கி.ரா 95: வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு

கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், வட்டார மொழியில் எழுதினாலும் வேறுபட்ட பிரச்சினைகள் கொண்ட மாந்தா்களை எழுதினார் என்பதால், அவருடைய எழுத்துகள் கரிசல் எனும் எல்லை தாண்டி, தமிழ்ச் சமூகத்தின் பரப்பு கடந்து, சர்வதேசப் பரிமாணம் பெற்றிருப்பவை.


“மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக் கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்” என்றவர், புதுவை பல்கலைக் கழகத்தில் ‘வருகைதரு பேராசிரிய’ராய்ப் பணியாற்றியது எழுத்துக்குக் கிடைத்த கெளரவம். வட்டார மொழியும் அதன் வகைதொகையில்லாச் செழுப்பமும் கி.ரா. என்னும் பெருமரத்தைக் கொப்பும்கிளையுமாய் போஷித்து வளர்த்தன.

நாட்டார் வழக்காறுகளின் உள்ளிருந்து தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை எனப் புதிய இலக்கிய வகைகளைக் கண்டெடுத்தார். இவைஎல்லாமும் இன்ன பிறவனவும் நாட்டார் மரபுக்குள்இருந்தவைதாம். ஆயினும், அவற்றைத் தேடிக் கண்ட டைய அவர் தேவையாயிருந்தது. அதுவரை பாராமுகம் கொண்டிருந்த கலை இலக்கியவாதிகளுக்கு அவர் புதிய கதவைத் திறந்து “உங்கள் செல்வம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. வாருங்களய்யா.. வாருங்கள், வண்டி கட்டிக் கொண்டு எடுத்துப் போங்கள்” என அழைத்தார்.

உலக இலக்கியத்தின் ஒரு பிரிவு

வட்டாரம் என்பது மொழி பேசும் பிரதேசத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அப்படி ஒத்தையாய்ப் பிரித்து நிறுத்தி விட முடியாது. வட்டாரம் என்பது உலகின் ஒரு பகுதி; வட்டார இலக்கியம் உலக இலக்கியத்தின் ஒரு பிரிவு. வாழ்வியலை எழுதிக்காட்டுவது இலக்கியமென்றால், குறிப்பிட்ட வட்டார மக்களின் வாழ்வை நிணத்தோடும் ஊணோடும் உயிரோடும் வெளிக்கொணர்தல் நிமித்தம் அது உண்மையிலும் உண்மை கொண்ட படைப்பாகிறது.

தமிழ் மக்கள் வாழ்க்கை மீள முடியாத புதை மணலுக்குள் மாட்டுப்பட்டுவிட்டது. சொல்லிக்கொள்ளும்படி விசேடமாக ஒன்றும் இல்லை. ஒரு சம்சாரியின் வாழ்வு உலகச் சந்தையில் ஏலம் விடப்படும் பரிதாபத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம். ஏலம் போவது அவன் வாழ்க்கை மட்டுமல்ல; அவனுள் சேகரமாயிருந்த உன்னதமான மனுச குணங்களும். இந்த வாழ்க்கை அழிமானத்தை, மனுச குண அழிவை டால்ஸ்டாய் முதல் நம்மூர் கி.ரா. வரை எழுதிக் காட்டி யிருக்கிறார்கள். ஒரு வித்தியாசம் உண்டு. டால்ஸ்டாய் பிரபுத்துவ வாழ்வுக்குள் இருந்தார். நம்மூர் எழுத்தாளர்களில் பலர் நடுத்தர வாழ்வு சார்ந்து இயங்குபவர்கள். கி.ரா. இந்த எல்லைகளுக்குள் எப்போதும் இல்லை. சம்சாரி வாழ்க்கைக்குள் முங்குநீச்சல் போட்டார். கையை ஊன்றிக் கரணமடித்தார். ‘என் மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது, ஏ, யப்பா, வண்டி வண்டியாய்க் கிடக்கிறதே’ என்று எழுதிப் பார்த்தார்.

தொடரும் அகராதிப் பணி

கரடுமுரடான கல், தண்ணீரில் அலை கோதிக்கோதி உருண்டு உருண்டு வழவழப்பு கொண்டு கூழாங்கல் ஆவதுபோல், படிப்பறியா சனத்தின் நாவில் புரண்டு புரண்டு வார்த்தைகள் நயம் கொண்டுவிடுகின்றன. இந்த மக்களின் வாய்மொழியிலிருந்து எடுத்து, ஏட்டு மொழிக்கு வார்க்க வேண்டும். இதை கி.ரா. செய்தார். அவற்றின் சொல்லாடல்களும் அதில் வெளிப்படும் அர்த்தங்களும் அளவிட முடியாதன. கி.ரா.வின் தொய்வுபடா முயற்சியில் கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவானது.

