இன்னும் சில சொற்கள்


உங்களின் ‘சிறுகதை மனிதர்’களில் மறக்க முடியாதவா்?
“ ‘வேரில்லா உயிர்களி’ல் வரும் சாருலதா.”

‘தாலிக்கொடியில்தான் பூச்சூடணும்...’
“ ‘அது ஒரு விடுதலை வடிவம். தாழ்த்தப்பட்ட பெண்டிர் கூந்தலில் பூச்சூட மறுக்கப்பட்டதால், அவா்கள் நெஞ்சிலிருந்து வாசத்தை நேரே எடுத்துக்கொண்டு வருகின்றன அப்பூக்கள்’ என எழுதியிருப்பேன்.
தாலி கூடாது என்பதே இன்றைய விடுதலையின் வடிவம்!”

இந்தி எதிர்ப்பில் நெருக்கடியான தருணம்?
“இந்தி எதிர்ப்புப் போர் முடிந்து, நான் பயின்ற மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர முயன்றபோது, போராளி என்பதால் கைவிரித்துவிட்டனர். மதுரைக்கும் சென்னைக்குமாக அலைக்கழிக்கப்பட்டேன்.”

2009 மே 17?
“ஒரு விடுதலைப் போர் எப்படி முடிந்திருக்கக் கூடாது என்பதின் ரத்தசாட்சி.”

கனவு?
“மேலிருந்து கீழே இறங்குதல் அதிகாரம்; கீழிருந்து மேலேறுதல் சனநாயகம். சாதாரண மக்களின் வாழ்வியலிலிருந்து மேல்நோக்கி விகசிக்கும் சனநாயகம் என் கனவு.”

படைப்பில் அரசியல் கலக்கக் கூடாது என்பவர்கள் பற்றி?
“இந்தக் கருத்தே அரசியல்தான். கலைநயமாக்கப்படும் அரசியல் படைப்புக்களை எவரும் ஒதுக்குவதில்லை.”

நினைவில் இருக்கும் கவிதை வரி?
எந்த மழையானாலும்
என் மக்களை
நனையவிடக் கூடாது,
எப்பேர்பட்ட வெயிலானாலும்
என் மக்களைக்
காயவிடக் கூடாது
(குடை - சீனக் கவிதை).

வே.பிரபாகரன்?
“ ‘சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் ‘நார்வேயை’ நம்புகிறீர்களா?’ என நேர் சந்திப்பில் நாங்கள் கேட்டதற்கு அவர் சொன்னது, ‘அமெரிக்காவின் கொடூரமுகம் இஸ்ரேல், அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே.’ ”

கரிசல் வட்டார வழக்கு?
“எல்லாச் சொற்களும் சொக்கு (மயக்கம்) உண்டாக்குவன.”

‘மனஓசை’?
“எதிர்க் கருத்தியலை முன்வைத்து, கலை இலக்கியத் தளத்தில் 1981 முதல் 1991 முடிய நடைபோட்ட மாத இதழ். ஒரு கட்டத்தில் 20,000 படிகள் விற்பனையானது வியப்பாக இல்லையா!?”

புரட்சிகரச் செயல்பாடுகளின் தேவை இன்றும் உள்ளதா?
“இல்லை என்று யார் சொல்லக்கூடும்?”

பெரும்துயர் தந்த தோழமை இழப்பு?
“கவிஞா் மீரா, பாவலர் இன்குலாப்.”

ஈழம்?
“அங்கு என் மக்கள் இன்னும் அடிமைகள். இன்றில்லாவிடினும் நாளை விடுதலைக்காற்றை நுகர்வார்கள்.”

பா.செயப்பிரகாசத்துக்கு ‘சூரியதீபனிடம்’ பிடித்த ஓர் அம்சம்?
“களச்செயல்பாடு.”


நன்றி: விகடன் தடம் - 1 செப்டம்பர் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்