தடயம்
பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள்.
வங்கியின் வாசலில் ஏறியபோது என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு கால்களின் நடுக்கத்தை உணர்ந்தாள். உணவைவிட அச்ச உணர்வுக்குப் பயண வேகம் அதிகம். வாயால் கொள்ளப்படும் உணவு வயிற்றை அடைவதைவிட, விரைவாக நெஞ்சின் பதற்றம் கால்களுக்குப் பயணப்பட்டுவிடுகிறது. வங்கிக்குள் புதிதாக நுழைபவர்களைப் போல் துவண்ட கால்களை மேல் நகர்த்தி நடந்தாள்.
வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர்களின் எண்ணிக்கை வீங்கிக்கொண்டே போயிற்று. பெரிய பரந்த குடியிருப்பு வட்டாரத்தில் சின்னஞ்சிறிய முக்கில், சிறிய கட்டடத்தில் வங்கி அமைந்துஇருப்பதுபற்றி எந்தக் கவலையும்கொள்ளாமல், புதிதாக வருகிறவர்களை அதிகாரிகள் சேர்த்துக்கொண்டே இருந்தார்கள். ஓய்வூதியம் பெறப் போவதுபற்றி, முதல் இரண்டு தேதிகளில் நினைத்துப் பார்க்கவே முடிந்தது இல்லை. கைக்கும் மெய்க்கும் போதாமல் இருக்கிற, ஓய்வூதியம் வாங்கும் மக்கள் முதல் இரண்டு நாட்களில் வங்கி முழுவதையும் அடைத்துக்கொண்டு இருப்பார்கள். பணம் போடுவது, எடுப்பது, அன்றாடம் பற்றுவைப்பது, சேமிப்பைப் பதிவுசெய்வது என்ற வேலைகள் கீழ்த் தளத்தில் இயங்கியதால் கூட்டம் எக்கியடித்தது. வங்கியின் மதிப்பில் இருந்து சந்தைக் கடைத் தரத்துக்கு இறங்கி, ஒருவரை ஒருவர் சலிப்போடு பார்த்து நிற்பதும் சிறுசிறு சலம்பலும் வழமை யாகிப் போனது.
இவளைப் பொறுத்தவரையில் கீழ்த்தளம் ஆபத்தானது. எதிர்பாராமல் தெரிந்த முகங்களையும் பழக்கப்பட்டவர்களையும் சந்திக்க நேர்வது தவிர்க்க முடியாததாகிவிடும். உள்ளே நுழைந்தவள் பய வேகம்கொண்டவளாக மாடிப் படிகளில் தாவினாள்.
அரசுப் பணியாளர் ஓய்வு 58 வயது என்று இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் அவள் பணியாற்ற முடியும். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் முகத்தில் டார்ச் லைட் ஒளி அடிக்கப்பட்ட முயல் ஓடாமல் நின்றுவிடுவதைப் போல், வாழ்வின் நெருக்குதலில் செயலறியாமல் 53 வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டாள். விருப்ப ஓய்வு என்றுதான் பெயர். வம்படியாக விருப்பம் இல்லாமல்தான் ஓய்வு பெறுவதற்கு எழுதிக் கொடுத்தாள். துவைத்து, நைந்து, சுருட்டிப் போடப்பட்ட வாழ்க்கையை விரித்துவைப்பதற்கு அவளுக்கு விருப்ப ஓய்வு என்னும் வெயில் தேவைப்பட்டது.
ஓய்வூதியதாரர் சொந்தக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கியாகிவிட்டது. அவளுடைய ஓய்வூதியத் தொகை, இன்னும் பெற இருக்கிற கால அளவு இவற்றைக் கணக் கிட்டு ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க முடியும் என வங்கி எழுத்தர் சொன்னார். படிவத்தில் மருத்துவச் செலவு என்று குறிப்பிட்டாள். இருந்த போதும், அதனைப் பெறுவதா, வேண்டாமா அல்லது நிராகரித்துவிடலாமா என்று தடுமாறி னாள். குழப்பம் கொதிநீர் ஊற்றுப்போல் அவளுக்குள் கொப்பளித்தது. படிவத்தைச் சரிபார்த்த எழுத்தர், அமுதாவை ஏறிட்டுப் பார்த்தார்.
