தமிழக அரசு நியமித்துள்ள சமச்சீர்க் கல்வி மதிப்பீட்டுக் குழு தகுதியானதல்ல!

சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைத் தமிழக அரசு இவ்வாண்டு நிறுத்தி வைத்துச் சட்டம் இயற்றியதை ஒட்டி அக்கறையுள்ள கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிதாயிற்று. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் எமது நியாயங்களை ஏற்று தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்குச் சென்ற 10ம் தேதியன்று இடைக்காலத் தடை வழங்கியது. அவசரக் கோலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சிக்கவும் செய்தது. தேவையானால் பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கிக் கொள்ளவும், குழு அமைத்து பாடத்திட்டத்தை ஆராய்ந்து செழுமைப்படுத்தவும் அரசுக்குள் உரிமையையும் தீர்ப்பு அங்கீகரித்தது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுதலைக் கணக்கில் கொண்டு அரசு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தும் என நம்பினோம். ஆனால் அரசுபிடிவாதமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிபதிகள் பி.எஸ்.சவ்ஹான், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வழக்கை அவசரமாக விசாரித்து சென்ற 14ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.

அரசியல் மாற்றத்தின் விளைவாக நிர்வாக ரீதியாகவோ, சட்டமன்றத்தைக் கூட்டியோ முடிவெடுக்கும்போது, மாணவர் நலனே பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. தீர்ப்பின் இதர முக்கிய அம்சங்களாவன:
  1. மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சென்ற ஆண்டைப் போலவே இந்தக் கல்வி ஆண்டிலும் சமச்சீர்க் கல்வி தொடர வேண்டும்.
  2. பிற வகுப்புகளைப் பொருத்தமட்டில் அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டங்களையும், பாட நூல்களையும் ஆராய வேண்டும். இக் குழு மூன்று வாரங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டும். இவ்வறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ரிட் மனுக்களை தினசரி விசாரித்து விரைவாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
  3. தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்படும் இவ் வல்லுனர் குழுவில் ஒன்பது பேர் இருப்பர். தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர் தவிர தனது பிரதிநிதிகளாகத் தமிழக அரசு வேறு இருவரையும் நியமித்துக் கொள்ளலாம். இரு கல்வியாளர்களையும் அரசு நியமித்துக் கொள்ளலாம். தவிர "தேசீயக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலிருந்து இருவரை நியமிக்கவேண்டும்.
  4. முந்தைய அரசு இயற்றிய சமச்சீர் கல்விச் சட்டம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளதால், வல்லுனர் குழு சமச்சீர்க் கல்வி முறையை மாற்றிப் பழைய முறைக்குத் திரும்புதல் என்கிற பிரச்சினைக்குள் நுழையக் கூடாது. முந்தைய அரசின் சமச்சீர்க் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சென்னை, உயர்நீதிமன்றம் சென்ற ஏப்ரல் 30, 2010 அன்று வழங்கிய தீர்ப்பை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையே வல்லுனர் குழு ஆராய வேண்டும்.
இந்தத் தீர்ப்பின் விளைவாக 2, 3, 4, 5, 7, 8, 9, 10 வகுப்புகளுக்குப் பாடம் தொடங்குவது மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகிறது என்ற போதிலும் பொதுப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வழியே தராத வகையில் அமைந்துள்ள அம்சத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது. சென்ற செப்டம்பர் 10, 2010 அன்று சமச்சீர் கல்விக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் செய்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றப் பெஞ்சில் இருந்த நீதிபதி பி.எஸ் சவ்ஹான் அவர்கள் அடங்கிய பெஞ்சே இன்றைய தீர்ப்பையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் வல்லுனர் குழு அமைக்கும் அம்சத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள நெறிமுறை ஏற்கத் தக்கதாக இல்லை. அப்படியான ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனில் அதை உச்சநீதிமன்றமே செய்திருக்க வேண்டும். பாடத் திட்டம் தரமாக இல்லை எனச் சொல்லி சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்தி வைக்க கோரும் மனுதாரரிடமே தரத்தைப் பரிசோதிக்கும் குழுவை நியமிக்கும் பொறுப்பை அளித்தல் எப்படிச் சரியாக இருக்கும்? தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மூவர் குழுவில் உள்ளபோது தமிழக அரசுக்கு மேலும் இரு பிரதிநிதிகள் ஏன்? கல்வியாளர்கள் இருவரைத் தேர்வு செய்யும் பொறுப்பையும் அதே மனுதாரரிடம் கொடுப்பதெப்படி? உச்சநீதிமன்றம் இவற்றைக் கருத்தில் கொள்ளாதது வருந்தத்தக்கது.

