கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!

2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.


அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள். பேரா.கா.சிவத்தம்பி முன்னிலை வகித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள முருகபூபதி, நடேசன், லண்டனிலுள்ள ராசேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்கை எடுத்துச் செய்கிறார்களெனக் குறிப்பிட்டார்கள்.

தமிழினப் படுகொலை முழு வீச்சில் நடந்துள்ள நிலையில், இன்னும் அந்த வங்கொடுமை வெப்பத்தினை இராஜபக்ஷே சகோதரர்கள் இறக்கிக் கொள்ளாத சூழலில் மாநாடு சாத்தியமா என்ற ஐயம் எழுந்தது. அரசு அனுமதியுடன் தான் நடக்கும் என்றார்கள். பன்னிரண்டு பணிகளை முன்னெடுக்கும் ஒரு அறிக்கையினை என் கையில் அளித்து தமிழகம் திரும்பியதும், எழுத்தாள நண்பர்களிடம் விநியோகிக்குமாறு தெரிவித்தார்கள். சில ஐயங்கள் தெளிவுpபடுத்தப்படாததால் அதை நான் ஒருவருக்கும் விநியோகிக்கவில்லை. அறிக்கையில் அவர்கள் எழுதியுள்ள 12 அம்சங்கள் பற்றி ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. எழுப்பியுள்ள கேள்விகள் தருக்க ரீதியில் அர்த்தமுள்ளவை.

“இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறைப்பது தான்” (புதிய பார்வை-16 .5.2010) என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குறிப்பிட்டது, மாநாட்டின் பிரதான அரசியல் நோக்கம் பற்றியதாக இருந்தது.

செம்மொழி மாநாட்டின் ஆரவாரம் காதுகளிலிருந்து அகலும் முன்பே, கொழும்பில் மாநாட்டு முயற்சியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள் சிலர். இந்தச் சிலர் அங்கும் இங்கும் உள்ள சிலராகும். முன்னது தமிழர் செவிப்பறை கிழித்து – அவர் தம் புத்திமங்கச் செய்ய நடந்த ஆரவாரம் பின்னது இரைச்சல் ஏற்படுத்தாது அதே பாதையில் நடக்கும் அடக்கமான முயற்சி.

கொழும்பு என்றவுடன் இலங்கையும், இலங்கை என்றதும் இராஜபக்ஷேக்களும், இராஜபக்ஷேக்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையும் நினைவில் மேலெழுதல் ஒவ்வொரு தமிழனுக்கு மட்டுமல்ல, மனிதனான எவரொருவருக்கும் வருதல் தவிர்க்க இயலாதது. மனிதன் சிந்திப்பு சக்தி கொண்டவன்.

2010 சனவரி இந்தியக் குடியரசு நாள் விழாவில் தென்கொரிய அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இவ்வாண்டின் இந்தியத் திரைப்பட விழா தென்கொரியாவில் நடைபெறுமென இந்தியப் பிரதமர் உறுதிமொழி அளித்தார். முள்ளிவாய்க்காலினுள்ளிருந்து உலக முழுதும் வீசுகின்ற பிணநாற்றத்தை திரைப்பட விழா என்னும் மாயாஜாலத்தால் மறைத்திடலாமென அதைக் கபளீகரம் செய்து கொழும்பில் நடத்திட வந்தார் ராஜபக்ஷே. குடியரசு நாளின் உறுதிமொழி பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. உலகமயமாதலின் இந்திய நாயகனான பிரதமர், இலங்கையைக் கபளீகரம் செய்யும் முயற்சியாக கண்டதால் ஜஃபா நிகழ்ச்சியினை நடத்த தடையேதும் இல்லாமல் போனது.

இந்தியத் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்வது ஃபிக்கி - இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். சாதாரண மக்களை வீழ்த்த திரைப்பட விழா; சர்வதேச மூலதனத்தை இறக்க இந்திய தொழில் வர்த்தக விழா - என்ற இரு பிரிவாக இலங்கையை வளைப்பதில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை அதிபருக்கும் உடன்பாடுதான். இருவரும் ஒருவழிப் பயணிகளே. இலங்கையின் ராசபக்ஷேக்கு கூடுதலான ஒரு குறிக்கோள் உண்டு. அது கெட்டுப்போய்க் கிடக்கும் உலகை வளைப்பது. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுப்போக்குத்துறையின் தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது, முதல் பாராட்டைத் தெரிவித்தது இந்த அமைப்பு.