''உங்கள் கணவர் வந்துவிட்டாரா?''
அவருடைய பார்வை அவளைத் தாண்டி அமர்ந்திருந்த கூட்டத்தில் பதிந்ததற்குக் காரணம், அவர்களில் யாராவது அவளுடைய கணவராக இருக்க வேண்டும்.
''வரலை. எத்தனை மணிக்கு வரச் சொல்ல?''
''இப்பவே வரச் சொல்லுங்க. வந்து கையெழுத்துப் போட்டுட்டு அவர் போகலாம். அன்னைக்கே சொன்னனே...''
அவளை வியப்போடு பார்த்தார் எழுத்தர்.
அச்சம் மேலேற நகர்ந்தாள். இன்னும் அவர் வரவில்லை. 'இத்தனை மணிக்கு கையெழுத்துப் போட வங்கியில் இருக்க வேண்டும்’ என்று அவரிடம் சொல்லியாயிற்று.
கணவன், மனைவி இருவரில் ஒருவர் அரசு ஊழியராக ஓய்வுபெறுகிறபோது, ஒருவர் பொறுப்பாளராகக் கையெழுத்திட வேண்டும். யாராவது ஒருவர் இறந்துவிட்டாலும் ஓய்வு ஊதியத்தை வாழ்க்கைத் துணை பெறலாம் என்பது விதி. சொந்தக் கடன் பெறவும் அந்த வாழ்க்கைத் துணை ஒப்புதல் கையெழுத்துத் தர வேண்டும் என்பதும் வங்கி விதியாக இருக்கிறது.
யாரை எதிர்நோக்கினாளோ, அவர் இது வரை வரக் காணோம். ஒரே ஒரு கையெழுத்து. ஒற்றைக் கையெழுத்தை இட்டுவிட்டு அவர் சென்றுவிடலாம்.
வங்கியின் ஜன்னல் வழியாகச் சாலையில் பார்வை பதித்தாள். காலையில் பெய்த மழையில் கழுவிவிடப்பட்ட கட்டடங்களில் சூரியன் தெறித்தது. எதிர்த்துள்ள இரு வீதிகளைக் கடந்து போனால், அமுதாவின் வீடு. அதற்குள்தான் பிடுங்கிப்போட்ட ஒரு செடியைப் போல், அவளுடைய செல்லம் வதங்கிக்கிடக்கிறாள்.
'ஏன்டா செல்லம்... இப்படி ஆனே?’ என்று நினைத்து மருகியபோது, விழி முனையில் நீர் கட்டிக்கொண்டது. அவளுடைய செல்லத்தை மீட்டெடுக்கும் மருத்துவச் செலவுக்குத்தான் இந்த ஒன்றரை லட்சம்.
அந்த நாளில் போர் உச்சத்தில் நடந்தது. கயல், மலர் இருவரும் அறைக்கு உள்ளே இருந்தார்கள். வீட்டுக்குள் நடக்கிற ஒவ்வொரு சண்டைக்கும் அந்த இரட்டைக் குழந்தைகளும் சாட்சிகளாக இருந்தார்கள். பெருங்காற்று மரத்தின் வைரம் பாய்ந்த அடித்தூரை ஒன்றும் செய்வதற்கு இல்லை. கிளைகளைத்தான் வளைத்து, முறுக்கி, ஒடித்துப் போட்டுவிடுகிறது. இருபது ஆண்டுகளாக மோதி, சண்டையிட்டு இற்று விழாத வைரம் பாய்ந்த மரமாகி இருந்தாள் அமுதா.
மதியரசன் - அமுதா என்ற அப்பா - அம்மா சண்டைகளால், கந்தல் கந்தலாகக் கிழிபட்டு இருந்தார்கள் குழந்தைகள். சுவர் வெடிப்பில் விழுந்து முளைத்த செடியாகி இறுகி நின்றாள் மூத்தவள் கயல். சுவரைப் பிளக்க முடியாத செடி கட்டையாக இறுகிப்போகும் அல்லவா; கயலிடம் இருந்து எந்த விஷயத்தையும், பாதாளக் கரண்டி போட்டுக்கூடக் கொண்டுவர முடியாது. ஒன்று கொடுத்து, அவளிடம் இருந்து பத்து வாங்க இயலாது. அதுபோலவே, பத்து கொடுத்தும், ஒன்று பெற முடியாது. சொந்தக்காரர்கள் சொல்லிச் சொல்லிக் காட்டுவார் கள்.
