1965-ஆம் ஆண்டு மொழிப்போர்

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ”1965-ஆம் ஆண்டு மொழிப்போர்” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் மதுரையில் நடத்திய "மொழிப்போர்-50" (24 ஜனவரி 2016) மாநாட்டில் ஆற்றிய உரை.



வரலாறு ஒரு சுழல் வட்டப் பாதை என்பார்கள் ஆய்வாளர்கள். ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை    தொடங்கிய புள்ளிக்கு வந்து  தன்னைத் திருப்பிப் பார்த்துக் கொள்கிறது என்பார்கள்.

இந்த மதுரை நகரில்தான் 1965-ல் இந்திக்கு ஆதிக்கத்துக்கு எதிராய் மாணவர்கள் முதல் கொள்ளியைத் தூக்கினார்கள். இந்த மதுரையில்தான் எனது சக மாணவப் போராளிகளும் ஒரு சாலை மாணாக்கர்களுமான நா.காமராசன், கா.காளிமுத்து “இந்தியே ஆட்சிமொழி” என அறிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு்ககுத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இதே தமுக்கம் மைதானம்; இதே அரங்கம் ; இதே போல் அன்றும் மேலே தகரக் கொட்டகை; அரங்கின் இடது பக்கம்தான் சற்றுவித்தியாசமாய் இருக்கின்றன இரு சிறு கோபுரங்கள்; . புதிதாக நிறுவியிருக்கிறார்கள் போல. இதே மேடையில் நடைபெற்ற மாணவர் இந்தி எதிர்ப்பு    மாநாட்டிற்கு நான் தலைமை தாங்கினேன். சட்டப் பிரிவைக் கொளுத்தி சாம்பலாக்கிய நா.காமராசன், கா.காளிமுத்து இன்னும் பலர் இங்கு உரை நிகழ்த்தினார்கள். இங்கு வந்திருக்கிற சகபோராளிகளான ஐ.செயராமன், புலவர் வீராசாமி என்கிற மறவர் கோ, புலவர் செயபாலசண்முகம் இன்னும் பலர் உடனிருந்தார்கள்.

இன்றும் அந்த மதுரை, அதே திடல், அதே அரங்கம்; 50 ஆண்டுகள் சுழற்சிக்குப் பின் வரலாற்றை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள். தோழர்கள் பெ.மணியரசன், கி.வெங்கட்ராமன், வைகறை ,கவித்துவன், ரெ.இராசு. தலைமைச் செயற்குழுத் தோழர்கள் அ.ஆனந்தன், கோ. மாரிமுத்து, அருணா, குபேரன் போன்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1965-ல் இருபதில் நின்ற நாங்கள் இப்போது அறுபதுகளில் நிற்கிறோம். எங்களில் ஒரு சிலர்  அன்றைய உணர்வோடு, அதே உன்னிப்புடன் வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாறு இயக்கப்பட வேண்டும். தானே சுழலும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.   தானே உருண்டு செல்லும் என மெத்தனமாக இருந்தால் எவரேனும் அதை உருட்டிக்கொண்டு போய்விடுவார்கள். 1965- க்குப் பின் அப்படித்தான் நடந்தது. 12 ஈகியர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் தொடங்கி வைத்த-நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரீந்து  நிலைக்கச் செய்த 1965- ஐ திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பிடிப்பதற்கான படிக்கட்டாக மடைமாற்றிக் கொண்டது. மடை மாற்றிய   நீரில் இன்னும் சுகக் குளியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய வருமான வரி அட்டையில் (PAN CARD) பெயரில் சிறு திருத்தம் செய்ய வேண்டி நடுவணரசுக்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஆங்கிலத்தில்தான் சென்றது. கவனிக்க வேண்டும்; என் தாய்மொழியில் நான் அனுப்பவில்லை. எழுதிட உரிமையில்லை. நடுவணரசிடமிருந்து பிழைதிருத்தம் செய்து வந்த அட்டையிலும் ஆணையிலும் ஒரு பக்கம் இந்தி ; இன்னொரு பக்கம் ஆங்கிலம்; என்னுடைய தாய்மொழி  இல்லை. வருமான வரி அட்டையும்   கடிதமும்  எனது தமிழ்நாட்டிலிருந்து, சென்னையிலிருந்து இயங்கும் சாஸ்திரி பவனில்     இருந்து     வருகிறது.எனக்கு இந்தியும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. தாய்மொழி மட்டுமே அறிந்த சாதாரண தமிழ்க் குடிமகன்  என வைத்துக் கொள்ளுங்கள். என்றால் என்ன செய்வேன்?


