கொழும்பு ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு’ - பாரதியை முன்னிறுத்தி சில கேள்விகள்

2010, சனவரி நடுவில் கொழும்பு சென்றிருந்தேன். 2009, மே-18ன் இரத்தச் சதசதப்பு குறையாத நாட்கள் அவை. நிணநாற்றமும் ரத்தநெடியும் அந்நாட்களுக்குள்ளிருந்து தீராமால் வீசியது. கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சிலரும், நண்பர்களும் சந்தித்தபோது, 2011, சனவரியில் கொழும்பில் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்தவிருப்பது பற்றி தெரிவித்தார்கள். அதன் ஆலோசனைக் கூட்டம் சனவரி 3-ந் தேதி நடைபெற்றிருக்கிறது.

இன்னும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு ‘ஆறாவடு’ இருக்கவிருக்கும் நிலையில், இப்போது உடனடியாக இம்மாநாடு அவசியமா? இராசபக்ஷேக்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வியை முன்வைத்தேன். அரசின் அனுமதியின்றி நடத்த இயலாது எனத் தெரியவந்தது.

ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து, சித்தப்பாவான அரசனைக் கொலை செய்கிறாள் லேடி மேக்பெத். கொலைக்குப்பின் அதே நினைப்பில் மனநோய்க்கு ஆளாகிய லேடி மேக்பெத் தூக்கத்தில் நடக்கிறாள். “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் சேந்த்துத் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” என்று கதறுகிறாள்.

கோவையில் நடத்திய முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கொழும்பில் நடைபெற்ற ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’, அண்மையில் ஜூன்-1 முதல் 5 முடிய கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றுள்ள ‘உலகத் தமிழ் நாநாடு’ போன்ற நிகழ்வுகளை அவதானிக்கையில், லேடி மேக்பெத் போல் தூக்கத்தில் நடக்கிறோமோ என்று எண்ண வைக்கிறது. லேடி மேக்பெத் சொல்லும் அந்த வாசகம் போல், தமிழன்பர்களின் செயல்கள் அமைகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குற்ற உணர்வு கொண்டுள்ளார்களா என்ற கேள்வியை இதுபோன்ற செயல்முறைகள் எழுப்புகின்றன.

இம்மாநாடுகள் எதுவும், குறைந்தபட்சம் முள்ளிவாய்க்காலில் நடந்த பெரு ஊழியைப் பதிவு செய்யாமல் கடந்து சென்றன என்பது எத்துனை அவலம்.

முதல் நிகழ்வாக ஜூன் 1-ல் கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து மகாகவி பாரதியார் விழா நடத்தினார்கள். பாரதியின் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்ற செயற்பாட்டை முன்வைப்பது சரியானது. இந்தக் கடமையைச் செய்ய தமிழகத்திலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் யார் என்பது கேள்விக்குரியது.

சென்னை பாரதியார் சங்கத் தலைவர் காந்தி - உயர் நீதிமன்ற வழக்குரைஞர். காங்கிரஸ் என அழைக்கப்படுகின்ற பேராயக் கட்சிக்காரர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழனி தொகுதியில் வாய்ப்பு கேட்டு, காங்கிரஸ் இவருக்கு வழங்க மறுத்தது. பாரதி சங்கத்தின் செயலர் மதிவாணன், காந்தி போன்ற ஒருவர். எந்த காங்கிரஸ்காரரும் தமிழராக இல்லை என்ற பொதுக் கருத்து இங்கு தமிழுணர்வாளர்கள் சிந்தையில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளது. இந்திய தூதரக முதன்மைச் செயலராக இருக்கும் ஜஸ்டிஸ் மோகன் என்பவர், நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது முதலில் கிடைத்த தகவல். ஆனால் அழைப்பிதழில் அவர் பெயர் காணப்படவில்லை. வேர் இல்லாமல் மரம் இல்லை என்பதுபோல, பூமிக்குள் மறைந்திருந்து இணைக்கும் வேராக தமிழ்நாட்டில் அனைத்து ஒருங்கிணைப்பையும் செய்துள்ளார் என்பது நிரூபணப் பட்டிருக்கிறது.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பவும், சொன்ன பாரதியை உலகுக்குப் பரப்பவும் பாரதிவிழா நடத்தினோம். பாரதிசங்கம் என்ற அடையாளம் மட்டுமே எங்களுக்குப் பொதுமானது” என்று கொழும்பு தமிழ்ச் சங்க அன்பர்கள் சொல்லக் கூடும். நோக்கம் தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி, இதற்காக ஒரு செப்புக்காக கூட, இலங்கையின் கஜானாவிலிருந்து கைமாறவில்லை என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எவரோடு இணைந்து செய்தார்கள் என்பதும், இலங்கை அரசாங்க திணைக்களங்களோடு நெருக்கமான தொடர்பாளர்கள் இல்லாது இந்நிகழ்வை நடத்தக் கூடுமா? என்ற கேள்வியும் எழுகிறது.              