இந்த வாய்ப்பைத் தமிழக அரசு மிக மோசமான வகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கல்வியாளர்கள் என்ற போர்வையில் டி.ஏ.வி. பள்ளிக் குழும உரிமையாளர் ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பள்ளிக் குழும உரிமையாளர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, தமிழக அரசுப் பிரதிநிதிகளில் ஒருவராக லேடி ஆண்டாள் பள்ளி முன்னாள் நிர்வாகி விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக, இக்குழுவில் சமச்சீர்க் கல்வியை ஒத்திப் போட ஆணையிட்ட தமிழக அரசு அதிகாரிகளும், மெட்ரிகுலேசன் முதலான கல்வி வாரியங்கள், பயன்பெறும் தனியார் பள்ளி முதலாளிகளுமே நிறைந்துள்ளனர். இவர்கள் அளிக்கப் போகிற 'மதிப்பீட்டு அறிக்கை' நிச்சயமாக தமிழக அரசு முடிவுக்குச் சாதகமாகவே அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக இக்குழு நிராகரிக்கவும் பகுத்தறிவுக்கும் சமூக நீதிக்கும் பொருந்தாத கருத்துகளைத் திணிக்கவும் இக்குழு முயுற்சிக்கும் வாய்ப்புண்டு.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள சமச்சீர்கல்விப் பாடத் திட்டமும், பாட நூற்களும் தகுதி மிக்க ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்களால் ஓராண்டு உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இணையதளத்தில் வெளியிடப்பட்டு விரிவாக விவாதம் நடத்தப்பட்டவை. ஆசியாவிலேயே தலைசிறந்த கணித ஆராய்ச்சி அமைப்பான 'மேட்சயின்ஸ்' நிறுவனப் பேராசிரியர் முனைவர் ராமானுஜம், இந்திய அளவில் புகழ் பெற்ற ராமானுஜம் மேலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் யுவராஜ், மூத்த ஆங்கில ஆசிரியை நளினி மற்றும் கல்வியாளர்கள் முனைவர் மாடசாமி, முனைவர் வெற்றிச் செல்வன், வ.கீதா முதலான அறிஞர்கள் பங்கு பெற்று உருவாக்கியவை. புகழ் பெற்ற கல்வியாளர் கிருஷ்ணகுமார் (சி.பி.எஸ்.ஈ) முதலான அறிஞர்கள் நேரில் வந்திருந்து இப்பாடத்திட்டத்தைப் பாராட்டியுள்ளனர். இப்படி உண்மையான கல்வியாளர்களாலும், வல்லுனர்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு பாடத் திட்டத்தை அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மதிப்பீடு செய்வதை ஏற்க முடியாது. அரசு அமைந்துள்ள இக்குழுவிற்கு வேறு எந்தத் தகுதிகள் இருந்தபோதும் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் மதிப்பிடும் தகுதி இதற்கு இல்லை என நாங்கள் உறுதியாக கூறுகிறோம். பல அரசியல் கட்சிகளும் கூட இக்குழுவில் தகுதியின்மையைச் சுட்டிக் காட்டியுள்ளதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

எனவே தமிழக அரசு உடனடியாக இக்குழுவில் உள்ள தனியார் கல்வி முதலாளிகள் முதலானோரை நீக்கி உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு இக் குழுவைத் திருத்தி அமைக்க வேண்டுகிறோம்.

தவிரவும் இக் குழுவில் பணி சமச்சீர்க் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்வதுதான், சமச்சீர்க் கல்வியை மாற்றி அமைப்பதல்ல எனத் தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை இக்குழுவிற்கும் அரசுக்கும் நினைவூட்டுகிறோம். இதற்குமாறாக இவர்களின் அறிக்கை அமையுமானால் அது நீதிமன்ற அவமதிப்பிற்கு உரியது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், நூல்கள் முதலானவை தகுதிக் குறைவானவை என்பதான ஒரு அறிக்கையை இக்குழுவிடமிருந்து பெற்று அதனடிப்படையில் தரமான புதிய நூல்களை உருவாக்கக் காலமில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைத் தமிழக அரசு ஒத்திப் போட முயற்சிக்கும் என நாங்கள் அஞ்சுகிறோம். சமச்சீர்க் கல்விக்கு முந்தைய பழைய பாட நூல்கள் அதி வேகமாக அச்சிடப்பட்டு வருவதாக இன்றைய பத்திரிகையில் வந்துள்ள செய்தியும் அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது சென்ற ஆண்டிலும் (2010), இந்த ஆண்டிலும் உயர்நீதி மன்றமும் உச்சநீதிமன்றமும், வழங்கியுள்ள தீர்ப்புகளின் தொனிக்கு எதிரான செயல்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். சமச்சீர்க்கல்வி தொடர்பான அரசு அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என லயோலா கல்லூரிக் கருத்துக் கணிப்பு நிறுவியுள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர்க் கல்வியை எல்லா வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை வற்புறுத்தி வேண்டுகிறோம்.

