ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்

இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடைமுறையிலிருக்கும் மக்களாட்சி வடிவத்தில் மக்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. அரைத்த மாவையே அரைக்கும் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம் என்ற சனநாயக உத்திகளால் வெகுமக்கள் மாவும் பெறவில்லை, தோசையும் பெறவில்லை. பூ, காய், கனி, கிளைகள் என செழுப்பம் தர வேண்டிய மக்களாட்சிச் செடியினை அரிக்கும் வேர்ப்புழு எது என்பதை இக்கட்டுரை பதிவு செய்கிறது.

5.1.2011 அன்று தொலைக்காட்சி செய்திகளை உருட்டிக் கொண்டிருந்தது.
  • காமன்வெல்த் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கல்மாதியின் வீடுகளில், அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை. தொடர்ந்து சி.பி.ஐ அலுவலகத்தில் கல்மாதியிடம் நேரில் விசாரணை
  • போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் இத்தாலிய தொழிலதிபர் குவத்ரோசிக்கும், இந்தியர் தரகர் வின்சத்தாவுக்கும் ரூ 41 கோடி கமிஷனாக (கையூட்டு) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்ற 41 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டுமென வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
  • முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாயிருந்த கே. ஜி. பாலகிருஷ்ணனின் இளைய சகோதரர், இரு மகன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்ததாக கேரள அரசு வழக்கு. இவர்களைப் பினாமிகளாக்கி சொத்துச் சேர்த்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீடிக்கக்கூடாது என டில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
- மூன்று செய்திகளையும் ஒரே நேரத்தில் கக்கிக் கொண்டிருந்தது ஒரு நல்ல தொலைக்காட்சி. பார்த்துக்கொண்டிருந்த அம்மா சொன்னார்.

‘சொத்து சேத்தாங்க, சொத்து சேத்தாங்கன்னு சொல்லிக்கிட்டதானே இருக்காங்க. ஒருத்தன் கிட்டயாவது சொத்தைப் பறிச்சாங்கன்னு இருக்கா? சனங்க பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருக்கலாம்’’

அண்மையில் வெளியான இதுபோன்ற செய்திகள் சிந்தனைக்குரியவை. அவை குறித்து சாதாரண அந்தப் பெண் சொன்னதும் நம் கவனத்தில் எடுக்க வேண்டியவை. மக்களாட்சி செயல்முறைக்கு வந்த கடந்த 60 ஆண்டுக் காலமாய் வெளியாகும்

செய்திகளின் ஒரு வரலாற்று தொடர்ச்சி இது. நமது ஊழல்கள் பாரம்பரியம் மிக்கவை. இந்தியா பெருமை கொள்ளத் தக்க பாரம்பரியங்களில் இதனை முதலாவது இடத்தில் கொள்ளலாம்.

1958-ல் நேரு, இந்தியப் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையிலிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் முந்த்ரா ஊழல், 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடைபெற்ற மாருதி கார் - நகர்வலா ஊழல்கள், 1987-ல் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி ஊழல், 1989-ல் நரசிம்மராவ் ஆட்சியின் தொலைத் தொடர்புத்துறை, சர்க்கரை இறக்குமதி, பங்குச் சந்தை, ஹவாலா ஊழல்கள், 1994-ல் சர்க்கரை ஊழல், 1996-ல் உர இறக்குமதி, மாட்டுத் தீவன ஊழல், 1997-ல் நில பேர பங்கு ஊழல், 2002-ல் வீட்டு வர்த்தக ஊழல், 2006-ல் பஞ்சாப் சிட்டி சென்டர் மோசடி, 2008-ல் வருமான வரி ஓய்வூதியக் கொள்ளை, 2010-ல் ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல் என்று ஆண்டு தவறினாலும் தவறாத ஊழல், மோசடிகள், கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன. பருவமழை பொய்த்தாலும் பொய்க்கலாம், ஊழலும் கொள்ளையும் பொய்க்காது என்ற புதுமொழியை சமகால ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு, 2-ஜி அலைக்கற்றை மோசடிகள் மெய்ப்பித்துள்ளன. அந்த சாதாரண பெண்மணி கேட்டது போல், எத்தனை நடந்திருந்தாலும், எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்பட்டதாகவோ யாரொருவரும் தண்டனை பெற்றதாகவோ இல்லை. ஆட்சி மன்றங்களும், வழக்கு மன்றங்களும் பாதுகாப்புக் கேடயங்களாய் இருக்கின்றன. முன்னாள் தமிழக நிதியமைச்சர் நெடுஞ்செழியன், ‘‘வழக்கு முடிந்து தீர்ப்பு வருமுன்னே நான் இறந்து போய்விடுவேன்’’ என்று சொன்னது போல், பலர் இறந்து போயிருக்கிறார்கள்

மக்களாட்சி அரசியலை எத்திசையில் கொண்டு செல்வது என்ற உயர்ந்த முடிவை எட்ட வேண்டிய தருணமிது.

உலகில் மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது 1871ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் பின்னரே. பிரெஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சியாய் உருவான ‘பாரிஸ் கம்யூன்’ இதற்கு ஒரு காரணமாய் - மூல காரணமாய் அமைந்தது. மக்களின் அதிகாரம் (கம்யூன்) நிலை நாட்டப்பட்ட பிரெஞ்சுப் புரட்சியில் ஆலைகள், நிறுவனங்கள் போன்ற முதலாளிகளின் கையிருப்புகளை கைப்பற்றிய மக்கள் அவர்களே நிர்வகிக்கத் தொடங்கினர். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கைவசப்படுத்தியவர்கள் அதைக்கொண்டு செலுத்தும் நிர்வாகத் திறன் பெற்றவர்களாயில்லை. அதில் போதிய பயிற்சி பெற்றவர்களும் அரிதாக இருந்தனர். அதிகாரத்தைக் கையாள்வது, தக்க வைத்துக் கொள்வது தொடர்பாய் அவர்களுக்கு பரிசோதனைக் காலமாக ஆகியது. இந்த இடைவெளியில் ஆளும் வர்க்கத்தினர் மீண்டும் அதிகார பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பாரிஸ் கம்யூன் என்ற மக்கள் நிர்வாக அமைப்பின் தோல்விக்கு, இது மட்டுமல்ல. மக்களதிகாரம் என்றநெருப்பு தங்களை முழுமையாகச் சூழுமுன் அதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயத்தை பிரித்தானிய ஆளும் வர்க்கம் முன் வைக்கிறது.