''மணிக்கணக்காப் பேசு. 'உம்... உம்’ங்கிற கால் வார்த்தை தவிர, அவகிட்ட வேற கெடைச்சிருச்சுன்னா, என் காதை அறுத்துக்கிறேன்!’ என்பார்கள்.
கயல் என்ற குமரியின் மனக் கதவை எதுவும் அசைத்தது இல்லை. அப்பனுக்கும் அம்மாவுக்கும் தீராத சண்டை நடந்து முடிந்த அடுத்த நாள் காலை, அக்கம்பக்கத்து வீடுகள், எதிர் வரிசை, தெரு எதையும் பொருட்படுத்தாது நடந்துகொண்டு இருப்பாள்.
அன்று யுத்தம் உச்சத்தில் இருந்தது. முடிவற்றுத் தோய்ந்தது. எல்லா நாட்களையும்போல் அன்றைக்கும் கடந்து போய்விடும் என்றுதான் மதியரசன் நினைத்து இருந்தான். கதவைத் திறந்து கயல் அமைதியாகப் பார்த்தாள். இதனை மதியரசன் கவனிக்கவில்லை. அமுதா 'உள்ளே போ’ என்று மகளைச் சத்தம் போட்டாள். அப்போதுதான் கயல் நிற்பது தெரிந்து மதியரசன் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு எதிரில் நேருக்கு நேர் வந்து நின்றாள் கயல்.
''நீ எதுக்கு இங்க வந்த போ... போ'' - அதட்டல் போட்டான்.
அவள் போகவில்லை.
''ஒங்கள அப்பான்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமா இருக்கு'' என்றாள் பட்டென்று.
சாணிக் கரைசலை அவன் முகத்தில் வீசியது போல் வார்த்தைகள் வந்து விழுந்தன. ஒவ்வொன்றாக யோசித்துக் கோக்கப்பட்டவை அவை.
மதியரசன் எதிர்பார்க்காத யுத்த களம் இது. நேரடியாகக் களத்தில் இறங்கி, மகள் ஆயுதம் ஏந்தி வருவாள் எனக் கனவிலும் அவன் நினைக்கவில்லை. தாக்கிய ஆயுதம் பாஸ்பரஸ் குண்டுகளைப் போல் எரிந்தது.
''போ உள்ளே... நீ புதுசாச் சொல்றியா?''- மகள் என்றும் பார்க்காமல் கத்தினான்.
''ஒங்களுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு சொல்றாங்க.''
''யார்... யார்?'' பதறிச் சமாளித்துத் திணறினான்.
''ஒங்க அம்மா சொல்லிக்கொடுத்தாளா?''
''யார் சொல்லணும்? அதான் ஒங்களப் பத்தி எல்லாரும் கேவலமாப் பேசறாங்களே. எங்களுக்கு அவமானமா இருக்கு.''
'ஒங்களுக்குக் கொஞ்சமும் அவமானமா இல்லியா?’ என்பதுதான் அதன் பொருள்.
இதுவரை பக்கத்து வீடுகள், எதிர் வரிசை வீடுகள் கேட்டறியாத குரல் அது. அவர்கள் இதுவரை இப்படி ஒரு குரலைக் கேட்டுப் பழக்கமே இல்லை. அது கயலின் குரல்தான் என்பதையும் அவர்களால் யூகிக்க முடியவில்லை. ஓங்கிச் சத்தமாகக் கத்தினாள். வற்றிக்கிடந்த உருவத்தின் சிறிய தொண்டைக்குள் இருந்து, பெரிய காட்டுக் கூச்சல் கிளம்பும் என எதிர் பார்த்து இருக்க முடியாது.
கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம் கொந்த ளிக்க, ''நீ யாருடி என்னைக் கேக்க?''- சீறினான் அப்பா என்ற மதியரசன்.
அக்கினிக் கணைகள் மோதிக்கொள்ளும் அந்தக் கணத்திலும் தெளிவாகச் சொன்னாள் கயல்:
''நீங்க ஆண் திமிர் பிடிச்ச ஆள். யூ ஆர் எ மேல்சாவனிஸ்ட்!''- அமைதியாக அந்த வார்த்தைகள் அவளிடம் இருந்து வெளிப்பட, அவன் கையை ஓங்கிக்கொண்டு வந்தான்.
