அப்துல்கலாம் என்னவாக இருக்கிறார்?

உலகளவில் பூகம்ப வாய்ப்புள்ள பகுதிகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு நான்கிற்கு மேல் உள்ள பகுதிகள்தாம் பூகம்ப அபாயம் உடையவை. இந்திய நிலப்பகுதிகள் முதல் நான்கு பிரிவுகளில்தாம் உள்ளன. இரண்டு, மூன்று ஆகியவை குறைந்தபட்ச அபாயம் உள்ள பகுதிகளாகும். கூடங்குளம் அணு உலை பூகம்ப அபாயம் குறைந்த பிரிவு இரண்டில் வருவதால் இங்கு நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அணு உலை அமைந்துள்ள இடம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்திலுள்ளது. இதனால் பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆபத்தில்லை. சப்பான் நாட்டில் அணு உலைகள் பிரிவு ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டன. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் தாக்குப் பிடிக்கும். இவை எல்லாம் கூடங்குளம் அணு மின்நிலையத்தைப் பார்வையிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் (முன்னாள் விஞ்ஞானி) அப்துல்கலாமின் கருத்துகள். இனி வரவிருக்கும் பேரிடர்கள் பற்றியும் கருத்து தெரிவித்த அவர் அணு உலைக்குக் கீழே இருக்கும் பூமியின் உறுதித்தன்மை பற்றிப் பேசவில்லை.


பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்கான மருத்துவர் குழு, 11 அக்டோபர் 2011 அன்று “கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், ஏன்?” என்ற அறிக்கையை வெளியிட்டது. மருத்துவர் ஆர். ரமேஷ், மருத்துவர் வீ. புகழேந்தி, மருத்துவர் வி. டி. பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்ற குழு, சில உண்மைகளை முன் வைத்துக் கேள்விகள் எழுப்பியது.

1) இந்த அணு உலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச் சூழல் பற்றி அணுசக்தித் துறை இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடத்தவில்லை.

2) நடைபெற வாய்ப்புள்ள பின் விளைவுகள் பற்றி எந்தத் தொலை நோக்குப் பார்வையுமில்லாமல், தொழில்நுட்ப முடிவுகள் மனம் போன போக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

3) இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்குப் பின் அரசுத் தொழில்நுட்ப நிர்வாகத் துறையினரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகள்.

4) சட்டப் பிரச்சினைகள்.

இவை முற்றாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை.

அந்த இடத்தின் சுற்றுச் சூழல் தொடர்பாக அணுசக்தி சிவில் சமூகத்தினரே, ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இப்பகுதியின் நில இயல்பு பற்றி அரசுக்கு எதுவும் தெரியாது. இடத்தின் புவியியல் தொடர்பாக நுண்ணிய அளவிலோ பெரிய அளவிலோ ஆராய்ச்சி நடத்தாமல் கூடங்குளம் எவ்வளவு ஆற்றல்கொண்ட நில அதிர்ச்சியையும் தாங்கவல்லது என்று பொத்தாம் பொதுவாக அரசு அமைப்புகள் கூறிவருகின்றன.

குடிமைச் சமூகத்தினரான எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வு பற்றி அரசு நிர்வாகத்திடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள முயன்றோம். பின்னர் ஊடகங்கள் மூலமாக அறியத் தந்தோம். கடைசியாய் 2002 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். நீதிமன்றம் உட்பட அனைத்துத் தரப்பாலும் எங்கள் ஆய்வு புறக்கணிக்கபட்டது. ஆனால் 2002 ஆய்வில் நாங்கள் எழுப்பிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று 'சார்கோனைட்' பாறை குறித்தது. அஸ்திவாரத்தின் மேல் பதினான்கு கார்பனாடைட் டைக்ஸ் இருக்கின்றன. இவை உறுதியற்ற நிலப் பகுதிகள். பண்டைய புவி யுகங்களில் உறுதியாக மாறிய எரிமலைக் குழம்புகளால் உருவானவை. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தின் புவியமைப்பியல் துறையைச் சேர்ந்த பிஜி, பேராசிரியர் சர்மா ஆகிய இருவரும் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைச் சென்னை ஐ. ஐ. டியைச் சேர்ந்த முனைவர் பூமிநாதன் என்பவர் எதிர்பாராவிதமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். 2004 நவம்பர் சிuக்ஷீக்ஷீமீஸீt ஷிநீவீமீஸீநீமீ இதழில் ‘அணு உலைகள் தொடர்பான இந்திய அனுபவங்கள்’ என்னும் ஆய்வுக் கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள அதே முறிவுப் பாதையின் மீது 1998 - 2002 வரை உருகிய பாறைப் பிதுங்கல்கள் ஏற்பட்டுள்ளன. 2003ஆம் ஆண்டில் இந்தப் பலவீனமான இடங்களைப் பற்றிக் கண்டறிந்த பிறகு, அது தொடர்பாக அரசு நிர்வாகம் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளது. இந்த இடத்தை அகழ்ந்தெடுத்து, வலுப்படுத்த அதற்குள் காங்கிரீட் கலவையை ஊற்றியிருக்கிறார்கள். உறுதியற்ற இந்தப் பாறைகளின் ஆழத்தைக் கண்டறிய அவர்கள் முயலவில்லை.