‘‘உங்களுக்கு அதிகாரம்தானே வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் பெறுவீர்கள்’’

என மக்கள் பிரதிநிதித்துவ சபையை உருவாக்கினார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்படாத, நிரந்தர அமைப்பான அதிகார வர்க்க கட்டமைப்பை அப்படியே தங்களுக்குச் சேவை செய்ய வைத்துக் கொண்டனர்.

சனநாயகம் இருவழிகளில் கொண்டு செலுத்தப்படுவது போல் காட்டிக் கொண்டாலும், அதிகார அமைப்புதான் மேலாண்மை சக்திகளின் நலன்புரி நிலையம். ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாக அலகு ஆளும் வர்க்க சக்திகளுக்கு ஊழியம் செய்யும் நிரந்தர அமைப்பு. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சபை என்பது போலியான கண்துடைப்பு அமைப்பு. ஒரு துப்புக் கெட்ட, புத்திக் கூறு இல்லாத பிள்ளை அது. இது காலம் வரை இதுவே மக்களாட்சி, சனநாயகம் என இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் காட்டப்பட்டு வருகிறது.

வரும் மே-2011ல் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. அரசியல் கட்சிகள் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவதாக தேர்தலை முன்னிறுத்துகின்றன. தேர்தல்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டுமிருக்கிற தொடர்கதையில், இது ஒரு சிறிய கதை. ஆனால் வழமையான கதை என்றாலும் ஒரு புதிய கதையை எழுதப் போவது போல், அரசியல் இயக்கங்கள் பூச்சாண்டி காட்டுகின்றன. ஒவ்வொரு தேர்தலும் புதிய கதைபோல் தோற்றமளித்து, பழைய கதைகளின் முடிவாக இருக்கப் போகிறது.

2

நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் போன்றவை மக்கள் நலன் நோக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன. இவை தீர்மானங்கள் நிறைவேற்று சபை (Resolution Body) மட்டுமே. தீர்மானங்களைச் செயலாக்கும் அதிகாரம் இச்சபைகளிடம் இல்லை. முடிவுகள் எடுத்ததற்கு அப்பால், இச் சபைகளுக்கோ, இதன் பிரதிநிதிகளுக்கோ எந்தக் கட்டுப்பாடும் அந்த முடிவுகளின் மேல் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் சாதாரண மக்கள் போலவே பார்வையாளராகவோ, கூடுதலாய் ஒரு விமரிச்சிப்பாளராகவோ நிற்கிறார்கள்.

தீர்மானங்கள் சபை (Resolution Body) நிறைவேற்றியதை நடைமுறைக்கு எடுத்துச் செல்வது அதிகார அமைப்பு. (Executive Body) இது செயலாக்கும் அதிகாரமும் வல்லமையும் கொண்டது இதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் அல்ல; இவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களைக் கட்டுப்படுத்தும் எந்தத் திறனும், யாதொரு அதிகாரமும் மக்களுக்கு இல்லை. ஒரு அதிகாரியின் இடத்தில் இன்னொருவர் வருவார். ஒரு பணியாளருக்குப் பதிலாய் மற்றொரு பணியாளர் தொடருவார். ஆனால் மொத்தமாய் அந்த அதிகார அமைப்பு (Beaurocratic setup) கட்டுக்குலையாது தொடரும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அல்லது மக்கள் பிரதிநிதி சரியாகச் செயல்படவில்லையென்றால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை மாற்றிக் காட்டுகிறார்கள். ஆனால் செயலாற்றும் அதிகார அமைப்பை ஒரு போதும் மக்களால் மாற்றி விட முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாற்றும் சனநாயகம் வழங்கப்பட்ட மக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பை மாற்றும் சனநாயகம் வழங்கப்படவில்லை.

தவறிழைக்கும் அதிகார வர்க்கத்தாரைத் தட்டிக் கேட்கத்தானே மக்கள் பிரதிநிதிகளைஅனுப்புகிறார்கள் என்ற வாதம் கேட்க நன்றாக இருக்கிறது. தவறிழைக்கும் அதிகாரிகளை, பணியாளரைத் தட்டிக் கேட்கச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் என்ன ஆனார்கள் என்பதைக் கேட்க கசப்பாக இருக்கிறது. தகராறு செய்த அரசியல் பிரதிநிதிகளை வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, மற்றுமுள்ள துறைப்பணியாளர்கள் கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். நீயா, நானா போராட்டம் இங்கு தொடங்குகிறது; அத்தனை பணியாளர்களும் ஆர்ப்பரித்து எழுவார்கள். ‘‘அரசியல் தலையீடு, அராஜகமாக நடந்து கொண்டார் எம்.எல்.ஏ என்று அரசு அலுவலகங்கள் முடங்கும். இங்கு வேறொரு யதார்த்ததையும் கருதிப் பார்க்கவேண்டும். தனக்குச் சாதகமான காரியம் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கான செயல் நடக்கவில்லையென்பதற்காக பெரும்பாலான அரசியல் பிரதிநிதிகள் அதிகார வர்க்கத்தோடு மோதுகிறார்கள். மக்கள் நலன் விரும்பிகளாய் அதிகார வர்க்கத்தோடு மோதுகிறவர்கள் மிகவும் குறைவு. வெகு குறைவானர்களும் தட்டிக் கேட்கும்போது அதிகாரக் கூட்டம் தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறது. இங்கு ஆளும் வர்க்க சேவைத் தன்மையிலிருந்து முரண்படும் எவரையும் அதிகார அமைப்பு அனுமதிப்பதில்லை.