எனது தாய்மொழியில் நான் அரசுடன் உரையாட வேண்டும். அரசு எனது தாய்மொழியில் என்னுடன் உரையாட வேண்டும். இது   இயல்பான விதி. நம்மை ஆதிக்க செய்யவேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தை நம் தலையில் ஏற்றிய ஆங்கிலேயன்  போல், இன்று வட இந்திய பார்ப்பனிய பணியாக்களான இந்திக்காரர்களும் நம்மை ஆதிக்கம் செய்ய நினைக்கிறார்கள்.
எப்பக்கம் வரும் இந்தி – அது
எத்தனை பட்டாளம் கூட்டி வரும்
என்று எக்காள முழுக்கமுடன்தான் அன்று மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் இறங்கினார்கள். இன்று எல்லாப் பட்டாளத்துடனும்   இந்தி தமிழன் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டே தாம் தி.மு.க. அ.இ.அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.

நம்மில் பலர், பிரித்தானியரின் ஆட்சி முடிவுற்ற பின்னர்தான் இந்தி ஆட்சி மொழியானது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாறு நம்மை இன்னும் முன்னாலே அழைத்துச் சொல்கிறது.

1918-ல், தமிழ்நாட்டினர் இந்தியைக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் காந்தி ’இந்திப் பிரச்சார சபா’ வைத் தொடங்கி வைத்தார். ”ஆங்கில நாட்டுத் துணிகளைப் புறக்கணிப்பது போல், அவர்களின் மொழியையும் புறக்கணிக்க வேண்டும், அப்போது தான் நாடு விடுதலை அடையும்” என்று தொடக்க உரையாற்றினார்.  ”ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்துஸ்தானியை அனைத்திந்திய மொழியாக ஏற்க வேண்டும்“ என்றார்.

இஸ்லாமியரை பெரும்பான்மையாக காங்கிரஸ் கட்சிக்குள் இழுப்பதும் ஒற்றை இந்தியாவுக்குள் அவர்களை வைத்திருப்பதுமான   நோக்கில் இஸ்லாமியரின் மொழியான உருதுச் சொற்களை   உள்வாங்கி எழுதுவது என்பதில் இந்துஸ்தாணியை பரிந்துரைத்தார்.  ஆனால் இந்தி என்னும் ஒரு மொழியை சமஸ்கிருதமயமாக்கலின் பிள்ளையாக வடிவமைத்தனர் காங்கிரஸ் இயக்கதினரும் பின்னர் வந்த ஆட்சியாளர்களும். இன்று இந்துத்வா அமைப்புக்களின் சூத்திரச்சுருக்கமாக  இந்து- இந்தி-இந்தியா என  அது மாறியுள்ளது.
  மொழியடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்பதையும், அம்மாநிலங்களில் ஆட்சிமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் அந்தந்த மாநில தாய்மொழிகளே இருக்க வேண்டுமெனவும் ஒத்துக்கொண்ட காந்தி, கூடவே இந்தியாவுக்கு ஒரு ” ராஷ்டிர பாஷை” தேவை என்பதை வலியுறுத்தினார். எண்ணற்ற மொழிகள் பேசப்படும் இந்தியாவில், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் ஆட்சிமொழிகளாக இருக்கலாம் என்பதை கருத்தளவில் கூட அவர் ஏற்கவில்லை.

ஒருவன் தேங்காய் திருடுவதற்கு தென்னை மரத்தில் ஏறினான். தோப்புக் காரர் பார்த்து விட்டார். விடு விடு வென்றுபோய் ’இறங்குடா கீழே” என்றார். திருடன் கீழே இறங்கி வந்தான்.

 “எதுக்குடா மேல ஏறுன?” தோப்புக்காரர் கேட்டார்.

“புல் பறிக்க” என்றான் திருடன்.

“புல்லு அங்கயாடா இருக்கும்?”

“அதான் எறங்குறேன்” என்றான் திருடன் சாமர்த்தியமாக .

