உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்

2019 சனவரி 10இல் ஈழத்தின் வடகோடித் தீவான காரைத்தீவில் ஒரு ‘துக்கம்’ விசாரிக்க ச் சென்றேன். 2009 மே 17இல் விழுந்த இழவு தீர்ந்துவிடவில்லை. ஈழமண்ணின் விடுதலையில் தணியாத வேட்கை சுமந்து மரணித்த நண்பர் கென்னடியின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு - இது நண்பருக்குப் பொன்விழா ஆண்டும் கூட . ‘கென்னடி ஓர் பன்முக ஆளுமை’ என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது.


பிறந்து வளர்ந்து கல்விபெற்ற காரைத்தீவு எனப்பெறும் காரைநகருக்கு ஜான்கென்னடி தன் மரணத்தால் எங்களை வரவழைத்திருந்தார். கென்னடியின் குடும்பம் சைவ வெள்ளாள மரபினது. அவருடைய தந்தை கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் வித்தியாசமானது. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் கென்னடியின் தந்தை பங்கேற்றார். மகளுக்கு ஸ்டாலின் பெயரில் ‘ஸ்டாலினா வீரமங்கை’ எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டதை உலகம் துயரத்துடன் கவனித்தது. தன் மகனுக்கு ‘ஜான் மனோகரன் கென்னடி’ எனப் பெயர் சூட்டிய அவரது செயல் அதிசயிப்பானது.

நண்பர் கென்னடியும் துணைவியார் நதீராவும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டனர் (2003-2009). 2002 அக்டோபர் இறுதியில் யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த ‘மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில்’ இருவரும் எனக்கு அறிமுகமானார்கள். மாநாட்டில் அறிமுகமாகிய மற்றொரு நண்பர் பின்னாளில் தமிழகத்துக்கு அகதியாய்ப் பெயர்ந்து, அணுக்க நண்பராகித் தொடர்ந்த இதழியலாளர், பெரியவர் கோபு என்றழைக்கப் பெற்ற எஸ்.எம். கோபாலரத்தினம். 1980களின் இறுதி ஆண்டுகளில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அத்துமீறல்கள் பற்றிய ஆவணச் சித்திரிப்பு கோபு எழுதிய ‘ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை’ நூல். ஜூனியர் விகடனில் தொடராக வெளியாகி உலகின் முன் உண்மைகளின் கண்ணாடியை ஏந்திற்று.



கென்னடி பயின்ற காரை நகர் இந்துக் கல்லூரியில் நினைவேந்தல். இழவு அரங்கத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தது சிங்கள இராணுவம். நிகழ்வை ஒருங்கிணைப்புச் செய்துகொண்டிருந்த ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்துக் குறித்துக்கொண்டது. அழைப்பிதழில் இடம்பெற்ற பெயர்கள், அரசியல் ரீதியில் பயமுறுத்தும் பெயர்களல்ல; என்றாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தறிய உள்நுழைவதும் சம்மணமிட்டு உட்காருவதும் இராணுவத்துக்குப் பெரிய ஆரியவித்தை, அல்லாவித்தையில்லை.
“நீ காதலித்த ஏழை எம்மைப் பார்
பிரபஞ்சம் சிறிதாய்! நீ பார்
எம் கையில் ஓர் மலராய்”
அழைப்பிதழில் கென்னடியின் படத்தின் கீழிருந்த கவிதை வரிகளின் கற்பூர வாசனையை இராணுவத்தின் மூக்கு அறியுமோ? அழைப்பினைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

காரைத் தீவிலிருந்து மூன்று கி.மீ. தென்கிழக்கில் எழில் சிந்தும் கடற்கரை. அது தமிழன் கடல். சாலையின் இடது பக்கம் திரும்பினால் கடற்கரை. வலது பக்கம் போனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ‘ஈழத்துச் சிதம்பரம் கோயில்’ . சிதம்பரத்தில் இருப்பதுபோல, அங்கொரு கோயிலை உண்டாக்கியிருந்தனர் தமிழ்ச் சைவ மரபினர். கோயில் தில்லையம்பதி போல் தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இல்லை. தில்லையைவிடச் சிறப்பாக, எடுப்பாக விரிந்த பரப்பில் கட்டப்பட்டிருந்தது. சோதனைச் சாவடியில் இராணுவச் சோதனைக்குப் பின்னர்தான், ஆண்டவனைத் தரிசிக்கச் செல்லக் கூடும்; நாங்கள் சென்ற ஆட்டோ வாகனத்தைச் சோதனை செய்து, யார் - எவர் என்ற பெயர்களைக் குறித்துக்கொண்ட பின்னர் அனுமதித்தார்கள்.

‘படுக்கையறைக்குள்ளும் இராணுவம் பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்று சொல்வது உண்மை!

