தருமபுரி மீது சாதித் தாண்டவம் – இந்தியராயினும் தமிழராயினும் இவர்கள் யார்?

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது விடுதலை நிலை. மேல்நிலைச் சாதியினர் கேட்பது ஆதிக்க நிலை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீறி விடுவார்கள்; அடக்கி வைக்க வேண்டும்; தேர்தல் கூட்டணியாய் சாதியக் கூட்டணி அமைத்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது, அடிமைச் சமூக காலத்தில் போய்ச் சேர்க்கிறது. மேல்நிலைச் சாதியினர் கோருவது இந்த அடிமை நிலை.

அடிமைச் சமூக காலத்தின் பிரபுவாக, “அனைத்துச் சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை” நடத்தியுள்ளார் பா.மக. ராமதாஸ். அவரவர் நலன் பேணும் கூட்டம் இதுவானாலும், தமது மேல்நிலையினைக் கூட்டாகப் பேணிக் கொள்ளும் முன் திட்டமிடல் இது. அவரவர் செல்வாக்கான வட்டாரத்தில் அந்தந்த சாதியினர் தேர்தலில் பங்கேற்கும் கூட்டணி என்ற எதிர்பார்ப்பை இது உண்மையாக்கலாம்.

சாதிகளின் தலைமையாக இன்று கட்சிகள் இயங்குகின்றன. இவர்கள் சாதிய சங்கம் என்ற பெயரில் முதலில் தொடங்கினார்கள். சனநாயகத்தின் நடைமுறையாக தேர்தல் தீர்மானிக்கப்பட்டபோது - சாதிச் சங்கங்கள் அறியப்பட்டிருக்கவில்லை. ஆனால் 1960-களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட அளவிலான (ஜில்லா போர்டு) மெம்பர், தலைவர் தேர்தலில் செல்வாக்கும் வளமும் கொண்ட சாதியினர் பதவிக்கு வந்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம் என அடுக்கடுக்காய் தேர்தல்கள் வந்தபோது, வாக்குகள் குவிக்க சாதிய அமைப்புக்களின் துணை நாடின அரசியல் கட்சிகள். பிறகு அந்தந்த வட்டாரத்தில் சாதிச் செல்வாக்குடைய கட்சிகளாய் உருவெடுத்தன. பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரான உ.முத்துராமலிங்கத்தேவர், உசிலம்பட்டி,முதுகுளத்தூர் தொகுதிகளில் நின்று மாற்றி மாற்றி வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்வார். இத்தொகுதிகளில் அவரது இனத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்வார். “உ.மு.தேவர் என்றால் உசிலம்பட்டி, முதுகுளத்தூர் தேவர் என்று பொருள்”  என அக் காலத்தில் தி.மு.க தலைவர் சி. என் அண்ணாதுரை கேலி செய்தது பிரசித்தம். சாதியைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மாறாக சாதி கட்சியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டது என்ற எதிர்நிலையை இக் கேலி உணர்த்துகிறது.

சாதியைக் காப்பாற்றி வளர்க்கும் தாயாக இன்று கட்சிகள் ஆகியுள்ளன. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி. சாதிப்பெயரை வெளிப்படையாக சூடிக் கொள்ளாமல் தி.மு.க, அ.தி.மு.க. பா.ம.க, தே.தி.மு.க, பார்வர்ட் பிளாக் போன்ற பல புனைபெயர்களில் இயங்குகின்றன. தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தோன்றிய பாரம்பரியம் சாதியமாக இல்லாதபோதும் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த வட்டாரங்களில் சாதியக் கட்சிகளாக முடக்கப்பட்டுள்ளன என்பதை சிந்திப்பில் கொள்ள வேண்டும். ம.தி.மு.க, தே.தி.மு.க, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவைகளில் எந்த சாதி உறுப்பினர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை வைத்துக் கணிக்க வேண்டும். பா.ம.க, வன்னியர் சங்கமாகத் தொடங்கி, பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக பெயர் மாற்றிக்கொண்டதை நாம் அறிவோம்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தேவர் பேரவை,கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம், முத்தரையர் கட்சி என இப்போது வெளிப்படையாக கட்சிகள் சாதிகளாக வந்துள்ளன. இந்த முக்காடு நீக்கம், தம்மினும் கீழானவராய் இவர்கள் எண்ணுகிற சாதியினரை முடக்கி, ஒடுக்கி வைப்பதற்காக, தொடர்பயத்தில் வைத்திருப்பதற்காக எழுந்தது.

