இன்குலாபுடன் இணைந்து பயணித்த நாட்கள்

(மதுரைத் தியகராசர் கல்லூரியில் 68-ஆம் ஆண்டு புலவர் விழா, மக்கள் பாவலர் ’இன்குலாப்’ விழாவாக 01-03-2017 அன்று தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வுற்றபோது, ஆற்றிய உரையின் செழுமை பெற்ற வடிவம்)



அதிசயிப்பும் மகிழ்ச்சியுமாக உணா்ந்தேன் - தியாகராசா் கல்லூரி முதல்வா் பெயா் எயினி. சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்துஸ்தானி என பலப்பல கலப்புக்களில் வெளிப்படும் தமிழ்க் குடும்பங்களின் நவீனப் பெயா்களின் வெளிப்படும் பெயர்ப் பண்பாட்டின் நடுவில்- ஈராயிரம் ஆண்டுகளின் முன்னான இவ்வாறான ஒரு பெயரைக் காணுகிறபோது, அது ஒரு பெயராக மட்டும் நிற்கவில்லை; தமிழர் வரலாறு, மொழி, இனம், பண்டைய வாழ்வியல் போன்ற பல குறிப்புக்களில் கொண்டு போய் நம்மை நிறுத்துகிறது.இன்றைய தமிழ்ப்பண்பாட்டு நடப்புகளின் ‘கொடு வேனலிலிருந்து’ வெளியேறி சற்று இளைப்பாறச் செய்தது.

தந்தை – திராவிட இயக்கச் சிந்தனையாளா்; பகுத்தறிவு வழி நடந்தவா். தமிழன் என்ற உணா்வோடு வாழ்ந்த தந்தை இப்பெயா் சூட்டியதாக முதல்வா் எயினி தெரிவித்தபோது, என் அதிசயிப்புக்கு எந்த நியாயமுமில்லை எனத் தெளிந்தேன். என் மற்றொரு அதிசயிப்பு - தீராநதி மாத இலக்கிய இதழ் முதல்வா் எயினியின் மேசைமேல் இருந்தது. நவீன சமகால இலக்கிய சங்காத்தமே வேண்டாமென விலக்கமாகி நிறையப் பேராசிரிய வட்டம் நிற்க, இந்த அதிசயப்பும் என்னைச் சூழ்ந்தது.

“கல்லூரி முன்புறம் அலைகுதிக்கும் தெப்பக் குளம். பின்புறம் பெருகியோடும் வைகை ஆறு. ’தெப்பக்குளம் வைகை என்னும் நீா் நிலைகளின் நடுவில் மிதக்கும் கட்டிடத் தாஜ்மகால்’ என்று தீராநதியில் எழுதியிருக்கிறீா்கள். அலையடித்த தெப்பக்குளம் படம் இப்போது கிடைக்குமா” என்று கேட்கிறார் முதல்வா்.

அவரது வலது பக்கம் அலைகள் வீசிய தெப்பக்குளம் வறண்டு கிடக்கிறது. என்னையும் பார், என் பிறப்பையும் பார் என காய்ந்த வயிறு காட்டி ஆகாயத்திடம் முறையிடுகிறது. குளத்தின் கட்டாந்தரையில் - மேலைதேச ஆட்டங்களில் கிறுக்குப்பிடித்த சிறுவா் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது.