ஒவ்வொரு பிரச்சனையையும்   சாதுரியமாக, சாமர்த்தியமாக கையாளுவதாக காந்தி நினைத்தார். மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்னும் கருத்தை முன்வைத்த காந்தி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பொதுமொழியே இருக்க வேண்டும் என்று இந்தியை (இந்துஸ்தானி) அனைவரும் கற்க வேண்டுமென்றார். அதனால் 1938-லும் 1948-லும் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர் பற்றி   வாய் திறந்தாரில்லை.
இந்திப் பிரச்சார சபா-   அந்நிய ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியைப் வேரூன்றச் செய்ய  ஊன்றப்பட்ட விதை ;  அந்நிய ஆதிக்க மொழியைப் புறக்கணிக்க காந்தி கருதினால், இந்திப்பிரச்சார சபாவுக்குப் பதிலாய் “தமிழ்ச் சங்கத்தினைத்”  தொடங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய்மொழிவளர்ச்சி அமைப்புக்களைத் காந்தி தொடங்கி, மொழிச்சமத்துவத்தை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும்.

1965ல் மாணவர்கள் போராடினார்களென்றால் அது காந்திக்கும் காங்கிரசுக்கும் எதிரானதுதான். இந்தி ஆதிக்கத்துக்கு விதைபோட்டு நிலை நிறுத்திட முயன்ற அனைத்து சக்திகளுக்கும் எதிராக மாணவர்கள் நின்றார்கள்.

1965-ல் சனவரி 25-மதுரை கீழவெளி வீதியிலிருக்கிற ராஜாஜி பூங்காவில் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நா.காமராசன், கா. காளிமுத்து – ஆட்சி மொழி சட்டப் பிரிவுக்குத் தீயிட்டார்கள். அவர்கள் சட்டத்தை எரிப்பது என்பதை இங்கே வந்திருக்கிற மாணவப் போராளி  ஐ.செயராமன் அறையிலே இருந்துதான் ஆலோசித்தோம். வெளியில் சேதி தெரிந்தால் கைது செய்து விடுவார்கள் என்பதால், தலைமறைவாக வைத்திருந்தோம். அதற்கு உதவிய மாணவ நண்பர்கள் இன்னும் இருக்கிறார்கள்; சட்டத்தை எரித்த பின்னர் கைது செய்யப்பட்ட அவர்களை காவல்துறை வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் பேரணியைத் தொடர்ந்தோம். அனைத்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர்களால் மதுரையின் நான்கு மாசி வீதிகள் கடலாகியிருந்தன.   வடக்குமாசி வீதி முகணையில் ஊர்வலம் நுழைந்த போது, காங்கிரஸ் கொடிகட்டிய ஒரு ஜீப் வேகமாகக் கடந்தது. ஜீப்பில் இருந்தவர்கள் காறி உமிழ்ந்ததாக - செருப்பைக் காட்டி மிரட்டியதாக   மாணவர்கள் சொன்னார்கள். மாணவர்கள் பதிலுக்கு  தோள் முறுக்கியிருப்பார்கள்.  ஜீப் வேகமாக ஓடி விட்டது. வடக்கு மாசி வீதியின் நடுவில் இருந்த மாவட்ட காங்கிரஸ் அலவலகத்தை பாதிப் பேரணி கடந்திருந்தது. காங்கிரஸ் அலுவலகத்திற்குள் இருந்தவர் சிலர் மாணவர்களை மோசமாகத் திட்டினார்கள். மாணவர் கூட்டம் அவர்களை நோக்கிக் கத்தியது. காங்கிரஸ்காரர்கள் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்கள். அமெரிக்கன் கல்லூரி மாணவர் இருவர், அமெரிக்கன் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் மூவர் வெட்டுப்பட்டனர்.

காங்கிரஸ்காரர்கள் மாணவர்களை வெட்டிவிட்டார்கள் என்ற சேதி எட்டியதும், முன் பகுதியில் போய் விட்ட மாணவர் கூட்டம், காங்கிரஸ் அலவலகம் நோக்கி ஆவேசமாய்த் திரும்பியது. நீண்ட தூரம் உள் வாங்கிய கடல் மறுபடி கரை நோக்கித் திரும்புகிற ஆவேசம். மிருதுவான நீருக்கே அந்த மூர்க்கமென்றால், ரத்தமும், சதையுமாய் உயிர்ப்புக் கொண்ட மாணவர்களுக்கு? காங்கிரஸ் வாசல் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புக்கு நின்ற போதும், மாணவர்கள் பக்கத்து வீட்டு வழியாய் ஏறி, மாடியில் பறந்த கொடியை இறக்கிக் கிழித்தனர். அதே கம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றினர்.

