இலக்கிய வெளியில் பறை சுமந்து வந்தவன்

(14-03-2019 மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் நடைபெற்ற ”இன்குலாப் காலதின் கவி” என்ற கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் செழுமைபடுத்திய வடிவம்)


பிரான்சின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியா விடுதலைக்குப் போராடியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களை நோக்கி பிரெஞ்சு அரசு அழைப்புவிடுத்தது. ’விடுதலைக்குப் போராடும் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மாட்டோம்’ என்ற இளைஞர்களின்  நிலைப்பாட்டினை  நியாயமானது என வரவேற்றார் பிரஞ்சு எழுத்தாளர் ழீன் பால்சாத்தரே. பிரான்ஸ் காலனியாதிக்கத்தின் கீழ்   வதைபடும் அல்ஜீரியர்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இளைஞர்களைப் போராடுமாறு அழைத்தார்.  ’பிரான்ஸ்க்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார் சாத்தரே; சாத்தரேயைக் கைது செய்வீர்களா’ என பிரெஞ்சு அதிபரிடம் கேட்கப்பட்டது. பிரான்ஸின் அதிபராக அப்போது இருந்தவர் துகேலே என்ற ராணுவ அதிகாரி. இராணுவ அதிகாரியான துகாலே அதை நிராகரித்தார். அவர் சொன்ன பதில் “ சாத்தரேயைக் கைது செய்வது பிரான்சைக்   கைது செய்வதாகும்”

எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இதுதான். அறிவுக்கம்பீரத்தின்  வெளிப்பாட்டை அடக்கிவைத்தால், அது தேசத்திற்கு கரும்புள்ளியாகி விடும் என்று அதிபராக இருந்த  இராணுவத் தளபதி துகாலே,   அதை ஒதுக்கித் தள்ளினார். எழுத்து மேதமைக்கு அளித்த இது போன்றதொரு  மதிப்பை - முற்றாக இராணுவ மயப்படுத்தப்பட்டு விட்ட இங்குள்ள அரசியல் மனங்களிடம் எதிர்பார்க்க இயலுமா?

எழுத்தாளுமை, இலக்கிய ஆளுமை, அறிவாளுமை, கலை ஆளுமைகளை கனம் பண்ணுதல், கவுரவித்தல் என்பது இதுவே. இலக்கிய மனம் மேன்மையானது: மென்மையானது. அது காற்றின் நடமாட்டம் போன்றது.காற்றின் திசைகளை மூடிவைத்து  காற்றைத்தடை செய்ய ஏலுமோ எவரேனும், எங்கேனும்?காற்றின் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடு போடும் இராணுவ மனம் இங்குள்ள அரசியல் அரங்கிலும் கல்விப்புலத்தினுள்ளும் நடமாடத் தொடங்கியுள்ள  காலமிது.

இச்சூழலில் மதுரை கருமாத்தூர் ‘அருளானந்தர் கல்லூரி‘ கவிஞர்  இன்குலாப் பற்றி முழுநாள் தேசியக் கருத்தரங்கினை நடத்துவது இலக்கிய வரலாற்றில்  தடம் பதிக்கும் நிகழ்வாகும். கல்லூரி முதல்வர் முனைவர் சி.பேசில் சேவியர், சே.ச, இத்தகு ஆக்கபூர்வ கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தும் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் ஜோசப் சார்லி ஆதாஸ், ஒருங்கிணைப்பாளர் துணைப் பேராசிரியர் ம.கருணாநிதி, இந்நிகழ்வுக்கு தோள்தந்து உடன்நிற்கும் தமிழ்த் துறையினர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

(இன்குலாபின் மறைவுக்குப் பின்னும் அரசின் வேட்டைக் கால்கள் தாகம் தணியாது பாய்கின்றன என்பதை ’கியூ பிராஞ்ச்’ என்ற ரகசியப் புலனாய்வுப் பிரிவு, கருத்தரங்கு பற்றி விசாரித்துத் திரும்பியதை, கல்லூரி முதல்வர் மாலையில் நிகழ்வுற்ற நிறைவு விழா உரையில் குறிப்பிட்டார்).