“இன்குலாப் 1964, 65-ல் தியாகராசர் கல்லூரியின் தமிழ் மன்றத் தலைவா். அதற்கு முந்திய ஆண்டு நானிருந்தேன். இன்குலாப் தலைவராக இருந்த போது இதே தொல்காப்பியா் அரங்கில் ‘நீர்க் குடும்பம்’ என்ற தலைப்பில் கவியரங்கம். அப்போது அவர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. திராவிட இயக்கச் சிந்தயைாளரான முடியரசன் கவியரங்கத் தலைவா். கவிஞா்கள் மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், நா.காமராசன், அபி, நாஞ்சில் ஆ.ஆரிது என ஒவ்வொருவரும் குளம், கண்மாய், கடல், கிணறு, ஆறு என நீா்நிலைகள் பற்றி கவிதை வாசித்த அரங்கில் அவர் கவிதையால் வரவேற்புரை செய்தார். கவியரங்க நிறைவுக்குப்பின் கவிஞா் முடியரசன், ஔவை நடராசன், கவிப்பெருமக்கள் அனைவருடனும் அரங்கின் பின்புறப் புல்தரையில் அமா்ந்து உரையாடினோம். தெப்பக்குள அலைகள் தனுமையாய் வீசி எம்மை நீவின. இனி “நீா்க்குடும்பம்” என்ற தலைப்பில் அப்படியொரு கவியரங்கம் நிகழ இயலுமா!

என் ஆற்றாமையை முன்னமர்ந்து கேட்கிற உங்களுடன் பகிரமட்டுமே இயல்கிறது.

வரவேற்புரை நிகழ்த்திய தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் இ. பேச்சிமுத்து ”கல்லூரி தொடங்கப்பட்ட 1949-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் புலவா் விழா - இது 68 ஆம் ஆண்டு” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரோடும், முன் அமா்ந்திருக்கும் உங்களோடும் இணைந்து நானொரு குறிப்பைப் பகிர்ந்து கொள்வேன். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்பதிலும், சங்கப் புலவா்கள் 49 போ் என்பதிலும் ஐயமெதுவும் இல்லை. ஈராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த தமிழ்நெஞ்சங்களில் அந்தப் புலவா் குழுவை மீட்டமைக்க வேண்டும் என்ற பேரவா முளைவிட, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் முன்முயற்சியில் 49 தமிழ்ப்புலவா்கள் குழு 1960-களின் தொடக்கத்தில் உருவாயிற்று. பாரதியின் உற்ற நண்பரும் பசுமலைப் பாரதியார் என அழைக்கப் பெற்றவருமான தமிழறிஞர் நாவலா் சு.சோமசுந்தர பாரதியார் தமிழகப்புலவா் குழுத் தலைவா். பெரும் புலவர் அவ்வை துரைசாமி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், அ.சிதம்பரநாதனார், மு.வரதராசனார், க.வெள்ளைவாரணார், மயிலை சிவக்கொழுந்து, தமிழ்ச் சிங்கம் சி.இலக்குவனார் என 49 தமிழ்ப் புலவா்கள் கொண்ட குழு உருவாயிற்று. எந்த மதுரையில் தமிழ்ச்சங்கம் அமா்ந்து தமிழ் வளர்த்தனரோ, அதே மதுரையில் 49 புலவா்கள் கொண்ட தமிழகப் புலவா் குழுவின் தொடக்கவிழாவை நடத்தினார்கள். ’தானி’ என இன்றழைக்கப்படும் ‘ஆட்டோ ரிக்சாக்கள்’ அக்காலத்தில் இல்லை. ரிக்சாக்கள் இருந்தன. ஒவ்வொரு ரிக்சாவிலும் ஒரு தமிழறிஞரை அமரச்செய்து, மதுரையின் நான்கு மாசி வீதிகளிலும் இதே தியாகராசர் கல்லூரி மாணவா்கள் ஊா்வலமாக முழக்கங்களுடன் அழைத்துச் சென்றனர். தமிழகப் புலவர்குழுவுக்கு நாங்கள் செய்த பழைய சிறப்பு நெஞ்சில் முட்டி முட்டி மேலெழுகிறது! பதிவு செய்ய வேண்டும் இதைத் தமிழ் வரலாறு!

1960 - களில் தமிழ்நாட்டில் தமிழ் வளா்க்கும் பல்கலைக்கழகங்கள் மூன்று இருந்தன. கல்லூரிகள் எனச் சொல்ல இயலாது. தமிழ் வளா்ப்பில், தமிழ்த் தொண்டில் அவை பல்கலைக்கழகங்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஓயாத்தமிழ் அலைகள் அடித்துக் கொண்டிருந்த மதுரைத் தியாகராசர் கல்லூரி அவை.

