காசி ஆனந்தனின் கனல் மணக்கும் பெண்பா

தன்னையொரு மனுசியாக எண்ணாது, ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பெண்ணாகக் கருதுகிறாள். குடும்பம், வீதி, சமுதாயம் என அவள் உறவாடல் தளங்களில் புறக்கணிப்பு, அலட்சியம், அவமானம், அனைத்தும் நிகழ்கின்றன. வாழும் ஒவ்வொரு கணமும் வலுவந்தத்தின் பிடிக்குள் தள்ளப்படும் அவள்,  “கொஞ்சமாவது நம்ம ஒரு மனுசப் பிறவிங்கற நெனைப்பு இருக்கா இவங்களுக்கு” - என யோசிக்கிற ஒரு புள்ளிதான் அவளை மனுசியாக  மாற்றுகிறது.

தனது ஒவ்வொரு அசைவிலும் தன்மேல் செலுத்தப்படும் வன்முறையிலிருந்து, தப்பிக்கச் சில பெண்கள், பூஜை, புனஸ்காரம், ஆசாரம், தெய்வ வழிபாடு போன்ற உளவியல் தற்கொலைக்குள் செல்லுகிறார்கள். சிலர் உடல் ரீதியான தற்கொலைக்குள் போகிறார்கள்.

ஆண் மேலாண்மை கொண்டகுடும்ப வெக்கையிலிருந்து நிரந்தரமாக விடுபட, உயிர்த் துண்டிப்பு செய்து கொள்ளும் தன் கிராமத்துப் பெண்கள் பற்றி கவிஞர் சமயவேல் குறிப்பிடுகிறார்: எந்த நேரத்தில் எந்தத் தெருவில் ஏதாவது ஒருவீட்டிலிருந்து” டுன், டுவ், டுன், டுவ் என்று அகாலத்தில் எழும் உருனிச் சத்தம் கேட்க கேட்கப் பயத்தில் மனம் சுருளத் தொடங்கியது. ஒற்றை உருமி என்பது அகால மரணத்தின் அறிவிப்பு.............. எனது இளம் பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.இவர்கள் எல்லோருமே பெண்களாக இருந்தது கொடுமை. சுதந்திர இந்தியாவின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களைப் பெண்கள் முன்னெடுத்துச் சென்றதைப் பொறுக்க முடியாமல் ஆண்- மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்தது தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத காலம் அது.” (நூல்: புனைவும் வெளியும் - பக்கம்: 26, 27)

என் இளமைக் காலத்தில் கண்ட முதல் நேரடிக்காட்சி ஒன்று  நள்ளிரவில் நடந்தது. நாங்கள் காரில் விருதுநகரிலிருந்து மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம்: அனைவரும் ஆண்கள். 25 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான ஒரு பெண், சாலையின் இடது பக்கத்தில் வேகமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். உடம்பின் திடகாத்திரம் உள்ளத்துக்குள் இல்லை. ஒரு பூச்சி, பொட்டு அசைவுமற்ற ராப்பட்டு. எதிலிருந்தோ நழுவுவதற்கு ஒரு முடிவுடன் அந்தப் பெண் தன்னந்தனியாய் வைராக்கியத்தோடு நெட்டோட்டமாய் நடந்தார். காரை நிறுத்தி விசாரிக்க எண்ணினோம். காரில் பயணம் செய்த அத்தனை பேரும் ஆண்கள். ஏற்கெனவே கொந்தளிப்பில் வெருண்டு ஓடிக்கொண்டிருக்கும் அவர், எங்களை ஆணாகக் கருதிடும் ஆபத்து இருந்தது. “நீங்கள் எங்கு போகவேண்டுமோ, அங்கு இறக்கிவிட்டுப் போகிறோம்” என்று சொல்லும் திராணி, எங்களுக்கு வரவில்லை. பெண்ணுக்கு அடுத்துப்போய் காரை நிறுத்தி “அம்மா, எங்கே போகிறீர்கள்?” என்று விசாரித்தோம். ஒங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டை செய்யாமல் விறைப்பாய் நடந்து போனார். அவர் செல்லும் திசை எது?

பெண், முதலில் தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு, மனுசியாக உணரும் கலகம் - முதல் கலகம்.

பெற்றோர், உடன்பிறந்தோர் எனக் குடும்ப உறுப்பினர்களுடன் கொள்ளும் உராய்தல் - இரண்டாம் கலகம்:

உறவு, சுற்றம், வீதி, ஊர், கல்விக்கூடம், பணியிடம், பேருந்து, தொடர்வண்டிப் பயணங்கள் - எனப் பொதுச் சமூகத்தில் அவள் நடத்துவது  மூன்றாம் கலகம்.