தங்களைப் போன்றவர்களின் கையில் மக்களுக்காகச் செயல்படும் எந்த அதிகாரமும் இல்லையென்பதைத் தெரிந்து- அதிகார அமைப்பின் வல்லமையையும் புரிந்து கவலைப்பட்டவர் முதலமைச்சராயிருந்த அண்ணா. 1967-ல் ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்னும் தேர்தல் வாக்குறுதியைச் செயல்படுத்தும் உறுதிப்பாட்டில் இருந்தார். ‘‘சாத்தியமேயில்லை. நிதிநிலை நெருக்கடிக்கு உள்ளாகும்’’என அதே உறுதிப்பாட்டோடு எதிர்த்து நின்றார்கள் அதிகாரிகள். ‘‘மக்களுக்காக இதைக்கூடச் செய்ய முடியவில்லையெனில், முதலமைச்சராக இருந்து என்ன பயன்’’ - என்று அவர் கவலைப்பட்டதாகக் கூறுவார்கள்.

அதிகார அமைப்பின் திமிங்கல விழுங்குதலுக்குள் உள்ளிழுக்கப்பட்டு, அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவராக அவர் ஆகிப் போனார் என்பதை அவரது பிற்காலச் செயல்பாடுகள் வெளிப்படுத்தின. அவர் மட்டுமல்ல, முதலமைச்சர் இடத்தில் அமர்கிற எவருமே அதிகாரஅமைப்புடன் ஒன்றிப்போய் விடுவதையே பிசிரற்ற ஆட்சித்திறன் எனக் கொண்டனர்.

1967ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலகப் பணியாளர் சங்க மாநாட்டில் பேசிய அமைச்சர் ப.உ.சண்முகம் ‘‘எது செய்யவேண்டுமென நாங்கள் முடிவு செய்தாலும் அரசு ஊழியர்கள் நிறைவேற்றுவதில்லை. அவர்கள் நினைப்பதையே செய்கிறார்கள்’’ என்று விமரிசித்துப் பேசினார். நிறைவுரையாற்றிய முதலமைச்சர் அண்ணா ஒன்றைச்சுட்டிக் காட்டிப் பதிலளித்தார் ‘‘ஒரு அரசு அலுவலர் அல்லது பணியாளர் நினைத்தால் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்க முடியும் அன்றே அரசியல்வாதியாகி விடுவார். ஒரு அமைச்சர் நினைத்தால் கூட தனது பதவியிலிருந்து விலகி, அரசு அலுவலகராக முடியாது.‘‘ கேட்டுக்கொண்டிருந்த ப.உ.சண்முகம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பரித்தார்கள். நியமனப்படுத்தப்பட்ட அதிகார உறுப்பின் வல்லமையை அண்ணா புரிந்து அங்கீகரித்தமைக்கான ஆர்ப்பரிப்பு.

செயல்படுத்தும் அதிகாரம் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ கிடையாது என்பதுதான் இதன் சாரம். தங்கள் கையில் அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள்செயல்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி வேலூரில் 05.04.2010ல் நடந்தது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பலர் சென்னையிலிருந்து வருகின்றனர். சென்னையில் சொந்த மருத்துவமனை நடத்துகிற நிறையப் பணத்துக்காக பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற இவர்கள் காலை தொடர் வண்டியில் ஏறி 8.15 மணிக்கு காட்பாடி (வேலூர்) ரயில் நிலையம் வருவார்கள். அரசுப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின், ஒப்புக்கு சில நோயாளிகளைப் பரிசோத்துவிட்டு 11.30 மணிக்கு மறுபடி தொடர் வண்டி பிடித்து சென்னை புறப்படுவார்கள். ‘‘வந்தார்கள், கையெழுத்திட்டார்கள்; ஊர் திரும்பினார்கள் என தினமணி நாளிதழ் (6.4.2010)பொருத்தமாக தலைப்பிட்டு எழுதியது. வேலூர் மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு தந்தார்கள். மக்களின் பிரதிநிதிகளிடம் பிரச்சனையைக் கொண்டு சென்றார்கள். எந்த அசைவும் இல்லாத சூழலில் அன்று வழக்கம்போல் அரசு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்ப ரயிலடி வந்த மருத்துவர்களை நூறு பேர் பின்தொடர்ந்தார்கள். ரயிலடியில் மறித்துச் சூழ்ந்தார்கள். மொத்தம் எட்டுப் பேர். ஐந்து மருத்துவர்கள் எப்படியோ தப்பி ஓடினார்கள். மூன்று பேர் அகப்பட்டுக் கொண்டார்கள். ‘‘எங்களுக்கு பதில் சொல் எங்களுக்குப் பணி செய்..’’ என்பது மக்களின் கோரிக்கை. காவல்துறை வந்தது. அந்த இடத்தில் புகார் கொடுக்க மக்கள் தயாராயிருந்தும் காவல்துறை மருத்துவர்களைக் கைது செய்யாமல் பாதுகாப்பாக அழைத்துப் போய், மருத்துவமனைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்கள். பணியாற்றும் நேரத்தில் இல்லாத மருத்துவர்களைப் பற்றி முறையான துறை நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார். கண்காணிப்பாளர். தப்பிப் போன ஐந்து பேர் யாரெனத் தெரியாது என்றார் அவர்.

அதன் பின் என்ன நடந்தது? எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்தது. (முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் அறிஞர், அணுவியல் ஆய்வாளர் அப்துல்கலாமின் வாசகம் இது. இந்த வரிகளையும் இவரையும் காட்டியே மக்களை மொட்டையடிக்க முடிகிறது)

மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்களோ, மருத்துவத்துறை அலுவலர்களோ, கல்வி, காவல், வருவாய், பொதுப்பணி என்று எத்துறை அலுவலர்களாகினும், மாவட்ட ஆட்சியராயினும் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆளும் வர்க்க விதிகளின்படி செயல்படுபவர்கள். சமுதாயத்தை ஆதிக்கம் செலுத்தும் சக்திகளான எஜமானர்களால் கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தில் அதன் பல்லும் சக்கரமும் அச்சுமான அவர்கள் இரு காரணங்களுக்காக மட்டுமே செயல்படுவார்கள்.