முந்தைய தமிழ்ப்புலவா்கள் போல் தியாகராசர் கல்லூரியில் அவ்வை துரைசாமி, அ.கி.பரந்தாமனார், பேரா.தமிழ்ச்சிங்கம் இலக்குவனார், அ.சிதம்பரநாதனார், ஐயா தமிழண்ணல், அவ்வை நடராசன் என்று இந்த தமிழ் அறிஞா் வரிசையும் எமக்கு ஆசிரியர்களாய் இருந்து தமிழ் வளர்த்தனர்.

2

ஒரு இலக்கியப் படைப்பை எவ்வாறு படைப்பது, எவ்வாறு மதிப்பிடுவது? சமகாலத்தில் இவை தொடர்பான நுட்பமான, வித்தியாசமான வரையறைகள், தர்க்கங்கள் முன்னெழுந்துள்ளன. சமகாலம் எனபதை அவசியமான முன்னொட்டாகக் கொள்ள வேண்டும். உருவாக்கமும் மதிப்பிடுதலும் காலம், வரலாறு, சமுதாய நிலை, சூழல் சார்ந்தது எனினும் அவ்விலக்கிய ஆக்கம் எந்தக்கருத்து மூலத்திலிருந்து உருவாக்கம்கொள்கிறது என்ற கேள்வி முதன்மையானது.

ஒரு பொருள் தரமாக இருக்கிறதா இல்லையா என்ற நிர்ணயத்தை எதிலிருந்து பெறுகிறோம்? அப்பொருளின் பயன்பாடு, வினையாற்றலிலிருந்து தரம் நிச்சயிக்கப்பெறும்; இலக்கியப் படைப்புத்திறன் எனப்படுபவையும் நோக்கு, வினையாற்றல், பயன்களிலிருந்து தீா்மானிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன். கலை, இலக்கியம் என்பன யாவையும் சிந்தனை, உணா்வுகளின் வெளிப்பாடுகள். இதில் பயன், வினையாற்றல் என்ற பருப்பொருட்களுக்கு இடமில்லை என்னும் ஒரு தர்க்கம் வைக்கப்பெறுகிறது. சமூகப் பயன்பாட்டுப் புள்ளியைப் பின்தள்ளி, ரசனைப் பயன்பாடு என்ற ஒன்றை மாத்திரமே முன்னிறுத்துக; அதுவே கலைப் படைப்பின் உயரிய நோக்கம் என அதற்கான விளக்கத்தையும் வைக்கிறார்கள்.

மற்றொரு வகையான தருக்கமும் காணப்படுகிறது. படைப்புத்திறனில் ஒருவரின் தனித்துவமே பிரதானம்; அஃதொன்றே படைப்பை வழிநடத்தும் என்பது பிரதான தர்க்கம்.

இலக்கியப் படைப்பில் ஒருவரின் தனித்துவம் எந்த அளவு பங்காற்றுகிறது? இலக்கியத்துக்கு கருத்து மூலப்பொருள்; கருத்து நிலை அடிப்படையில், ஒருவருடைய தனித்துவம் , திறன் வெளிப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அவருக்கென்று படைப்புலகில் தனி அடையாளம் இருக்கிறது எனத் தொடங்கும் குரல் ஆராதிக்கும் குரலே. அவரது தனித்துவம் எத்தனை உச்சத்திலிருந்தாலும், கருதுகோள் அற்ற உச்சம் வியத்தற்குரியதல்ல!

“யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; எதை எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன் வைக்கும் சவால்” என சக எழுத்தாளாரான ஜெயஸ்ரீ குறிப்பிடுகிறார். இவா் மலையாளத்தின் சிறந்த நவீனப் படைப்புகளை தமிழுக்கு ஆக்கம் செய்பவா்.