நகரமெங்கும் காங்கிரஸ் கொடிகள்  வெட்டி   எறியப்பட்டன. குத்து மண் எடுக்கும் கொம்புக் காளைகளாய் மாணவர்கள் நகரெங்கும் ஓடிப் பறந்து,   எங்கெங்கு காங்கிரஸ் கொடி காணுமோ, அதையெல்லாம் வெட்டிமுறித்து வீசினார்கள். அதுமட்டுமில்லை, மறுநாள் குடியரசு நாள் விழாவுக்காக கட்டப்பட்டிருந்த தோரணம் தேசியக் கொடி கட்டப்பட்ட வளைவுகள் அனைத்தையம் வெட்டி வீழ்த்தினார்கள். ஆவேசம் கொண்ட மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. நகரம் முழுவதும் 36 தடவை கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக  மாவட்ட ஆட்சித் தலைவர் கணக்குச் சொன்னார்.

மதுரையில் மாணவர்கள் வெட்டுப்பட்டார்கள் என்ற சேதி தமிழகம் முழுவதும் பரவியது. மறுநாள் குடியரசு நாள் என்று கூடக்கண்டு கொள்ளாமல் மாணவர்கள் எல்லா ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தினார்கள். சிதம்பரத்தில்   மாணவர் ராசேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.  சென்னையில் கோவையில், திருப்பூரில், பொள்ளாச்சியில் திருச்சியில் என மாணவர் போராட்டம் தீயாய் எழுந்தது.சென்னை திருவல்லிக்கேணியிலிருக்கும் வெங்கடேசுவரா மாணவர் விடுதி காவல் துறையின் வெறித் தாக்குதலில் யுத்த களமாகியது. கல்லூரிகள் பள்ளிகள் பயிற்சிப் பள்ளிகள் என அனைத்துக் கல்விச் சாலைகளும் இழுத்து மூடப்பட்டன.
  1. இந்திய விடுதலைக்குப் பின் காஷ்மிர் தவிர,வேறு மாநிலங்களில் நுழைந்திராத இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்திற்குள் வந்தது. வரவழைத்தவர் அன்று தமிழ்நாட்டின் முதல்வராயிருந்த பக்தவத்சலம்.  
  2. தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கைக்கு  முதன்முதலாக ஆளாகியது.. அஞ்சல் நிலையம்   காவல் நிலையமாக மாறி விட்டது;    காவல்துறையினர் ஒவ்வொரு கடித்தத்தையும் பிரித்துப் படித்துப் பார்த்தனர். (பிற்காலத்தில் அதுபற்றி உரையாற்றுகையில் தமிழகத்தில் காவல்துறையினர் கடிதங்களைப் பார்வையிடுகிறார்கள் என்ற செய்தி தெரிந்து காதலர்களே இல்லாமற் போயினர் என்று  பகடி செய்ததுண்டு) 
  3. முதன் முதலாக இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (Defence of  India rules) மாணவர்கள் மீது பாய்ந்தது. பத்து மாணவர் தலைவர்கள்   இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 
“இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளும் நாட்டின் ஆட்சிமொழிகளாக வேண்டும் ; மைய அரசின் ஆட்சிமொழியாக தமிழ் ஆகும்வரை ஓயமாட்டேன்” என அண்ணா நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றியது—இன்னும் அப்படியே பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது.   அவர்வழியில் வந்து ஆட்சி   செய்வதாக உரிமை கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் அவர் கல்லறைக்குத்தான் போகிறார்களேயன்றி, அண்ணா விட்டுச் சென்ற வாசகம் என்னவாயிற்று என கிஞ்சித்தும் வருந்தவில்லை. வரலாறு – ஒரு வளமான ஆய்வுக் கூடம்.எல்லா சூரத்தனங்களுக்கு மட்டுமல்ல, எல்லாக் கள்ளத்தனங்களுக்கும் அதில் சான்றுகள் எடுக்கலாம்.

ஒரு தேசிய இனத்தின் உரிமைத் தகிப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கப் போராடும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை – அதன்  தொண்டர்களை உண்மையிலேயே  வாழ்த்துகிறேன். வரலாற்றுக் கடமையை நிறைவு செய்யும் பொறுப்பைத் தம்தோள் மீது சுமந்துசெல்கிறவர்கள்,  மாணவர் இந்தி எதிர்ப்பின் முதல்கங்கு எங்கிருந்து எழுந்ததோ அந்த இடத்தில் இந்த மாநாட்டை நடத்துகிற செயலுக்காய் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