அதே நேரத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான கட்சிகளை விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அம்பேத்கார் பேரவை, இமானுவேல் பேரவை என்றெல்லாம் வடிவமைத்துக் கொள்கிறார்களே என்ற கேள்வி அது. எது ஒன்று அடிமை நிலையிலிருந்து விடுபடத் துடிக்கிறதோ, அதனை விடுதலையுணர்வு என்றே நாம் கருதுகிறோம். எவனொருவன் அடிமை நிலையிலிருந்து விடுபடப் போராடுகிறானோ அவன் விடுதலைப் போராளி. அடிமை நுகத்தடியை உடைத்தெறிய முன்னிற்கும் கட்சிகளையும் ஆதிக்க சாதிக் கட்சிகளையும் சமப்படுத்தல் கூடாது. தாழ்த்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் தேர்தல் அரசியலில் பிரவேசிக்கிறபோது, அதிகாரத்தைக் கைப்பற்றும் அந்த அரசியலுக்கு முண்டும் வேளையில் முரண்கள் நிகழ்கின்றன. அதன்பொருட்டு விடுதலை இயக்கங்கள் நிராகரிக்கப்பட வேண்டியன அல்ல.

நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததினால், ஒடுக்கப்பட்ட சாதியினர் தமக்கான விடுதலையை இயக்கங்களைக் கட்டியெழுப்புவதில் திணறி வருகின்றனர். எதிர்ப்பு அரசியல் என்பதிலிருந்து நழுவி, மேநிலைஅரசியிலான ஆதிக்க சாதிகளின் அரசியலுக்குள் நுழைகின்றனர். தேர்தல் பாதை எனும் வழுக்குப் பாறையில் காலடிகளை உறுதியாகப் பதிக்க முடியாமல் வழுக்கி விழுந்த இயக்கங்கள் உலகமுழுமையும் இன்று சாட்சியமாகியுள்ளன. தலித் விடுதலை என்பது என்பது, ஆதிக்க சாதிகள், ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான முழுமையான எதிர் அரசியல் தான்.

பதிலாக, மேல்நிலை சாதிகள் தங்களுக்கான கட்சிகளை உருவாக்குவதில் வெற்றியடைந்துள்ளனர். தேர்தல் மூலம் பெறும் அதிகாரம் என்பதால் இன்னொரு சாதியை விட தன் சாதி உயர்ந்தது என்ற உளவியலை உருவாக்கி கட்டியெழுப்புதல் எளிதாகச் சாத்தியப்படுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைச் சேவகம் ஆற்றுவோராக என்றென்றும் இருத்தி வைக்க அனைவரும் ஒன்றிணைவு என்ற கூட்டு உளவியல் இன்று களம் கண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களை ஏதலி நிலையிலேயே வைத்திருக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் எனும் பலமுகமூடிகள் உண்டு. அடிமட்டத்திலிருப்பவனும் தமிழன்தான், அவனே உண்மைத் தமிழன் என்பதை இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. என்னதான் இந்தியன் என்று முழங்கினாலும், தமிழன் என்று பிரகடனப்படுத்தினாலும் சாதித் தமிழன், சாதி இந்தியன் மட்டுமே உண்டு என்பதே உண்மை. சாதியாகவே தமிழனிருக்கிறான், இந்தியனும் இருக்கிறான். சாதி கடந்து இந்தியனும் இல்லை, தமிழனும் இல்லை.

90-களில் ஈழத்தமிழர் விடுதலை போர் தீவிரப்பட்டது. அது தமிழ்க் களத்தில் மங்கலாகி நொசிந்து,நொம்லமாகிப் போன தமிழ்த் தேசிய உணர்வை மேலுக்குக் கொண்டு வந்துது (மங்கலாய், பழங்கஞ்சி போல் நொசிவாய், நொம்பலானதற்கு பல காரணங்கள் உண்டு. இருப்பினும் தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடப் பாரம்பரியங்கள் அதிகார நிலைக்கு வந்தது முக்கிய காரணம்) ஈழப் போராட்டத்தால் தூண்டப்பெற்ற விடுதலையுணர்வோடு இணைவாக, 1965க்குப் பின் கைகழுவி விட்டிருந்த மொழி, இன, பண்பாட்டுப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டனர். இயக்கங்களை வளர்த்துக் கொள்ள, அதன் பின் தத்தம் இயக்கத்தினுள்ளே இயங்கும் தமிழுணர்வாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள என இரட்டைக் குழல் துப்பாக்கியாய் தமிழ் முழக்கங்கள் இவர்களுக்கு அவசியமாகின. ஈழவிடுதலைக்குக் குரல் தருவது, தமிழினப் பிரச்சனைகளில் தீவிரம் கொள்வது அல்லது அதுபோல் பாவனை செய்வது இவர்களின் அரசியல் செயல்பாடுகளாகின.

