ஒரு நதியின் மரணம்

அஞ்சலி: நா. காமராசன் (1942 – 2017)


மதுரைத் தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25 இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரதிநிதிகளின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மதுரைநகரின் நடுவில் அமைந்த திடலுக்கு அவரவர் இடத்திலிருந்து பேரணியாய் வருவது, இந்தியை ஆட்சிமொழியாய் அறிவிக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்குக, ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்க வகை செய்க – என்னும் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்தோம். இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவைத் தியாகராசர் கல்லூரி மாணவ நண்பர்களான நா.காமராசனும் கா.காளிமுத்துவும் எரிப்பதென முன்வந்தனர். நா.காமராசன், பா.செயப்பிரகாசம், கா.காளிமுத்து, கவிஞர் இன்குலாப் ஆகியோர் முன்பின்னான ஆண்டுகளில் ஒருசாலை மாணாக்கர்கள்.

சனவரி 25, காலை பத்து மணிக்குத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் பேரணியாய்த் திடலைச் சென்றடைய, காமராசனும் காளிமுத்துவும் திடல்மேடையில் ஏறிச் சட்டப் பிரிவுக்குத் தீயிட்டார்கள். எதிர்காலம் இருண்டு போகும், கல்வியைத் தொடர இயலாது என்பதைச் சட்டத்தை எரித்த மாணவர்கள் அறிவார்கள். தமிழக மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாப்பாய் இருக்கும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு அவர்தம் வாழ்வைப் பலியிடுதலுக்கு மூலப்பொருளானது.

பயிலும் காலத்தில் நா.கா புத்தார்வமுள்ள சோதனைக் கவிஞராக உருவெடுத்துக் கொண்டிருந்தார். 1960-70களின் இளையதலைமுறை எப்படி உருவாகி வந்ததோ, அதுபோல் திமுகவின் இளைஞர் அணியில் திரட்சியாகி எழுந்து வந்தார். கல்லூரிக் காலத்திலும் படிப்பு முடித்த பின்னரும் திமுக அரசியல் மேடைகளின் தீப்பிழம்பு போல் உணர்ச்சி சுழலும் கனல்பேச்சாளர்.

60களின் தொடக்கத்தில் ‘புதுக்கவிதை’ வடிவம் மரபுக் கவிதையாளர்களின் வாசலில் நின்றது. இன்று பல்வேறு எடுத்துரைப்பு முறைகளைக் கைக்கொண்டு, பலப்பல வித்தைகள் செய்து ச்சநிலைக் கவிஞர்களாகக் கருதப்படும் பலர் மரபுக் கவிதையாளர்களாய் வேரூன்றி நின்றவர்கள்தாம்: நா. காமராசன் மரபுக் கவிதையில் ஓசை நயம் மிகக்கொண்ட சந்தப்பாடல்களாய் ‘சூரியகாந்தி’ தொகுப் பினைத் தந்தார்.

தன்வாழ்வு கருதியும் படைப்பாற்றலின் வளர்ச்சியை முன்னிட்டும் இடப்பெயர்வு, குடிப்பெயர்வு ஒவ்வொரு கலைஞனுக்கும் அவசியமாகிறது. பருண்மையாக மட்டுமல்ல, கருத்தியலிலும் இடப்பெயர்வும் குடிப்பெயர்வும் வந்துசேர வேண்டியதாகிறது. 1966இல் முதுகலை முடித்ததும், கொஞ்சநாள் வடசென்னையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நம்நாடு இதழில் பணி; அடுத்து, தான் பயின்ற தியாகராசர் கல்லூரியில் ஓராண்டு கற்பித்தல் பணி; பின்னர் சொந்த ஊருக்கு அருகிலுள்ள உத்தமபாளையம் கல்லூரியில் ஓராண்டு; 1971இல் மீண்டும் சென்னை எனத் தன் கவிதையாற்றலை – தன் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் சூரியக் கதிர் எங்கெங்கு கிட்டுமோ, அங்கெல்லாம் இந்தச் சூரியகாந்தி முகம் திருப்பி நின்றது. இதன் காரணமாய், “தனது வாழ்நாளில் எந்தக் கவிஞனுக்கும் கிடைக்காத இலக்கிய அங்கீகாரம், எனக்கு மிகச் சிறிய வயதிலேயே கிடைத்தது,” என அவர் கூறியது உண்மை.