ஒவ்வொரு அங்குல அசைவிலும், மனுசியாக உருத்திரட்சி கொள்ள, அவள் கலகங்கள் புரியவேண்டியிருக்கிறது: முதல் கலகம் முதல் மூன்றாம் கலகம் வரை, நிகழ்த்த அவள் பேராளியாக உருவெடுக்க வேண்டும். ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்ட குடும்பம், ஊர், உலகம் அனைத்தையும் கடந்து சுயமாய் இயங்கும் மீறலுக்காக, சுருக்கமாய் உரைத்தால், ‘ஆணை மனிதனாக்கு’வதற்காக!

“பெண்களால் சவுகரியங்களையும் சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவிக்கும் ஆண்கள், பெண் விடுதலைக்கான செயல்களை முன்னெடுப்பார்கள் என்று நினைத்தால் தவறு: பெண்கள் அவர்களது விடுதலையை அவர்களேதான் போராடி வென்றெடுக்க வேண்டும்” என எச்சரிப்பார் பெரியார்.

ஆக பெண் விடுதலைப் போராட்டம் என்பது, ஆணை மனிதனாக்குவதற்கான போராட்டம்!
எரிந்தது பார் அங்கு பெண்மை எனும் தீ !
கரிந்தது கண்டாய் ஆண் கயமை!
விரிந்தது
மண்ணுலகெங்கும் மகளிர்போர் வெந்திறல்.
கண்முனம் கண்டு களி
என்று சித்திரிக்கிறார் கவி காசி ஆனந்தன்.

நிராதரவாய் இருப்பதினும் உயிர் துறப்பது நன்று என்னும் முடிவுக்கு வந்து  அலைந்து குலையும் பெண்ணினத்தை “உனக்கு ஒரு குரலும் இரு கரங்களும் எதற்கு? எழுந்து நில்! நிமிர்ந்து நில்!” என்று தெம்பூட்டும் சந்தப்பாக்களாய் வந்துள்ளது காசி ஆனந்தனின் “பெண்பா”:

காசி ஆனந்தன் ஒரு ஈழத் தமிழ்த் தேசியர்: விடுதலைப் போரின் நாக்கு அவருடையது. மொழியை, மண்ணை நேசிக்கிற தேசியர்கள் – சாதியம், பெண்ணடிமை,   மதவாதம், தலித்துகள் ஒடுக்குமுறை போன்ற உட்கட்டமைப்பின் உயிர்க்கொல்லி நோய்கள் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்ற விமரிசனம் பரவலாகியுள்ளது. மொழி பற்றி உயிர் போகிறது போல் கத்துகிற பலர், அந்த மொழி பேசும் மக்களின் பிரச்சனைகள் பற்றி மவுனம் சாதிப்பார்கள்.

2

சங்ககாலக் கவிதைகளின் சிறப்பே அவை இயற்கையோடு இணைந்து கொண்ட உறவு : மக்கள் இயற்கையோடு கலந்தனர்: இயற்கையைப் புசித்தனர். இயற்கையில் கரைந்த வாழ்வியல் அவர்களுடையது.

இயற்கை போலவே, அவர்களுடைய கவிதையும் அமைதியானது: வாழ்வியல் கண்ணாடியில் இயற்கையை எவ்வாறு கண்டனரோ, அவ்வாறே மொழி வெளிப்பாட்டு ஆடிகளும்  கொண்டனர்.

தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டுடன் அணுக்கத் தொடர்பிலான அம்சம் இயற்கை என்பதை நாட்டார் வழக்காறுகள் நமக்குக் காட்டுகின்றன. நாவின் ஒலிப்பிலும், செவிகளின் கேட்பிலும் உயிர் ஏற்றப்பட்டு அசைந்தது நாட்டார் வழக்காறுகளின் வளப்பம். சங்க இலக்கியத்தில் வெளிப்படும்  வாழ்வு, பேச்சு, உரையாடல் என்றிவ்வாறான வாய்மொழித் தன்மைக்கு மூலம் நாட்டர் வழக்காறுகள். ஆதியில் வாய்மொழித் தன்மையுடன் வாழ்ந்த இவை தாம் – சொல் நகர்வில், செவிகளின் கேட்பில், சங்கப்பாடல்களாகப் பரிமாணம் பெற்றன. குறிப்பாக நற்றிணை , முல்லைத் திணைப் பாடல்களைச் சுட்டலாம்.

இனக்குழு தலைமைகள், வேளிர்கள், குறுநில மன்னர்கள், பேரரசர்கள் - நிலம், செல்வம், சொத்துக்களின் நீள, அகல, உயரங்களால் மதிப்புப் பெற்றனர். தாங்கள் முதன்மை பெற சண்டை, கலகம், போர் என பிறாண்டிக் கொண்டனர். இவைகளுக்கு மத்தியில் மனச் சாட்சிகளின் குரல்கள் பேசத் தொடங்கின.
 மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ;
உன்னை நினைத்தோ தமிழை ஓதினேன்
என்ற  வீரியமான குரலின் தடம்  தமிழில் பதிகிறது.