அரசியல் ஆதாயத்துக்காக தமிழ் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டதின் பச்சையான உதாரணம் பாட்டாளி மக்கள் கட்சி. ஈழ விடுதலைக்கு ஆதரவான கூட்டங்களில் முழங்கியவர் கொங்கு வேளாளர் இளைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர் தனியரசு. சாதிப் பயத்தைக் காட்டியே தி.மு.க, அதிமுக கட்சிகளுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து சாதியை வளர்த்துக் கொண்டார் ராமதாஸ். 2011ல் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சாதி வலிமையைக் கொண்டே அ.தி.மு க.-வின் அம்மாவுடன் தனியரசு கூட்டுச் சேர முடிந்தது. ஒரு பக்கம் இவர்களுக்குத் தமிழ் தேசிய முகங்கள், உள்முகம் சாதிய முகம். இதயத்துக்குள் ஒட்டிய சாதியை இவர்களும் இவர்கள் போன்றோரும் எடுத்தெறிந்தது இல்லை .

இதற்கு, இவர்களுக்கு முன்னால்ஒரு வரலாற்றுப் பூதம் நின்றது. இதன் முன்னான தமிழகத்தின் மூன்று பத்து ஆண்டுகள் வரலாற்று சாட்சியங்களாய் நின்றன. சாதி, மத, மூட நம்பிக்கைகள் தாண்டிய பகுத்தறிவு இயக்கமாய் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மொழியுணர்வைப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தது. அதிகாரத்திற்குள் ஏறும் ஏணியாய் ஆயிற்று. அதிகாரத்திற்குள் போனதும் அதன் பகுத்தறிவுச் செயல்பாடுகள் மட்டுமன்றி, மொழி, இன உணர்வுகளைச் சன்னம் சன்னமாய் களைந்தெறிந்து அம்மணமாய் காட்சியானது. தமிழர்களுக்காகவே உயிர் தரித்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நிர்வாணத்தில் இன்றும் துளி வெட்கமுமில்லை. 1960ன் பிற்பகுதிகளின் தொடக்கம் தமிழ் உணர்விலிருந்து தி.மு.க வெளியேறிய இந்த மூன்று பத்து ஆண்டுகள் பிற இயக்கங்களுக்கு ஒரு வாய்ப்பாய் மாறின. தி.மு.க வின் ஈர்ப்பினால் உள்நுழைந்த தமிழுணர்வாளர்களை அதே ஈர்ப்பைக் காட்டி அணைத்துக் கொள்ள பிற இயக்கங்களின் சிறகுகள் விரிந்தன. இதன் வழி தன் குஞ்சுகளைத் தன் செட்டைக்குள் அடைத்துவைத்துக் கொள்கிற மூலோபாய தந்திரமும் செயல்முறையாயிற்று. ஆனாலும் தேர்தலை வென்றெடுக்க தமிழுணர்வு முதன்மைச் சக்தியாய் கை கொடுக்கவில்லை. சாதியே முதன்மைச் சக்தி.

“ஞாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்”

(என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியார், எனது தந்தையும் உனது தந்தையும் உறவினர்களும் இல்லை) என்ற முந்தைய மூத்த தமிழ்ப் பண்பாட்டையே, நத்தம் சேரி இளவரசன் என்ற மாணவரும், செல்லங்கொட்டாய் திவ்யாவும் வழுவாமல் கடைப்பிடித்தனர். முன்னைத் தமிழர் பண்பாடு என உணர்ந்தததால் அவர்கள் பின்பற்றினார்களில்லை. வாழ்வைப் பாடும் வானம்பாடிகளின் இயல்பான தருணம் அது. பாடத் தொடங்கினார்கள். கற்பு போன்ற தமிழ் ஒழுக்க மதிப்பீடுகளில் உச்சாணிக்கொப்பு உயரத்துக்கு எகிறிய பண்பாட்டுக் காவலர் ராமதாஸ் போன்றவர்களால், காதல் போன்ற இயல்பூக்க உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. கற்பு, காதல் போன்ற அனைத்து உணர்வு நிலை மதிப்பீடுகளும் சாதிக்குட்பட்டவை. இதன் பொருள் சாதிக்குள் திருமணம், சாதிக்குள் கற்போடு வாழுதல், சாதிக்குள் காதல் செய்தல் என்பன ஆகும். சாதித் தாண்டி ஒரு துளிரும் துளிர்க்கக்கூடாது. சாதி கடந்து ஒருகாடும் பூக்கக் கூடாது.

உட்சூட்சுமம் கொண்டு பேசுவதை எதுக்கெடுத்தாலும் “க்”கன்னா வைத்தே பேசுகிறான்” என்பார்கள். சாதி வரையறைகளிலும் ஒரு ‘க்’ கன்னா வைத்துக் கொள்வது பழக்கமாகவே வருகிறது. உயர்சாதியினருக்கிடையே ஒரு பார்ப்பன‌ரோ, முதலியாரோ, நாயுடுவோ,தேவமாரோ ஒருவருக்கொருவர் காதலிப்பது அவ்வளவு குற்றமில்லை. மணம் செய்து கொள்வதும் பாவமல்ல. ஆனால் இந்த சாதிகளில் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்ணோ ஆணோ காதலித்தாலோ மணம் செய்து கொண்டாலோ கம்பைத் தூக்கு,கத்தியைத் தூக்கு என்று சீறி வருவார்கள்.

