பள்ளிக்கூடம் நாவல் ஏற்புரை

5 மே 2018 சனிக்கிழமை புதுச்சேரியில்  ‘பள்ளிக்கூடம்’ நாவல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. முழுமையாக ஆற்ற முடியாமல் போன ஏற்புரை இங்கு பகிரப்படுகிறது
- பா.செயப்பிரகாசம்



மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நூல் அறிமுக நிகழ்வினால் பேரா.கரசூர் கந்தசாமி, மாயவன் சந்ரு, ராஜிவ்காந்தி, ராஜா, கோகிலா, ஷைலஜா என்றொரு புதிய சிந்தனை வட்டம், செயற்களம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது: அடுத்த தலைமுறை புதிய சிந்தனைப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் புதிய தடங்கள்; வலுவான காலடி வைப்புகள்.

உலகைப் புரட்டிய சமுதாய அறிவியலை  நமக்கு அளித்த கார்ல்மாக்ஸின் 200-வது பிறந்த நாள் இன்று . இந்நாளில் ‘பள்ளிக்கூடம்’ அறிமுக நிகழ்வு அமைந்துவிட்டது. இந்த மேலான பெருமிதத்தை ‘ஐம்புலம்’ அமைப்பினர் ஏற்படுத்திவிட்டனர்.

“இந்த உலகை ஒரு பூதம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. அது முதலாளித்துவப் பூதம். இந்தப் பேயை விரட்டியடிக்காமல் உண்மையான சுதந்திரத்தையோ, மகிழ்ச்சியையோ மனித சமுதாயம் அடைய முடியாது”    இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்த அவருக்கு இன்று 200-வது ஆண்டு.

மார்க்ஸ் என்னை மனிதராக்கினார் : இன்று நானொரு மனிதனாக   உரையாடல் நிகழ்த்துகிறேன் எனில், திறவுகோல் அவர் அளித்தார்: என் பின்னாலிருந்து அவர் என்னை உந்தித் தள்ளியவாறு இருக்கிறார் என்பது மட்டுமல்ல,எனக்கு முன்னாலும் நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டுப் பெரியாரும் இந்தியாவின் அம்பேத்கரும் என்னை மனிதனாக வளர்த்தெடுத்தவர்கள்.


மனித சமுதாயம் வளர்ச்சி விதியில் உள்ளது : வரலாற்றின் வளர்ச்சியை அறிவுப்பூர்வமாக நடத்திட, ஆக்கமான சிந்திப்புக் கடமைகள் நம்முன் உள; அதை மார்க்ஸ் இவ்வாறு விளக்கினார்:
“அரசியல், விஞ்ஞானம், கலை, இலக்கியம், மதம் போன்றவற்றில் ஈடுபடுதற்கு முன் மனித இனத்துக்கு முதலில் உணவு வேண்டும். உடுக்க உடை வேண்டும். வசிக்க இடமும் வேண்டும். உயிர்வாழ்வதற்குரிய உடனடி இன்றியமையாப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்….. இந்த உற்பத்தியும் பொருளாதார வளர்ச்சி நிலையுமே மனித சமூகத்தின் அடித்தளங்கள். அரசு நிறுவனங்கள், சட்டங்கள், கருத்தியல்கள், கலை ஆகியவை, ஏன் சமயக் கோட்பாடுகள் கூட, இந்த அடித்தளத்தின் மீதே உருவாக்கப்படுகின்றன."
ஆகவே இந்த அடிப்படையில் மனிதகுலச் சிந்தனை, விடியலுக்கான செயல்முறை, கலை, இலக்கியச் செயல்பாடுகளை நாம் வளர்த்தெடுத்துக் கொள்ளவேண்டும்.அது ஒரு நீர்நிலை போல; நீர்நிலை அங்கேயே இருக்கும்; பசியதளிர்களும் தாவரங்களும் மரங்களும் சுற்றிலும் செழித்துப் பெருகிக் கொள்ளும்.அதுபோலவே கலை ,இலக்கியம் யாவையும்  இந்தச் சமுதாய அறிவியல் கோட்பாட்டு நீர்நிலையிலிருந்து மதமதர்ப்பாய் செழித்துக் கொள்ள வேண்டியவை.

