தோழர் தி.க.சி: பேசும் கால்க்காசு கடுதாசி

1

1971- கார்காலத்தில் எனது முதல் கதை தாமரை இதழில் வந்தது. கதையின் பெயர் ‘குற்றம்’. தி.க.சி தாமரை இதழ் ஆசிரியப் பொறுப்பினை வகித்த காலம் 1965-லிருந்து 72-வரை. இலக்கியதின் நிறைவிளைச்சலாக அல்ல; தமிழ் யதார்த்தத்தின் விளைகாலமாக ‘தாமரை’ உருவெடுத்தது. அறுபதுகள், எழுபதுகளின் எழுதுகோல்கள் - கவிதை, கதை, உருவகம், கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, நூல் மதிப்புரை - எனப் பல வகையிலும் சதங்கை கட்டி ஆடும் நீர்ப்பொய்கையாய் தாமரை ஆனது.


தாமரையில் கால்பதித்து, கொப்பும் கிளையும், பூவும்காயுமாய் விருட்சமான எழுத்தாளர்கள் வரிசை நீளமானது. அந்த வரிசையை அணியப்படுத்தினால் இக்கட்டுரையின் கால்பகுதி முடிந்து போகும். கரிசக்காடுகளில் சட்டிபோல் அகன்று கம்மம்பயிர் தூர் பிடித்து வளரும்; ஒரு கம்பந்தூரில் அய்ம்பது ‘கருதுகள்’ வெடிக்கும்; தி.க.சி என்ற ஈரஞ்செமித்த மண்ணில் தூர் பிடித்துச் செழித்து வெடித்த கருதுகள் அய்ம்பதுக்கும் மேலிருந்தன. ஆகாயக் கதிர்களுக்குச் சவாலாய் ஆறடி உயரத்தில் ஒளியடிக்கும் கம்மங்கருதுகளாய் இலக்கிய வெளியில் இன்றும் ஒளியடித்துக் கொண்டிருக்கின்றன.

1968 முதல் 1971 வரை மதுரையில் கல்லூரியில் விரிவுரையாளர் பணி. கோடை விடுமுறைகளில் சென்னை வந்து போதல் தவறாது நடக்கும். ஆண்டுக்கு ஒருதடவை சென்னைவந்து செல்வது என்பது ரொம்ப தவிதாயப்பட்ட, ‘வல்லை தொல்லையான’ காரியமாக இருந்தது. அந்நாட்களில் கல்லூரிகளில் நடைபெறும் ஒரு தேர்வுக் கண்காணிப்புக்கு அய்ந்து ரூபாய். பணியாற்ரும் கல்லூரியில் போடமாட்டார்கள். நகரத்தில் ஓரஞ்சாரங்களில் கண்காணிப்புப் பணி கிடைக்கும். எத்தனை கண்காணிப்புப் பணி என்றாலும், பரவாயில்லை என்பேன். தேர்வுக் கண்காணிப்பாளராய் கிடைத்த பணத்தில் சென்னை வந்து சென்றேன். அப்போது சென்னையில் கந்தர்வன், நா.காமராசன், இன்குலாப் இருந்தார்கள். தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள ‘சோவியத் நாடு’ (Soviet Land) அலுவலகத்தில் தி.க.சி!

1969-தஞ்சை ராமமூர்த்தி ‘சோஷலிஸ்ட்’ என்ற வார இதழை, சென்னையிலிருந்து நடத்திக் கொண்டிருந்தார். தியாகராயநகரிலிருந்து அந்த அலுவலகத்துக்கு மாலையில் இன்குலாப், கந்தர்வன், நச்சினார்க்கினியன், மீசை ‘கார்க்கி’ - போன்றோருடன் சென்று வந்த ஞாபகம். தோழர் தி.க.சி ‘சோவியத் நாடு’ இதழ்ப் பணி முடித்து மாலை அங்கு வந்து சேருவார். அந்திக் கலம்பகமாக அமையாது. அனல் கலம்பமாக சந்திப்பு மாறும்.