ஒன்று - தங்களுக்கான வாழ்வை உருவாக்கி தருகிறவர்கள் யாரோ, அதன் பொருட்டு தமக்கானசெயலாற்று ஒழுங்கினை வகுத்து தந்தவர்கள் எவரோ-அவர்களுக்கான நலன்கள் விளையும் போது.

இரண்டு - இந்த வர்க்க சேவை மூலம் தமக்கும் ஆதாயம் கிட்டுமானால்

எடுத்துக்காட்டாக

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், ஏறக்குறைய 56 ஆண்டுகள் முன் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 1956-ல் கல்வி அமைச்சராயிருந்த சி.சுப்பிரமணியம் சட்டப் பேரவையில் முன்வைத்து நிறைவேற்றிய வேளையில் ‘‘தமிழனாகப் பிறந்த பயனை அடைந்து விட்டேன் என்றார். ‘‘அரசியாக வீற்றிருப்பதற்குப் பதிலாக பணிப் பெண்ணாக பணியாற்றக்கூடிய நிலை இடைக்காலத்தில் தமிழுக்கு ஏற்பட்டு விட்டது. மறுபடியும் இந்த அரசுரிமையை தமிழுக்கு அளிக்கிறோம்’’ என உரையாற்றினார். சட்டம் நிறைவேறி பொன்விழா ஆண்டு ஆகிவிட்ட பின்னும், சி.சுப்பிரமணியம் அடைந்தது போல், தமிழனாகப் பிறந்த பயன் இன்றுவரை எந்தத் தமிழனுக்கும் கிட்டவில்லை. பணிப்பெண்ணாகவே அரசு அலுவலகங்களில் நிற்கிறாள் தமிழ். தமிழை ஆட்சிமொழியாக்க செயல்முறைக்குக் கொண்டு வர வேண்டிய அதிகார வர்க்கம் துளி அக்கறையைக் கூட தோளில் சுமக்கவில்லை. எந்த ஆளும் வர்க்கம் அவர்களை இயக்குகிறதோ அதற்கு தமிழ் ஆட்சி மொழியாவதால் எந்த நன்மையும் இல்லை. என்பதையும் அறிவார்கள். இவர்களுக்கும் அதைச் செயல்படுத்தினால் ஒரு பயனும் இல்லை. இவர்களையும் இவர்களது குடும்ப வாரிசுகளையும் ஆங்கிலமும் இந்தியுமே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

‘‘ஏற்கனவே தயாராக இருக்கிற அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கான எதையும் சாதிக்க முடியாது’’ என்று லெனின் முன்மொழிந்தது, எல்லாவற்றுக்கும் பொருந்துமெனினும், ஒரு சுண்டைக்காய்ச் சான்றாக தமிழ் ஆட்சி மொழிச் சட்ட நடைமுறைப்படுத்தலைச் சொல்லலாம். இந்த நிர்வாக அமைப்பை பயன்படுத்தி மக்களுக்கான எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேர்தல் கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும் ஆட்சி அதிகாரத்துக்குள் போவது ஒன்றே குறியென இயங்குகிறார்கள். இலுப்பைப் பூச் சர்க்கரை கூடக் கிட்டாமல் இறுதியாய், செத்தாலும் நாடாளுமன்றத்திலேயே சாவது என்று ஒட்டுமொத்த அரசியல் செயல்பாட்டையும் நாடாளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடாய் குறுக்கிவிட்டார்கள்.

3

அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்கான திசையில் ஆற்றுப்படுத்துவதற்கும் பதில், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் அவர்களுடன் இன்று ஐக்கியப்பட்டுள்ளனர். மக்களின் முன்னேற்றத்திற்காய் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மடைமாற்றி - அவைகளை மக்களிடம் சென்றடைய ஒட்டாமல் செய்கிற-அதிகார வர்க்க வல்லமையில் இப்போது அரசியல் கட்சிகளும் இணைந்து விட்டன. கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதிகார வர்க்கத்திடம் கற்றுக்கொள்பவர்களாக தேர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு இயந்திரத்தை முற்றாக தன்வயப்படுத்துவதற்குப் பதில், அரசு இயந்திரம் இவர்களைத் தன்வயப்படுத்தியுள்ளது. அரசு இயந்திரத்தோடு கடுமையாக மோதியதாக இதுவரை காலமும் தமிழக முதலமைச்சர்கள் எவர் மீதும் குற்றசாட்டு இல்லை. எந்த அரசியல்வாதி ஆளுகைக்கு வந்தாலும் அந்த அரசியல்வாதியை அரசு இயந்திரம் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து விடும் என்பது நிதர்சனமாகியுள்ளது. மற்றொரு முக்கிய அம்சம் - தங்கள் மீது தாங்களே நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பது உண்டா? சுயவிமரிசன முறை என்ற கருதுகோளை உள்வாங்கிய மனதுகளுக்கு இது சாத்தியம். இந்த மனோ நிலை, தவறுகளுக்குத் தண்டனை தேடிக்கொள்வது மட்டுமன்று, தவறுகள் உண்டாகாத செயல்முறையை முதலில் கைக் கொள்ளும். அதிகார வர்க்கத்தில் ஒருவர் தவறிழைத்தால் மற்றொரு அதிகாரி குற்றச்சாட்டுகளை விசாரிப்பார். தண்டனை பரிந்துரை செய்வார். இது எப்படி சாத்தியப்படும், தன் மீது (தன் வர்க்கத்தின் மீது) தானே எடுக்கும் நடவடிக்கையை எப்படி அவர் செய்வார்? தன்னினம் சார்ந்த கூட்டாளிகளை காட்டிக் கொடுப்பதும், தண்டிப்பதும் ஆகிய கீழ்மைக் குணமாக அது கருதப்படும். தன்னை தண்டிக்கத் தயாரில்லாத அதிகார வர்க்கத்தின் பொதுக் குணாம்சத்தை இன்று அவர்களுடன் அய்க்கியப்பட்டுள்ள அரசியல்வாதிகளும் சுவீகரித்துள்ளனர்.

