புதைகுழிக்கு அனுப்பப்படும் அறக்கோட்பாடுகள்

ஐ. நா. அமைத்த நிபுணர் குழு அறிக்கை இரு சாதிப்புகளைச் செய்துள்ளது.

  1. “இது சர்வதேச நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்களின் சபை” என்று பெர்னார்ட் ஷா ஒருமுறை குறிப்பிட்டார். ஆதிக்க நாடுகள் சேர்ந்து தங்களுக்காக உருவாக்கிவைத்துள்ள ஐ. நா போன்ற அவைகள் அறநெறி சார்ந்து இயங்குபவை அல்ல; ஐ. நா தனது கடந்தகாலச் செயல்பாடுகளை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
  2. எதுவும் நடக்கவில்லை இலங்கையில் என்று பாடிய இந்தியர்களையும் அவசர அவசரமாய் ஓடி அரக்கப் பறக்க நாலு இடங்களைப் பார்த்துவிட்டு “என்ன நடக்குது இலங்கையில்” என்றெல்லாம் எழுதித் தீர்த்த “பக்கவாத” எழுத்தாளர்களையும் மௌனமாக்கியிருக்கிறது. (அதனால் உலகமெலாம் குரல் கொடுக்கிறபோது இவர்கள் மௌனித்துவிட்டார்கள் போல.)

ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், படு கொலைகள் போன்றவை பற்றிப் பேசாமல் 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கடந்துவிட முடியாது. இவை பற்றிய அக்கறைகொள்ளாமல் சனநாயகம் பற்றிப் பேசுவதிலும் அர்த்தம் இருக்க முடியாது. ஈழத் தமிழர்கள்மேல் மானுடப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஐ. நா. அறிக்கை கூறுகிறது. 1948 முதல் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திவரும் அடக்குமுறை பற்றி - ஐ. நா. இப்போதாவது உதடு பிரித்து வார்த்தைகள் உதிர்த்திருக்கிறது என்பது சிறு ஆறுதல்.

உலகத்துக்கே தெரிந்த உண்மைகளை இவ்வளவு காலதாமதமாக வேனும் ஐ. நா. தன் புத்தியில் பதிய வைத்துக்கொண்டு தனக்கான கடமையைச் செய்வதில் முதலடி வைத்துள்ளது என்பது வரவேற்கத்தக்க விடயமேயாயினும், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை இரண்டாண்டுகள் கழித்துதான் சொல்ல நேர்ந்திருக்கிறது என்பதற்கு ஐ. நா. வெட்கப்பட வேண்டும். இவ்வாறான மெத்தனப் போக்குக்கு உலக நாடுகளும் ஐ. நா.வும் பதிலளித்தாக வேண்டும்.

ஈழத்தில் நடந்த கொடுமை, கொடூரம், படுகொலைகள் ஏதோ ஒரு பூபாகத்தில் நடக்கிறதென்ற உலக நாடுகளின் கண்டுகொள்ளாமையால், விளைந்த அனர்த்தங்கள் ஆயிரம். குறிப்பாக அண்டையிலிருக்கும் உலகின் முதலாவது பெரிய சனநாயக நாடு எனப் பெருமை பேசிக்கொள்ளும் இந்தியாவுக்குப் பெரும் அவமானகரமான கரும் புள்ளியாக ஆகிவிட்டது.

உன்னைப் போல் பிறரையும் நேசி எனப்படுவது உயிருள்ள மனித அறம். தனது நலன்களுக்காக மற்ற மனிதர்களைத் துன்புறுத்தாது, தீங்கிழைக்காது வாழுதல் எனும் அறம் தனி மனிதச் செயல்பாட்டிற்கு மட்டுமேயல்லாது, ஓர் இனம், ஒரு குழுவின் செயல்பாட்டுக்கும் நீட்டிக்கப்படும் பொருத்தமுடையது. இவ்வகையான வாழ்வு நெறிகள் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்தான் சனநாயகம். தனிமனிதனாக வாழுகையிலும் சமூகமாக இயங்குதலிலும் உலகமாக ஒன்றுதலிலும் சனநாயகமாக இயங்குதல் என்பதே சமகாலத்தின் அறக்கோட்பாடு.