வினையாற்றலும் பயன்பாடும் அவசியமற்றவை. அவை இரண்டாம் பட்சமேயெனில் இந்த விருதா வேலையை நாம் ஏன் செய்ய வேண்டும்? பின்னெதற்கு நனைந்து பொதி சுமக்கிற வேலை!
“எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தது
ஒரு குருவி
புயல் வீசும் மரத்திலும் கூடுகட்ட வேண்டும்”
என்கிறார் துரை.குணா (கீழத் தெரான் – கவிதைகள்). வாழ்வதற்காய் முயலும் ஒவ்வொரு நெஞ்சோடும் இக்கவிதை பேசுகிறது, விடுதலை நோக்கிய செயற் குணம் இங்கு ஒவ்வொருத்தருக்கும் கடத்தப்படுகிறது. இதனை சமூக எழுச்சி, போராட்டம் என்பதற்கான பக்கங்களாக மட்டுமே காணாமல் வாழ்வின் அனைத்து அக,புறப் பிரச்சினகளுக்கானதாயும் விரித்டுக் கொண்டுசெல்ல இயலும். இதுதான் ஒருகவிதை அல்லது இலக்கியம் எனப்படுவது, உணர்வு மற்றும் சிந்தனைத் தளத்தின் மீது விளைவிக்கும் வினையாற்றல், பயன்பாட்டுத் தாக்கம்.

3

இந்த அரங்கத்தில் மேடையில் அமா்ந்த போது என் எதிரில் கண்டேன்- மாணவா்களை விட மாணவியா் அதிகம் தெரிந்தனா். “தமிழிலக்கியம் மீதுகொண்ட ஈர்ப்பினால் மாணவியர் அதிகம் சேர்ந்துள்ளனரா?” என விசாரித்த போது, “இல்லை எல்லாத் துறைகளிலும் பெண்களே மிகுதி” என புன்னகையுடன் பதிலளித்தார் முதல்வா்.

பெண்கள் அணி, அணியாக பெருவாரியினராக வெளியுலகில் நடைபோடத் தொடங்கி விட்டார்கள் என்பதை இந்த மிகுதி வெளிப்படுத்துகிறது.
“இறக்கை வெட்டிய கிளிகளாய்
எத்தனை காலம் கூண்டுக்குள்ளே”
என்று பெண்களை நோக்கி கேள்வி எழுப்பினார் இன்குலாப். மண்டியிட்டு முழங்கால் மடிக்கப்பட்டு கைகட்டிக் கிடந்த பெண்டிரை விடுவிக்கத்தான் அவா் கேள்வி வைத்தார்.
“இல்லை இல்லை,
நாங்கள் கிளிகள் இல்லை
இறக்கை வெட்டிய கிளிகள் இல்லை
இறக்கை கட்டிய கிளிகள்”
என்று இந்த அரங்கின் பெருவாரிப் பிரசன்னத்தால் நீங்கள் பதில் தந்திருக்கிறீா்கள்.

இன்குலாப்பின் எழுத்தை எங்கிருந்து, எப்பக்கத்திலிருந்து அணுகுவது, மதிப்பீடு செய்வது?

நிலவும் சமகால வாழ்வியலிலிருந்து மதிப்பீடு செய்யவேண்டும். சமகால வாழ்வியல் என்னவாக இருக்கிறது, என்னத்தை நம் முன் வைக்கிறது?

சுமகால வாழ்வியலில் நாம் நிறைய நிறைய உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளோம். உளவியல் நெருக்கடிகளை உண்டாக்குவது நம்மைச் சுற்றியுள்ள புறப்பிரச்சினைகள் தாம். சமகால வாழ்வியலின் புறப்பிரச்சனைகள் மலையாக நம்மை அழுத்தி அக உளைச்சலைத் தளும்பச் செய்கின்றன. கொந்தளிப்பில்லாத காலத்திலும், நமக்குள் இருக்கும் மனஓட்டமும் சிந்திப்பும் இயங்க மூலமானவை புறத்தில் இயக்கத்திலிருக்கும் அசைவுகள் தாம். மன ஓட்டம் தானாக உருவாகி, தானாக இயங்குவதில்லை. இயக்கப்படுகிறது. ஏதோ எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சல் தானாக உருவாவதில்லை. எரிச்சல் ஊட்டப்படுகிறது. ஒன்றை ஒரு நபரைப் பற்றிய சிந்தனையே எரிச்சலுக்கு மூலம்.

