பா.செயப்பிரகாசம் சிறுகதையில் தின்பண்டம்
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் ஒரு சிறுகதையில், ஒரு கரிசல் கிராமத்திலிருந்து பள்ளி விடுமுறைக்காக இன்னொரு கரிசல் கிராமத்தில் இருக்கும் தாய் மாமன் வீட்டுக்குப் போவார்கள் இரு பெண் குழந்தைகள். இரண்டு வீடுகளிலும் வறுமை பாய் விரித்துப்படுத்திருக்கும் நிலை. பிள்ளைகள், மாமன் வீட்டுக்குப் போனால் நெல்லுச்சோறும் தின்பண்டமும் கிடைக்கும் என நம்பிக்கொண்டு, குதூகலத்துடன் கிளம்புவார்கள்.
ஆனால், ஒரு மாத விடுமுறையும் எவ்விதத் தின்பண்டமும் கிட்டாமலே கழியும். கடைசி நம்பிக்கையாக ஊருக்குத் திரும்பும் நாளில், பக்கத்து நகரத்துக்குச் சென்று பஸ் ஏற்றிவிடும்போது, மாமன் சீனிப்பலகாரம் வாங்கித்தந்து பஸ் ஏற்றுவான் எனும் எதிர்பார்ப்புடன் குழந்தைகள் வெயிலைக் குடையாகப் பிடித்து, டவுனுக்கு நடந்து வருவார்கள்.
ஒவ்வொரு மிட்டாய் கடையாகக் கடந்து போய்க்கொண்டிருக்கும். மாமன், கடைப்பக்கம் தலையைக்கூடத் திருப்பாமல், நேரே பார்த்தபடி, குழந்தைகளின் கைகளைப் பிடித்தபடி பஸ் நிலையம் நோக்கி, வேகமாக நடந்துகொண்டிருப்பான். குழந்தைகள் சாலையைப் பார்க்காமல், கடந்துபோகும் மிட்டாய் கடைகளைப் பார்த்தபடியே, மாமன் இழுப்புக்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்.
கடைசி மிட்டாய் கடையில் வாங்கிக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும், கடைசிக் கடையைத் தாண்டும்போது சிதைந்துபோகும். குழந்தைகள் இருவரும் கடைசிக் கடையைத் தாண்டும்போது ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிடுவார்கள். கையில் காசு இல்லாத மாமன், குழந்தைகளைத் தேற்ற எந்த வார்த்தையும் இல்லாமல் குழந்தைகள் அறியாவண்ணம் அழுதபடி நடந்துகொண்டிருப்பான். ஓர் ஆழமான மௌனப்படம்போல இந்தக் காட்சி, வாசிக்கும் எவர் மனதையும் கரைத்துவிடும்.
நன்றி: டாக்டர் விகடன் - 16அக்டோபர் 2015
கருத்துகள்
கருத்துரையிடுக