குற்றவாளிக் கூண்டில் ஐநா


அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைகளாலும் ரசாயன ஆயுதங்களாலும் வியட்நாம் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் வியட்நாம் மக்களுக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியக் குடிமகளான ஒரு பெண்மணி அங்குச் சென்றார். அவருக்கும் அவர் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனத்துக்கும் சில புள்ளி விவரங்கள் தேவைப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அவசியம் தேவைப்பட்ட அந்தப் புள்ளி விவரங்கள் போதுமான அளவுக்கு எங்கிருந்தும் அப்போது அவர்களுக்குக் கிடைக்கவில்லை.


1986இல் இலங்கை ராணுவத்தால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அதே ஆஸ்திரேலியப் பெண்மணி இலங்கைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. ஒரு கிராம அலுவலரை அணுகினால்கூடப் போதும் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் படியான நிலைமை அங்கு இருந்தது. “மக்கள் தொடர்பிலான புள்ளி விவரங்களை மிகவும் சிறப்பாகப் பேணும் நாடு இலங்கை” என்று அப்போது அதைப் பாராட்டினார் அந்த ஆஸ்திரேலியப் பெண்மணி.

ஒரு தொண்டு நிறுவனப் பெண்ணால் பாராட்டப்பட்ட ஆவணப் பதிவுகளை முறையாகப் பராமரித்து வந்துள்ள ஒரு நாட்டுக்கு இன அழிப்பின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒன்றும் பெரிய சவால் அல்ல. குறிப்பாகத் தகவல்களை அழியாமல் காக்கும் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ள கணினி யுகத்தில் இந்தக் கணக்கு அழிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

தற்போது கசிந்துள்ள ஐநா அறிக்கையின்படி, இறுதிப்போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 80,000. மார்ச் 2011 இல் வெளியான “மூவர் குழு” அறிக்கையில் பல்லாயிரக்கணக்கானோர் என்று இந்த எண்ணிக்கைக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி தேவையே இல்லை. புள்ளிவிவரங்களைச் சிறப்பாகப் பேணும் நாடு என அந்த ஆஸ்திரேலியப் பெண்மணியால் பாராட்டப்பெற்ற இலங்கையின் அரசுத் துறைப் பதிவுகளிலிருந்தே கொலையுண்டவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டடைந்துவிட முடியும்.

இலங்கை அரசிதழில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின்படி 2008இல் வன்னியின் மக்கள் தொகை நான்கு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்து ஐம்பத்தொன்பது (429059). 2009 ஜூலை 10ஆம் தேதி அதே வன்னிப் பகுதியில் முகாம்களிலிருந்த மக்கள்தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்றென்பது. மீதி ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்? முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு ஈவிரக்கமின்றி அழித் தொழிக்கப்பட்ட வன்னியிலிருந்து எந்தவொரு தமிழ் உயிரும் தப்பிப் போயிருக்கச் சாத்தியமில்லை. சுமார் நாற்பதாயிரம் போராளிகளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தப் புள்ளி விவரங்களின் வழியாகவேகூட நிறுவிவிட முடியும்.

வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம், தொண்டு நிறுவனப் பணியாளரான அந்த ஆஸ்திரேலியப் பெண்மணி கேட்டார்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“அதற்கு வியட்நாமியப் பெண்கள் சொன்ன மறுமொழி என்னை உறைய வைத்தது; கீழைத் தேயப் பெண்களிடமிருந்து நான் இப்படியான பதிலை எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர்.

வியட்னாம் பெண்கள் சொன்னது; “எங்களுக்கு ஆண்களைத் தாருங்கள்.”

கணவர்களற்ற, தந்தைகளற்ற, தம்பி, தனயன்மார்களில்லாத ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள்.

ஈழமும் ஆண்களற்ற நிலமாக ஆகியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் தொன்னூராயிரம் விதவைகள் இருப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது. விதவைகள் தவிர, சகோதரர்களை இழந்த மணமாகாத பெண்கள், மகன்களை இழந்த தாய்மார் என எஞ்சியிருக்கும் எல்லாப் பெண்களுமே ஒரு வகையில் விதவைகள்தாம். வியட்நாமியப் பெண்கள் கேட்டதை இப்போது ஈழத்துப் பெண்கள் கேட்கிறார்கள் “எங்களுக்கு ஆண்களைத் தாருங்கள்”

2010இல் செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள் “எமக்கு வந்த முறைப்பாடுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 15,780. இதில் 1494 சிறுவர்கள் 751 பேர் பெண்கள். 2011ஆம் ஆண்டு அரசுக்கு இது தொடர்பாகப் பலதடவை முறைப்பாடுகள் செய்தும் எங்களுக்கு உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை.”


