பா.செயப்பிரகாசத்தின் கதைகள் - துவாரகா சாமிநாதன்


இது தோழர் பா.செயப்பிரகாசம் கதைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை காணும் ஆய்வுக் கட்டுரை. தோழர் பா.செ-யின் கதைகளில் 1970-ல் எழுத்தப்பட்ட முதல் தொகுப்பான ஒரு “ஜெருசலேத்தையும்”, 2010ல் தொகுக்கப்பட்ட ”இலக்கிய வாதியின் மரணத்தையும்” இவ்வாய்விற்கான கதைகளாக எடுத்து எழுதுகிறேன். தஞ்சை இலக்கிய வட்டம் நடத்தும் படைப்பிலக்கிய விழாவிற்காக ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதக் கேட்டதால் இவ்விரிவான கட்டுரை எழுத நேரிட்டது. 
இத் தொகுப்புகளிலுள்ள  கால மாற்றத்தின் கோலங்களையும் கதைக் கருவில் ஏறபட்டுள்ள மாற்றங்களையும் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாக கொள்ளலாம். அவர் எழுதியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் 1970-ன் தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று கதைகளையும், 2010-ன் தொகுப்பில் மொத்தம் எட்டுக் கதைகளையும் உள்ளடக்கியது இக்கட்டுரை.

தோழர் பா.செயப்பிரகாசத்தை 2010 வாக்கில் தஞ்சை தமிழ் வெளி அமைப்பு (தற்போது தஞ்சை இலக்கிய வட்டமாக செயல்படுகிறது) நடத்திய ”முள்ளிவாய்க்கால் ஈழப்போரின் நினைவுகளும் அழிவுகளும்” என்ற கூட்டத்தில் வைத்துத்தான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போதிருந்து அவர் எங்களுக்கு ஜே.பி.யானார். பழகுவதற்கு எளிய மனிதர். எண்பது வாக்கில் மனஓசை மற்றும் தாமரையில் தான் நிறையக் கதைகளை எழுதியுள்ளார். ஆனால் மனஓசை எழுத்துக்களில் பழைய படைப்புக்களிலிருந்து மாறி புதிய எழுத்துக்களை வந்தடைந்தார். மொத்தம் 21 கதைகளில் குறிப்பிடும்படியான கதைகளாக ஒரு ஜெருசலேம், அம்பலகாரர் வீடு, மூன்றாம் பிறையின் மரணம், உள் நெருப்பு, களைகளின் நிலம் இப்படி சொல்லும்படியான எல்லாக் கதைகளும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலை சித்தரிக்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன. கரிசல் மண்ணின் வாசம் வீசும் கதைகள், தோழர் கி.ரா எழுதாமல் விட்ட கதைகள், அவரால் எழுத முடியாமல் போன கதைகள், அவரே பொறாமை கொள்ளும் கதைகளென விரிகின்றன.

ஒரு கதை சொல்லி இருக்கும் காலத்திலேயே அவரது கதைகள் முழுதும் தொகுப்பாக வந்துள்ளமை அவரின் விடாது இயங்கும் வல்லமையையும் தன்மையயும் வெளிபடுத்திக் காட்டுகிறது.முக்கால் வாசி எழுத்தாளர்கள் எழுதிப் பெயர் வாங்கிவிட்ட பின் - அவர்களின் எழுத்தில் சில பின்னடைவுகள், கொள்கை மாற்றங்கள் என மாறிவிடுவார்கள் அதுபோல் இல்லாமல் ஜே.பி தான் வகுத்துக் கொண்ட பாதையில், கொள்கையில் எங்கும் எப்போதும் விலகாமல் ஓரே நேர் கோட்டில் பயணித்துள்ளார். எப்படி ஒரு படைப்பிலக்கிய எழுத்தாளனால் இவ்வளவு உறுதியாக தான் மேற்கொண்டுள்ள கொள்கையில் வழுவாது வந்திருக்க முடியுமென ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். இவரது கதைகள் அனைத்தும் பேராசிரியர் க.பஞ்சாங்கம் சொல்வது போல் பாதிக்க பட்டவர்களின் பக்கமே நிற்கும் கதைகளாக இருக்கின்றன.

