எதிர் முகங்களில் தகதகக்கும் சூரியன்கள்

விதைமுளைப்பு முதலில் தன்மேலுள்ள கூட்டை உடைக்கும். அடுத்த நிகழ்வாய் தன்னைச் சூழ்ந்துள்ள காற்று, ஒளி, வெப்பம், ஈரம் என உராய்ந்து, வெளியுலகின் பருவநிலையையைத் தனக்காக்கி வளரும்: அதுபோல் தன்னைச் சூழ இயங்கும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒளி, இருள், வெப்பம், ஈரம் அனைத்தின் ஊடான உராய்வில் ஒரு படைப்பாளி உருவாகி வளருவான். அவன் என்னவகையில் வினையாற்றுகிறான் என்பது இச்சமுதாயத்துக்குள் படைப்பாளி கொள்ளும் உராய்வில் காட்சிப்படுகிறது. சமுதாய அக்கறையின் ஆழம், உயரம், விரிவுஅனைத்தும்மூலமாகிறது.

தமிழிலக்கியப்படைப்புலகம் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உயரம், ஆழம்,பரப்பு என அதன் வீரியங்களை தன்னாய்வு செய்து புதியபுதிய தளங்களைப் பெருக்கி வருகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளும் அதுவரை பேசப்படாப் பொருளைப் பேசிடும் ஆண்டுகளாக முளைக்கின்றன.

18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் உலகத்தை முதலாளித்துவம் என்னும் ஒரு பேய் பிடித்து ஆட்டத்தொடங்கியது: இந்தப் பேய் விரட்ட, மார்க்ஸ் என்ற சமுதாய அறிவியலாளர் தத்துவவியலாளர் பிறந்து இது இருநூறாம்ஆண்டு.

சமுதாய விஞ்ஞானத்தின் அடிப்படையில் முதலாளியத்துக்கு எதிரான கருத்தியல்களில், காலனி ஆதிக்க விடுதலைக் கருத்தியல் முதலாவதாய் வந்தது: காலனியாதிக்கத்தைச் சிதைக்காமல்,மனித விடுதலை சாத்தியமில்லை என்பது மக்களின் பிரதான முரணாகியது. காலனியாதிக்கத்தில் கட்டுண்ட நாடுகள் – அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறப்போராடும் முனைப்புக் கொள்கின்றன.

பிரித்தானியாவின் பிடியிலிருந்து விடுபட விடுதலைக் கருத்தியலை இந்தியா தனதாய்க் கொண்ட போது, தமிழ், மலையாள இலக்கியத்தளங்களில் அக்கருத்துக்கள் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. குறிப்பாக வங்க மொழி விடுதலைப் பொறியை தனது எழுத்துக்களில், கலைவடிவத்தில் முதன்முதலாய் ஏந்தி வந்தது. தமிழிலும் மலையாளத்திலும் நவீன இலக்கிய வடிவங்களாகப் புதினம், சிறுகதைகள், கவிதைகள் என விடுதலைப்போர் உக்கிரம்கொள்ள உரமிட்ட போக்கினைக் காணமுடியும்.

விடுதலைக் கருத்தியல் முழுமை கொள்வது வேற்று நாட்டவரிடமிருந்து குடுமியை மீட்டெடுக்கிற அரசியல் விடியல் மட்டுமேயல்ல, பொருளாதார, பண்பாட்டு, சமூக விடியல்களும் அதனுள் உள்ளடக்கமானவை. பொருளாதார, பண்பாட்டு, சமூகவிடியல் அற்ற அரசியல் விடுதலை அர்த்தமற்றுப் போய்விடுவன. அரசியல் தள விடுதலையுடன் பொருளாதார, பண்பாட்டு, சமூகத் தளங்களில் உருக்கொள்ளும் விடியல் சுயமரியாதை அடையாளம் கொள்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக் கொடுக்கிற ஆளுமைகளாக, தென்கோடித் தமிழகத்தில்   பெரியாரும், கேரளத்தில் நாராயணகுருவும் வருகின்றனர்: ஒவ்வொரு மனித உயிரியும் பாலினம், மதம், சாதிய வேலிகள் களையப்பட்டுச் சுயமரியாதையுடன் இயங்குதல் என்ற கோட்பாட்டின் ஆணிவேரிலிருந்து பெண் விடுதலைக் கருத்தியல் உருவாகி வலுப்பெறத் தொடங்கியது: பெண்விடுதலைக் கருத்து பிற பூமிகளில் எவ்வாறு விளக்கப்படினும், வர்ணாசிரம சமுதாயமான இந்தியச் சமுதாயத்துள்ளிருந்து, சுயமரியாதையுடன் இயங்குதல் என்ற கோணத்தில் பெண்ணின் குரலைக் கணிக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக கடந்த நூற்றாண்டின் மத்தியிலிருந்து நடப்புவரையான ஆண்டுகளில் – ஆண் அதிகாரமையத்தைக் கலைக்கும் பெண்விடுதலை: சாதி அதிகாரமையத்தைச் சிதைக்கும் தாழ்த்தப்பட்டவர் விடுதலை: உலக அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை-எனப் பேசாப் பொருளைப் பேசும்படைப்புகள் மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் வெளிப்பட்டு வருகின்றன.

