மநுவின் நூலை எரித்தால் என்ன?


சாதி ஆணவக் கொலைகள்:
மார்ச் 8 மகளிர் நாள்; கொண்டாட்டங்களால் சடங்கு செவ்வனே நிறைவேறிற்று; தலைவிகள் தமக்குத் தாமே மருடம் சூட்டிக் கொள்ளல், புகழ் மாலைகள் என முந்தைய ஆண்டுகளினும் கூடுதலாய் இரைச்சல் அமோகமாய் விளைந்தது. அதுபாட்டுக்கு அது நடக்கட்டும்; இதுபாட்டுக்கு இது நடக்கும் என்று மார்ச் 13-ஆம் நாள் உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்தின் எதிரில் “கொலையாளா்கள்” வெறிகொண்டு ஆடினார்கள். காதலரில் தலித் இளைஞன் சங்கர் இறந்து போக, வெட்டுப்பட்ட ஆதிக்க சாதி இந்துப் பெண் கவுசல்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

”இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்.எஸ்.எஸ் சங்கலபம் பூண்டால் என்ன?”- என்றொரு கட்டுரையை, ஞாயிறு, மார்ச் 20, 2016 தமிழ் இந்து நாளிதழில் தந்திருந்தார் சமஸ் என்பவர். “ஆர்.எஸ்.எஸ் ஒருபக்கம் தீண்டாமை ஒழிப்பைப் பேசுகிறது. மறுபக்கம் மநு நீதியைக் கையில் ஏந்தி இருக்கிறது“ என்கிறார். மநு நீதியை ஏற்றுக்கொள்பவன் தீண்டாமை ஒழிப்பைப் பேச இயலுமா? அவ்வாறு பேசினாலும் ஒரு பாவனையாகத்தான் இருக்க முடியுமேயன்றி, உண்மையாக இருக்க முடியுமா? “சாதி அமைப்பு என்பது சமூக முன்னேற்றத்தை தடை செய்யவில்லை; சமூக முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு சாதி மிகப்பெரிய பங்காற்றி வருகிறது” ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதாமகனான கோல்வால்கர் கூற்று இது; தங்களின் ’கோட்பாட்டு யாப்பை’ வகுத்தளித்த குருவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார்கள் நடைபயில்வார்களா, என்ன? அதிலிருந்து முறித்துக் கொள்கிறபோது மட்டுமே நல்வழிப் பயணம் மேற்கொள்வார்கள். ஏ.பி.வி.பி, ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவர் அமைப்பு; ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஏ.பி.வி.பி அமைப்பிலிருந்து வெளியேறிய அந்த ஐந்து மாணவர்கள் சொன்னார்கள்: “மநு ஸ்மிருதியை எரிப்பதில் தவறென்ன? மானுடத்துக்கு அழிவைக் கொண்டுவருகிற எதனையும் எதிர்ப்பது எம் உரிமை. மநு ஸ்மிருதியின் பிரதிகள் எரிக்கப்படுவது இது முதல்முறையல்ல; இதற்கு முன்பே பலமுறை எரிக்கப்பட்டுள்ளது.” (Indian express 22-03-2016) இந்த மாணவர்கள் கோல்வால்கரின் கொள்கையிலிருந்து வெளியேறிய மாணவர்கள். கோல்வால்கர் எதில் ஊன்றி நின்றாரோ அந்த மனுதர்மத்தில் சமுதாய அழிவைக் காணுகிறவர்கள்.

2

“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி. சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா - யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள். காதலால் தனிமனிதனுக்கு - கூட்டுச் சமூதாயத்துக்கு கிட்டும் பலாபலன்களைக் வரிசையிட்டிருப்பான் அக்கவிதையில். காதலினால் மனத்தில் உறுதி உண்டாகும் என்பது கவிஞன் வார்த்தைகளுக்குள் இறங்கிக் கிடக்கிறது. காதலினால் துளி உறுதியும் உண்டாக இடம் தரக்கூடாது என்று கங்கணம் கட்டி, காதலுக்குப் பாடைகட்டிக் கொல்லும் வழி போகின்றனர் ஊரினிலே காதலென்றால் உறுமும் ஒருகூட்டம்.