இத்தனைக்கும் வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்தால் வன்னியரோ, தேவமாரோ ஒப்பீட்டளவில் பார்ப்பன‌ர், அய்யர், ஐயங்கார், பிள்ளைமார், முதலியார், வெள்ளாள கவுண்டர், ரெட்டியார் போன்ற பல உயர்சாதியினருக்கு கீழே இடைநிலையிலுள்ளவர்தாம். இந்த இடைநிலை சாதியினர். இட ஒதுக்கீடுகள் காரணமாய் தம்மை வளர்த்துக் கொண்டனர். மற்றொன்று இவர்கள் எந்த வட்டாரங்களில் பூர்வீகம் கொண்டார்களோ அந்த வட்டாரங்களில் பெரும்பான்மைக் காரணத்தால் .ஆதிக்க சாதி மனப் போக்குடன் உருவெடுத்தனர்.

இவர்கள் இடைநிலை சாதியனராயினும் ஆதிக்க சாதியினர்தாம். உயர்சாதியினருக்கு இணையாய் தம்மை மேலோராகப் பாவித்துக்கொள்ளும் இந்த உணர்வுதான் சாதிமறுப்பு, வர்க்க மறுப்பு தொடர்பான போராட்டங்களுக்கு எதிரானது. காலம் இப்போது இவர்கள் யார் எனஅறியத் தந்திருக்கிறது

அதிகாரத்துக்குள் நுழைவதற்கு தேர்தல் முதல் நிபந்தனை, தேர்தலுக்குள் நுழைய சாதி முன்நிபந்தனை. ஒவ்வொரு தொகுதியிலும் ஊராட்சிகளின் வார்டுகள் முதல் நகராட்சி, வட்டம் வரை சட்டமன்றம், நாடாளுமன்றம் என பெரும்பான்மை சாதியின் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அல்லது அடுத்த நிலைப் பெரும்பான்மை சாதியினர் சார்பில் அதுவும் கூட்டணி உறவில் வெற்றி பெருகிறார்கள். இயக்கக் கோட்பாட்டளவில் வீரியமிக்க வட்டாரத் தலைமைகள் உருவாவதற்குப் பதில் வட்டாரத்தின் சாதியத் தலைமைகள் ஒவ்வொரு இயக்கத்தினுள்ளும் பிறந்து வந்தனர். கிராமம் முதல் தலைநகர் வரை சாதித் தலைமைகள் கட்டியமைக்கப்பட்டது இப்படித்தான்.

1956ல் ஈரோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் கே.ரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தொகுதியின் பெரும்பான்மை சாதியைச் சாராத ஒருவர் வெற்றிபெற சாத்தியமானது. இன்று அவ்வாறான காட்சியை ஒரு இடத்திலேனும் காணமுடியுமா? ஏன் பொதுவுடமைக் கட்சியினர் கூட (இடது,வலது) இன்று சாதியற்ற தேர்தல் பாதையில் இல்லை. இதுபோன்ற சில வெற்றிகளை அலைவீசிய 1967ல் தி.மு.க பெற்றது. 1967ன் நடைமுறையே அதன் பின்னான அடுத்தடுத்த தேர்தல்களில் உரிமை கொள்ள அவர்களாலும் இயலவில்லை.

காமராசர், உ.முத்துராமலிங்கம், சி.என் அண்ணாத்துரை, அனந்தநாயகி (காங்கிரஸ்) ராமசாமி படையாச்சி போன்றோர் அவரவர் சாதிப்பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி கண்டனர். (எம்.ஜி.ஆர் போல் ‘எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி’ என்ற ஆனந்தக் களிப்பு ஒன்றிரண்டு விதி விலக்காக இருக்க முடிந்தது. இதற்கும் திரையுலகக் கவர்ச்சி போன்ற பல காரணங்கள்).

தமிழ்ச் சமூகம் சாதிகளால் ஆனது. புனைவுகளும் பாரம்பரியக் கனவுகளும் நமக்கு வேண்டாம். சாதியம் தமிழ் ரத்த ஓட்டத்தின் இயல்பாய் ஆகி எத்தனை நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ஊட்டச்சத்து கொடுக்கப்பட்டு கொளுத்துப் போய் இன்று குதியாட்டம் போடுகிற சாதியை வேரிலிருந்து தெண்ணி எறிய என்ன செய்யலாம்.?