ஆயுதமேந்திய இரு தரப்பு மோதிக்கொள்வது யுத்தம்; அது நடை பெறுகையில் கையாள வேண்டிய நெறிமுறைகள் முடியாட்சிக் காலத்தின் போதே வரையறுக்கப்பட்டுள்ளன.

“பசுக்களும் பசுக்களைப் பேணும் பார்ப்பனரும் பெண்டிரும் பிணியுடையோரும் முதியோரும் பொன்போற் புதல்வர் பெறாதோரும்- பாதுகாப்பான இடத்திற்குச் சென்றடைக; எம் போரைத் தொடங்கப் போகிறோம்”

(புறநானூறு)

என அறிவித்து அத்தகையதோர் அகல்தலின் பின்னர் இன்னொரு நாட்டின் மீது போர் தொடங்கியிருக்கிறார்கள். வெற்றிபெற்றவர்கள் தோல்வியுற்ற படையினரைச் சிறைப்பிடித்தல், அந்நாட்டின் விளைநிலங்களை அழித்தல், நீர்நிலைகளை அழித்தல் என அத்துமீறல்களையும் நிகழ்த்தினார்கள் எனச் சான்றுகள் உள.

இந்தப் போர்க்கோட்பாட்டு வரையறையின் பின்னர் உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்டது. மனித அழிவுகளோ மனித அவலங்களோ ஏற்படாத போர்நெறிகளே சனநாயக உலகின் அறக்கோட்பாடு. அப்பாவிப் பொது மக்கள்மீது விஷவாயுக் குண்டுவீச்சு, பாஸ்பரஸ் கொத்துக்குண்டு வீச்சு, ஏவுகணை எறிதல், கனரக ஆயுதப் பிரயோகம் போன்ற கொலைக்காரியங்களைத் தவிர்ப்பது, மக்கள் வாழுமிடங்கள், வழிபடும் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்ற மக்கள் திரளும் பகுதிகள் தாக்கப்படக் கூடாது போன்றவை நிகழ்காலத்தினது போர்நெறி.


இலங்கையில் எல்லா வகையிலும் இவை மீறப்பட்டன. பயங்கரவாதிகளை ஒழிப்பது என்னும் போர்வையில் ஓரினத்தை அழிக்கும் முயற்சி - இந்நிகழ்ச்சிநிரலின் முதலும் முற்றானதுமான நோக்கம். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம்வரை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பன்னிரண்டு வயதுச் சிறுமி முதல் பெண்கள் பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்டனர். “வன்னியிலிருந்த எல்லா மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் கனரக ஆயுதம் பயன்படுத்தப்படாது என ராணுவம் உறுதியளித்திருந்தது. எனவே பல இடங்களிலும் சிதறிக்கிடந்த மக்கள் பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்தபோது குண்டுவீசி அழிக்கப்பட்டார்கள். போர் நடந்த பகுதியிலிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. முடிவில் 2009 சனவரி முதல் மே மாதம்வரையுள்ள காலத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென அடையாளம் காணப்படவில்லை” என ஐ. நா. அறிக்கையில், போர் அறங்கள் மீறப்பட்டு, மானுடப் படுகொலையை இலங்கை நிகழ்த்திய விதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிகழ்வு லிபியாவில் நிகழ்ந்தபோது, சொந்த மக்களை விமானங்கள் மூலம் குண்டுவீசி அழித்தன என்பதற்காகப் பன்னாட்டு விமானங்கள் லிபியாமீது பறக்கத் தடை விதித்தது ஐ. நா. லிபியாவில் நடந்தது போலவே இலங்கையிலும் மக்களை விமானங்கள் குண்டுவீசிக் கொன்றன. தெரிந்த பின்னும் உலக நாடுகளும் ஐ. நா.வும் தடைவிதிக்க முன்வரவில்லை. இதன் பின்னணி தெளிவானது. லிபியா விவகாரத்தில் கடாபிக்கு எதிராக ஐ. நா. நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஐ. நா.வின் பின் நின்றன. அதே நாடுகள் ஈழத் தமிழர்கள் படுகொலையின்போது ராஜபக்சே பின்னால் நின்றன.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் அசைத்தால் ஐ. நா. அசையும்; அந்த நாடுகள் விசை கொடுத்தால் மட்டுமே ஐ. நா. என்னும் பொம்மை இயங்கும். ஐ. நா. பொதுச் செயலருக்கோ ஐ. நா. மன்றத்திற்கோ சுய அதிகாரம் இல்லை. யுத்த அழிவு நடந்த ஓரிரு மாதங்களில் பான் கி மூன் சித்திரவதை முகாம்களான முள்வேலி முகாம்களுக்குச் சென்றார். உலகெங்குமுள்ள மனிதநேயர்கள், மனித உரிமையாளர்கள் எழுப்பிய கூக்குரல்களின் அழுத்தம் காரணமாக அவர் அங்கு போனார். இலங்கை அரசு எந்த இடங்களைப் பார்வையிடலாம் என வழிநடத்தியதோ அந்த இடங்களுக்கு நடந்தார். எந்த மக்களைச் சந்திக்க வேண்டுமென இலங்கை கூட்டிச்சென்றதோ அந்த மக்களை மட்டும் சந்தித்தார். உண்மையில் அது அழைப்பு அல்ல, கட்டளை, யதார்த்த அர்த்தத்தில் அது உடன் செல்லல் அல்ல, முதுகுக்குப் பின்னால் கத்தியை அழுத்திக்கொண்டு முன் நடத்திச் செல்லல்.

