் என்று கேட்டுக் கொண்டிருப்பதினும், வேறென்ன? அந்த மனுசன் அங்கயாவது நிம்மதியா இருக்கட்டும் என்று எதுவும் பேசாமல் மனசை உள்ளிழுத்துக் கொண்டாள். இங்கிருந்து இனிதாய் ஒரு சேதியையும் கைபேசி கடத்தவில்லை.

தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. அவர் இருந்த போது வாங்கியது. டேங்கர் லாரிக்காரன் சட்டை செய்யவில்லை. நேரில் போய்வர மூன்றும் மூன்றும் ஆறு கி.மீ ஆளை நேரில் கண்டு பேசினால் மனசிளகாதா என அங்கும் போனாள்.

”தொண்டை வறண்டால், நாக்கு இழுத்துப் பிடிச்சி, விழிகள உருட்டி உருட்டி மனுசர்களைப் பார்க்கும் வாயில்லாச் சீவன்களய்யா. செத்துப் போகுமய்யா”

சொன்னவளை ஏறிட்டுப் பார்த்தான் தண்ணீர் லாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தவன். சொல்றதுக்கு ஒங்களுக்கு மட்டும் தான் வாயிருக்கா என்பது போல் பார்த்தான். “தண்ணி வாங்க மட்டும் தெறிஞ்சதில்ல. மீதியை வைங்க அனுப்பறேன்” தண்ணீர் வியாபாரி பேசினான். அவர் போராட டெல்லி போயிருக்கிற கதை தான் அவள் சொல்ல மீதி இருந்தது.

பொழுதடைய வீடு வந்து சேர்ந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். எதற்கும் கலங்கியதில்லை அவள். கலங்காமல் கெதியாய் நடந்த அவள் பின்னாலேயே கால்வைத்து 30 வருசமாய் அவர் வந்திருக்கிறார்.

4

டெல்லிப் பட்டண வீதியில் வருவோர் போவோரிடம் கோவணத்துடன் கையில் சட்டி ஏந்தி பிச்சை கேட்டார்கள். வரிசையாய், கை பாக இடைவெளிவிட்டு பெரிய நீண்ட சாலையில் அணிவகுத்து நின்றார்கள். யார் இவர்கள்? டெல்லிவாசிகள் புரியாது பார்த்தார்கள் - இவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. பிச்சைக்காரர்களிடம் ஒழுங்கு இருப்பதில்லை: இவை பிச்சைக்கார முகங்கள் இல்லை. மதிப்பானவை; தன்மையானவை;நாகரீகம் கொண்டவை; ஒருதுளி இரத்தல் தன்மையும் வெளிப்படா முகங்கள். அரைநிர்வாணிகளாய் பிச்சையெடுப்பது கண்டு டெல்லிவாசிகள் துணுக்குற்றார்கள்: வரிசையாய் அணிவகுத்த புத்தர்களை டெல்லிமக்கள் கண்டனர்.

பூபாகத்தில் எந்தப் பிரதேசத்தில் வாழும் மனித ஜீவனுக்கும் இரக்ககுணம் இயல்பான கசிவு. உதவவேண்டும் என்ற கருணை மீதூற, கைப்பையைத் திறந்து பணம் எடுத்து ஏந்திய சட்டிகளில் டெல்லிவாசிகள் இட்டபோது, விவசாயிகள் வேண்டாம் என்றார்கள். “உங்கள் மனப் பையைத் திறப்பதற்காக நாங்கள் கையேந்தி நின்றோம். அது நிகழ்ந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி”

புத்தர் ஒருநாள் மண்டை ஓடுகளைக் சுமந்து நின்றார். கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டியவாறு புத்தர் ஒரு நாள். எலிக்கறி சாப்பிட எங்களைத் தள்ளிவிட்டார்கள் என்று எலியை வாயில் கவ்விய புத்தர் ஒருநாள். அரை மொட்டை, அரை மீசையோடு புத்தர் ஒருநாள்.

பனியிலும் பட்டினியிலும் புத்த பெருமான்கள் ஒவ்வொரு நாளும் நடத்தும் வித்தியாசம் வித்தியாசமான போராட்டங்களை நூதனமான போராட்டங்கள் என்று படம் பிடித்தன செய்தித்தாள்கள். மொகலாயர் போலவோ, பிரிட்டீஷ்காரன் போலவோ டெல்லிப் பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு புத்தர்கள் ஜந்தர் மந்தருக்கு வரவில்லை. புத்தர்களுக்கு படையெடுப்பு நடத்தத் தெரியாது.