1950,60-களில் கேரளத்தில் மார்க்சிய இயக்கம் வலுக்கொண்டிருந்தது: மொத்த கேரளச் சமூகமும் புதிய தாக்கத்தில் புரண்டது. அக்காலகட்ட மார்க்சியக் கருத்தியலின் சூட்டில் ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களும் எழுதுகோல் ஏந்தினர். லலிதாம்பிகா அந்தர்ஜனம் முதல் வைக்கம் முகமது பஷீர், பொன் குன்னம்வர்க்கி, பாரப்புரத்து, காரூர் நீலகண்டப்பிள்ளை, தகழி, தோப்பில் பாஸி, எம்.டி.வி – போன்றவர்களின் படைப்புக்கள் பலப்பல பேசப்படா மக்களின் விடுதலையை, அக உணர்வுகளின் கொந்தளிப்பை வெளிக்கொண்டுவந்தன. இவர்களில் சிலர் பொதுவுடமை இயக்கத்தில் நிலைகொண்டவராகவும், சிலர் இயக்கத்தில் இணைவு கொள்ளாதிருப்பினும் புறத்தில் இயங்கிய படைப்பாளிகளாகவும் விளங்கினர். மக்கள் விடுதலை என்ற மார்க்சியக் கோட்பாடு எல்லோருக்கும் தாக்கமாக ஆகியிருந்தது. இவ்வகையில் 80கள், 90களில் தொடங்கிய எழுத்தாளர்கள் இன்றும் தங்களைச் சமகால உக்கிரத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள இலக்கியத்தில் 2000-க்குப் பிறகு இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ஹரீஷ் – மதவாதக் கொலைமிரட்டலுக்கு ஆளாகியிருக்கும் எழுத்தாளர்: 1975-இல் பிறந்த இவருக்கு 43 வயது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றவர்: இரு சிறுகதைத் தொகுப்புகள்: ஒரு புதினம். இதுவரை சிறுகதைகளை மட்டும் எழுதி வந்த ஹரீஷின் முதல் நாவல் ‘மீசை’ மாத்ருபூமி வார இதழில் வெளிவரத் தொடங்கியது. நான்கு வாரங்கள் வெளிவந்த நாவல், நாவலாசிரியரே அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதான அறிவிப்புடன் நிறுத்தப் பெறுகிறது. இந்துத்துவமாக, இஸ்லாமியமாக, கிறித்துவமாக எதுவாக இருப்பினும் மத அடிப்படைவாதம் சுதந்திரமான எழுத்துக்களைத் தடைசெய்கிறது என்னும் உண்மை இன்று அனைவராலும் எண்ணிப் பாரக்கப்படுகிறது.

மலையாளத்தின் சமகால நவீனத்துவப் படைப்புகளின் எழுச்சிக் கானமாக உருக்கொண்டவர்சந்தோஷ் ஏச்சிக்கானம். “ஒருவன்மீது கலை அல்லது இலக்கியம் படியும் போது அவனுள் அதுவரையிருக்கும் எல்லாத் துர்நாற்றமும் அகன்று போகிறது” என்ற மேலான வாசகத்துக்குச் சொந்தக்காரர். இவர் எழுதிய ‘பிரியாணி’ சிறுகதை கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் விகடனில் வெளிவந்து, தமிழ் வாசகவட்டத்தை அதிர்ச்சியுறச் செய்த கதையானது. டாம்பீகமாக, தடபுடலாக நடத்தப்படும் ஒரு திருமணம் பற்றிய சித்தரிப்பில், ஏழை உழைப்பாளி படும்பாடு பற்றியது கதை.

பிரியாணி கதையை இந்த வகையாக அவர் விளக்கினார்.

“எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும்”.

கோபால்யாதவ் – பீஹாரின் ‘லால்’ மத்தியப் பகுதியிலிருந்து கூட்டி வரப்பட்ட ஒரு தொழிலாளி: ஒரு ஹாஜியாரின் திருமண விருந்தில் மிச்சம் மீதியாகிப் போன பிரியாணியைக் தென்னந்தோப்பில் குழிவெட்டிப் புதைக்கும் வெட்டியான் வேலைக்கு அழைக்கப்படுகிறான். எங்கிருந்தோ வந்த நான்கு பேர் ஒரு நீல நிற பேரலைத் தாங்கிப் பிடித்து உருட்டியபடி குழியில் கவிழ்த்தனர். எலும்புத் துண்டுகளோடு கூடிய பிரியாணி சிறுகுன்றுபோல குழிக்குள் கொட்டப்பட்டது.