சமகாலப் போர்நெறிகள் எவ்வாறு அழிமானம் செய்யப்பட்டன என்பதைக் கண்டறியும் ஐ. நா. பொதுச் செயலராக அவர் வரவில்லை. இலங்கை அரசு அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், ராஜபக்சே சகோதரர்கள், அமைச்சர்கள் சூழ அவர் பார்வையிட்டுச் சென்றார். ஒரு மனிதநேயவாதி அல்லது முதுகெலும்புள்ள மனிதர் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தப் பாது காப்புகளை ஒதுக்கிவிட்டுத் தனது சொந்தப் பாதுகாவலர்களுடன் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்க முடியும். நவகாளி யாத்திரையின்போது அரசின் எந்தப் பாதுகாப்பும் தேவையில்லையென உதறிவிட்டு மகாத்மா காந்தி அப்படித்தான் நேரடியாய் மக்களிடம் கலந்தார்.

பான் கி மூனைக் காணும்போது இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் குடியரசுத் தலைவராய் இருந்த ஜெயில்சிங் பற்றி அரசியல் விமர்சகர் ஒருவர் எழுதிய வாசகம் நினைவுக்கு வருகிறது. “இதுவரை குடியரசுத் தலைவர்களாக வந்தவர்கள் ரப்பர் ஸ்டாம்புகளாக இருந்தார்கள். இப்போது முதன்முதலாக ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராகியிருக்கிறது.”

ஐ. நா. அவையை இன்று இயக்குவது உலகின் அறங்களோ நியாயபூர்வ உணர்வுகளோ இவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட அதன் விதிகளோ சட்டங்களோ அல்ல என்பது பான் கி மூன் என்ற தனிநபர் வகிக்கும் பாத்திரத்தால் உறுதிப்படுகிறது.

பொதுவாக ஐ. நா. தமிழகக் காவல் துறை பாணியில் அல்லது தமிழ்த் திரைப்படங்களில் வரும் காவல் துறையினர் போல் செயல்படுகிறது. விபரீதமான நிகழ்வுகள் நடைபெறுமென முன்கூட்டித் தெரிந்திருந்தும் எல்லாம் நடந்து முடிந்த பின், இறுதிக் கட்டத்தில் வந்து நிற்பது காவல் துறையின் இயல்பு. யுத்தம் உச்சத்திலிருந்தபோது ஐ. நா. தலையிட்டுத் தடுத்து நிறுத்தியிருந்தால் இத்துணை பேரழிவு நிகழ்ந்திருக்காது. 2006இலிருந்து தொடங்கப்பட்டது யுத்தம். ஒத்திசையாகக் கிளிநொச்சியில் செயல்பட்ட ஐ. நா. பணியாளர்கள், செஞ்சிலுவைச் சங்கம், தொண்டு நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள் போன்றவற்றை ராஜபக்சேக்கள் வெளியேற்றியபோதே முன்தடுத்தல் செய்திருந்தால் யுத்தம் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை.

