தாலியில் பூச்சூடியவர்கள்

நற்றிணை பதிப்பகம். Rs 260
 நற்றிணை பதிப்பகம். Rs 260

முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது.

அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. காற்றுக்கு அசைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் கருங்கல்கள் இருந்தன. பள்ளரும் சக்கிலியரும் ஒட்டரும் இருக்கிற பள்ளக்குடியில் அல்லாமல், வேறெங்கும் இது நடக்காது.

பொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறாள் என்ற செவிச் சேதி மட்டும் பரவியிருந்தது; காடுகரைக்குப் போகையில் அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள், இப்போது முழுமையாகப் பார்க்க முடிந்தது. கம்மாய்த் தண்ணிக்கு போகிறபோது, கொடிமர மேடையில் உட்கார்ந்திருவர்கள், புளிய மரக்கிளையில் வேஷ்டியை உலர்த்திக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறார்கள். இப்போது அவள் மேலே சாமி ஏறியதால் ஊர் முழுவதும் அவளைக் காண முடிந்தது. நிலா வெளிச்சத்தின் கீழே படிக்கிற எழுத்துக்களைப் போல் அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள், இப்போது முழுதுமாய்க் கண் ததும்பப் பார்க்க முடிந்தது.

அக்கினிச் சட்டியை மேலே தூக்கி வீசி ஆடுகிறாள். ஒரு சிவப்பு மலரை, நட்சத்திரங்களுக்குள்ள ஆகாயத்தை நோக்கி வீசியெறிவது போல், சுழலும் தீப்பந்துகளுடன் அக்கினிச்சட்டி ஒரு கையிலிருந்து, இன்னொரு கைக்குத் தாவுகிறது.

சின்னப்பையன்கள், சிறுமிகளின் விழிகள் அக்னி ஒளியில் பதிந்திருக்கின்றன. பக்திவெறி கொண்ட சாமி முகத்தைப் பார்க்கிற வேளையில், அவர்களின் முகங்கள் பயம் பூசி மிரள்கின்றன. பயம் அதிகமாகிய போது அம்மாவின் முந்தானைகள் மறைவு திரையாகப் பயன்பட்டது. கையில் வேப்பங்குழை இல்லாமல், வெறுஞ்சட்டியுடன் செம்பந்துகள் போல் அக்கினிக் கொழுந்துகள் சுழல, ஆடுகிற பெண்ணை பெண்டுகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அவர்களையறியாத பக்திப் பரவசம் அவர்கள் மேல் குவிந்தது. ரெட்டி வீட்டுப் பெண்கள், ஒரு கணம் பள்ள வீட்டுச் சாமியை கையெடுத்துக் கும்பிட்டார்கள். கும்பிட்டபின் ஒரு பள்ள வீட்டுச் சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கைகளைக் கீழே போட்டார்கள்.

பள்ளக்குடிக்குச் சொந்தமான கருப்பசாமி கோயிலுக்கு பொங்கல் நடந்தபோதுதான் இது நடந்தது. முள் வேலியிட்ட கருப்பசாமி கோயிலில் பள்ளப் பெண்கள் கூட்டத்தின் முன்னால் தைலி நின்றிருந்தாள். நீண்ட கூந்தல் அவள் பிருஷ்ட பாகங்களின் மேல் உட்காந்திருந்தது. சாமி பீடத்தின் முன்னால் ஊதுவத்தியும் சூடமும் கொளுத்தப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் கனன்று எரியும் அக்கினிச் சட்டியும் திரியும்.

தாலியில் பூச்சூடிய பள்ளப் பெண்களின் குரவை மேலெழுந்தது. தாலி நுனியில் கட்டி அவர்களின் நெஞ்சங்களின் மீது ஆடிய பூக்கள் நேராக அங்கிருந்து வாசனையை எடுத்துக்கொண்டன போல் தோன்றின. ரெட்டி வீட்டுப் பெண்கள் தவிர வேறு யாரும் கூந்தலில் பூச்சூடிக் கொள்வது அனுமதிக்கப்படாமலிருந்தது. தாலியில் பூச்சூடிக் கொள்வது ஒன்றே அவர்களை தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லியது. தாழ்ந்த பீடத்தில் கனியும் நெருப்புடன் அக்கினிச் சட்டியும் திரியும் தங்களை எடுத்துக் கொள்ள கை நீட்டின. திரி எடுக்கிற கோலன், கைகளைக் கட்டி, கண்களை மூடித் தியானத்தில் மூழ்கியிருக்கிறான். வருஷா வருஷம் கோலன்தான் திரி எடுக்கிறான். சர்க்கஸ் கோமாளிபோல் நீண்ட கால்சட்டைகளும் தொள தொள என்று கைகளும் தொங்குகின்றன. தலையில் கூம்பு வடிவத்தில் நீளமான ஒரு தொப்பி. அதன் உச்சி நுனியில் ஒரு குஞ்சம் தொங்குகிறது. அந்த ஒரு நாள் மட்டும் அரங்கேறியதோடு இந்த உடைகள் மடித்து வைக்கப்படும், பூசாரி வீட்டுத் தகரப்பெட்டியில். சாமிச்சலங்கை, விழாக்காலத்தில் மட்டுமே போடப்படும். சாமி பட்டு ஆகியவைகளுடன் சேர்ந்து ஒடுங்கிவிடும்.

பள்ளக்குடிப் பெண்களின் கூட்டத்தில் முன்னால் நின்றிருந்த தைலியின் முகம் திடீரென பிரகாசித்தது. முகம் சிவந்து கண்கள் மேலும் கீழும் உருண்டன. உடல் நடுங்கிச் சிலிர்த்தது. மேலாக்கு நழுவி விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை. குளிரில் நடுக்கம் கொண்டதுபோல் வாய் குழறி, பொருளில்லாத சப்தங்கள் வெளிவந்தன. கீழ் உதட்டில் மேல் உதடு அழுந்தி ‘புஷ்’ ‘புஷ்’ என்று காற்று வெளிப்பட்டது. உடல் பதறி பக்திவெறி கொண்டு ஆடுகிற ஒரு பெண்ணை எல்லோரும் கண்டார்கள். கூந்தல் முடி அவிழ்ந்து தோள்களில் கொட்டியது. கைகளும் கூந்தல் நுனியும் தரையில் அலைய, குனிந்து பரவி ஆடினாள்.

பொட்டல் நிலைக் காற்றால் தரையைத் தொட்டு நாலா பக்கமும் ஆடுகிற குத்துச் செடிபோல், கைகளும் கூந்தலும் மண்ணில் பரவி ஆடியது.

அக்கினிச்சட்டி கனிந்து எரிந்தது. கைவிரித்துப் பாயும் குழந்தை போல், சிவந்து வளைந்த கொளுந்துகளை நீட்டியது. ‘ஏய்’ என்று ஓங்காரமாகச் சத்தமிட்டபடி, முன்னால் தாவிக்குதித்து தைலி கனியும் அக்கினிச்சட்டியை எடுத்துக்கொண்டாள்.

தைலியின் கையில் லாவகமாய் அக்கினிச் சட்டி ஆடுகிறது. கறுத்த உடல், அதன் சௌந்தர்யங்கள் எல்லாவற்றையும் கொட்டிச் சுழல்கிறது. நெருப்பின் வெப்பத்தில் உதிக்கும் வியர்வை, நெற்றியில் வைரத் துகள்களைக் கொட்டுகிறது.