தோழா் ச.செந்தில்நாதன் (சிகரம் செந்தில்நாதன்) எழுத்தாள நண்பர்களை இணைவில் “மக்கள் எழுத்தாளர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். தொடக்க நிகழ்வு 1969 செப்டம்பர் 7-ல் நடந்தது. இடது சாரிகளுக்கான பொது மேடை அது. அந்நாட்களில் செந்தில்நாதன் அரசியல் அமைப்பில் செயல்படவில்லை. ஆனால் மக்களுக்காய் நிற்கும் இடது சாரிக் கருத்தாக்கம் அவரில் வேர்கொண்டிருந்தது. தொடக்க நிகழ்விலும், தொடர் நிகழ்வுகளிலும் பார்வையாளர்களாக மட்டுமே தி.க.சி.யும் எழுத்தாளர் டி.செல்வராஜ் போன்றவர்களும் பங்கேற்றனர். குறிப்பிட்ட அரசியல் அமைப்பின் பிரதிநிதிகளாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள சிலர் யத்தனித்த வேளையில் சனநாயக அசைவுகளை கர்ப்பத்தில் கொண்ட கடலின் மடியாக தி.க.சி திகழ்ந்ததைக் கவனித்தேன்.

தி.க.சி இரு சமுத்திரங்களைச் சுமந்து கொண்டிருந்தார். வீட்டில் குவிந்திருந்த அறிவுச் சேகரத்தின் புத்தகச் சமுத்திரம்.

வேறுபாடு பார்க்காமல், ’பொழுதாபொழுதன்னைக்கும்’ பொங்கிப் பிரவகித்த சனநாய உரையாடல் சமுத்திரம்.

அவர் ஒரு ’முருசல்’ பாத்தி இல்லை; தோட்டத்தில் பாத்தியமைக்கும் போது, எந்த வரிசையிலும் சேராத பாத்தியை “முறிசல்” பாத்தி என்பார்கள். மக்கள் எழுத்தாளர் சங்க நிகழ்வுகளில் நேரடியாக தி.க.சி பங்கேற்காத போதும் அதன் ஆலோசனைச் சந்திப்புகளில் பங்கேற்பு, ஆலோசனை வழங்கல் எனச் செய்தார். தாமரையும் கலை இலக்கியப் பெருமன்றமும் தீவிரமாய் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த அக்காலத்தில், மக்கள் எழுத்தாளர் சங்கம் போன்றவையும் அவசியம் என உணர்ந்தமைதான், ஆயிரம் பூக்கள் மலர்கின்றன; மற்றொன்றும் மலர்கிற போது எழில் கூடிப் பெருகும் என எண்ணுகிற சனநனாயகப் பாங்கு தி.க.சி.

செந்தில்நாதன் எழுதிய “ஜெயகாந்தன் படைப்புக்களில் சமுதாயப் பார்வை” என்ற கட்டுரை தாமரையில் வந்தது. இடதுசாரிப் பார்வையில் இதுவரை எவரும் எடுத்துரைக்காத சரியான விமர்சனம். அது ஜெயகாந்தனின் ‘அணுக்கத் தொண்டர்களிடம்’ கொந்தளிப்பை உண்டு பண்ணியது. அக்காலத்தில் ஜெயகாந்தன் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு மிகவும் பிரியப்பட்டவராக இருந்தார். கட்சியின் அதிகாரப்பூர்வ இதழில், இப்படியொரு கட்டுரையை வெளியிட்டதினால் சிலர் தீயாய்த் துடித்தனா். ஏற்கனவே சமுதாய அக்கறை கொண்ட படைப்புக்களை வெளியிடும் நாற்றங்காலாக தாமரை ஆகியிருந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. தி.க.சி தாமரை ஆசிரியப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இயல்பாய் தனக்குள் முகிழ்த்த சனநாயக மாண்புகளை அக்கறையாய் கவனித்து, வளர்த்து, கிளை பரப்பி விரிவு கொள்ளச் செய்ய விரும்பியவர் தி.க.சி.