கோபால் யாதவின் இதயத்துடிப்பு அநியாயத்திற்கு எகிறியது.

ஒரு மண் குவியலுக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதுபோல, அவன் தலையுயர்த்திப் பார்த்தபோது மீண்டும் ஒரு பாரல் வந்தது. எச்சில்பருக்கைகளால் குழிநிறைந்தது. அதன் பிறகு வந்ததையெல்லாம் அவன் கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. கடைசியிலும் கடைசியாக தம் போட்டுப் பிரிக்கப்படாத ஒரு அண்டா பிரியாணியும் குழிக்குள் வந்து விழுந்தது.

“இப்ப இத மிதிச்சி லெவல் பண்ணிடு பாய்” சினான் சொன்னான்.

எதையோ நினைத்துக்கொண்டு குழியையே பார்த்துக்கொண்டு நின்றான் கோபால்.

“மிதிச்சு அழுத்து பாய், மணி பதினொன்னு ஆச்சு”

மிதித்தான். அதன் நெஞ்சில் தன் பலங்கொண்ட மட்டும் மிதித்தான். முதலில் ஓர் அழுகைச் சத்தமெழுந்தது. பின் அது முனுகலானது. இறுதியில் அதுவுமற்ற வெற்றிடமானது.

“இப்ப மண்ணப் போட்டு மூடிடு பாய்”

வியர்த்து வழியும் கால் பாதங்களில் நெய்யும் மசாலாவுமாக நிற்கிற கோபால் யாதவைப் பார்த்து, தன்னோடு அணைத்து நிற்க வைத்தபடி ஒரு செல்பி எடுத்துக் கொண்டே சினான் கேட்டான்.

“பாயிக்கு எத்தன புள்ளைங்க?”

“ஒரே மக”

“என்ன பேரு?”

“பாசுமதி”

“நிக்காஹ் முடிஞ்சிடிச்சா?”

“இல்ல”

அதைக் கேட்டபடியே மொபைலைத் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கோபால் யாதவை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டே“படிக்கிறாளா?” என்றான்.

“இல்ல”

“அப்பறம்?”

“செத்துட்டா”

“செத்துட்டாளா?”

பெரிய இரக்கமொன்றும் கசியவில்லையெனினும், சினானை அது லேசாகத் தளர்த்தியது.

“எப்படி?”

“பசியில”

கோபால் யாதவ் இன்னுமொரு மண்வெட்டி மண்ணெடுத்து பாசுமதி பிரியாணிக் குவியல் மேல் போட்டான்.

பிறகு தன் மூச்சை ஆழமாக உள்ளுக்கிழுத்தான்.

இந்தக் கடைசிப்பக்கம் - தேசத்தில் கோடிக்கணக்கில் பசியால் அழுபவர்களின் ஒருசோக இதிகாசத்தின் பக்கங்களை விரிக்கின்றன.

வெளிநாட்டுச் சம்பாத்தியத்தில், மூன்று மனைவிகளைக் கொண்டிருக்கிற ‘கலந்தன் ஹாஜியார்’ பேரனின் திருமண வரவேற்பில் நடைபெற்ற பிரியாணி விருந்தைப் பற்றிய கதை இது. எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து எழுந்த கொடு நெருப்பை, இந்துத்துவவாதிகள் எக்காளமாய்ப் பார்த்தார்கள்: அவர்களின் இந்த எதிர்ப்பின் பின்னால் ஒரு உள்நோக்கம் கூடுகட்டியிருக்கிறது ’தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் நோயும்‘ என்பதுபோல் வரவேற்பும் உள்த் தேங்கியிருந்தது. அடிப்படை மதவாதிகள் ஒன்று சேர்கிற புள்ளி இது. இவர்கள் தான் ஹரீசின் மீசை நாவலைத் தடைசெய்ய எரிமலையாய்ப் பொங்கி எழுந்தவர்கள்: ‘மீசை’ மழிக்கப்பட்டதும் பொங்குதல் அடங்கியது. “ஒருத்தனிடம் நம் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்துச் சொல்லும்போது, கேட்பவன் அதே அளவில்லையெனினும், அப்படிச் சில வேதனைகளைக் கடந்தவனாகவும் இருந்தாகவேண்டும்” என்று கதையில் சொல்கிற இடத்தைப்போல் வாசகர்களைக் கருதிப் பகிர்ந்துகொள்கிறார் சந்தோஷ் ஏச்சிக்கானம்.