எதிர்வினையாற்றலின் மொழி உரத்துப் பேசுவது. அந்த வரிசையில் முதலில் வரும் ‘தீப்பிடித்த கானகம்’ என சித்தர் பாடல்களைச் சொல்லலாம்.
பறைச்சி என்பதேதடா, பணத்தி என்பதேதடா
இறைச்சி எலும்பினும் இலக்கம் இட்டிருக்குமோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரும் உமக்குள்ளே
இது காலம் வரையும் சமூகத்தில் நிலவிய வைதீகக் கருத்துக்கள், நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம் சகலத்தையும் உதைத்துத் தாக்கும் உத்வேக மொழி அது. மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப் படுகையில், அதற்கான புதியமொழி - சந்தம், ஓசை, சொற்கட்டு, சொல்முறை என வெளிப்பாட்டு ரூபம் மாறுகிறது: நேருக்கு நேர் பேசும் ‘வாய்மொழி மரபு’ முன்னிலையடைகிறது. கவிதை வழித்தடத்தில் புதிய ஓசை மரபு  உருவாகிறது. மொழி, இனம், பண்பாடு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, வர்ணாசிரம ஒழிப்பு – போன்ற விடுதலைக் கருத்தியல்கள் பொங்கிப் பிரவகிக்கும்போது, புதிய ஓசை மரபு வீரியம் அடைகிறது.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பாரதி சினமுறுகையில் வாய்மொழிக் கூறுகள் கொண்ட புதியமொழி உருவாகிறது; சினமாயினும்,வெஞ்சினம் பகர்வதாயினும் எழுச்சிக்கருத்தியலின் வடிவம் வேறு தான்.                 
அக்கா, அக்கா என்று நீ அழைத்தாய்
 அக்கா வந்து கொடுக்க
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே!
-அடிமைத் தனத்திலிருந்து விடுபடும் சிறகுகள் கொண்ட அக்கா ,வானும் மண்ணும் தன் வசத்தில் கொள்வதை - விடுதலையின் கணக்கிலாப் பரிமாணங்களைப் பாரதிதாசன் வெளிப்படுத்துகையில், கலகக் கருத்தியல் புது ஓசை மரபை உண்டாக்குகிறது.
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத  பொசுங்காத தத்துவம் நாம்
கவிஞர் மீரா போன்றோரின் பாடல்கள் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் குரலாக எழுந்தன. இந்த ஓசை மரபின் தொடர்ச்சியாய் கவிஞர் முடியரசன், வாணிதாசன், தமிழ் ஒளி, பொன்னி வளவன், தாராபாரதி என ஓர் வரிசை வருகிறது. இவர்கள் போன்றோரின் கவிதைகள் 60-கள், 70-களில் முக்கியத்துவம் கொண்டன.

60-களின் இறுதியில் “கீழவெண்மணி” படுகொலை; 48 உயிர்கள் சிறு குடிசைக்குள் அடைத்து தீக்கொளுத்தப்பட்டனர்.
ஆமை நடப்பது போல் நடந்தால் – நீ
ஆணவம் கொல்வாயோ, அடே
ஆண்பிள்ளை ஆவாயோ – தஞ்சை
ஊமைச் சனங்களை ஊருக்குள் எரிக்கையில்
ஒடுங்கிக் கிடந்தாயே – பின்னர்
ஊர்வலம் போனாயே
ஒடுக்கும் விலங்கினை ஊர்வலம் ஒப்பாரி
ஓங்கிப் புடைத்திடுமோ? – அடே
உதைத்துத் துடைத்திடுமோ?
வடகிழக்கு மாநிலமான வங்கத்தின் நக்சல்பாரியில் வசந்தத்தின் இடி முழக்கம் எழுந்த காலம் அது: சற்றேறக் குறைய அதே காலகட்டத்தின் தமிழ்நாட்டை இடி முழக்கமாய் ஆக்கவேண்டுமெனும் விழைவு கோவையைச் சார்ந்த கவிஞர் கனலின் புத்தோசை தரிசனமாய் வெளிப்படுகிறது. 
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும்
அதில் எண்ணெயை ஊத்துதே
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்கள்
எரியும் போது, எவன் மசுரைப்
புடுங்கப் போனீங்க
மொழி புதிது: சொல் புதிது: சொற்களின் சேர்மானம் புதிது: வாய்மொழி வழக்காறை இன்குலாப் கையாளும் லாவகம் புதிது: இந்தப் புத்தோசை மரபுக் கண்ணியில் தன்னை முன்னரே கோர்த்து  தனக்கென இடம் கொண்டவர் காசி ஆனந்தன்.