கட்சி அரசியலில் அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளல் – கவிதைத் தளத்தில் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளல் என ஒருநேரத்தில் இரு ஓடப் பயணம் மேற்கொண்டிருந்தார் நா.கா! ஒரு படைப்பாளியின் விலகல் எங்கு தொடங்கினால் சரிவு உருவாகுமோ, அதே மாதிரியான இந்தப் புள்ளியில் நா.காவுக்கும் சறுக்கல் உண்டாயிற்று.

ஒரு நதியின் பிரவாகம் போலத்தான் இருந்தது. அவருடைய கவிதைகளின் வருகை: மலைகளின் காண இயலாத இடுக்குகளிலிருந்து நீர்க்கால்கள் பிறந்து நதியாகி ஓடுதல் போல் இன்ன வகையாய், இந்நேரத்தில் கவிதை பிறக்கும், எப்போது எழுத உட்காருவார் என்றெல்லாம் சொல்ல இயலாது: அவர் கவிதையை ஆளுவதற்குப் பதில் கவிதை அவரை ஆண்டுகொண்டிருந்தது. கவிதையின் கைவசத்துக்குள் அவர் கிடந்தார்.

கல்லூரியில் பயிலும் காலம் சோசலிச சமுதாய உருவாக்கத்துக்கான கருத்துப் பயிர்கள் அவரது நாற்றங்காலில் உண்டான நேரம்; தத்துவார்த்தப் புலத்தின் முழுப்புரிதலில் இல்லாது போனாலும், உணர்ச்சிபூர்வத் தளத்தில் இவரது நாற்றங்கால் முளை விட ஆரம்பித்திருந்தது; சிறு வயதில் கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வாழ்வியலை ஆழமாகப் பரிசோதனை செய்துகொண்டிருந்த அவர், நகர வாழ்வோட்டத்துள் சென்றபின் அந்த வகைத் தொடர்புகளிலிருந்து விலக ஆரம்பித்திருந்தார். நெஞ்சில் மணந்த பழைய நினைவுகளும் விடைபெற்றுக்கொண்டிருந்தன. தன் முன்னேற்றமே குறிக்கோள் என்ற பாதையில், அதற்கான முயற்சியில் காலம் கடந்தது.

பாராட்டு, அங்கீகாரம் என்ற எதிர்பார்ப்பு கலை நெஞ்சுள்ள அனைவருக்கும் பொதுவானது. தன் திறனுக்கு, தகுதிக்குச் சமானமாக கிடைக்குமெனில் சரி! அங்கீகாரம் திறனுக்கானது; அது அளவெடுத்துத் தைத்த சட்டைபோல் அமைய வேண்டும். உடுத்தினால் விகற்பமாய்த் தோனாதிருக்க வேண்டும். தகுதியற்றோரிடம் நயந்து பெறல் அல்ல; சென்னைப் பொதுநூலகக் கட்டடத்தில் அவருடைய கவிதைநூல் வெளியீடு; அப்போதிய வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளரும் பின்னாளில் கல்விக் கொள்ளைக்கு வித்திட்டவருமான ஒருவர் வெளியிட்டுப் பேசினார். அவர் வடதுருவம் எனில், இலக்கியம் மற்றொரு துருவம். இலக்கியம் என்று சொல்லவும் நாக்கு வளையவில்லை. லக்கியம், லக்கியவாதி என்றுதான் அவருடைய பேச்சு பூரா வந்தது.

தான் சார்ந்த திராவிட இயக்கங்களில் அங்கீகார எதிர்பார்ப்பு கானல்நீராகிப் போகையில் எந்த நிலைக்கும் போகிற அவலம் பிந்திய பத்து ஆண்டுகளில் நிகழ்ந்தது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாய் ஏறத்தாழ தன் படைப்புச் செயல்பாட்டை நிறுத்தியிருந்தார். எந்தத் திசைக்கும் போகாமல் – பழைய பெருமிதங்களில் மூழ்கிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் ‘இந்து முன்னணி’ என்கிற மதவாத அமைப்பு அவரைத் தழுவிக்கொண்டது. ‘இந்து முன்னணி’ மேடையில் பக்த சிரோன்மணியாகக் காட்சி தந்த கவிஞர் “இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். அப்போது மட்டுமே நமது உரிமைகளைப் பெறமுடியும்,” என்று முழங்கினார்: இந்து முன்னணி மேடையைப் பகிர்ந்துவிட்டு, இன்னொரு கையால் தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருதை’ப் பெற்றது நகைப்புக்குரிய முரண்.