இங்கு ஒரு ‘கார்ப்பரேட் யோகி’ சொல்கிறார்: “நிம்மதி நமக்குள் தான் உள்ளது. அது வெளியுலகில் கிடைக்காது. மகிழ்ச்சி, கவலை இரண்டும் நமக்குள் இருந்து தான் ஏற்படுகிறது. அதை வெளிக் கொணர வேண்டும் என்ற முயற்சியில்லாமல் இருந்துள்ளோம் என்பது தற்போதுதான் புரிகிறது”

அப்படியானால் ‘நெடுவாசல்’ மக்களுக்கு துன்பமும் துயரமும் உள்ளுக்குள்ளிருந்தே உருவாகிற்றா? அவர்களுக்கு மகிழ்ச்சியில்லையே, ஏன்? அந்த மக்கள் தாமாய் வருத்திக் கொண்டதா? அவர்களின் வாழ்வு ஆதாரத்தை வேரோடு பெயர்த்து வீசும் திணிக்கப்பட்ட திட்டங்களால் உண்டாக்கப் பட்டது அச்சோகம். அவ்வாறானால் இந்தத் திட்டங்கள் போட்டவர்கள் யார், எந்த சக்திகள்? இவ்வகைத் துளையிடும் கேள்விகளுக்குள் நமது ’யோகி’ போகமாட்டார். போராடாமல் இருக்க பொள்ளாச்சி மலையடிவாரத்தில் ‘ஈஷா யோகா மையம்’ அமைத்து உட்காரச்சேருங்கள் என்பது அவரது வழி நடத்தல்.

ஒரு நெடுவாசல் அல்ல; தமிழ்நாடெங்கும் நெடுவாசல்கள். காவிரிப் பாசன மக்களின் கண்ணீருக்கும் துக்கத்துக்கும் காரணமென்ன? பாலாறு மறிக்கப்பட்ட விவசாயிகள் தமக்குள்ளிருந்தே துக்கத்தையும் மகிழ்ச்சியையும் வந்தடைந்தனரா? மீத்தேன் திட்டத்தில் டெல்டா விவசாயிகள் வில்லடிக்கு ஆளான பஞ்சுத்துகள்கள் போல் பறக்கிறார்களே, ஏன்? இது திணிக்கப்பட்ட துக்கம்! தானே உருவானதில்லை. இந்தக் கால வாழ்வியலில் தான் இன்குலாப் இருந்தார். நீங்களும் நானும் இருந்தோம். வஞ்சிக்கப்பட்ட வாழ்வு கோபாக்கினியைத் தூண்டுமா? இல்லையா? வஞ்சிக்கப்பட்ட வாழ்வைப் பற்றி வஞ்சித்தவர்களைப் பற்றி – வஞ்சித்தோருக்கு ஒத்துப் போகும் தத்துவ விருத்தியுரைகள் வழங்கும் ஈஷா யோகி பற்றி எழுதாமல் வேறு எதை இன்குலாப் எழுதுவார்?
பிரச்சனைகளின் நெருஞ்சிக்காடு சமகால வாழ்வியல்.
“சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனீரே”
வேதனை, வாதனை, வெக்கரிப்பு, பழிதூற்றல் என அத்தனை நெருஞ்சிக் காட்டின் நடுவில் அனாதரவாய் நிறுத்தி வைத்துவிட்டுப் போய் விட்டாயே என நீர்சொரியும் கைம்பெண்ணின் புலப்பம் இது. இதை இன்றைய சமகால சமுதாயப் பிரச்சனைகளுக்கு நகா்த்துங்கள். பிரச்சனைகளின் நெருஞ்சிபூத்த கானலில் இன்று யார்தான் கைம்பெண் இல்லை? பிரச்னைகளென்னும் வெக்கைநிலத்தில் வெந்து குமைந்து அனாதரவாய் நிற்கும் அனைவரும் கைம்பெண்டிர் அல்லவா?

