எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - தெ.மதுசூதனன்

தமிழில் சமுக அக்கறையுடன் எழுதுகிற எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பா.செயப்பிரகாசம். இவர் தன் மண்ணையும் மக்களையும் படைப்புகளாக்கி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இராமச்சந்திரபுரம் எனும் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஏழ்மையுடன் போராடி முன்னுக்கு வந்தவர் இவர். படிப்பில் இருந்த ஆர்வம் செயப்பிரகாசம் என்ற நபரை சமூகத்திற்கு அடையாளப்படுத்தியது. 1960-களின் ஆரம்பத்தில் இவர் எழுத்துலகில் நுழைந்தார்.

1959-ல் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டுப் படிப்புக்காக சிறுவன் ஒருவன் மதுரைக்கு வருகின்றான். முதன்முதலாக தண்டவாளத்தையும் ரயிலையும் பார்க்கிறான். காலில் செருப்பு இல்லை. ஆனால் சுற்றுப்புறத்தைக் கூர்ந்து பார்க்கின்றான். அவனுக்குள் உறக்கம் கொண்ட கதைசொல்லி மெல்ல மெல்ல எழுந்து வெளியுலகின் தரிசனங்களைக் காண்கிறது. செயப்பிரகாசம் என்ற கதைசொல்லி உரத்துக் கதை சொல்லத் தொடங்குகிறது.

1970-களின் பின்னர் செயப்பிரகாசம் சிறுகதைப் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்கவராக தமிழில் உயர்ந்தார். "எழுத ஆரம்பித்த பிறகு அடிப்படையான மனிதநேயக் கண்ணோட்டம் பேனாவுடன் கொடுக்குப் பிடித்து வந்தது. இந்தக் கண்ணோட்டம் பருண்மையான அனுபவங்கள் மூலம் வெளிச்சம் பெற்ற போது சுயமான இலக்கியம் பிறக்காமல் போகாது" என உறுதியாக நம்பும் எழுத்தாளராகப் பரிணமித்தார்.

எழுத்தைப் பற்றிய பிரக்ஞை பூர்வமான செயற்பாடுதான் படைப்பியல் நுட்பத்தின் உள்ளீடுகளைத் தன்மயமாக்கி வாசிப்பு-எழுத்து சார்ந்த செயற்பாட்டின் தொடர் ஊடாட்டத்துக்குரிய சாத்தியங்களைத் திறந்து விடும். அந்தவகையில் செயப்பிரகாசத்தின் எழுத்துக்குத் தனித்தன்மை உண்டு. வாழ்வியல் சார்ந்த நுண்ணுணர்வு மிக்க மனிதப் பிரச்சினைகளின் சமூகவெளியும், கதைக்களமும் புனைவுத் தன்மை கொண்டவையல்ல. மாறாக எதார்த்தத்தின் தருக்கம் சார்ந்த புனைவுத் தன்மைகளையும் உள்வாங்கியவையாகவே. "படைப்பு என்பது சித்தாந்தம் அல்ல. ஆனால் சிந்தாந்தம் இல்லாமலும் படைப்பு இல்லை. சித்தாந்தம் ஊடு கோடாகக் கொண்டு கலையாக படைப்பு வெளிப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். சிந்தாந்தம்தான் சமுதாயப் பார்வை. எனவே தனக்கென ஒரு சமுதாயப் பார்வை இல்லாத எந்தக் கலைஞனும் இல்லை. ஆனால் சித்தாந்தத்தை அப்படியே பிரதியெடுத்துத் தருவதாக ஒரு கலைப்படைப்பு இருக்க முடியாது. இருக்கக் கூடாது" என்று செயப்பிரகாசம் கூறுவது அவரது படைப்பாக்கத் தன்மைக்கு நன்கு பொருந்தும். இந்த வெளிச்சத்தில் அவரது படைப்புகளைப் பார்க்கும் பொழுது எமக்கு ஏமாற்றம் இருக்காது. அவை தரும் அனுபவம் வித்தியாசமானது.

கரிசல் மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் இன்னும் பலவாறு சொல்ல வேண்டித்தான் உள்ளது. செயப்பிரகாசத்தின் கதைகள் யாவும் இந்த உணர்வுகளைத்தான் சித்தரிக்கின்றன. இவை வெறும் விவரணப் பதிவுகள் அல்ல. அவை உயிர்ப்புள்ள மாந்தரின், மண்ணின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால, வாழ்வியல் மதிப்பீடுகளின், முரண்களின், நம்பிக்கைகளின் சரிவுகளையும், போராட்ட வலிகளையும், தொடர் போராட்டத்துக்கான அறைகூவல்களையும், நம்பிக்கைகளையும் வேண்டிய படைப்புகளாகவே உள்ளன. வாழ்க்கையில் ஓர் பிடிமானத்தை வலியுறுத்தும் படைப்பு களாகவும் பா.செ.யின் படைப்புலகம் உள்ளது.

தமிழ்ச் சிறுகதை உலகில் பா.செயப்பிரகாசமும் தனித்த வித்தியாசமான வாசிப்பு அனுபவங்களின் கதைசொல்லி என்றால் மிகையல்ல.

தெ.மதுசூதனன்
பிப்ரவரி 2006

நன்றி: தென்றல்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?