2008இல் இலங்கை அரசு, சாட்சியங்களற்ற இனஅழிப்பை நடத்துவதற்குத் தயாரானது. வன்னியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உள்நாட்டு ஊடகவியலாளர்களை முதலில் வெளியேற்றியது. அடுத்த கட்டமாக இலங்கைக்குள் நுழைவதற்குச் சர்வதேச ஊடகப் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (இது யுத்தம் முடிந்த பின்னரும் தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில், கிளிநொச்சியில் நடத்தப்பெற்ற எல்எல்ஆர்சி. விசாரணை நடவடிக்கையைப் பதிவு செய்வதற்கு பிபிசியின் செய்தியாளர் அனுமதிக்கப்படவில்லை.) கடைசியில் சர்வதேச அளவிலான அரசு சாராத் தொண்டு நிறுவனங்களும்கூட அப்புறப்படுத்தப்பட்டன. ஐநா பணியகமும் வெளியேற்றப்பட்டது.

எதைச் செய்தாவது புலிகளை அழிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என அதற்குத் தயாரானது இலங்கை அரசு. கொலைக் களம் தயார் செய்யப்பட்டது. அப்போது, இந்தியாவின் வெளியுறவுத் துறை ஆலோசகராகப் பணியாற்றிய எம். கே. நாராயணனும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் இதற்கு எல்லாவித ஆலோசனைகளையும் வழங்கினர். கள நிலைமைகள் பற்றி, அதாவது அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவது பற்றி பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி அவர்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், யூனிசெப், ஐநா பணியாளர்கள் வெளியேறிய வேளையில் பொதுமக்கள் கைகூப்பித் தொழுது அவர்களை வெளியேற வேண்டாம் எனத் தடுத்தார்கள். கண்ணீரும் கேவலுமாய் மக்கள் அவர்களை வழிமறித்த காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. அப்போதாவது ஐநா வாய் திறந்திருக்க வேண்டும்.


2007 அக்டோபரில், கொழும்பிலுள்ள ஐநா பணியகத்திலிருந்து புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துவிட்டுள்ளன என்று ஓர் அறிக்கை ஐநா தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது.

“இலங்கையில் மனிதஉரிமை நிலவரம் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. தொடர்ச்சியாகப் பரந்த அளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களால் எதிர்காலத்தில் பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையே இலங்கையில் காணப்படுகிறது. ஐநாவின் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் அலுவலர்களுக்கு, இலங்கை விசா வழங்குவது இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், மிகப் பெரும் மனிதப் பேரழிவுகள் ஏற்பட்டே தீரும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பாரதூரமான அளவில் தொடருமானால் வன்னிப் பிரதேசத்தில் வாழும் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டியதிருக்கும்.”

ஐநா கிளை இந்த அறிக்கையை அனுப்பும் தருணத்தில் மக்கள் அகதிகளாக ஆக்கப்படுவது பற்றியே அதிகம் கவலைப்பட்டது. அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை அப்போது அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இந்த அறிக்கையை, ஐநா தலைமையகம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஐநா மன்றம் போராடும், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டின் மக்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிலும் அந்நாடுகளது அரசுகளுக்குச் சார்பாகவே முடிவுகள் எடுக்கும் என்னும் பொது நிலைபாட்டிலிருந்து இந்த அலட்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது ஐநா விழிப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர் அழிவைத் தடுத்திருக்கலாம்.

ஐநா தலைமையக அனுமதியில்லாமல் அதன் பணியாளர்கள் வெளியேறியிருக்க முடியாது. நிலைமைகளை எதிர்கொள்ளும் திறன், துணிச்சல் இல்லாமலும், யாருக்கு வந்த விதியோ எனவும் மேல்மட்டப் பொறுப்பிலுள்ளவர்கள் செயலற்ற தன்மையில் இருந்தார்கள். ஆனால் வன்னிப் பிரதேசத்தில் மக்களோடு இருந்த கீழ்மட்ட ஊழியர்களை அவ்வாறு குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் தங்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதைப் பற்றி வன்னி மக்கள் பல வாக்குமூலங்களை அளித்துள்ளார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமானரீதியில் உதவிய ஐநா பணியாளர்கள் பலரை உளவாளிகள் என்று இலங்கை அரசு குற்றம் சுமத்தியது. தாக்குதல் தீவிரமாகும் வேளையில், அவர்களுக்குப் பாதுகாப்புத் தரமுடியாது என்று மிரட்டியது.