“நான் ஒரு நாத்திகன், அதோடு சமுதாய விமர்சகனும் கூட” என முன்னர் அவர் செய்த பதிவு அவரைக் கேள்விக் கூண்டில் நிற்க வைத்தது.
வேதபுர வீதியிலே
நெற்றியிலே விபூதி பூசவும் நாமம் போடவும்
அனுமதிக்கும் மனுதர்மம்
நாங்கள் பொட்டுவைத்துக் கொள்ள மட்டும்
ஒப்புக் கொள்வதில்லை
எழுதியவர் இவர்தானா என்ற ஐயம் எழுகிறபோது, செய்தது இவர்தானா என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் நம்பமுடியாததாக இருந்தது. ஜெயலலிதா தேனி நகரம் வந்தடைந்தபோது, காத்திருந்து வரிசையில் நின்று தாழ்வணங்கிச் சட்டமன்றத்துக்கு ‘சீட்’ கேட்டார் எனப் படத்துடன் வெளியானது செய்தி.

1967இல் அரசியலதிகாரத்தைக் கைப்படுத்தி திசை திரும்பிய திமுக, அதிமுக என்ற இயக்க மாயைகளிலிருந்து கழன்று உண்மையின், யதார்த்தத்தின் வசமாக ஆகியிருக்க வேண்டும். இவ்வாறு ஆகுதல் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்குச் சாத்தியம். இயக்கங்களின் ‘தகுதிகாண் பருவத்தை’ இன்றைய காலத்தில் எந்த சுதந்திரப் படைப்பாளியாலும் நிறைவுசெய்ய இயலாது.

‘நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்ற கவிதை ஏறக்குறைய அவருடைய சுயசரிதையின் மீள்கூறல் எனலாம்.
இந்தப் படகுத் துறைக்கு
நான் துடுப்புக்களோடுதான் வந்தேன்
ஆனால்
எனக்குக் காகித ஓடங்களே கிடைத்தன
இந்த இசை மண்டபத்திற்கு –
நான் பாடல்களோடுதான் வந்தேன்
ஆனால்
இங்கே செவிடர்கள் மட்டுமே இருந்தார்கள்.
இந்தப் பாதைக்கு நான்
ஒரு நல்ல வழிப் போக்கனாகவே வந்தேன்
ஆனால்
இது ஒற்றையடிப் பாதை
எல்லாம் முடிந்து விட்டது
இந்த மண்ணில்
இனி நான் நேசிப்பதற்கு
‘ஆஸ்த்மா’ மாத்திரையைத் தவிர
வேறு என்ன இருக்கிறது.
மிகச் சின்ன வயசிலேயே
ஒரு ஞானியைப் போல எழுதியவன்
மிகச் சின்ன வயதிலேயே
ஒரு கிழவனைப்போல மரணமாகி விட்டான்
ஏழைகளின் கவியை
அவர்களுடைய சுடுகாட்டினிடமே
பத்திரமாக ஒப்படைத்து விடுங்கள்
முதுமையின் விளிம்பில் இப்போதோ பிறகோ என மரணம் வாசற்படியில் காத்திருக்கும் நாளில் எழுதப்படவில்லை இக்கவிதை. அவர் முதுகலை வகுப்பு முடித்து வாழ்வில் முட்டிக்கால் போட்டு எழுந்திருக்க முயன்ற காலத்தில் எழுதியது.

கொள்கைப் பாத்திகளில் காலூன்றி, கவிதைச் செடி பூத்தது தொடக்க காலம்.

“கிளிமூக்குத் தீநாக்குக் கவிதைகளால்
கிளர்ச்சிகளை வளர்ப்பவன் நான்”
“சபதம் ஏற்றுக்கொள்கிறேன் – நான்
சாவை ஏற்றுக்கொள்கிறேன்
சம உடைமைப் பூக்களின் – மண்
சாரமாகச் செல்கிறேன்”
“ஏழைகளின் அடுப்பெரிப்போம், இல்லையெனில்,
சூரியனில் தீக்குளிப்போம்”

போன்ற வரிகள் உரிய விடயத்தையும் விட அதீத உயரம் கொண்டவை.

“தமிழ்க் காதலனாக அரும்பி, ஒரு சோசலிஸ்டாக மலர்ந்தவன் நான்; உழைக்கும் மக்களின் வசந்த ருதுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சின்னக்குயில்,” போன்றன பிந்திய காலத்தில் வெற்றுக் கூடாகிப் போயின. சமூகத்தினை முன்னகர்த்தும் எழுத்துகளைத் தருபவர்கள், வெறும் போதனையாளர்களாக ஆகிவிடும் இடம் இந்தப் புள்ளிதான்; கவிஞர் இன்குலாப்போல தன் எழுத்துக்கான நியாயம் செய்கிறவராக இருந்திருக்க வேண்டும்.