காந்தி போன்றவர்கள் கொழும்புக்குப் பயணமாகிறார்கள் என்ற சேதி புறப்படும் முந்தையப் பொழுதுவரை இங்கு அறியத் தரப்படவில்லை. எதிர்ப்பு வரும், அது என்ன ரூபத்தில் வரும் என்று அறிந்தவர்களாதலால், “கள்ளத்தனமாக” புறப்பட்டார்கள். புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கலந்து கொள்வது, அவருடைய தமிழத் துறை நண்பர்களே அறியாதவாறு கமுக்கமாய் வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் கீழ் ஆய்வு செய்யும் இருமாணவர்களையும் அழைத்துக் கொண்டு கொழும்பு புறப்படுமுன், செய்தித் தாள்களுக்கு தந்து அச்செய்தி புதுச்சேரி ‘தினகரன்’ செய்தித் தாளில் மட்டும் வெளியாகியுள்ளது.

பாரதி கவிஞன் மட்டும் அல்ல, வீர சுதந்திரம் வேண்டிநின்ற போராளி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என நெஞ்சுரத்தை உரைத்ததின் வழி – மானுட இனத்துக்கு நெஞ்சுத் திடம் போதித்தவன். கொடுங்கோல் அரசுகளுக்கு அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழுப்பை, பாரதி இருந்திருந்தால் யுகப்புரட்சி ஆவேசம்போல் கொதித்திருக்க மாட்டானா? மகாகவியின் பெயரால் எடுக்கும் இந்த விழா நிச்சயம் அந்தக் கொலைக் கொழுப்புக்கு கொம்பு சீவிவிடும் காரியமாக ஆகாதா?

‘இயல்பாய் நாங்களேதான் விழா எடுக்கிறோம்’ என்று சொல்லலாம். இந்த இயல்பை இனக் கொலைகாரர்கள் தமக்கு. கிட்டிய வாய்ப்பாய் பயன்படுத்திக்கொள்ளவும், “தமிழர்கள் இந்த அரசோடு இணக்கமாகவும், புரிதலோடும் இருப்பதால், மாநாடு கண்டு தமிழ் வளர்த்து, செழிக்கச் செய்கிறார்கள். சிங்களரும் தமிழரும் பகைமறப்புக் கொண்டு சுமூகமாக சுவாசிப்பதால் தமிழ்வளர்த்து மகிழ்கிறார்கள்” என பேரின இராசபக்ஷேக்கள் உலகின்முன் அறிவித்து உரிமை கொண்டாடவும் இந்த இயல்பு கைகொடுக்குமா அல்லவா? ஆஸ்திரேலியாவாழ் தமிழ்ப் பேராசிரியர் இலங்கையில் தமிழர் என்னும் நூலாசிரியர், முனைவர் மு.குணசிங்கம் இது குறித்து “இவர்கள் எடுக்கும் பாரதி விழாவானது, ஈழத்தமிழர்களுக்கு எதுவித பிரச்சனைகளும் இல்லை. அவர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையே உலகிற்கு காட்டி நிற்கும். இவ்வாறான தேவையற்ற விழாக்கள் சிங்கள இனவாத அரசிற்கு நிச்சயம் ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும்” என்கிறார்.

வரும் அக்டோபரில் ஜெனிவா மனித உரிமை அவையில், இலங்கை மீதான விவாதம் களை கட்டப்போகிறது. ராசபக்ஷேக்களின் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையையும், மனித உரிமை மீறல்களையும் பெரும்பாலான நாடுகள் கண்டித்து வருகின்றன. பயங்கரவாதிகள் என்று தாம் எண்ணிய விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஆதரவாய் நின்ற பல நாடுகளும், விடுதலைப் புலிகளை இல்லாமல் ஆக்குவது என்று போர்வையில் அப்பாவிப் பொதுமக்களையும் ஒன்றாய்க் குவித்து கொலை புரிந்த செயல் திட்டமிட்ட இன அழிப்புச் சூழ்ச்சியே என அறிந்து அதிருப்தி கொண்டுள்ளனர். இந்தியா வயிற்றுப் பிள்ளைபோல் இலங்கையைப் பொத்திப் பொத்திக் காத்தாலும், நடத்திய கொடூரங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இலங்கை அது தொடர்பான சிறு செயலும் மேற்கொள்ளாமல், மேலே மேலே ஒடுக்குமுறைக் களத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.