''எம் பொண்ணாச்சேன்னு பாக்கறேன்.''
கொஞ்சமாகக் கதவைத் திறந்து இடுக்கு வழியாகப் பார்த்தபடி நின்ற மலர் மேல் மதியரசன் பார்வை நேசமாகப் பட்டபோது,
''நானும் ஒங்க பெண்ணில்லே!'' என்றாள் அவளும்.
அது ஒரு பெரிய பிரகடனம்.
அமைதியின் பூங்காவில் இருந்த இரு மலர்களில் இருந்து, பெரும் புயல் எழுந்து அவனைத் தாக்குவதைக் கண்டான்.
''எல்லாரும் ஒண்ணாச் சேந்துட்டீங்க... பாக்கறேன்''- கத்தியபடியே வெளியேறினான்.
அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்துத் திருப்புவதைப் போல் அமுதா, ''ஒரு நிமிஷம்'' என்றாள்.
''பிள்ளைகள் கேட்டதற்குப் பதில் இல்லையே'' என்றாள் அவனிடம்.
அவன் அதற்குப் பின் திரும்பி வரவில்லை. அப்பா, கணவன் போன்ற சொற்களில் இருந்தும் துண்டித்துக் கொண்டு வெளியேறி இருந்தான் அவன். துண்டிப்பு - இன்று நேற்றல்ல... இருபது வருடங்களுக்கு மேலாக அமுதா கண்டு, அனுபவித்து வந்தது.
உடை, துணிமணி, வங்கிப் புத்தகம் என்று தன் உடமைகளைச் சுருட்டிக்கொண்டு வெளியே போய் மூன்று மாதங்கள் ஆகின்றன. அவனுடைய இருப்புபற்றி ஒரு தகவலும் இல்லை. கணவனுடைய வங்கிக் கணக்கும் அந்த வங்கியிலே இருப்பதால், அவன் எப்போதும் வரலாம் எனப் பயந்தாள்.
யுத்தம் முடிந்தது. அவனுடைய வெளியேற்றத்துடன் முடிந்துபோன யுத்தத்தின் பின்விளைவு, கொடூர நிழலாகத் தொடர்ந்தது. அமுதா நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தாள். எழுப்பியது குரலா, கையின் தீண்டுதலா எனத் தெரியவில்லை. மலர் எதிரில் நின்றாள்.
''அம்மா, கயலைக் காணோம்.''
அலறியடித்து ''என்னம்மா'' என்றாள்.
''அய்யோடி பெண்ணே...'' கத்தினாள். அழுதபடி வீடு முழுவதும் தேடியபோது, கதவு திறக்கப்பட்டு, வெறுமனே சாத்திஇருந்தது. நள்ளிரவில் இரண்டு பெண்கள் இன்னொரு பெண்ணை எங்கே என்று தேடி அலைவார்கள். தெரிந்தவர்கள், உறவு களை நள்ளிரவிலும் தொலைபேசியில் எழுப்பிக் கேட்டார்கள். தொடர்புள்ள இடங்களுக்கு எல்லாம், பயந்து பயந்து தெரிவித்தார்கள். மறுமுனையில் இருந்து பதில்கள் ''அப்படியா, காணலையா?'' என்ற அதிர்ச்சியோடு முடிந்தன. கடைசியாக, மலர் தொலைபேசியில் அப்பனுக்குத் தெரிவித்தாள்.
மறுமுனையில் இருந்து வெறுப்பின் குரல், முகத்தில் உள்ளிருக்கிற வெறுப்பை எல்லாம் திரட்டி, 'கர்’ரென்று காறித் துப்புவதைப் போல் கேட்டது. ''சாகட்டும்.'' நடுச் சாமம் என்றாலும் வெறுப்பின் குரல் தெளிவாக வந்தது. தொலைபேசி துண்டிப்பானது. அந்தக் குரலுக்கு நடுச் சாமம், அக்னி சிந்தும் பகல், குளிர்மை சுமந்து செல்லமாக அடி எடுத்து வரும் அந்தி என்று எந்தவொரு வித்தியாசமும் கிடையாது.