‘ரோஜாத் திரைக் கிராமம்’, ‘புல்புல் பறவைகள், ‘ராஜதிரவம்’, ‘சிவப்பு வசந்தம்’,’ வசந்த ருது’, ‘தேவதேவியாகிய தேவதை’ – போலப் புதியவகைச் சொற் சேர்க்கைகள், உவமைகள், உருவகம், படிமம் என அடுக்கிஅடுக்கி மேல்கட்டுமானமாய்க் கொண்டுபோகிற புதிய பாணி அண்ணாந்து, கழுத்தை வளைத்து அதிசயித்துப் பார்க்க வைத்தன.

“நிர்வாணத்தை விற்கிறோம் – ஆடை வாங்குவதற்காக:
நாங்கள் ரோஜாக்கள் – பறிக்கிற உங்கள் கைகளில்தான்
முட்கள் முளைத்திருக்கின்றன”
“பூமியில் இருக்கும் பெண்களே, உங்களுக்காக
கடலில் இருந்து பாடுகிறோம்”
“நாங்கள்அழகின் சிறைச்சாலைகள்
நடமாடும் கைதிகள்”
“நான்கு வேதங்கள் கற்றாலும் – நாங்கள்
நான்கு சுவர்களுக்குள் மூடப்பட்ட புத்தகம்” என்பன போன்ற முரண் தொடைச் சித்திரிப்புகள் அவரிடமிருந்து பிரிக்க இயலாத அழகியலாகியது.

‘வானம்பாடி’ கவிஞர்களின் ‘நேரடி மொழிதல்’ முறையிலிருந்து அவர் விலகிநின்றார் என்பது அவரது காலத்தைத் துல்லியப்படுத்தும். தமிழ்க் கவிதை வரலாறு என்பது சுருட்டி வைத்த பொட்டணம் போல் மொத்தையானது அன்று; ஒன்றுபோல இன்னொன்று, அதுபோல மற்றொன்று என ஈயடிச்சாங் காப்பியாய் இருந்த காலமுண்டு. பாரதிக்குப் பிறகு அது வேகமெடுத்த வகைமைகளின் வளர்நிலமாக ஆகிவிட்டது. கட்டம்கட்டமாய் ஒவ்வொரு காலத்தின் பெயர் சொல்வதாய் உருவெடுத்தது. குறிப்பிட்ட காலத்தின் வகைமையாக, உவமிப்பு, உருவகிப்பு, குறியீடு, படிமம் என வேறுவேறு அணிவகைகளால் புதுநடை போடுவதாக, ஒரு காலத்தின் புதிய தாவலாக வெளிப்பட்டார் நா.கா. கவிதைக் கரு, எடுத்துரைப்பு, தலைப்புக்கள் போன்ற அனைத்திலும் புதியனவாக ‘கறுப்பு மலர்கள்’ பிரவாகமானது. ‘தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்’, ‘சஹாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்’, ‘முல்லைநதிக்கரை வயல்களுடன் ஒரு மறுவிவாதம்’, ‘ஓ நானும் அந்த ஹிப்பிகளோடு’ போன்ற தலைப்புகள் ‘உசேன்போல்ட்’ வேகத்தில் ஆரம்பித்த கவித்துவப் புதுமைகொண்டவை. மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் தாக்கம், உருவகங்கள், லட்சிய வேகம்ஆகியன கல்லூரிக் காலத்திலேயே பாடப்புத்தகத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. லா.ச.ரா.வின் தெறிப்பான வாசகங்களும் அதுபோல் எழுதிப் பார்க்கும் ஆசையைத் தூண்டின; லெபனான் எழுத்தாளர் கலீல் ஜிப்ரான் இவருக்கு மட்டுமல்ல, பல பேருக்கு முன்னோடி; திரைத்துறையில் வயலார் ரவிவர்மா! ‘நானும் ஒரு ரவி வர்மா’ என்று தனீத் தலைப்பில் ஓரிடத்தில் அவரைப் பற்றிய பதிவு வருகிறது.

அவர் நடத்திய சிற்றிதழின் பெயர் சோதனை. தமிழ்க் கவிதையுலகிற்கான அனைத்துச் சாதனைகளையும் தான் செய்து முடித்துவிட்டதாக அவரைப் பேசச் செய்தன – அவர் செய்து பார்த்த கவிதைத்துறை சோதனைகளே!