“தலித் இல்லாமல் விடுதலை இல்லை
தலித் விடுதலை தனியே இல்லை “
என்ற வாசகத்தை பிரகடனமாக்குவதுதான்.

மேற்கத்திய முதலாளிய சமுதாயத்தில் வர்க்க வேறுபாடு அடிப்படை. தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய வேற்றுமை அடிப்படை . தொழிலாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்கிறபோது தனக்குரிய இழிவை மட்டும் நீக்கி விடவில்லை. முதலாளி வர்க்கம் என்ற இழிவையும் நீக்கி விடுகிறது. முதலாளி வர்க்கம் என்ற சொல்லே இல்லாமல் செய்து, மானுடம் என்ற ஒற்றைச் சொல்லால் வர்க்கமற்ற சமுதாயம் என அடையாளப்படுத்திக் கொள்கிறது. இந்த மார்க்சிய அறிவியலை மனு தர்ம சமுதாயத்துக் பொருத்திப் பார்த்து புரட்டிப் போடுவது சாத்தியம்.

இங்கு தலித் இல்லாமல் விடுதலை இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுகிறபோது மேல்நிலையிலிருக்கும் சாதிகள் இழிவும் இல்லாமல் போகிறது. தாழ்த்தப்பட்ட சாதி எனும் தனக்குரிய சொல்லை அழிக்கிறபோது மேல்நிலைச் சாதிகள் ஆதிக்க சாதிகள் என்ற சொல்லும் நீக்கப்பட்டுப் போகும் . சமுதாய இழிவின் அடிப்படைச் சக்திகளை விடுதலை செய்யும் போராட்டத்தை அவர்களை முன்னிறுத்தி தொடங்க வேண்டும். அவர்கள் மூலமாக நடத்த வேண்டும், அவர்களுக்காக நடத்த வேண்டும். பிற சாதிகளிலுள்ள அடித்தட்டு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இழிவுபடுத்தப்பட்ட மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து விடக்கூடாது என்பதில் குறியாய் இருக்கிறவர்கள் கூட்டம் சேர்ந்துள்ளார்கள். எந்த அதிகாரத்தைக் கைக்கொண்டால் அடிமை நிலையைத் தொடர முடியுமோ அந்த அதிகாரத்தில் .அமர்வது நோக்கி கூட்டணி அமைத்துவிட்டார்கள். தம் இதயத்துக்குள் வீற்றிருக்கும் சாதியுணர்வை நீக்குவதற்குபதில் தலித் மக்களை அப்புறப்படுத்திவதில் ஒன்றாய் இணைகிறார்கள். இந்த முற்றுகையை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்? இப்படியொரு பேராபத்து நம்மைச் சூழ்கிறது என்பதை இப்போதாவது நாம் உணரவேண்டும். ஒற்றுமைப்பட்ட சமரசமற்ற தொடர்போர் ஒன்றைப் மேற்கொண்டாலொழிய, மனிதர்களை மனிதர்களாக காத்தோம் என்ற பெருமிதம் நமக்கு ஏற்படாது போகும்.

இந்திய தேசியக்காரர், திராவிட தேசியத்தார், தமிழ்த் தேசியர் அனைவரும் தமக்குள் குடியமர்த்தியுள்ள சாதியுணர்வைத் தொட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. தொட்டுப் பார்க்கையில் இவர்கள் இந்தியர்களா, தமிழர்களா என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைத்தவிடுகிறது எனலாம். இந்தியர்களா, தமிழர்களா என்பதின் முன் கீழ வெண்மணி, விழுப்புரம், ஊஞ்சனை, மேலவளவு, திண்ணியம்,பரமக்குடி, தருமபுரி போன்ற நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுகிறது ஒரு கேள்வி -- இவர்கள் மனிதர்களா என்னும் முக்கியமான கேள்வி.

(நன்றி: உயிர்மை)