அரையில் கோவணத்துணியும் தலையில் துண்டுக் கட்டுமாய் அரை நிர்வாணக் கோலத்துடன், தீர்வு கிடைச்சாத்தான் ஊருக்குப் போவோம் என்று நிலையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

நல்லம்மா அசைந்தாள். அழுகையை வாய்க்குள் அதக்கிக் கொண்டு “எங்க ஐயாவை திருப்பிக் கொடுத்திருங்கய்யா” என்று விக்கினாள். டெல்லியில் அவர் போய்நின்ற நாட்களில் நல்லம்மா வாழ்க்கையில் கடக்க முடியாத தூரத்தைக் கடந்து வந்திருந்தாள். தூரத்தைக் கடக்க முயற்சி செய்து பார்த்தாள், முடியவில்லை.

5

மணிமுத்து காரிலிருந்து தெரு முனையில் இறங்கினார். பந்தல் போடப்பட்டிருந்த மூன்றாவது வீட்டு முற்றத்துக்கு தவழ்ந்து போவது போல் வந்தார். அவர் வீடு அது.

“பக்கம் தான், வாங்க”– கைத்தாங்கலாக கூட்டிப் போனார்கள். குளிரூட்டிய பெட்டியில் மல்லாக்கப் படுத்து நித்திரை போய்க் கொண்டிருந்தாள் நல்லம்மா.

“எம் பொன்னு, போயிட்டீகளா? நா வந்துர்றேன்னு சொன்னனே, தாயீ, அதுக்குள்ள புறப்பிட்டீகளே”

கூட்டம் அழுகையில் விம்மித் திணறியது.

குளிர்பெட்டியைத் திறக்குமாறு சொன்னார். வேண்டாம் என்று மகன் தடுத்தான். “ஏற்கனவே ரெண்டு நாளாச்சு. வெல்வெலன்னு ஆயிரும்பா”

“அவ கிட்ட நா கொஞ்சம் பேசணும்” என்றார் கண்ணீர் தத்தளிக்க.

பெட்டி திறக்கப்பட்டது. முகம் தடவினார். தன் முகத்தோடு சேர்த்து வைத்தார். கன்னத்தில், நெற்றியில் அழுத்தமாக முகம் பதித்துத் தேய்த்தார்.

“நா ஒங்க கிட்ட என்ன சொல்லீட்டுப் போனேன். அஞ்சு பத்து நாள் - அவ்வளவுக்குள்ள போராட்டம் முடிஞ்சிரும்னு வாக்குக் கொடுத்திட்டு தான போனன். இப்படிப் பண்ணீட்டீகளே, தாயி”

முடிவுறாப் பயணத்தில் போய்க்கொண்டிருந்த அவருடைய கதறல் தொடர்ந்தது.

வீட்டின் ஒதுக்குப் புறத்தில் கட்டிய ஆடு, மாடு, கன்னு ஜீவன்கள் மேல் பார்வை ஓடியது. வாயில்லாச் சீவன்களுக்கு தண்ணி இல்லேன்னா, செத்திரும்யா, செத்திரும்யான்னு கைபேசியில் அரற்றிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் தான் தலைக்கிறு கிறுப்பு எடுத்து நல்லம்மா மடாலெனச் சாய்ந்தாள். ‘டக்’ கென்று தலை தரையில் அடிபட்ட சத்தம். விழித்தபடியே விழிகள் நிலைத்து விட்டன.

“எவ்வளவோ நல்லதெல்லாம் நடக்கப் போகுதுன்னு மறிச்சு மறிச்சு சொன்னேன். நல்லதெல்லாம் வர இருந்தது, பாதகத்தி பாக்கக் கொடுத்து வைக்கலியே ”

அவரின் நைந்த தொண்டைக் குழியிலிருந்து புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது.

டெல்லியில் அவர் இருந்த நாட்களில் அருகில் ஒரு குரல் கேட்டது

“விவசாய மக்களே, எல்லாமும் நடக்கும்; ராமர் நம் தெய்வம்! அயோத்தி நம் கோயில்!”

காவித்துணி போர்த்திய பெண் அமைச்சரின் ஆவேசப் பேச்சு வந்து கொண்டிருந்தது. அவர் தூக்குமேடை நிழலின் கீழ் தயாராக நின்று கொண்டிருக்கிறார்.

“அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பியே ஆக வேண்டும். சிறைசெல்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன். தூக்குத் தண்டனை விதித்தாலும் தாராளமாக ஏற்றுக் கொள்வேன்”

பிரதமர் அலுவலக அதிகாரி பிரதமருக்காக மனு வாங்கிக் கொண்டார். யார் யாருக்கோ பிரதமர்; அவர்களுக்கு இல்லை. அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விவசாயிகள் நிர்வாணமாகி டெல்லி வீதியில் ஓடினார்கள்.

உழுது, விதைத்து, பயிரிட்டு, கதிரறுத்து, மகசூல் பெருக்கி மாடு, கன்று, ஆடுகள் என ஜீவராசிகளையும் பராமரித்து அண்ட சராசரம் அனைத்தையும் காக்கும் விவசாயிகளோடு புத்தர் பெருமான் நிர்வாணமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