சூரியதீபன் கவிதைகள் - களந்தை பீர் முகமது

பா.செயப்பிரகாசம் கதைகளால் அறியப்பட்டவர். அவரது சிறுகதைகளின் கவித்துவமான நடையில் ஆரம்பம் முதலாகவே தோய்ந்து எழுந்தவன் நான். ஆனால் அந்தக் கவித்துவம், கதைகளை உண்டு ஜீரணித்து விடவில்லை. அது கரிசலின் சேர்மானம். அவ்வளவுதான். சிறுகதைகளின் வீரியத்தைக் கொண்டுள்ள கவிதைகளாலும் (கவிதைகளுக்காக பா.செ. ஏற்றுக் கொண்ட புதிய பெயர் இப்போது சூரியதீபன்). பா.செ.யை அறிந்து கொள்ள, இத்தொகுப்பின் கவிதைகள் உதவுகின்றன. தொடர்ந்து சமூக யதார்த்தங்களே கவிதைகளிலும் இழைகின்றன. ஆனாலும் இவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் வெவ்வேறு தொனிகளைக் கொண்டவை.

குறிப்பால் உணர்த்துதலும் படிமங்களும் சொற்செட்டுகளும் நுணுக்கமும் கலந்து உருவாகும் கவிதைகள் ஒரு வாசகனின் மனதில் கற்பனை ஊற்றைப் பெருகச் செய்யவும், உள்மனத் தேடலின் ருசியின் இருண்மைப் பகுதிகளில் சஞ்சரிக்கவுமமேயான குறுகிய நிலைகளில் அவை உள்ளன. எப்போதும் கற்பனையின் சாத்தியப் பாடுகளை மொழியலகுகளின் மூலமாகத் தேடுவதை, கலாரசனையின் உயர்நிலையாகப் பாவிப்பதோடு, கவிதையின் தொழிற்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம? அவ்வாறாயின் ஒரு படைப்பின் நோக்கம், அது சமூக  மனங்களின் மேல் செலுத்தும் தாக்கம் போன்றவை பற்றி தொடர்ந்து மவுனமே காக்க வேண்டியிருக்கும். மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதின் மூலமாக, சமூகத்தை அதன் மொத்த நிலையிலிருந்து மதிப்பிடல் இயலாது. இதனைக் கருத்தில் கொள்கிற பா.செ. ஒரு கவிஞனுக்குரிய இடத்தை எட்டிப் பிடிக்கிறாரா? அந்த உலகில் அவரது பிரசன்னம் எப்படி நிகழ்கிறது?
உள்ளூர் நதி என்பதால்
நதிநீர்ப் பிரச்சினை இல்லை
நதியில் பிரச்சினை.
வெண்னிலவும் வெள்ளை நடுவெயிலும்
ஆயிரம் மினுக்கட்டாம் பூச்சிகளை
அலைகளில் உருட்டும் ஆற்றோடு
எந்தப் பிரச்சினையும் இல்லை எங்களுக்கு.
(நதியோடு பேசுவேன்)
இத்தகைய வரிகளின் வாயிலாய் ஓர் அழகியல் தளமும் சமூகப் பிரக்ஞையும் மெல்ல எழுகின்றன. வாசக மனம் ஒரு எதிர்பார்ப்புக்குத் தயராகிறது. திடுமென்று ஒரு தாக்குதல் போல,
தண்ணீரின் குழந்தைகள்
தண்ணீர் குடித்துச் செத்ததாம்
என்ற வரிகளே வெள்ளமாய் வந்து அடித்துக் கொண்டு போகின்றன.
கவிதையின் ஆதாரபூர்வமான கட்டமைப்பு சேதமுறாமல்  மூளைக்குள் இறங்குகிறது - ஒரு மின்னலின் நீட்சி. வாசகனைச் சமூக அநீதிகளின் மீதான உணர்ச்சிக் கொதி நிலைக்குக் கலாபூர்வமான வரிகளூடே அழைத்துச் சென்று விடுகின்றன இவ்வரிகள். இது அவரது கவிதைகளின் மொத்த ஊடுபாவாகவே அமைந்துள்ளது.

சிறுகதைகளின் படைப்பாளி, தானும் கவசம் தரித்து வாளோடு புகுந்து விட முடிவதில்லை. ஆனால் உணர்வுகளை முறுக்கியேற்றுகிற ஒரு மொழியைக் கவிஞன் கவிதைக்குள்  ஏற்றிவிடமுடியும். இது நமது தமிழ்க் கவிதைகளின் தொன்மையான மரபும் கூட. ரசிகனின் உணர்ச்சிக் கொதிநிலை எத்தனை டிகிரியில் இருக்கிறது என்பதை அறிந்து கவிஞனும் உள்ளே நுழைந்து கொள்ள, நம் மரபு தாராளமாகவே வாசலைத் திறந்து வைத்துள்ளது. சிறுகதைகளுக்குரிய சில கருக்கள், இவரிடம் கவிதையாகப் பரிணமித்துக் கொள்ள இதுவே தக்க தருணங்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