கரிசல் காட்டு இலக்கியம் அதனைத் தொட்டுத் தொடங்கிய கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தொடர்ந்து பூமணி, ஜே.பியில் விரிந்து, பின்னால் இன்றைக்கு எழுதும் இளைய எழுத்தாளர்களில் முடிவடைகின்றது. ஜே.பி மட்டும் தொடர்ந்து இன்றும் தனது பாணியில் மாறாமல் தனது முதல் கதையான குற்றத்திலிருந்து அடுத்து எழுதிய நிறைய கதைகளில் தன் நிலம் சார்ந்தும், விவசாயம் சார்ந்தும், கரிசல் மண சார்ந்தும் மட்டுமே எழுதி வந்துள்ளார். நல்ல கதை சொல்லியாக, சிறுகதையின் இலக்கணத்தின் படி கதை மாந்தரின் வழி அவர்களின் வாழ்வியல் குறித்தும், அன்றாட வாழ்வின் யதார்த்தச் சூழலையும் சேர்த்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

”பா.செயப்பிரகாசம் கதைகள்” என்னும் தலைப்பிட்டு வெளியான அவரது அனைத்துக் கதைகள்.

தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது   இவ்வாறு கூறுகிறார் ”ஜே.பி ஒரு தத்துவச் சார்பாளர், ஊசலாட்டம் அற்ற திடமான வர்க்கப் பார்வையாளர், ஒரு இயங்கியல்வாதி, பாசாங்கற்ற கதைகளைப் படைப்பவர்”.

இந்த கூற்றுக்களை அவரின் கதைகளின் வழி நாம் புரிந்துகொள்ள முடியும்.

இவரது கதைகளில் பொருள் வறுமை, அறிவு வறுமையென இரண்டைக் குறித்துமே பேசிச் செல்கிறார். எழுபதுகளில் எழுதியவற்றிலும் சரி, 2010ல் எழுதியவற்றிலும் சரி, இரு எதிரெதிர் பண்புகளையும் சரியாக, காட்டமாக வாசகனுக்கு உரைக்கும் வண்ணம் எடுத்து இயம்பியுள்ளார். பிரச்சாரமற்ற கதைகளின் வாயிலாக எவ்வகையான வாழ்வியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்திவிடுகிறார். தலித்திய இலக்கியம் வரும் முன்னரே தலித் இலக்கியம் படைத்தவர் இவர். 2010-ன் கதைகளில் சிலவற்றில் கட்டுரை வாசமடிக்கிறது. சிலவற்றை சொல்லியாக வேண்டும் என்று வலிந்து எழுதியது போல் உள்ளது.

ஜே.பியின் கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பாட்டாளிகளாக இருப்பது ஒரு சிறப்பு. குற்றம் கதை இவரின் முதல் கதையாக இருந்தாலும், தொகுப்பில் முதலிடமான கதை ’ஒரு ஜெருசலேம்.’  குழந்தைகளிடம் வெளிப்படும் தாய்ப் பாசத்தையும் அதனை ஒட்டி வெளிப்படும் இடத்திற்கான உரிமைப் போராட்டமும் சண்டையும் சொல்லப்பட்டி ருக்கும் விதத்தில் நமக்கு காஸ்மீர், கச்சத்தீவு, பாலஸ்தீனம், முள்ளிவாய்க்கால் என எல்லா உரிமைப் போராட்டங்களையும், எல்லை மற்றும் இடப் பிரச்சனைகளையும் நினைவுபடுத்துகிறது.

கறுத்த சொப்னம் கதையில் வரும் ராமலெட்சுமியின் அவல நிலை - 1970 காலங்களில் குடும்பங்களில் குடிகொண்டிருந்த ஏழ்மைக்கு ஒரு உதாரணம். ஆலைத்தொழிலாளியான அவள் வெறும் 300 ரூபாய் பணத்திற்காக குழந்தை பெற்றெடுக்க துணிவதும், அந்த பணமும் கிடைக்காமல் போகும் நிலையில் அவர்கள் படும் வேதனையும் மிக நேர்த்தியாக கதையை நகர்த்திச் சென்று, கடைசியில் நம் மனத்தை அதிர வைத்துள்ள லாவகம் அவருக்கே உரிய பாணி.