பூ மலர்ந்தால் பிஞ்சு கட்டும்: பிஞ்சு கட்டினால் காய் வரும்: காய் பழுத்தால் கனியாகும். காதல் பூ மலர்ந்து கனியாகிறபோது விதைகள் உண்டாகின்றன. விதைகள் குடும்ப விருட்சமாய் விரிகின்றன. இந்தப் பெருமரத்தின் நிழல் சகல தடைகளையும் உடைத்தெறிந்து வந்தடைகிற மாண்பாளா் அனைவரையும் அனைத்துக் கொள்ளும்; காதல் செய்வதால் உண்டாகும் இந்த ஆரோக்கியமான பெருமரச் சமுதாயத்தின் நிழலில் உரம்பெற்றுப் புதியன படைக்க கூட்டமாய்ப் புறப்படுவார்கள்.

பூ இருந்தால் தானே பெருமரம் உருவாகும், பெருமரம் இருந்தால்தானே புதியன செய்ய பெருங்கூட்டம் புறப்படும்; பூவிலேயே உதிர்த்து விடுதல் நல்லது. பூ உதிர்க்கச் செய்யும் தொடக்கப் புள்ளியில் உயிர் உலுக்கிச் சரிக்கின்றன சாதிக் கட்சிகள்.
கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே தோன்றியவன் தமிழன் - சரிதான்; யாதும் ஊரே, யாவரும் கேளிர்- தமிழன் மந்திரம் ; சாதி இரண்டொழிய வேறில்லை என்றவள் தமிழச்சி- எல்லாம் சரி! படோடோபமாய் மேடையில் எதை எதை உதிர்க்கிறோமோ, அந்தப் பலூன்களை உடைத்து “இங்கு ஒரே ஒரு தமிழன் மட்டுமே உண்டு. சாதித் தமிழன் ” என்று சாதியின் பெயரில் ஆணவக் கொலை செய்கிறவனை எதில் சோ்ப்பீா்கள்?

தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என்று கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டில் 82 ஆணவக் கொலைகள்; உத்தரப் பிரதேசம், பீகாருக்கு அடுத்த நிலையில் தமிழகத்தில் அதிகக் கொலைகள்; ஆனால் சாதீயப் படுகொலைகள் என்று பதிவு செய்யாது ,வழக்கும் தொடராது அலட்சியப் படுத்திப்படுத்துகின்றன காவல் நிலையங்கள். காவல்துறையின் சாதியசார்பு அதுதான். தேசியக் குற்ற ஆவணப் பதிவகம் தந்த விவரப் பட்டியல் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த கவுரவக் கொலைகள் பற்றி அறிக்கை கேட்டது. தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அறிக்கை அளித்தன. “தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்கவில்லை; பின்னர் எப்படி அறிக்கை தருவது?” என்று சட்டமன்றத்திலேயே முழுப்பூசணிக்காய் முழுங்கினார் அ.தி.மு.க அவை முன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பட்டப்பகல் வெள்ளை வெயிலின் கீழே - மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தின் எதிரில் - ஐவர் கும்பலால் சங்கா் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் கொலை செய்யப்படுகிறார். அவர் ஒரு தலித்; கவுசல்யா இந்து உயா் சாதிப் பெண். இருவரும் பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் கற்கையில் ஒருவரோடு ஒருவர் விருப்பம் கொள்கிறார்கள். காதல் என்பது மனிதமனத்தில் பிறக்கும் ஒரு இயல்பூக்க உணா்வு. பெண்ணும் ஆணும் மனித உயிரி; சாதி, மதம், மொழி, இனம் என்று பாராமல், வயதுவந்ததும் அந்த உயிரிக்குள் இயல்பூக்க உணா்வு எழுகிறது.எழாமல் கருகவைக்க வேண்டும்;காதல் செய்வதும் திருமணம் செய்வதும் சொந்த சாதிதாண்டி, வேறு சாதிக்குள் நடந்ததால் இருவரையும் கொலை செய்யவேண்டுமென பின் தொடர்ந்தார்கள். கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் சங்கரின் வீட்டுக்கே வந்து ஏற்கனவே மூன்றுமுறை கொலை மிரட்டல் விட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் ஆண்டு தவறாமல் 900 கொலைகள் நடக்கின்றன. இதில் 65 விழுக்காடு சாதி ஆணவக் கொலைகள். எவிடென்ஸ் கதிரின் கூற்றுப்படி, தமிழகத்தில் 2013- ஜூலை முதல் 82 ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்டோரில் 80 சதவீதம் பேர் பெண்கள்: 20 சதவீதத்தினர் தலித் இளைஞர்களாக இருக்கிறார்கள். தலித்துகளை ஒடுக்குவது மட்டுமல்ல, பெண்ணை அச்சுறுத்தி அடக்கி வைக்கும் அபாய மணி ஒலிப்பு இந்த ஆணவக் கொலைகளுக்குள் பதுங்கி இருக்கிறது. சாதி அமைப்பினர் ஒலித்துக் காட்டுகிறார்கள்.