தமிழகத்தில் இதற்கான முதல் எதிர்ப்பைக் கையிலெடுத்தனர் மே-17 இயக்கத்தினர் ஃபிக்கியின் ஊடகத் துறைத் தலைவரான கமலஹாசன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இலங்கையில் நடைபெறும் விழாவில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கமலஹாசன் வாக்குறுதி கொடுத்தார். ஃபிக்கி அமைப்பின் ஊடகத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகவில்லை. அதிலிருந்து விலகுவதால் தமிழருக்கு என்ன பயன் என்கிற ரீதியில் தர்க்கம் செய்தார். தமிழர்களுக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ, ஃபிக்கி அமைப்பின் நிரந்தரச் சுரண்டலுக்கு துணை செய்வதால் அவருக்கு கோடி கோடியாய்ப் பயன் விளைகிறது. தமிழ்த் திரையுலகம்- ஐஃபா விழாவினைப் புறக்கணிப்பது என்ற திடமான முடிவை எடுத்தத பின் கமலஹாசனுக்கு வேறு வழியில்லை என்பதாலும், இந்தி திரைப்பட நடிகர்களின் வீடுகளுக்கு முன், மும்பைத் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களினாலும், இலங்கை ராசபக்ஷேக்கள் நடத்த நினைத்த நாடகம் வெற்றியடையவில்லை.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளது, மூளையில் இலங்கையின் பயங்கரவாதம் பற்றி ஆழமாக நடப்பட்டுள்ள வேர்களைக் களைவது இலங்கையின் அடுத்த உடனடித் தேவை. அங்கும் இங்குமுள்ள சாதாரண சனக்கூட்டத்தைக் கவர எடுத்த முயற்சி தோல்வியுற்ற நிலையில் சிந்தனையாளர்களை இழுக்க சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு இலங்கை தன் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளது.

“சர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முயற்சி’’

மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது. ஈழத் தமிழராயினும், புலம்பெயர் தமிழராயினும் தமக்கென ஒரு தாயகம் கண்டு, சுயநிர்ணய உரிமையைக்கொண்டாடுதல் அவர்களின் விருப்பமாகும்’ அதைத் தடுத்து தமிழின அடையாளமே இல்லாமல் செய்கிற சிங்களப் பேரினவாதத்தின் மீதானது அவர்களது வெறுப்பு. இந்த இரு எல்லைகள் மட்டுமே தமிழினத்தின் விருப்பாகவும்,வெறுப்பாகவும் இருக்க முடியும். இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைதல் என்பது, புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், குறிப்பாய் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நிற்கும் சிலரை ஒன்று கூட்டும் காரியமாகக் காணமுடியும். அவ்வாறான புலம்பெயர் அறிவு ஜீவிகளை இணைத்து ஒற்றைச் சிங்கள நோக்கத்துக்கு உள்ளடக்கமாய் ஆக்குவது என்பதாகவே முடியப் போகிறது.

விடுதலைப்புலிகள் காலத்தில் சாத்தியப்படாததை - இந்தச் சுதந்திர ஆட்சியில் சாத்தியமாக்குகிறோம் என்று சில ஓட்டை உடைசல்கள் முனங்குவதை அறிய முடிகிறது.

எழுத்துச்சுதந்திரம், கருத்துரிமை மறுக்கப்பட்ட இராணுவ பூமியில் எதைப்பேச, எழுத வேண்டுமென அவனே வரையறுக்கிறான். மாநாட்டில் இலங்கை அரசினையோ, இராஜபக்ஷேக்களையோ விமரிசித்துப் பேச இயலுமா? அவ்வாறு விமரிசிக்காமல் தமிழினத்தை அழித்தவனை விமரிசிக்காமல் தமிழை செழுமைப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