அவர்களின் நெஞ்சத் துடிப்பை அவர்களே கேட்டபடி இரவைக் கழித்திருந்தார்கள். அமுதாவுக்கு முன் இரண்டு முடிவுகள் இருந்தன. தனக்கும் கயலுக்கும் தெரிந்த இடங்களுக்கு காலையில் நேரில் சென்று விசாரிப்பது. போகிறபோதே, எங்கேயும் தட்டுப்படுகிறாளா என்று பார்க்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல், தோல்வியைச் சந்திக்கும் இறுதிப் புள்ளியில் புகார் கொடுக்க காவல் நிலையம் செல்வது என நினைத்தாள்.
காலை வெளிச்சம் கயல் கடந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தது. எதிர்த்த மாடியில் குடியிருந்த அருணா, 'கயல் அம்மா... கயல் அம்மா’ என்று அழைக்கிற சத்தம் வந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு பால்கனியில் நின்று ஏறிட்டபோது,
''மொட்டை மாடியில யாரோ சுருண்டு படுத்திருக்காங்க மாதிரி தெரியுது''- ஆச்சர்யமாகச் சொன்னாள் அருணா.
பதறியடித்து மேலே ஏறிப் பார்த்தபோது இரவு பெய்த மழையில் நனைந்த துணிப் பொதியைப் போலக்கிடந்தாள் கயல். அப்படியே வாரி எடுத்து மடியில் கிடத்தி, ''மகளே... மகளே...'' என்றாள். உடல் அசை வும் வெதுவெதுப்பும் பெண் உயிரோடு இருப்பதைச் சுட்டின.
''ஏன்டா இப்படிப் பண்ணினே?''
மகளின் முகத்தோடு முகம் மோதிக் கதறினாள். அப்படியே தூக்கிச் சாய்த்து அமுதாவும் மலரும் உள்ளே கொண்டுபோனபோது, 'ஏதோ விபரீதம்’ என்று எதிர் வீடும் பக்கத்து வீடும் உள்ளே வந்தன.
''இந்த வயசிலும் வருமா... டாக்டர்?''
மருத்துவரைப் பரிதாபமாக ஏறிட்டு நோக்கினாள் அமுதா.
''இக்கால நோய்கள் வயசு பார்த்து வர்றது இல்லை!''- பதில் தந்தார் மருத்துவர்.
மருத்துவர் பரிசோதித்துக் கண்டறிந்ததைச் சொன்னார் - பர்கிஷன் நோய். செயலற்ற தன்மை எனும் நோய். மன உளைச்சல் மிகுதியால் மூளை நரம்பு நைந்துபோய், உடலை இயக்கமற்றதாக ஆக்கும் செயலற்ற தன்மை. உடல் உறுப்பு கள் கோணிக்கொண்டு இருந்தன. தொழுநோய் தாக்கிய பாதிப்புபோல் கை, கால் விரல்கள் மடங்கிக்கொள்ள, முகம் ஒரு பக்கம் இழுத்து, முகவாதம் வந்திருந்தது. கழுத்து ஒரு பக்கமாகக் கோணித் திரும்பியது. கழுத்தை இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம், அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம்... அசைக்க முடியாது. உடல் மொத்தத்தையும் திருப்பித்தான் பார்க்க வேண்டியிருந்தது. எப்போதும் முகம், கழுத்து, பார்வை எல்லாமும் இடது பக்கமாகவே இருப்பதைப் போல் தோன்றியது.
நோயை அதிகப்படுத்தும் எதுவும் அவள் கவனத்துக்குப் போகாமல் தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் கூடக்கூட, நோய் குறையாமல் வீரியமாகிக்கொண்டே போகும். உண்டாகும் பின் விளைவுகள் மோசமானவை. மனத் தெளிவு பெற்று, சமன்பெற நாள் எடுக்கும் எனக் கூறிய டாக்டர், பெண்ணின் இயல்பான நடமாட்டத்தைக் காணக் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றார். மருத்துவர் சொல்லச் சொல்ல, கேட்டுக் கேட்டு, தானும் ஒரு நோயாளியாகிக்கொண்டு இருக்கிறோமோ என்று தோன்றியது. நரம்பியல் நிபுணர் சொல்வதைக் கேட்டு, வார்த்தைக்கு வார்த்தை 'பிசகாமல் இருக்க வேண்டும் பெண்ணே...’ எனத் தனக்குத்தானே கட்டளையிட்டுக்கொண்டாள்.