சுதந்திரம் என்பது என்ன? எல்லா மூலைமுடுக்குகளிலும் அனைத்து ஒழுங்கைகள், சாலைகளில் துப்பாக்கிக் கண்களின் சோதனைக்குள்ளாகி நிற்கிறது நடமாட்டச் சுதந்திரம். இராணுவத்தின் முழுச் சுதந்திரத்தின் முன், சுதந்திரமான பறத்தலுக்கும் வழியற்றுத் தமிழரின் மனத்தின் சிறகுகள் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன.

முன்னர் காரைத் தீவுக்குப் படகுப் போக்குவரத்து மட்டும் இருந்தது; இப்போது பேருந்து, மகிழுந்து, லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் போகவரத் தரைவழிச் சாலை இணைக்கிறது. காரைத் தீவு தாண்டி நயினார் தீவு, புங்குடுதீவுகள் போன்றவற்றிற்கு நீர்வழிப் போக்குவரத்து ஒன்றுதான். நீர்வழிப் போக்குவரத்தை கப்பற்படை கையாளுகிறது.

முள்ளிவாய்க்காலின் பின், இந்தப் பத்தாண்டுகளில் ‘நயினார் தீவு’ முழுசையும் புத்த விகாரைகளின் குவியமாக ஆக்கிவிட்டார்கள். தென்னிலங்கையிலிருந்து ஏராளமான சிங்களர் சுற்றுலா வருகிறார்கள். நயினார் தீவின் மேற்கு மூலையில் ‘நாக பூஷணி அம்மன்’ சைவக் கோயில் கிடக்கிறது; நயினார் தீவின் முக்காலே மூணுவீசம் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் புத்த வழிபாட்டுத் தலங்களுக்கு வந்துசெல்கிற சிங்களமக்களில் ஒருத்தரும் சைவக் கோவில் பக்கம் தென்படவில்லை. ஆனால் தங்கள் வழிபாட்டுத் தலத்துக்கு, தமிழர்கள் புத்த விகாரைகளின் பரந்த நிலத்தைக் கடந்துதான் செல்கிறார்கள்.

காரைத் தீவுக்குச் சென்றடையுமுன் இரவு கிளிநொச்சியில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். ஒரு இரவு, ஒருபகல். இருவேறு காட்சிகள்:

முன்னர் போராளிகளின் கைவசமிருந்த அனைத்தும் வணிகவளாகங்கள், அரசு அலுவலகங்கள், இராணுவ அலுவலகங்கள், முகாம், இராணுவக் குடியிருப்புகள் என ஆட்சியின் கைவசமாகியிருந்தன. கிளிநொச்சி வாணிப மையமாகக் கொளுத்துச் செழித்துக்கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் குடியேறவும் வாழ வழியில்லாமலும் ஆக்கப்பட்டு நின்ற மொட்டைக் கழுத்தியான வீடுகள்.

யுத்த காலத்தில் ஒரு தடவை ஈழம் சென்றிருந்தேன். பீரங்கிச் சூடு, ஏவுகணைத் தாக்குதலால் ஏ-9 நெடுஞ்சாலையின் இருபக்கமும் கானக மரங்கள் பொசுங்கியிருந்தன. ஒற்றைக்கை மனிதன் கை கூப்புதல் போல் தலையிழந்த பனைகள், ‘எங்களுக்கு நாள் குறிச்சாச்சி, போய்ச் சேரக் காத்திருக்கிறோம்,’ என வானத்தை, வெட்ட வெளியை நோக்கிக் கும்பிட்டன. தலையிழந்த முண்டங்களின் இடையில் மோதிய காற்றின் அரற்றல் வெட்டவெளி கடந்து கிளிநொச்சி நகரத்துக்குள் இப்போது பிரவேசித்திருந்தது கண்டேன்.

ராணுவம் விரட்டவிரட்ட ஓடிய மக்கள் முல்லைத் தீவுக்குள் முடங்கினார்கள். வீடுகள் காலியாக நின்றன; ஈராயிரம் ஆண்டுக்கால டிரங்குப் பெட்டியை, இரும்புப் பெட்டகத்தை இறுக்க மூடுவது போல, இல்லங்களை மூடிச் சாவிகளைக் கையில் கொண்டு சென்றனர்; மனித சுவாசம் அறியாத நகரம் இருளடித்துக் கிடந்தது. நகரத்துக்குத் திரும்பிவந்து பார்த்தபோது சாவிகள் இருந்தன, வீடுகளைக் காணோம்.