கட்சி விரோதம் என்று கருதி, சனநாயக மாண்புகள் முளைவிடாமல் கிள்ளி எறியும் பலர் இன்று இருக்கிறார்கள். கூடங்குள அணுஉலை எதிர்ப்பு மக்கள் யுத்தம் ஒரு நிகழ் சாட்சி.

தோழர் வ.விஜயபாஸ்கரன் நடத்திய சரஸ்வதி இதழ் 1955 தொடங்கி எட்டு ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் நின்று போனது.

“இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தாமரை இதழ் ஆசிரியப் பொறுப்பில் இயங்கியவருமான ஜீவானந்தம் அவர்களுக்கும் சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரனுக்குமிடையே இதழின் உள்ளடக்கம், தத்துவம் மற்றும் நடைமுறைகள் குறித்து கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. சரஸ்வதி இதழ் விசயத்தில் கட்சித் தலைமை குறிப்பாக தோழர் ஜீவா நடந்துகொண்ட முறை பற்றி தோழர் விஜயபாஸ்கரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது குறித்த சர்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை விஜயபாஸ்கரன் விசயத்தில் கட்சித் தலைமை எதிர்மறைப் போக்கில் நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்று கருதுகிறேன். சரஸ்வதி இதழுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் அன்புடன் அரவணைத்து ஊக்குவிக்கும் தோழனாகவும் கட்சித் தலைமை விளங்கியிருக்க வேண்டும்”
(வ.விஜயபாஸ்கரன் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன் – நூலுக்கு தி.க.சி எழுதிய அணிந்துரை – 20.12.2007)

வணிக இதழ்கள் போலல்லாமல் சிற்றிதழ்கள், நடுத்தர இதழ்கள் பல்வேறு காரணங்களால் நின்றுபோகும் பிறவி நோய் கொண்டன. குறிப்பாக பொருளாரத்தால் இடை நின்று போவது இயற்கை. இதுபோல் இடை நின்று போனால், அல்லது நான்கைந்து இதழ்களிலேயே முடங்கிப் போனால், அதுதான் சிற்ரிதழ்களுக்கு இலக்கணம் என்பார்கள். இத்தகைய காரணங்களெதுவுமில்லாது, வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய ’சரஸ்வதி’ நின்றதற்கு கட்சியும், தலைவர்களில் ஒருவரான ஜீவாவும் காரணமாய் இருந்தார்கள் என்பதை – தி.க.சி.யின் சனநாயகப் பண்பு ஏற்கவில்லை.

அவர் வாழ்க்கை – அமைதியான வாழ்வியல் களமாக இல்லை; அது போரியல் களம். அவர் ஒரு வங்கியில் காசாளர். அரசுப் பணியில் மாறுதல் இன்றிப் பணியாற்றுவது சாத்தியம் இல்லை. அந்த நிம்மதி அனைவருக்கும் லவிக்காது. ஆரிய வித்தை, அல்லாவித்தை காட்டி மேலிருப்போரைத் தன்னக்கட்டி, துட்டு சேர்த்து ஓரிடத்துப் பணியிலேயே நிம்மதியாய் வாழ்கிற ஜெகஜாலக் கில்லாடிகளும் உண்டு.

இலக்கியப் போராளியாக வரித்துக் கொள்ளுமுன் தன்னை சமூகப் போராளியாக வரித்துக்கொண்டவர். 1944-ல் நெல்லையில் “தாம்கோஸ் வங்கியில்” காசாளர் வேலை. வங்கிப்பணியில் சேர்ந்த காலம் முதலாக பணியாளர் சங்கம் கட்டுவதில் தீவிரமாக இயங்கினார். இது மாதிரி வம்பு வேலைகளை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பல இடங்களுக்கும் மாறுதல்; திமிறிக்கொண்டு, போகிற இடமெல்லாம் சங்கம் கட்டிப் போராடல். கொச்சியில் தி.க.சி: நெல்லையில் கால் ஒடிந்து படுக்கையில் மனைவி.