முகத்தில் ஆக்ரோஷம் பிரவகிக்க கூந்தல் சிதறி ஆடுகையில் பெண்கள் பயந்து பின்வாங்கினார்கள். பக்திவெறி கொண்ட முகம், எல்லோரையும் கை எடுக்கச் செய்தது.

“டேய்” – தைலியிடமிருந்து திமிறி வார்த்தைகள் வெளி வந்தது. ஒரு பெண்ணின் வார்த்தைகளாக அவை இல்லை. அருள் கொண்ட சாமியின் வார்த்தைகளே. கருப்பசாமியின் அருள் தவிர வேறெதுவும் இப்படிப் பேசவைக்காது.

“டேய்” மீண்டும் தைலியின் குரல் முழங்கியது.

“சாமி”.. பவ்யத்துடன் தலைகள் குனிந்தன. கைகள் குவிந்து நின்றன. விழிகள் பயக்குறியுடன் சாமியை ஏறிட்டு நோக்கின.

”சாமிக்கு தீராத குறை ஒண்ணு இருக்குடா”

”சாமி?”

“டேய் சாமிக்கு மூணுவருஷமா பொங்கல் உண்டா?”

”இல்லை சாமி”

”ஒரு பூசனை உண்டா?”

“இல்லை சாமி”

“விளக்கேத்தறது கூட இல்லே, எங்கோயில் விளக்கேத்தாம இருண்டு கிடக்குடா. எத்தனை நாளா என்னை அவமானப்படுத்த நெனச்சிங்க?”

அவர்கள் சாமியை அவமானப்படுத்தி விட்டார்கள்தான். இத்தனை நாளும் அவர்களுடன் விழிகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த சாமியை, இப்போது வார்த்தைகளால் பேச வைத்துவிட்டார்கள். வார்த்தைகளால் பேசவைக்கிற அநியாயத்தைச் செய்துவிட்டார்கள். சாமியின் கேள்விகளுக்குப் பதில் இல்லை. எந்த முகத்தோடு பதில் சொல்வது? பதில் சொல்ல முடியாத அளவுக்கு தப்பு நடந்துவிட்டது. குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளான பயம் அவர்கள் முகங்களில் பளிச்சிட்டது. வீரியமுள்ள கருப்பசாமியைத் தவிர, வேறு யாரும் இப்படிப் பேசுவார் இல்லை. கருப்பசாமியின் அருள் வருகிறபோதுதான் அருள் வந்த மனிதனுக்கு கல்லும் முள்ளும் தெரிவதில்லை. போன பொங்கலின்போது, இப்படித்தான் ஒருவன் அக்கினிச்சட்டி ஏந்துகிறபோது, விலாவில் பட்ட தீப்புண்களுடன் விடியும்வரை அக்கினிச்சட்டி ஏந்தினான்.

“குத்தம், மன்னிக்கணும் சாமி” – குனிந்து வணங்கிய தலைகளுடன் கேட்டார்கள்.

”மூணு வருஷமா பஞ்சம் சாமி. அதனாலே சாமிக்குச் செய்ய வேண்டிய வினைகள் எல்லா செய்யமுடியலே. இனிமே செய்றோம் சாமி.”

சாமியின் கோபம் குறையவில்லை. வெறிபிடித்து, திக்குகள் எட்டையும் மிதிப்பவள்போல் சுழன்றுகொண்டிருந்தாள்.

“உத்தாரம் சொல்லணும் சாமி” – இடக்கைமேல் வலக்கை ஏந்தி, வாயருகில் வைத்தபடி, பணிந்து அவர்கள் கேட்டார்கள்.

தைலி மன்னித்துவிட்டாள். சாமி வடிவத்திலிருந்த அவளிடமிருந்து, அந்த ஏழை அரிஜன மக்களுக்கு உத்தாரம் கிடைத்து விட்டது. இனிமேல் வருஷா வருஷம் சாமிக்கு காப்பு கட்டி, பொங்கல் நடத்தவேண்டுமென்று உத்தரவு கிடைத்தது.

அவர்களுக்கு, இன்னும் பல வீடுகள் போகவேண்டியிருந்தது. தெருத் தெருவாய், முதலாளிமார் வீடுகளில் போய் ‘படி’ வாங்க வேண்டும். படி வாங்கியதைக் கொண்டு வருஷம் முழுதும் சாமிக்கு விளக்கேத்த வேண்டும். ஊர் முழுதும் படி வாங்கி முடிக்கையில் கிழக்கே பூமி ஒரு அக்கினிச் சட்டி ஏந்தியதுபோல், சூரியன் உதித்து விடும்.

பள்ளத் தெருவைக் கடந்து சாமியாட்டம் ஊருக்குள் வந்தபோது, கணுக்கை முதல் தோள்வரை பச்சை குத்திய சதைப்பிடிப்புள்ள கைகளில் ரெட்டி வீட்டு இளவட்டங்களின் பார்வைகள் அமர்ந்திருந்தன. கைகளை உயரத்தூக்கி அக்கினிச் சட்டியை மாற்றி ஆடுகையில் அவர்களின் பார்வைகள் சாமியாடியின் மார்புப்புறங்களிலேயே நின்றன. கரிசல் மண்ணில் பருவமாய்ப் பெய்த மழைக்கு தூரும் தலைப்புமாய்க் கொழுத்த ஒரு கம்மங்காட்டைப் போல், நள்ளிரவின் நட்சத்திர ஒளிகளுக்குக் கீழே மிதக்கும் அவள் மீது அவர்களின் விழிகள் வலையிட்டன.



”தானியத்தை எடு பார்க்கலாம்”

“எடுத்தா என்ன செய்வே?”

“நீ எடு, எடுக்கிற கையை ஒடிக்கிறேன்”

“என் வீட்டிலே இருக்கிறதை எடுக்கிறதுக்கு நீ யாருடி?”

”ஒன் வீட்டிலே இருக்கிறது யார் கொண்டு வந்து போட்டது?” தும்மக்கா, குலுக்கைப் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். சிமிண்டுத் திண்ணைக்கு மேலிருந்த குலுக்கைப் பக்கத்தில், இந்தச் சண்டை நடந்தது. குலுக்கை நிறைய தவசம் (தானியம்) தளும்பியது. அது முழுதும் அவளுக்குரியது. ஒரு கையை இடுப்பில் ஊன்றி, இன்னொரு கையை குலுக்கை மேல் வைத்து, சாய்ந்து நின்றபடி தும்மக்கா கேட்டாள். “நீ எங்கே கொண்டுபோறேன்னு தெரியும். ஊரிலே இருக்கிற பள்ளச்சிக்கும் பறைச்சிக்கும் கொட்டிக் கொடுக்கிறதுக்காக நான் சேத்து வைக்கலே.”

புருஷனைத்தான் கேட்டாள். பேச்சில், அலட்சிய பாவம் தெறித்தது. புருஷனை எரித்துவிடுவதுபோல் பார்த்தபடி கேட்டாள். “எஞ் சொத்தையெல்லாம் மொங்கான் (கொள்ளை) அடிச்சிட்டுப் போகலாம்ணு பாக்கிறீயா?”

”ஏதுடி ஒஞ்சொத்து? நா பாடுபட்டுக் கொண்டு வரலேன்னா நிலத்திலேலிருந்து ஒரு தானிய மணி கூட வந்திருக்காது.”

“அதுக்குத்தான் கூலி கொட்டியளந்திருக்கே. எடுத்துக்கிட்டயே?”