இந்த அவலப் புலம்பிலினூடாக, இதிலிருந்து மீளும் ஒரு குரல் உள்ளிருக்கக் காணலாம். ஒவ்வொரு இருளுக்குப் பின்னாலும் ஒளிக்கோளம் ஒன்று தோன்றல் இயல்பு போல், ஒவ்வொரு அவலத்துக்குள்ளும் ஒரு மாற்றுக்குரல் வாழுதல் இயல்பு. நொம்பலப்பட்ட இந்தக் கைம்பெண் போலவே இன்னொரு பெண் சொன்னாள். இந்தப்பெண்ணும் நாட்டுப்புற மகள் தான்.
“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே
மயானம் போற வரை தோசை சுட்டவளே”
உழைப்பு, உழைப்பு, உழைப்பே தான் வாழ்க்கை. காலில் வெள்ளெழும்பு தெரியும் வரை, கண்ணில் ஒளித்திரை மங்கும் வரை பெண் உழைக்கிறாள். மண்டையிலுள்ள மயிர் உதிரும் காலம் மட்டும் மாவிடித்தாள்; மயானம் ஏகும் காலம் வரையும் தோசை சுட்டுப் போட்டாள். பெண்ணினத்தின் மேல் சற்றும் ஈவிரக்கமில்லாமல் சாக்குழிக்குள் தள்ளும் காலம் சுரண்டல் நீடிக்கிறது. இந்தச் சொலவடை அல்லது வழக்காறு மாற்றுச் சிந்தனைக் குரல்தான்; இதனுள் தங்கியிருப்பது தன்துயரை ஒரு பெண் வெளிப்படுத்தும் துயர வீரியம். ஆம், துயரத்துக்குள்ளும் ஒரு வீரியம் உண்டு.

இது ஒரு பெண்ணின் பாடு மட்டுமல்ல; காலந்தோறும் கேட்கும் கோடிப் பெண்களின் முறைப்பாடு இது. முந்திய நிலைகளிலிருந்து ஒரு அங்குலமாவது இந்த சமுதாயத்தை உயா்த்த வேண்டுமென்ற சிந்திப்பு நோ்மறையாகவோ, எதிர்மறையாகவோ உள்ளுறையாகக் கிடைக்கவேண்டும். இதுதான் இலக்கியத் திறன். இலக்கியப் பயன்பாடு.

“நமது அழகான பொய்களால் எத்ததனை ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்? ’காம்பு' நீக்கப்படாத அனிச்சப்பூவை என் காதலிக்குச் சூட்டினேன். அந்தோ பாவம் அவள் இடை முறிந்துவிட்டது” என்று வள்ளுவரில் தொடங்கி, ஒடிவது போல் இடையிருக்கும்’ என்று கண்ணதாசன் வரை நாம் எத்தனை காலம் பெண்களை ஏமாற்றிவந்தோம்! தேவைக்கு அவள் அழகைப் பாராட்டுவோம் …. தேவை தீர்ந்தால்? நமது வானொலியைக் கேளுங்கள். மாதத்திற்கு ஒருமுறையேனும் ’பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’ என்று வசைபாடாது இருக்கிறதோ?” என்கிறார்.

மக்களில் பாதியாகிய பெண்பாலினம் ஒடுக்கப்படுவது ஒருதுளியும் இன்குலாபுக்கு உடன்பாடல்ல. கவிப் புனைவு அல்ல, கருத்துநிலையே முதன்மை எனச் சிந்தித்தார். வள்ளுவா் முதல் கண்ணதாசன் வரை எவருக்கும் விமா்சன விலக்களிக்கவில்லை. நவீன ஊடகப் பரப்புரைகளும் பெண்டிருக்கு எதிரான கருத்துநிலையில் செயல்படுகின்றன என்பதை ’குட்டிக்காட்டித்’ தெளிவுபடுத்தியிருப்பார்.