பால் சர்க்காரியா மூத்த தலைமுறை எழுத்தாளராகக் கருதப்பட்டபோதும், சமகாலப் பிரச்சனையின் சுரங்களைத் தவறவிடாத ஒரு சமூக இசைஞானி. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், மனிதனாய் நின்று கணித்தவர். உலக நதிநீர்ப் பங்கீட்டு விதிகளின் படி – தமிழருக்கான நியாயத்தின் பக்கம் நின்றார்: அதனாலேயே கேரளர்களின் ‘சென்டிமென்ட்’ கோபத்திற்கு ஆளானார்.

சர்க்காரியாவின் ‘தேன்’ சிறுகதை: மலையாளத்தில் மரபுச் சிந்தனையாளர்களின் நடைமுறையை ஓர் உலுக்கு உலுக்கியது.

“இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என உங்களுக்குத் தோன்றினாலும் கூட, இது ஒரு உண்மைக் கதையின் விவரிப்பும் சமீப நாட்களில் உலகெங்கும் நடக்கிறதுமான ஒன்றுதான்” என்னும் சொக்குப்பொடி வாசகத்துடன் தொடங்குகிறது.

தேனடையையே தேடிக் கொண்டிருக்கும் ஒரு கரடி மானுடப் பெண்ணை மணம் செய்ய விரும்புகிறது. இந்தப் பெண்ணும் மனிதப் பிறவி அல்லாத ஒரு இனத்தில் திருமணம் செய்து வாழும் வாழ்க்கையை விரும்புகிறாள். பெற்றோர் முதலில் எதிர்ப்புக் காட்டினாலும் பின்னர் ஒப்புதல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் ஊரார் எதிர்க்கிறார்கள்.ஊராரின் எதிர்ப்பை மீறி கரடியை மணம் செய்துகொண்டு காட்டுக்குப் போய் குடும்பம் நடத்துகிறாள்.

ஒருமுறை பிறந்தகம் திரும்பிய போது, தாய் விசாரிக்கிறாள்.

“ஏண்டி, உன் வீட்டுக்காரன் எப்படி இருக்காரு? உன்னை எப்படிப் பாத்துக்கிறாரு?”

மகள் நிதானமாகச் சொன்னாள்.

“அம்மா, மகத்துவம்!இத்தனை தூரம் நான் எதிர்பார்க்கல.குடியில்ல. ஒரு பீடி சிகரெட் இல்ல, வாய் நாத்தமில்ல, அரசியல் இல்ல, இன்னொரு பொண்ணைத் தேடி போறதில்ல, சமையற்கட்டை மொத்தமாகவே அவர் பாத்துக்கிறார்.”

“அவர் சமையோலோட சுவையை என்னால வார்த்தைகளால விவரிக்க முடியாது. தண்ணீர் கொண்டு வருவார், விறகு வெட்டுவார், எனக்குப் பூப்பறித்து எடுத்து வருவார். துணி துவைக்க ஒரு நாளும் நான் கஷ்டப்பட்டதில்லை. காரணம் அவர் துணி உடுத்துறதில்லை. தேன் நெறஞ்சு கெடக்கும் என் வீடு. கூடை கூடையாய் பழங்கள் கொட்டிக் கெடக்குது. கரையானும் கூட. அதைச் சாப்பிடப் பழகிக்கிட்டா அப்பறம் வேற எதையும் சாப்பிடத் தோணாது நமக்கு. துவையலுக்குக் கரையானை விட இன்னொன்னை யோசிக்கவே முடியல எனக்கு. இதவிட முக்கியம், குழந்தைக்குப் பாலூட்டறதைத் தவிர வேறெதையும் நான் செய்யத் தேவையில்ல. எல்லாம் அவரே பார்த்துக்குவார்.”

“அப்புறம் ரொம்ப முக்கியம் அவர் என்னைச் சந்தேகப்பட்டதேயில்லை. குளிச்சு முடிச்சு சிங்காரிச்சிக்கிட்டு அவர் வர்றதப் பாத்துக் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. அவருக்கும் குளிக்கிறதுலயும் பெரிய விருப்பமேதுமில்ல.”

மகள் சொல்லிக் கொண்டே போனாள்.

“படுக்கையில்?”

“அதுல அவர் பெரிய ஜாலக்காரன், ஒருநாள் கூட என்ன சும்மா விட்டதில்ல”

அவிழ்ந்திருந்த தன் முடியைக் கட்டிக் கொண்டே, சமையற்கட்டிலிருந்து யாராலும் அவதானித்துவிட முடியாததொரு மனநிலையில், அம்மா நடைக்கு வந்தாள்.

ஏ.ஸி.சேரில் சாய்ந்திருந்த தன் கணவனை தீ ஜீவாலை மாதிரியாயிருந்த கண்களோடு அம்மா ஒரு பார்வை பார்த்தாள். அப்படியே திரும்பி மகளைப் பார்த்து,

“ஏண்டி, எங்கயாவது ஒரு கரடி தேனடைகளோடு உட்கார்ந்திருக்கிறதப் பாத்தா, உடனே எங்கிட்டச் சொல்லு, மறந்துடாத!”