“சும்மா கொடுக்கலே. ஒங்கப்பன் வீட்டிலேயிருந்து கொடுக்கலே. உழைச்சதுக்கு வந்தது.”

“அதான் ஒனக்கும் ஒம்பிள்ளைகளுக்கும் எங்கப்பன் வீட்டிலேர்ந்து கொண்டு வந்து கொட்டினனே. இப்ப நீயும் ஒம் பிள்ளைகளும் செழிச்சிக் கும்மாளம் போடறது யாராலே? கோழி பறிக்கிறமாதிரி பறிச்சி, ஆடைக்கும் கோடைக்கும் கொண்டு வந்து கொட்டினேன். இங்கே உக்கார்ந்துட்டுத் திங்கறிங்களே, அது எவ கொண்டு வந்து போட்டது?”

குலுக்கையில் இருக்கிற தவசமெல்லாம் அவளுக்குச் சொந்தம். புருஷன் வீட்டுக்கு வருகிறபோது, தாய்வீட்டிலிருந்து அவளுக்குக் கொடுத்த புஞ்சையில் விளைந்தவை. அவள் பேருக்கு உள்ள புஞ்சையிலிருந்து வரும் வெள்ளாமையை எல்லாம், அவள் தனியே எடுத்துக்கொண்டாள். குலுக்கை வாய் தளும்பத் தளும்ப இருக்கும் தவசமும், திண்ணையில் அம்பாரமாய் குவிக்கப்பட்டுள்ள பருத்தியும் அவளுக்குச் சொந்தமானவை. விளைந்து வருகிறபோது அதன் விளைவு கூலியை மட்டும் புருஷனுக்குக் கொடுத்து விட்டாள். ஒரே வீட்டில், ஒரே வாசலுக்குள், ஒரே படுக்கையில் வாழ்ந்தபோதும் அவர்கள் சொத்துக்கள் தனித்தனியேதான் இருந்தன.

ஆனால் புருஷனின் செலவிலேயே ஜீவனம் நடந்தது. அவளுடைய சேகரிப்பில் எதையும் எடுத்துக்கொள்ள அவனுக்கு உரிமையில்லை. கட்டிய மனைவிக்குச் சோறு போடுவதும், பாதுகாப்பதும் புருஷனின் கடமை. அதை அவன் ஒழுங்காகச் செய்கிறவரை தகராறு இல்லாமல் நடந்துவ் வந்தது.

புருஷனுடன் வாழ்கிறபோதும் அவளுடைய சொத்து தனியாக இருந்தது. அதன் இயக்கம் தனியாக நடந்துவந்தது. அது தன் இனவிருத்தியைப் பெருக்கியது. கழுத்தில் ஒவ்வொரு வருஷமும், ஒரு ‘செயின்’ கூடிக்கொண்டு போனது. ‘செயின்காரி’ என்றுதான் ஊர்க்காரர்கள் பெயர் வைத்தார்கள். ‘செயின்காரி’ புருஷன் ‘வடரெட்டி’ என்றுதான் அவனுக்குப் பெயர் வந்தது.

வடரெட்டியைப் பார்த்து, தும்மக்காவின் குரல் வந்தது.

”இனிமே ஒரு புல்லுமணி வீட்டைவிட்டு வெளியே போனா, நீயும் ஒம்பிள்ளைகளும் மரியாதையா வெளியே போகணும்.”



எங்கே போனாலும் இந்தப் புறக்கணிப்பு காத்திருக்கிறது.ல் கம்மாய்த் தண்ணிக்குப் போனால் ஊரைச் சுற்றிப் போகவேண்டுமென்கிறார்கள். கொதிக்கிற வெயிலானாலும், முழங்கால்வரை சகதி ஒட்டுகிற மழைக்காலமானாலும் ஊரைச் சுற்றியே போக வேண்டியிருக்கிறது. கம்மாயில் தண்ணீர் வற்றி, ஊத்துத் தோண்டியிருக்கிறபோது, குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறபோது, அங்கேயும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு வாளி, அரைவாளி தண்ணீர் ஊத்தமாட்டார்களா என்று நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் யாரும் தண்ணீர் விடாமலே, தண்ணீர் இல்லாமலே திரும்பி வந்திருக்கிறார்கள்.

தைலி வெகு நேரமாகக் காத்திருக்கிறாள். ரெட்டி வீட்டுப் பெண்கள் கடைக்குச் சாமான் வாங்க வந்தபோதுதான் அவள் வந்தாள். அவர்களுக்கு முன்னால் போய் நின்று வாங்கக்கூடாது. ஓரமாய் நின்றே வாங்கவேண்டும். ஒவ்வொருவராய் வாங்கிப் போய்விட்ட பிறகும் யாராவது வந்து கொண்டிருக்கிறார்கள்.

”அப்புச்சி, நா வெகுநேரமா காத்திருக்கேன் அப்புச்சி. வெரசா கொடுங்க” – அவள் குரல் தீனமாய் ஒலித்தது. புருஷனைப் பற்றிய பயம் மனசில் கெக்கலித்தது. புது ஊரில் பக்குவமாய் பார்த்தே நடக்க வேண்டியிருக்கிறது.

வண்ணான், அம்புட்டையன், பள்ளர், பறையர், பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் உறவு சொல்லியே அழைத்தார்கள். அதனாலதான் பண்டார இனத்தைச் சேர்ந்த கடைக்காரனை, தைலி ‘அப்புச்சி’ என்றழைத்தாள். ஆனால் ரெட்டிமார்களை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடவேண்டும்.

கடைக்காரன் ராஜாமணி, எதுவும் அறியாத பாவனையில் கேட்டான். “ஒனக்கு என்ன வேணும்?”

“மாகாணிப்படி தவசத்துக்கு பொரிகடலையும், அரைவீசத்துக்கு புளி, மிளகாயும் கொடுங்க அப்புச்சி” – இது நான்காவது தடவையாகச் சொல்கிறாள்.

“வீட்டில் வேலை இருக்கா?” அர்த்த சேஷ்டையுள்ள குரலில் ராஜாமணி கேட்டான். கண்களில் விஷமம் பொங்கியது.

கொச்சையான வார்த்தைகளும், பெண் பாவனைகளும் கடைக்காரன் ராஜாமணிக்குக் கை வந்தவை. அதனாலேயே அவன் கடைக்குப் பெண்கள் கூட்டம் கவர்ந்திழுக்கப்படுகிறது. அதனால் இயற்கையாகவே ஆண்கள் கூட்டமும் நிறைந்தது. இளவட்டங்களே நிறைய வந்தார்கள். பெண்கள் பாணியில் பேசுவதும், சிரிப்பதும் அவனுக்கு சிலாகித்து வந்தன. பெண்கள் பாணியில் பேசுவதும், குத்திக் குத்திப் பேசி அவர்களிடமிருந்து வீட்டு விஷயங்களை எடுத்துக்கொள்வதும் நடக்கும். சில நேரங்களில், அவன் கைவிரல்கள் பெண்களின் விலாப்பகுதியில் படரும். அவை ஒவ்வொரு பெண்ணையும் பதம் பார்க்கிற, எதிர்ப்பு சக்தியை அளந்து பார்க்கிற தடங்களாய் அமையும்.

