தமிழக உணர்வாளர்கள் லண்டன் மாநாட்டைப் புறக்கணித்தது ஏன்?

"லண்டன் உலகத் தமிழ் மாநாடு முயற்சி வரவேற்கத் தக்கதுதான். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்க சுதந்திரமான சர்வதேச நீதிவிசாரணை நடத்தப்பட்டு, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு, பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானம் போட்டு ஈழத் தமிழர் தம் உரிமையை நிலை நாட்ட சர்வதேச மாநாடு தேவை தான். ஆனால், தங்கள் மீதான உலகத் தமிழர்களின் போர்ப் பார்வையைத் திசை திருப்ப, தமிழினப் படுகொலையில் பங்கு கொண்டதன் மூலம் தங்கள் கரங்களில் படிந்த இரத்தக் கறையைக் கழுவும் முயற்சியில் இம்மாநாட்டை தி.மு.க. பயன்படுத்த இறங்கியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தமிழ்நாட்டின் முன்னணிப் படைப்பாளி, பிரபல எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் 'தினக்குரலிடம்' குமுறினார்.

"தமிழினப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு நீதி விசாரணை மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனும் இலக்கை நோக்கி நடைபெற்ற லண்டன் தமிழ் மாநாட்டுக்கு ஈழ ஆதரவு கொண்ட கட்சிகள், அமைப்புகள், எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கும் சூழலில், முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையில் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தி.மு.க அழைக்கப் பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் படுபாதகச் செயலை மறைத்து, உலகத் தமிழர்களின் கோபக் கனலைக் குறைக்க இந்த மாநாட்டை தி.மு.க.வினர் நன்றாகவே பயன்படுத்த முயற்சித் தாலும், லண்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தி.மு.க. மீண்டும் மூக்குடை பட்டதாகவே தெரிவிக்கின்றன. பத்திரிகைச் செய்திகளின்படி ஸ்டாலின் தனது லண்டன் உரையில் ஈழத் தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது போல் "இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மைதான்" என்று தனது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை வெளியிட்டு, மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையிடம் ஸ்டாலின் கொடுத்த மனுவில் உள்ள வசனங்களைப் படிக்கும்போது இந்த மனு டில்லி அங்கீகாரம் பெற்றுத் தான் திருத்தி வரையப்பட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது. காரணம், அந்த மனுவில் போர்க் குற்றம் மற்றும் இனப்படுகொலை போன்ற முக்கிய வார்த்தைகள் எந்த இடத்திலும் காணப் படவில்லை. பதிலாக, 'போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள்' என்பதே இடம் பெற்றிருக்கிறது. ஸ்டாலின் தனது உரையை முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழே வந்ததும் இலங்கையைச் சேர்ந்த சில பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தனர் என்றும் தடுமாறி சமாளிக்கவே அவரால் முடியாமல் போய் அந்த இடமே பெரும் பரபரப்பாகிவிட்டது என்றும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெசொ என்றொரு செத்த பாம்பு. அந்த விலாசத்துடன் ஐ.நா நுழைவு. தி.மு.க-வுக்கு பாவ முகங்கள் பல இருக்கலாம். இவற்றில் எந்த முகத்தையும் தரிசிக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்றல்ல, என்றும் தயாராக இல்லை என்பதை தி.மு.க.வுக்கு லண்டன் மாநாடும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது'' என்று 'தினக்குரலிடம்' கொதித்தெழுந்தார் பா.செயப்பிரகாசம்.

நன்றி: தென்செய்தி - 15 டிசம்பர் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