ஒன்றின் இல்லாமை, மற்றொன்றின் இருப்பு

கலை, இலக்கியம் என்பது யாது? வாழ்வு சார்ந்து நிகழ்வது; வாழ்வை விளக்குவது. வாழ்விலிருந்து கலை; வாழ்விலிருந்து இலக்கியம் என்னும் பிறப்புவிதி அதற்குண்டு. சமூகப் புறக்காரணிகளால் இயக்கப்படும் வாழ்வு எண்ணங்களை உருவாக்க, அந்த எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, அர்த்தப்படுத்தி இன்னொரு இதயத்தை ஈர்க்கத்தருதல் அதன் கடன்.

வாழ்வுசார்ந்து வெளிப்படுகிற ஒவ்வொன்றும், வாழ்வை முன்னகர்த்துகிற விடயத்தில் முனைப்பெடுக்க வேண்டும். நாம் நடக்கிறோம்: நடை முன்னேற்றம் ஏதாவது ஒரு காரியத்தை எடுத்துச் செய்ய,காடு கரைக்குப்போக, வேலைக்கு ஓட, அலுவலகத்திற்குப் போய்வர, ஒரு கூட்டத்துக்குப்போய்க் கேட்க என்று நீளுகிறது. வாழ்வு சார்ந்து இயங்கும் ஒவ்வொரு அசைவும் முன்னகர்தல் என மெய்ப்பிக்கப்படுகிற வேளை வாழ்வு அர்த்தப்படுகிறது. வாழ்வை முன்னகர்த்தாத யாதொரு செயலிலும் ஒரு அர்த்தமுமில்லை என அமைகிறபோது, அறிவுசார் தளத்தில் இயங்குவதாக உரிமையும்பெருமிதமும் கொண்டாடும், கலை இலக்கியம் ஓரங்குலமேனும் மனிதஉணர்வை நகர்த்த வேண்டாமா?

“சும்மா, செவனேன்னு உட்கார்ந்திருந்தேன்: இந்தப் பாடுபடுத்திட்டீயே, சாமீ” என்று எங்கள் வட்டாரத்தில் ஒரு பேச்சுமொழி உண்டு. அதுபோல் கலை, இலக்கியம் நம்மைப் பாடுபடுத்த வேண்டுமா இல்லையா?

புதுச்சேரி   முன்னர் பிரான்சின் குடியேற்ற நாடாக, பிரெஞ்சு அரசாட்சியின் கீழிருந்தது. இதன் காரணமாய் புதுச்சேரியில் பிரஞ்சு மொழிப்பழக்கமும் தொடர்பாடாலும் கூடுதலாக உண்டு. “இலங்கை அரசியல் யாப்பு - டொனாமூர் முதல் சிறிசேனா யாப்பு வரை” என்ற நூல், ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ஆய்வுப் படைப்பு. புதுச்சேரி அரசுக் கல்லூரியில் பிரெஞ்சுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேரா.கிருஷ்ணமூர்த்தியிடம் நூலைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துதருமாறு அணுகினேன். மொழியாக்கத்தை நேர்த்தியாய் நிறைவு செய்து தந்தார். பேராசிரியர்மொழியாக்கம் செய்ய ஒவ்வொரு பக்கமாய்ப் பயணித்தவர் தன்னறியாமல் நூலுக்குள் ஈர்க்கப்பட்டார். மொழியாக்கத்திற்கு முன் ஈழத்தமிழர் யார், அவர்களுக்கு என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி அறியார். மொழியாக்கம் செய்தமைக்கு ஒரு தொகையைக் கையளித்தபோது, அவர் அதனைப் பெற்றுக்கொண்டு தெரிவித்தார் “இந்தப் பணத்தை எனது சொந்தச் செலவினங்களுக்கு நான் பயன்படுத்தப்போவதில்லை: துயருற்று இங்கு அவதிப்படும் ஈழ அகதிகளுக்கு உதவிசெய்ய நினைக்கிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
இதுதான் ஒரு நூல் புரியும் வினை: ஒரு கவிதை, கதை, படைப்பு, அல்லது ஒரு இலக்கியம் ஆற்றும் வினை. சும்மா, சிவனேன்னு கிடந்த மனசை, தன்னுணர்ச்சி கொள்ளச்செய்து செயலாக்கத்துக்கு முன்னகர்த்துகிறது கலை, இலக்கிய ஆற்றல்.