கடைப் பலகையின் மீது அமர்ந்திருந்த வடரெட்டியின் கண்கள் தைலியின் மீதே கிடந்தன. எடுக்கக் கூடவில்லை. வெறித்துப் போய் அவள் மார்புப் பகுதியின் மீதுகிடந்தன. அரிக்கேன் விளக்கின் சின்ன ஒளியில், இந்த அசிங்கங்கள் எல்லோரும் தெரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. வடரெட்டி சரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். சாமான் வாங்குகிறபோதும், எடுக்கிறபோதும் கை அவன்மேல் படுகிறது. கைகள் அவன் தலைக்குமேலேயே போய் வர வேண்டியிருக்கிறது.

சாமானை வாங்குகிறபோது தைலி கை நீட்டி வாங்கவில்லை. நார்க்’கொட்டானை’ பலகை ஓரமாய் வைத்துவிட்டுச் சொன்னாள். “அதிலேயே போடுங்க அப்புச்சி”.

ஓரமாய் நின்று பலகைமீது வைத்த நார்க் கொட்டானை எடுத்துக் கொண்டாள். அப்படியும் எடுக்க முடியாமல் உடல் உராய்கிறது. தைலி சொன்னாள். “கொஞ்சம் தள்ளிருங்க, முதலாளி.”

ராஜாமணி கண்சிமிட்டலுடன் சொன்னான். “முதலாளி தொட்டா, தீட்டுப்பட்டிருமா?” – ஜாடையாய் விழிகள் வடரெட்டி மீதும் அவள்மீதும் மாறிப் பாய்ந்தன.

வடரெட்டியின் பக்கத்தில் நார்ப்பெட்டியில் நிறைய தவசமும், பருத்தியும் இருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன் வீட்டில் நடந்த சண்டைக்குப் பின், தும்மக்காவுக்குத் தெரியாமல் குலுக்கையிலிருந்து கொண்டு வரப்பட்டவை.

வடரெட்டி, கூர்மையாய் தைலிமேல் பார்வையைப் பதித்துக் கொண்டே ராஜாமணியிடம் சொன்னான். “அந்த கொட்டானிலே அரைப்படி புல்லுக்கு (கம்பு) சீனி மிட்டாய் போடு. நம்ம கணக்கிலேயே போடு”

தைலியின் நார்க்கொட்டான் நிறைய சீனிமிட்டாய் விழுந்தது.

தைலி கூனிக்குறுகினாள் பயத்துடன்.

தைலியின் குரல் நடுங்கியது. “வேண்டாங்க முதலாளி.”

“வாங்கிட்டா என்ன? முதலாளி கொடுத்ததை வாங்கிட்டா வாந்தி வருமா?” – ராஜாமணிதான் பேசினான். மெதுவான, கைவசப்படுத்தும் குரல் வடரெட்டியிடமிருந்து வந்தது. “இங்கே யாரும் அந்நியங்க இல்லை.” அவன் பார்வையைக் கண்டுகொள்ள முடிந்தது. பயத்தில் தைலியின் உடல் நடுங்கியது. நாக்கு குழறி, வார்த்தைகள் சிதற, ராஜாமணியிடம் சொன்னாள். “இது நல்லால்லே, அப்புச்சி.”

அவள் விட்டுச்சென்ற நார்க்கொட்டானும் சாமான்களும் அப்படியே கிடந்தன. போகையில் இரு நீர்த்துளிகள் கண்ணில் பளிச்சிட்டன.



”ஏண்டி ஒதுங்கிப் போனா என்ன?”

”ஒதுங்கித்தான் போறேன்.”

“அலுங்காம குலுக்காம போடி”

”போனா என்ன?”

“உனக்கு யாருடி போக அதிகாரம் கொடுத்தது?”

“முதலாளிமார்கதான். முதலாளிமார்ககிட்ட போய்க் கேளுங்க” – எரிச்சலுள்ள பதில்கள் தைலியிடமிருந்து வெளிப்பட்டன. ஊரைச் சுற்றிப் போகிறபோது கூட, ஒதுங்கிப் போகவேண்டுமென்கிறார்கள். கருவேல முள்ளும், குயவன் ‘சூளை’ போட்டு நொறுங்கிய ஓட்டாஞ் சில்லும் காலைக் கிழிக்கிறது. காலைக் கிழிக்கிற பாதையில், செருப்பில்லாமல் ஓரமாய்ப் போகவேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணிக்குப் போகிறபோது, அப்படித்தான் நடக்கிறது.

ஊருக்குப் புதிதாய் வந்த ஒரு பள்ளச்சி எதிர்த்துப் பேசுகிறாள். ரெட்டிவீட்டுப் பெண்க்ள் கோபத்துடன் அவள் போன திக்கையே பார்த்தார்கள்.

“இவ ஊர்க்காலி மாடு மேய்க்கப் போவா, ஊர்க்காலி மாடு மேய்க்கப் போகாம இவ திமிர் அடங்காது.”

“ஒரு நாளைக்கில்லேன்னா ஒரு நா, இவ ஊர்க்காலி மாடு மேய்க்கப் போறதை நா பார்க்கணும்.”

“வீடுவீடா ஊர்க்காலி மாடு பத்தறதுக்கு வருவா, என் வீட்டுக்கு வர்றப்போ நல்லா கேப்பேன்.”

அந்த ஊர், ஊர்க்காலி மாடு மேய்ப்பதைப் பார்த்து பலநாள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் சபை கூடி தண்டனை கொடுப்பது அடிக்கடி நடக்கவில்லை. பல மாதங்களாய் மாடுகள் வீட்டுக் கொட்டடியிலேதான் கிடக்கின்றன. கோடைக்காலத்தில் கூலி கொடுத்து மேய்க்கச் சொல்வதும் கஷ்டமாக இருக்கிறது. முன்பெல்லாம் தாழ்ந்த ஜாதிக்காரன் எவனாவது தண்டனை அடைந்து கொண்டிருந்தான். பள்ளக்குடி பறைக்குடியில் யாராவது ஒருவன் தவறாமல் ஊர்மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். தப்புச் செய்கிற தாழ்ந்த ஜாதிக்காரனை, ஊர்மாட்டையெல்லாம் கூட்டி, “ஊர்க்காலி மாடு” மேய்க்கும்படி, பஞ்சாயத்தில் சொன்னார்கள். இப்போதெல்லாம் எவனுமே தண்டனையடைவதில்லை. தாழ்ந்த ஜாதிக்காரனை – ஒருவனைக் கூப்பிட்டுத் தண்டித்து மாடு மேய்க்கச் சொல்லவேண்டும்போல் தோன்றியது. மாடுகளுக்குத் தீவனமும் கிடைத்தது; பால் கறவையும் அதிகம் வந்தது. பதினைந்து நாளோ, ஒரு மாதமோ, சுகமாய் மாட்டுத் தொல்லையில்லாமல் கழிந்தது.

தைலியின் உருவம் மறைந்தபின்னும் பெண்கள் முணுமுணுத்தார்கள்.

“எந்தத் திமிரில் பேசுறாங்கிறது, தெரியாதா?”

“எல்லாம் செயின்காரி புருஷன் கொடுக்கிற திமிர்தான். அவன், இவளையே ஆலவட்டம் சுத்துறான்.”