தெற்குச் சீமையில் குறிப்பிட்ட வட்டாரத்தில் ராணிமங்கம்மா காலத்துச் சாலை ஒன்றிருந்தது; அந்த மனிதாய அரசி நட்டுவைத்த புளியமரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் வரை வரிசையாக நின்றன; மரங்கள் காய்த்து, கனிந்து, புளி கொடுத்து ஓய்ந்து விட்டாலும், சாலைநிழல் தந்துகொண்டிருந்தன; ஒரு இரவில் எவரும் அறியாமல் மரத்தின் அடிகிளறி அமிலத்தை ஊற்றினார்கள் பாதகர்கள். பட்டுப்போன மரங்கள் மறுமாதம் ஏலத்துக்கு வந்தன.

சாதி வெறி உள்ளில் கொதிக்க, காதல் வேரில் அமிலம் ஊற்றி பட்டுப்போகச் செய்ய முயலுவார்கள். காதலைத் துண்டிக்கும் முயற்சி தோற்றுப் போய்விடும் வேளையில், உயிரோடு கருக்குவார்கள்.தன்னை விட்டுப் பெண் மீறிப் போய்விடக்கூடாது என்கிற ஆணாதிக்கத்தின் மொழி இது. சாதிச் சங்கத்தை நடத்துகிறவா்களெல்லாம் யார்? ஆண்கள் தாம்.

“புறச் சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குள்ளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை – ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான்; ஒரு பெண் நான்காவதாய் ஒரு மலையைச் சுமக்கிறாள். அது ஆண் ஆதிக்கம்” என்கிற ஒரு வாசகம் உண்டு.

அச்சம் தவிர் - பாரதி மனித குலத்துக்கு வழங்கிய ஆத்திசூடி; “அச்சம் கொள்” - குறிப்பாய் தம்மகளிர் கூட்டத்துக்கு, தலித்மக்களுக்கு சாதி அமைப்புகள் தரும் புதிய “ ஆத்திசூடி” .
”காதல் கொள் - சொந்த சாதிக்குள்;
கட்டுப்படு - உன்சாதிக்கு;
காதல், கலப்புமணம் என்ற கற்பனைகளுக்குள் நீந்தாதே. அழிக்கப்படுவாய்”
- என்று கொலை மூலம், கவுசல்யாவை மட்டுமல்ல, சொந்த சாதிப் பெண்கள் அனவரையும் அச்சுறுத்தி வைக்கிறார்கள். கொல்லப்படுவது சொந்த ரத்தமாக இருந்தாலும் கவலையில்லை.