படைப்பும் வாசிப்பும் மனிதக்கால்களினும் வலிமையானது: காற்றைவிட வேகமானது; தான் உள்ளிறங்கும் மனங்களில் வினைபுரிந்துகொண்டே, உயிர்க்கும்: உலாவும்.

தாய் நாவலாசிரியர் மார்க்சிம் கார்க்கி சொல்வார்: “என் பரட்டைத் தலையைத் தடவி விட்டபடி, அழுக்குப்படிந்த என் விரல்களை ஒவ்வொன்றாக வருடியபடி என் பாட்டி இரவு முழுக்க கதைகள் சொல்லிக் கொண்டே இருப்பார். கதைகளில் மந்திரவாதிகளும், சிறகு முளைத்த வெள்ளைத் தேவதைகளும், அற்புத ஆற்றல் கொண்ட குழந்தைகளும் நிறைந்திருப்பார்கள். ஓர் எழுத்துக் கூட படிக்கத் தெரியாத பாட்டி, என்னை மாய உலகுக்கு அழைத்துச் சென்று விடுவார். அந்த உலகில் அழுக்கு இருக்காது; குப்பைகள் இருக்காது; பசி இருக்காது; அழுகை இருக்காது. ஒரு கதை என்னவெல்லாம் செய்யும் என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.”

சின்ன வயதிலேயே அம்மாவையும் அப்பாவையும் இழந்து கார்க்கி குப்பை பொறுக்கினார். காகிதங்கள், அட்டைகள், உடைந்த பொருட்கள், கண்ணாடிகள், கிழிந்த துணிகள் என அனைத்தையும் அள்ளினார். அழுக்காக இருந்தார். பசியால் களைத்தார்: பாட்டி சொன்ன கதையுலகில் அழுக்கு இல்லை: குப்பைகள் இல்லை: பசி இல்லை: குழந்தைகள், பெரியவர்கள் என்ன விரும்புகிறோமோ, அவையாவும் அந்த உலகில் இருந்தன. என்ன இருக்கக்கூடாது என்று சிறு பையன் கார்க்கி நினைத்தானோ, அவையெல்லாம் இல்லாமலிருந்தன. ஒரு கதை என்னவெல்லாம் செய்யும் என்பதை இப்போது அவர் தெரிந்துகொண்டார்.

ஒரு கதை என்னவெல்லாம் மாயம் ஆற்றும் என்பதைத் தொட்டுத்தொட்டுப் போனால், அது மனிதர்கள் விரும்பும் புதிய உலகத்தைக் காட்டும்: என்னவாக வாழ்க்கை இப்போது இருக்கிறதோ, அவ்வாறு இருக்கக்கூடாது என்று அந்தக் கதை மாற்றிப்போடும். இது எல்லாமும் மாறிய வேறொரு உலக உருண்டையாக, அதனுள் உருண்டு உருண்டு சென்று அழுக்கில்லாத, பசியற்ற, அழுகையில்லாத வாழ்க்கையைக் காட்டும்.   ஒரு படைப்பு வினையில், இதைவிட உன்னதம் என ஒன்றுண்டா?

நம் வாழ்வில் பொய்சொல்லாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை. பொய்யும், ஏமாற்றும் இருக்கிற வாழ்க்கையைத் தேடலாமா?தேடுங்கள் என்று சொல்கின்றன கலையும் இலக்கியங்களும். தேடிக்கொண்டே இருக்கும் தாகம்தான் பொய்மையற்ற ஒரு வாழ்க்கையை நமக்கு வசீகரப்படுத்துகின்றன. பிணக்குகள், சண்டைகள், கோபங்கள், பிரிவுகள், பகைகள் என வாழ்க்கையின் தளம் விசாலப்பட்டுவிடுகின்றன. தற்சார்பு சிந்தனை எளிதில் நமக்குள் ஊன்றப்படுகின்றது. இதன் சுவாரசியப்பகிர்வுதான் கலையும், இலக்கியமும். இவையும் கூட சின்னச் சின்னப் பொய்கள் தாம். ஆனால் யதார்த்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும் பொய்கள், புனைவுகள்.