குளிர்சாதனப்பெட்டி, ஏ.சி, பீரோ, சலவை இயந்திரம், மெத்தை, கட்டில், சோஃபா முதலானவை முதலில் களவாடப்பட்டன. கரையான் அரிக்காத மரங்களால் செய்யப்பட்ட சன்னல், வாசல் கதவுகள் அடுத்ததாய். கடைசியாய் காணியிலிருந்த நுழைவு இரும்பு கேட். சிங்கள இராணுவ மேலதிகாரிகள், சிப்பாய்கள் நேரடியாக தங்கள் இல்லங்களுக்கு - இந்தப் பொருட்களைக் கடத்திப்போனார்கள். மிச்சம் மீதியை அந்தப்பகுதிவாழ் சுயநலமிகள் களவாடிப்போயிருந்தார்கள். இராணுவமும் சுயநலக்கூட்டமும் சூறையாடிய பின் எஞ்சியிருந்தது மொட்டைக் கழுத்துகள்தாம். உரலிலிருந்து கழற்றிச் சாய்த்த செக்கு உலக்கைகள்போல், மொட்டையாய், அகோரமாய்க் கண்ணை அழுத்தின வீடுகள்.


நண்பர் மற்றொரு அதிர்ச்சியை எனக்குள் இறக்கினார்; விலைகூடின பயன்படுப் பொருட்களை, அலங்காரப் பொருட்களை இராணுவம் அலுவலகப் பயன்பாட்டுக்கு வாங்கியதாய்க் காட்டி, போலி ரசீதுகள் தயார் செய்து, சமர்ப்பித்து, அப்படியும் சம்பாத்தியம் பார்த்திருந்ததாம்.

வீடுகளை மட்டுமல்ல, வீடிருந்த காணிகளும் இராணுவ அலுவலகங்களாய் மாற்றப்பட்டிருந்தன. பல காணிகளை, ராணுவ உயர்மட்டத்தில் இருப்பவர்கள், சிப்பாய்கள் அகப்படுத்தியிருந்தனர்.

கிளிநொச்சி கிழக்கில், ‘பரந்துபாஞ்சான்’ ஆற்றுக்குப் பக்கமாயுள்ள வீட்டில் ‘ஊழிக்காலம்’ நாவலாசிரியர் தமிழ்க்கவி அக்காவைச் சந்தித்தேன்: தன் வீட்டில் குடியிருந்த ராணுவத்தினரை வெளியேற்றித் திரும்பப் பெற்று மூன்று மாதங்கள் முன்புதான்  குடிவந்திருந்தார். அவருடைய இல்லத்துக்கு எதிரில் கிறித்துவ ஆலயம். அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், இராணுவத்தின் கை வசமாகியிருந்த அந்தக் கட்டடம் இப்போது மீட்கப்பட்டிருக்கிறது.

வீட்டுக்கு மக்கள் அரண்; மக்களுக்கு வீடு அரண். முதலில் அவர்கள் காணி அவர்களுக்குத் திரும்ப வேண்டும்; அதற்குப் போராட வேண்டியிருந்தது. காணி திரும்பியதும், அதைச் செம்மை செய்ய வேண்டும். பிறகு வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும்.

“ விடுதலைக்காகக் கொல்லப்பட்ட
  கல்லறைகளில்
  விடுதலை விதை வளராத கல்லறை
  எதுவுமே இல்லை”

போன்ற வரிகள், இலட்சிய ஆவேசமுள்ள உணர்ச்சிவசப்பட்ட மனங்களுக்குத் தீனிபோடப் பயன்படலாம். இன்றைய நிலையில் நனைந்த தீக்குச்சி.

வேற்றுப் பிரதேச, வேற்றுப் படிநிலை, வேற்று எண்ண ஓட்டங்களிலிருந்து இன்றைய ஈழமக்களின் மனஓட்டத்தை மதிப்பீடு செய்தல் பொருந்துமா? உள்ளார்ந்த நிலையிலிருந்து, உண்மையிலிருந்து மதிப்பீடுகள் வர வேண்டும்.

‘யுத்தம் தன் கண்களை மூடி ஓய்வின் சாலையில் பயணம் செய்வதாகவும், சுபிட்சத்தின் நிழலைப் பருகி மக்களெல்லாம் நிம்மதி கொள்வதாகவும்’ சிங்கள ஆட்சியாளர்கள் புழக்கத்தில்விட்ட பல கதைகள் அங்கு உலவிக்கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையை நேசிக்கும் மக்கள் சுதந்திரமாக அதைத் தங்களுக்குப் பெற விரும்புகிறார்கள். நடமாட்டச் சுதந்திரம் அற்றுப்போன பூமியில் மனசின் நடமாட்டத்துக்கு, கருத்துகளின் வெளிப்பாட்டு உரிமை எள்ளளவும் இருக்கவியலுமா? வாழ்க்கையையே நிதரிசனக் கண்ணாடியாக ஏந்தி நிற்கிறார்கள்.

தங்களுக்குச் சொல்ல வராத வார்த்தைகளால் அந்த மக்கள் கேட்பது ஒரு நீதிக் கோட்பாடு. சுதந்திரம், சனநாயகம் என்ற நீதிக் கோட்பாடு. அதுவே தேசியம் என்பதின் பொருள்.

