ஈழக் கதவுகள் - புத்தக மதிப்புரை

பதிப்பு ஆண்டு: 2007
பதிப்பு: முதற் பதிப்பு (2007)
பதிப்பகம்: தோழமை வெளியீடு
விலை: 100
பக்கங்கள்: 160


மதிப்புரை வழங்கியவர்: பேரா. அ.அய்யாசாமி
மே 1, 2007

2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கூடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரியதீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரியதீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீரர்களாகப் பார்க்கும் விந்தையைக் கண்டு வியப்படைகிறார். கொழும்பு விமான நிலையத்திலேயே இலங்கையில் நடப்பது இராணுவ ஆட்சி என்றும அது எவரையும் மதிக்காத ஆட்சி என்றும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. வெடிகுறித்த எச்சரிக்கைகளும் புதையுண்டு கிடக்கும் தொடர்வண்டிப் பாதைகளும் தமிழீழ மக்கள் சமாதானத்தைக் கண்டு ஒரு தலைமுறைக்கு மேல் ஆகிவிட்டது என்னும் உறுத்தலான உண்மையை உணர்த்துகின்றன. இலங்கைப் பேரினவாதம் எப்படி அமைதி விரும்பிகளான தமிழர்களைப் போராளிகளாக மாற்றிற்று என்று விரிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். "எப்போதும் ரண ஈரம் அழியாத பச்சைப் புண் ஏற்பட்ட அனுபவம்,. நினைக்கையில் என் இதயத்தில் இப்போதும் நெருப்புக் காந்துகிறது, "என்கிறார் ஈழத் தமிழர் ஒருவர் அமைதி காப்பதற்காகவென்று இலங்கை மண்ணில் நுழைந்த இந்தியப் படை ஈழத்துப் போராளிகளைக் கொன்று குவித்து, தமிழ் மக்களின் உடைமைகளைச் சூறையாடிய கொடுமையை ஆதாரங்களுடன், இந்திய படைத் தலைவர்களின் வாய்மொழி மூலமாகவே விளக்குகிறார். அந்தப் படையை உக்கிரமாக எதிர்கொண்ட பெண் புலிகளின் வீரத்தை எடுத்துரைக்க வார்த்தையில்லை. நூறு நூறு பெண்கள் தரைப் புலிகளாய், கடற்புலிகளாய், கரும் புலிகளாய் வீரச்சமர் புரிந்துகொண்டிருப்பதை அறிய நெஞ்சங்கள் பெருமிதத்தால் விம்முகின்றன. சட்டத்தின் ஆட்சி என்பது இலங்கை மண்ணைவிட்டு குவிப்பதென்றால் வெளியேறி இரண்டு தலைமுறைக்கு மேல் கடந்துவிட்டது. தமிழர்களைக் கொன்று குவிப்பதென்றால் சட்டம், இராணுவ விதிகள், நீதி, நியாயம், நெறிமுறைகள் எல்லாவற்றையும் ஒரேடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு உலத்தின் மனித நேய அமைப்புகளின் குரலை இலங்கை அரசு மூர்க்கமாகப் புறக்கணிக்கும் ஆணவத்தை ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காரணமில்லாமல், கேள்விமுறையில்லாமல் புதைக்கப்பட்டிருக்கும் செம்மணிப் புதைகுழிகள் பற்றிய கட்டுரை வெட்டவெளிச்சமாக்குகிறது. அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறுப்படும் காலத்திலும் இராணுவம் நடத்தும் அட்டுழியங்களைக் கண்டு கொதிக்கும் யாழ் மக்கள் கூறுவது இதுதான்:- "எங்களுக்கு ஆயுதம் தாருங்கள். ஆயுதம் தாங்கிப் போரிடப் பயிற்சி அளியுங்கள். யுத்தக் களத்தில் போராளிகள் மட்டுமே நின்று போரிட வேண்டியதில்லை. நாங்களே எதிரிகளை எதிர்கொள்வோம்." சூரியதீபனின் நூலைப் படித்து முடித்தப் பிறகு நம் மனத்தில் தோன்றுவது வியப்பா? மலைப்பா? பெருமிதமா? வேதனையா? உளளக் குமுறலா? இவை எதுவுமே இல்லை. தடைகள் அனைத்தையும் தாண்டி இவர்கள் நிச்சயம் வென்று காட்டுவார்கள் என்ற நம்பிக்கைதான் மேலோங்கி நிற்கிறது.

நன்றி: விருபா

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