தம் சாதிப் பெண்டிர் கலாசாலைகளுக்குப் போவதினால் அல்லவா காதல் விருப்பம் கொள்கிறார்கள். பணியிடங்கள், அலுவலகம் என்னும் உலகத் தொடா்புகளால் தானே இந்த விருப்பம் உருவாகிறது. கல்வியும் கூடாது, வேலைக்கும் வெளிப்படக் கூடாது என்று “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதா்கள்” உருவாகியிருக்கிறார்கள். கலப்பு மணம் கூடவே கூடாது என்று எண்ணுகிற சிந்திப்பு சாதிய அமைப்புக்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் வாழுகிறது என்பதை உடுமலைப்பேட்டை கொலையில் சரணடைந்துள்ள பெண்ணின் தந்தை காட்டியிருக்கிறார். மருமகனைக் கொன்றுவிட்டு, மகளைக் கொல்லும் கொலைமுயற்சியில் கைதாகி காவலிலிருக்கும் தந்தை சின்னசாமியின் முகத்தைப் பாருங்கள்; அசையாது மாவீரன் போல் நிற்கிறான். கொலை செய்த எந்தச் சலனமும் தென்படாத அந்த முகம் - “எனக்கு சாமியை விட சாதி தான் பெரிசு” என்று சொல்லுகிறது - இந்த முகங்களின் கூட்டம் தான் சாதி அரசியல் கட்சிகள். உடுமலைப்பேட்டையில் நடத்திய சாதி ஆணவக்கொலை பற்றிக் கருத்துக் கேட்டபோது, பதிலேதும் சொல்லாது, செய்தியாளர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்துபோன ராமதாஸின் முகத்தையும், அந்தக் கொலைமுகத்தையும் ஒருகணம் நோக்குங்கள். கொலைக்குக் காரணமாயிருந்த அந்த தந்தையைப்போல் ஆயிரக்கணக்கில் தொண்டர்களை உருவாக்கிய சாதியத் தலைமைகள் தெரிவார்கள். உரிமையற்ற பிராணிகளாக பெண்களை வைத்திருப்பது என்பது பா.ம.க-வின் ராமதாஸ் தொடங்கிவைத்தது. ”காதல் நாடகமாடி பணம் பறிக்கிறார்கள்” என்று அவர்தான் சொன்னர். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு சாதி அமைப்பு இதில் உச்சத்திற்குப் போயுள்ளன. வெட்கமற்று இந்தத் தலைமைகள் சாதித்துவ மலத்தைச் சுமந்து திரிகிறார்களே, இந்தக் கொடிய கூட்டங்களுக்கு முன்னோடிக்கூட்டமான ஆர்.எஸ்.எஸ்-ஸூம், சங் பரிவார்களும் தூக்கிப் பிடிக்கும் இந்த ’மநுதர்ம சாஸ்திரம்’ சாதித்துவத்தின் வெறும் எழுத்து வடிவமல்ல; குறிப்பிட்ட கால வரலாற்று, அரசியல் , சமுதாயப் போக்கின் கருத்தினைப் பாதுகாக்கும் யாப்பு அது.

3

சாதி ஆணவக் கொலைகள் வேறு எந்த சாதியினரையும் நோக்கி நடத்தப்படுவதில்லை; தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி மட்டுமே நடத்தப்படுவது ஏன்? இருக்கிற நிலைமைகளை அனுமதிக்க மறுப்பவர்கள் கீழே. நிலைமைகளைத் துளியும் மாற்ற விரும்பாதவர்கள் மேலே. நேற்றிருந்த ஹரிஜனங்கள், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதியினர் இன்றில்லை; இவர்கள் இப்போது தலித்துகள்: தாழ்த்தப்பட்டோராய் இருந்து தலித்துகளாய் எழுச்சி பெற்றிருக்கும் இந்த உயரம், ஆதிக்க சாதியினரைத் தூங்கவிடாமல் செய்கிறது. சாதியம் கடந்த மனித உறவு வேண்டாம்; சாதிய உறவு மட்டுமே வேண்டுமென எண்ணுகிற இவர்கள் முதலில் கைவைப்பது தம்மினப் பெண்டிரைத்தான். இந்தச் சேதியின் சாரத்தை மண்டலம் மண்டலமாய்ப் பிரித்து தத்தம் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் வேறுவேறு சாதித் தலைமைகளுக்கும் கடத்துகிறார்கள். சாதி ஆணவக் கொலைகளுக்காய் நீளும் கரங்கள்தாம் - கூட்டணி அமைக்கும் கரங்களாகவும் நீளுகின்றன என்ற உண்மையை மறைக்க வேண்டியதில்லை. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் - குஞ்சுகளை தமது செட்டைகளுக்குள் அரவணைக்கும் தாய்க்கோழிகள் போல் ஆணவக்கொலைகளின் ஆதார சக்திகளான சாதிக்கட்சிகளை பாதுகாக்க முயல்கின்றன. சங்கர், கவுசல்யாவின் பச்சை ரத்தம் உடுமைலைபேட்டை நகரவீதியில் காயாமலிருக்கிறபோதே, கொங்கு வேளாளர் கட்சித் தலைவன் தனியரசோடு, மற்றொரு சாதிக்கட்சியான ’பார்வர்டு பிளாக்குடன்’, வன்னியர் சங்கத்தின் கிளையான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகனுடன் அ.தி.மு.க கூட்டணி ஒப்பந்தம் போடுகிறது. தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்ட பா.ம.க.வின் கூட்டுக்காக பா.ஜ.க பேச்சுவார்த்தை செய்து கொண்டு காத்திருக்கிறது.