வாயிலும் வயிற்றிலும் அடித்து ஐ.நா.அவையில், மனித உரிமைகள் அவையில் முறையிட்டுப் பார்த்தனர்; பரிகார நீதி வழங்கப்படவில்லை. மனசாட்சி கொண்ட நாடுகளின் காதுகளில்கூட அவர்களின் ஒப்பாரி ஏறவில்லை. “அய்க்கிய நாடுகள் சபையல்ல: அயோக்கியர்கள் சபை,” என்று பெர்னாட்ஷா சொன்ன வாசகம், ஒவ்வோர் ஆண்டும் உண்மையாயிற்று. ஐ.நா.அவையின் அத்தனை நாடுகளும் கல்லுளி மங்கன்கள்! மனசாட்சியுள்ள சில நாடுகளோ, தம்மினும் வல்லமை கொண்ட மூத்தோர் யாது சொல்வாரோ என அச்சம் கொண்டு அவ்வழி, நல்வழி எனச் சென்ற வண்ணம் இருந்தன.

வெடிப்புறப் பேசிட முடியாது; வெளிப்படையாகவும் பேசிடக்கூடாது.

“இதுவரை சிங்களவரை எதிரியாகவே உருவகித்துக் காட்டி வந்திருக்கிறீர்கள்: இப்போதாவது அவரை நண்பராகக் காட்ட முன்வாருங்கள்,” என்கின்ற சகோதரவாதம் சில நாக்குகளில் புரளுகிறது. இருப்பதைத்தான் காட்ட முடியும். தோளில் துவக்குடன் எம்மை அணைக்கும் கைகளை - தோழமை என்று எவ்வாறு நம்ப இயலும்? துவக்கு இல்லாத கைகளும் வஞ்சனை இல்லாத நெஞ்சமும் கொண்டுவருவோரைத் தோழமை கொள்ள முடியும்.

“விடியலுக்காகப் பறவைகளும் பட்சிகளும் ஒலியெழுப்பிப் பூமியைத் துயிலெழுப்புகின்ற நேரத்தில்தான் நான் பிறந்ததாக அம்மா அடிக்கடி கூறுவார்.”

வினோதினியின் ‘உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்’ கதை இப்படித் தொடங்குகிறது: இனவெறி நகங்களால் பிறாண்டப்பட்டு, ரத்தக் கதறல்கள் ஒழுகும் இன்னொரு இனத்தின் விடியலுக்கான போராட்டத்தைக் குறிப்பாய் உணர்த்துகிறது தொடக்க வாக்கியம்!

காணாமல் போனோரின் விவரம், அவலம், அழுகை அனைத்தையும் பதிவு செய்யும் ‘நடமாடும் சேவைப் பிரிவில்’ பணியாற்றுகிறார்கள் கதைசொல்லியும் தோழி நிலாவும். விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் யாழ்ப்பாணத்திலிருந்து சேவைப்பிரிவின் வாகனத்தில் கிளிநொச்சி நோக்கிப் பயணப்படுகிறார்கள்: கடமையைச் செய்: பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லுகிற சேவைப்பிரிவு. கடமையாக மட்டுமல்ல, சேவையாகவும் ஏற்று, இப்படி எத்தனை அதிகாலைகளைக் கடந்திருக்கிறார்கள்.

“திருவிழாக் காலத்தில் விசேட வழிபாடுகளுக்குக் கூடும் பக்தர்களைப் போல், அந்த மண்டபம் தாங்கிக்கொள்ளும் அளவிற்குச் சனங்கள்; தங்களின் பிள்ளைகளைத் தேடியலையும் பெற்றோர்களும், பேரப் பிள்ளைகளைத் தொலைத்த தாத்தா, பாட்டியும், கணவனைத் தேடித் தோற்ற மனைவியும், மனைவியைத் தேடித் தோற்ற கணவனும், உடன்பிறப்புகளைத் தேடி அழும் கூடப்பிறந்தவர்களும் சொன்ன கதைகளால் மண்டபமெங்கும் துயரத்தின் தாழி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.”

பதிவு செய்த இருவரும் காதுகளை மூடவும் முடியாமல், முழுக் கதைகளின் பாரத்தைச் சுமக்கவும் முடியாமல் விழித்தார்கள். இது என்ன மரண நிலை?

“திரும்பிய இடமெல்லாம் இதே காட்சி! எவ்வளவு வலியிருக்கும் இப்படி வாய்விட்டு அழ! சூரியன் எழுந்து அதல பாதாளத்தில் விழுவதைப்போலவும், விழுந்த சூரியக் கதிர்களெல்லாம் கொடும் தீப்பிழம்புகளாக மாறிப் பூமியின் ஒவ்வொரு பகுதியையும் தீமூட்டி எரிப்பதைப் போலவும், துயின்றிருந்த பறவையினங்களும் விலங்கினங்களும் கூச்சலிட்டுக் கதறி இறகடித்துப் பறந்து அலைவதைப் போலவும், போக்கிடமற்ற மனிதர்கள் இங்கும் அங்குமாகக் கூக்குரலிட்டு அழுவதுமாப் போலவும் ஊழியின் பிரமையொன்று எழுந்து அடங்கியது. மூச்சு முட்டுவது போலிருந்தது.”