‘புதியன பாடிய புலவன்’ - இது கருத்தரங்கத் தலைப்பு. அரசியல் நோக்கில், சமுதாய நோக்கில், அறிவியற்பார்வையில், கற்பனை ஓட்டத்தில், அறம் சொல்லும் பண்பில், காவியம் படைத்தலில் என்ற தலைப்புக்களில் இங்கிருந்து சென்றோரும் அங்குள்ளோரும் உரையாற்றியுள்ளார்கள். இந்தத் தமிழறிஞர்கள் என்ன உரைநிகழ்த்தினார்கள் என்பதினும், என்ன பேசியிருக்கமாட்டார்கள் என்பதை நம்மால் அவதானிக்க முடியும். பிற்பகலில் நடைபெற்ற மகளிர் மட்டுமே பங்கேற்கும் “மகளிர் முற்றம்” நிகழ்வின் தலைப்பு – ‘பாரதியார் கவிதைகளில் உளம் கவர்ந்த ஓர் அடி’
‘விதியே விதியே தமிழச் சாதியை
என்செய்ய நினைத்தாய்’
என்ற அடியையோ,
‘கரும்புத் தோட்டத்திலே அவர் கரும்புத் தோட்டத்திலே’
என்ற ஓர் அடியையோ எடுத்து எவரும் பேசினார்களா, தெரியவில்லை. அறியத் தந்தால் நல்லது


“எலும்புக் கூடுகளின் குவியல்களை நான் காணவில்லை. இரத்தம் கசிய இறந்து கிடந்த உடல்களைத் தொகை தொகையாய்க் கண்டேன். கண்விழித்து என்னையே பார்ப்பதுபோல் காணப்பட்ட பச்சை உடல்களை நான் எப்படி மறப்பேன். உயிர் உண்டோ என நப்பாசையில் தலையைத் திருப்பும் போது, மடிந்து சரிந்த அந்தத் தலைகளை எப்படி மறப்பேன். சூடாறா அந்த உடலங்களின் பரிசம் என் கைகளில் இன்னும் ஒட்டுண்டு கிடக்கிறது. மனிதகுல விடுதலையின் பெயரால் அந்தப் பரிசம் ஒருபோதும் என்னை விட்டு நீங்க முடியாது. அந்தப் பரிசத்தால் மனித குல விடுதலைக்கான நாதத்தை நான் மீட்டியாக வேண்டும்”

பாரதி இருந்தால், இந்த வார்த்தைகளைப் பேசிருப்பான். மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளனே இதைப் பேச வேண்டி வந்தது.

பாரதி இருந்திருந்தால், சத்தியமான அவனது குரல் இவ்வாறுதானே வெளிப்பட்டிருக்கும். ஈரல் குலை உருகும் உருக்கத்தை, அதன் மேல் நிறுவும் வெஞ்சின சபதத்தை இந்த வரலாற்றாய்வாளன் எவ்வாறு கொண்டு வர முடிந்தது? அவனுக்குள் ஒரு பாரதி அமர்ந்தான். அவனுக்குள் இருந்தவன் பாரதி அதனால்.

ஆனால் தமிழ்ச்சங்க நண்பர்களே! ஒன்றை நான் உங்களுக்குக் காட்டியாக வேண்டும். பாரதியை, கம்பனை, இளங்கோவை, பாரதிதாசனைப் பேசிட நீங்கள் அழைத்த பேச்சு வியாபாரிகளுக்குள் பாரதி இல்லை. அவர்கள் அழைத்தாலும் பாரதி வரப் போவதில்லை.

“காயப்பட்ட மகனைக் கைவிட்டு, காயப்படாத தன்பிள்ளைகளைக் காப்பாற்ற ஓடினாள் தாய். காயப்படாத பிள்ளைகளைக் காப்பாற்றித் திரும்புகையில், காயப்பட்ட பிள்ளை இறந்திருந்தான். காயப்பட்ட பிள்ளையைப் பிரிய ஒரு தாயால் ஒரு போதும் முடியாது. இந்தத் தாயோ, எறிகணையிலிருந்து ஏனைய பிள்ளைகளைக் காக்க சற்று நேரம், அந்தப் பிள்ளையை பிரியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தவேளை அந்தத் தாய் அழுத அழுகையை எப்படி விவரிப்பது? எப்படி மறப்பது?”