பேரா. ராமசர்மா இந்த உறுதியற்ற பாறைக் கூட்டங்கள் பூமியில் 30 கி.மீ. ஆழத்துக்கு நீண்டிருக்கலாம் என எச்சரித்துள்ளார், “எங்கள் கருத்து இதுதான், கூடங்குளம் அணு உலை தொடர்பாக ரஷ்யர்கள் தயாரித்து, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பித்த முதற் கட்டப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் மேற்கண்ட பிரச்சினை பற்றி எந்தத் தகவலும் இல்லை. காரணம், இந்த அறிக்கைக்கான ஆய்வு 1998ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டு, 1999 தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதாவது உருகிய பாறைப் பிதுங்கல்கள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் நிலவியல், அறிவியல் இதழ்களால் மறு ஆய்வு செய்யப்பட்டு, 2001ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தன. இந்தப் பகுதியிலுள்ள பலவீனமான கார்பனாடைட் டைக்ஸ் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நில அதிர்வு, ஆழிப் பேரலை போன்ற இயற்கைப் பேரிடரால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பவை பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக் கையை 2002 சனவரி முதல் நாங்கள் முன்வைத்துவருகிறோம்.

“இந்த ஆராய்சிக்குப் பிறகு, வி. வி. இ. ஆர் 1000, வி. 392 அணு உலைகளில் அந்தப் பகுதியின் நில இயல்புக்கு ஏற்ப வடிவ மாறுதல்கள் தேவை. உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்து நேரடியாக அணு உலையைப் பாதிக்கலாம். பலவீனமான பகுதிகள் காரணமாக லேசான நில அதிர்வுகள்கூட அணு உலையைப் பாதிக்கலாம். இவை போன்ற ஆபத்து நிகழ்ந்தால் அவற்றைக் கையாள அணுசக்தித் துறையிடம் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப வல்லமையும் திறமையும் இல்லை என்பதே உண்மை.”

இவை போன்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான ஆய்வுகளுடன் பதிலளிக்காமல், குருட்டாம்போக்கில் கலாம் பேசியிருக்கிறார். இந்திய நிலப்பகுதிகள் பூகம்ப அபாயம் இல்லாத நான்கு பிரிவுகளுக்குள் வருகின்றன என்றால், குஜராத்தில் 2001 ஆண்டில் அவ்வளவு மோசமான நில அதிர்வு நிகழ்ந்தது எவ்வாறு?

போலி விஞ்ஞானம் என்பதுபோல் போலி விஞ்ஞானிகளும் இருப்பார்கள் போல.

மின்சாரத்தின் அவசியம் அனை வரும் அறிந்தது. மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதுபோல், அப்துல் கலாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. 7. 11. 2011இல் அவர் அளித்த அறிக்கையில் கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது கிராமங்கள் நீடித்த தன்னிறைவு வளர்ச்சி பெற வேண்டும். இந்த வளர்ச்சியைப் பெற மின் உற்பத்தி அவசியம் என்கிறார் கலாம். எல்லாம் சரி அந்தத் தன்னிறைவை அணுவைப் பிளப்பதால் ஏற்படும் மின் உற்பத்தி மூலம்தான் அடைய முடியுமா? அணுவைப் பிளந்து, இந்தியாவிலுள்ள அணு ஆலைகளால் உண்டாகிற மின் உற்பத்தி மூன்று விழுக்காடு. உலகெங்கிலுமுள்ள 400 அணு உலைகளில் திரட்டப்படுகிற மின் சக்தி ஏழு விழுக்காடு. இந்தச் சொற்பமான மின் உற்பத்திக்கு ஏன் இத்தனை ஆயிரம் கோடிகள்? மக்கள் பாதுகாப்புக்கான மருத்துவர்கள் குழு கேள்வி எழுப்பியதுபோல், எதிர்கால அழிவை நம்மால் தாங்கிக்கொள்ள இயலுமா?