தனக்கு எதிரில் அமர்ந்திருந்த அந்தத் தாய். இந்த முகம் தன் பிரியத்துக்குரியவனாயிருந்த மலரவனின் சாயலை அச்சுப் பிசகாமல் கொண்டிருந்தது. மலரவன் - பெயருக்கு ஏற்றாற்போல் அழகான தோற்றம்: நிதானம் தவறாத பகுத்தறிவாளன். முன்னால்  அமர்ந்த தாயிடமிருந்து தழுதழுத்து வெளிவந்தன வார்த்தைகள்.

“ஆனா நா இப்ப இங்க வந்தது, இங்க வந்து இதெல்லாம் சொல்லி முறப்பாடு குடுக்குறதுக்கா இல்ல. இதெல்லாத்தையும் ஒரு கண் துடைப்புக்குத்தானே இவங்கள் செய்றது. கொல்லையில் கோழியப் பிடிச்ச கள்ளரிட்டயே போய் தேடித்தா எண்டு கேக்குற கதமாதிரித்தான் இதெல்லாம் அந்தத்தாய் எழும்புகிறபோது, சொன்னாள், “பிள்ள, நீ அவனுக்காகக் காத்திருக்காத.”

சந்தியில் ஏதோ ‘கிளைமோர் குண்டு’ என்று இராணுவம் சுற்றி வளைத்தது. ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்களுடன் மலரவனையும் தூக்கி ராணுவ லாரியில் போட்டுப் போனார்கள்.இத்தனை வருசமாய்த் தேடித் தேடிக் கிடைக்காதவன், இனியும் வருவான் என்று தாய்க்குச் சொல்லத் தோன்றவில்லை. தாய் முறையிட அங்கு வந்தாரில்லை; காதலித்த மகனை நம்பிக் காத்திருப்பது வீண் எனச் சொல்லிப்போக வந்தவர்.

“இயல்பாய் எழுகின்ற பிரிவுகளையே ஏற்க மறுக்கின்ற மனது, அகாலத்தில் வலிந்து எழுப்பப்பட்ட பிரிவைக் கடந்து எப்படி இயல்புநிலை கொள்ளும்? சாட்சியாகக் கடைவழி ஓரத்தில் கசிந்து விழுந்த கண்ணீர்த் துளியை மோதிவந்த உப்புக்காற்று, கரைத்துக்கொண்டு போயிற்று.”

இது மண்டபத்தில் சொல்லப்பட்டவர்கள் மட்டும் அல்ல, கேட்டுக் குறிக்க வந்தவரையும் சுருக்கிடுகிற சோகக்கயிறு. போராட்டம் - பழிவாங்கல் - கதறல்- இந்த இறுதிச் சொல்லில் மக்கள் உலைந்து நின்று - ஏக்கத்துடன் - எதிரிலிருப்போர், திசைகளெங்கும், உலகெங்கும் படரவிடுகின்றனர் பார்வையை, மீட்சியைத் தேடி இறைஞ்சும் கண்கள்!

1757இல் இந்தியாவின் பிளாசி யுத்தம் ஒரு திருப்புமுனை: வெற்றி கொண்ட ராபர்ட் கிளைவ் 144 சிப்பாய்களுடன் பிளாசி நகரைக் கடந்துசெல்கிறான். 144 சிப்பாய்கள் மட்டுமே. அவனையும் சிப்பாய்களையும் நகரத்தின் லட்சக்கணக்கான மக்கள் சன்னல்களில், வாசல்களில், வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்: நகரைக் கடந்துபோனதும் ராபர்ட் கிளைவ், “அப்பாடா, இப்போதுதான் உயிர் வந்தது. வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்த மக்கள் ஆளுக்கொரு கல்லை எடுத்து வீசியிருந்தால்கூட நாங்கள் அத்தனை பேரும் இல்லாமல் போயிருப்போம்,” என்கிறான்.

வரலாற்றின் சந்திப்பில் கடமையாற்ற வேண்டிய, முதல் கல்லெறிதலைச் செய்திருக்க வேண்டிய மனச்சாட்சிகள் மவுனித்ததால், ஒரு நாடு துயர கீதங்களை இழைப்பதாய் ஆகிப்போனது.