எது எது இல்லாதிருக்கவேண்டுமென நினைக்கிறோமோ, அது இல்லாத இடத்துக்கு ஒரு கலைப்படைப்பு அழைத்துச்செல்கிறது. அந்த இடங்களில் புதியன உண்டாகவேண்டும் என்ற விழைவு மறைபொருளாகவோ, நேர்படவோ அதனில் இருக்கிறது.ஒன்றின் இல்லாமை, மற்றொன்றின் இருப்பு. நேரடியாக வாழ்வில் எய்த முடியாதபோது, எண்ணங்களிலேனும் அடைகிற பரவசத்தைக் கதை தருகிறது.

2

சிந்திப்பு என்பது ஒரு செயலுக்கான புத்திபூர்வ முன்னெடுப்பு. சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு சிறுவன் பெரியவனாகிறான்: மாணவர் ஆசிரியராகிறார்: தொண்டர் அல்லது பின்பற்றாளர் தலைவராகிறார்: ஒரு சிந்தனைப்பள்ளியில் உருவாகிற மூளை, மற்றொரு சிந்தனைப்பள்ளியைத் தோற்றுவிக்கிறது. வயதுகள் கடந்த, எல்லைகள் கடந்த, சுவர்களற்ற பரிமாணங்களைச் சிந்திப்பு உண்டாக்கிக் காட்டிவிடுகிறது.

அப்படியான ஒரு பரிணாமம் தான் வாசகன் – படைப்பாளி ஆகிற வளர்நிலை. தனித்த சிந்தனையுடன் கூடிய  தேர்ந்த வாசிப்புக் கொண்ட ஒருவன் வாசகனாகவோ, ரசிகனாகவோ நின்ற இடத்திலேயே உறைந்து போக விதிக்கப்பட்டவனில்லை.
ரசிகன் கலைஞனாகிறான்: வாசகன் படைப்பாளியாகிறான்: கதாசிரியர், இயக்குநராகிறார். இப்படியாக எல்லோருமே பெரும்பாலானோர் புதிய உருவாக்கத்துக்கான நேரச் செலவழிப்பு, உழைப்பு, சிந்தனை காரணமாய் – வழமையான வாழ்வியலுக்குள் தம்மைப் பொருத்திக்கொள்ள இயலாமல் போகிறார்கள்.
விளாத்திகுளம் சுவாமிகள் என்று சொல்லப்படுகிற நல்லப்பர் நாடு அறிந்த இசைக் கலைஞன்:  ‘இசை மகாசமுத்திரம்’ என்பார் கி.ராஜநாராயணன். மைசூர் மகாராஜாவிடம் போய் தொடர்ந்து ஏழு பகலும் இரவும் பாடி விருது பெற்றவர்.

அவ்வளவு பெரிய இசைமேதைக்கு வாழ்க்கையை வாழத் தெரியாமல் போயிற்று.


அவர் கற்றது தன்னிசை: பெற்றது இயற்கையிடம்! பின்னாட்களில் கூடின இசை வித்துவான்களோடு கலந்து இசைக்கையில், கொடுக்கல், வாங்கல் நடந்ததுண்டு. ஆனால் சுயமாக வளர்த்துக்கொண்டது  பெருஞ்சதவீதம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வட்டாரத்தில் திரும்பிய பக்கமெங்கும் மானாவரி விவசாயம் ; துளி  ஈரம் கண்டுவிட மாட்டமா என்று பயிர்பச்சைகள் தீநாக்கு நீட்டி ஏங்கும்.  மழை வருதலுக்கான அறிகுறியை சம்சாரி அறிவான். ஆடுகள் மேயாமல் கூடிக்கூடி அடைவது, தூக்கணாங்குருவிகள் வேக வேகமாய்க் கூடு கட்டுவது, மழை எறும்புகள் கூட்டம் கூட்டமாய் குடிபெயர்வது போன்ற பல சமிக்ஞைகள். இந்த சமிக்ஞைகள் கண்டதும் நல்லப்பர்  உஷாராகி விடுவார். குதூகாலம் கொண்டவராய் தாழ்வாரத்தில் குத்த வைப்பார்.

மற்றவருக்கு மழை இரைச்சல்; நல்லப்பருக்கு  இசை. மழையோ இடி, மின்னல் ஒலி ஒளிக்காட்சியை நடத்திக்கொண்டு போகிறது. அவரும் மழையுடன் சரிக்குச் சரியாய் பிர்க்காக்களைப் போட்டுக்கொண்டு கலந்தார். மழையோடுமழையாய் குரலால் இணைந்தார். மழையடிக்கையில், தாழ்வாரத்தில் நின்றும் உட்கார்ந்தும் அவர் பண்ணுகிற அங்கஅசைப்புகளை புதிதாய்க் காணுகிற பெண்டுகள் “கோட்டிபிடிச்சுப் போச்சா மனுசருக்கு” என்று  பேசிக்கொள்வார்கள்.