இறுதியாக ஒன்று, 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப தமிழக அரசு சமச்சீர்க் கல்விப் பாட நூல்களைத் திருத்தி பள்ளிகளுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. தமிழக அரசுக்கு ஒவ்வாத பகுதிகளை நீக்கிக் கொள்ளலாம் என நாங்களும் கூறினோம். நீதிமன்றங்களும் அந்த உரிமையை ஏற்று ஆணையிட்டன. அந்த அடிப்படை யில் இன்று பாட நூல்களில் சில பகுதிகளை நீக்குவதை நாம் ஏற்றுக் கொண்டாலும் அவ்வாறு நீக்கப்படும் பகுதிகளில் பல எவ்வித தர்க்கங்களும் நியாயங்களும் பொருத்தமாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். சில எடுத்துக்காட்டுகள்:
  1. முதலாமாண்டு தமிழ்ப் பாட நூலில் 69, 70, 80 ஆகிய பக்கங்களை முழுமையாக நீக்க உத்தரவிடப் பட்டுள்ளது. ஆப்பிள், மனித முகம் முதலான படம் வரையும் பயிற்சிகள், "ஒள' வரிசை எழுத்துக்களின் அறிமுகம், பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி, "தை'யில் தொடங்கும் தமிழ் மாதங்கள் குறித்தபாடல் ஆகியன இதன் மூலம் நீக்கப்படுகின்றன. வரைபடப் பயிற்சி, பாரதிதாசனின் ஆத்தி சூடி, ஒள எழுத்து அறிமுகம் ஆகியவற்றை நீக்குவதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
  2. ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் 56ம் பக்கம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பாடம் கவிஞர் அப்துல் ரஹ்மானின் 'தாகம்' என்னும் கவிதை அது. வேலிக்கு வெளியே/ தலையை நீட்டிய என் / கிளைகளை வெட்டிய / தோட்டக்காரனே / வேலிக்கு அடியில் / நழுவும் என் வேர்களை/ என்ன செய்வாய்? அப்துல் ரஹ்மான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இக்கவிதையை நீக்குவதற்குச் சொல்ல முடியாது.
  3. ஆறாம் வகுப்புத் தமிழ் நூலில் உள்ள 'தைத் தமிழ்ப் புத்தாண்டே' எனும் பாடல், அறிவியல் பாட நூலில் உள்ள சட்டக் காந்தப் படம், சூரிய கிரகணத்தை விளக்கும் படம், பகல் இரவு படம் முதலியவற்றை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டக் காந்தத்தில் வட, தென் துருவங்களைக் குறிக்க கருப்பு, சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துவது வழக்கம். சூரிய கிரகணத்தை விளக்கவும், பகல் இரவை விளக்கவும், சூரியனின் படத்தைப் போடுவது தவிர்க்க இயலாது. கருப்பு சிவப்பு, சூரியன் ஆகியவை உள்ளன என்பதாலேயே இவற்றை நீக்குவது என்ன நியாயம்?
சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைப்பதற்கு அரசியல் காழ்ப்பு காணரமல்ல. தரக் குறைவே காரணம் எனத் தமிழக அரசு கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

கல்வியாளர்கள் குழு:

பேரா. அ.மார்க்ஸ், முனைவர் ப.சிவக்குமார், பேரா.அ. கருணானந்தம், பேரா. பா. கல்விமணி, மக்கள் சக்திக் கட்சி க.சிவசங்கர், முனைவர் வி. முருகன், வழக்குரைஞர் ரஜினி, மதுரை, எழுத்தாளர் ராமானுஜம், பேரா. இரத்தின சபாபதி, புலவர் கி.த. பச்சையப்பன், பேரா. மு. திருமாவளவன், பேரா. யாழினி முனுசாமி, முனைவர் ந. அரணமுறுவல், திரு. அ. அமல், பேரா. மணிகோ, பன்னீர்செல்வம், பா. செயப்பிரகாசம்.

நன்றி: கீற்று - 21 ஜூலை 2011

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?