சமூகப் பணிகளை தோள்மேல் போட்டுக் கொண்டு அலைகிற நாட்களிலும், கவிஞராய், சிறுகதையாளராய்; ‘வேலை கிடைத்தது’ என்றொரு நாடகம் எழுதினார். அதற்கடுத்து தன்னையொரு விமர்சகனாய் நிலைப்படுத்திக் கொள்கிறார்.

’சோவியத் நாடு’ இதழில் பணியாற்றுகையில் தாமரை ஆசிரியப் பொறுப்பிலும் இயங்கினார். 1990-ல் சோவியத் நாடு அலுவலகப் பணி ஓய்வின் பின் நெல்லையின் நிரந்தர வசிப்பாளராக பூர்வீகத்துக்கு திரும்பினார்.

அவருடைய விமர்சனக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு கிறித்துவ இலக்கியச் சங்கம் வெளியீடு “தி.க.சி திறனாய்வுகள்” – 1993.

சிவகங்கை அன்னம் வெளியீடு – “விமர்சனத்தமிழ் – ஏப்ரல் 1993”

கோவை விஜயாபதிப்பக வெளியீடு – “விமர்சனங்கள் மதிப்புரைகள், பேட்டிகள்” டிசம்பா் 1994 .

சென்னை பூங்கொடி பதிப்பகத்தின் “மனக்குகை ஓவியங்கள்” – 1999.

கோவை விஜயா பதிப்பக வெளியீடான “விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்” – நூலுக்கு சாகித்ய அகாதமி விருது விடைத்தது. 2000-ல் விருது வழங்கப் பெறுகிறது. வரவேற்கும் வகையில் “காலங்களினூடாக எழும்குரல்” என நான் எழுதிய கட்டுரையை கணையாழி இதழ் வெளியிட்டது. தகுதியற்ற எழுத்துக்கு விருதா, கால்க்காசு கடுதாசி எழுதிப் போட்டுக் கொண்டேயிருப்பது இலக்கியத் தகுதியா என்று தினமணி கடிதம் பகுதியில் ஜெயமோகன் எதிர்வினை செய்தார். (தினமணிக் கடிதம் கைவசம் இல்லை; ஏளனம் செய்து தன்னகந்தையாய் சாடி அவர் எழுதியதாய் நினைவு)

“தி.க.சி சிறந்த மனிதாபிமானி, சிறந்த இதழாசிரியர், தோட்டக்காரா், களப்பணியாளர்” என்று எகத்தாளமாய் காலச்சுவடு இதழ் (மே, ஜீன் 2001) எழுதியது. விமர்சகனைப் படைப்பாளி என ஏற்கமறுக்கும், அங்கீகாரத்தைத் தர மறுக்கிற இலக்கிய உலகின் பொதுப் புத்தி இது என எதிர்வினையாற்றி “தி.க.சி - பேசும் கால்க்காசு கடுதாசி” என்றொரு கட்டுரையை காலச் சுவடுக்கு அனுப்பினேன. அது நீண்ட கட்டுரை; பக்கங்கள் அதிகமுள்ளது என காலச்சுவடு வெளியிட ஒப்பவில்லை. உங்கள் கட்டுரையில் வெளிப்பட்டுள்ள ஆழமும் அகலிப்பும் கூட அவருடைய எழுத்துக்களில் வெளிப்படவில்லை என்ற கருத்தையும் கொசுறாகத் தந்தது. வேறுவழியின்றி “தி.க.சி – பேசும் கால்க்காசுக் கடுதாசி” என்ற தலைப்பில் 16 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடாய் சொந்தப் பொறுப்பில் 500 படிகள் அச்சிட்டு விநியோகிக்க வேண்டி வந்தது.