வினோதினியின் ‘உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்’ கதை ஒவ்வொரு தமிழன், தமிழச்சியின் வாழ்க்கையும் முள்ளிவாய்க்காலாய்த் தொடரும் ஆறாத் துயரத்தை நமக்குள் இறக்குகிறது. உப்புக்காற்று பட்ட காயம் காந்தும்; குளுந்த, தன்மயமான, இளநீர் போன்ற காற்று கண்ணீரைத் துடைத்துப் போகும்: காந்தள் எடுக்க வீசிவருகிற உப்புக்காற்று நமநமவென்று வேதனையைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது.

இந்த  அவலத்தின் பின் முதல் கல்லெறிதலைச் செய்வது யார்?

திக்குத் தெரியாது இருளடித்துப்போய் ஈழத் தமிழ்ச் சனம் காத்திருக்கிறது. ஆயுதம் அல்ல; அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, போர்க்குணமுள்ள ஓர் அரசியல் தலைமை!

- காலச்சுவடு, ஏப்ரல் 2019

காலச்சுவடு மே இதழில் தொ.பத்தினாதன் ”வீரவாள் வசிக்கும் வைர உறையாய்” ஒரு பதிவினைச் செய்துள்ளார். அவரது ’வீரம் செறிந்த வைர வரிகளுக்கு’ என் எதிர்வினை:

“தற்போதைய காலங்களில் அவரைச் சைவ வெள்ளாள வாதியாகப் பார்ப்பது மிகுந்த ஆச்சரியம் தருகிறது” என்கிறார்.

தன் மகளுக்கு ‘ஸ்டாலினா வீரமங்கை’ என்று பெயர் சூட்டிய போதும், கொலை செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் F.கென்னடி பெயரை முன்னெழுத்துக் கூட மாற்றாது தன் மகனுக்குச் சூட்டிய போதும், அது வெள்ளாளக் குடும்பமே. தந்தையின் சனநாயகப் பக்கங்களைச் சுட்டிக்காட்ட அவ்வாறு குறிப்பிட்டேன்.

சிதம்பரத்தில் உள்ளது போல் காரைத்தீவில் சைவ வெள்ளாளர்கள் எழுப்பிய ‘ஈழத்துச் சிதம்பரம்’ கோயில் இருப்பது ஒரு உண்மை. நயினார் தீவில் நாக பூசணி அம்மன் கோயில் இருப்பது இன்னொரு உண்மை. ஈழத்துச் சிதம்பரம் கோயிலைக் குறிப்பிடாமல் போயிருக்க முடியும்; அதற்கு முன்னிருந்த இராணுவச் சோதனைச் சாவடியைக் குறிப்பிடாமல் கடக்க எப்படிச் சாத்தியம்? நயினார் தீவில் நாக பூசணியம்மன் கோவிலிருந்தாலும், பௌத்த சிங்கள ஆதிக்கம் நயினார் தீவு மேல் கவிந்துள்ளது என்பதற்காக அதனைக் குறிப்பிட வேண்டியதாயிற்று. இந்த மூன்று உண்மைகளைப் பதிவிட்டதனாலேயே, நான் எவ்வாறு சைவ வெள்ளாள வாதியாக ஆகிறேன்?

‘ஈழத்துச் சிதம்பரம்’ கோயிலுக்குச் சென்றபோதும், நான் கோயிலுக்குள் செல்லவில்லை; என்னுடன் வந்தவர்கள் சென்று வணங்கித் திரும்பினர். நான் வெளியில் நின்றிருந்தேன். மிகத் துல்லியமாக நானொரு நாத்திகன்; பள்ளிப்பருவத்தில் பகுத்தறிவுப் பெரியார் எனக்குள் எப்போது நடந்தாரோ, அந்த 1958-லிருந்து நான் நாத்திகன்; சாதியவாதியான சைவ வெள்ளாளன் எப்படி நாத்திகனாக இருக்க முடியும்?

நான் சைவனும் இல்லை; வைணவனும் இல்லை; அவ்வாறாயின் “எம்மதமும் சம்மதம்” என்று பேசுகிற மத நல்லிணக்கவாதியா என்றால், “இல்லை. இல்லவே இல்லை; எம்மதமும் சம்மதம் இல்லை” என்கிற அணி சார்ந்தவன் என்று பெருமிதம் கொள்கிற, செயல்படுகிற மார்க்சியவாதி. ‘மதம் ஒரு அபின்’ என மதத்தின் இயங்குதலை வரையறுத்த கார்ல் மார்க்ஸ் ஒரு காலமும் மதவாதியாக இருந்தவரில்லை.

அகதி முகாம்களில் நடைமுறையிலிருக்கும் அதிகாரச் சட்டங்களை – ‘க்யூ’பிராஞ்ச் எனச் சொல்லப்படும் உளவுப் பிரிவின் எல்லை தாண்டிய பயங்கரத்தை அறிவேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பார்த்து வந்திருக்கிறேன். எனது எழுத்துக்களில் பதிவிட்டு வந்துள்ளேன்.