உச்சத்தில் இருப்பதாய்க் கருதிக்கொள்ளும் ஆணதிகார உச்சந்தலையில் பலமான அடிகொடுத்து இந்த வாசகம் வெளிப்படுகிறது. பல வருடங்களாக கணவன் – மனைவி பந்தத்திலிருந்தாலும் ஆண்களிடம் மிஞ்சுவது அதிகாரமே. அதிகாரச் சுவையில்லாத, அதுவும் பணிவு, கட்டுப்பட்டுப்பாடு, புறக்கணித்தல் என்னும் தேன் உறிஞ்சாத எந்த ஆணும் இல்லை.அறிவார்த்தமாய் சிந்திப்பவர்களும் கூட இத்தகையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் மேதமையை வெளிப்படுத்த இணைந்து செல்லும் ஒரு பெண் தேவைப்படுகிறாள். மனிதக் கரடிகள் இப்படி இருக்கையில், காட்டில் வாழும் உண்மையான கரடி இந்த ஒடுக்குமுறையை உணர்த்திச் செல்கிறது.

“நிச்சயமா அம்மா, நான் என் பிரியப்பட்ட அம்மாவுக்காக என் கண்களை எப்போதும் திறந்து வச்சுக்கிட்டே யிருப்பேன்.”

மகள் தாய்க்குப் பதில் சொல்கிறாள்.

பவா செல்லத்துரையின் மொழியாக்கம் இன்னும் கூடுதலான யதார்த்தங்களை நம்முன் செதுக்கிப் பரப்புகிறது.

அன்றாட வாழ்வில் பெண்ணுக்கு இந்தக் கதிதான், இது உண்மைதான் என உணர்த்துகிறது தமிழில் வெளியான சுரேஷ் பிரதீப் “பரிசுப் பொருள்” கதை.

“பாண்டவையாற்றைக் குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது: மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கியபோது, புறங்கையைக் கண்களுக்கு நேரே நீட்டிக்கொண்டு நின்று, பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையைச் சரிப்படுத்த முயன்றாள். ஓரக்கண் சற்றுத்தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளைக் காட்டியது; சென்னையிலிருந்து வரும் சிவக்குமார் தான்: அவனும் அவளும் பிரபாகரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.

அவள் ஏதோ அவனிடம் சொல்ல முயன்றாள்: “எனக்கு ஏழரை மணிக்கு, பஸ்” என்று அவன் போக எத்தனித்தபோது,” நானும் அதிலதான் போகனும்” என்று சொன்னாள் மோனிகா. “பஸ்ல பேச முடியாது.இப்பவே சொல்லுங்க” என்றான். தயங்கியபடியே “பிரபாகரனைப் பாத்தா இதைக் கொடுக்கணும்” எனக் கைப்பியிலிருந்து வெல்வெட் உறையில் மூடப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொடுத்தாள் மோனிகா.

வாங்கிக்கொண்டு “பிரபாகரன் நம்பர் எங்கிட்ட இருக்கு, நா பேசிக்கிறேன்” என்று விலகத் தொடங்கினான் சிவகுமார்.

“எங்கிட்டவெல்லாம் பேசினா யாரும் தப்பாவெல்லாம் நெனைக்கமாட்டாங்க” என்றாள் மோனிகா. ஆம் அப்படித்தான்.

“அந்தப் பொண்ணு, அவ்வளவு சரியில்லங்க” என்ற சங்கட இளிப்புகள்.

“அந்த வீட்டுப்பையனா?” போன்ற இழுப்புகள்.

“அந்த வீடு வேணாமே” என்ற அறிவுரைகள்.

மோனிகா, தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆரம்பநிலைச் செவிலி. ஒரு நாளைக்கு நான்கிலிருந்து எட்டுவரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் அவள் பணிபுரியும் வார்டுக்குக் கொண்டுவரப்படுவார்கள். அவளது சிக்கல் நோயாளியைத் தூக்கிப்படுக்கவைக்க, எழுந்து நடக்க வைக்க என இணைந்து உதவும்போது, பலமுறை ஆண்களின் கை அவளைத் தடவியிருக்கிறது. அவளுடைய பிரச்சினை நோயாளிகளை விட, அவர்களைக் கவனித்துக் கொள்ள வரும் ஆண்கள் தான். மருத்துவமனைக்கு அணிந்து செல்லும் உடைகளைத் தீட்டுத்துணி போல, வீட்டுக்கு வெளியே துவைத்துக் காயப் போடுவாள்.

பிரபாகரன் சென்னைக்கு ஓடிப்போய் இரண்டு ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறான்: அவளும் டி.எம்.எல்.டி. படித்துவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும், முதலில் அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடியது: எப்படி நடந்தது என்று அறியமுடியாமல் கண்ணீர் அழுகை என்று அந்தச் சந்திப்பு “புணர்வில் முடிந்தது”.