“இலங்கையில் மனித உரிமை நிலவரம் மிக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. தொடர்ச்சியாகப் பரந்த அளவில் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கும் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஐ. நா., மனிதாபிமான அமைப்புகளின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையே இலங்கையில் காணப்படுகிறது. ஐ. நா.வின் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் அலுவலர்களுக்கு, இலங்கை விசா வழங்குவது இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், மிகப் பெரும் மனிதப் பேரழிவுகள் ஏற்பட்டே தீரும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பாரதூரமான அளவில் தொடருமானால், வன்னிப் பிரதேசத்தில் வாழும் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டியதிருக்கும்.”

2007ஆம் ஆண்டிலே இலங்கையை ஐ. நா. எச்சரித்துள்ளது. (22.10.2007 தினக்குரல், கொழும்பு). எச்சரிப்புக்குப் பின் யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “வன்னியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டார்கள்” என்ற மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் கணிப்பு, ஐ. நா.வின் 2007 அறிவிப்புடன் பொருந்திப்போகிறது. அனைத்து மனித உரிமை அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ஐ. நா. ஒரு விசாரணைக் குழுவை அமைக்கப் போகிறது என்பதை முன்னுணர்ந்த சிங்கள ராசதந்திர மதிநட்பயூகிகளான ராஜபக்சேக்கள் “கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு” ஒன்றை யுத்தம் முடிந்த உடனே உருவாக்கினர். (ஐ. நா. அமைத்த குழு இலங்கைக்குள்ளே கூட அனுமதிக்கப்படவில்லை) இலங்கை அமைத்த குழு முன் (லி.லி.ஸி.ஞி) 8.10.2011 அன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் ரெவரண்ட். டாக்டர் ராயப் ஜோசப், மன்னார் மறை மாவட்ட முதன்மைக் குழு ஆயர் தந்தை விக்டர் சூசை மன்னார் பாதிரியார் அவையின் தலைவர் சேவியர்குரூஸ் - ஆகியோர் அறிக்கையொன்றை அளித்தனர்.

“அரசு அலுவலகப் பதிவின்படி 2008இல் வன்னிப் பிரதேச மக்கள்தொகை நான்கு லட்சத்து இருபத் தொன்பதாயிரத்து ஐம்பத்தொன்பது. ஐ. நா பணியகத்தின் கணக்குப்படி 2009, ஜூலை 10இல் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த வன்னி மக்கள்தொகை இரண்டு லட்சத்து எண்பத்தியிரண்டாயிரத்து முந்நூற்றென்பது. மீதி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து அறுநூற்று எழுபத்தொன்பது பேர் என்ன ஆனார்கள். கைது கூட்டிச்சென்றும் குண்டுவீசிக் கொல்லப்பட்டும் இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.”

இது லிலிஸிசிக்கு முன்வைக்கப்பட்ட கேள்வி மட்டுமல்ல; தன் மன சாட்சியைத் தொட்டு உலகம் பதில் சொல்வதற்கென வைக்கப்பட்ட ஆதாரம் இது.

தமிழ் மக்களின் பிரதேசமாகிய வடக்கு கிழக்குக்கு நேரவிருக்கும் அழிவு பற்றி முன்கூட்டி அறிந்திருந்த ஐ. நா., இலங்கைக்கு 2007இல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியதோடு சரி. அதற்கு மேல் அதைச் செயல்பட விடாமல் செய்ய ஐ. நா. வுக்குள்ளேயே ஆட்கள் உள்ளிருப்பாய் இருந்தார்கள். பான் கி மூனின் தனிச்செயலரான விஜய் நம்பியார், அவருடைய சகோதரரும் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் இலங்கையின் தற்போதைய ராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியார் ஆகியோரால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவர்கள் மலையாளிகள் என்பதும் இவர்களுக்குப் பின்னணியிலிருந்து உந்தித் தள்ளும் மூளைகளாயிருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறைச் செயலராயிருந்த எம்.கே.நாராயணனும் மலையாளிகள் என்பதும் தற்செயலான இணைவாகத் தென்படலாம். இவர்கள் தமிழரினத்தின் மீது கடுமையான வெறுப்பிலும் இந்திய விரிவாதிக்கத்தின் தீராவெறியின் வெளிப்பாட்டிலும் செயல்பட்டார்கள். 40 ஆயிரம் தமிழர்களைக் கடைசி இரு நாட்களில் கொன்று குவித்த தடயங்களை அழித்துவிட இலங்கைக்கு ஆலோசனை வழங்கியவர்கள் இந்த அண்ணன் தம்பிகளே.