’பலிப் பூக்கள்’ கதையில் வரும் வர்க்க பேதங்கள், அதனால் வரும் அடக்கு முறைகள், பலியாடுகளாக, பலிப் பூக்களாக ஏழைத் தொழிலாளியும் அவன் குடும்பமும் படும்பாட்டை விவரிக்கின்றன. கடைசியில் இக்கதையில் பலியாவது ஒரு பெண். குடும்பத்திற்குள் நிகழும் அனைத்து வன்முறையிலும் பெண்ணே பலியாவதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் மாறாத விதி.

அம்பலகாரர் வீடு கதையில் வாழ்ந்து செழித்த குடும்பத்தில் நடக்கும் விபசாரத்தை அப்போதே மிக நாசூக்காக சொல்லியுள்ள விதம் அருமை. அதுவும் ஒரு பாட்டாளியின் பார்வையிலிருந்து சொன்னதுதான் கதைக்கு முத்தாய்ப்பு.

ஆறு நரகங்கள் கதையில் இப்படிக் கூறியிருப்பார் "ஒரு நடுத்தர வர்க்க அரசு ஊழியனுக்கு அவனுடைய பிறந்த நாள் ஞாபகத்தில் இருக்காவிட்டாலும் மேலதிகாரியின் பிறந்த நாள் கட்டாயம் நினைவில் இருக்க வேண்டும்". மிக அப்பட்டமாக அரசு அலுவகங்களில் நடக்கும் துயரங்களயும், தொழிலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நடக்கும் திண்டாட்டத்தையும் காட்டியிருப்பார்.

கிராமத்தினை, வயல் வெளிகளை விவரிக்கும் தொனி மிக அருமை. அவைகளை நம் கண் முன் விரித்துக் காட்டுகிறார். அதுவும் கரிசல் மண் சார்ந்த வர்ணனையில் மனதில் நிற்கிறார். அவரின் புதிய புதிய சொல்லாடல்கள் மூலம் அம்மண்ணை, மண்ணின் வேரை நம் மனதில் பதிய வைக்கிறார். இருளின் புத்திரிகள் கதையில் "அந்தி சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஒளிப்புள்ளிகள் சிந்தி கோலமிட இரவு குனிந்து நின்றது" இந்த வரிகளில் கதையின் மொத்த உருவத்தையும், முழு ஓட்டத்தையும் விவரிக்கும் வரிகளாக அமைந்து, செயப்பிரகாசம் சூரியதீபனாக ஒளிர்ந்திருப்பார். மேலும் சில கவித்துவமான வரிகள்; "அந்த நிமிசத்தில் பிரசவமாகி, அங்கே வியாபித்து நிற்கும் சோகத்தில் அவளோடு அவனும் உருகி நின்றான்".

சில கதைகளில் சாதியின் பெயரை நேரடியாகவே பயன்படுத்தியுள்ளார் தற்போது அது சாத்தியப் படாது. எழுத்தாளர்களை அடிக்கும் காலமல்லவா இது!. அம்பலகாரர் வீடு, புஞ்சைப் பறவைகள், இருளின் புத்திரிகள் - இது போன்ற கதைகளில் வரும் பெண்கள் பெரும்பாலும் பரத்தையர்களாகவே உள்ளனர்.