இதுவும் மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளர் தான்

“அவர் விம்மி விம்மி விம்iமியழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே” என்ற பாரதியின் வரிகளில் அந்தத் தாய்மார்களின் அழுகுரலை நீங்கள் கேட்கவில்லையா? இதை மாநாட்டில் சொல்லவும் திறனற்றுப் போனீரோ?
“நாட்டை நினைப்பாரோ – எந்த
நாள் இனி அதைப் பார்ப்பதென்று அன்னை
வீட்டை நினைப்பரோ
கரும்புத் தோட்டத்திலே – அவர்
கரும்புத் தோட்டத்திலே”

முள்வேலி முகாம்களுக்குள் நிறைந்த ஓலத்தில், நீங்கள் கரும்புத் தோட்டத்தினைக் காணவில்லையா?
“ஆப்பிரக்கக் காப்பிரி நாட்டினும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமிப்பந்தின் கீழ்ப் புறத்து உள்ள பற்பல தீவினும் பரவி,
இவ்வெளிய தமிழச் சாதி தடியுதையுண்டும்
காலுதையுண்டும் கயிற்றடியுண்டும்
வருந்திடம் செய்தியும் மாண்டிடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்”
வன்னியில், முல்லைத் தீவில், முள்ளிவாய்க்காலில், முள்வேலி முகாமில், தமிழர் பிரதேசங்களில் இக்காட்சிகள் தாமே நடந்தேறின. இன்றும் நடந்தேறுகின்றன.
“பிணிகளாற் சாதலும் பெருந்தொலைவுள்ள தன்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டு எனதுளம் அழிந்திலேன்”
- கண்ணீர், கதறல், கொடுந்துயரம் அறிந்தும் கேட்டும் எனது உயிர் இன்னும் தரித்துளதே என அந்த மகாகவி அழுதான்; பாரதிக்கு அப்போது கேட்டு கிரகிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இப்போதுபோல் சாட்சியங்களின்றி நடந்த கொலைகளைக் காட்டிய காணொளிகள் அன்று பாரதிக்கு கிட்டவில்லை.

ஜூன் 2-லிருந்து 5-முடிய நடந்த உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில், நான்கு நாட்கள் பலரும் பல தலைப்பில் உரையாற்றி நடந்த நிகழ்வுகளில் இன, மொழி, பண்பாட்டு அழிப்பினைப் பேசாமல் அவ்வளவு பாதுகாப்பாக மொழியைப் பேணிக் கொண்டார்கள். தங்கள் புலமைசார் பசியைத் தீர்த்துக் கொள்ளவதைவிட, வேறு எந்த நோக்கமும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. துறைசார் புலமையை, புலமைத் திறனை புலப்படுத்தக்கூடாது என்றோ, புலப்படுத்தும் வாய்ப்பை நழுவவிடல் வேண்டுமென்றோ நாம் யாரும் சொல்வதில்லை. புலமை வெளிப்பாட்டுக்கு, மேதமைக்கு எல்லை வரையறுத்துக் கொள்வது எவ்வகைத் தர்க்க பூர்வம் என்று கேட்கத் தோன்றுகிறது.

இக்கரையில் இருந்துகொண்டு உபதேசிப்பதில் எங்களுக்கு ஒருவித சிக்கலுமில்லை. அக்கரை வாழ் ஜீவன்களாகிய உங்களுக்கு நடைமுறைச் சிக்கல் உண்டு என நாங்கள் அறிவோம். அதற்காக அறிவுத்தள செயல்பாடுகளில் ஒடுக்கம் கொள்வோர் பாரதிவழி நடப்போர் எனில் சரியா?