‘‘தி.மு.க அரசோ, அ.தி.மு.க அரசோ எந்த அரசாக இருந்தாலும் கல்விக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. இன்று எம்.எல்.ஏ.விலிருந்து மத்திய அமைச்சர்கள் வரை, சாதாரண அரசு அலுவலர் தொடங்கி ஓய்வுபெற்ற உயர் மட்ட அலுவலர்கள் வரை பலரும் அவரவரர் வசதிக்கேற்ப தனியார் நர்சரிப் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வரை நடத்துகிறார்கள். இவர்கள் எப்படி தாங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவிடுவார்கள்?

சமுதாயச் சுரண்டலில் தாங்களும் ஒரு அங்கமாக இருக்கும் அதிகார வர்க்கமும் அரசியல் வர்க்கமும் எப்படித் தங்கள் மீது தாங்களே நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கல்வியாளர் பேராசிரியர் கல்விமணியின் கேள்வி.

அரசியல்வாதிகள் திடீர் செல்வந்தர்களாகி நிற்பது மக்களின் கண்களில் உறுத்துகிறது. கூக்குரலிட வைக்கிறது. ஆனாலும் அரசு உத்தியோகத்தில் அடித்த கொள்ளைகள் எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை கார்ப்பரேட் முதலாளிகளாக ஆக்கியது. எத்தனை பேர் சுயநிதிக் கல்லூரிகள் என்றும் வியாபாரக் கூடங்கள், பொறியியல், வணிக, வளாகங்கள் உரிமையாளர்களாக வலம் வரவில்லை? அதிகாரத்துறையில் பெற்ற வல்லமை அவர்களை மக்களின் கண்களுக்குப் புலனாகாத வகையில் இயங்கும் ஆற்றலைத் தந்துள்ளது. இன்று அரசியல்வாதிகளை விடவும் சொத்துக் குவிப்புடன் அதிகாரிகள் வள வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் எவ்வாறு வந்தது?

‘‘லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதில்லை ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் எவ்வளவு என்று அரசே நிர்ணயம் செய்துவிட்டால், பொதுமக்களுக்கும் லஞ்ச அளவு தெரியும். அதிகாரிகளும் பேரம் பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

இன்று நீதிமன்றமே என்ன யோக்கியம் என்று கேட்கிற நிலையும் உருவாகியுள்ளது. அதன் பல தீர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாய் வந்துள்ளன என்பதை கருதிப் பார்க்க வேண்டும் (எ.கா.) போபால் விஷவாயு யூனியன் கார்பைடு, கேரளம் பாலக்கோடு பிளாச்சி மடா கோகோ கோலா வழக்குகள்

‘நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு விவசாயத் தொழிலாளருக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவது என்ற திட்டத்தின் கீழ் பல மாவட்டங்களில் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்களின் தலைமையில் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் பயனாளிகள் பட்டியலில் உண்மையில் பலனடைய வேண்டிய விவசாயத் தொழிலாளர்கள் இல்லை. அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் பலர் பட்டா பெற்றுள்ளனர். அல்லது பயனாளிகள் பெற்று இவர்களுக்கு மாற்றம் பெற்றுள்ளது. நிலமற்ற விவசாயிகள் பெயரில் பட்டாக்கள் பெற்று, பிறகு யாருக்கும் தெரியாமல் அரசியல் செல்வாக்குக் கொண்ட புள்ளிகள் தங்கள் பெயருக்கு மாற்றி ஆக்கிரமித்துள்ளார்கள் (தினமலர் 16.4.2010 நேரடி ஆய்வு) அதிகார வர்க்கம், அரசியல் பிரதிநிதிகள் இணைப்பில் சமூக வன்முறையில் ஆதிக்கம் செய்கிற தாதாக் கூட்டமும் மபியா கும்பலும் இணைந்துள்ளன. அதிகார வர்க்க அரவணைப்பிலும், அரசியல் செல்வாக்கிலும் இவர்கள் வலம் வருகின்றனர்.

‘‘மபியா கும்பல்களும், அரசு அலுவலர்களும், நீதித்துறைப் பணியாளர்களும், கள்ளக்கூட்டு வைத்துச் செயல்படுகின்றனர். எனவே கண்டும் காணாமல் பலர் இருந்து விடுகின்றனர் அப்படியே அசட்டுத் துணைச்சலுடன் எவராவது தலையிட்டால், அவர்கள் மீது ஏதாவது சட்டப்பிரிவின் கீர் வழக்குப் போட்டு, தங்களை விட்டால் போதும் என்று அவர்கள் கதறுகிற அளவு அலைய விடுகின்றனர். இப்போது சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் யாருக்கும் அச்சம் என்பதே கிடையாது. சட்டப்படியானஆட்சி என்பதெல்லாம் இல்லை’’ என எல்லாமும் முறைமை கெட்டு, திரிந்து, பாழ்பட்டுப் போயிருப்பதை அரசியல் நோக்கர்கள் மனவலியுடன் குறிக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் மேல்நிலை வர்க்கமாகத் திரட்சி பெற்று அதிகாரக் கூட்டத்துடன் மாஃபியாக்களுடன் ஒன்றாகிவிட்டார்கள் என்பதை இச்செய்திகள் தெளிவாக்குகின்றன.

உண்மையான அதிகாரம் யார் கையில் தங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேறு வழியில்லை. ஆதிக்க வர்க்கக் குழுக்களும், செயல்பாட்டு அதிகாரமுள்ள அரசு இயந்திரமும் எது என்பதை இவர்களின் அரசியல் வாழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நுணுக்கத்தைக் கிரகித்துக்கொண்ட பின்னும், மக்களை தேர்ந்தெடுக்கும் சபைகளிடமே அனைத்தும் உள்ளதாக தொடர்ந்து நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு அமைப்பின் சுயரூபத்தை, மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமல் தாங்கள் ஆட்சி அமைப்புக்கு வந்து விட்டால், சுபீட்சம் வீடு தேடி வந்து தட்டும் என நம்பிக்கை மோசடியை வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரப் போகிறார்கள்.

‘வைக்கோல் பட்டடை நாய்’ என்ற சொல் வழக்கு ஈழத்தில் உள்ளது. தானும் செய்யாது, மற்றவர்களையும் செய்யவிடாது; அதையே தேர்தல் கட்சிகளும் செய்கின்றன.

