பா.செயப்பிரகாசம் கதைகள்: கரிசலின் பெரும் பசி


பா.செயப்பிரகாசத்தின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் வாசிக்கும்போது கரிசல் மண்ணும் அதில் கிளைக்கும் மனிதர்களும் வேறு வேறு அல்ல என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும். கரிசல் செடிகளாகவே மனிதர்களும் மண்ணின் வாசத்தைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள். வானம் பார்த்த பூமியான தெற்கத்திக் கரிசல் மண் எப்போதாவது மழையைக் கொடையெனப் பெறும்போதே மனிதர்களும் குளிர்கிறார்கள். தரிசு பிளந்து பூமி வெடிக்கும்போது மனிதர்களும் சிதறிப்போகிறார்கள். பஞ்சம் பிழைத்தல் என்பது அவர்களை அறிவிக்கப்படாத உள்நாட்டு ஏதிலிகளாக்குகிறது. இடப்பெயர்வின் சாபம் அவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கிறது. வறுமையுடனான அவர்களது போர் தொடர்ந்து அம்மண்ணில் செம்மை படியச் செய்கிறது. எனினும் கரிசல் காப்பாற்றி வைத்திருக்கும் ஈரம் தொடர்ந்து மனிதர்களில் ஊற்றெடுக்கவே செய்கிறது. பா. செயப்பிரகாசம் அப்படியான ஊற்றுக்கண்ணை திறந்து வைக்கிறார்.

பா. செயப்பிரகாசத்தின் கரிசல் மனிதர்கள் அவரது இதயத்திலிருந்தோ வயிற்றிலிருந்தோ வருகிறார்கள். அல்லது வயிற்றுக்கும் இதயத்திற்குமான உறவிலிருந்து வருகிறார்கள். அவரது கதைகளின் முழுத் தொகுப்புமே ஓர் காயசண்டிகையின் பெரும் பசியாகித் துடிப்பதைக் காண முடிகிறது.

கரிசல் ஓர் வாழ்வு. அதை அதே கவிச்சியுடன் தருகிறார் பா.செயப்பிரகாசம். கருவைப் பூவும் மல்லிச் செடியும் பருத்திப் பஞ்சாகவும் மணம் பரப்பும் விதவிதமான மண்ணின் தாவரங்கள் போன்றே விதவிதமான கரிசல் மனிதர்களை நுகரத் தருகிறார். எப்போதோ பெய்யும் மழை போன்றே அவர்கள் வாழ்வில் துளிர்ப்பு வருகிறது. பின், உரிய காலத்தில் எடுக்கப்படாத பருத்திப் பஞ்சைப் போல அவையும் காற்றில் பறந்தலைந்து காணாமல் போய்விடுகின்றன.


அன்பை மீட்க ஒரு போராட்டம்!

ஒரு கோணத்தில் அவர்கள் பசியுடன் போராடுவதாகத் தோற்றமளிப்பது போல தோன்றினாலும் அன்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டமாகவே அவை இருக்கின்றன. உறவுகளைக் கொள்ளையடித்துக்கொண்டு போகும் வழிப்பறிக்காரனாகவே பசி இருக்கிறது. முதலாளியின் அதிகாரத்தில் பசி ஒளிந்திருக்கிறது. சுரண்டலின் பின்னும் அதுவே இருக்கிறது.

போராட்டம் அன்பின் பிறிதொரு வடிவம். வாழ்வு என்பது அன்பை ஒரு வகையில் மீட்பதற்கான போராட்டமே. அன்பான மனிதர்களின் வாழ்வு அதனால்தான் போராட்டங்களாவே இருக்கிறது. பா. செயப்பிரகாசம் அன்பைத்தான் பிறிதொரு வடிவில் எழுதிச் செல்கிறார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ளும் பசி, பெண்களைக் காமாந்தகனாகவும், ஆண்களை அவர்களின் முதலாளியாகவும், குழந்தைகளைப் பூச்சாண்டியாகவும், தீப்பெட்டித் தொழிற்சாலையாவும் சிறுகதைகள் முழுமையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. கரிசலை எழுதுவதாக பா.செயப்பிரகாசம் எழுதியிருப்பதெல்லாம் விதவிதமான பசிகளையே.


பெருவாழ்வும் பெரும் பசியும்!