அடுத்தவருடம் இன்னும் மெருகேறியவனாக அவன் ஊருக்கு வந்தான்: இம்முறை அவளுடன் இருப்பதற்கான சந்தர்ப்பங்களை மிகத் தெளிவாக அவனே உருவாக்கினான். அவனை ஏற்றுக்கொண்டாள். இவ்வாறு ஆண்டுகளாய்த் தொடர்ந்த உறவில், உடற்சோர்வு ஏற்படத் தொடங்கிய நாளில், தலைமை மருத்துவரிடம் சென்றபோது, தெளிவாக உறுதிப்பட்டது மோனிகாவுக்கு பி.ஐ.டி.(பால்வினை நோய்).

தனக்கு பி.டி.ஐ இருப்பதை மேனிகா தொலைபேசியில் தெரிவித்தபோது அவன் எதுவுமே சொல்லவில்லை. “அது பரவுமா” என்று கேட்டான்.

பெண் மருத்துவர், அன்றே திருச்சிக்குக் கூட்டிச் சென்று அறுவைச் சிகிச்சையில் கர்ப்பப்பை நீக்கப்பட்டு, அது ஒரு ‘பார்மலினில்’ போடப்பட்டு, மோனிகாவிடம் தருகிறார்: பெண் மருத்துவர் தன்னிடம் அளித்த தனது கருப்பையை ஒரு வெல்வெட் உறையில் போட்டு மூடிக்கொண்டு வந்தாள்: வந்தபோதுதான், சிவாவைச் சந்தித்தாள். பிரபாகரனிடம் கொடுக்கும் வரை, “பார்சலை, தயவு செஞ்சு திறந்திடாத சிவா” எனக் கேட்டுக் கொள்கிற இடத்தில் கதை முடிகிறது.

தனக்கு நோய் கொடுத்தவன் யாரோ, அவனிடம் கருப்பையுள்ள உறையைச் சேர்க்கும்படி, கொடுத்தனுப்புகிறாள்: அதுதான் “பரிசுப்பொருள்”.

இலக்கியஉலகில் அறிமுக அடிவைப்பில் இருந்தாலும், எடுத்துரைப்பில் உச்சத்தில் நிற்கிறார் சுரேஷ்பிரதீப்.பெண்ணை மனுசியாகக் கருதாமல், உடலாகப் பார்க்கும் மொத்த ஆண் சமூகத்தின் முகமும் அசிங்கமாகிட அப்புகிறது இந்தப் ‘பரிசுப்பொருள்’

தலித்திய எழுத்தாளர் அபிமானியின் ஒரு கதை - “பாம்பு”

வீட்டை விட்டு வெளியேவந்து கொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது ‘படக்’கென்று தெரிந்தது; பளிச்சென ஒளிர்ந்தது; ‘பட்’டென மறைந்துவிட்டிருந்தது.

“ஏலே, பாம்பு, பாம்பு, பாம்புலே”

வீட்டிக்குள் அடைந்து கிடந்த சனங்கள், திறந்துவிடப்பட்ட கிடை ஆடுகளாய் ‘மள மள’வெனத் தெருவுக்கு வந்தார்கள்; ஏகதேசம் இரவு எட்டு மணி ஆகியிருக்கும்.கொலை பாதகம் நிகழ்ந்துவிட்டது கெணக்காய், திவாகரன் குரல் எடுத்துச் சத்தம் போட்டார்.

“ஏலே. அந்தா, ஓடுதலே பாம்பு”

பாம்பு அந்த வீட்டின் முன்னறைக்குள் புகுந்திருந்ததைப் பார்த்திருந்தார். அவரின் சத்தம் கேட்டதும் அந்த வீட்டுக்காரியான மரகதம், தாட்டியமான தேகத்தை அனாயாசமாய்த் தூக்கிக்கொண்டு, அலறியடித்து வெளியே ஓடிவந்தாள்: முன்னறையில் உட்கார்ந்து இரவுத் தீவனைத்தை அரைப்பதில் மும்மரமாக இருந்திருக்க வேண்டும்.

“நா பாக்லையேப்பா, எம்பாவத்துலயா வந்து விழணும்.நாசமத்துப் போவான் பாம்பு. எனக்கு இப்ப என்ன செய்யணுமின்னு தெரியலையே” - அழுதாள்.

“செத்தம் வெளியே நில்லுங்க. பாம்ப அடிச்சப் பொறவு உள்ள வந்தாப் போதும்.”

துப்பாக்கி ஏந்திய வீரர்களைப் போல், கையில் வைத்திருந்த குச்சிகளுடன் வீட்டுக்குள் தேடிப் புகுந்தார்கள்.