நாற்பது ஆண்டுகள் முன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவு வருகிறது. அக்காலத்தில் ராம் மனோகர் லோகியாவின் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் அந்த நாடாளுமன்ற உறுப்பினர். தடிமனாய் ஒரு பனிக்கட்டியைக்கொண்டு வந்திருந்தார். அருகிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் அளித்து அடுத்தவருக்கு அளிக்கும்படி சொன்னார். ஒவ்வொரு உறுப்பினராகப் போய் கடைசி உறுப்பினர் கையில் வந்தபோது தண்ணீர் மட்டும் ஒட்டிக் கொண்டு இருந்தது. அதைக் காட்டி அவர் சொன்னார் ‘நாம் மக்களுக்காகத் தீட்டுகிற திட்டமெல்லாம் நாட்டின் கடைசி குடி மகனுக்கு போய்ச் சேருகிறபோது கிடைப்பது இதுதான்’’ என்று சுட்டிக் காட்டினார். பனிக்கட்டி கரைந்த கரைந்து தண்ணீராய் ஆவது போல், அதிகார வர்க்கமும் அரசியல் வர்க்கமும் இணைந்து உறிஞ்சி, உறிஞ்சி மக்களைச் சென்றடையும் போது ஒன்றுமில்லாமல் போகிறது என்பது அதன் பொருள். இதனினும் கலைபூர்வமாக உவமையை வேறு எவரும் நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது.

4

செயலாற்று அதிகாரம் அற்ற மக்கள் சபைகள் (Resolution body), செயலதிகாரம் கொண்ட அதிகாரவர்க்க உறுப்பு (Executive body Beaucrocratic setup) என இரண்டு அடுக்கு முறையில் இன்றைய சனநாயகம் இயங்குகிறது. இவ்வாறு இரண்டு பிரிவாய் ஆக்கி வைத்துக் கொண்ட தன்மையில்தான் ஆளும் வர்க்கங்கள் என்னும் மேலாண்மை சக்திகள் இன்னும் நிலை கொண்டு வருகின்றன. பிரிட்டனில் தொடங்கிய இந்த மக்களாட்சி இன்று உலகம் முழுதும் பரந்து நிற்கிறது.

மேலாண் சக்திகள் சனநாயகம், தேர்தல், வாக்களிப்பு என்ற பெயரில் மக்களை உமி கொண்டு வரச் செய்தார்கள். உமியில் புரளும் பன்றிகளாக மக்களை வைத்து, தங்கள் கையில் அவலைப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். தேர்தல் என்ற பெயரில் உண்மையான அதிகாரம் எங்கு போய்ச் சேருகிறது என்பதை தரகர்களான அரசியல்வாதிகள் பேச மாட்டார்கள். அடிப்படையிலே மக்கள் விரோதமான இந்த அரைவேக்காட்டு மக்களாட்சியை தமது சுய நலன் காரணமாய் மக்களுக்கானது போல் காட்டுவதில் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள் தேர்தல் அரசியல் கட்சிகள்.

இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய சரியான சமூக விஞ்ஞானப் புரிதலுள்ள இயக்கங்களோ ஆற்றலுள்ள இயக்கங்களாக இல்லை. இன்றளவும் அவை சிறு குழுக்களாகவே இயங்குகின்றன. தேர்தல், சனநாயகம் பற்றிய நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்தும் இயக்கங்களாய் வளர்ச்சி கொள்ளவில்லை.

மக்களதிகாரம் என்ற பெருநெருப்பு தங்களைச் சூழாது வெளியேறும் உபாயமாக பிரித்தானிய முதலாளிகள் தோற்றுவித்த நாடாளுமன்ற சனநாயகம் என்ற நெருப்பு மக்களை மூச்சு முட்டச் செய்து கொண்டிருக்கிறது.

1967-ல் அரச பதவியேற்றதும், மக்களக்கு நன்மை ஆற்ற வேண்டுமென்ற நினைப்பிலிருந்த அண்ணா, அதிகார இயந்திரத்துக்கும் மக்களுடைய நலனுக்குமான முரணில் முறுக்கிப் பிழியப்பட்டார். ‘‘அரசாங்கம் என்பது நானிருக்கும்வாடகை வீடு. நான் ஒழுங்காக இருக்காவிட்டால், வீட்டுக்காரன் வெளியேற்றி விடுவான்’’ என்று வாக்காளர்களைப் பற்றிச் சொன்னார். அண்ணா கருதியது போல் வீடு வாக்களார்களுடையது அல்ல; குடியேறுகிறவர்கள் தாம் அரசியல்வாதிகள். வீட்டுக்கு உரிமையாளன் ஆளும் வர்க்கமே என்பது உண்மை. மக்களின் வல்லமை பற்றிய அண்ணாவின் புரிதல், நிரந்தர அதிகார அமைப்பின் வல்லமை பற்றிய அறிதலாக வளர்ச்சிபெறாமல் போனது என்பது அறியப்பட வேண்டியது. எங்கேயோ இடிக்கிறது என அவர் கருதியிருக்கக்கூடும். எல்லாவற்றையும் தடுக்கிற, இடிக்கப்பட வேண்டிய சுவரை- தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாயிருந்த அண்ணாவும் கடந்து போய்விட்டார்.

உடைக்க வேண்டியது எது, உருவாக்க வேண்டியது எது? என்ற தெளிவு மக்களிடம் மையம் கொள்ளவில்லை. மக்கள் சக்தியை பின்னால் வைத்திருக்கிற தேர்தல் கட்சிகள், இதை மக்களிடம் கொண்டு சேர்க்க மாட்டார்கள் ஆளும் வர்க்க மனோநிலைக்குள்ளும், வாழ்வியலுக்குள்ளும் அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். இந்தத் தேர்தல் போய் இன்னொன்று, நிகழ்கால ஆட்சியாளர்கள் மாறி எதிர்கால ஆட்சியாளர்கள் என்ற கனவுகளில் மக்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நடைமுறையிலுள்ள மக்களாட்சியை இதனினும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வது எவ்வாறு? இன்றுள்ள மக்களாட்சி அமைப்புக்கும் மேலாய், கூடுதலான ஒரு ஆளுகை அமைப்பினை உருவாக்குவது எங்ஙனம் என்ற வழிமுறையை எடுத்துப் பேச வேண்டிய தருணமிது.