‘மனிதனைத் தின்னும் சிங்கங்கள்’ ஊர் ஊருக்கு அலைகின்றன; அதுவும் தேர்தல் நேரத்தில் நிறைய நம்பிக்கை மனிதர்கள் இக்கதையில் வரும்’ ராமக்கட்டி’ போல் முளைத்து வருவார்கள் அவர்கள் தரும் வாக்குறுதிகள், அள்ளி வீசும் பொய்கள் மக்களை மிக நெருக்கமானவராக நம்பச் செய்து கட்சிகள் ஓட்டுக்களை பொறுக்கிக் கொள்கின்றன. வீதிக்கொரு ராமக்கட்டியும், சாதிக்கொரு ராமக்கட்டியும் கட்சிகளாலும் மக்களின் நம்பிக்கையாளும் சொந்த பந்த பாசங்களாலும் உருவாக்கப்பட்டு கட்சிக்கு ’லாபி’ செய்ய பணிக்கப்படுகிறார்கள். இப்படிபட்ட ராமக்கட்டிகளை, வடிவேலுவை பகடைக் காய்களாக, பலியாடுகளாக கட்சிகள் சரியாகப் பயன் படுத்திக்கொள்கின்றன. எந்த காலத்திற்கும் ஒத்து போகும் கதையாகவுள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஒருவர் இக்கதையை படிக்க நேர்ந்தாலும் இன்றைக்கும் இதுபோல் ராமகட்டிகள் இருப்பார்கள். இதுவே படைப்பிலக்கியத்தின் வெற்றி, அந்த வெற்றியை ஜேபி அவர்கள் மிக இலகுவாக பெற்று விடுகிறார். கட்சி என்ற நிறுவனத்திற்குள் செல்லும் அப்பாவிகள் அப்போதைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி விடுகிறார்கள் அவர்கள் அள்ளி வீசும் பொய் பித்தலாட்டங்களை நம்பி கைத்தட்டிக் கொண்டே யாருக்கோ ஓட்டையும் போட்டு விடுகிறார்கள் இது மாற்றப்படாத விதியாகிவிட்டது. ராமகட்டி போல், வடிவேல் போல், கருணாஸ் போல் இன்னும் எத்தனை பலியாடுகள் சிங்கங்களாக சோடிக்கப்பட்டு மனிதர்களைத் தின்ன வருமோ யார் கண்டார்.

தோழர் ஜேபியின்  கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதையென்பது எழுபதுகளில் அவர் எழுதிய ”வேரில்லா உயிர்கள்”. அனுபவிக்கும் வரை அனுபவித்து விட்டு ஆட்டம் முடிந்ததும் கண்டும் காணாது விடப்படும்” ரிக்கார்டு டான்ஸ்’ஆட்டகாரிகளைப் பற்றி எழுதியிருப்பார். விஜயா, சாரு என்ற ஆட்டக்காரிகளின் வாழ்வின் கையறு நிலையைப் மிக அருமையாகவும் மனதை பிசைய வைப்பதாகவும் சொல்லியிருப்பார். அப்போதிருந்து இப்போது வரை திருவிழாவில் ஆட்டம் போட பெண்களை முன்னிறுத்தி கொச்சையாக சித்தரித்து ரசிக்கும் உள்ளங்களை அப்பட்டமாக விவரித்திருப்பார். ”வயிறுகளை வைத்தே மனசுகள் நிர்ணயிக்கப்படுவதான வரிகள்” வாசகனை மூச்சு முட்டச் செய்வன. அவை வாசகனின் முகத்தில் அறைந்து நீ ரொம்ப யோக்கியமா? என்று கேள்வி கேட்கும் தார்க்குச்சிகள். ரிகார்ட் டான்ஸ் தடை செய்ய பட்ட காலத்தில் எழுதப்பட்ட கதையிது; அவ்வாறு தடை விதித்ததால் ஆடும் அவர்களின் கால்களில் வெந்நீர் ஊற்றி வேர்களை பட்டுப்போக செய்ததையும், அதனால் அவர்கள் மானத்தையும் சேர்த்து இழந்த அவலத்தையும், ஊசலாடும் அவர்களின் வாழ்வினையும் ஒளிவு மறைவின்றி எழுதிப் போவதில் ஜே.பி.க்கு நிகரில்லை. இக்கதையில் வரும் பொட்டணம் ஒரு அழகியல் படைப்பு. இவர் போன்று ஒரு லாட்ஜில், மக்கள் கூடிக் களிக்கும் இடங்களில், சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட ஒரு ஜீவனை நாமும் வாழ்வில் சந்தித்திருப்போம்; அவருக்கு பின்னான வாழ்வியல் வேதனையையும் இக்கதை பேசி செல்கின்றது. ஒரு குறுநாவலாக படைக்குமளவு கதைத்தளமிருந்துள்ளது, ஏன் ஜேபி விட்டு விட்டார் எனத் தெரியவில்லை; இனியும் காலமிருக்கிறது. இப்போதும் இதே அவலம் (இசைத்தட்டு நடனம்)  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியாக பெயர் மாற்றம் பெற்று நடந்தேறுகின்றன.