கலை இலக்கிய தளத்தில் இலட்சியம், கோட்பாடு பற்றிப் பேசும் ‘அட்சராப்பியாசமே’ வேண்டாம் (எதுக்கு அதையே முணு  முணுத்துக்கிட்டு) என்ற பார்வை இன்று மூப்பாகச் செயல்படுகிது: இலட்சியப் புதினம் என்ற உச்சரிப்பும் கூட எடுபட்டு விட்டது. அல்லது கேலிக்கூத்தாக ஆகியுள்ளது. இவர் ஒரு இலட்சியர் என ஒருவரை அறிமுகப்படுத்தினால் ‘பிழைக்கத் தெரியாத மனுசர்’ என்பது போல் விழிகள் விரிய ஏறிட்டுப் பார்க்கின்றனர்; இலட்சிய வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு மனிதனுக்கு முதலாளிய சமுதாயத்தில் என்ன நிகழுமோ, அதெல்லாம் இலக்கிய வீதியில் இலட்சியப் படைப்புக்களுக்கும் நடக்கிறது.

’பள்ளிக்கூடம்’ புதினம் 2017-இல் வெளியானது: நூலை நெருங்கிய சகாக்களிடம் வாசிக்கத் தந்தபோது ஒரு அம்சத்தில் அந்த சகாக்கள் அனைவரும் உறுதியாக இருந்தார்கள்: ஒரு புதினமாக வெளிப்படவில்லை என்பது அந்தக்கருத்து. அவர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை உள்வாங்கிக் கொண்டு வம்சி  பதிப்பகத்தாரிடம் “எத்தனை படிகள் போட்டிருக்கிறீர்கள்?” என விசாரித்தேன். “நூறு படிகள்; எப்போதுமே விற்பனையாவதைப் பொறுத்து கூடுதல் பிரதிகள் அச்சிட்டுக் கொள்வது வழக்கம்” என வந்தது சைலஜாவின் பதில். எப்போதும் எந்தவொரு நூலுக்கும் வழங்கப்படும் நியாயம் போல் எனது இந்தப் புதினத்தையும் குறைந்தபடிகளே அச்சிட்டிருந்தனர்.

நாவல் வெளிவந்து ஒரு மாதம் கழித்து, திருவண்ணாமலையிலுள்ள வம்சியின் நிலத்தோட்டத்தில் ‘பத்தாயம்’ அரங்கில் வெளியீடு நிகழ்ந்தது: வெளியீட்டு நிகழ்வின் ஏற்புரையில் நான் குறிப்பிட்டேன். “பாருங்கள் . இந்த நாவல் வெளியானதில் உங்கள் யாருக்கும் திருப்தியில்லை.எனக்கும் திருப்தியில்லை, எவருக்கும் நிறைவு தராத ஒன்றை நாம் ஏன் கொண்டாட வேண்டும். புதினத்தை மீண்டுமொரு முறை பதிப்புச் செய்யத் தயாராகிக் கொள்ளுங்கள்”.

பெருமிதம் கொண்டு நிறையப் பகுதிகளை வெட்டிச்சுருக்கிய இரண்டாம் பதிப்பு உங்கள் கையிலிருக்கிறது.நான் நிறைய நிறைய வெட்டி, பின்னர் சேர்த்து எனப் பலமுறை செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.வம்சி பதிப்பகத்தார் எழுத்தாளனின் இந்தச் சேஷ்டைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு சளைக்காமல் சரிசெய்து திருப்பித் திருப்பி அனுப்பினார்கள்.  அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அரசியலுக்குரிய மனநிலையை இலக்கியவாதிக்குரிய மனநிலையிலிருந்து, பிரித்து தனித்தனி என்னளவில் சாத்தியப்படவில்லை:  என் தோழர் எழுத்தாளர் கந்தர்வன் இதில் வல்லவர்: இரு மனநிலைகளையும் தனித்தனி அடுக்குகளில் போட்டு, இரண்டையும் ஒன்றாகப் பிணைய விடாமல் காத்துக் கொள்வதில் அவர் சிறந்த படைப்பாளி. வாசிப்பினூடாக இந்த பொதுச் சமூகத்தின் அரசியல் வாசனையை முழுப்படைப்பிலும் உணரும் நாசித்துவாரங்களுடைய வாசகைனை உண்டாக்கிவிடுவார்.