அவன் ஒரு ஆங்கிலேயன் என்ற கவிதை உண்டு.
அவர் ஓர் ஆங்கிலேயர்
அவரே அதைக் கூறினார்
அந்தப்பெருமை அவரையே சாரும்
அதாவது அவர் ஓர் ஆங்கிலேயர்
அவர் ஒரு ருசியனாக இருக்கலாம்
ஒரு பிரெஞ்சுக்காரரார், ஒரு துருக்கியர்
இத்தாலியனாக இருக்கலாம்;
பிற தேசங்களினவராக மாற
அனைத்து ஆசைகளிருந்தாலும்
அவர் ஓர் ஆங்கிலேயராகவே இருக்கிறார்
-கில்பர்ட் 1878
அதுபோல், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அத் தேசத்தவராக மாறும் ஆசைகளிருந்தாலும் புலம்பெயர் ஈழர்-தானொரு ஈழத்தமிழராக இருக்கவே விரும்புகிறார். ஈழத் தமிழர் என்றொரு பெருமித அடையாளத்துடன் நடவடடிக்கைகளை ஒழுங்கு செய்யவே எண்ணுவார். அவர்களுடைய இந்தப் பெருமிதம் கடந்த காலம் சார்ந்ததல்ல; சமகாலத்தின் உரிமைப் போராளி என்ற பெருமிதத்தினை அடியாகக் கொண்டது. அது இன விடுதலைப் போராட்டப் பெருமிதம். இனவிடுதலைப் போராளி என்ற உணர்வுடன், உரிமைப் போராட்டச் செயல்பாட்டுனுள்ள புலம்பெயர்தமிழர்களால் ஈழத்தாரின் வாழ்வு, பண்பாடு, மொழிக்காப்பு என அனைத்தும் அவர்களின் வழிகாட்டலில் அமையும்; அவர்களை உரிமைப் போராட்டத் தடத்திலிருந்து இறக்கி, சிங்கள இனக் கரைப்புக்குள் செலுத்தும் தடம்மாறு வேலையை - கொழும்பில் நடக்கும் மாநாடு செய்ய இருக்கிறதா? கொழும்பில் நடக்கும் என்றால் சிங்கள அதிகாரத்தின் இசைவுடன் தானே நடக்க முடியும்?

ஈழத்தில் நசுங்கி, நைந்துபோன மக்களது உணர்வு நிலையிலிருந்து- மேலோங்கிய இன்னொரு மட்டத்தில் புலம்பெயர் ஈழர்கள் இருந்தாலும், அதுவே மற்றொரு சாதகமாக மாறியுள்ளது. உலக அளவில் பரந்து வாழுவதால், வாழுகிற நாடுகளில் உரிமைக்குரல் எழுப்புவதும், ஒன்றிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. லண்டனில் ஓரிரு மாதங்கள் முன்னர் உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் வெளி விவகாரத்துறை அமைச்சர் மிலிபாண்ட், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழின உரிமை மீட்டெடுக்கப்படட வேண்டுமெனப் பேசினார்கள். இலங்கைப் பிரதமர் ரத்னசிறிவிக்கிரம நாயக உடனே “வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இலங்கை ஆசிய நாடுகளில் வலுவான நாடாக வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை’’ என சீற்றத்தைக் கொட்டினார்.

ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டதில் உலக நாடுகளுக்கு அவரவர் நலனே முதன்மையாக வந்தது. அதைக் கையாண்டது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஓரினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் அவை பெரும் பங்கு வகித்ததை ஓரங்கட்டி விட முடியாது. அந்த நாடுகளின் காதுகளில் மறுபடி நுழைக்கவும், அழுத்தம் தரவுமான கடமையினை புலம்பெயர் ஈழர்கள் செய்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து சலனப்படுத்தும் காரியத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

இந்த நேரத்தில் 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு ஒரு படிப்பினையாக அமைகிறது. கொழும்பில் நடத்த முயலுதலை ஏன் தமிழ்மக்கள் மட்டுமே செறிவாய் வாழும் யாழ்நகரில் நடத்தக்கூடாது, ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.

1972ல் புதிய யாப்பைக் கொண்டு வந்தது சிங்கள மொழி, மத, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தியதன் காரணமாய் சிறீமாவோ பண்டார நாயகாவின் முகம் சர்வதேச அளவில் சர்வாதிகாரத்தின் கோரமுகமாக ஆகியிருந்தது. தானொது இனச்சமத்துவம் பேணுபவர், சனநாயகவாதி என்ற புதிய முகத்தை மாட்டிக் கொள்ளும் தேவையில் கொழும்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி, பெயர்வாங்கிக் கொள்ள நினைத்தார். தமிழ் வளர்த்த யாழ் மண்ணில் தமிழர்கள் தங்களின் தலைநகரில் அம்மாநாட்டை நடத்தியே தீருவோம் எனப் போராடி வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத சிரிமாவோ பண்டாரநாயகா ஒன்பது தமிழ் உயிர்களை மாநாட்டு அரங்கிலேயே கொன்று களிப்படைந்தார்.