போரில் சரணடைபவர்களைக் கொல்லுதல் கூடாது என்பது பொதுவான போர் அறம், உலகின் பல தொடர்புகளுக்கும் தகவல் அனுப்பிவிட்டு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் தெரிவித்த பின், வெள்ளைக் கொடி பிடித்துச் சரணடைய நடே சன் தலைமையிலான விடுதலைப் புலிகள் வந்தபோது உயிர்பறித்த நாளில் கொழும்பில் விஜய் நம்பியார் மட்டுமல்ல, எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் பிரசன்னமாகியிருந்தார்கள். கடைசி நேரத்தில் பத்தாயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகளை வெளியிடுவோம் என இந்தியா மிரட்டியபோது இறுதி நாட்களில் உங்களோடும் உங்கள் அதிகாரிகளான இவர்களின் உரையாடல் பதிவுகளை வெளியிடுவோம் எனக் கோத்தபய ராஜபக்சே திருப்பி அடித்தார். ஐ. நா. மனித உரிமை அவையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுமல்லாமல், தனது நேச நாடுகளையும் திரட்டிப் பழிவாங்காமல் காக்க வழிசெய்தது.

“போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையினும் கூடுதலாக இந்தியாவே அஞ்சுகிறது” என இதை உதாரணமாகக் காட்டியவர் வி. எஸ். ஆர். சுப்பிரமணியம் என்னும் ரா உளவுத் துறையின் முன்னாள் அலுவலர். (The Ground Report).

ஐ. நா. குழு அறிக்கை சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதைச் சொல்லாமல் தவிர்த்துள்ளது. விஜய் நம்பியார் இக்கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டிருப்பதால் தவிர்க்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

ஐ. நா. குழு அறிக்கையில் தவிர்க்கப்பட்ட மற்றொரு முக்கியக் குறிப்பு இறந்தோர் எண்ணிக்கை. மருத்துவமனைகள்மீதும் ராணுவப் பாதுகாப்பு வளையங்களுக்குள் குவிந்தவர்கள் மீதும் நடந்த குண்டுவீச்சில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் குத்துமதிப்பாகச் சொல்லப்படுகிறது.

இந்த அளவிலேனும் அறிக்கை வந்திருப்பது. ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குமுறையால், இனப்படுகொலையால் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து மக்கள் சமூகத்துக்கும் ஒரு நல்வாய்ப்பு. இந்த அறிக்கை இலங்கை செய்த குற்றங்களை மட்டுமல்ல, ஐ. நா. செய்யத் தவறியவற்றையும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது.

1. இலங்கைப் போரின்போதும் அதன் பின்பும் மனிதநேயத்துக்கும் மக்கள் பாதுகாப்புக்குமான கட்டளைகளைச் செயல்படுத்துவதில் ஐ. நா.வின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஐ. நா. பொதுச்செயலர் விரிவான மறு ஆய்வை நடத்த வேண்டும்.

2. இலங்கை தொடர்பாகக் கடந்த 2009 மே மாத மனித உரிமைக் குழு சிறப்புக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த அறிக்கையின் பின்னணியில் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமைக் குழுவை ஐ. நா. கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஐ. நா. மனித உரிமைக் குழுவின் செயல்பாடு குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் உலக மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரான்சிஸ்பாயில் ஒரு தெளிவான கருத்தை முன்வைக்கிறார்; “இலங்கை இனச் சிக்கலைப் பொறுத்தவரை ஐ. நா. மனித உரிமைக் குழு நாடுகள் தமிழர்களுக்கு எதிராகவும் இலங்கைக்குச் சாதகமாகவும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணையை நடத்துவதற்கான பன்னாட்டு ஆணையம் அமைக்கும் பொறுப்பை ஐ. நா. மனித உரிமைக் குழுவிடம் ஒப்படைக்கக் கூடாது; ஐ. நா. பொதுச்செயலரே பன்னாட்டு ஆணையம் ஒன்றை நேரடியாக அமைப்பதற்கான அழுத்தத்தை நாம் தர வேண்டும்” என நமக்கான கடமைகளைத் தெளிவுபடுத்துகிறார். ஐ. நா.வின் மனித உரிமைக் குழுவில் இலங்கைமீதான கண்டனத் தீர்மானம் வந்தபோது இந்தியப் பிரதிநிதி கோபிநாத் (மலையாளி) “பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டிய செயலுக்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்” எனப் பேசியதையும் இந்தியா தன்னைக் காந்தி வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படாமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஐ. நா. குழுவே, இலங்கையைக் குற்றப் பொறுப்பாக்கும் முடிவுகளை அறிவித்திருக்கும் நிலையில், இந்தியா என்னும் பெரிய மனுசன் தன் முகத்தில் தானே கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொள்ளப் போகிறானா என்பது கேள்வி.