ரஷ்ய நாட்டின், சமதர்ம நிர்மாணத்துக்கு மின்சாரம் இயங்குவிசை என்பதை லெனின் கண்டறிந்தார். அதற்கான சாத்தியங்களை விரைவுபடுத்துமாறு நீர் மின்நிலையங்களை அமைக்குமாறு பொறியாளர்களைக் கேட்டுக்கொண்டார். லெனின் எதிர்பார்ப்புபோல், அப்துல் கலாமின் அணுப்பிளப்பு மின்சாரம் கிராமங்களின் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படப்போவதில்லை. உள் நாட்டு, வெளிநாட்டு ஆலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பயன்படப்போகிறது. கூடங்குளம் தமிழ்நாட்டில் இருந்தாலும் இது தரும் மின்சாரம் தமிழ் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கான வாய்க்காலாக அது மாறப்போகிறது.

“இந்தியா வல்லரசாகும் என்பதான கருத்துப் பரப்பப்படுகிறது. வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்பது மக்களின் லட்சியம்” என்று மகேசன்களின் இலட்சியத்தை மக்களின் இலட்சியமாகக் கலாம் காணுகிறார். இந்தியா வல்லரசு இல்லையென்றால் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் கால்களைப் பதித்துள்ள இந்தியப் பகாசுரர்களை என்னவென்று அழைப்பது? இந்திய ஆதிக்கச் சக்திகளுக்காக, உண்மையின் மேல் பொய்யைக் கட்டிநிறுத்தும் உரையாசிரியர் பணியை மேற்கொள்கிறார் என்பதல்லாமல், இந்தக் கூடங்குளம் பற்றி அவர் உதிர்க்கும் முத்துகள் எவற்றை முன்வைக்கின்றன?

கிராமங்கள் அணு உலை கேட்கவில்லை. மின்சாரம்தான் கேட்கின்றன. இந்திய முதலாளி தனது தொழிற்சாலையை எங்கு அமைக்கிறானோ அங்குதான் மின்சாரத்தைக் கொண்டுபோவான். அரசும் கொண்டுபோகும். கிராமத்திற்குப் போவதைவிட, அவன் நகரத்துக்குப் போகவே விரும்புவான், கிராமங்களின் தன்னிறைவான வளர்ச்சி பற்றி அவர்கள் மட்டுமல்ல, யார்தான் கவலைப்பட்டார்கள்?

காந்தி கிராமத்துக்குள்ளிருந்து தான் கிராமங்கள் வளர வேண்டும். அப்படித்தான் வளர முடியும் எனக் கண்டவர். இயற்கையை அழித்தல், இயந்திரப் பெருக்கம், பிரம்மாண்டமான திட்டங்கள் என்பதெல்லாம் அவர் புறந்தள்ளியவை. “இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பொருந்தியவாறு கடைப் பிடிப்பதில்தான் நமக்கு அணுகூலம் உள்ளது என்பதை இயற்கை காலம் காலமாக நமக்கு நினைவூட்டுகிறது.” எங்கெல்சின் இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துத்தான் வளர்ச்சியை உண்டுபண்ண வேண்டும். இயற்கையை அழிப்பதால் அல்லது மனித குலத்துக்குப் பொருந்தாத, அணுப்பிளப்பு மின்சாரம் போன்ற கொடூரமான செயல்களால் விளைவதல்ல வளர்ச்சி.

ஆனால் அணு ஆயுதச் சோதனை தான் அணுமின் நிலையங்களின் மூல நோக்கம். பொக்ரான் சோதனைக்குக் காரணகர்த்தாவாக இருந்ததால், அப்துல் கலாமுக்கு இந்தியாவின் முதல்குடிமகன் பதவி தரப்பட்டது.