பூமியின் மேல் ஒவ்வொரு கலைஞரும் ‘கோட்டி பிடி’த்துத்தான் அலைகிறார்கள். இது இசைக் கிறுக்கு. எத்தனை தடைகளிட்டாலும் சிலபேருக்கு ‘கலைக்கிறுக்கு’ அடங்காது. மழை ஓய்ந்த முன்னிரவில் அவர் தாமசிப்பது கண்மாய்ப்பக்கம். நீர்நிலைகளில் தவளைக்கச்சேரி. முன்னிரவில் தொடங்கும் கச்சேரி எந்நேரம் முடியுமெனச் சொல்ல இயலாது. ‘வித்தெடு, விதையெடு – வித்தெடு, விதையெடு’ என்று ஒழுங்கான ஓசைக் கோர்வையாய்த் தாளம் பிசகாமல் தவளைகள் கத்துவதை, நல்லப்பர்  இசையாகக் கொண்டார். நீர்நிலையின் வாகரையில் நின்று சுவாமிகள் கைத்தாளமும் நாக்கை உள்மடித்துக் கிளப்பும் ஓசையுமாய் தவளைக் கும்மாளத்துக்கு ஈடாய் இசைத்துக் கொண்டிருப்பார். பின்னொரு காலத்தில் அவர் முன்னமர்ந்து கே.பி. சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.எம்.மாரியப்பா, காருகுருச்சி அருணாசலம் போன்ற இசை மேதைகளெல்லோரும் கண் சொருக, சொக்கட்டம்போட்டுத் தலையாட்டிக் கொண்டிருக்குமாறு ஆக்கியது இந்தத் தன்பயிற்சி தான். தன்னை வருத்திக்கொள்ளாமல் ஒரு முன்னகர்வும் நடக்காது - குறைந்தபட்சம் மூளையை!
1968-71களில் மூன்றாண்டுகள் மதுரையிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தேன். மாத ஊதியம் சரியாக வழங்காத ஒரு கல்லூரி. மதுரைக்கு நடுவில் கொஞ்சப்பருக்கைக்கும் வழியில்லாது வாழ நாங்கள் விதிக்கப்பட்டது என்பது, அப்படியொரு கல்லூரி இருந்தது என்பது ‘திருமலை நாயக்கர் மஹாலை’ விட பெரிய அதிசயம்! ஒவ்வொரு கல்வியாண்டு இறுதியிலும் “முழு ஆண்டுத் தேர்வு  விடுப்பு” முழுசாக இரண்டு மாதம் விடுவார்கள்: தேர்வுப் பார்வையாளராக பிற கல்லூரிகளுக்கு அனுப்புவார்கள். நம் விருப்பம்தான். அப்போது ஒரு தேர்வுக் கண்காணிப்புக்கு 5 ரூபாய் ஊதியம். மாதம் பத்து முதல் பதினைந்து நாட்கள் தேர்வுக்கண்காணிப்பு. வலுக்கட்டாயமாக என்னை ஒப்புக்கொடுத்து, அதில் வரும் நூறு ரூபாயைச் சேகரித்துக் கொண்டு, சென்னைக்குத் தொடர்வண்டி ஏறுவேன்; அப்போது சென்னைக்குப் பத்துப் பதினைந்து ரூபாய்தான்.


நண்பர் இன்குலாப் சென்னை புதுக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க, இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளனாகப் பங்கேற்கச் சென்றேன்.அப்போது இடதுசாரி அரசியலில் நின்ற சிகரம் ச.செந்தில்நாதன் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி புதிய பார்வைக்குத் தளம்போட்டுக் கொண்டிருந்தார். சண்முகவேல் என்ற மீசை கார்க்கி, என்.ஆர்.தாசன், இன்குலாப், நாகலிங்கம் என்ற கந்தர்வன் போன்றார் அவருக்குத் தோள் கொடுத்து வந்தனர். மக்கள் எழுத்தாளர் சங்கம் மாதம் தவறாது நடத்திய இலக்கியப் பங்களிப்புகளை மறக்க முடியாது. எனது தேடலுக்கு நான் என்னை ஒப்புக்கொடுத்து வருத்திக் கொண்டேன்.