செயின்காரி புருஷன் வடரெட்டி, எப்போதும் ராஜாமணி கடையில் காத்திருக்கிறான். எல்லா இளவட்டங்களும் அவள் போகும் பாதையில் தற்செயலாய் எதிர்ப்பட வருகிறார்கள். கீ காட்டுக்குப் போகிறவர்கள் தவிர, வேறு யாரும் அதிகம் போகவேண்டாத பள்ளவீதியில், இப்போது கூட்டம் அதிகமாயிருக்கிறது. தெக்காடு, வடகாட்டுப் புஞ்சைகளுக்குப் போகிறவர்கள்கூட, பள்ளத் தெருவைக் கடந்துதான் போகிறார்கள். போகையில், ஓரச் சாய்ப்பான பார்வைகள், மாடசாமிப் பள்ளன் குடிசைமீது விழுந்து போகின்றன.

பள்ளத் தெருவிலுள்ள மட்டைப் பந்துக் களம், சுறுசுறுப்பாக இயங்குகிறது. பறையன், அம்பட்டன், சக்கிலியன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த மட்டைப்பந்துக் களத்தில் இப்போது ரெட்டி வீட்டு இளவட்டங்கள் விளையாடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுகையில் முன்பிருந்த தீட்டு இப்போது படாமல் போயிற்று. காலில் கரிசல் புழுதி படிய, வெயிலில் முகம் சுன்ற விளையாடுகிறார்கள். மழை பெய்து முடிந்து, ‘சுள்’ளென்று அடித்த ஒரு வெயிலுக்குப் பின், காய்ந்த கரம்பைக் கட்டிகள் முள்ளாய்க் குத்தியபோதும் விளையாடினார்கள்.

எப்போதும் மட்டைப்பந்துக் களத்திலோ, அல்லது முன்னாலுள்ள புளியமரத்தின் கீழோ தென்பட்டார்கள். திடீரென ஒரு காலையில், மாடசாமிப் பள்ளனின் குடிசை முன்னாலிருக்கிற புளியமரம் போதிமரம் ஆனது. அதன் கீழுள்ள கல்லுரலில், பல இளைஞர்கள் தவக்கோலத்தில் காணப்பட்டார்கள். விடலைப் பையன்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், புளியம்பிஞ்சு தட்டுவதற்காக, கையில் தொரட்டிகளுடன் வரும் சின்னப் பெண்கள் கூட்டமும் வராமல் போயிற்று.

மட்டைப்பந்து அடிக்கிறபோது, பந்துகள் மாடசாமிப் பள்ளனின் குடிசை முன்னால் போய் விழுந்தன. எடுக்கிற சாக்கில் விழிப்பாய்ச்சல்கள் உள்ளே போய் வந்தன.

கரிசல்மண் தீரத்தில், அதன் நிறத்திலேயே உள்ள ஒரு பெண்ணுக்காய் ஆசை மாளிகைகளை நிறுவிக் காத்திருந்தார்கள். நாணத்தில் தீப்பிடிக்கும் கன்னங்கள், கறுப்பிலும் தீப்பிடித்தது. உயர்ந்து வளர்ந்த கறுப்பு உடல், எல்லாத் திசைகளிலும், காம புஷ்பங்களைக் கொட்டியது.

நில உடமை உள்ள கைகள் பரபரத்தன. எல்லாவற்றையும் கைவசப்படுத்தும் நீண்ட அகலமான கைகள். அவைகளுக்குத் தப்பி எந்தப் பொருட்களின் இயக்கமும் நடைபெற முடியாது.

தண்ணிப்பானை சுமக்கையில், தைலியின் கைவீச்சு லாவகமாய் நடக்கும். இடது கைதூக்கிய பானையைப் பிடித்தபடி, வலது கை வீசி நடப்பாள். இளவட்டங்கள் எல்லோரும், வீதியில் இடது கை ஓரத்திலேயே நின்றார்கள். எல்லா லாவண்யங்களும் கொண்ட காலைப் பொழுதும் மாலையும் இதற்குத் தானமாகிறது.

அன்றிலிருந்து, ஊரிலுள்ள கல்யாணமான, ஆகாத எல்லாப் பெண்களுக்கும் தைலி என்ற பொது எதிரி உருவானாள்.



”ஏன், ராஜாமணி கடைக்குப் போறே?”

”இனிமேப் போகலை” – தைலியின் பார்வை புருஷனின்மேல் குவிந்து தங்கியது. “ஆனா இனிமே நீயே சாமான் எல்லாம் வாங்கி வந்திடு.”

“ராஜாமணி கடை இல்லேன்னா வேற கடைக்குப் போறது?”

”வேற கடையில யாரு கடன் கொடுக்கிறா?”

“அதுக்கு ராத்திரிலே, ஏன்’டி’ போகணும்?”

தைலியின் பார்வை, புருஷனின் மேல் கூர்மையாகப் பாய்ந்தது. நிலைகுத்தி கொஞ்சநேரம் விழிகள் நின்றன. பிறகு தன் முகத்தின் மேல் பதித்த அவன் பார்வையை உடைப்பதுபோல் கையை வீசிச் சொன்னாள். “இந்த வீட்டிலே நான் காலடி எடுத்து வச்சப்போ, ஒரு தானிய மணி கூட இல்லே. சோத்துப்பானை கவிந்தேதான் இருந்தது. நா உழைத்துக்கொண்டு வந்து உலையேத்தறேனில்லையா, அதுக்கு இது போதும்.”

ஒரு அசிங்கமான சண்டையின் ஆரம்பம் அது. மோசமான வசவுகள் விழும். கேள்வியும் பதிலும் வசவுகளாலேயே நடக்கும்.

இரவு வந்தால் அந்தக் குடிசையில் சண்டையும் சத்தமும் அதிகமாகியது. மிகச் சாதுவான மாடசாமிப் பள்ளனின் குடிசையிலிருந்து மிகக் கொடூரமான வசவுகளும் கத்தலும் வந்தன. தொடர்ந்து அழுகை கேட்டது.

மாடசாமிப் பள்ளன் யோசனையில் மூழ்கினான். அடிக்கடி அவன் ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதுப்போல் தெரிந்தது. ரெட்டி வீட்டுப் பையன்கள் இங்கே ஏன் மருகி மருகிச் சுற்றுகிறார்கள்? ஓட்டான் வீட்டுக் கல்யாணத்தில் அவனுடைய சின்னச் சின்னப் பையன்களுக்கு, சமைஞ்ச இரண்டு குமரிகளைக் கொண்டு வந்தபோது, இப்படித்தானே நடந்தது. அவர்களுடன் இரண்டு குறுக்கம் நிலமும் இரண்டு மாடுகளும் வந்தன. முகூர்த்தத்தின்போது, எல்லோருக்கும் தெரியும்படி, கொண்டு வந்த மாடுகளும் மரத்தில் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பெண்களின் சொத்துடனே, அவர்களுடைய கண்ணீரும் வந்தது. சொத்துக்காக, வாலிபம் வராத, பம்பரக்குத்து விளையாடுகிற சின்னப்பையன்களுக்குக் கட்டி வைத்தார்கள் என்ற வேதனையில் அந்த இரு பெண்களும் கண்ணீர் வடித்தபடி இருந்தார்கள். முகூர்த்த நேரம் முழுவதும் அவர்கள் அழுதபடி இருந்ஹதை எல்லோரும் கண்டார்கள். அந்தக் கண்ணீரை ரெட்டி வீட்டு இளவட்டங்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். பயன்படுத்திக் கொண்டதற்கு அடையாளமாக, ஒவ்வொரு நாளும் சக்கிலிய குடிக்கு பக்கத்திலுள்ள ஒடமரத்தின் கீழே மினுமினுக்கும் பீடிக்கங்குடன் ஏதாவது ஒரு உருவம் தெரிந்தது.