தொழில்வளர்ச்சியில் அல்லது கலாம் சொல்வதுபோல் ஒரு வளர்ந்த நாடாகும் முயற்சியில் விளைந்த செயல்தான் போபால் யூனியன் கார்பைடு விபத்து. அந்த மோசமான பாதிப்புகளை நாம் அறிவோம். கலாமும் அறிவார். 1984இல் நடந்த அவ்விபத்து உடனடியாக 25 ஆயிரம் உயிர்களையும் சிறுகச் சிறுகப் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் காவுகொண்டது. அப்போது கலாம் ஓர் இளம் விஞ்ஞானி. யூனியன் கார்பைடு தொழிற்சாலையும் வளரும் நாடாக இந்தியாவை ஆக்கவே வந்தது. தோல், சுவாச நோய்கள், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகள் ஊனம் எனப் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீதியுள்ள மக்கள் மட்டும் மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்திருக்கின்றனர். பல உயிர்களைக் காவுகொண்ட இவ்விபத்திற்குக் காரணமான ஆண்டர்சனைக் குற்றவாளியாக அமெரிக்காவும் கருதவில்லை; இந்தியாவும் அப்படிப் பார்க்கவில்லை. அதன் காரணமாக அவர் மிக எளிதாக டிசம்பர் 3, 1984 விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே அமெரிக்காவுக்குத் தப்பியோட முடிந்தது. யூனியன் கார்பைடின் இந்திய நிர்வாகிகள். அரசு அலுவலர்கள், மேல்மட்ட அமைச்சர்கள், நீதிமன்றம் ஆகியோரின் கூட்டுச் சதியால் வெறும் ரூ 713 கோடி தொகை இழப்பீடு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வளரும் நாடாவதற்காக முட்டுக்கொடுக்கும் கலாம் அப்போது அணுசக்தித் துறையில் சில லட்சம் ரூபாய்களைப் பெற்றுபவராய் அமர்ந்து, அணு ஆயுதச் சோதனை என்னும் கனவில் மூழ்கியிருந்தார்.


“அணுசக்தி மூலம் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தியாகிறது. எனவே, முடியாது - ஆபத்து - பயம்கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தின் உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது” என்னும் கூற்றின் மூலம் போராடும் மக்களைப் பயந்த கூட்டம் என்கிறார்கலாம். அவர்கள் உயிருக்குப் பயந்து தான் போராடுகிறார்கள். உயிர் பிழைக்க வேண்டுமே, போராடாமல் என்ன செய்வது? அவர்கள் போராட முன்வந்தது அவர்களின் உயிர்காக்கும் தன்னலத்தால் மட்டுமல்ல; இனிவரும் தலைமுறைகளைக் காக்கும் பொதுநலத்தால்.

“அணுமின் நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி அவற்றை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அப்புறப்படுத்தினாலும் பெரிய இழப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே சமயம் இப்போதுள்ள தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிக்கும்” என இதையேதான் உலக சமாதானத்துக்கான நோபல் விருது பெற்ற ஒன்பது அறிஞர்கள் அறிவித்தார்கள். (20.4.2011, வாசிங்டன்)

“அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள். தலைவர்கள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்” எனச் சொல்வதுண்டு.

நம்முடைய நிகழ்கால அரசியல் தலைவர்கள்கூட, அடுத்த தலை முறைகளைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் வருங்காலத் தலைமுறைகள் பற்றி, சொத்துச் சேர்ப்பது, அரசியல் வாரிசுகளை உருவாக்குவது என்பவற்றில் தலை முறைகளின் தலைவர்கள் இவர்கள். அந்த ஒன்பது அறிஞர்களைப் போல், இனிவரும் தலைமுறைகள் பற்றிச் சிந்திக்காமல், அரசியல்வாதிகளுக்குத் துணைபோகிற உபதேசகராகத் தென்படுகிறார் கலாம்.

நாமல்ல, நாடுதான் முக்கியம் என்கிறார். இது போன்ற வசனங்களை அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உதிர்ப்பார்கள் அதுபோலவே ஆளும் சக்திகளுக்கும் நாடு முக்கியம். இந்த நாடு மக்களுக்கானதல்ல; தமக்கானது என்பதை அறிவார்கள்.