70 கள், 80 கள் ’வசந்தத்தின் இடிமுழக்க’ மாக வந்த கவிதை இயலின் எழுச்சிக்காலம். பெரும்பான்மை இந்திய மொழிகளின் கலை இலக்கிய வெளிப்பாடு, உரைநடை, கவிதை, உருவகம் என  எழுத்தானாலும், நாடகம், கூத்து, பாடல் என நிகழ்த்து கலையாயினும் புரட்சிகர உள்ளடக்கத்துடன் வெளியாகின.  அக்காலத்தின் கவிதை இலக்கியப் பிரதிநிதியாய் இன்குலாப் எழுந்து வந்தார்.

வசந்தத்தின் இடிமுழக்கக் காலத்தில் கவிதையின் பாடுபொருள், சொல்முறை, வடிவம், போன்றவை வேறொரு எல்லை நோக்கி நகர்ந்தன. தமக்குள் வட்டமிட்டு, கும்மியடித்து செல்வாக்குச் செலுத்திய கலைப்பார்வை கொண்டோரிடமிருந்து மாறுபட்டு - இக் கவிதையியல் சென்று சேரும் மக்கள் பரப்பினை முதன்மைப்படுத்திற்று. இன்குலாப்பின் கவிதையியல் இங்கிருந்து உருக் கொள்கிறது. “போராடுவதும் போராடவைப்பதுவுமே என் குறிக்கோள். அதற்கு என்னுடைய கவிதைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறேன். இந்தச் சமூக அமைப்பில் போராடாமல் இருப்பது என்பது சில கொடுமைகளுக்கு நாமும் மௌனசாட்சியாகத் துணைபோவது போலாகிவிடும்”

இன்குலாபிலிருந்து ஒரு புதிய கவிதா மரபு உத்வேகம் கொண்டது.
”தமிழ்க் கவிதையை வேறொரு திசையில் செலுத்த வேண்டுமென்ற உத்வேகம் என்னிடம் தோற்றம் கொண்டிருந்த காலம் இது”
அச்சத்தை உடைப்பது,பிரமைகளைத் தகர்ப்பது, நேர்படப் பேசுதல் ஆகியவற்றுக்கு அவரது உரத்துப் பேசும் முறை கைலாகு தந்தது.

2

“கவிதையாக்கம் என்பது ஒரு கூட்டிசை போன்றது.தேவதேவன் அவருடைய வயலினை எடுத்துக்கொண்டு வந்தால், நான்  என்னுடைய பறையை எடுத்துக் கொண்டு வருகிறேன்.கூட்டிசையில் வயலினின் சுநாதம் மட்டும் ஒலிக்கவேண்டும், பறையொலி தலை தூக்கக் கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. பறையின் தேவை இருக்கும் வரை  ஒருபக்கத்தில் நின்றுகொண்டு என்றென்றைக்கும் பறையைத் தட்டிக் கொண்டிருப்பேன்” (பக்; 39- ’ஆனால்’ கட்டுரைகள் தொகுப்பு).

இன்குலாப் கவிதை பிரகடனங்கள் போல வெளிப்பட்டுள்ளன. பிரகடனம் ஊர்வல முழக்கத்துக்குப் பயன்படும்; இலக்கிய உலா வருதற்கு முழக்கங்கள் தேவையில்லை எனச் சிலர்    பிரலாபிக்கிறார்கள்.

பிரகடனங்களின் காலம் முடிந்துவிட்டதா, பிரகடனங்களே கவித்துவமாய் வெளிப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டதா?
“இழபதற்கு என்ன உண்டு? இரு கை விலங்குகள் தவிர”
காரல் மார்க்ஸ்- ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெறிக்கும் இது போல் வாசகம் பிரகடனம் தான்: கவிதையும் தான்.
கிரேக்க ஞானி சாக்ரடீஸின் “உன்னையே நீ எண்ணிப் பார்” - ஒரு காலத்தில் அச்சமூகத்தின் தேவையை அறைகூவி வெளிப்பட்ட கவிதையல்லவா?

பிடல் காஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுதலை செய்யும்”, ஜூலியஸ் பூசிக்கின் “தூக்கு மேடைக்குறிப்புகள்“ - ஒவ்வொரு வரியும் அறைகூவி மானுடத்தைப் பேசிய வரிகள் அல்லவா?  ஒரேபொழுதில் அவை பிரகடனமும் கவிதையும் தான். அது போலவே இன்குலாபின் கவிதைகள்.அவர் எல்லாவற்றையும் ஒரேயொரு வில்லிலிருந்து விசை ஏற்றினார். ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற   வில்லிருந்து எல்லாக் கணைகளும் புறப்பட்டன.