‘ஊமை’ – ‘புல்’ – ‘நடைபாதை’ – ‘தளிர்’ – ‘புழுதி’ போன்ற கவிதைகளில் கவித்துவம் வெளிப்படுவதினும் வாழ்வியல் அனுபவம் உணரப்படுவதினும் விட, அவைபற்றின சிந்தனைத் தெறிப்புகளின் அடுக்குகளாகச் செய்யப்பட்டுள்ளன.

“நான் மௌன ஊர்வலம்; நாக்கின் மயான பூமி
கைகால் முளைத்த தூக்கம்; நான் கண்ணீர் ஏரி
அழத் தெரிந்த ஓவியம் – நான் அழகான சூனியம்” என்னும் வாய்ப்பேசாதார் சித்திரிப்பு வாசிப்புக்குச் சிலாகிப்பானவை.

கவியரங்கமெனில் கைத்தட்டலைக் கூட்டிவரப் போதுமானவை.

‘நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்ற பாடல், கலீல் ஜிப்ரான் என்ற லெபனான் தத்துவக்கவியின் பாதிப்பில் உருவானதாகும். இப்படியும் எழுதிப் பார்க்கலாமே என்பதின் பொருட்டு என்அறையில் இருந்து எழுதினார்; ‘நான் கம்பனையும் வென்றவன்’ என்று பேசத் தொடங்கிய பிந்திய காலத்தில் தாகூரும் கலீல் ஜிப்ரானும் வெறும் கனவுப் பறவைகளாகத் தெரிந்தார்கள் அவருக்கு: “வேலைக்காரி கூட தங்கத் துடைப்பத்தால் வீடு கூட்ட வேண்டும் என்று பாடுவார்கள்,” என இளக்காரமாய்த் தெரிவித்தார். உண்மையில் அவர்தான் அவ்வாறு எழுதப் பழகியவர்.

உண்மைக்கும் அழகியலுக்குமான தொடர்புக் கண்ணிகளைச் சூரியகாந்தி தொகுப்பிலும் அவருக்குச் சின்ன வயசிலேயே பெரியபேரை வாங்கித் தந்த ‘கறுப்பு மலர்களின்’ தொகுப்பிலும் கைப்படுத்திய அவர், பின்னரான படைப்புகளில் உண்மையையும் அழகியலையும் இணைப்பதில் கவனம் தவறினார். இயக்க அங்கீகாரத்தையும் அதே அளவு இலக்கிய அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து தடுமாறிக்கொண்டிருந்த நாட்கள் அவை. உண்மையையும் அழகியலையும் இணைக்காமல் அலங்காரப் படுதாக்களை இறக்கிவிட்டு, அதையே பார்த்துக்கொண்டிருந்த கவிதா சுவைஞர்கள் உண்மையைத் தவறவிட்டார்கள்.

30 ஆண்டுகள் முன் படுதாக்கள் இறக்கிய நாடகமேடைகள் பிரதான கவர்ச்சியினை வீசி, சுவைஞர்களை வசீகரித்தன; இன்று நிஜநாடகம் / மாற்றுநாடகம் / வீதிநாடகம் ஆகியன எந்தப் படுதாக்களும் இல்லாமல், பகட்டும் அற்றுத் திறக்கின்றன; மக்களை நேரடியாய் இணைக்கின்றன. அழகியல் முன்னகர்வு என்பது, மக்களை இணைக்கும் மாற்றத்தின் நகர்வாக இருக்கிறது. கலைரசனையைச் சிந்திப்பின் ரசனையாக வளர்ப்பதே அழகியல். இலக்கியத்துக்கும் இது அச்சு அசலாகப் பொருந்தும்.
மனதில் ஒரு முகம்
உதடுகளில் ஒரு முகம் உங்கள்
‘வார்த்தைகள்’ மாறுவேசம்
போடுகின்றன!
உங்கள் கண்களே
உமது முகத்தைக்
கண்ணாடியில் பார்க்கும்போது
தலைகுனிகின்றன!
வெறும் உறைகளோடு
போர்வீரர்களாகக்
காட்சிதரும் கோழைகளே!
முதல்வெற்றியுடன் திரும்பிவரும்
எங்கள் வாள்கள்
உறைக்குள்போகாமல்
உங்களைத் தேடுகின்றன
இவை அவருடைய கவிதை வரிகள். வரிகள் இருக்கின்றன. பொறுப்புடன் பதில் தர சுவிமர்சனப் பாங்கு வேண்டும். பொறுப்பான பதில்களுக்காய் நா.கா மட்டுமல்ல, அந்நிலைக்கு ஆளாக்கிய பலரும் நிற்கக் கடமைப்பட்டவர்கள்.

நன்றி: காலச்சுவடு - ஜூலை 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?