சுவர் அருகில் விஸ்தாரமாய் விரிந்திருந்த சோபாசெட்டுகள், டீப்பாய்கள், பூந்தொட்டி, மின்விசிறி, ஷோகேஸ் பொம்மைகள், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, தங்க நிறத்தில், பெரிய குத்து விளக்கு, சாமிபிராணிக் கரண்டி – என ஒவ்வொன்றாய் இவர்கள் பார்வைக்கு வந்தன; தேடுதலுக்குள் இவை அனைத்தும் வந்து கடந்தன.

அது படுக்கை அறை. பச்சைப்போர்வைக்குள் பதுங்கிக் கிடந்தது கட்டில்; மூன்று ஆட்கள் படுக்கக்கூடிய அகலம். நான்கு ஐந்து தலையணைகள், எதிர்த்தாப்பில் மயில் தோகை விரித்து நின்றிருந்த பச்சை நிற இரும்பு பீரோ.

“சாதாரண நாள்ல நாமெல்லாம் இந்த வூட்டுக்குள்ளாற வந்திற முடியுமா?” சொல்லிக்கொண்டார்கள்.அத்தாம் பெரிய கட்டிலில் படுத்துப் புரண்டு கொள்கிறார்கள்.

“அயந்து மறந்துகூட இந்த வூட்டு வாசல்ல நம்ம காலு பட்டுரக்கூடாது; ஒடனே வாளித் தண்ணியக் கொண்டாந்து கழுவி விட்டிருவா?”

திவாகரன் ஊருக்கு வந்த நாட்களின் ஆரம்பத்தில் தான், மரகதத்தின் வீடு முழுமைபெறத் தொடங்கியிருந்தது.
தொடக்கத்தில் திவாகரனுக்குத் திகைப்பாகத் தானிருந்தது.எப்படி இந்தத் தெருவில், ஒரு அந்நியச் சாதிக்காரி வந்து அரிச்சலில்லாமல் வீடு கட்டிக் கொள்கிறாள் என்று நினைத்ததால் எழுந்த திகைப்பு. ஒரு காலத்தில் கட்டைமண் சுவர்களும் ஓலைக்குடிசைகளுமாய் அந்தகொந்தரவாகக் கிடந்த தெரு.இந்தத் தருணத்தில்தான் வீடுகளுக்கு மத்தியில் விலை போகாமல் கிடந்த மனையை விலைக்கு வாங்கி, வீடு கட்டத் துவங்கியிருந்தாள் உயர்சாதி மரகதம். அவளின் ஊரான தாமரைக்குளத்தில் நிகழ்ந்த சாதிக்கொலைகள் சுற்றுமுற்று ஊர்களைக் கிலிபிடிக்கவைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து ஒரு குடி கௌம்பி தன் தெருவுக்கு வந்திருக்கிறது என்று நினைத்தபோது, நெருடலாக இருந்தது திவாகரனுக்கு.அவள் தெருவில் எதிர்ப்பட்ட போது, ஆற்றாமையால் திவாகரன் கேட்டுவிட்டார்.

“சாதி வித்தியாசம் பாக்காத எங்க தெருவில வந்து வீடு கட்டிக் குடியிருக்கியே… பெருந்தன்மைன்னு நெனைச்சிருந்தேன். அது ஏன் வீட்டு முகப்பில உங்க வீட்டுக்காரரோட பெயருக்குப் பின்னால சாதிப் பெயரைப் போட்டுக்கிட்டு வித்திரிப்புக் காட்டித் திரியற? அத மாத்திரலாமே?”

அவளின் குண்டு முகம் நசுங்கிப் போனது; கண்களில் தீ நின்று கொழுந்துவிட்டு எரிந்தது.“என் வீடு… நா எப்படியும் எழுதி வைப்பன்… நீ யாரு அதப்பத்திக் கேக்குதுக்கு?”

மரகதம் எடுப்பாய் நடந்து போனாள்; “பங்காளிச் சண்டையில் தாமரைக் குளத்தில் அவ வீட்டுக்காரரை வெட்டிக் கொன்னுப் போட்டானுகளாம் மருமகங்க. அங்ஙன இருந்தா, மேலும் சீண்டாந்திரமின்னு எங்கிட்ட மனையைக் கேட்டா. வித்து,சவத்தைக் கையைக் கழுவிட்டன்.”

பொன்னுலிங்கம் சலனப்படாமல் பதில்சொன்னார்.

வீட்டைக் கட்டி முடித்துவிட்டு, திறப்புக்குக் கூட தெருவில் யாரையும் அழைக்கவில்லை;

வீடு முழுக்க சாமான்களாய் வாங்கிப் போட்டிருந்தாலும், எல்லாம் அநியாயமான சம்பாத்தியம்; பத்து வட்டிக்குக் குறைத்துக் கிடையாது.