“ஒரு கவிதை அதற்குரிய கலைநியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் படைப்புக்கள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிக் கவிதைப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக எனது கவிதை இருந்து வந்துள்ளது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நோ்ந்தது.” சுயவிமர்சனப் பார்வை கொள்ள, பிறர் தன்படைப்பு மீது வைக்கும் விமர்சனத்தைப் பங்கீடு கொள்ள அவர் ஒருநாளும் தயங்கியதில்லை. தன்னளவில் நேர்மைகொண்ட ஒருவர் படைப்பாக்க விசயத்திலும் அவ்வாறுதான் இயங்க இயலும். சில கலை இலக்கியவாதிகள் போல் சுயமதிப்பீடு என்றால் காசுக்கு எத்தனை என்று கேட்கும் தன்மோகம்  அவரிடம் காணப்பட்டதில்லை.

“என் குறைகளை நான் உணரும்போதும்  பிறா் உணா்த்தும் போதும் ஏற்கத் தயங்கியதில்லை. இதை எழுதி என்னை நான் அம்பலப்படுத்திக் கொள்வது குறித்து எனக்கொரு கூச்சமுமில்லை ”. அத்தனையும் கவிதைக் கனிகள் என்று சொல்கிற புகழ்வை இன்குலாப் ஏற்கவில்லை. “இவை கவிதைகளே இல்லை என்பவா்களுக்கு எனது மௌனத்தை மட்டுமே விடையாக்கிக் கொள்கிறேன். என் கவிதைகளுக்கு நானே பரிந்துரை, விளக்கவுரை செய்கிற தவறுகளை ஒரு போதும் செய்யமாட்டேன். எனது நிறத்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகுமட்டும் பூப்பேன்”

”என்னுடைய கவிதைகளை கவிதைகளே அல்ல என்று சொல்கிற ’அத்தாரிட்டிகள்’ எதனால் அப்படிச் சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். கலைமை குறித்தோ, அழகியல் குறித்தோ விவாதிக்கத் தயாராக இல்லாத ஓர் அதிகாரம் இங்கு நிலவுவதை நான் பார்க்கிறேன்.”

கவிதை வெளிப்படு பாங்கு அல்லது அழகியல் ஒற்றைத் தடமல்ல; எல்லாக் காலத்துக்கும் பயணிக்கும் ஒரு நேர்கோடு அல்ல. கவிதையின் கருப்பொருள் காலகாலத்துக்கும் வேறுபடுதல் போல், அதன் வெளிப்பாட்டு அழகியலும் வேறுபாடுகளுடன்   கக்கத்துப் பிள்ளையாய்  ஒட்டிக்கொண்டு வருவது.

எட்டயபுரத்துக் குயிலுக்குப் பாடல் ஒரு தினுசாய் வருகிறது எனில், அது ஒரு அழகியல். புதுவைப் புயல் கொண்டது இன்னொரு அழகியல். கருத்துநிலையில் தொடர்ச்சி, வளர்ச்சி என வருவது போல், வெளிப்பாட்டு அழகியலிலும் அதற்கேற்ற ஒரு திசை உருவாகும். அது அந்த அந்தக் காலம்; காலம் என்னும் குயவன் மாத்திரமே இரண்டினையும் வணைந்து உருவாக்குகிறவன்.
அழகியல் எனப்படுவது  ஒருத்துவமல்ல: பன்மைத்துவம்.
”சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
 அவரது இக்கவிதை  ஒரு பிரகடனம்.