ருவாண்டா இனக்கொலை பற்றி விசாரணை செய்யப் பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்து, 1998இல் 22 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. குரோசியன் லேண்ட், கரஜான் பிராந்தியத்திலிருந்து செர்பிய இனமக்களை விரட்டியடிக்க, பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குரோசிய நாட்டின் ராணுவத் தளபதிகளுக்கு 24 ஆண்டுக் காலச் சிறைத்தண்டனை அளித்துப் பன்னாட்டு ஆணையத் தீர்ப்பு வந்திருப்பது சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆனால் கடந்த மார்ச் 31 அன்று ஐ. நா. பொதுச்செயலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் அதை வெளியிடாது காலதாமதப்படுத்தியது - வெளியிடுவதற்கு முன்பே இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் ஷவேந்திர சில்வாவிடத் ஒரு பிரதியைக் கையளித்தது - போன்ற விடயங்கள் பான் கி மூன்மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஐ. நா.வின் அறக்கோட்பாட்டு விதிகளை அரைகுறை மனத்துடன் செயல்படுத்தும் ஒருவர் இரண்டாம் முறையாகப் பதவிக்கு வர முயல்கிறார். இவரது பதவிநீட்டிப்புக்கு மேற்குலக நாடுகள் மட்டுமல்ல ருசியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் அவசியமாகிறது. அதைக் கோரும் முன்னறிவிப்பாகவே, அவருடைய பேச்சும் அமைந்திருக்கிறது.

“பாதுகாப்பு அவையிலுள்ள உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான் இலங்கையின் மனித உரிமை மீறல், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்சேயிடம் விசாரணை நடத்தப்படும்; அல்லது விசாரணை நடத்த இலங்கை ஒத்துக்கொள்ள வேண்டும்.”

பாதுகாப்பு அவையின் உறுப்பு நாடுகளான ருசியாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளன. ரத்துசெய்யும் அதிகாரத்தைப் (Veto power) பயன்படுத்தப்போவதாக ருசியா தெரிவித்துவிட்டது.

“இது இலங்கையின் பிரச்சினை இலங்கையிடமே விட்டுவிடலாம். பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை (LLRD) அரசே அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியாக அமையும்.” என்று சீனா அறிவித்துள்ளது. சனநாயகம் சுதந்திரம் வேண்டி 1987 ஜூலை 3ஆம் தேதி தியான் ஆன்மென் சதுக்கத்தில் இரவிலும் கூடிப் போராடிய இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மேல் ராணுவ டாங்குகளை ஏற்றி ஐயாயிரம் பேரைக் கொன்ற தியான்ஆன்மென் சதுக்கக் கொலைகாரர்கள் இவர்கள் என்பதைப் புரிந்துகொள்வோம்; அதைவிடவும் 40 மடங்கு அதிகமாய் அப்பாவி மக்களைக் கொலைசெய்த ராஜபக்சேக்கள் ஒசத்தியாகவே இன்றைய சீனாவுக்குத் தெரியும் என்பதையும் நினைத்துக்கொள்வோம். இதே சீனா சுட்டிக்காட்டும் கற்றுக்கொண்ட படிப்பினைகள், நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconcikiaytiton conmission) ராஜபக்சேக்களின் ராசதந்திர வினையாற்றல்களில் ஒன்று. இதன் மூலம் கொலைக்குற்றப் பிரச்சினையை ஊத்திக் கழுவி மூடிவிடலாம் என நினைத்தார்கள். இந்த லிலிஸிசி பற்றி ஐ. நா. குழு அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.

“போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்ற உண்மைகளைக் கண்டறிய LLRC முயலவில்லை. காரணம், அமைப்பின் உருவாக்கமும் அதன் விதிமுறைகளும் உறுப்பினர்களும்தாம். அவர்கள் அரசு சார்பாக இயங்குகின்றனர். கொடூரமான அத்துமீறல் குற்றங்கள் பற்றிய அதன் விசாரணைகள் நடுநிலையானதாக, சுதந்திரமானதாகச் சர்வதேச விசாரணைத் தரத்துக்குச் சமமானதாக இல்லை.”

சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டங்களையும் விடுதலைப்புலிகள் மீறியிருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை. அழிக்கப்பட்ட ஓர் இயக்கத்தைப் பொறுப்பாக்குவதற்குச் சாத்தியங்கள் இல்லை. இலங்கை அரசு உயிருடன் உள்ளது. இயங்கும் அரசை, அதன் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக்குதல் என்ற பரிந்துரைகளை ஐ. நா. குழு முன்வைக்கிறது.

ஆனால் இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்தது சன்னதம் வந்தது போல் ஆடுகிறார் ராஜபக்சே. ஐ. நா.வுக்கான எதிர்ப்புகளை எப்போதும் சுமந்துகொண்டே திரியும் அமைச்சர்கள் விமல்வீரவன் சே, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரீஸ் போன்றோரையும் சாமியாடவைக்கிறார்கள். அமைச்சர் பிரீஸ் “இந்த அறிக்கை குப்பைக்கூடையில் போடுவதற்குத்தான் லாயக்கு” என்கிறார்.

“இலங்கையின் வளர்ச்சியை விரும்பாத, இலங்கைக்கு எதிரான நாடுகளின் சதி இந்த ஐ. நா. அறிக்கை. இதில் துளி உண்மையும் இல்லை. இலங்கையின் இறையாண்மையைக் காக்க ஐ. நா.வுக்கான கண்டனப் பேரணியாக மே தினப் பேரணியை நடத்துவோம்” - எந்தவித அறக் கோட்பாடுகளுக்கும் அடங்காத ராஜபக்சேயின் இந்த அழைப்பை ஒரு கோடிக்கும் மேலான சிங்களர்கள் ஏற்றார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பேரணி சென்றார்கள். ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் மௌனம் கொண்டமை அவர்கள் பௌத்த சிங்கள இனவெறியில் ஊறி வளர்ந்தவர்களென்பதை உண்மையாக்கியது. செங்கொடித் தொழிலாளர் சங்கமும் விக்கிரம குணரட்ணாவின் நவசம சமாஜக் கட்சியும் இதை நிராகரித்தன.

அனைத்து அறக்கோட்பாடுகளையும் மிதித்துத் துடைக்கும் ராஜபக்சேவையும் ஐ. நா. வகுத்துத் தந்த அற நெறிகளைத் தன் பதவிநீட்டிப்புக்குத் துணையாக்கிட கைகழுவும் பான் கீ மூனையும் நோக்கி எழுவது ஒரேயொரு கேள்விதான். உலகமெல்லாம் மனிதர்களா கொலைகாரர்களா என்னும் கேள்வி அது.

அடிமைச் சமூகம் இவர்களை எதிர்த்து எதுவும் பேச இயலாது என்றுள்ள நிலையில் வடக்கு கிழக்குத் தமிழர்கள், குறிப்பாகக் கிளிநொச்சி, யாழ்ப்பாணத் தமிழர்கள் அரசுப் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் மே தினப் பேரணிக்குப் பலவந்தப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். அகதி முகாம்களில் வாழ்கிறவர்களும் கட்டாயப்படுத்திக் கூட்டிச்செல்லப்பட்டார்கள். ஐ. நா. அறிக்கைக்கு எதிராக இவர்களையும் கையெழுத்துப்போடச் செய்துள்ளார்கள்.

நன்றி: காலச்சுவடு - ஜூன் 2011, தினமலர் - 01 ஜூன் 2011

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?