என் இனம், என் மக்களைச் சொந்த ரத்தமாக எப்போதும் கருதியுள்ளேன்: அவ்வாறே கண்டு வருகிறேன். காரைக்காலில் 04.05.2018-இல் கடலோர மக்களின் ஆர்ப்பாட்டம்; எதற்கு எனில் துறைமுகத்தில் இறக்குமதியாகும் நிலக்கரியிலிருந்து எழும் தூசிப்படலம், துர்நாற்றம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கிறது: இரவும் பகலும் வட்டார மக்கள் நடமாட முடியாதபடி விரட்டுகிறது; இந்தச் சுற்றுச் சூழல் கேட்டை எதிர்த்துப் போராடுகிறவர்களான அவர்களுடன்  பருண்மையான உடல் அங்கில்லையெனினும், உணர்வால் அவர்களுடன் நிற்கிறேன்: தூசிப்படலம் என்னைத் தடுக்கிறது: நச்சுச் சுவாசிப்பு என்னுள் இறங்குகிறது: அவர்களைப் போலவே ஆரோக்கியமிழந்து நோயுற்றுப்போனேன். இதுதான் எனக்குள் இயங்கும், என்னை இயக்கும் அரசியல்.

இந்த அரசியலை எனக்குள்ளிருந்து எடுத்து வீசிட முடியாது.   இந்தப் பள்ளிக்கூடம் நாவலிலும் அது முகம் காட்டியுள்ளது: முன்வாசலிலும்   சன்னலிலும் தன் முகம் தெரியக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற எழுத்துலகச் சிற்பிகள் நடுவில் எனது முகமும் அகமும் தெரியக் கடவது என்றே எழுதுகோல் சுமக்கிறேன்.
சொல்லால் சேர்மானம் ஆவது எழுத்துக் கலை. எழுத்து மட்டுமல்ல, அதன் முப்பாட்டனான பேச்சும் சொல்லால் ஆன கலை.

சனவரி, 2015-இல் தலைநகர் சென்னையின் தலையில் வெள்ளம் நடந்தது: தண்ணீர்க் கல்லறைக்குள் மக்கள் மாட்டிக்கொண்ட பொழுதிலும் உயரத்திலிருக்கும் ஊட்டி – குடநாடு மலையினின்றும் இறங்கி வராத  அரசி ஜெயலலிதாவைக் கண்டோம். 
“இங்கே வெள்ளத்தில் சென்னை மூழ்குகிறது. நம்ம ஊர்ப் பக்கம் மழை எப்படி?”

 எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன்; அவர் சொன்னார், “இங்க அடக்கமாத்தான் இருந்தது”.

ஒரு சொல் இங்கு கலையாகிறது: நாட்டுப்புறச் சொந்தங்களிடமிருந்து வெளிவரும் சொல்லாட்சி என்னை மிரளவைக்கிறது: இந்த மேதமை அங்கு ஒவ்வொரு ஜீவனிடமும் இயல்பாக இருக்கிறது.

எந்த விசயத்தைப் பேச எச்சொல்லைப் பயன்படுத்தல், சொற்களைக் கலைத்தல், நேராய் அடுக்குதல், எப்படி வீசினாலும் அந்த எழுத்து வீச்சு கலையாக வேண்டும்.

மூன்று திக்கும் மலைகள், நடுவில் பள்ளத்தாக்கில் குவியும் நீரைத் தேக்கி வைக்கும் அணை போல சொற்களின் இடையில் குவியும் மவுனம். அது வாசகனின் திறனைப் பொறுத்து எவ்வளவு வேண்டுமாயினும் திறந்துவிட்டுக் கொள்ளலாம்.

இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து பொதுச்சமூகம் பெற்றுக்கொண்டதோ, இல்லையோ எழுதியவன் என்ற வகையில் நிறையக் கற்றுக் கொண்டேன்: முதற்பதிப்பு   கலை வடிவாய் வெளிப்படவில்லை என்ற பாடம் கிடைத்தது. புதினம், சிறுகதை என்பதற்கான கட்டுக்கோப்பு  ,அந்தப் பழைய சட்டதிட்டம் இன்றில்லை: அதெல்லாம் அத்தப் பழசாகிவிட்டது. இன்று ஒவ்வொரு விசயத்துக்காகவும், அதற்கென தனி எடுத்துரைப்பு முறை உருவாகிறது. நாவல், சிறுகதை வடிவக்கென்று வடிவ வரையறுப்பு இருந்த காலம் மலையேறிவிட்டது.அந்தந்தப் பொருண்மைக்குத் தக்க தனியான உருவத்தை எடுத்துக்கொள்ள, மற்றவர்கள் சுவைத்துப் படிக்கிற காலமாகிப்போனது:

கி.ரா.வின் கோபல்லகிராமம் புதினம் வெளியானபோது, கோபாக்கினியான விமர்சனங்கள் எழுந்தன: இது நாவல் என்ற வடிவத்துக்குள் வரவில்லை என்றனர்: எப்படி இதை நாவல் என்று சொல்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்த வேளையில் அவரிடமிருந்து வந்த பதில் “  நாவல் என்று நான்சொன்னேனா? நான் எனக்குத் தெரிந்ததை எழுதினேன். நீங்களாக அதற்கு ஒரு பெயரிட்டுக் கொண்டு என்னிடம் கேட்காதீர்கள்”

புலப்பெயர்வு வரலாற்றை – ஒரு சுயகதை போல் சொல்கிற முயற்சியில் ஈடுபட்டார். அவை தமிழ்க்கதையுலகுக்கு, ஏன் உலக இலக்கியத்துக்கு புதிய விசயங்களாயிருந்தன: அவருக்கே உரித்தான மொழிநடை, வெளிப்பாட்டுத் தன்மை கலை நியாயமாயிற்று.

நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பேரா.க. பஞ்சாங்கம், பேரா.மு.சு.கண்மணி, ஆயிஷா மூவரும் அங்கீகரிக்கப்பட்ட கல்விப்புலச் சிந்தனையாளர்கள். தமிழ்ப் படைப்புலகினதும், ஆய்வுத்தளத்தினதும் சாதனையாளர்கள்.

பேரா.க.பஞ்சாங்கம் ஒரு படைப்பாளி: புதின ஆசிரியர் : கவிஞர் என்பதினும் மேலாய் ஆய்வாளராகவே இன்றளவும்  முன்னிறுத்தப்படுகிறார். பன்முக வானவில், ஏன் ஒற்றை அடையாளத்துடன் மட்டும் நோக்கப்பட்டு வருகிறது? ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’   பனங்காட்டு வாழ்வு, பனைத்தொழில் பற்றித் தமிழில் முதலில் பேசிய புதினம்; பனைவாழ்வியலின் இனக்குழு மொழி அவருக்கு வசப்பட்டிருந்தது. பனைத்தொழில், பனங்காட்டுவாழ்வு   சிதைவுண்ட கதையை பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ நாவல் முன்னிறுத்தி நடக்கிறது. ’அக்கா ‘ நாவல் ஏன்  பெரிதும் பேசப்படவில்லை என்பதை சிந்திக்க வேண்டிய நேரமிது.தமிழ் இலக்கிய உலகத்துக்கும் ஒரே நோங்காய் நோங்குகிற நோய் உள்ளது.

“ஐநூறு நாவல்கள் வாசித்திருப்பேன்; இதுவரை ஒரு நாவலும் எழுதினேனில்லை. ஒருநூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். ஒரு சிறுகதை கருவாகி, உருவாகி விளைந்ததும் முற்றுப்பெறுகிறது: நாவல் என்பது இப்பேர்ப்பட்ட பல சிறுகதைகளின் தொடர்ச்சி”.

முன்னுரையில் இவ்வாறு எழுதியிருந்ததைப், பஞ்சாங்கம் விமர்சனப்பூர்வமாக அணுகுகினார்.

