இடையில் முடிந்த கதை

ச.தமிழ்ச்செல்வன்

இரண்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். பரிசல் வெளியீடாக அது வந்துள்ளது. அந்நூலின் வெளியீட்டுவிழா இராஜபாளையம் நகரில் ஜூலை 17 அன்று நடைபெற்றது. வீர.வேலுச்சாமி அவர்களின் மகன் பிரகாஷுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து இந்த விழா ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

தனது 24 ஆவது வயதில் பற்றிக்கொண்ட காசநோய் காரணமாக முழுவாழ்க்கையையும் வாழ்ந்துமுடிக்காமல் இடையில் முடிவுற்ற கதை வீர.வேலுச்சாமியினுடையது. இத்தொகுப்பு அவருடைய நினவுகளுக்குச் செய்யப்பட்ட உண்மையான அஞ்சலியாக அமைந்துள்ளது. அவருடைய ஒரே சிறுகதைத் தொகுப்பான ‘நிறங்கள்’ பற்றி புத்தகம் பேசுது இதழில் வெளியான ‘என் சக பயணிகள்’ தொடரில் குறிப்பிட்டு யாரேனும் இத்தொகுப்பின் மறு பதிப்பைக் கொண்டுவரவேண்டும் என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.

எழுத்தாளர் பூமணி முடியாத உடல் நிலையிலும் வந்திருந்து நூலை வெளியிட்டார். அவருடைய உரையை கனகராஜ் வாசித்தார். பா.செயப்பிரகாசம் இத்தொகுப்பைக் கொண்டுவந்தது தன் வாழ்நாள் சாதனையாக்க் கருதுவதாக்க் குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர்கள் மணிமாறன், இலட்சுமணப் பெருமாள், லட்சுமிகாந்தன் எனப் பலரும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்ற அந்நிகழ்வில் கோணங்கியின் உரை சில விவாதப்புள்ளிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

“பட்டினி கிடக்கும் கதை விந்தைகளுக்குக் கிளியாஞ்சட்டியில் வரகு படைத்த நல்லதங்காளின் அறுபதடிக் கூந்தல் இழையொன்று அச்சம் தவிர்த்தான், ஆயிரங்குடி மேட்டில் அலைந்து கொண்டிருந்ததைக் கண்டெடுத்த பாக்கியவான் வீர வேலுச்சாமி. அனைத்து மெய்ஞானத்தோடும் கூட்டில் நோய் சுமந்த சிறுகதை மருத்துவர் ஆண்டன் செகாவின் நீலநுரையீரல் வரைபடத்தைத் தன் சிறுகதைகளின் உருவகத்துக்குள் தைத்து, சதா குழப்பமுற்று அவகதியடைந்த கரிசல் பெண்களின் தாபத்தையும் அர்ச்சுனா நதியின் குறுநாகரிகத்தில் நீர்ச்சரத்தைச் சலனமடைய வைத்து, எளியோர் உளந்தொட்ட சிறுகதை வாழ்வி இவர்” என்று தொடங்கிய கோணங்கியின் உரை வீர வேலுச்சாமியின் “கொடும்பாவி” கதைக்குள் உலவும் பேச்சி, கார்க்கியின் சிறுகதையில் வரும் கிழவி இஸர்க்கீல்தான் என்று ருஷ்ய மற்றும் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளையும் வீர.வேலுச்சாமி மற்றும் தமிழ்ச் சிறுகதையாளர்கள் பலரின் கதைகளையும் ஒரே நூலில் கோர்த்து உரையைப் பின்னிக்கொண்டே சென்றார்.” ‘கூனல் முதுகில் கூழாங்கல் எறிந்தாற்போல் மழைத்துளி விழுந்த்து’ என்கிற வீர வேலுச்சாமியின் வரிகளை பாலகாண்டத்தில் கூனி மந்தாரையின் முதுகில் அம்புவிட்ட ராமனின் கதையுடன் கோர்த்து அவ்வரங்கைப் புதிய பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றார்.

‘’மண்ணின் குரல்கள்’’ தொகுப்பில் அவரது 16 சிறுகதைகளும் குழந்தைகளுக்கான மந்திரக்கதைகள் 26ம், ஒரு கவிதையும், 8 நினைவேந்தல் கட்டுரைகளும் உள்ளன. அதுபற்றிக் குறிப்பிடும் கோணங்கி “வீர வேலுச்சாமி வன மந்திர தேவதைக் கதைகளையும் ‘நிறங்கள்’ தொகுப்பின் சிறுகதைகளையும் பக்கம்பக்கமாய்க் குறுக்குவெட்டாய் படைத்திருந்தால் நவீன புனைகதை தோன்றியிருக்கும். மாயத்தையும் யதார்த்த்த்தையும் பிரித்துவிடுகிறார். எதார்த்தம் சிறுகதைகளாகவும் தேவதைக்கதைகள் தொகுக்கப்படும் கதைகளாகவும் கி.ராஜநாராயணன் சிறந்த நாட்டுப்புறக்கதைகள், கரிசல் வட்டார வழக்கு அகராதி எனப் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தின் வருகை தரு பேராசிரியராக பாண்டிச்சேரி போனவர் இன்னும் ஊர் திரும்பவில்லை. கல்வி அல்ல. அகல்வி தேவை. இங்கே வீர.வேலுச்சாமி அவர்களுக்கும் கல்விநிறுவன மனம் இருந்திருக்கிறது” என்கிற விமர்சனத்தைத் தன் உரையில் வைத்தார் கோணங்கி.

‘மந்திரக்கதை உலகில் வாழ்வதால் கோணங்கி இப்படியான ஒரு பார்வை கொண்டிருக்கிறார்’ என்று தட்டையாகப் பார்த்து இவ்விமர்சனத்தை என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை. வீடு திரும்பிய பின்னும் பின்னொரு நாளிலும் என கோணங்கியுடனான உரையாடல் தொடர்ந்தது.