எம்மதமாயினும் அது பெண்களுக்கு அளிக்கும் அவமானத்தை, துயரத்தை எடுத்துப் பேசத் தயங்காதவர். சொந்த வாழ்வுக்குள்ளிருந்து எடுத்துரைக்கிறார். “எங்கள் வீட்டில் என் மூத்த அக்காள் மிக அருமையாகப் பாடுவார். நான் கேட்ட ஒரு சில அபூர்வமான குரல்களில் அவா் குரலும் ஒன்று. அவா் குரலைப் பதிவு செய்யாமல் போனது எங்கள் துரதிர்ஷ்டம். இளமையிலேயே அவா் இறந்து விட்டார். அவர் குரல் இனிமையானது. அவா் வாழ்ந்த நாட்களிலும் அந்தக் குரலை மதித்துப் பாராட்டும் பண்பு எங்களில் யாருக்கும் இருந்ததில்லை. அவா் ஒரு முஸ்லிம் பெண். அவா் முகத்தை மட்டுமல்ல, அவா் குரலையும் எந்த ஆடவனும் கவனித்துவிடக் கூடாது.

கூண்டில் அடைபட்ட குயில்போல வீட்டுக்குள்ளேயே அந்த வீணை அதிரும். அதிலும் பக்திப் பாடல்களாக அதிரும்.

எந்த வெற்றிடத்தையும் காற்று நிரப்பும். எந்த ஒலியையும் காற்று எடுத்துச் செல்லும். எங்கள் வீட்டிற்குள் காற்று வரும்; என் சகோதரியின் இசையுடன் காற்று வெளியேறும். காற்றைத் தடுக்க முடியாது. காற்று பா்தா போட்டுக்கொள்ளாது. அது வீட்டைத் தாண்டும்; தெருவில் நடமாடும்; செவிகளைத் தொடும்; பக்கத்துவீட்டுக் குழந்தையைத் தாலாட்டும்; எதிர் வீட்டில் நோய்வாய்பட்டுக் கிடக்கும் கிழவிக்கு இதமூட்டும்; அதற்கு மேலும் காற்று செல்லும். அதனுடன் சோ்ந்து கடைசி வரை செல்வதற்கு என் சசோதரியின் குரலுக்குச் சக்தியில்லை.”

இன்குலாப் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவா்; எனினும் அவா் இஸ்லாமியராக ஒரு போதும் தன்னைக் கருதியதுமில்லை. வாழ்ந்தவருமில்லை.

மூத்த மகன் பெயா் செல்வன். செல்வன் என்றிவ்வாறான தமிழ்ப் பெயரை இஸ்லாமியப் பாரம்பரியத்தில் காண இயலுமா? விடை, அவரைப் பொறுத்தவரை எளிதானது. மனிதம் என்றொரு பாடலை எப்போதும் இசைப்பது அவருக்குப் பிடித்தது.
“சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
இதுதான் அவா் பதில்.

4

சொல்லும் செயலும் முரண்படா வாழ்வு அவருக்குரியது. சிறுமை கண்டு பொங்கும் எழுத்து அவா் வசப்பட்டிருந்தபோலவே முரண்களில்லா சுயவாழ்வுக்கும் வசப்பட்டிருந்தார். இரண்டையும் தனித்தனியே நிறுத்தியவரில்லை அவா்.

1984 டிசம்பா் 3 ஆம் நாள் இரவு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு ஆலை விசவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. விசவாயு தாக்கிய இரண்டு நாளில் 2500 போ் மாண்டு போயினர். இதுவரை 15000-க்கு மேற்பட்டோர் பிணமாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கண்பார்வை இழந்தனா். இலட்சக்கணக்கான போ் இன்னமும் நடைப்பிணமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

போபால் விஷவாயுக்கு மூலமான யூனியன் கார்பைடு தொழிற்சாலை ஒரு அமெரிக்க நிறுவனம். யூனியன் கார்பைடு நிறுவனத்தையும் உடந்தையாயச் செயல்படும் அரசையும் கண்டித்து 1985-இல் சுற்றுச்சூழல் ஆர்வலா், சமூகச் செயற்பாட்டாளா், மருத்தவா் டொமினிக் சாமிநாதனும் கவிஞா் இன்குலாப்பும் இணைந்து குழந்தைகளைத் திரட்டி அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்த திட்டமிடப்பட்டது.