வேதனை மயக்கத்தில் இருந்தவளை எங்கோ தொலைவில் இருந்து ஒரு குரல் எழுப்பியது. துயரம் இறுகி விழிகளைத் திறந்தபோது எதிரில் அவர் நின்றார்.
எழுத்தரிடம் போய் நின்றாள்.
''வந்துட்டாரா?''
எழுத்தர் ஏறிட்டு நோக்கினார். அருகில் நின்றவரைக் காட்டினாள். படிவத்தில் அவளிடம் இரண்டு கையெழுத்துகளும் அவரிடம் ஒரு கையெழுத்தும் போடச் சொன்னார் எழுத்தர்.
''எப்போது வந்து பாக்க?'' - எழுத்தரைக் கேட்டாள்.
''நீங்க போகலாம். நாளை காலையில வந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். நிர்வாக மேலாளர் ஒப்புதலுக்கு அனுப்புவேன்'' என்று கீழ்த் தளத்தைக் காட்டினார்.
''அவர் கையெழுத்தானதும் உங்கள் கணக்கில் டெபாசிட் ஆகிவிடும்!''
எழுத்தரிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்து சுதந்திரமான காற்றைச் சுவாசித்த அந்த விநாடியில் படபடப்பு நீங்கியவளாக, ''அப்பாடா, இப்போதான் உயிர் வந்தது'' என்று லேசாகச் சிரித்தாள்.
புரிந்துகொண்ட புன்னகை அவர் முகத்தில் வெளிப்பட்டது.
''எங்க நீங்க வராமப் போயிருவீங்களோனு பயந்துட்டே இருந்தேன்'' என்றாள்.
''நானும் பயந்த மாதிரி, ரெண்டு மோசமான காரியங்கள் நடக்கலை!'' என்றார் மகேந்திரன்.
''ஒண்ணு - 'நீங்கதான் மதியரசனா?’னு என்னைப் பார்த்து எழுத்தர் கேட்காம இருந்தது. இரண்டாவது, அவரோட பிறந்த தேதி எனக்குத் தெரியாது. படிவத்தில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பிறந்த தேதி என்ன என்று எழுத்தர் கேட்டிருந்தால்கூட, நான் மாட்டிஇருப்பேன்!'' என்றார் மகேந்திரன்.
''இந்தப் பணத்தை எடுத்துதான் என் பெண்ணைக் காப்பாத்தணும்!''-
விரக்தி அவளிடம் கவிந்தது.
''கவலைப்படாமப் போங்க. இன்னைக்கு மருத்துவத் தொழில்நுட்பம் ஏகமா வளர்ந்துஇருக்கு. வளரும் மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத எந்த நோயும் இல்லை. என் வீட்டில் உங்க பெண்ணுக்கு நடந்ததை எல்லாம் சொன்னேன். அவங்க கண் கலங்கி 'தயங்காதீங்க... போய்க் கையெழுத்துப் போடுங்க’னு சொல்லி அனுப்பினாள்!''
'பொய்க் கையெழுத்தா?’
'ஆமாம்...’ என்ற மகேந்திரன் பின்னர் மூச்சை உள் இழுத்து, ''அவங்களைக் கலந்து ஆலோசிக்காம நான் எதையுமே செய்றது இல்லை!'' என்றார்.
அவரிடம் இருந்து வெளிப்பட்ட இந்தச் சொல், அவளை இன்னும் ஆச்சர்யத்தில் போய் நிற்கவைத்தது. கடந்துபோன வாழ்வின் முப்பது ஆண்டுகளுக்குள் தேடிப் போனாள். அத்துமீறல்கள் மட்டுமே நிறைந்த அவள் குடும்ப வாழ்வில் இயல்பான... அப்படியான... தடயம் எதுவும் தென்படவே இல்லை.
நன்றி: ஆனந்த விகடன் - 26 Dec, 2012
ஓவியங்கள் : ஸ்யாம்
இக்கதையின் இந்தி மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.
நன்றி: ஆனந்த விகடன் - 26 Dec, 2012
ஓவியங்கள் : ஸ்யாம்
இக்கதையின் இந்தி மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக