கிராம வாழ்வே படைப்பின் ஆதாரம்

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு ஆகியவற்றுடன் காலச்சுவடு மாத இதழ் இணைந்து நடத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் மாதந்தோறும் சிறப்புரையாற்றும் ஆளுமைகளின் வரிசையில், 21 ஆகஸ்ட் 2011ல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மதுரை இந்திய மருத்துவக் கழக அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களோடு கவிஞர்கள் சமயவேல், கலாப்ரியா, எழுத்தாளர்கள் சுரேஷ் குமார இந்திரஜித், சோ.தர்மன், கல்லூரி பேராசியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்புரையுடன் பா.செயப்பிரகாசத்தைப் பற்றிய அறிமுக உரையையும் நிகழ்த்தினார்.


பா.செயப்பிரகாசம் தன் உரையை மூன்று பகுதிகளாக முன்வைத்தார். முதலில் தன் பால்ய கால அனுபவம். இந்தி எதிர்ப்புக் காலத்தில் தனது பங்கு. இறுதியாகத் தமிழ்த் தேசிய எழுச்சி பற்றிய தனது கருத்துகள் என்று ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவர் பேசினார்.

முதலில் தன் பால்ய கால அனுபவத்தில் மீனாட்சி நூற்பாலை பற்றியும் அதன் அருகில் தான் கழித்த பள்ளிப் பருவ நாட்களையும் சுவாரசியமாகப் பேசத்தொடங்கிய அவர் தற்போது அந்த நூற்பாலை வீட்டு மனைகளாகப் பூர்ஷ்வாக்களிடம் சிக்கியிருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

தன்னை வளர்த்த பாட்டியை நினைவு கூர்ந்த தருணம் நெகிழ்ச்சியானது. முதல்வரிடம் பரிசுபெறுவதைக்கூடக் கௌரவக் குறைச்சலாகக் கருதிய அந்தப் பெண்மைக்குத் தலைவணங்கி வணக்கம் சொல்லத் தோன்றியது. “உன் வாயிலே கஞ்சியைக் காய்ச்சி ஊத்தே. நீ போய் வாங்கு, அப்புறம் உன் காலை உடைக்கிறேன்” என்று தன் பாட்டியின் மொழியைத் தன் குரலில் சொல்லியது யதார்த்தமாக இருந்தது. மீனாட்சி நூற்பாலை பற்றிய அவரது உரை சற்றுக் குறைவாகவே இருந்தாலும் அவரது காலத்தில் வாழ்ந்த பலருக்கும் தெரிந்த ஒரு நூற்பாலை பற்றிய செய்திகளும் சம்பவங்களும் இன்று பலருக்கும் தெரியவர வாய்ப்பில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டதால் தான் தலைமறைவாக இருக்க நேர்ந்ததையும் தன் சித்தப்பாவை இரண்டு மாதமாகச் சிறையில் வைத்திருந்ததையும் பா.செ விவரித்தபோது அன்றைய தமிழகத்தின் பிரதான அரசியலைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை முன் நின்று நடத்தியவர்களே தற்போது ஆங்கிலத்தைக் கையில் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள் என்றும் இந்தி பிரச்சாரக் காலகட்டத்தில் தான் பெற்ற இந்தி படிப்புச் சான்றிதழ்களை அதைக் கற்பித்த ஆசிரியர் முன்பாகவே கிழித்துப் போட்டு விட்டதாகவும் இந்தி திரைப்படங்கள் எதுவும் தமிழகத்தில் திரையிடப்படவில்லையென்றும் பி.எஸ்.வீரப்பா தயாரித்த ஆலயமணி என்னும் திரைப்படத்தின் இந்தி பதிப்பை வெளியிடமுடியாமல் அவர் மாணவர் பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

தனது படைப்புலகம் என்பது அனுபவத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் தான் என்றும் தனது புறவுலகம் சார்ந்த ஈடுபாடானது இலக்கியத்திலிருந்து சமூகத்தை நோக்கிய பயணம் என்றும் குறிப்பிட்டார். தான் நம்பிக் கொண்டிருக்கும் தத்துவம், கொள்கை, கோட்பாடு, அரசியல் போன்றவை அனைத்தும் இத்தன்மையிலிருந்து தான் வெளிப்படுகிறதென்றார்.

மதுரையில் தியாகராசர் கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பர்களின் பெயரையும் குறிப்பிட்ட பா.செ அடிப்படையில் தான் கிராமத்து மனிதன் என்றும் தன் பாட்டியின் சொலவடை, வாய்மொழிச் சம்பவங்களிலிருந்து படைப்பாக்கத்தின் கூறுகளைத் தான் கண்டடைந்ததாகவும் கூறினார். பின்னாட்களில் மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவமான உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றைத் தன் பாட்டியின் மூலமாகவே தெரிந்துகொண்டதாகவும் மார்க்சியச் சித்தாந்தம் தெரியாமலே மார்க்சியவாதியாக வாழ்ந்தவள் தன் பாட்டி என்றும் கூறினார்.

உழைப்பும் ஏழ்மையும் தன் படைப்பாக்கத்திற்கு மறைமுகமாகத் துணை நின்றதுபோல விளாத்திகுளம் பூமணிப் பாட்டி, சரஸ்வதிப் பாட்டி ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். இருவரையும் பேட்டியெடுக்கச் சென்றபோது அவர்கள் தன் பாட்டி போல் சொலவடைகள் சொல்லி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைக் குறிப்பிட்டு அவர்களே தன் படைப்பாக்கத்திற்கு ஆதாரமாக இருந்தார்கள் என்றார். இலக்கியத்தில் தனக்கு முன்னோடிகள் என்று யாரும் இல்லை. ஆனால் தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி ஆகியோர் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் தனது படைப்பின் அடிப்படைத் தத்துவத்தைத் தனது சிறுகதை ஒன்றின் மூலம் விவரித்தார். யதார்த்தமே தனது சிறுகதையின் பிரதானம் என்றும் புனைவை வசதிக்காகவே பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறி அதைச் ‘சவ ஊர்வலம்’ என்னும் சிறுகதையின் மூலம் விளக்கினார்.

தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவது மூலமே ஒரு படைப்பாளியாகவும் மனிதனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாகவும் சொன்னார். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்குப் பா.செ பதிலளித்துப் பேசினார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

நன்றி: காலச்சுவடு - அக்டோபர் 2011

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