பெருவாழ்வு வாழ்ந்த மேல்வீட்டுப் பெண்ணின் தீராப் பசியை சொல்கிறது ‘அம்பலகாரர் வீடு’. வீதி வழியே செல்லும் இளம் பெண்ணை ஓர் இளைஞனைப் போன்று பின் தொடர்கிறது பசி. ஊருக்கு நெல் அளந்த பொதுக் களஞ்சியமாக நின்றிருந்த அந்த வீட்டில் யாருமே பொறுக்கிச் செல்லாத நெல் மணிகளைப் போல் கண்ணீர் சிதறிக் கிடக்கிறது. சாமியாடி ஒருவன் அந்த வீட்டுக்கு ஓரிரவு செல்கிறான். தான் வந்திருப்பதை உரக்கச் சொல்லி அழைக்கிறான். தான் சிறு வயதில் பார்த்த அந்த வீட்டின் பெண் தேவதை, தேவி இப்போது வளர்ந்து நிற்பதைக் கற்பனை செய்துகொண்டே குரல் கொடுக்கிறான். சில வினாடிகளுக்குப் பிறகு அவள் வருகிறாள். ஆடை களைந்து, நெற்றி வியர்வைத் துளிகளுடன். ஆண்களற்ற வீட்டின் ஆண் குரலும் அவளது கோலமும் நிலையை விளக்கப் போதுமானதாகிவிடுகின்றன. கொடுப்பதற்கு ஏதுமற்றவளைக் காமம் தின்று துப்பிய குருதியென நெற்றி வியர்வைத் துளிகளையும் சாமியாடி காண்கிறான். “இன்று இவ்வளவுதான் கிடைத்தது!” என்று சொல்லும் தேவியின் குரல் உடுக்கை ஒலி கேட்ட காதுகளில் நரம்பறுந்த யாழாய் ஒலிக்கிறது. தன்னிடம் இருக்கும் எஞ்சிய நெல்மணிகளை அந்த வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறான் சாமியாடி. எவ்வளவு நாசூக்கான வார்த்தைகளில் ‘அம்பலகாரர் வீடு’ பசியின் பேருருவாக நம்முன் எழுகிறது!

இன்னொரு கதையில், கம்பெனி கொடுக்கும் பேற்றுப் பணத்துக்காகவே பிள்ளை பெற்றுக்கொள்ளும் ராமலெட்சுமி, அது கிடைக்காமல் போகும் தருணத்தில் பேற்று வலியைவிட மிகுதியான வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டியவளாகிறாள். பெண்ணின் கருப்பை வரை நீண்டு சுரண்டும் முதலாளிகளின் கொடும் கரங்களை அந்தப் பெண்களின் கண்ணீர்கூட சுடுவதாயில்லை.

கரிசல் பூக்கும்போது பெண்கள் பூக்கிறார்கள், கலைகள் பூக்கின்றன. கருவேலம் பூக்கிறது. அம்மன் கொடையும் கோயில் செண்டை மேளமும் பூக்கிறது. கரிசல் பூப்பதும் பெண்டிர் பூப்பதும் ஒன்றுதான். கரிசல் வெடிக்கும்போது பெண்களின் புன்னகை கூட உதிர்ந்துவிடுகிறது.


பெண்கள், குழந்தைகள், பசி

பா. செயப்பிரகாசத்தின் கதைகளில் பெண்கள் எப்போதும் தனித்து வருவதில்லை. அவர்களின் கைகளில் குழந்தைகள் இருக்கிறார்கள். நடக்கும் வயதில், ஓடும் வயதில் என்று விதவிதமாக. குழந்தை அழும்போது அவர்களும் அழுகிறார்கள். குழந்தை பசியாறும்போது பெண்கள் மனம் ஆறுகிறார்கள். கையை பற்றிக்கொண்டு, அல்லது இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு முள்ளடர்ந்த பாதையில், இருளடர்ந்த வேளைகளில் செல்ல வேண்டியிருக்கிறது. எந்த நேரத்திலும் பிள்ளை பிடிப்பவன் போலப் பசி அவர்களை தூக்கிச் சென்றுவிடலாம். குழந்தைகள், பெண்களின் கனவுகளில் பசியரக்கன் விண்ணளவு உயரத்தில் நிற்கிறான். குழந்தைகள் இரவில் வீறிட்டு அழுகின்றன. சிறுகதைகள் எங்கும் பசி ஓர் பஞ்சுமிட்டாய்காரன் போல பையன்களிடம் ஆசை காட்டுகிறது. அடம்பிடிக்க வைக்கிறது. சமயத்தில் அடிவாங்க வைக்கிறது. குழந்தைகளைச் சமாளிக்கத் தெரியாத பெண்கள் வக்கற்று இரவை வெறிக்கிறார்கள். அடுப்புக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ பசியின் முழு தகிப்பையும் உணர்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நகரத்தின் சதுக்க பூதமென எழுகின்றன. பிறக்கும் குழந்தைகள் தவிர்த்து அவை மற்றெல்லாப் பருவத்துக் குழந்தைகளையும் பலியென கேட்கின்றன. கந்தக பூமியில் பிறந்த அக்னிக் குஞ்சுகள், கந்தகத்திடையே பிறந்து, கந்தகத்திடையே பூப்பெய்தி, காதல் செய்யத் தொடர்கின்றன. லேபிள் ஒட்டப்படாத வாழ்வு!

பா. செயப்பிரகாசம் தனது மொழியை அதிகாரத்துக்கெதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான உரையாடலாக நிறுத்துகிறார். ஒரு கதைசொல்லியின் பணி வெற்றுக் கதையாடல் அல்ல. கதையாடல்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே. வெற்றிடம் என்பது உயிரற்றது, சீவனற்றது. பா. செயப்பிரகாசத்தின் எழுத்துகள் கதைகளின் வெற்றிடத்துக்கு உயிரூட்டுபவை!

- இரா. மோகன்ராஜன்

நன்றி: இந்து தமிழ் - 09 ஜூலை 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

துயரங்களின் பின்வாசல் - உமா மோகன் கவிதைகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?