“என்றாவது மண்டபம் அகதிகள் முகாமுக்குள் சென்றிருக்கிறீர்களா?” என்று அற்புதமான கேள்வி கேட்டிருக்கிறார். ‘சமஷ்டியா தனி நாடா’ முதல் இன்றைய ‘இலங்கை அரசியல் யாப்பு’ எனப் பல ஆய்வு நூல்கள் எழுதிய மு.திருநாவுக்கரசு தனது இரு போராளித் தோழர்களுடன் முள்ளிவாய்க்கால் முகாமிலிருந்து தப்பி தமிழகக் கடலில் தத்தளித்து, மண்டபம் முகாம் வந்தடைந்தது 2009, ஜூலை 13. முதன் முதலாகச் சென்று அவரை மண்டபம் முகாமில் பார்த்தவன் நான். பத்தினாதன் சொல்கிற ‘பத்துக்குப் பத்து வீட்டில்தான்’ மூன்று பேரும் வைக்கப்பட்டிருந்தார்கள். காலையில் சென்றவன் மண்டபம் முகாம் முழுவதும் அவர்களுடன் சென்று பார்த்து மாலை திரும்பினேன்.

அவர்கள் தங்கியிருந்த முகாமில் ஒரு உணவு விடுதியில் மதியம் உணவருந்தினோம். பெயர்: சுந்தரவல்லி; அந்த ஓட்டலில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஈழத்தைச் சேர்ந்த ஒரு அகதித் தாய். அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யுங்கள் என்று அறிமுகப்படுத்தினார் மு.திருநாவுக்கரசு. வேறொரு நகரில் வசித்திட மண்டபம் முகாமிலிருந்து மாத இறுதியில் திருநாவுக்கரசு வெளியேறி பின்னரும் நான்கு முறை, மண்டபம் முகாமுக்குச் சென்று சுந்தரவல்லித் தாயைச் சந்தித்து வந்துள்ளேன்; கட்டிய கணவன் கைவிட்டு வேறொரு பெண்ணுடன் வேலூர் அகதி முகாமில் ‘போக்கிரி’ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுவரும் நிலையில், ஒரு பெண்ணைக் கைக்குள் வைத்துக்கொண்டு, பதைக்கப் பதைக்க வாழ்ந்துவந்தார் அந்த அபலை. இரு ஆண்டுகளின் பின் வேறொரு அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பையனுக்கும், அவரது மகளுக்கும் திருமணம் நடைபெற பண உதவிசெய்தேன். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுத்துறையில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், மண்டபம் முகாமில் ஒவ்வொரு முறையும் விசாரிக்கப்பட்டு அனுமதிப் பெற்றுத்தான் செல்ல முடிந்திருக்கிறது. நமக்குப் பின்னாலேயே வேவு பார்த்துக்கொண்டு வந்ததையும் அவதானித்திருக்கிறேன்.

ஒன்று ஒருவருக்குத் தெரியாது என்பதாலேயே, அது உண்மை இல்லை என்றாகிவிடாது. உண்மைகள் மனிதக் காலடிகளை விட வலிமையானவை; காற்றைவிட வேகமானவை. ஆனால் எல்லாக் காலத்திலும் உயிர்ப்புடன் உலவுகிறவை.

நண்பருக்குத் தெரிந்த ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; மதுரைக்கும் திருமங்கலத்துக்கும் இடையிலுள்ள ‘ஆஸ்டின்பட்டி’ அகதிகள் முகாமுக்குச் சில ஆண்டுகள் முன் அவர்தான் என்னை அழைத்துச் சென்றார். அவர் வசிக்கிற திருநகர் வீட்டிலிருந்துதான் இருவரும் அங்கு சென்றோம். மாலை கவியும் நேரம்; நுழைவு வாசலில் கண்காணிப்பு இருந்தது; உள்ளே அழைத்துப் போனது- ஒவ்வொரு வீடாகக் காட்டியது – குறிப்பாக அவருடைய அண்ணன் வீட்டிற்குக் கூட்டிப்போனது - இவையனைத்தையும் பத்தினாதன் என்பவர்தான் செய்தார்: பின்னர் எப்படி முகாம்களில் வாழும் மக்கள் நிலை அறிவீர்களா என கேள்வி எழுப்புகிறீர்கள் நண்பரே?

மு.திருநாவுக்கரசு எழுதி ஈராண்டுகள் முன்பு வெளியான ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூலை, பிரெஞ்சுத் துறைப் பேராசிரியராக ஓய்வுபெற்ற கிருஷ்ண மூர்த்தியிடம், பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து தருமாறு அணுகினேன். இதற்கு முன் ஈழத்தமிழர் மீதான இன ஒடுக்குமுறை பற்றி அறிந்திராதவர், மொழியாக்கத்துக்கு ஒவ்வொரு பக்கமாய்ப் பயணித்த போது தன்னையறியாமல் அதனுள் ஈர்க்கப்பட்டார். மொழியாக்கத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ததற்காக, இருபது ஆயிரம் தொகையை அளித்தபோது, “இந்தப் பணத்தை எனது சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தப் போவதில்லை. முகாமிலுள்ள ஈழ அகதிகளுக்கு உதவ விரும்புகிறேன். ஏற்பாடு செய்யுங்கள்” என என்னிடம் திருப்பி அளித்தார்.