- பா.செயப்பிரகாசம்

Comments responses
#7 பா.செயப்பிரகாசம் 2013-01-15 12:01
மருது பாண்டியனுக்கும் ,சுடலைமுத்துப் பாண்டியனுக்கும் சில விளக்கங்கள் அளிப்பது அவசியமாகிறது.எதிர்வினை ஆற்றாதபோது ,அவர்கள் எழுதியது உண்மை என்றாகிவிடும்.
முத்துராமலிங்கத்தேவர் உசிலம்பட்டி தொகுதியில் நின்றதில்லை.முத ுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்றார். எனவே நாடாளுமன்றத் தொகுதியை கையில் வைத்துக் கொண்டு சட்டமன்றத் தொகுதியை ராஜினாமா செய்தார். பின்னர் அத் தொகுதியில் அவர் நிறுத்தியது ஒரு தேவர் இன வேட்பாளர்தான். முதுகுளத்தூர் போலவே உசிலம்பட்டி தொகுதியிலும் அவர் யாரை நிறுத்துகிறாரோ அவரே வெற்றி பெறுவார். இது வரலாற்று உண்மை.
1948-ல் கமுதி, சாயல்குடி தொகுதியிலும் பின்னர் வைகுண்டம் தொகுதியிலும் வேறு சாதி வேட்பாளரை நிறுத்தி வெற்றி காண வைத்தவர் என்று குறிப்பிடுகிறீர்கள். உண்மையே. அதனடியில் பதிந்திருக்கும் யதார்த்தத்தையும் காணவேண்டும். மாற்று சாதிக்காரர் நிற்கிறபோது அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள். தேவர் நிறுத்தியதால் அந்த இனத்தைச் சேர்ந்தோரும் தவறாது வாக்களிப்பார்கள்.

மற்றொன்று-முத்தூராமலிங்கத் தேவர் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட வீரராக உருவெடுத்து வந்தவர்.கடந்த காலங்கள் தனிமனித நேர்மை, தியாகம், வீரம்-போன்ற பண்புகளில் குறையற்றவை . ஆனால் கால மாற்றம் கணக்கில் கொள்ளப் படவேண்டும்.அப்ப டிப் பார்த்தால் பொதுவுடைமை இயக்க தலைவர்கள் போல் ஈகத்தில் சிறந்தவர்கள் இல்லை. எவராயினும் அவருடைய கடந்தகாலத்தை மதித்து அதன் பின்னான தலைமைப் பண்பில் எப்படி சருக்கினார்கள் என்பது விமசனம் செய்யப் பட வேண்டும்.

#8 பா.செயப்பிரகாசம் 2013-01-15 12:02
காலச்சுவடில் எனது பங்கேற்பு பற்றி.;
"ஈழம் பற்றி கண்ணீர் வடிப்பார் காலச் சுவட்டில் ;அதே காலச் சுவடு ஈழப் பிரச்சினையை கொச்சைப் படுத்துகிறபோது கண்டுகொள்ளாமல் மோனத்தில் இருப்பார்." என்கிறார் சுடலை கண்ணுப் பாண்டியன்.
காலச் சுவடு ஒரு ஆரோகியமான விவாதத்துக்கு இடமளிக்கிறது என்பதாலேயே அதில் எழுதுகிறேன்;அதற்கு ஒரு சான்று.

காலச் சுவட்டில் (செப்டம்பர்)வெளியான எம்.ஏ.நுஹ்மான் அவர்களின் நேர்காணல் தலைப்பு : "மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்" (செப்- 2012)


நேர்காணலுக்கு எதிர்வினை- 1 :
இலங்கை முஸ்லிம்களூம் விடுதலைப்புலிகளும்--பரமு லோகநாதன்(அக்,20 12). மிகத் தெளிவாக சான்றாதரங்களுடன் கட்டுரை வெளியாகி இருந்தது. ஈழத்தில் இன்றும் வாழும் ஒருவராலேயே இவ்வாறு எழுத இயலும். அதே போல் அதற்கடுத்த இதழில் அ.இரவி என்ற எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை மிக ஆழமும் செறிவும் கொண்டதாக வந்தது.


எதிர்வினை - 2 :
நீங்களுமா நுஹ்மான்? - அ.இரவி(நவம்பர்,2012).
நீங்கள் கண்டு கொள்ளாமல் மோனம் கொண்டீர்கள் என்று சொல்லக் கூடும்.ஈழப் போர் பற்றியும் உள்முகப் போராட்டம் பற்றியும் இயக்கங்கள் பற்றியும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் இதை செய்கிற போதுதான் சிறப்பான எதிர் வினையாக இருக்க முடியும் என்று கருதுபவன் நான். தோழர் தி.க.சி. பலமுறை என்னைக் கேட்டுக் கொண்ட போதும் அவரிடம் இதையே தெரிவித்தேன். இன்றும் என் தொடர்பில் இருக்கும் அ.இரவியை எழுதுமாறு கேட்டு வலியுறுத்தினேன் என்பது நீங்கள் அறியாதது.
இந்த விளக்கத்தால் நான் காலச் சுவட்டின் நிலைப்பாட்டை முற்றிலும் ஆதரிக்கிறேன் விமர்சனமற்று என்று எடுத்துக் கொண்டால் அது பிழையானது.