குற்றப்பட்டியலுள்ள குற்றவாளிகளை மக்கள் தேர்வு செய்து சட்டப் பேரவைக்கு நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். 2010 அக்டோபரில் நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் குற்ற வழக்கில் தேடப்படுகிற 219 பேர் போட்டியிட்டார்கள். 129 பேர் கொலை கொள்ளை போன்ற கடுமையான குற்றச்சாட்டுள்ளவர்கள். குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்களுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் மான ஈனம் பார்க்காமல் தேர்தல் வாய்ப்பு அளிக்கின்றன. இங்கும் அதுபோல் நடைபெறுகிறது. நடைபெறப் போகிறது.

இம்மாதிரி நிலைமைகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்ற சிந்திப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சனநாயகத்திற்கு இன்று பலமுகங்கள் உண்டு. சாதி, மதம், குழு, வட்டாரம், பணம் போன்ற பன்முகங்களுடன் அது வருகிறது. ‘‘மக்கள் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவர்கள். அதனால் தேர்தல் என வருகிற வேளையில் இதில் ஏதாவது ஒன்றினால் உள்ளிழுக்கப்ட்டு விடுகிறார்கள்’’ என்றொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. கல்வியறிவு மட்டுமே சிந்திப்பை உருவாக்குவதில்லை. சிந்திக்கும் திறனில்லாதவர் எவராக இருப்பினும் கல்வியறிவு இல்லாதவர்களாகவே கருதப்பட வேண்டும். சிந்திக்க முடியாதவர்களிடம் கல்வி என்பது யாந்திரிகமான அடையாளம். கல்வியை விட, கூடுதலாய் வாழ்பவனுபவங்கள் சிந்திப்புத் திறனை வளர்க்கின்றன. பொதுமக்களின் அனுபவப் பேச்சுக்கள், இந்தப் புள்ளியிலிருந்து பிறப்பவை. எனவே கல்வியறிவுள்ளவர்கள் இல்லாதவர்கள் என்பதல்ல, சிந்திப்புக்கூர்மையுள்ளவர்கள் அற்றவர்கள் எல்லோரையும் தேர்தல் கொட்டகைக்குள் அடைத்து வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பணநாயகம், சாதி நாயகம், மத நாயகம், குழு, வட்டார நாயகம் என பல நோய்களை கொ ண்டதாக இன்றைய சனநாயகம் காட்சிதருகிறது. இத்தனை கோர ரூபங்களும் சனநாயக ஆட்சியின் பிறவிக் கூறுகளே. அது தன்னுடைய தோற்றத்தின் போதே இந் நோய்களுடன்தான் பிறந்து வளர்ந்தது. இந் நோய்களை அகற்றுகிற, இனி எக்காலத்திலும் இவை அண்டமுடியாத மக்களாட்சியின் புதிய வடிவத்தை நாம் கண்டடைந்தாக வேண்டும்.

பொறியியல் கல்லூரி படிக்கும் ஒரு மாணவிக்கு விஷக் காய்ச்சல். மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் வைத்தியம் பார்க்காமல், ஜெபம் செய்து நோயைப் போக்கிவிட முடியும் என்று கருதினார்கள். மகள் வெளியில் செல்லவும் அனுமதியில்லை. ஒரு மாதத்தில் நோய் முற்றி, ஜன்னி கண்டு அந்தப் பெண் இறந்து போனாள். அது போலவே நல்லவர்க்கு வாக்களிப்போம், கண்ணியமானவர்களைக் கண்டுகொள்வோம். சாதி பாரோம், மதம் பாரோம், பணம் வேண்டாம், கட்சி வேண்டாம் என்பன போன்ற நன்னெறிப் போதனைகள் சனநாயக அமைப்பினுடனே பிறந்த உள்நோயைப் போக்கி விடாது. மாணவியின் உயிர் வாங்கிய ஜெபம் போல் நீதி போதனையளவிலான யோசனைகளும் மானுட குலத்தின் உயிர் தின்று தீர்த்து விடும். மாண்புகள் அழிந்த மானுடகுல சபலத்தை என்ன செய்யலாம்?

ஒரு நல்ல அரசியல் தலைமை, சொல்லும் செயலும் ஒன்றாய் இயங்குகிற தலைமை - இன்று வந்துள்ள சனநாயகச் சீர்கேடுகளை சரி செய்துவிடும் என்றும், நேர்மையானஅரசியல் தலைமையே இன்றைய தேவை என்றும் பரிந்துரை வருகிறது. நடப்புச் சூழலில் நேர்மையான அரசியல் தலைமைகள் உருவாக முடியாது. ஒரு வேளை உருவானாலும் நோயுடன் பிறந்த இந்த சனநாயக வடிவத்துக்குள் அவர்களும் சீழ்ப்பட்டுப் போவார்கள் என்பது நிதர்சனம்.

மக்களாட்சி என்னும் கருத்தாக்கம், அதைச் செயல்படுத்தும் ஆட்சிக் கட்டமைப்பு-இன்றுவரையான ஆட்சி வடிவங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் எந்த ஐயமும் இல்லை. தேர்தல் போன்றவற்றால் மக்கள் தம்மைத் தாமே ஆட்சி செய்து கொள்கிறார்கள் என எண்ணப்படுகிறது. இது ஒரு கற்பிதமே தவிர இன்று வரை அதுபோல் நடந்தேறவில்லை. தேர்ந்தெடுக்கப்படுவதில் தான், மாற்றுவதற்கான உரிமையும் தங்கியுள்ளது. ஒன்றை மாற்றும் உரிமை, மற்றொன்றை மாற்ற முடியாத கையறுநிலை இந்த முரணே இன்றைய நமது சனநயாகக் கோளாறு

அறைகுறைப் பிரசவமாகிய மக்களாட்சியை ஆரோக்கியமான முழுக் குழந்தையாக மாற்ற வேண்டும். இன்று அது பாதி வடிவத்திலேயே உள்ளது. அல்லது போலி வடிவத்தில் இருக்கிறது. அறிவியல் போன்ற ஒன்றை போலி அறிவியல் என்பது போல் இதனை போலி சனநாயகம் எனலாம்.