'மூன்றாம் பிறையின் மரணம்' ஒரு அழகியல் நிறைந்த கதை. நெல்லுச் சோறு, நிலா சோறு தின்பது, குழந்தையின் உலகத்திற்கே ஈர்த்துச் சென்று சமூகத்தை சாட்டையால் ஓங்கி அடித்து, கேளிவி கேக்க வைக்கும் கதை. இருக்கும் போது அழகர்சாமி என்ற குழந்தைக்கு கிடைக்காத நெல்லு சோற்றை,  இறந்த பின் அக்குழந்தையின் கைகளில் வைத்துப் புதைக்கும் இந்த கட்டி தட்டிப் போன மதத்தை சாடுகிறது. உலகத்தின் அறப் பண்புகளான இருப்பவன் இல்லாதவனுக்கு பகிர்ந்தளிக்கும் பண்புகள் அனைத்தையும் ஒரு சேரப் புதைத்து விட்டோம். நிசம் வேறு நிழல் வேறு தோன்றச் செய்யும் ஒரு படிமமாக அமைந்துள்ள கதை இது. அதே போல நிலாச் சோறு தின்னும் பழக்கமும் இன்றைய அவசர கால, அதி நவீன, நுகர்வுக் கலாச்சார உலகில் இல்லாமல் போனது வருத்தமே.

2010 கதைகள் பழைய நினைவுகளில் மிதந்து உருண்டு புரண்டு ஒரே ஏக்கமாய் வெளிப்படுகின்றன. அவரது பால்ய காலக் கரிசல் காடு - நினைவுகள் முட்ட முட்ட அவரது கவிதை மடியில் பால் சுரக்கிறது நெஞ்சு லேசாகி கவித்துவம் பொங்கி பிரவாகமெடுக்கிறது. கரிசல் காட்டை உயிரை விட மேலாக நேசித்துள்ளார். அதுவும் கம்மங்காட்டில் களையெடுக்கும் பெண்களை உள்ளூர நேசித்து, உணர்ந்து, அவர்களைப் பற்றி நிறைய கதைகளில் விவரிக்கிறார். 'களைகளின் நிலம்' நிலத்தை, வாழ்ந்த ஊரைப் பிரிய முடியாமல் பைத்தியமாகி விடைபெற்றுப் போகும் ஒரு முதியவரின் வலியை உணர்த்திச் செல்லும் கதை. கிராமங்களும் நகரமாகிப் போய் நரக வேதனையளிக்கும் அவலங்களை, வளர்ச்சியின் சீல் பிடித்து போன மாற்றத்தை குத்திக் கிழித்து ரணமாக்கி நம் நெஞ்சத்தை. இழப்புகளின் வலியை பிழிந்து சாறாக்கி படைக்கிறது இக்கதை. கதையெங்கும் ஏக்கங்களாய் கரிசல் கதைகளை, வேதனைகளை, இழப்புகளை பேசி விரிகின்றது. நிலம் வைத்து விவசாயம் செய்தவன் கையில் இந்த உலகமயமாக்கலின் வளர்ச்சி,  திருவோட்டைத்தான் தந்து மகிழ்கிறது. ஒளிர்கிறது நாடு; ஆனால் மனிதம் பிச்சையெடுக்கிறது இல்லையேல் பைத்தியமாய் அலைகிறது.

