பா. செயப்பிரகாசம் - உயிர்வேலி

இந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழுதவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது

பா.செயப்பிரகாசம் எழுதிய மே 2014 தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும்  மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டி மாடுகளை போல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடல்போல வாக்கியங்கள்:

– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா

‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்

“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு!”

இந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.

அதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.

“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”

“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”

கிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது.

நன்றி: நாகரத்தினம் கிருஷ்ணா - 29 ஜூன் 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்