2

ஒவ்வொரு தலைமுறையும், தனக்கு முந்தைய தலைமுறைகளின் அனுபவங்கள், அறிவுச் சேகரிப்புகளின் வேரிலிருந்து கிரகித்து எடுத்துக் கொள்கிறது. கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், தி.க.சி, கி.ரா, சு.ரா – என எமக்கு முந்தைய தலைமுறை. அவர்களுக்கு பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் முன்னோடித் தலைமுறை. முன்னோடிகளை மேய்ப்பர்களாகக் கொண்டுவிட்டால், அந்தப் புள்ளியில் சிந்திப்பு சுயம் அற்றுப் போகிறது. புத்தம் புதிதான சோதனைகளுக்கு சொந்தக்காரராக ஆவது இந்தப் புள்ளியைக் கடப்பதனால் உருவாகிறது.

“என்ன செய்வது, நான் ஷேக்ஸ்பியரின் தோள்களின் மீது நின்று கொண்டல்லவா உலகைப் பார்க்கிறேன்” - பெர்னார்ட்ஷா சொன்னதை இந்த இடத்தில் சொல்லி வைப்பது சரியாக அமையும். இவரைத் தாண்டி அவர், அவரைத் தாண்டி இன்னொருவர், இன்னொருவரையும் தாண்டிக் கடக்க வேறொருவர்; காலம் உறைந்து நிற்பதில்லை. வளர்ச்சியை நோக்கிச் சுழல்கிற காலம் புதுப்புது உயரம் தாண்டுதல்களுக்கான உள்ளடக்கத்தைத் தந்து கொண்டேயிருக்கிறது.

காலத்துக்கு எதிர்நிலையில் நிற்கச் செய்வது பிம்ப உருவாக்கம்:
பிம்பங்களை உருவாக்கும் வேலை வேண்டாம் எண்றெண்ணிய தி.க.சி புதுமைப் பித்தன் பற்றி “வீரவணக்கம் வேண்டாம்” என்று எழுதினார். அதற்கான காரணங்களை முன் வைத்தார். புதுமைப்பித்தனை ஏற்றுக்கொண்டே இதனையும் தெரிவித்தார். இவ்வாறான வீரவணக்கம் என்கிற பழைய நிலமானியப் போக்கு நவீனத்துவத்திலும் செயல்பட வேண்டியதில்லையெனக் கருதினார்.

புதுமைப்பித்தனிடம் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும், ஏகாதிபத்தியம், பாசிச எதிர்ப்பும் நிலவியதாக தி.க.சி கண்டடைகிறார் (1998)

“திருநெல்வேலிப் பிள்ளைமார்களின் பழமைச் சிந்தனைகளை பு.பி அளவுக்குக் கிண்டல் செய்தவர் வேறுயாருமில்லை. பாரதியைப் போல் சுயவாத விமர்சனம் செய்தவர்” என்று புதுமைப் பித்தனின் பழமைச் சமூக எதிர்ப்புணர்வை தி.க.சி உறுதி செய்கிறார்.


க.நா.சுப்பிரமணியம், மௌனி போன்றவர்களின் படைப்புக்கள் பற்றிய தி.க.சி.யின் மதிப்பீடுகள் சரியானவை; அவைகளை நிகழ்கால இலக்கியச் சமூகம் மறுவாசிப்புச் செய்ய வேண்டும்.

பு.பி பற்றிய பார்வையில் 1956-க்கும் 1998-க்கும் இடையில் தி.க.சியிடம் நிகழ்ந்த மாறுதல் விமரிசன வளர்ச்சியின் நிலையாகும்.

அவரது விமரிசனங்களை 1965-க்கு முந்தியவை. கட்சிப் பார்வை அடிப்படையில் இறுக்கமான மதிப்பீடுகளைக் கொண்டிருந்தவை எனலாம்.

1965 முதல் 1975-வரையிலானவை; அதற்குப் பிந்தியவை - என மூன்று காலஅளவுகளாகப் பிரிக்கலாம்; அவரது கருத்துப் போக்கு, எழுத்துலக ஆற்றல்களைப் பற்றிய மதிப்பீடு மாறியே வந்திருக்கிறது. எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன், பாரதிதாசன் பற்றிய பார்வை.

இந்த வளர்ச்சி நிலையின் வெளிப்பாடாக அவருடைய தாமரை இலக்கிய இதழ்ப் பணி அமைந்தது.