கதைக்குள் மிகவும் லாவகமாக வாசகனை இழுத்துச்சென்று அவனுக்கு வலிக்காமல் ஊசி போட்டு அவனது மன நோயை தீர்த்து வைக்கிறார். கதைமாந்தர்களைக் கையாளும் விதம் அருமை. கதை படித்து முடித்து பல நாட்கள் ஆனாலும், கதை சொன்ன மாந்தரை நம்மால் மறக்க முடியாமல் செய்கிறார் ஜே.பி. மல்லம்மா என்றொரு பெண் பாத்திரம் அதிக கதைகளில் வரும் மறக்க முடியாத பாத்திரம். மல்லம்மா கம்மங்காட்டில் வேலை செய்யும் அழகை மிக அழகாக வர்ணிப்பார். அது போல பொட்டணம், ஜப்பான், வயிறுதள்ளி, கூழ்ப்பானை என மிகவும் வித்தியாசமான பெயர்களை தனது கதை மாந்தர்களுக்கு சூட்டியிருப்பார். கிராமத்திற்கென்றே உரிய விநோதப் பெயர்களையும் விநோத மனிதர்களையும் கையாண்டுள்ளார். வண்டிப் பாதையை கால்கள் கொப்புளிக்க கடந்த அனுபவத்தை பதிந்துள்ளளார்.

2010 - கதைகளில் ’உள் நெருப்பு’ கதை வயதானவர்களின் காமத்தையும் அதனால் அவர்கள் படும் அவமானங்களையும் அழகியலோடும் நையாண்டியோடும் சொல்லும் கதை. கிராமத்தில் கரகாட்டம் பார்க்க முக்காடு போட்டு வரும் பெரிசுகளையும், வெட்கி ஓரமாகத் தலை குனிந்து 11மணி காலைக்காட்சி நீலப்படம் பார்க்க வரும் பெரியவர்களைப் பற்றியதானவும் கதை இது. மனிதனுக்கு எத்தனை வயதானாலும் காமம் மட்டும் உள் நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கும் அப்படி ஒருவரான அப்பண்ணா மாமாவைப்பற்றியதுதான் இந்த கதை. கிராமத்தில் இது போன்ற பெரிசுகள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கொண்டோ வயல்வெளியில் நின்று கொண்டோ காமச் சிலேடைகள் பேசியும் போய்வருகிற பெண்களைக் கிண்டல் செய்தும் தனது உள் நெருப்பை அணைக்க கொட்டடப்படும் நீர்த்திவளைகளாக தங்களது ஏளனப் பேச்சை அமைத்து கொள்வார்கள் .அப்படியும் அடங்காத உள் நெருப்பை தூபமிட்டு வளர்க்கவோ அணைக்கவோ முடியாமல் அவர்கள் செல்வதுதான் கிளுகிளுப்பான ஆட்டம். என்னதான் செய்வது? அவர்களும் மனுசப் பயல்கள்தானே.

’இலக்கிய வாதியின் மரணம்’ கதையில் மிக இலகுவாக போகிற போக்கில் மரத்தின் மரணம் பற்றியும், ஒரு இலக்கியவாதியின் மரணம் பற்றியும் இரு சரடாக சொல்லிச் செல்கிறார். இலக்கியத்தை காசு பண்ற வேலையாக பார்ப்பவர்களை மிக மென்மையாக சாடுகிறார். எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் ஒரு வித மெளனம் நிறைந்த பார்வையைச் சுமந்து தருகிறது இக்கதை.

1970லிருந்து 2010 வரை விரியும் எல்லாக் கதைகளிலும் மாந்தர்கள் மாறவில்லை, மண் மாறவில்லை, தொனி மாறவில்லை, கவித்துவம் மாறவில்லை. ஆனால் கதை சொல்லும் விதம் மாறியுள்ளது. இவரது எல்லாக் கதைகளிலும் ஒரு மெளனமும், வீணை நரம்பைத் தூண்டி விட்டது போல் வரும் ஒரு அதிர்வலைகளும் இரண்டு கால கட்டங்களிலும் ஓரே மாதிரி வீரியமிக்கதாய் உள்ளன.ஆனால் கதைக் கருவில் மாற்றமுள்ளது.

கயத்தாறு புளியமரம் கதைக்கு மூடநம்பிக்கை என்றே பெயர் வைத்து இருக்கலாம். கதையில் சிறு தொய்வுள்ளது, காலத்தின் மாற்றமது. திராவிட கட்சிகளில் இன்று நிலவும் பய பக்தியை அழகாக படம் பிடித்துக் காட்டும் கதையிது. கயத்தாறு புளியமரத்திற்கு உள்ளதுபோல் தஞ்சைப் பெரிய கோவில் மீதும் ஒரு மூடநம்பிக்கை உண்டு.

