காலத்தின் கவியே, சென்று வாருங்கள்

(தமிழின் மிகப்பெரும் கவிஞரான இன்குலாப் சில தினங்களின் முன்னர் சென்னையில் காலமானார். எமது இலக்கிய உலகிற்கு இது ஓர் பேரிழப்பு. இவரது எழுத்துகள் புதியன, புரட்சிகரமானவை. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது இவரது பேனா. இவரது கல்லூரி நண்பரும், தமிழின் காத்திரமான எழுத்தாளருமான பா.செயப்பிரகாசம் “தாயகம்” இணைய இதழுக்கு இன்குலாப் மீதான கட்டுரையை எழுதியுள்ளார். இவரது எழுத்துகள் எமது கவிஞருக்குக் கிடைக்கும் நிறைவான  காணிக்கை.)


கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம். பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில் அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் தவிர கால எல்லை இல்லை.தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக்காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல் என்ற பேர் கல்லூரிக்கு!

கவிஞர்கள் மீரா,அப்துல்ரகுமான், அபி என தமிழில் தடம் பதித்த கவிஞர்கள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம்;  அப்போது தமிழ் முதுகலையில். கவிஞர் நா.காமராசன் முதலாண்டு மாணவர்; தமிழ்இளங்கலையில் இறுதியாண்டு மாணவன்  நான்.  இரண்டாம் ஆண்டு மாணவராக எஸ்.கே.எஸ் என அறியப்பட்ட இன்குலாப். அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.

தியாகராசர் கல்லுரியில் முதுகலை முடித்த கவிஞர் மீரா ‘சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக இருந்த வேளையில் அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் (Pre-university course) வாசித்தவர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்இளங்கலை சேருகிறார். இறுதி ஆண்டு முடிக்கும் வரை  அவர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது.


எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். அவை யாப்பு சார்ந்த

மரபுக் கவிதைகள்.
மண்னின் குழந்தைகளாய் - இங்கு
வாழும் உயிர்களுக்கு
விண்ணின் ஒளிமுலையில் - இருந்து
வீழும் வெயில் பாலே.
முதிர வைப்பாய் அரும்பை - அனல்
முத்தம் கொடுப்பதனால்
முதிரவைத்தல் முறையோ – அந்த
ஊமை மலர்க் குலத்தை.
சுரண்டிக்  கொழுப்பவர்கள் - உன்
சூட்டில் பொசுங்க வில்லை
சுரண்டப் படுபவர் தாம் - உன்
சூட்டில் பொசுங்குகிறார்.
இவை ’வெயில்‘ தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.

’பாடகன் வருகின்றான்’ என்று மற்றொரு கவிதை.
பாலைவனத்தின் சோலைகளே –ஒரு
பாடகன் வருகின்றான் அவன்
பயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு
பாடல் தருகின்றான்
“நீலவானத்திற் கப்பால் –எதையோ
நினைத்துப் போகின்றான்
நீண்ட உலகத் துயர் களைய
நெஞ்சை நனைத்துப் போகின்றான்
மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார். பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் இன்னும் வீரியமான சொல்லாடல்களை கைவசப்படுத்தினார்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி). இஸ்லாமியரில் கீழ் சாதியான ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

 இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த “நாவிதக்குடி“ - அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன.  தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு - மரைக்காயர் முஸ்லீம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது. நாவித முஸ்லீம் இளைஞர்களின் அயராத முயற்சியால் ’நாசுவக்குடி’ என்னும் அந்தப் பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள் எதிர்ப்புக் கங்கு சீராய் வளர்ந்தது. பிரச்சனைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை எதிர்கொள்ள இயலாமல், ஊதி அணைத்து விட்டு, அல்லது உடன்பட்டுப் போனவர்கள் பக்கம் அவர் போகவில்லை. மரபுக்கவிதை விதைத்த போதும் எதிர்க்கருத்தியலின் வேர் அவருக்கு இந்த ஒடுக்கபட்டோர் குரலிலிருந்து உருவானது.

2


1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, தமிழ்நாட்டில் சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல் வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில்  தமிழ்நாடு முழுதும் கூட்டம் நடத்தி  உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் நா.காமராசன், கா.காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள். மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் இரா.சேதுவும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாலையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது. வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களை விட கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா.முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்) - போன்றோர் ஏற்றுச் செய்தனர்.

1965 ஆகஸ்டு 15-ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம்.   கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாபை, ஐ.செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும் வரை அடித்தது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். ”இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது)” என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கிமானவர். ஆயுதப் போராட்டக் கருத்து 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோது தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றது உண்மை.

இளங்கலை முடித்த பின் ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor).; 1967 -ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக நடத்திய ’கார்க்கி’ இதழில் எஸ்.கே.சாகுலமீது - இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே கார்க்கியில் பா. செயப்பிரகாசம் - சூரியதீபன் ஆகிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற. அப்போதிருந்தே (1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர் ஆகியது போல் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது மறைந்து இன்குலாப் இயற்பெயராகியது.

“ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்.” என்கிறார்.

“செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை . சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி ”ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை“ புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

”என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.


பள்ளியில் பயின்ற போது அவரும் நானும் தி.மு.கழகத்துக்காரர்கள். அக்காலத்தின் இளைய தலைமுறை எப்படி உருவாகிற்றோ அப்படியே நாங்களும் உருவானோம். சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை மார்க்சியத்திற்கு உறுதியான அடித்தளம் அமைத்தது. அரசதிகாரத்திலிருந்த தி.மு.க.வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.

“ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச் செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும்.“

அவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி, மார்க்சிஸ்ட் இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர் புரட்சிகர மா.லெ இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசியவிடுதலையில் ஊன்றி நிற்பதுவும்  அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

புரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்த போது 'மனிதன்',  'புதிய மனிதன்' என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். எனது தடமும் இன்குலாப் நடந்த பாதை போலவே அமைந்திருந்தது.  பின்னர் புரட்சிகர மா.லெ.இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர விடுதலை என்னும் முனைப்பில் ஒன்றாய் இருந்தோம்.

இன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்த போது 'மனிதன்',  'புதிய மனிதன்' இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே, தவிர முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.

”ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதற்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

3

கருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே  இன்றும் உயிரோட்டமாய்ச் சுமந்து வருகின்றன. இதனைத் தெளிவுபடுத்துகிறது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்கிற  மார்க்சிய வாசகம். இந்த முழக்கத்தை
வெள்ளையாய்த் தோன்றும்
எந்தச் சொல்லும்
வெள்ளையாய் இல்லாததால்
இல்லை எனது சொல்லும்
வெள்ளையாய்
என்று  கவித்துவத்துவத்துக்குள் பொதிந்து தருகிறார் இன்குலாப்.

அவரின் சமகாலத்தவர்கள் எவரும் செல்லாத அளவுக்குச் சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார்.   தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது, ஒரு போதும் அந்தச் சுரப்பு வற்றிப்போக விடாமல் இதழ்ப் பணி,   கவிதை, கட்டுரை, நாடகம், சொற்பொழிவு எனப்  பலப்பல   வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.
முதுகில் சுமந்தாய்
அவர்கள் பல்லக்கு
முகத்தில் சுமந்தாய்
அவர்கள் எச்சில்
இன்றும் சுமப்பாய்
அவர்கள் மலங்கள்
என்று   முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அது இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது. அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலைத் தரும் வகையில்
இனியும் சுமப்பாய்
அவர்கள் தலைகள்
என வைக்கிறபோது இன்குலாப் என்னும்   கவி வெளிப்படுகிறார்..

முதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய  அனுபவ வெளிப்பாடு; இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.

”மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கங்களில் இன்றும் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.

உயரம் கூடக்கூட அதிகாரமும் சீரழிவும் அதிகரித்துக் கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும். அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், தேர்தல்அரசியலோடு கைபிணைத்தவர்கள்   அனைவரையும் கண்டார்.  எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்பட முடியும் என்பதற்கு சாட்சிகளாக அவர்கள் உருமாறினார்கள்.

சமகால அரசியல் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை .

நவீன கவிதை , நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை.  ஆயினும் அவை பொருட்டேயல்ல.    மனிதனாய் வாழ்ந்த பதிவு தான் முக்கியம்!  சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு வாழ்ந்தார்.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்:

எழுதியநாடகத்தால் நினைக்கப்படுவார்.                                                                                         
எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

4

தோழரே, நினைவிருக்கிறதா?

1983- ஜூலை, இலங்கையின் கொழும்பில், பிற பிற பகுதிகளில் நடந்த தமிழர்மீதான இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி, ஆகஸ்டு, செப்டெம்பர் ’மனஓசை’ இதழ்களைக் கொண்டுவந்தோம். செப்டம்பர் இதழில் ”கரையில் இனியும் நாங்கள்.... ” என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள்.
காற்று
ஈழத்தின்
கனலாய் வீசுகிறது.
கரைகளில்
இனியும்
நாங்கள் கைகட்டி நிற்கவோ?
உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.
ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!
ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!
ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்
இன்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!
ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க!
மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என குரலைப் பெய்தீர்கள்.


நினவிருக்கிறதா?
தோழரே. நீங்கள் இப்போது ஞாபக அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.




கவிஞராக நீங்கள், எழுத்தாளராக நான், ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி, அரசியலாளராக தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பலகலைக் கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும், விடுதலைப் புலிகளின் “கலைப் பண்பாட்டுக் கழகம்” பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே, இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.



நான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு  அந்த உலகுதழுவும் குரலை அடையாளம் கண்டு, கவிதை எழுதிய கரத்தைத் தடவி 2002 - அக்டோபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே, தோழரே!

நேற்று நீங்கள் நடந்தீர்கள்
இன்று நீங்கள் நடக்கிறீர்கள்
நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.
சென்று வாருங்கள் தோழரே! வீர வணக்கம்.

நன்றி: தாயகம் 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்