#12 பா.செயப்பிரகாசம் 2013-01-21 12:34
நண்பர்களே. உங்களது ஆதார பூர்வமான பின்னூட்டங்களுக்கு நன்றி. அவை எத்தனை ஓட்டைகளோடு வந்து நிற்கின்றன என்பதை விளக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு உள்ளது.
1. பெரியார் சாதி சங்கங்களின் மாநாடுகளில் பங்கேற்றார். அந்தக் காரியம் பார்ப்பன , ஆதிக்க சாதிகளுக்கு எதிராக சூத்திர சாதிகளை ,தாழ்த்தபட்ட மக்களை எழுச்சி பெறச் செய்வதற்காக; அவர்களின் இழிவைத் துடைப்பதற்காக; அவர் ஒருபோதும் சாதிய அரசியலை முன்னெடுத்ததில்லை - பா.ம.க.ராமதாஸ் போல், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போல், தேவர் பேரவைபோல், கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் போல் அவர் சாதி வெறிகொண்டு அரசியல் செய்தவரில்லை.

#13 பா.செயப்பிரகாசம் 2013-01-21 12:34
2.உ.மு. தேவர் என்பதற்கு உசிலம்பட்டி ,முதுகுளத்தூர் தேவர் என்று சி என். அண்ணாதுரை மதுரை திலகர்திடலில் பேசியதற்கு நேரில் நானே சாட்சியமாக இருந்திருக்கிறே ன். அதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு வரை தேவரின் அபிமானியாக இருந்த நான் , தி.மு.க. அரசியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருந்தபோது உடன் வந்த இரு நண்பர்களுடனண்ணா துரையின் உரையைக் கேட்டேன். அப்போ து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அது ஒரு சரிவு தான். அதே கூட்டத்தில் தானொரு ஏழ்மையான குடும்பத்திலிரு ந்து படித்து மேலே வந்தவன் என்பதை குறிப்பிட வந்த அண்ணாதுரை "இரவில் வெகு நேரம் வரை அந்த ஒண்டுக் குடித்தனத்தில்ப டிக்க வாய்ப்பில்லை. இரவில் குடும்பங்களில் சத்தம் ஓய்ந்த பிறகு, கணவன்மார்களெல்லாம் மனைவிகளுக்கு ஒய்வு கொடுத்த பிறகு நான் படிக்க உட்காருவேன்" என்று பேசினார். அப்போது நானும் எனது நண்பர்களும் முகம் சுளித்தோம். சி.என். அண்ணாதுரை பற்றி உங்களின் கருத்துக்களோடு என்னுடைய கருத்தும் இணைவாகவே பயணிக்கிறது.

#14 பா.செயப்பிரகாசம் 2013-01-21 12:35
3.1957-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா மாநாடு நடை பெற்றது.முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் பழனிவேல் ராஜனின் தந்தையார் பி.டி..ராஜன் தலைவர். மாநாட்டில் சி.என். அண்ணாதுரை உட்பட பலர் உரையாற்றினார்கள். அவர்பேசும் முன் ஒரு சிறுமி அழகு தமிழில் வயதுக்கு மீறிய திறமை பளிச்சிடப் பேசினார்.அடுத்துப் பேசிட வந்த அண்ணாதுரை "இந்தச் சிறு பெண் உரையைக் கேட்டிருந்தால் திருஞான சம்பந்தர் போல் ஞானப் பால் அருந்தியதால் பேசினார் " என்று தான் சொல்வார்கள் என்றார். மறுநாள் காலை மாநாடு தொடங்க இருந்தது.தேவர் தனது படையுடன் வந்தார். பி.டி . ராஜன் வரவேற்புரையை முடித்தவுடனே தேவர் ஆவேசமாக மேடை ஏறினார். பி.டி..ராஜன் தடுத்தபோது கொஞ்சமும் சனநாயகத்திற்கு மதிப்பளிக்காமல் தேவர் பேச ஆரம்பிக்க,நிகழ் ச்சி நிரலில் நீங்கள் பேசுவதாக இல்லையே என்று பி.டி.ராஜன் சுட்டிக் காட்ட "எல்லாம் தெரிந்து தான் மேடை ஏறினேன் " என அவரைத் தட்டிவிட்டு பேச ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் வந்த தொண்டர் கூட்டம் " தேவரைப் பேச விடு; தேவர் பேசட்டும்" என்று சத்தம் போட்டது.