புருஷன்களான அந்தப் பையன்கள் கோலிவிளையாண்டு கொண்டிருக்கிறபோதே, அந்த இரண்டு பெண்களும் ஒரே வருஷத்தில் பிறந்த வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு வந்தார்கள்.

மாடசாமிப் பள்ளனின் மனம் இருப்பில்லாமல் அலைந்தது. ரெட்டிவீட்டு இளவட்டங்கள் யாரையாவது தன் வீட்டு வழியே பார்க்கையில், ஒட்டான் வீட்டுக் கல்யாணமும் மினுமினுக்கும் பீடிக்கங்கும் நினைவுக்கு வந்தது. மனசு அமைதியிழந்தது.

நிலா இரவில் “தவிட்டுக் குஞ்சு” விளையாடுகிறார்கள். முழங்கால் மண்டியிட்டு வாசற்படியில் ஒருவன் குனிந்து படுத்திருக்க, அவன் மீது துணி போர்த்தி மூடிவைத்து எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து தட்டுகிறார்கள். துணிக்குள்ளே மறைந்திருக்கிறவன் அணியைச் சேர்ந்தவர்களும் எதிர் அணியைச் சேர்ந்தவர்களும் வீட்டின் எதிரெதிர் சந்துகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். துணிக்குள்ளே மறைந்து கொண்டிருந்தவனின், சரியான உத்திவந்து தட்டுகிறபோது, பிறகு குஞ்சு (தட்டியவன்) பறக்கும். எல்லையைத் தொடுவதற்குள் குஞ்சைப் பிடிக்கவேண்டும். விடலைப் பையன்கள் மட்டும் விளையாடிய விளையாட்டை இளவட்டங்களும் விளையாடுகிறார்கள். ஒளிவதற்கு சந்துகளும் வாசற்படியும் இல்லாத பள்ளக்குடியில் விளையாடுகிறார்கள். ரெட்டிவீட்டு இளவட்டங்களின் நிலாக்கால முற்றுகை இப்படி ஆரம்பமாகியிருக்கிறது.

இப்போதெல்லாம் மாடசாமிப் பள்ளன் இரவில் குடிசை வெளியில் ஒட்டுத் திண்ணையில் படுத்துக் கொள்கிறான். கண்கள் இருளைத் துளைத்துக் காத்திருக்கின்றன. வரும் காலடியோசைகளுக்காக காதுகள் விரிந்தே இருக்கின்றன.

பகலில் அந்தக் குடிசை ஓய்ந்து கிடந்தது. இரவானால் சண்டையும் கூச்சலும் நிறைந்தது. பகலின் அதன் அமைதி, இரவு நேர சண்டைக்கான கருவை தனக்குள் ஏந்தியிருப்பதுபோல் தோன்றியது.

இரவுநேரத்தில், குடிசைக்கு வெளியே, பள்ளனின் காவல் தவம் வழக்கமாகியது. கனவுகளைக் கலைப்பதற்கு இடியோசை தேவையில்லை. காலடியோசை கேட்டாலே அவன் கனவுகள் கலைந்துவிடும். சில நேரங்களில் மிருகங்களின் காலடியோசையாகக் கூட அது இருந்தது. அப்போதும் அவன் விழித்துக் கொள்வான்.

ஐப்பசி கார்த்திகை அடை மழைக்காலங்களில் மட்டும், பள்ளன் உள்ளே இருந்தான். அப்போது எந்தக் காவலும் தேவையிருக்க வில்லை. வெளியில் மழையின் நீர்க்கம்பிகளே குடிசைக்கு வேலியாயின. முழங்கால்வரை கரிசல் சகதி படிய மழையில் நனைந்துகொண்டு யாரும் வரப்போவதில்லை.



”முதலாளி வீட்டுக்குக் கம்மம்புல் குத்திக் கொடுக்க வர்றியா?”

‘சரி, சாமி”

அது தைலி வடரெட்டியைப் பார்த்துச் சொன்ன பதிலாக இருந்தது. ராஜாமணிதான் கேட்டான். ஆனால் தைலியின் பதில் கடைப்பலகை ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் வடரெட்டியை நோக்கிப் போனது.

”எவ்வள்வு கேக்கறே?” வடரெட்டி கேட்டான்.

“ஊம் எவ்வளவுன்னு கேட்கணும்? முதலாளி கொடுக்கிறதே, முந்தானை கொள்ளாது. கொடுக்கிறத கொடுத்தா வாங்கறவங்க வாங்கிட்டுப் போறாங்க” – பெண் பாவனையில் கழுத்தை வெட்டி நளினமுடன் வார்த்தைகளை நீட்டி நீட்டிச் சொன்னான் ராஜாமணி.

”புருஷன்கிட்டே கேக்கணுமா?”

“ஆமா புருஷன்கிட்டே கேப்பாக. புருஷன் பொடவைக்குள்ளே. பொடவைக்குள்ளே இருக்கிற புருஷனை எதுக்குக் கேட்கணும், பெண்டாட்டி சொல்றதெ எந்த வீட்டிலே புருஷன் தட்டியிருக்கான்?” – சட்டை போடாத மேல் உடம்பில் துண்டை மாராப்புப் போல் போட்டுக்கொண்டு ராஜாமணி பேசினான். கண்கள் ஜாடையாய் வடரெட்டியை நோக்கியும் தைலியை நோக்கியும் மாறிமாறிப் பாய்ந்தன.

புருஷன் பெயரைச் சொன்னபோது, தைலியின் முகத்தில் பீதி ஏற்பட்டது. பயக்குறியுடன் விழிகள் உள்ளுக்குள் உருண்டன. பள்ளனை நினைக்கையில் ஒவ்வொரு நாளும் வாங்கும் வசவும், கொடுஞ் சொல்லும் மேலேழுந்தன. அடிவயிற்றுக் குடல்கள் மேலெழுந்து சுவாசபாகத்தை அடைப்பதுபோல் இருந்தது. ஒவ்வொரு இரவும் அவளைத் துன்புறுத்தும், கொதிக்கும் விழிகள் தைலியை நினைவிழக்கச் செய்துவிடும்போல் இருந்தது. எவ்வளவு சாதுவாக இருந்த பள்ளன் எப்படிப் போனான்? இதே விழிகள், முன்பெல்லாம் கல்யாணமான புதிதில், களத்து மேட்டிலிருந்து பார்க்கும் நிலா வெளிச்சம்போல் வந்தன. குளுமையைச் சுமந்து அவள் உடல் முழுவதும் பாய்ந்தன. இப்போது, அங்கே எரியும் இரு கங்குகளைத்தான் பார்க்க முடிகிறது.

ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு படி கம்மம்புல் யார் கொடுப்பார்கள்? கணக்கிட்டுப் பார்க்கையில் சாப்பாட்டுக்குப் போக ஒரு நாழிக் கம்மம்புல் மீதியாகிறது. வடரெட்டி முதலாளியைத் தவிர, வேறு யார் இபடி அள்ளித் தருவார்கள்? ஒரு முழு ஆளுக்குச் சாப்பாடு போட்டு, இரண்டு நாழி கம்மம்புல்லும் யார் கொடுக்கிறார்கள்? கோடை காலத்தில் ஊரில் வேலையில்லாமல் எல்லோரும் சோம்பிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆம்பிளைகள் பொரணிமடத்தில் பதினெட்டாம் தாயம் விளையாடுகிறார்கள். பெண்கள் பகலில் வீட்டுக்கு வீடு சண்டை இழுப்பதும் சாயந்தர நேரத்தில் முற்றத்தில் ‘தட்டாங்கல்’ ஆடுவதும் நடக்கிறது. இது மகசூல் முடிந்து, வெள்ளாமை வீட்டுக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. அக்னி நட்சத்திரங்கள் வெடிக்கும் கோடைக்கால அறிகுறியைச் சொல்லுகிறது.

களத்துமேட்டில், கொத்தமல்லியடிப்பு முடிந்து, வெறும் செண்டு மாத்திரம் மக்கிப் போயிருக்கிறது. ‘வீடு மல்லி’ தேடி, வேகாத வெயிலில், சின்னப் பெண்களும் பையன்களும் காடு காடாய்ப் பறக்கிறார்கள். அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து கடையில் போட்டு, அரைக்கால்படியோ மாகாணிப்படியோ பயறு வாங்கித் தின்கிறார்கள். அதிகாலையில் ஒரு போகணி கம்மங்கஞ்சியைக் கரைத்துக் குடித்து, அது குளுகுளு என்று வயிற்றில் போய் சேரும்; பருத்திக்காட்டுக்குப் போகிறார்கள். நிரை முழுவதும் பருத்தி வெடித்து எடுக்க முடியாமல் ஒரு காலம் இருந்தது; நிரைபிடிப்பதில்கூட தகராறு வந்தது. “ஒனக்கு நல்ல நிரையில்லை” என்று தகராறு வந்தது. பருத்தி எடுப்பில் ஒரு கையளவு அடுத்த நிரைமீது பட்டால், பெண்டுகள் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக்கொண்டார்கள். நாறத்தனமான வசவுகள் விழுந்தன. அதுவும், ரெட்டிகுடியைச் சேர்ந்த அல்லது ஏழை எளிய பெண்கள் பருத்திக்காக அலைகிறபோது, பள்ளக்குடிப் பெண்டுகளை பருத்தி எடுப்புக்குக் கூப்பிட ஆள் இல்லாமலே போயிற்று.

இவையெல்லாம் ஒரு கோடை காலத்தின் அறிகுறியைச் சொல்லுகிறது.

கதிர் அறுப்பு முடிந்த தட்டைக்காடு வழியே ஊதற்காற்று சலசலத்து, உடலும் முகமும் ஒணந்து வறண்டுபோகச் செய்தது. ஊதக்காற்றில் ஒணந்துபோன உடலுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மனசுக்கும் துணையின் நெருக்கம் தேவையாயிற்று. பிய்ந்த முகடுகள் வழியே, நிலாக்கதிர்கள் குடிசை உள்ளில் பாய்ந்தபோது, தைலியின் கனிந்த பார்வைகள் பள்ளன்மீது விழுந்தன. கறுத்து விரிந்த பள்ளனின் மார்பில் கை அலைந்தபடி, அவள் பேசினாள்.

பள்ளன் அடித்தொண்டையிலிருந்து குரல் வந்தது “என்ன!”

“மேல் வீட்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்கு கூப்பிட்டாங்க”

”ம்” – பதில் எரிச்சல் உமிழ்ந்தது. அவன் மனசின் தணிவுக்காக தைலி காத்திருந்தாள்.

“ரெண்டு நாழி புல் கொடுக்கிறாங்க”

“ரெண்டு நாழியா”

”இந்தக் காலத்திலே இப்படி யார் கொடுக்கிறாங்க? அப்பப்ப அங்க சாப்பாடும் கிடைக்கும்”

“சரி”

மெல்லிய சாமர வீச்சுப்போல் தைலியின் கைகள் அவன்மீது படர்ந்தன.

சலசலக்கும் ஊதற்காற்றும், குடிசை முகடு வழியே நிலவின் கத்தி வீச்சும் பள்ளனைச் சம்மதிக்க வைத்தது.

அதே நேரத்தில், இரவின் அமைதியைக் குலைத்தபடி, ஊரின் மேல்கோடியில் ஒரு புயல் நடந்தது. சண்டையும் சத்தமும் மேலத் தெருவைக் கடந்து, ஊர் மடத்தை எட்டின. மடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, விழித்து உட்கார வைத்தன.

தும்மக்கா வெறிபிடித்தவளாய் கத்தினாள். “நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே போ”

“நீ யாருடி என்னைப் போகச் சொல்றதுக்கு”

“நீயும் ஒம் பிள்ளைகளும் யாரு சொத்திலே உக்காந்திட்டுத் திங்கறீஙளோ, அவ”

மேலத்தெரு முழுதையும் விழிக்கச் செய்து சத்தமும் கூச்சலும் மேலெழுந்தது. அமைதி குலைந்த தெரு நாய்கள் உச்ச ஸ்தாயியில் ஓலமிட்டன. பக்கத்து வீடுகளின் கதவுகள் திறக்கப்படாமல் காதுகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டன. இந்த உள் சண்டைக்கு யாரும் போய் சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லை.

வடரெட்டி அமைதியான குரலில் சொன்னான்.

”வீட்டிலே வேலை செய்யறதுக்கு ஆள் இல்லே”

”ஒனக்கும் ஒம்பிள்ளைகளுக்கும் சோறு போடறது போதாதா! பள்ளச்சிக்கு வேற நான் சோறு போடணுமா?”

சட்டை செய்யாமல், அவளைப் பொருட்படுத்தாமல் வடரெட்டி பேசினான். “கூலி பேசியாச்சு. இனிமே வேண்டாம்னு சொல்ல முடியாது”.

‘அவ வந்திருவாளா? காலை ‘சடக்’னு ஒடிச்சு குழியிலே வைக்கலே, நானில்லே”

வடரெட்டியின் திடமான முகமே பதிலாக இருந்தது துண்டைத் தோளில் போட்டுகொண்டு, வெளித்திண்ணையை நோக்கி நடந்தான். தும்மக்கா அவன் போவதையே வெறித்துப் பார்த்துவிட்டு, வேதனையுடன் உட்கார்ந்தாள். அவளுடைய சண்டை தோற்றுப் போனது. அவளுக்குச் சொந்தமான புல்லும் பருத்த்யும் வீட்டில் இருக்கையில், தோற்றுப்போவதைத் தவிர வேறுவழியில்லை. தாய் வீட்டுக்குப் போனால் எல்லாம் காலியாகிவிடும். பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இங்கேயிருந்து உள் சண்டை போட்டுக் கொண்டாவது அவளுக்குச் சொந்தமானவைகளைக் காப்பாற்ற முடியும். வெளியில் எதுவும் நடக்காததுபோல் காட்டிக்கொள்வாள். வெளியிடத்துப் பெண்கள் கேட்டபோது, அலட்சியமாகப் பேசுவதுபோல் சொன்னாள். “என்ன செய்றது? ஆம்பிளை இப்படி வெறி பிடிச்சு அலைஞ்சா, நாம என்ன செய்றது?”



மாடுகள் ஏர்கட்டிப் போனபின், தொழுவத்தில் மாட்டுக்காடியில் மீதமுள்ள கூளவாசனை மூக்கை மோதுகிறது. தொட்டி கழனித் தண்ணியின் வாசனை சுகமாகப் பறந்து வருகிறது. வேப்பமர நிழலில், உலக்கை போடுவதர்கு உயரும் முகம் மீது வலை வீசுகிறது.