3

கலை அழகியல், எழுத்தின் அழகியல் என்கிறோமே, மிகப்பெரிய நாக்குகளிலும் பேனாக்களிலும் அடிபடுகிறதே, அந்த அழகியல் என்றால் எது?

வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியில், சில வெளிப்பாடுகளுக்கு புதிய புதிய சொற்கள் உதயமாகின்றன: மின்னஞ்சல், வலைத்தளம், சமூக ஊடகம் போன்றன: இவை பற்றி முன்னர் அறியோம்: இப்போது அறிந்து கொள்கிறோம். அதுபோல் கலை, இலக்கிய வெளிப்பாடுகளைப் பேச உருவான சொல்லாக்கம் அழகியல்.
அழகியல் எனப்படும் சுட்டுதல் – ஒருமைத் தன்மையுடையது அல்ல. அப்படியான வரையறை இல்லை. ஒருவருக்கு பிரியமாவது, மற்றொருவருக்குப் பிடிக்காமல் போகும்: அது அவரவர் பார்வையைப் பொறுத்தது: பார்வை, கருத்து என்பது ஒவ்வொருவரின் வாழ்நிலை, வாழ்வை அணுகும் முறை பற்றியது. வாழ்நிலை, அணுகுமுறை என்ற பெருமரமிருந்தால் பார்வை, எண்ணம், சிந்தனை என்ற கொடி படர முடியும்.
தீப்பற்றி எரிகிற நிலம்போல் தெரிகிறது ரோஜாக்காடு: ஒரு கவிஞனுக்கு, கலைஞனுக்குத் தென்படும்  தோற்றம்  போலவே, ரோஜாத்தோட்டம் அங்கு வேலைசெய்கிறவருக்கும் உண்டாக வேண்டுமென்பதில்லை. நமக்கு அது அழகு: பூப்பறிக்கும் வேலைக்காரப்பெண்ணுக்கு அது கூலி. நாம் , ரோஜாத்தோட்டத்தைக் கலைவடிவமாக் காணுகிறோம்.
லைலா-மஜ்னு: லைலா என்ற அழகியின்பேரில் மஜ்னு பைத்தியம்போல், பித்துப் பிடித்தநிலையில் திரிகிறான்: அந்தப் பேரழகியைக் கண்டுவிடவேண்டுமெனச் சிலர் போகிறார்கள்: லைலாவைக் கண்டதும் “இவளா பேரழகி, இவளுக்காகவா சித்தம் சிதைந்து அலைகிறான் மஜ்னு” என்று அதிசயிக்கிறார்கள். அப்போதுதான் ஒரு வாசகம் பிறக்கிறது. “உன்னுடைய கண்கள் வழியாக லைலாவைப் பார்க்காதே. மஜ்னுவின் கண்கள் வழியாகப் பார்.”

அவரவர் லயிப்பை, சுவையைப் பொறுத்தது அழகைக் காணுதல்: ஒற்றைக்குரல். ஒற்றை வெளிப்பாடு அல்ல: அவரவருக்கு அவரவர் ஈடுபாடு.

இன்குலாப் சொல்வார் “கவிஞர் தேவதேவன் அவருடைய ‘பிடிலை’ எடுத்துக் கொண்டு வருவாராயானால், நா என்னுடைய ‘பறை’யுடன் வருவேன்.”

எதற்கு இதை முன்வைக்கிறேனென்றால் ஒருத்தருக்குத் தென்படுவதுபோலவே, இன்னொருவருக்கும் தென்பட வேண்டுமென்பதில்லை.

ஏதொன்றும் சுவைபடச் சொல்லல் கலையாகிறது: ஏதொன்றையும் எனச் சொல்கிறபோதே, எந்த ஒன்று என்பது தேர்வு செய்யப்படவேண்டும்: எந்த ஒன்று என்று தேர்வு செய்யப்படுகிற புள்ளியில், படைப்பின் பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடுகிறது: இனி மிச்சப்பாதியான கலை வெளிப்பாடு கூடக்குறைய இருந்தாலும், உள்ளடக்கத்தில் ஒச்சம் இருக்கக்கூடாது. இரண்டும் சம அளவில் இணைவாகிவிட்டால், அது வாசக மனங்களில், இதயங்களில் ஊஞ்சல் கட்டிக்கொள்ளும். அதுவே அழகியலுக்குச் சரியான பொருள்.