“நாவலும் சிறுகதையும் ஒன்றே போல்வன அல்ல: கதை புனைதல் என்ற வினை இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம்: வடிவம் வேறானது: ஒரு படைப்பாளிக்கு வடிவம் பற்றிய ஓர்மை முக்கியமாகும். மற்றொன்று அவைகளின்  மொழி;   சிறுகதையின் கவித்துவத்துக்கும் நாவலின் கவித்துவம் எனக் கருதப்படுவதற்குமான வேறுபாடு உண்டு. நாவல் பல பக்கங்களையும் ஒரு முகமாக்கி கொண்டு செலுத்தும் வடிவமே அதன் கவித்துவம்” என்ற கருத்தை முன்வைத்ததார்.

பேரா.மு.சு.கண்மணி பெண்ணிய, பெரியாரியச் சிந்தனையாளர். சாதிய முரண்  , ஆணாதிக்கச் சிந்தனை,செயல்கள் – அத்தனையையும் மீறி, அன்னக்கிளி, ரங்கா, யசோதை எப்படி வெளிப்படுகிறார்கள் என்ற பார்வையை அழுத்தந் திருத்தமாகப் பதிந்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலம் பொறுப்பாளராக இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

The little village school –என்ற ஆங்கில நாவலை ஒப்பிட்டு தன் பார்வையை விரித்து வைத்த ஆயிஷா நடராசன் , பேச்சு முழுவதும் கல்வியியல் சிந்தனையாகவே   நடத்திச் சென்றார். கல்வி, கல்விப்புலம் பற்றி வெளியான குறிப்பிடத்தகுந்த ஐந்து நாவல்களில் பள்ளிக்கூடம் நாவல் ஒன்று; கல்விப்புலத்தின் சாதிய முகமூடியைக் கிழித்து நம் மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது: கல்வியாளர் என்ற போர்வையில் இன்று ஊடகங்களில் வரும் போலிகளை எப்படி அடையாளம் காண்பது, கிராமப் புற அரசுப்பள்ளிகள் ஏன் மிகமிகத் தேவை, கல்விக்கான போராட்டம் அரசுப்பள்ளிகளைக் காக்கும் போராட்டமாக ஏன் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை – ஒரு கல்வியாளரான படைப்பாளி எவ்வளவு சரளமாக உதிர்க்க முடியுமென்பதற்கான நிரூபணம் அவர். மூன்று முக்கியமான கேள்விகளை  நாவலாசிரியரிடம் எழுப்பினார்:
  1. கல்விப் புலத்தின் குறைகள், நடக்கும் அநீதி போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும்   படைப்பாளி, பாடத்திட்டம், கல்விமுறை பற்றி ஏன் பேசவில்லை? கற்றுக்கொள்ளவேண்டிய பதின்ம வயதுகளை மலட்டுச் சிந்தனைகளின் உடல்களாக நடமாடவைக்கிறது இவை  என்பது பற்றி சிறுதடயமும் ஏனில்லை?
  2. தலைமையாசிரியர் பொறுப்பில் அப்துல் கனியை வைத்து இயக்கும் எழுத்தாளர், அதே இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை வைத்து   சித்தரிக்க இயலுமா? அதேபொழுதில் ஒரு பெண் அந்தப்பள்ளித் தலைமைப் பொறுப்பில் அப்துல்கனி போல் செயல்பட்டிருக்கக் கூடுமா? சாத்தியப்பட்டிருக்குமா?
  3. சாதி மீறி காதல் வசப்படும் யசோதையை அவருடைய சாதியாளர்களே பள்ளிக்கூட வகுப்பறையிலிருந்து அடித்து இழுத்துச் செல்வதான சித்தரிப்பில் ஒரு கேள்வி. பெண்பிள்ளைகளுக்குப் பள்ளியிலே பாதுகாப்பில்லை என்ற எதிர்மனநிலை பெற்றோர்களுக்கு உருவாக வாய்ப்பு உண்டாக்கித் தருமா, இல்லையா?
ஆயிஷா நடராசன் எழுப்பிய மூன்று அம்சங்களும் தீவிர சிந்தனைக்குரியன.