2010க்கு பின்னர் வரும் கதைகள் கதை மாந்தர்கள் குறைவாகி, கதை நிகழும் களம் நீள்கிறது. கிராமிய சொல்லாடல்கள் குறைந்துள்ளன, மிக நீளமான கதைகளாகவுள்ளன.

காதலிலும் ஒரு புரட்சி 'ஒரு அழகிய சொல்' கதை. வைசாலி பெயரே ஒரு அழகியல்.அவளின் அழகும் வனப்பும் அதன் பின்னால் பேசப்படும் அவதூறுகளும், வசவுகளும் அதற்கு காலம் தரும் பதிலும் மிக அருமையாக வந்துள்ள கதை. இந்த கதையில் திரும்பவும் தான் யார் என்பதை ஜே.பி நிரூபித்துள்ளார். வைகையின் வெள்ளமும், அதனின் வனப்பும் அழிவும் ஒரு பெண்ணிற்கு படிமமாக வந்துள்ளது . நமக்குள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மறக்க முடியாத காதல் டீச்சர், ஆசிரியை இருப்பார்கள்; அவர்களைத் தோண்டி எடுத்து வந்து நமது பால்ய கால கவிதை நாட்களோடு உலவ விட்டு நம்மை கொஞ்சும் கவிதையாக இந்தக் கதையுள்ளது.

நம்மிடையே இன்று இல்லாமல் போன, ஓரங்கட்டப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, கண்டும்காணாது விடப்பட்ட பாட்டாளிகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. கரிசல் இலக்கியத்துக்கே உரிய அழகியலோடு மனதை இளகச்செய்து தற்போது யாரும் கிட்ட மாட்டார்களா வாழ வைக்க என்று மாற்றம் செய்கின்றது. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் புகுந்த பணப்பிசாசு இவ்வகையான ஏழைப் பாட்டாளியை காவு வாங்கி விட்டது ;இதில் கூத்து என்னன்னா இது பற்றி ஏதும் அறியாமலேயே அவர்கள் வாழ்வு சிதைந்து போனதுதான் சோகம். ஏன் இந்த புத்தகத்திற்காக, கரிசல் இலக்கியத்திற்காக, நல்ல படைப்புக்காக சாகித்திய அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கவில்லை என்பது அதை விட வேதனையளிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியோ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கமோ, தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றமோ ஏன் முன்னெடுக்கவில்லை. இனியாவது செய்வீர்களா என்பது இந்த ஏழை வாசகனுடையது.

கதைக்குள் பல கதைகளை ஒளித்து வைத்தும், விரித்து வைத்தும் எழுதுகிறார். வாசகனை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் முயற்சியாக பல கதைகள் பலவாறு அர்த்தம் கொண்டு விரிகின்றன. இப்படி எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தேர்ந்த படைப்பாளியை ஏன் நம் தமிழ்ச் சமூகம் கொண்டாடாமல் விட்டு விட்டது, புறந்தள்ளி விட்டது! ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி பேசும் கதைகளும் ஒதுக்கப்படுகின்றன என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விசயம். என்ன தான் பெரிய பெரிய விருதுகள் பெற்றாலும் ஒரு தேர்ந்த வாசகனால் கொண்டாடப்படுவதினும் விட வேறு ஏதும் பெரிய விருது கிடைக்கப்பெறாது. ஒரு நல்ல வாசகர் வட்டத்தை சென்றடையத்தான் இக்கட்டுரையை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். மேலும் அவருக்கு ஒரு படைப்பிலக்கிய விழாவாக அவரைக் கொண்டாட வரும் ஜுன் மாதம் தஞ்சை இலக்கிய வட்டம் திட்டமிட்டுள்ளது என்பதையும் பெரும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

துவாரகா சாமிநாதன், தஞ்சை.
பேச:96292 72185

- காக்கை சிறகினிலே (மே 2016)

நன்றி: முகநூல் பக்கம் - பா.செயப்பிரகாசத்தின் படைப்பிலக்கிய விழா

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?