பெரும்பான்மை வீதத்தில் மக்களை அழித்தாகி விட்டது; மக்களை அழித்தபின் மொழி வாழுமா? மொழியைக் காக்க வேண்டுமாயின், மிச்சம் மீதி இருக்கும் மக்களையும் அழிப்புக்குள் விட்டுவிடாமல் காப்பது பற்றியே முதற்சிந்திப்பு நடக்க வேண்டும். மொழிக்காப்புக்குள், மொழி வளர்ச்சிக்குள், இலக்கிய ஆய்வுக்குள் ஒரு அரசியல் உள்ளார்ந்து இருக்கிறது என்பதைப் புறக்கணித்து விடக்கூடாது. வாழும் தமிழ், வளரும் தமிழ் எது? தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ்வாழும்; தமிழர் இல்லாமல் தமிழ்வாழும் என்பது நல்ல, திறமான கற்பனை. டென்மார்க் ஜீவகுமாரன் போன்றவர்கள் இதனைச் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள். “தமிழ் உணர்வு என்பது வேறு; தமிழருக்கு நிரந்திர அரசியல் தீர்வு என்பது வேறு” என்று ஜீவகுமாரன் முன்னெடுக்கிற சமாதான முன்னெடுப்பில் யதார்த்தம் இல்லை; உண்மை ஒளி இல்லை.

“அரசியலுக்கு விலை போகாத சுயமும் தன்னம்பிக்கையும். யதார்த்தமும் நேர்மையும் எழுத்திலும் எழுதுபவன் வாழ்விலும் இருந்தால் கணதியான இலக்கியங்கள் பிறக்கும் என்பதில் ஐயமில்லை” என்பது ஜீவகுமாரனின் வாசகம்; இதில் நமக்கும் ஐயமில்லைதான். ஆனால் மக்களின் விடுதலை அரசியலுக்கு துணை போகும் சுயத்துடன்தான் அங்கு இணைந்திருந்தீர்களா? மனச்சாட்சி கொண்ட எந்த ஒரு கலைஞனும் இலக்கியவாதியும் விடுதலைப் புலிகளின் அரசியலிலிருந்து வேறுபடலாமேயன்றி, மக்களுக்கான விடுதலை அரசியலிலிருந்து விடுபடுவது அல்ல.

இன்றைய இலங்கைச் சூழலில், எந்த இதழியலாளரும், அறிவுத் துறைச் செயற்பாட்டாளரும் சுயமாக எழுதினால், விமரிசித்தால், அரசிடமிருந்து அல்லது அதன் ஏவலாட்களிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது.

“ராசபக்ஷே, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து, நீங்கள் ராணுவத்தினருடன் மோதி பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டால் அதனை என்னால் தீர்க்க முடியாது என பொறுப்பற்றவகையில் அச்சுறுத்தியிருந்தார்?”

கூட்டுக் கொலையாளியான முன்னாள் ராணுவ ஜெனரல் பொன்சேகா, இப்போது கூறுகிறார். இதே கதிதானே அங்கு அறிவுத்துறைச் செயற்பாட்டாளருக்கும் தற்போதும் நிகழ்ந்து கொண்டுளது.

இத்தகைய அச்சுறுத்தலின் சிறு காற்றும் படாத பெரும்பயன், நம் கொழும்பில் கூடிய இலக்கியவாதிகளுக்கு கிட்டியுள்ளது. ஜீவகுமாரனின் பின்வரும் வார்த்தைகளிலேயே பேசலாம் “கருத்துச் சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் இல்லாமை நிலவிய அல்லது நிலவும் நாட்டில் இவ்வாறான இலக்கியங்கள்தான் தோன்ற முடியும். இதையும் தாண்டி இலக்கியம்படைக்க முற்பட்டோரின் இலக்கியங்கள்தான் வாழுகின்றன. ஆனால் இலக்கியவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லை என்பதே வேதனையான விடையமாகும்”

கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ் நஞ்சு அருந்திச் சாகவேண்டும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள் அவரிடம், “உனது கருத்துக்களைக் திரும்பப்பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா? அல்லது உயிரைவிட்டு கருத்துக்களைக் காக்கப் போகிறாயா?” எனக் கேட்டார்கள். சாக்ரடீஸின் மனைவி, நண்பர்கள் உட்பட கருத்தைத் திரும்பப் பெற்று உயிரைக் காத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள். நீதிபதிகளைப் பார்த்து சாக்ரடீஸ் சொன்னார், “என்னைப் புதைத்து என் கருதத்தை வாழவிடுவதா அல்லது என் கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா என்று கேட்கிறீர்கள். உங்களின் கேள்விக்கு என்பதில் - என்னைப் புதையுங்கள்; என் கருத்து வாழட்டும்”

கொழும்புவாழ் தமிழ் அறிஞர்களே, பாரதிவிழாவிலும், உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பங்கேற்க சென்ற தமிழ்ப் புலமைகளே, யாரைப் புதைத்து, யாரை வாழச் செய்யப்போகிறீர்கள்? கொழும்பையா? பாரதியையா?

- பா.செயப்பிரகாசம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