கவிஞா் இன்குலாப் தனது மகன்கள் செல்வம், இன்குலாப், மகள் ஆமீனாவுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். நான் என்னுடைய மகன் சூரியதீபனுடன் சென்றேன். கவிஞர் கனல் மைந்தன் தன் குழந்தைகளைக் கூட்டி வந்திருந்தார். அமெரிக்க தூதரகத்திற்கு எதிரே நின்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. அனைவரும் குழந்தைகளுடன் சாலையில் இறங்கிப் போராடினா். அப்போது இன்குலாப் மகள் ஆமினாவுக்கு மூன்று வயது. கீச்சுக் குரலில் அந்தச் சின்ன சிறுகுஞ்சு எதிர்ப்புக் குரல் எழுப்ப, கூடிநின்ற குழந்தைகள் முழக்கமிட்டன.
“வானம் வேண்டும்
பூமி வேண்டும் நாங்கள் வாழ  தூய்மையான
காற்று வேண்டும்”
குழந்தை ஆமினா ஒலிக்க மற்ற குழந்தைகளும் தடையை மீறி முன்னேறி முழங்க ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றுபோனது. அன்று தொடங்கிய சுற்றுக்சூழல் கேடு எதிர்ப்புக் குரல் இன்குலாப்பிடம் அணு உலை எதிர்ப்புப் போராட்டமாக தொடர்ந்தது. இன்குலாபுடையதாக மட்டுமல்ல, அவா் குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலில் சூழல் பாதுகாப்பு இன்றளவும் தொடருகிறது.

இந்த சமுதாயத்தை நோக்கி அவா் முன்வைத்த கேள்விகள் இன்னும் பதிலளிக்கப் படாமலே உள்ளன. பதிலளிக்கும் முயற்சியில் சிறு எட்டுகூட இந்தச் சமுதாயமும் அரசும் முன்னெடுத்து வைக்கவில்லை.
“எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது
எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?”
தலித் விடுதலை நோக்கிய இக்கேள்விக்கு பதிலளிக்கும் செயல்வடிவு எதுவும் இதுகாலமும் உருக்கொள்ளக் காணோம். ஒரு கேள்வி அல்லது விமா்சனம், பதிலளிக்கப்படாமல் உயிர் வாழுகிறதெனில், அதன் ஆணிவேர் ஆழமானது. பதிலளிப்பைக் காணுகிற நாள் இந்தப் பழைய சமுதாயம் அடிமட்டமாய் தகா்ந்து தூள் தூளாய் உதிர்ந்து போகும் நாளாக அமையும். அது இன்குலாப் என்ற புரட்சிக் கவி காணவிழைந்த விடியல்!

நண்பா்களே, இன்குலாப்பும் நாங்களும் பயின்று வளா்ந்த கல்லூரியில் புலவா் விழாவில் இந்தத் தொல்காப்பியா் அரங்கில் உரைநிகழ்த்தும் வாய்ப்பை வழங்கியதற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்வுக்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வா் முனைவா் எயினி அவா்களுக்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்வேன். சிறப்பானதொரு வரவேற்புரையாற்றிய தமிழ்த்துறைத் தலைவா் நண்பா் முனைவா் இ.பேச்சிமுத்து அவா்களுக்கும், நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கிய முனைவா் இரா.தெய்வநாதன், நன்றியுரை வழங்கிய முனைவா் சீ.சரவண ஜோதி, இந்நிகழ்வில் நான் பங்கேற்க ’அகரம்‘ இட்ட விரிவுரையாளர் முத்துக்குமார் ஆகிய அனைவருக்கும் இதயத்தின் நன்றியலைகளைக் காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்