“நான் இன்றும் கூட அக்காலத் தாமரை இதழ்களை ஒழுங்கு செய்து வைத்திருக்கிறேன். அவைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, தமிழக இடதுசாரி இலக்கியம் தமிழ்ப்பண்புடன் வெளிப்படவும், அதிக தத்துவப் பழு இல்லாதபடி அவ்விலக்கியம் இருப்பது தேவையென்றும் ஒரு வரையறையைத் தாமரை அன்று எழுபதுகளில் வெளிப்படுத்தியது தெரிகிறது. கம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் குழு மனப்பான்மையைத் தாண்டியது இடதுசாரித் தமிழிலக்கியம் என்ற எண்ணம் தி.க.சி.யின் தாமரையில் காணப்பட்டது. தி.க.சி அக்காலத்தில் ஒரு இலக்கியப் புரட்சியை செய்தார் என்று நுட்பமான இலக்கிய வரலாறு எழுதும் யாரும் குறிப்பிடுகிறார்கள்” – தமிழவனின் இம்மதிப்பீடு மிகச் சரியானதாகும். குழுமனப்பான்மையென்பது தனிமைப்பட்டுப் போதலாகும்; தனிமைப்பட்டுப் போகும் குழு மனப்பான்மைக்கும், குருட்டுத்தனமான பழமை வழிபாட்டுக்கும் இரையாக மறுத்ததன் காரணமாகவே, தமிழ் இலக்கிய உலகுக்கு பஞ்சீலக் கொள்கைகளை வகுத்தளித்தார்.

  1. தமிழியம் 
  2. பெண்ணியம் 
  3. தலித்தியம் 
  4. சுற்றுச் சூழலியம் 
  5. மார்க்சியம் 

ஐந்தையும் படைப்பிலக்கிய நெறிகளாகக் கொண்டு, படைப்பாளிகள் இயங்க வேண்டுமென வலியுறுத்துகிறார்.

கருத்துநிலை வளர்ச்சியில், அதன் முன்வைப்பில் எண்பதுகளின் மத்தியிலிருந்து, தனித்துவ சிந்தனைப் போக்கு தென்படத் தொடங்கிவிடுகிறது; 90-களிலிருந்து அவர் கட்சி கடந்தவராக இயங்கினார் என்றே சொல்லலாம்.

“மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மார்க்சிம் கார்க்கி – நமக்கு வழிகாட்டிகள்” என்பார்.

"உயர்ந்த படைப்பாற்றலும் தத்துவ நோக்கும் புதுமையும் தனித்தன்மையும் கொண்டவராக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். பொதுவாக வாழ்க்கையில் காணப்படும் யதார்த்த நிலைகளையும், பிரச்சனைகளையும் சித்தரிப்பதைத் தவிர அதை விமர்சனப் படுத்துவதாகவும் ஒரு படைப்பு அமைத்தல் வேண்டும்.

படைப்பில் முக்கியமாக மூன்று அம்சங்கள் இருக்க வேண்டும்.
  1. கலையழகு (Artistic Beauty)
  2. உலகளாவிய மனிதகுல நேயம் (Universal Humanism)
  3. சமூக நோக்கு (Social Work)
பொதுவாகவே மகாகவி பாரதியின் லட்சியங்களான, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் ஒரு படைப்பாளி வேரூன்றி நிற்க வேண்டும். கலை சம்பந்தமான பொறுப்புணர்வும் சமூதாயப் பொறுப்புணர்வும் பின்னிப் பிணைந்த படைப்பாளியாகத் திகழ வேண்டும் என்பது வளர்த்து வரும் எழுத்தாளர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்”
இளைய தலைமுறை இலக்கியக்காரர்களுக்கு இது அவரது வழிகாட்டல்.

“மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறயியல் இம்மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புக்களை வெளியிடுவதும், படைப்பதுவும் இன்றைய காலத்தின் அவசியம்” என்பார்.

அவருக்குள், அவராலேயே கட்டுப்படுத்த முடியாத, எல்லையிட முடியாத சனநாயக ஊற்றுப் பெருக்கின் தெறிப்புகள் இவை.