முன்கூட்டியே கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததும், பேரழிவு நடத்தப்படப் போகிறது என்று தெரிந்தும், ஐநா தன் பணியாளர்களை வெளியேற அனுமதித்ததும், கடமையாற்றாமல் கை கழுவியதும் இனப்படுகொலைக்கு முன்கூட்டியே அளித்த ஒப்புதல் என்றும் கொலைகாரர்களுக்கு உடந்தையாக இருந்த செயல் என்றும் சொல்வது நூறு சதவீதம் பொருத்தமான குற்றச்சாட்டுகள்தாம்.

வியப்பூட்டக்கூடிய மற்றொரு விஷயம் - செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு அல்லது ராணுவத்துக்கு எங்கிருந்து வந்தது? செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே யுத்தகளத்தில் பணிபுரிவது தான். போரில் ஈடுபடும் இருதரப்பினரும் அவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்புகளையும் அளிக்க கட்டுப்பட்டவர்கள். இருதரப்பிலும் காயம்பட்டவர்களைப் பேணுதலும் போர்க்களத்தில் சிக்கிக்கொள்ள நேரும் அப்பாவி மக்களை மீட்பதற்கும் காப்பாற்றுவதற்கும் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளைச் செய்வதும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியமான பணிகள். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒரு சேவை நிறுவனத்தைப் புறக்கணிப்பது இருதரப்பினருக்குமே ஆபத்தானது. செஞ்சிலுவைச் சங்கம் பணியாற்ற வேண்டிய இடம் யுத்தகளங்கள்தாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கே அவர்களுடைய சேவை அவசியம். ஆனால் இலங்கையின் யுத்தக்களத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டது ஒரு பெரிய அபத்தம்.

இப்போது யுத்தத்தில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவல் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட வேறு யாருக்கும் தெரியாது.

சாட்சியமற்ற கொலைகளை நடத்திய பின்னும், கடந்த மூன்று வருடங்களாக யாரும் அந்தப் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் யாரும் அங்குப் போக முடியாது. சானல்4 தொலைக்காட்சிகூட ராணுவத்தினர் வழங்கிய புகைப்படங்களையும், மற்றவர்களால் எடுத்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த காட்சிகளையுமே தொகுத்து ஒளிபரப்பியது. மூன்றாண்டுகளுக்குள் தடயங்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டன. முற்றாக அழிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம். தடய அழிப்பு வேலைகளை எப்படித் திறம்படச் செய்யலாம் என்பதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச் செயலர் விஜய் நம்பியாரும், அவரது சகோதரரும் இலங்கையின் ராணுவப் பாதுகாப்பு ஆலோசகருமான சதீஷ் நம்பியாரும்தான் என்று சொல்லப்படுகிறது.

2

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்’ தசாப்தம் முடிந்து போய்விட்டது. அது எண்ணெய் யுத்தத்துக்காக எழுப்பப்பட்ட முழக்கம் என்பது அம்பலமாகியிருக்கிறது. ஈராக், ஆப்கன், நாடுகளின் மேல் ஏவப்பட்ட தாக்குதல் நாயகன் ஜூனியர் புஷ்ஷின் காலத்தோடு முடிந்துவிட்டது. 2008இல், மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மீலிபேண்ட் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது ஒரு மோசமான வார்த்தை” என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை, இலங்கை எவ்வளவு கவனமுடன் மேற்கொண்டபோதும் அதனால் உண்மையை முழுமையாக மறைக்க முடியவில்லை. “சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர். என்ன விலை கொடுத்தாவது, பொதுமக்களை லட்சக்கணக்கில் பலியாக்கியாவது விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டுமென்ற திட்டத்தில் இலங்கை உறுதியாக இருந்தது. ஒற்றை நிறுவனம் அல்ல, ஐநா மட்டுமல்ல முழு உலகமே இந்தக் கொடுமைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.” என ஐநாவின் மனிதநேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் கூறுவதைப் பார்த்தால் இந்தியா, அமெரிக்கா, சீனா, ருசியா, கியூபா, ஐநா எனச் சகல தரப்பினரும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டி வரும். 2009 மே 18 படுகொலைக்குப் பிறகு மே 29இல் ஐநா மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான கண்டனத் தீர்மானத்தின் மீது பேசிய இந்தியப் பிரதிநிதி கோபிநாத் “பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதற்காக, இலங்கையைப் பாராட்ட வேண்டும்” என்று பேசியதை இங்கு நினைவுகூர வேண்டும்.