புதுச்சேரி அருகிலுள்ள ஈழ அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகளுக்கு பள்ளிச் செல்லத் தேவைப்படும் பொருட்களை வாங்கி அளிப்பதென முடிவு செய்தோம். புதுச்சேரியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள முதலியார்குப்பம் அகதிமுகாம் வாழ் நண்பரைப் பார்க்கச் சென்றேன். மொழியாக்கம் செய்த பேராசிரியார் கைகளால் பணம் வழங்க நினைத்ததால், அவரை வீட்டுக்கு வருமாறு சொல்லியிருந்தேன். தொடர்ந்து அடித்த புயல், மழை காரணமாய் வர இயலவில்லை எனக் கைபேசியில் தெரிவித்தார்.


இனியும் தாமதிக்கக்கூடாது என்று அந்தத் தொகையை ’ஆஸ்டின் பட்டி ’அகதி முகாமுக்கு வழங்கலாம் என்று மார்ச் மாதம் பத்தினாதனைத் தொடர்புகொள்ள முயன்றேன். பல் தடவை முயன்றும் தொடர்பில் கிடைக்கவில்லை. அவருக்கு இரு தொடர்பு எண்கள்; சந்தேகம் எழவும், காலச்சுவடு இணை ஆசிரியர், ‘களந்தை பீர் முகமது’வைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அலுவலகத்தில் விசாரித்து, “நீங்கள் தொடர்பு கொண்ட எண் சரியானதுதான்” என உறுதிசெய்தார் களந்தை பீர் முகமது. அவரிடம் “ஈழ அகதிகளுக்கு உதவுவதற்காகக் கையில் பணத்தை வைத்துக்கொண்டு, சரியான ஆள் கிடைக்காமல் தவிதாயப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றேன். அப்படியா? என ஆச்சரியப்பட்டு, அதனையும் பத்தினாதனுக்குத் தெரிவித்திருக்கிறார். பத்தினாதன் என்னுடன் பேசுகிறேன் எனத் தெரிவித்ததாகவும் சொன்னார்.

அதன்பின்னர் நான் இருமுறை தொடர்பு கொண்டபோதும், நண்பர் பத்தினாதன் எனது அழைப்பை ஏற்கவில்லை. சூட்சுமம் புரிந்தது.

“எந்தத் தேசியம்? தமிழ்த் தேசியமா? அல்லது நீங்கள் நிறுவ முற்படும் வெள்ளாளத் தேசியமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்: நான் எள்ளளவும் எண்ணிப் பார்த்திராத வெள்ளாளத் தேசியத்தை நிறுவ முற்படுவதாக எழுதுவதைப் பார்த்து, வேதனைக் கொள்வதா? சிரிப்பதா?அவ்வாறனால் விடுதலைப் புளிகள் படை வெள்ளாள தேசியத்துக்குத் தான் போராடியதா? நான் அறிந்தவரை விடுதலிப் புலிகளோ, பிற போராளிக் குழுக்களோ, தமிழீழ தேசியத்துக்குத்தான் போராடினார்களே தவிர, வெள்ளாள தேசியத்துக்குப் போராடியதாக இல்லை.

”35 வருடங்களாக அகதிகள் பற்றிப் பேசாத உங்களின் வார்த்தைகள், இனிமேல் எக்காலத்துக்கும் அவர்களுக்குத் தேவைப்படாது” என இறுதியாய் ஒரு சாபமும் இடுகிறார்; ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் வாழ் அகதித் தமிழர்களுக்கும் இங்குள்ள அகதித்தமிழருக்கும் எனது எழுத்தில், செயலில் போதாமை இருக்குமாயின், இனிவரும் நாட்களில் அதைக் களைந்திட முயலுவேன்.

தமிழகத்தில் அகதியாய் வாழும் உடன்பிறப்புகளுக்காக 35 ஆண்டுகளாய் எழுதியும் பேசியும் தொடருகிற பத்தினாதனுக்கு, ஒரு விசயம் பற்றிய புரிதலில் போதாமையுள்ளது; அது இந்திய சனநாயகம். இந்திய சனநாயகத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் வித்தியாசம் காணமுடியாது என்பது அது. வார்த்தைகள் தான் வேற வேற!

- காலச்சுவடு, ஜூன் 2019 வெளியான பா.செயப்பிரகாசம் பதிலுரை.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?