மார்க்சிய இயக்கங்களைச் சேர்ந்தோருக்கு தமிழ்த் தேசியம் வேம்பாகக் கசக்கும். சில நேரங்களில் ஊறுகாய் அளவுக்கு இடம் அளிப்பார்கள். “நம்ம காலடிய சுத்தப்படுத்திக்கிட வேண்டியதுதான். இது காலத்தின் வழிநடத்தல்” என அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கும், அந்தப்பக்கம் திரும்பினாலே பெரும்பாவம் என்றெண்ணுகிறவர்களுக்கும் உறைப்பது போல் “தமிழ்தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர்களாகக் கருதமுடியாது” என்றார்.

“நமது ஊனோடும் உயிரோடும் கலந்தது தமிழ்த் தேசியம். இந்தக் குரலை அடக்கி ஒடுக்குவதற்கும் தவறான வழியில் திசை திருப்புவதற்கும் பெரும்பான்மை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் சில சக்திகளும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. அவை மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் ஓர் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் தரமான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் கூட பலிகடா ஆகப் போகின்றனா்” என எழுத்துலகவாசிகளை நோக்கி எச்சரித்தார்.

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எவரும் ஈழவிடுதலைப் போரை புறந்தள்ளிவிட இயலாது; அல்லது ஈழவிடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தமிழ்தேசியத்தை உளங்கொள்ளாமல் இருக்க இயலாது. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) 2008, அக்டோபரில் தான் இந்தத் திசை நோக்கித் திரும்பியிருந்தது. அதற்கு முன்னரே தி.க.சி ஈழத்தில் நடைபெறுவது விடுதலைப் போர் என்றும், முன்னெடுப்பவர்களை போராளிகள் என்றும் அறிவித்தார். 2002 அக்டோபரில் நாங்கள் ஈழம் சென்று திரும்பியிருந்தோம். அங்கு நடப்பவைகளை ஆர்வத்துடன் கேட்டு உள் அமர்த்தி “அவர்கள் வெல்வார்கள்” என்ற பெருவிருப்பை என்னுடனான உரையாடலில் வெளிப்படுத்தினார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின், ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா ஒவ்வொரு முறையும் தீர்மானம் முன்வைக்கிறது. உலகில் மனித உரிமைகளைக் காலடியில் நசுக்கும் முதல் நபர் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கொல்லப்பட்ட, இன்றும் கொல்லப்படுகிற ஈழத்தமிழருக்காக கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறதே என விசனம் வருவது இயல்பு.

இந்த துயர நிலையில் இன்று ஈழத் தமிழனும் சர்வதேச சுயநல வாசல்கள் முன் உணங்கிப் போய் நின்று கொண்டிருக்கிறான். கொஞ்சம் மூச்சுப்பரிய காற்று கிடைத்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அமெரிக்கத் தீர்மானம் வருகிற வேளைகளில் எல்லாம், நடுச்செங்கல் உருவுகிற வேலையை இந்தியா செய்யும். 2012 மார்ச்சில் மனித உரிமை அவையில் இலங்கையை ‘அடிப்பது போல் அணைக்கும்’ சாதுரியத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர – அதில் இலங்கைக்குச் சாதகமான திருத்தங்களை முன் வைத்து, இந்தியா நீர்த்துப் போகச் செய்தது. செய்தது போதாதென்று, அதைப் பெருமைபீற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையின் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார்.

இதை விமரிசனத்துக்குள்ளாக்கி “தனிமைப்பட்டு நிற்கும் இந்தியா” என்ற கட்டுரையை பழ. நெடுமாறன் தினமணியில் எழுதினார். அதன் மீதான தி.க.சி.யின் கடிதம் தினமணியில் வெளியாயிற்று.