இந்த 95-லும் விடாமுயற்சியாய்ப் புதுப் புதுச் சொற்கள், சொல்லாடல், சொலவம், வரலாற்றுத் தரவுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள் என அதைச் செழுமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அதன் மதிப்பறிந்து அவா் செய்த முதல் சாதனைக்குப் பின்னரே தமிழில் பல திசைகளிலிருந்தும் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் பிறந்து வந்தன.

கி.ரா.வின் படைப்புலகம் வெடித்துக் கிடக்கும் ஒரு பருத்திக் காடு. நிரைபிடித்துப் பகுதி பகுதியாய் மேற்சென்றால், பருத்திக்காட்டை முழுமையாய்த் தரிசிக்க முடியும். எழுத்து என்பது ஒரு சுருக்கு முடிச்சு. அதிலும் பலவகை உண்டு. எந்தெந்த விசயத்துக்கு எந்தெந்த வகை முடிச்சுப் போட வேண்டும் என்பது ஒரு கலை. கைவந்த கலையாக அதை மாற்றிக்கொள்கிற கமுக்கம், உள்திறன் உள்ளோர் வெற்றிபெறுகிறார்கள். எழுத்தென்னும் சுருக்கு முடிச்சை ரொம்ப லகுவாகப் போடத் தெரிந்தவர் கி.ரா.

அதிகாரத்துக்கு எதிரான எழுத்து

எல்லாவற்றையும் தன் கையில் இறுக்கிவைத்துக்கொள்வது அரசு. மக்கள் சக்தி பெருக்கெடுக்க, வாய்க்கால்களைக் கிளை பிரிக்காமல், தன் அதிகாரத் தால் கவ்விக்கொண்டிருக்கிற ராட்சத நண்டு அது. இந்த ராட்சதத்தனத்தினால் விளைந்த வினைகள்தாம் பாவப்பட்ட விவசாயிகளின் வாதனைகளாய் வெளிவந்த ‘கதவு’, ‘கரண்ட்’, ‘மாயமான்’ கதைகள். எடுத்த எடுப்பில் ஒரு பார்வைக்கு, சபிக்கப்பட்ட விவசாயிகளின் அவலங்கள்போல் இக்கதைகள் தென்படலாம். அடியோட்டமாக அதிகார அரசியல் அதற்குள் ஓடுகிறது. அன்றைய கதைகள் முதல், ‘தி இந்து’வில் வெளிவரும் ‘பெண்ணெனும் பெருங்கதை’ வரை, தனி மனிதன், குடும்பம், அரசு ஈறாக எந்த ரூபத்தில் வந்தாலும் ‘வெனைகாரப் பயலான அதிகார’த்தை எதிர்த்த எழுத்தாகவே வருகிறது.

பூமியை வளப்படுத்தியபடி கைவீசி நடக்கிற ஆறுபோல, மனித மனத்தைப் புல், செடி, கொடி, தாவரம் பெருமரமாய் வளப்படுத்தியவாறு ஓடுகிறது கி.ரா.வின் எழுத்து. அதுதான் மனுசம். வாழ்க்கை லவிப்பு இல்லாத ஆத்மாக்களில் ஒருத்தியான கோமதி என்ற திருநங்கையை, இதுவரை பூச்சூடி அறியா ஒரு ஏழைப் பெண் பேரக்காள் திருமணத்தின் போது, பூச்சூடியதால் வாடை தாங்காமல் மயக்கமடைந்த ‘பூவை’யை, பண்ணை வீட்டு வாலிபத்தால் சீரழிக்கப்பட்ட ‘சிவனி’யை எனப் புறக்கணிக்கப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி இந்த மனுசம் எழுதியது நிறைய.

எழுத்து கி.ரா.வின் சிந்தனைச் செயல்பாடு. தலைகீழே சாயந்தட்டியும், சிந்தனை ஓட்டம் சாயாமல் சரியாமல் தொடருமெனில், எழுத்து மட்டும் எங்ஙனம் நிற்கும்! 95-ல் கால்வைக்கும் கி.ரா.வுக்கு வாழ்த்து தெரிவிப்பதானது, நம் தாய், தந்தைக்குச் செய்யும் மரியாதை என்றார் ஒரு பெரியவர். அவர் வயதில் முதுமையுற்றாலும், செயலில் இளமையைத் தன்னுடன் கொண்டு செல்கிறார். அவரின் எழுத்தழியா இளமை யைக் காத்துவரும் 85 வயது கணவதி அம்மாவையும் காண்கிறோம் ; 95 இன்று சிகரத்தைத் தொட்டிருக்கிறது என்றால், பின்னிருந்து அல்ல, முன்னரே சிகரம் ஏறி கை கொடுத்துக் கூட்டிப் போனது இந்த 85 என்று சொல்லலாம். இருவரும் நலமோடு வாழ வாழ்த்துகள்!

- பா. செயப்பிரகாசம், எழுத்தாளர்

நன்றி: இந்து தமிழ் - 15 செப்டம்பர் 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