இலங்கைக்கெதிராக முன் மொழியப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த காத்திரமான அம்சங்களை உருவி எடுத்ததோடல்லாமல் இலங்கையிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்பே, விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அதை நீர்த்துப் போகச் செய்தது இந்தியா. இங்கு உங்களுக்குப் பாதகம் நேராமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ராசபக்ஷக்குக் கடிதம் எழுதிப் பெருமைப்பட்டுக் கொண்டதையும் சேர்த்தே நினைவுகூர வேண்டும்.

2012, நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஜெனிவா மனித உரிமை விவாத அரங்கில் உறுப்பு நாடுகள், இலங்கைக்கு எதிராக 210 பரிந்துரைகள் அளித்தன. அவற்றில் 100 பரிந்துரைகளை இலங்கை நிராகரித்தது. தொடக்க நிலையில் காண்பித்த எதிர்ப்பை இந்தியா தொடர்ந்து காட்டவில்லை. அந்த எதிர்ப்பும் ஒரு பாவனை என்பது தெரிந்தது. அமெரிக்கா இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கொடுத்த அழுத்தத்தை இந்தியா தரவில்லை. இலங்கையைத் தலையில் தட்டிப் பணியவைப்பதைவிட, தழுவிக்கொள்ளும் பாசமே இந்தியாவிடம் வெளிப்பட்டது. “இந்தியா எப்போதும் எங்களின் பின்னால் நிற்கிறது” என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பிரீஸ் உரிமை கொண்டாடியதை, இந்தியா நிரூபணம் செய்தது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டி நீண்ட விரல், இப்போது ஐநாவை நோக்கி நீண்டுள்ளது. நீதிபதியே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் விநோதமான கொலை வழக்கு இது. “இலங்கையில் பணியாற்றிய ஐநா அதிகாரிகள் யுத்தத்தின்போது வெளியேறியிருக்கக் கூடாது. அவர்கள் நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிபெற்றவர்களாக இல்லை. போரின்போது மக்களைக் காக்கும் கடமையை அவர்கள் செய்யத் தவறினர்” என, ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால், நியமிக்கப்பட்ட ஐநாவின் மூத்த அலுவலர் சார்லஸ் பெற்றி என்பவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை விவகாரத்தில் ஐநாவின் செயல்பாடு தொடர்பாக ஆராய்வதே அவருக்கு அளிக்கப்பட்ட பணி. அவர் அளித்த அறிக்கையில் 30 பக்கங்களைக் காணவில்லை. சில பகுதிகள் கறுப்புமை பூசி மறைக்கப்பட்டுள்ளன. அழித்தொழிப்புப் பணியில் பான் கி மூனின் தனிச் செயலர் விஜய் நம்பியார் அப்போது ஆற்றிய வகிபாகம் பற்றிய பகுதி களவாடப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் இக்கட்டான நிலைக்கு இப்போது ஐநா தள்ளப்பட்டுள்ளது.

“ஒரு கொடிய யுத்தத்தின்போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐநா தவறியுள்ளது. ஐநா தவறிழைப்பது இது முதல் தடவையல்ல. ருவாண்டாவில் இழைத்த தவறைப் போல் இனியொரு தவறை ஐநா இழைக்காது என்று 1999இல் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் உறுதியளித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் 2009இல் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து ஐநா மீண்டும் தவறியிருக்கிறது” என விளக்கமாக எடுத்துரைக்கிறது சார்லஸ் பெற்றியின் அறிக்கை. அது மட்டுமல்லாமல் “போர்க் குற்றங்கள் தொடர்பில், இலங்கை அரசு பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை ஐநா மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் பெற்றி. இந்த அறிக்கைதான் ஐநா பொதுச்செயலரால் முறையாக வெளியிடப்படுவதற்கு முன்-அவர் தாமதப்படுத்தியதால் - கசிந்து ரகசியமாக பிபிசியின் கைகளுக்குக் கிடைத்திருக்கிறது.

யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதற்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டதற்கும் மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்கும் போர்க் குற்றங்கள் இழைத்ததற்கும் இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு இப்போது ஐநா பொறுப்புக் கூறவேண்டும் என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு விவகாரம் பற்றிக் கருத்துச் சொல்பவரைப் போல ஐநா தவறிழைத்ததா என்பது பற்றி ஆராயப்படும் எனவும் அதற்காக ஒரு குழு அமைக்கப்படும் எனவும் பதிலளித்திருப்பதுதான் விநோதம்.