“ஏ பாம்பு அந்தா போவுதுல, குழாய்க்கடியில உருவிப் போய்க்கிட்டிருக்கு”

திவாகரன் உட்பட எல்லோரும் பாம்பைப் பார்த்துவிட்டார்கள். மழைநீர் விழுந்த கரும்தாராய் அதன் தேகம் பள பளத்தது. அது வெளியேறி எதிர்ப்பக்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களின் நாடிநரம்புகள் திருக்கிய கயிறுகளாய் முறுக்கேறிக் கொண்டன. எல்லோரும் பாம்பை அடிக்கக் கச்சைக் கட்டிக்கொண்டிருக்க, திவாகரன் மட்டும் பாம்பை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு, எதைப் பற்றியோ, தீர்க்கமாக ரோசனை பண்ணிக் கொண்டிருந்தார். திடீரென அவர் வாயிலிருந்து அப்படியொரு உத்தரவு வரும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

“பாம்பு போவட்டும்… விடுங்க… அத அடிக்கவேண்டாம்”

அபிமானியின் “பாம்பு” கதை முடிகிறது:

வேறுபாடு கொள்ளாத ‘மனுச மக்கள்’ வாழுகிற தெருவில், சாதிவெறியுடன் அலைகிற ஒரு மனம் வசிக்கிறது: அதன் வசிப்பைவிட, பாம்பின் வசிப்பு ஆபத்தானதில்லை. பாம்பு - தன்னைத் துன்புறுத்துகிறவனைக் கடிக்கும்: தன் அசைவைத் தடை செய்கிறவர்களைக் கொத்தும். ஒரு சமுதாயத்தையே கடித்துச் சாகடிக்கும் நச்சுப்பற்கள் சாதிக்கு மட்டுமே உண்டு என்று பல பக்கங்களைக் கதை விரித்துப் போகிறது.

படைப்புகள் காலந்தோறும் மாறுதல் கொள்கின்றன. மாறுதல் என்பது வளர்ச்சி. இலக்கியத்துக்கான கோட்பாடாக இந்த வளர்ச்சியைச் சுருக்கிக் காணவேண்டியதில்லை; சமுதாயத்துக்கான வளர்ச்சிக் கோட்பாடாகவும் இதனைக் கையேந்த வேண்டும்.

பெண் விடுதலைக் கருத்தியலின் அடுத்த படிநிலையாய்த் தலித்தியப் பெண்ணியம், தலித்தியத்தின் வளர்நிலையாய் விளிம்புநிலைக் கருத்தியல் என ஒருகுருத்திலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று என இலக்கியக் குருத்துக்கள் வெடித்து வருகின்றன. சமூகச் சிக்கல்களை இனங்கண்டு சமகால படைப்புகள் அதன் தாக்கங்களோடு விவரிப்பதைக் காணலாம்.
தனிப்பட்ட ஒரு படைப்பாளியிடம் உருவாகும் ஒரு படைப்பு, மற்றவருக்கு ஏன் கடத்தப்படுகிறது? தன்னுள்ளிருக்கும் கருத்தை, சிந்தனையோட்டத்தை மற்றவருக்குப் பகிருதல் என்ற அவசியத்தில் இச்செயல் நிகழ்கிறது. தன்னைத் தாண்டிய புற உலகுடன் உறவாடல் கொள்ள முயலுகிற மனித முயற்சிகள், சிந்தனை வெளிப்பாடுகள் - பேச்சு, எழுத்து, கலை என வெவ்வேறு வடிவங்களாக வெளிப்படுகின்றன. தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்ற உந்துதல்தான் அனைத்திற்கும் அடிப்படை.

வெறுமனே பிரச்சனைகளைச் சித்திரித்துக்காட்டுவதில் கவனம்கொள்வதால் இத்தகு படைப்புகளைக் கொண்டாடலாம் என்பதற்கு இடமில்லை. அந்தப் பிரச்சனை எழுத்தாக மட்டும் இருந்திராமல், நடப்புக்களத்தில் அசைவினை, தாக்கத்தினை ஏற்படுத்துவதில் தான் படைப்பிற்கான சாரம் செயல்வீரியங் காண முடிகிறது.

ஒருவருக்குள் உருக்கொள்ளும் கருத்து அடுத்தவர் முகத்தில் எதிர்வினை உண்டுபண்ணும். அவ்வெதிர்வினை ஒரு புதிய சூரியனைக் காண விழைகிறது: எதிர் முகத்தில் தகதகக்கும் சூரியன், ஒரு படைப்பாளி தன் கருவூலத்தைத் திறந்து வைத்துக் கொள்ளலாமெனும் புதிய உத்வேகத்தை, உந்துதலை அவனுக்கு அள்ளித் தருகிறது. உலகத்தைத் தரிசிக்க நீளும் அவன் கைகளை மேலும் விரியச் செய்கிறது.

(கணையாழி, பிப்ரவரி 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