ஆனால் முத்துராக்கு – அன்னக்கிளி மணநிகழ்வில் மூத்த ஆசிரியர் ஜான் ஆற்றும்  வரவேற்புரையில் சிறுகுறிப்பு வருகிறது.

“பள்ளிக்கூடம் என்பது நாற்பதுக்கு முப்பது அடி நீள, அகலமுள்ள வகுப்பறை அல்ல. கல்வி என்பது முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை திறக்கப்படுகிற பாடப்புத்தகம் அல்ல; கற்றல் கரும்பலகையிலும், ஆய்வுக் கூடத்திலும் இல்லை. பள்ளிக்கணக்குப் புள்ளிக்கு உதவாது. பாடப்புத்தகம் ஒட்டுமொத்தத்தில் நாக்குவழிக்கத்தான் பயன்படும்.

“படி,படி,நல்லாப்படி. முதல் மாணவனாய் வா. வேலைவாங்கு. லட்சம் ரூபாய் சம்பளம். ஆனால் மனுசனா இருக்க வேண்டாம். இதுதான் நம்ம கல்வி. இந்தப் பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது” என்றொரு குறிப்பு வருகிறது. பொத்தாம் பொதுவான குறிப்பு மட்டுமே இது. பாடத்திட்டம், அதை வகுக்கும் வர்க்கம், அதன் சிந்திப்புநிலை, கல்விமுறை, தேர்வு, மதிப்பெண் என்ற இந்த லொட்டு லொசுக்குக்குள் நான் நுழைந்து பார்க்க அப்போது தோனவில்லை.

குடும்பம் முதல் நாடாளுமன்றம் வரை ஆணதிகாரம் செல்லுபடியாக்கப்படுகிறது: பெண் முடக்கப்படுகிறாள்: அதுபோலத்தான் தலித்துகள் நிலை. தலைமைப் பொறுப்பில் பெண், அல்லது தலித் என நான் ஏன் வைத்துப் பார்க்கவில்லை? பார்த்திருந்தால், ஏடாகூடமாக, கந்தர் கூளமாய் ஆகிற வேறொரு கதை உண்டாகியிருக்கும். ஒரு முன்னடி வைத்துள்ளேன். பின்னால் வருகிற என் பிள்ளைகள் செய்துமுடிப்பார்கள்.

மூன்றாவதாய் –பள்ளிக்குள் இருந்து யசோதை என்ற மாணவி இழுத்துச் செல்லப்படுவதைக் கேள்வியுறும் பெற்றோர் தம் பெண்பிள்ளைகளுக்கு பள்ளி   பாதுகாப்பானதாக இருக்குமா என்று பதைபதைப்புக் கொள்ளமாட்டார்களா என்ற கேள்வி.

”யசோதை இழுத்துச் செல்லப்படுவதை அதிர்ச்சியுடன் தமிழாசிரியை மணிமேகலை பார்க்கிறாள். அதுவும் அவருடைய வகுப்பிலிருந்து. ஆவேசத்துடன் வெளியே வந்து “ டே நாசமாப் போவீங்கடா” என்று இழுத்துப் போகிறவர்களைத் தாக்குவது போல் கத்தினாள். ” இதக் கேக்கிறதுக்கு நாதியில்லையா? பொம்பிளக எங்களுக்கு நீதியே கிடையாதா?” ஆசிரியர்கள் கூடிய அறையில் கூக்குரலிட்டாள்.(பக்215-216).”

இந்தக் கோபம் தான் பெற்றோர் கோபத்துக்கான குறியீடு. ’பொம்பிளைக எங்களுக்கு நீதியே கிடையாதா’ என்ற கேள்விதான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் குமைந்து மண்டிக்கிடக்கும் விம்மல்.அதற்கான பதிலைச் சாத்தியப்படுத்துவதே பெண் சமுதாயத்துக்கான பணி.

கருத்தியல் தளத்தில், வடிவ வெளிப்பாட்டில் இந்த அரங்கில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை உள்வாங்கியதாய் என் அடுத்த புதினம் “மணல்” அமையும் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



பள்ளிக்கூடம்
புதினம். விலை ரூ250/+
வம்சி பதிப்பகம்,
19 டி.எம். சாரோன், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 94458 70995

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