போதனையாளராக மட்டுமே கலாம் போன்ற பெரிய மனிதர்கள் வாழுகிறார்கள். அதற்குச் சிறிய உதாரணமுண்டு.

“ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது பத்து மரங்கள் நட வேண்டும். மரம் வளர்ப்பதை வாழ்நாள் பணியாகச் செய்ய வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க, காடுகளை வளர்க்க, சுற்றுச் சூழலை மனித வாழ்வுக்கு இணைவுடையதாய் ஆக்க 100 கோடி மரங்களை இந்தவகையில் இந்தியா நட முடியும்” (31.12.2009). கலாம் இந்தப் பொன் மொழி உதிர்த்த அதே மாதத்தில் தான், நீலகிரி, குன்னூர் பகுதிகளில் மலைச் சரிவுகள் நிகழ்ந்தன. அவற்றில் சிக்கி 42 பேர் இறந்தனர். நிலச் சரிவு இறப்புக்கும் வன அழிப்புக்கும் சம்பந்தமில்லையெனக் கலாம் கருதுகிறாரா? காடழிக்கும் கொள்ளையர்களாலும் துணைபோகும் அரசியல்வாதிகளாலும்தாம் மத்திய மாநிலங்களில் பழங்குடி மக்கள் எழுந்து போராடுகிறார்கள் எனக் கலாம் வாய்திறப்பாரா? வாய் திறந்திருந்தால் குடியரசுத் தலைவராக முடிந்திருக்காது. ஒரு போராளி ஒருபோதும் குடியரசுத் தலைவர் ஆக மாட்டார். அணு விஞ்ஞானியான கலாம் சமூக விஞ்ஞானியாகவும் மாற வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்னும் முனை முறிந்த ஆயுதத்தை வீட்டுக்குப் பத்து மரம் வளர்க்கக் கூர் தீட்டும் கலாமை நோக்கிச் சில கேள்விகள் கேட்போம். ஓர் அங்குல இடம்கூட உரிமையில்லாமல், தெருவோரத்தில், நடைபாதையில், புறம்போக்கில் வாழ்பவர்கள் எப்படிப் பத்து மரம் நடுவார்கள்? வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் அறுபது கோடி மக்கள், வாடகை வீடுகளில்தாம் வாழ்கிறார்கள். வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படாத இந்த வாடகை வீட்டுக்காரர்கள் எப்படி மரம் வளர்ப்பது?

2034ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூட சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. 2011 அக்டோபர் முதல் வாரம் இதற்கான சட்டவரைவு சுவிட்சர்லாந்து நாடளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

“இது எங்கள் நாடு; இவர்கள் எம் குழந்தைகள். எம் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அணு உலைகளை மூடுவது என்ற முடிவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என நாடளுமன்றத்தில் எரிசக்தித் துறை அமைச்சர் உரையாற்றினார்.

ஜெர்மனி புதிய அணு உலைகள் திறக்கத் தடைவிதித்துள்ளதுடன், முந்தைய அணு உலைகளையும் மூடிவருகிறது. இதனடிப்படையில் இந்த ஆண்டு இரு அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் சிலவற்றை மூடவிருக்கின்றன.

இதற்கு மாறாக மன்மோகன் சிங் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்கிறார். குழந்தைகளின் சிரிப்பையும் அணுவின் வெடிப்பையும் சமமாகக் கண்டு குதூகலிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி அப்துல் கலாம் இத்திட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என ஒத்து ஊதுகிறார்.

சுவிட்சர்லாந்து அமைச்சர் உணர்வதுபோல் இது இவர்களுக்குத் தமது நாடல்ல. தமிழ்நாட்டில் வாழ்வோர் அல்ல. இந்தக் குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் அல்ல.

விஞ்ஞானிகள் சிலர் சிறு பிள்ளை கள்போல் இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைத்தனமான விஞ்ஞானிகள் இருக்கக் கூடாது. ஆனாலும் கலாம் அவராகவே இருப்பார். அவர் என்பது மன்மோகன், சிதம்பரம், பிரணாப்களின் பிம்பம்தான்.

நன்றி: காலச்சுவடு - டிசம்பர் 2011

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