தி.மு.க சாதி ஆணவக் கொலையை தொண்டையை விரித்துக் கண்டிக்கவில்லை. 1967-ல் ஆட்சிபீடமேறியதும், ஏற்கனவே கைவசம் வைத்திருந்த ”பெரியார் பாதை”-யை நிரந்தரமாக மூடிவிட்டார்கள். தேர்தல் என வந்தால் அப்போது தி.மு.க.வின் சாதி முகம் அப்பட்டமாகக் கழன்று தொங்குகிறது. தாழ்த்தபட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையாக இந்தப் படுகொலையை அவர்கள் காணவில்லை; ”தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம், ஒழுங்கு எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதின் உச்சகட்ட கொடூரம்தான் உடுமலை சம்பவம்” என்று சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் காணுகிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின். (16-03-2016) ”அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் நிலவ தி.மு.க பாடுபடுகிறது” என கருணாநிதி கூறுகையில் சாதிவெறிக் கொலையாளர்களையும், பலியாகும் தாழ்த்தப் பட்ட இனத்து மக்களையும் சமமாகப் பார்க்கும் பார்வையின் உள்ளார்த்தம் புரிகிகிறது. ”இன்னும் தயக்கம் ஏன்? எமது பக்கம் வாருங்கள்” என்று சாதிக் கட்சிகளுக்கு விடுக்கும் அழைப்பு இது.

சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பில் டில்லியிலிருக்கிற உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது; “சாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக் கேடாகும். சாதி முறையை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது. உண்மையிலேயே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னுள்ள எல்லா சவால்களையும் சந்திக்க வேண்டிய வேளையில், சாதி நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. சாதிக்கலப்புத் திருமணம் என்பது சாதிமுறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால், அவை நாட்டு நலனுக்கானவை. சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் வன்முறைகளால் பயமுறுத்தவதாகவும், வன்முறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதுமான அமைதி குலைக்கும் செய்திகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன... “தாங்களாகவே விரும்பி சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை கொல்லும் கெளரவக் கொலைகள் பற்றி கேள்விப்படுகிறோம். இத்தகைய கொலைகளில் கெளரவம் ஏதுமில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமாயின் அச்செயல்கள் கடும் தண்டனைக்குரிய கொடிய பிரபுத்துவ மனங் கொண்டவர்களால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான கொலைகள் தானே தவிர, வேறொன்றுமில்லை” உச்சநீதிமன்றம் காட்டிய வெளிச்சத்தின் கீழ் தருமபுரி இளவரசன் – திவ்யா, ஓமலூர் கோகுல்ராஜ், குமராலிங்கபுரம் சங்கர் - கவுசல்யா காதலைப் புதைத்த கொலையாளிகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தருமபுரியாக உருவெடுத்து இளவரசன்கள் - திவ்யாக்களின் கதைகள் தொடருகின்றன.