நாட்டுப்புற வழக்காறுகளில் வெளிப்படும் தர்க்கம் - குறிப்பாக தமிழ்ச் சொலவடைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் எதிர் தருக்கம் இவர் கவிப்பாக்களின் நவீன வடிவெடுப்பு எனச் சொல்லலாம்.
நாட்டியம் கற்றாய்... இசை கற்றாய்...
நாற்றிசைப் போட்டியில் வென்றாய் நீ போதுமோ?
வீட்டில்
நினையார் மதித்தார், நீ தோற்றாய்
என்று சொல்லுகையில் வெளிப்படும் இந்த எதிர் தர்க்கம், அதற்கொரு தீர்வையும் தன்னில் ஏந்தி வருகிறது.
நிமிர்க!
முனை நின்று வெம்போர் முடி 
என்று முடிகையில் எதிர் தர்க்கத்தின் உள்புதைந்து கிடக்கும் தீர்க்கமான மாற்று வெளிப்படுகிறது.
வதைக்கப் படும் பெண்ணுக்காகப்
பெண்தான் போராட வேண்டும்
என்கிறாய்:
அழிக்கப்படும் காட்டுக்காகக்
காடுதான் பேராட வேண்டும்
என்பாயோ?
தர்க்கம் கேள்வி போலத் தோன்றும்: கேள்வியல்ல: பதில் இன்னொரு ’பெண்பாவாய்’ வெளிப்படுகிறது.
இணையிலாப் பெண்ணுரிமை அறப்போரில்
துணை என
நல்லாடவர் இணைவர்
சனநாயக உள்ளங்கொண்ட ஆடவரும், பெண்ணுரிமைப் போரில் கை கோர்ப்பர் என விடை தருகிறார்.

ஈழ விடுதலைப் போரில் பெண் புலிகள்  என்னும் ஆலமரம், அடர்ந்து படர்ந்து வளர்ந்தது: பெண்களை இணைக்காமல், எந்த ஒரு விடுதலையும் சாத்தியமில்லை என்பதை முதன் முதலாய் உலகுக்கு எடுத்துரைத்தது: இந்தியச் சாத்தான் படை வான்வழியும் கடல் வழியும் இறங்கி விடுதலைப் போராளிகளை வேட்டையாட யாழ் நகரிலிருந்து ‘தட தட’வெனப் புறப்பட்ட வேளையில் கோப்பாய் கிராம எல்லையில் அடித்து நிறுத்தினர் பெண்புலிகள்:
வீர வலிமைக்கோர் மாண் குயிலி!
ஈழத் தமிழ் மாதர் இனம் (ப.45)
கரும்புலி ஆயினள் அங்ஙயற்கண்ணி!
பெரும்பகைவர் கப்பல் பெயர்த்தாள்!
அரும்போர்
நிகழ்த்தினாள் செங்கொடி! நீ அவர் வீரம்
தொகுத்தெழு வெல்லும் நின்தோள்! (ப.68)
இது பெண் யுகம்: இந்த யுகத்தைப் பெண்களுக்கு உரியதாக ஆக்கவேண்டும்.
நாடாளு மன்றினில் முன்னூறு நாற்காலி
ஆடவர்க்காம்; மாதர்க் கறுபதாம் !
கேடர்கள்
மக்களாட்சிக் கொள்கை மாண்பு முழக்கினார் !
எக்களிப்பா, இல்லை ஏய்ப்பு
நாட்டின் மக்களில் சரிபாதியான பெண்கள் அரசியல் உரிமைகளில் அலட்சியம் செய்யப்படுவதை இதனினும் கூடுதலாய் எவர் கேலி செய்ய இயலும்! பெண்கள் கோருவது மேலாண்மையல்ல: சமம்.
எம்மை ஒரு தெய்வம் என நீர் தொழல் வேண்டா!
உம்மைப் போல் எம்மை உணர்மின்கள்!
அம்மட்டே
என்பாள் ஒருத்தி! எவன் இல்லாள் சொல் கேட்பான்?
முன்போல் தொடரும் முரடு!
பெண் விடுதலையில் மானுட சமுதாயத்தின் விடுதலை அடங்கியுள்ளது. விடுதலைக் குரல் ஒருபோதும் சூக்குமமாய், அடங்கி ஒடுங்கும் மொழியாய் வெளிப்படாது: உரத்த ஒலி, நேர்படப்பேசும் மொழி, புத்தோசை மரபாய்த் தொடரும் என்பதனை நிரூபணம் செய்கின்றன “பெண்பாக்கள்”!

வெளியீடு :
காசி ஆனந்தன் குடில்
4/202, ஈசுவரன் கோயில் தெரு, 
தையூர், கேளம்பாக்கம் – 603 103
கைபேசி: 9444615410
விலை: ரூ.100

(காக்கைச் சிறகினிலே, ஏப்ரல்  2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