." நேற்று இங்கே பேசிய ஒருவன் கடவுள் அருள் பெற்றவர்களை நிந்தித்துப் பேசியதாக என்னிடம் சொன்னார்கள். இனி அது போல் வேசி மகன் யாரும் இங்கே வந்து பேசக் கூடாது.நாளை கூட இங்கே அப்படியொரு ஆள் பேசப் போவதாகக் கேள்விப் பட்டேன்.அப்படியானால் ஆலவாய் அம்மை எழுந்தருளியுள்ள இந்த ஆலயத்தினுள் நிகழ அனுமதிக்க மாட்டேன்" என்று மடை திறந்தாற் போல் பேசி முடித்தார். முடித்ததும் பக்கத்தில் புலித்தோல் மீது அமர்ந்திருந்த ஸ்ரீ .ல. ஸ்ரீ .மதுரை ஆதீனத் தம்பிரான் அருகில் கீழே உட்கார்ந்து தவத்தில் ஆழ்ந்ததுபோல் கண்கள் மூடீருந்தார். தி.மு.கவின் நெடுஞ்செழியன் பேசுவதாக இருந்த மறுநாள் நிகழ்வு மதுரை தமுக்கம் மைதானத்துக்கு மாற்றப் பட்டது.அருவருப் பான தடித்த வார்த்தைகளைப் பேசிய அந்த நிகழ்வுக்கும், அதற்கு பதிலளித்து நெடுஞ்செழியன் பேசிய நிகழ்வுக்கும் நான் சாட்சியமாக இருந்திருக்கிறேன்.

#15 பா.செயப்பிரகாசம் 2013-01-21 12:35
1957 -ல் காங்கிரஸ் இயக்கத்திலிருந் து பிரிந்த டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, சிங்கராயர் போன்றோர் மதுரையில் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் என்ற அமைப்பினை உருவாக்கினர். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற மாநாட்டுத் தொடக்க விழாவில் இரவில் நிறைவுரையாற்றிய தேவரின் பேச்சுத் தான் அவர் கைது செய்யப் படக் காரணமாக அமைந்தது.மாநாட்டில் காமராசரை தரக் குறைவாக சாணாப் பயல் என்றெல்லாம் இழித்துரைத்தார். நான் அப்போது தேவரின் அபிமானி .அந்த மாநாட்டில் அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவர்க ளில் ஒருவன். அவர் உரையாற்றி வைகை மேம்பாலத்தில் திரும்புகையில் மறித்து கைது செய்யப்பட்டார். இடியோடு அன்று இரவு கடுமையான மழை. பேருந்துகள் ஓடாத இரவில் மழையில் நனைந்தபடி வீடு வந்தடைந்தேன்.இமானுவேல் கொலைவழக்கையும், சாதிக் கலவரத்தை தூண்டியதாகவும், அவதூறாகப் பேசியதும் இணைத்து அவர் மீது வழக்குத் தொடுத்து கைது செய்தார்கள். சாதித் துவேசம் கொண்டு அன்று அவர் பேசிய பேச்சுக்கள் மறக்க இயலாதவை. அதே நேரம் சென்னை திருமலைப் பிள்ளை சாலையிலிருந்த காமராசர் இல்லம் அரசுடைமையாக்கப் பட்டபோது அந்த அலுவலர் பொறுப்பில் இருந்த நான் விருதுநகர் தொகுதியில் ஊர்வாரியாய், ஒவ்வொரு சாதி எண்ணிக்கை குறிக்கப்பட்ட அவருடைய கைஎழுத்திலான குறிப்பேட்டினை (னொடெ போக்) அங்கு கண்ட காட்சியும் அதிர்ச்சி அளித்தது. இவை அனைத்தையும் உள்ளடக்கியே தலைமைப் பண்பிலிருந்து சறுக்குதல் என்ற சொல்லாடலைப் பயன் படுத்தினேன்.

#16 பா.செயப்பிரகாசம் 2013-01-21 12:36
பாரவர்டு பிளாக் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி என்று பெயர் குறிப்பிடுகிறீர்கள். நல்லது. மார்க்சீயத்துக்காக, மார்க்சீயத்தின் நிறைவு எல்லையான சோசலிசத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் எவை?முன் வைத்த நடைமுறைகள் என்ன? பேச்சில், எழுத்தில், செயல்பாடுகளில், போராட்டங்களில் அவர் என்ன செய்தார்? அது பற்றி சிறு துரும்பினையும் எடுத்துப் போடாமலே அவரது அரசியல் காலம் முடிவடைந்தது.
தேவரை விமர்சன அடிப் படையில் காணாமல். ஜீவபாரதி முதற்கொண்டு எழுதிய அனைவரும் வழிபாட்டு முறையில் எழுதியிருக்கிறா ர்கள்..பூமிக்கு மேல் நடமாடும் எந்த ஒரு பிரச்சினையையும் ,யாதொரு தலைவரையும் அவர் யாராக இருந்தபோதும் வரலாற்று பூர்வமாய் ஆய்வு செய்ய வேண்டியது சுய சிந்தனையாளர்களின் பணி. அந்தப் பணியை நாம் நிறைவு செய்கிறோமா?

நண்பர்களே,
தேவர் மீதான விமர்சனத்துக்கு எழுகிற கொதிப்பு, தாழ்த்தபட்டவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் சித்திர வதைக்கும் வருவதில்லையே, அய்யா அது ஏன்?

நன்றி: கீற்று 31 டிசம்பர் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?