சாதி ஒழிப்பு இல்லாமல் சாதிய விடுதலை சாத்தியமில்லை. குறிப்பாக தாழ்த்தப்பட்டமக்கள் என்ற இழிவு இல்லாமல் செய்கிறபோது, சாதிப் பிரிவுகள் தன்னாலே தூர்ந்து போகும். கடைசிக்கும் கடைசியாய், கீழினுக்கும் கீழாய் இருக்கும் தாழ்த்தபட்டவன் இல்லாமல் ஆகிறபோது, மேலிருக்கும் அடையாளங்களும் அற்றுப்போகும். ஆனால் சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்று உபதேசிக்கும் கட்சித் தலைமைகளும் சாதியை ஒழிப்போம் என்று பேசுவதில்லை; சாதிக் கட்சிகளின், குழுக்களின் வாக்கு வங்கியில் தேர்தல் வெற்றி தங்கியுள்ளது காரணம். கேரளாவைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைக் கட்சித்தலைவர் கியூபா சென்றார். கியூபாவின் புரட்சியாளர்களின் தலைவரைச் சந்தித்த பின்னர் “இந்தியாவின் பெருமை” என்று கூறி கியூபா புரட்சியாளனுக்கு ஒரு நூல் வழங்கினார். நூல் – கீதோபதேசம், பெற்றுக்கொண்டவர் – ஃபிடல் கேஸ்ட்ரோ. வழங்கியவர் – இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கேரள முதலமைச்சராயிருந்தவருமான ஈ.கே.நயினார். கீதோபதேசக் கடவுள் கண்ணன் சொல்கிறான் “நானே வர்ணங்களைப் படைத்தேன்". கீதையின் வர்ணாசிரம போதனை, முற்போக்காளர் என்று சொல்லப்படுவோரும் மயங்குகிற அளவு கருவிலேயே நஞ்சுக் கொடி சுற்றி இருக்கிறது. நஞ்சுக் கொடி சுற்றிய கரு கர்ப்பத்தில் மூச்சுத்திணறுவது போல், மக்கள் சமுதாயத்தை மூச்சுத் திணற அடிக்கிற காட்சிகள் இந்த தத்துவ போதனையினால் தொடருகின்றன. “இத்தகைய பெருந்துயரம் இனிமேல் மீண்டும் நடைபெறாது இருக்கவேண்டுமென்றால் - ஒரு பிரதியைக் கூட மிஞ்சவிடாது, அனைத்து 'மகாவமிசப்' பிரதிகளையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.” இந்த வாசகம் 1983 இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த “கறுப்பு யூலைப் படுகொலையைக்” கண்டு இலங்கைத் தொல்பொருள்துறைத் தலைவராக இருந்தவரும், சிறந்த பாலி மொழி அறிஞருமான டாக்டர் அதிகாரம் ஒரு கட்டுரையில் பதிவு செய்தது, அதுபோல் இங்கும் ஒரு புதிய சிந்தனை எழுந்தாலன்றி தாழ்த்தபட்டோருக்கு விடிவில்லை; தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் தொடர் படுகொலைகள் நிகழ்த்தப்படும் பூமியில் - அது நிகழாமல் காக்கப்பட வேண்டுமாயின் “மநு தர்ம சாஸ்திரம்“ ஒரு பிரதியும் எஞ்சாமல் தீக்கொளுத்தப்படவேண்டும். மனித இதயங்களிலிருந்து சாதியை அகற்றுவதற்கு இது முதல் படியாக அமையும்.

(இந்திய உபகண்டத்தின் கேவலங்கள் மீது உலகின் இந்தியர்கள் ஒரு தினத்தை உருவாக்குவதும், பெருவிழாக்களையும் எடுக்கலாமே? எடுத்தால் இந்தக் கண்டத்தில் ஜனநாயகம் இருக்கின்றது எனக் கருதிக் கொள்ளலாம். இந்தக் கேவலங்கள்தான் சாதி அடக்குமுறைகள். காந்தி தேசத்தின் ஒவ்வொரு அரசுகளிலும் சாதி ஒடுக்குமுறை இப்போதும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றது. இவர் இந்த கண்டத்துக்கு பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலையைத் தேடித் தந்தவர், சாதியை அழித்தவர் அல்லர். இந்துவெறியினைக் குடிக்கும் மோடி சாதிக் கொடுமைகளை நிறையக் காப்பவர் என எப்படிச் சொல்லாமல் இருக்கலாம்? ஓர் தாழ் சாதி மேல் சாதியைக் காதலித்தால் அது தண்டனையைப் பெறும். இந்தத் தண்டனை மனிதத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அண்மையிலே உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நடைபெற்ற ”சாதி ஆணவப் படுகொலை” மேல் கீழ் காதல் இணைப்பினைக் கொடூரமாக அச்சுறுத்துகின்றது. இந்தக் கொலைகள் மனிதத்தின் சுதந்திரத்தைக் கிழிக்கும் கொலைகள். இந்திய அரசுதான் இந்தக் கொலைகளைக் காக்கின்றது எனச் சொல்வது என் கருத்து. தமிழின் சிறப்பான எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் இந்தக் கொலைகள் மீது எழுதியுள்ளார். இதனை மறுபிரசுரம் செய்வதற்கு அனுமதியளித்துள்ள அவருக்கு நன்றி. க.கலாமோகன்)
நன்றி: தாயகம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