பான் கி மூன், கருதுவதுபோல் இது சிறிய விசயமல்ல, சாதாரண விசயமுமல்ல. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசயம், மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டது தொடர்பான விசயம். ஒரு தேசிய இனத்தின் எதிர்காலம் தொடர்பானதொரு விசயம். கோழி கிளறுவதுபோல் ஓர் இடத்தைக் கிளறிவிட்டு, இன்னொரு இடத்துக்குப் போகவேண்டிய விசயமாக இது இருக்கப் போவதில்லை.

ஆனால் தன்னிலை உணர்ந்து ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று நீதிகாத்த பாண்டிய மன்னன் போல் பான் கீ மூன் என்ற பொதுச் செயலரோ, ஐநா மன்றமோ நடந்துகொள்வார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. அவ்வாறான எதிர்பார்ப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே அவர்களுடனான கடந்தகால அனுபவங்கள் நமக்கு முன்னுணர்த்துகின்றன.

  1. ஐநா பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட மூவர் குழு, தனது விசாரணை அறிக்கையை 2011, மார்ச் 31இல் பான் கி மூனிடம் சமர்ப்பித்தது. அதை வெளியிடுவதைத் தாமதப்படுத்தியதோடன்றி, முறைப்படி வெளியிடும் முன்பே இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் ஷவேந்திர சில்வாவிடத்தில் ஒரு பிரதியைக் கையளித்திருந்தார் பான் கி மூன். இது நீதிபதி பொறுப்பில் இருக்கும் ஐநா பொதுச்செயலாளர் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
  2. மூவர் குழுவின் பரிந்துரைகள் வெளியானதும், இந்த அறிக்¬கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம் என்று அறிவித்தார் ராசபக்ஷ. தனது அமைச்சர்கள், குறிப்பாக விமல் வீரவண்சே போன்றோர்களைத் தூண்டி கொழும்பு ஐநா பணியகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தச் செய்தார். மே தினப் பேரணியை இந்த அறிக்கைக்கு எதிரான பேரணியாக மாற்றி ஒரு கோடிக்கும் மேலான சிங்களர்களை மே தினச் சபதம் ஏற்கவைத்தார். இதை விமரிசித்தோ கண்டித்தோ ஐநா பொதுச் செயலரிடமிருந்தோ, ஐநா அலுவலகத்திலிருந்தோ ஒரு வார்த்தையும் வரவில்லை.
  3. யுத்தம் நடந்து முடிந்த ஓரிரு மாதங்களுக்குள் வன்னிப் பகுதியை, குறிப்பாக இலங்கை ராணுவம் அழைத்துச் சென்று காட்டிய இடங்களைப் பார்வையிட்டுத் திரும்பினார் பான் கி மூன். பின்னர் ராசபக்ஷயும் பான் கி மூனும் தமது கூட்டறிக்கையில் ‘வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும்’ என்று கூறினார்கள். பின்னர் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாதது ஏன் என இன்றுவரை ஒரு கேள்வி யும் ஐநா பொதுச்செயலாளரால் எழுப்பப்படவில்லை.
  4. நியூஸ் பெஸ்ட் என்ற இலங்கை ஊடகத்தின் நியூயார்க் செய்தியாளருக்கு 10.11.2012 அன்று அளித்த நேர்காணலில் “நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புகள் ஆர்வம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளும் என எதிர்பார்ப்பதாக” செல்லமாகத் தட்டிக்கொடுத்துள்ளார்.

இவை போன்ற நடவடிக்கைகள், இலங்கைக்குச் சார்பான ஒருவராகவும் வல்லரசுநாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு ஏற்ப வளையும் முதுகெலும்பில்லாத ஓர் ஆளாகவுமே அவரையும் ஐநா மன்றத்தையும் அடையாளப்படுத்துகின்றன.

ஆனாலும் உலகம் முழுவதுமள்ள தமிழர்கள் ஐநாவின் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
உறவிடத்துப் பகை வந்தால்,
ஊரிடத்துப் போவோம்;
ஊரிடத்துப் பகை வந்தால் யாரிடத்துப் போவோம்,
என மக்கள் காத்திருக்கிறார்கள்.

குற்றமிழைத்தவர்தான் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். குற்றமிழைத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஐநா பொதுச்செயலாளர் அதற்கு முன்வருவாரா, அல்லது பெர்னார்ட்ஷா ஒருமுறை, “இது சர்வதேச நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்களின் சபை” என்று சொன்னதை உண்மையாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: காலச்சுவடு - டிசம்பர் 2012 & தாயகம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?