”ஸ்சோ, ஸ்சோ” என்ற சத்தம் தாள லயத்துடன் விழுகையில், உலக்கை மேலும் கீழும் போய்வருகிறது. தைலி உலக்கை போடுகிறாள். பக்கத்தில், வண்டியில் மேக்கால் மீது வடரெட்டி உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பெரிய தொழுவம் வேப்பமர அசைவையும், உலக்கையின் சீரான ஓசையையும் தவிர, மௌனம் சுமந்திருக்கிறது.

ஓரச் சாய்ப்புள்ள் பார்வைகளை, அவன்மீது போட்டபடி தைலி கேட்கிறாள்.

“எனக்கு ஒரு ஆசை உண்டு”

“என்ன?”

ஈரக்காற்று போல் துவண்ட மெல்லிய குரலில் தைலி சொல்கிறாள்.

“ஊரைச் சுத்தியே தண்ணிக்குப் போக வேண்டியிருக்கு கொதிக்கிற வெய்யில்லே”

“சரி”

“நேரே போனா என்ன?”

“ஊர் வழியாவா?”

“ம்”

அவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. பதில் இல்லை.

“முதலாளி வீட்டுக்குத்தானே, தண்ணிக்குப் போறேன். எங்க வீட்டுக்கா போறேன்”

“ஆனா ஊரிலே சொல்லுவாங்க”

அவனுடைய தயக்கத்தை உடைப்பதுபோல், தைலி ஏறெடுத்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் எதிர்த்து உடைப்பதுபோல். தீர்க்கமான முடிவுகளும் எதற்கும் அஞ்சாத துணிவும் தென்பட்டது. எடுப்பான குரல் வந்தது.

”அங்கங்கே என்னென்னவோ செய்யறாங்க. எவ்வளவு தூரம் சுத்திப் போக வேண்டிருக்கு. அதுவும் கொதிக்கிற வெயிலில். காலிலே செருப்புக்கூட இல்லாம”

தரையைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கியிருந்த வடரெட்டி, நிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தான். அவள் விழிகளைச் சந்தித்துக்கொண்டே தயங்கிய குரலில் சொன்னான். “சரி, போய்ட்டு வா.”



மதிய வெயிலில் நிலைப்படியில் முந்தானையை விரித்து தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருந்த பெண்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். சின்னப் பையன்களின் சத்தம் அவர்களை விழிக்கச் செய்தது. ‘பொரணி’ மடத்தில் கோடுகீச்சி பதினெட்டாம் புலி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தலையை ஏறிட்டுப் பார்த்தார்கள். கம்மாய்க்கரை மேட்டில் குளிர்ந்த காற்றில் கண் அயர்ந்தவர்கள் முழங்கையை ஊன்றியபடி தலையை மட்டும் உயர்த்தி நோக்கினார்கள்.

முதன்முதலாய் ஒரு பள்ளச்சி, வீதி வழியே தண்ணீர் எடுத்துப் போவதை அவர்கள் கண்டார்கள். அதுவும் காலில் செருப்புடன் நடந்தாள்.

முழங்கால் அளவு பொதபொதவென்று சேறு ஒட்டுகிற மழைக்காலத்தில்லும், சேலையை முழங்காலுக்குமேல் தூக்கிச் செருகிக்கொண்டு ஊரைச் சுற்றித்தான் பள்ளச்சிகள் போயிருக்கிறார்கள். அக்னி நட்சத்திர வெயிலில் அப்படித்தான் அவர்கள் நடந்திருக்கிறார்கள். ஊரைச் சுற்றிப் போகிறபோதுகூட, காடு கரைக்குப் போகிற நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் காலில் செருப்புடன் அனுமதிக்காத ஊரில் இப்போது பள்ளக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் ஊர் வழியே போகிறாள். வீதி வழியே ஒரு பள்ளச்சி தண்ணீர் எடுத்துப் போவதை, தங்களின் வாழ்காலத்திலேயே அவர்கள் பார்க்க வேண்டி வந்தது.

”ஏண்டி ஊர் வழியே போறே?”

”போனா என்ன?”

”உன்னை யாருடி போகச் சொன்னது?”

“எங்க முதலாளிதான்.”

பிறகு பெண்கள் பேசுவதற்கு எதுவுமில்லை. வாயடைத்துப் போயிற்று. முகத்தில் ஆத்திரம் மட்டும் எரிந்தது. “நீ நாசமாப் போவே”

உச்சி நிலா வீச்சில், வேப்பமரம் விரித்த வலையில் அவள் விழுந்திருக்கிறாள். முகத்திலும் கழுத்திலும் நிழல் வலை மாறி மாறி அசைகிறது. வேப்பமரத் தூரில் ஒண்டி, முட்டுக் கொடுத்தபடி, அவள் உட்கார்ந்திருந்த காட்சி, அந்தச் சபையிலிருந்து அவள் அந்நியப்பட்டு நிற்கிறாள் என்பதைக் காட்டியது. விஸ்தாரமான சோகம் முகத்தில் தேங்கியிருந்தது. ஆதரவற்றுப் போய், அவள் ஒருத்தி மட்டுமே, அந்தச் சபையில் தனியாய் இருக்கிறாள் என்பதைச் சொல்லியது.

அந்தச் சின்ன சபை, வேப்பமரத்தின் கீழ் பொதுமேடையில் கூடியிருந்தது. ஒட்டுக்கல்லில் சிலபேரும், கல்லுரல்கள் மேல் சிலபேரும் உட்கார்ந்திருந்தார்கள். வயசான பெரிய வீட்டு முதலாளிகள் மேடைமேல் அமர்ந்திருக்கிறார்கள்.

மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வாரத்தில் கூரை நிழலில் ஒரு உருவம் தெரிகிறது. அதன் விழிகளும் முகமும் கலவரப்பட்டிருக்கின்றன. வளத்தியான சிவந்த தேமலுள்ள உருவம்; அது யாரென்று எல்லோருக்கும் தெரிகிறது.

கொஞ்சநேரம் கோபமான சத்தங்களுக்குப் பின் சபை முடிவு செய்தது. தைலியின் மறுப்பு, கலங்கிய தொனியும் ஆதரவற்றுப் போனது.

தனக்கு ஆதரவான முகத்தை அவள் தேடினாள்; முதலிலிருந்தே தனக்கு ஆதரவான அந்த விழிகளைத் தேடிக்கொண்டிருந்தாள். சுவரோரத்தில், மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வார நிழலில் அந்த உருவம் ஒதுங்கியபோதே, அந்த உருவம் தனக்கு ஆதரவாக வரும் என்று நினைத்தாள். தீர்ப்புச் சொல்லப்பட்டபோது, அது தனக்காக வரவில்லை. பஞ்சாயத்தின் எந்தச் சொல்லுக்கும் எதிர்ச்சொல் சொல்லாமலே, தாழ்வார நிழலிலிருந்து அது வெளியேறிப் போயிற்று.

விடியலில் நிசப்தமாக பூமி விடிந்தபோது, புளியந்தோப்பில் ஊர்க்காலி மாடுகளைப் பத்திக்கொண்டு, ஒரு பெண் போவதை எல்லோரும் பார்த்தார்கள். தோள்களில் சிதறி விழும் நீண்ட கரிய கூந்தலுள்ள உருவம் அது.

- தாமிரை - டிசம்பர் 1974, ஜூலை 1997

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

போராட்டக் களங்களின் சகபயணி

பா.செயப்பிரகாசம் நூல்கள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