நீங்கள் எந்த ஒன்றைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது போலவே, அந்த ஒன்றை நீங்கள் எப்படி முன்வைக்கிறீர்கள், கலை என்ற ஊடகத்தை மக்களது வாழ்வுடன் எவ்வாறு தொடர்பு படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

படைப்பாளிக்கு மட்டுமல்ல, சுவைஞனுக்கு, வாசிப்பாளனுக்கும், கலை ரசிகனுக்கும் இந்த இரண்டு  உண்டு: ஒன்று எதை வாசிக்கவேண்டுமென்ற தேர்வு. இரண்டாவது அது நமக்குள் இறங்கி, நம்மை ஈர்க்கிறதா என்ற அளவு.

உதாரணத்துக்கு நான் ஒரு பஞ்சாபிக் கவிதையை முன்வைப்பேன். பஞ்சாபிக் கவி மிண்டர் பேசுகிறார்:
என் தோள்களில்
ஒரு போர்வை இருந்தது.
என் கைகளில்
ஒரு புல்லாங்குழல் இருந்தது.
நான் வேறெங்கும் செல்லவில்லை
தூங்கவுமில்லை
என் தோள்களில் துப்பாக்கி வந்தது எப்படி?
என் கைகளில் பிணங்களைத் தந்தது யார்?
மக்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்: தேடலில் அவர்கள் தூங்கவதில்லை அந்த அமைதியான மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலைமைகளைக் கவிதை விவரிக்கிறது. இயல்பான அன்றாட வாழ்க்கைத்தான் கடத்திக் கொண்டிருந்தனர்.தடம் மீறாத காரியங்களையே மேற்கொண்டிருந்தனர். அடக்குமுறை அவர்களின் தோள்களிலும் கைளிலும் வேறெதையோ திணித்தது.

மஞ்சித் திவானா என்ற மற்றொரு பெண் கவி எழுதிய கவிதை. இதுவும் பஞ்சாபிக் கவிதைதான்.
இது என்ன காலம்?
அதன் வாயிலில் அமர்ந்துகொண்டு
நாம், நம்வீடு எங்கேயென்று
கேட்டுக் கொண்டிருக்கிறோம்
நமக்குத் தொடர்பில்லாத, எதிர்ச் சூழல் நம்மீது திணிக்கப்படுகிறது: ஸ்டெர்லைட் ஆலைபோல; மீத்தேன் வாயுபோல; ஹைட்ரோ கார்பன் போல; எட்டுவழிச் சாலைபோல; அது அதிகாரம் பற்றியதாக இருக்கிறது. அதிகாரம் ஆக்கிரமிப்புப் பற்றிய கேள்வியாக இக்கவிதை அமைந்திருக்கிறது.

நமது என்று உரிமை கோரலும் முடியாது: கேள்வி எழுப்பவும் கூடாது என்றிருக்கிற நாளாந்தர இருப்பை, வாழ்வியலை இடிபாடாக்குகிற எதனையும் இக்கவிதை கொண்டு விளங்கிக்கொள்ளலாம்: நம்மை அகத்திலும் புறத்திலும் நிம்மதியைச் சிதைக்கிற எந்தப் பிரச்சனையின் பக்கங்களுக்கும் இந்தக் கவிதையை நீட்டித்துக்கொள்ளமுடியும்.

படைப்பாளியேயானாலும், சுவைப்பவனேயானாலும் தேர்வு முக்கியம்: எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்துள்ளன. எல்லாத் தொலைக்காட்சி முன்னாலும்போய் உட்கார்ந்துவிட முடியாது: அதுபோலவே ஒளிப்பாகிற எல்லாக் காட்சிகளின் முன்னாலும் தலைகொடுத்து விடக்கூடாது: அங்கதமாகச் சொன்னால் பிறகு நமக்குத் தலையில்லாமல் போய்விடும்: காட்சி ஊடகங்களின் அதிகாரத்துக்கு நாம் கட்டுப்பட்டுப் போய்விடுகிற தலைக்குனிவாகி விடும்: அறிவின் அதிகாரம் முதல் எந்தவொரு அதிகாரத்துக்கும் நாம் தலைசாய்க்கக் கூடாது.

(கணையாழி - ஜூலை 2019ல் வெளிவந்த பதிவு )

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