மக்களாட்சி இன்று இரு கட்டுமானங்களில் இயங்குகிறது. ஒன்று - தீர்மானங்கள், முடிவுகள் எடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் சபை, மற்றொன்று - செயலாக்க அதிகாரம் கொண்ட அதிகார நிர்வாக அமைப்பு இவ்விரு கட்டுமானங்களையும் ஒன்றாக்குவதின் மூலமே மக்களால், மக்களுக்காக நடக்கும் ஆட்சியை உருவாக்க முடியும். அதிகாரத்துவ அமைப்பு இல்லாமல் போகும் அல்லது அழிக்கப்படும். தீர்மானங்கள் நிறைவேற்று சபையே செயலாற்றும் சபையாகவும் மாற்றப்பட்டாக வேண்டும். மாற்றப்பட்டால் தீர்மானங்கள் நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதிகளே அவைகளை நடைமுறைக்கு எடுத்துச் செல்பவர்களாக இருப்பார்கள். அதிகாரத்துவ அமைப்பை இல்லாததாக்கி, மக்கள் சபைக்கு செயலாற்றும் முழு உரிமையும் அளிப்பதன் மூலம் உண்மையான சனநாயகம் பிறக்கும். மக்களாட்சியின் உச்சபட்ச வடிவம் - இதுவாக இருக்கும். மக்களுக்கு முழு அதிகாரமும் அதனால் முழுப் பலா பலன்களும் கிடைக்கச் செய்கிறதை விட, உயர்ந்ததான சனநாயகம் என்ன இருக்கக்கூடும்?

இங்கே சில கேள்விகள் எழுகின்றன. தீர்மானங்கள் நிறைவேற்றும் அதிகாரமும் அவைகளைச் செயலாற்றும் அதிகாரமும் ஒன்றிணையும்போது, மக்கள் பிரதிநிதிகளே செயலாற்றும் நிர்வாகிகளாகவும் இருப்பது சாத்தியமாகுமா? நிர்வாகத் திறன், பொறியியல், கல்வி, தொழில் நுட்பத் திறன்களில் வல்லமையுடையோர் செய்த காரியங்களை இவர்கள் நேரடியாக களத்தில் நின்று ஆற்றுவார்களா?

எடுத்துக் காட்டாக ஒரு பாலம் கட்டுவது, அணை எழுப்புவது, மின் உற்பத்தி நிலையம் அமைப்பது போன்றவைகளுக்கான தொழில்நுட்ப ஆற்றலை எவ்வாறு பெறுவார்கள்.

இவை போன்ற தொழில்நுட்ப ஆற்றலைப்பெறுவது என்பது வேறு, அதைப் பயன்படுத்துவது என்பது வேறு, மக்கள் பிரதிநிதிகள் அதைப் பயன்படுத்தும் வல்லமையுடன் இருப்பார்கள். அதற்கான மக்கள் சனநாயகக் குழுக்களை உருவாக்கியிருப்பார்கள். பாலம் கட்டுவதில், அணை உருவாக்குவதில், மின்னுற்பத்திக் கட்டுமானத்தில் - மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கோடு இருக்கிற வல்லமையுடைய பொறியல் வல்லுநர்களை மக்களின் சனநாயகக் குழுக்கள் தேர்வு செய்வார்கள். அவர்கள் அந்தத் திட்டத்தை சிறப்பாகச் செய்து முடித்தால் அதற்கடுத்த பணி தரப்படும். அதிகார வர்க்கம் என ஒன்று அற்றுப்போன நிலையில் மக்கள் பயன்பாடு ஒன்றே முன்னுரிமை பெறும். மக்களில் ஒருவராக இந்த வல்லுநர் மாறுகிறபோது அவருடைய மனித வள ஆற்றல் முழுமையாய் சமுதாயத்தைச் சென்றடையும்.

தீர்மானங்கள் நிறைவேற்றும் மக்கள் சபையும் செயலாற்றும் அதிகார சபையும் ஒன்றாக்கப்படும் புதிய செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் மக்களாட்சியின் உச்சபட்ச வடிவமாக அமையும். இதை செயல்பாட்டுக்கு, நடைமுறைப்படுத்துதலுக்கு, எடுத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகளை சனநாயக வழிகளில் சரி செய்து கொள்ளலாம்.

நோய் - மக்களாட்சி என்னும் செடியின் வேரில் உள்ளது. இதனினும் கூடுதலான ஆட்சி வடிவம் இல்லை என்ற அரசியல் தேடுதலற்ற மனப்போக்கிலும் குடிகொண்டுள்ளது. வேப்பம் புண்ணாக்கை கரைத்து ஊற்றினால் வேர்ப் புழுக்களை சாகடிக்கலாம். மூல மருந்துத் தேடல் அற்று, இந்தக் கட்சியை மாற்றி இன்னொரு கட்சி, அதை மாற்றி மற்றொரு கட்சி என்ற ரசாயன உரங்களால் புதிய புதிய நோய்கள் பெருகிக்கொண்டே போகும்.

இதுகாலம் வரை நலனடைந்த ஆதிக்க சக்திகள் தங்கள் இருப்பை இழக்க இணங்க மாட்டார்கள். ஆதிக்கக்குழுவினருக்கும், அவர்களின் முகவர்களான தேர்தல் கட்சிகளுக்கும், அதிகார நிலையை இழப்பதென்பது வாழ்பை இழப்பதாகும். வாழ்வை இழக்க எவர்தான் சம்மதிப்பார்கள்?

உடைக்க வேண்டியது எது, உருவாக்க வேண்டியது எது என்பதை முன்வைத்துச் சிந்திப்போர், செயல்படுவோர் எதிர்வரும் தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கும் அறிஞர்களே. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்

 ‘‘அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். மேதைகள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். (Politicians think about next elections. Statesman think about next generations)”

- பா.செயப்பிரகாசம்

நன்றி: தீராநதி மார்ச் 2011, கீற்று 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?