‘தமிழ்ச் சிறுகதையின் வனப்பும் வரலாறும்’ என்கிற தலைப்பில் பேச வேண்டிய கடமை எனக்கு சென்ற வாரத்தில் இருந்தது. தமுஎகச கோவையில் ஜூலை 22, 23, 24 தேதிகளில் நடத்திய இளம்படைப்பாளிகள் பயிலரங்கில் இத்தலைப்பில் படக்காட்சியுடன் பேசினேன். அதற்காக சிலநூறு சிறுகதைகளினூடாகச் சில நாள் பயணிக்கும் பேறு பெற்றேன். கோணங்கியின் வாதத்துக்கு வலுச்சேர்க்கும் பல அற்புதமான மாயமும் யதார்த்தமும் கலந்த கதைகளை வாசிக்க நேர்ந்தது.
முதல் சிறுகதை எனப்படும் வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரச மரம் இப்படித் துவங்குகிறது,

“பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேனும் பொய்யில்லை”.

எடுத்த எடுப்பிலேயே தமிழ்ச்சிறுகதையை ஒரு மரம்தான் கதை சொல்லி ஆரம்பித்திருக்கிறது. புதுமைப்பித்தனின் காஞ்சனையும், கட்டிலை விட்டிறங்காக் கதையும், கடைவீதியில் வந்து இரண்டு கப்கள் காப்பி அருந்திய கடவுளும், கு.அழகிரிசாமியின் கதைகளில் மனிதனைப்போல அல்லாமல் தன் பிறவிக்குணத்தை மறக்காத வெறும்நாயும், பத்தாம் நம்பர் வீட்டு நாயும் இந்த வரிசைக்கதைகளில் வந்து நின்றன. கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு கதையில் கிளிக்கு ஓட்டுப்போடப்போன மருமகளின் கையைப்பிடித்து மாயமாக இழுத்துப் பூனைக்கு ஓட்டுப்போட வைத்ததும் சென்னை மாநகரத்திலே வருமானத்துக்கு உட்பட்ட வாடகையில் வீடு பார்த்து ஊருக்கு வெளியே வெளியே என்று போயும் முடியாமல் கடைசியில் தன் உடம்பையே சிறுசாக்கிக் கொண்டு தனது பூட்ஸுக்குள்ளேயே குடும்பம் நட்த்தும் போலீஸ்காரனின் கதையும் எனக் கிருஷ்ணன்நம்பியும் தன் பங்கைச் செலுத்துகிறார். புளிய மரத்தின் கதை சொன்ன சுந்தரராமசாமி ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் யதார்த்தத்தையே புனைவாக்கியதைக் கண்டோம். இம்மரபின் தொடர்ச்சியாக இன்று உலகமயத்தின் நாய்ப்பாய்ச்சலையும் குதறல்களையும் எடுத்தியம்ப ஆதவன் தீட்சண்யா ‘லிபரல் பாளையம்’ என்கிற கற்பனை நாட்டையே சிருஷ்டித்ததும் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலில் அவர் நாகஜோதி பீம்தாஸ் என்கிற மனிதரையும் கற்பனையான தீவையும் படைத்ததும் உண்டுதான்.

ஆனாலும் இயல்புவாதக் கதைகளை மேற்சொன்ன படைப்பாளிகள் யாரும் நிராகரிக்கவில்லை என்பதும் பேருண்மைதான்.

“பஞ்சம் வந்து விட்டது”.

“பஞ்சம் வந்துவிட்டால் என்ன?”

மக்கள் பட்டினிகிடப்பதோடு மட்டுமில்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது, ஒரு பஞ்சப் பிரதேசத்தை விட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப்பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று.

கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையின் இத்துவக்க வரிகள் நேரடியான யதார்த்த்ததை எளிய மொழியில் சொன்னாலும், இது ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை பெரியதாக இப்போதும் இருக்கிறது.

ஆனந்த விகடனில் வெளியாகி, தமிழ் வாசக உலகை உலுக்கிய ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதையில் வரும் “நீ சுத்தமாயிட்டே.. ஆமா.. தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப்போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும்.. ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனாலேதான் ராமரோட பாதத்துளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா.. வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக்கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..” என்பது போன்ற நேர் யதார்த்தக் கதைகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை.

ஆகவே கோணங்கியின் நியாயமான வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில் யதார்த்தக் கதைகளின் யதார்த்தம் சமகால சமூகவாழ்வின் சாரத்தைச் சொல்ல முற்படும்போது “ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப்போல அலம்பிஅலம்பி அவள் முகம் நிற்க, மற்றவை எல்லாம் நீரோட்ட்த்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்சி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்து விட, விரலை முட்டிமுட்டி விலகிக்கொண்டிருக்கிறாள்.” (வண்ணதாசனின் தனுமை) என்பது போல தேவையான மந்திரங்களை ஈர்த்துக்கொண்டு கலையாகிவிடுவதையும் நிராகரிக்க முடியாது.

ஆனால் தமிழ்ப் புனைவிலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளில் கல்விப்புலத்தின் தாக்கம் என்று பேராசிரியல்லாத யாரேனும் ஆய்வு செய்யத்தக்க ஒரு கேள்வியை கோணங்கி முன் வைத்திருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது.

“அவுங்கதானே நம்மளத்தேடி வரணும். படைப்பாளி எதுக்குண்ணே பல்கலைக்கழகத்துக்குப் போகணும். நாம நம்ம இடத்திலேதானே இருக்கணும்”

நன்றி: புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 10, 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