“ஈழத் தமிழர்களை அடியோடு அழித்துவிடும் முயற்சியில் முனைந்துள்ள ராஜபட்சேவைத் திருப்திப்படுத்த மார்ச் 24-ம் தேதி பிரதமர் எழுதிய கடிதம், உலக அரங்கில் இந்தியாவின் தன்மானத்துக்கும் இறையாண்மைக்கும் கௌரவத்துக்கும் பெரும் இழுக்கைத் தேடித் தந்துள்ளது. ‘பாம்பும் சாகக்கூடாது; கோலும் முறியக்கூடாது’ எனும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கேவலமான ராஜதந்திரம் இது. ஒரே சமயத்தில் பசுத்தோல் போர்த்திய புலியான அமெரிக்காவையும், தமிழ் இன அழிப்பில் வெற்றி கண்டதாக கொக்கரிக்கும் ராஜபட்சேவையும் திருப்திப்படுத்தி, உலக மக்களை ஏமாற்றமுயலும் இந்திய அரசு, மேன்மேலும் தனிமைப்பட்டு நிற்பது தவிர்க்க முடியாதது”

பீடம் தெரியாமல் சாமியாடிய பிரதமரை விளாசியிருந்தார் தி.க.சி.

ஏகாதிபத்திய விதைகள் ஆழப் பதிந்து வெடிக்கும் ஆபத்தானவை. அணு உலையை அமெரிக்கா கொண்டு வந்தால் கேடு்; ருசியா நிறுவினால் கேடில்லை என்று புத்தியைக் கடன் கொடுத்துவிட்டவர்களோடு ஒன்ற முடியாமல், வெகு தூரத்திலிருந்தார் தி.க.சி. நாங்கள் எழுத்தாளர்கள் ஒரு குழுவாக முதலில் அங்கு போய், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோது, அதை வரவேற்றார்.

“இது உங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழினத்துக்கான போராட்டம். உங்களுக்காக சட்டமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுப்போம். நாங்கள் நியாயத்தின் பக்கம் நிற்போம் என்று நல்லகண்ணுவே அவர்கள் மத்தியில் பேசியிருக்கிறாரே அய்யா” என்று தி.க.சி எடுத்துரைத்த அந்த வேளையில், அவர்களிருவரும் மிக உயரத்தில் நிற்பதாகப் பட்டது.


பேசிக்கொண்டிருந்தபோது, “கொஞ்சம் இருங்க. நேரம் ஆகலையே” என்றார். இப்படி அடிக்கடி கேட்டுக்கொள்வார். கூடங்குளம் போய்வந்த அலுப்பு தென்படாதபடிக்கு ஏற்கனவே இரண்டு மணி நேரம் ஓடியிருந்தது. புத்தகக் குவியல்களிலிருந்து ஒன்றைத் தேடி எடுத்தார்.

“அணுமின் சக்தி பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சக மனிதர்களுக்கு விளக்கும் விஞ்ஞானிகளாகிய எங்களுக்கு தப்பிக்க இயலாத ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது. இதில்தான் நம்முடைய பாதுகாப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது அறிவுடைய மக்கள் வாழ்வுக்காகச் செயல்படுவார்களே தவிர, சாவுக்காக அல்ல”

அறிவியலாளரும், மானுடகுல நேசிப்பாளருமான ஜன்ஸ்டீன் 1947-ல் எழுதியதை, அந்நூலிலிருந்து வாசித்துக் காட்டினார். மக்கள் வாழ்வுக்காகச் செயல்படுவோம், சாவுக்காக அல்ல என்று மீண்டும் அவர் உச்சரித்தபோது, அவருடைய உயரம் இன்னும் கூடுதலாகிவிட்டது. சனநாயக ஊற்றைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு தோழன் எல்லோரிலும் உயரம் கூடியவன்.

அவர் மரணத்துள் போன அன்று 21E சுடலைமாடன் தெரு வீட்டின் உள்முற்றத்தில் குளிர்பெட்டியில் அவரது உடல்.

மரணத்திற்குள்ளும், அந்தக் குளிர்பெட்டிக்குள்ளும் உடல் அடங்கிப் போயிருக்கலாம்; அவர் உயரம் அடங்காது.

நன்றி: தீராநதி மே 2014, கீற்று - 22 மே 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