“அன்று பண்டார நாயகா இருந்த நிலையைப் போல இராசபக்ஷே இன்று பன்னாட்டுஅளவில் முகமிழந்து போயிருக்கிறார். அங்கு நடக்கும் கொடுமைகளை விசாரிக்க பன்னாட்டு அவை(ஐ.நா) முயலும்போது அதைக் கூட மோசமான முறையில் தாக்கி மூடச் செய்த அரசாக அவருடைய அரசு அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், பன்னாட்டு எழுத்தாளர்கள் ஆகியோரைக் கொழும்பிற்கு அழைத்து அவர் மாநாடு நடத்துவதற்குக் காரணமே தான் மனித உரிமைகளை மதிப்பவன் என்று ஒப்பனை செய்து பன்னாட்டு அரங்கில் காட்டிக் கொள்ளத்தான்’’ என்று மூத்த ஈழ எழுத்தாளர் எஸ்.பொ கூறுவது உண்மை.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை கொழும்பிலே நடத்த வேண்டுமென சிரிமாவோ முனைப்புச் செலுத்தியபோது, மறுப்புக் காட்டாமல் அதற்கு முட்டுக்கொடுத்தவர் கா.சிவத்தம்பி. அதனால் யாழ் நகரில் 1974ல் நடைபெற்ற மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்கவில்லை என்று உண்மையையும் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். அந்த சிவத்தம்பிதான் இப்போதும் கொழும்பு மாநாட்டுக்கு முன்னிலைப் படுத்தப்படுகிறார்.

சிங்கள அரசை நம்பி ஒருபோதும் காரியம் ஆற்றக்கூடாது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன. உலக நாடுகள் உணர்ந்த அளவு கூட ஈழத் தமிழர்கள் குறிப்பாய் கொழும்புத் தமிழர்கள் உணரவில்லையோ என்கிறபோது, ரணமாகக் காந்துகிறது. சிங்கள அரசை நம்பி இது போன்ற காரியங்களை முன்னெடுக்கிறார்கள் என்றால் உள்ளறுப்பு வேலைகள் செய்கிறவர்கள் யார் என்ற கேள்வி சரியே.

இன்றைய தகிக்கும் நிலையில், தமிழர் கோருவது தமிழை வளர்ப்பது அல்ல; தமிழை வளர்ப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்களத்துக்கு சமமாகத் தமிழ் என்று நிறுவுவதற்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பதே முதன்மைப் பணியேயன்றி உலகத்துக்கும் மேலாகத் தமிழைக் கொண்டு செல்லும் பணி அல்ல. அதைச் செய்வதாகக் கூறித்தான் 350 கோடி செலவில் செம்மொழி மாநாடு எல்லா ஒப்பாரிகளையும் பாடி முடித்துவிட்டதே! மொழி வளர்ச்சிக்கு அரசியல் உரிமையே முதற்தேவையாகும் என்பதை எவரும் உணர்வர். ஆட்சியில், நிர்வாகத்தில், கல்வியில், வேலை வாய்ப்பில் எல்லா இனங்களின் வாழ்வையும் நிர்ணயிப்பதில் சிங்களம் எதனால் சாத்தியமாயிற்று? அரசியல் மேலாண்மையில்தான். சிங்களத்திற்கு சமமாக தமிழ்மொழியை வளர்ச்சி செய்ய வேண்டுமெனில் மொழி வளர்ச்சிக்கு முன்னிபந்தனையாய் ஈழத்து மண்ணில் அரசியல் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரசியல் பற்றி எண்ணிப் பார்க்காமல் மொழி வளர்ச்சிக்கு தலைகொடுக்கப் போகும் வித்தையை எவ்வாறு செய்யப் போகிறார்கள்?

தமிழர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையில் ராஜபக்ஷேக்கள் வேறொரு காரியத்துக்கு வழிவகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிமைச் சமூகமாக ஆக்கப்பட்ட தமிழினத்தை - சிங்கள இனக் கரைப்பில் செலுத்துவதுதான் அது. தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரமல்ல; அபிவிருத்திதான் என்று மொழி வளர்ச்சிக்கு வழி அமைப்பதுபோல் காட்டுவதும் ஒரு உத்தியாகும்.

“வளர்ச்சியை விரும்புகிற ஒரு தேசிய இனம் முதலில் தனது சுதந்திரத்தைப் பெற வேண்டும். அவர்களுடைய தேசிய சுதந்திரம் இரண்டாம் பட்சம் என மற்றவர்கள் அவர்களுக்குக் கூறுவது தேவையற்ற வேலை’’ என்று ஒரு சமயத்தில் போலந்து பற்றி காவுட்ஸ்கிக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதினார்கள்.

அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு அளித்த டப்ளின் அறிக்கை “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை அரசு, சூலை 2006-ல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை அய்க்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள்படி, வான்வழித் தாக்குதல், கனரக ஆயுதத் தாக்குதல், காரணமாய் நாளொன்றுக்கு 116 பேர் கொல்லப்பட்டனர். இறுதிச் சில நாட்களில் மட்டும் 20000 பேர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு, பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டன’’ என முன்வைக்கிறது. அதன்படி சூலை 2006 முதல் ஏப்ரல் 2009 வரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரம். அதன் பின் 20000 என்றால் ஒரு லட்சத்து 42 ஆயிரம். ஆனால் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் இரண்டு லட்சம் பேர் என்று வருகிறது.

இதன் காரணமாக மட்டுமல்ல எல்லாக் காரணங்களின் படியும் “இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ என மனித உரிமையாளரும், பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ளார்.

இவ்வாறான சிந்தனைகளால் வார்க்கப்பட்டு, வழி நடக்கும் புலம்பெயர் ஈழர்களை தடம் மாறச் செய்ய – மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் கொழும்புத் தமிழர்கள் முயலுகிறார்கள். இதனை இராஜபக்ஷேயிசத்தின் இன்னொரு பக்கம் என்கிறோம். தடம் மாறுதல் ஆபத்தானது. ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றபோது, ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாய் வருவார் என எதிர்பாக்கப்பட்ட ஒரு இந்திய வீராங்கனை முதல் சுற்றின் இறுதியில் தடம் மாறி ஓடியதால், தகுதி இழந்தவராய் ஆக்கப்பட்டார். என்ன இப்படிச் செய்துவிட்டாயே என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வருத்தப்பட்டதாகக் கூறுவார்கள். அதுபோல் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை மொழிவளர்ச்சி, கலை, இலக்கிய மேம்பாடு என்று தடம் மாற்றி ஓட வைக்கும் பொறுப்பு கொழும்புத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழர் கோருவது மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி அல்ல என்பதை, ஈழத்து அரசியல் ஆய்வாளர் தனபாலா முன்வைக்கிறார். “தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத் தான். அதைத்தான் நாம் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்க வில்லை. எமது வாழ்நிலை, பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றிற்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர, தமிழினத்தைச் சிங்கள இனமாகக் கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல; இங்கே இலங்கை அரசு ஒடுக்கு முறையை இன்னொரு தளத்திற்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகம் மூலம் இராசதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றி கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்” (பொங்கு தமிழ் இணையம் - 23.7.2010)

அரசியல் பற்றி உதடு பிரிக்காமல், மொழிவளர்ச்சி, கலை இலக்கிய மேம்பாடு என்ற உச்சாடனம் செய்து, ஒடுக்கு முறைக்கு துணை போக ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது; அதுவும் இராசபக்ஷேக்கள் மீதான போர்க்குற்ற விசாரணை தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் உலக அளவில் அதனை உடைக்க எடுக்கும் முயற்சிக்கு இந்த நேரத்தில் அறிவூஜீவிகளின் ஒன்றிப்பு தேவைப்படுகிறது. இந்த வகைச் செயல்பாட்டுக்குள் கண்டு கொள்ள முடியாதவகையில் ஒளிந்து கொண்டுள்ளது சிங்கள ராசதந்திரம்; அரசியல் மேலாண்மையில் இருப்பவர்கள் அறிவுச் சூழ்ச்சியிலும் மேலாண்மை கொண்டிருப்பார்கள். அந்தச் சிங்களர் ஒருபோதும் “மோட்டுச் சிங்களர்” (முரட்டுச் சிங்களர்) அல்ல; அடிமைச் சமூகமாக்கப்பட்ட நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.

இந்திய அரசும் இலங்கை அரசும் கை கோர்த்து நடத்திய திரைப்பட விழாவைத் தோல்விகாணச் செய்த தமிழர் ஒற்றுமை நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த ஒற்றுமை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கவும் அவசியப்படும் தருணமிது. குறிப்பாக தமிழக எழுத்தாளர்களை, புலம்பெயர் எழுத்தாளர்களை அழைக்கிறோம். நடைபெறப் போகும் கொழும்பு மாநாட்டில் நிச்சயமாக நாங்கள் இல்லை என்போம்.

நன்றி: கீற்று - 31 ஆகஸ்ட் 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?