3

மதம், நியதி, ஆசாரம், விதிகள் அனைத்தினின்றும் விலகி நின்றவர் இன்குலாப். “நான் மதம் சார்ந்தவனல்ல, மனிதம் சார்ந்தவன்” என்று, வார்த்தை விதிகளாக அல்லாது, வாழ்க்கை விதிகளாய் முன்னத்தி ஏர் பிடித்தார்.கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் அவா் பிறந்த இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து எழுந்தன. சொந்த ஊரான கீழக்கரை மரைக்காயா்கள் என்ற உயா்நிலை இசுலாமியா்களிடமிருந்து ’உயிரழிப்புச் செய்துவிடுவோம்’ என்கிற மிரட்டல் வந்த வேளையில், அவா் வெளிப்படுத்தியவை மணிகொண்டடித்த மாதிரி கணீா் வாசகம்.
“நான் கொல்லப்பட்டால் மீண்டும் வருவேன். விதைக்கப்பட்ட கல்லறையாவேன்.”
’விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில் விடுதலை விதை முளைக்காத கல்லறை எதுவுமே இல்லை’ என்னும் வால்ட்விட்மனின் வரிகளை இவ்விடத்தில் உயிர்க்கச் செய்தார்.

சிலப் பல இலக்கியக்காரர்கள் போல் முரண்பாடுகளின் மூட்டையாய் தன்னை ஆக்கிக் கொள்ளாமல், சொல்லுக்கும் சுயவாழ்க்கைக்கும் இடைவெளியற்று  வாழ்ந்தவர்  தோழர் இன்குலாப். இப்போதுள்ளதற்கும் மேலே இன்னொன்று இருக்கிறது, அதை எட்டிப்பிடித்துவிடலாம் என்றெண்ணுகிற ’சுயமுன்னேற்றப் படைப்பாளிகளை’  நம்மில் மிகுதியும் காண இயலும். இத்தகையோர் முரண்களோடு இயங்குதல் தவிர்க்க இயலாது.

தன்னை ஒரு இஸ்லாமியர் என அவர் வாழ்வியல் ரீதியாக ஒருபோதும் அடையாளப் படுத்திக்கொண்டவர் அல்ல. “எனக்கு மொழிப்பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று போன்ற வேற எந்தப் பற்றும் இல்லை. மனிதப்பற்று ஒன்றுதான் உண்டு.அதுவும் வளர்ச்சி நோக்கிய  மனிதப்பற்று.” (விடுதலை – 15.10.1962) என்ற பெரியாரின் கருத்தைச்  தனதாக்கிக் கொண்டார்.    அதனாலேயே இனப்பற்றும் இலக்கியப் பற்றும் கொண்ட சில பண்பாட்டுக் காவலர்கள் ‘கண்ணகியையும் இராச இராச சோழனையும்‘ கொண்டடாடிய போது, அவர் விமரிசித்தார். மொழிப்பற்றுக்கும் இனப்பற்றுக்கும் அப்பால், உண்மையின் சார்பாய் நின்று  பேசினார்.

மூத்த மகன் பெயர் செல்வன். இஸ்லாமியப் பாரம்பரியத்தில் ’செல்வன்’ என்றிவ்வாறான பெயரினைக் காண இயலுமா? விடை எளிதானது. மிகக் கனமானதும் கூட !

செல்வன் திருமணத்தை தான் குடியிருந்த ஜானிஜான் கான் சாலையிலுள்ள வீட்டில் மத சம்பிரதாயங்களில்லாது, குடும்பத்தைச் சார்ந்த பெரியவர் ஒருவர் நடத்தி வைக்கச் செய்து முடித்தார்.

இரண்டாவது மகன் இன்குலாபுக்கு, தகுதியான மணமகளைத் தேடிக் கண்டார். பெயர் தமிழ்ச்செல்வி. பகுத்தறிவுச் சிந்தனையில் காலமெல்லாம் நடை போட்ட ஒரு குடும்பத்தின் மகள் அவர். தாய் தந்தை மட்டுமல்ல, அக்குடும்பதைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சாதி மத வேறுபாடு கடந்து மணம் புரிந்து கொண்டவர்கள்.  இன்குலாபின் தேடலுக்கு கிடைத்த வெற்றியாய் இதனைக் கொள்கிறபோது, அவர் மகனுக்கு வாழ்க்கை இணையாய் வர ஒப்பிய பெண்ணின் வெற்றியாக, பெண் கொடுக்க ஒப்பிய குடும்பத்தின் வெற்றியாகவும் காண வேண்டும்.

மகனுடைய திருமணத்தினை சடங்குகள் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்தினார். இஸ்லாமிய அடையாளமற்று நடத்தப்பட்டதை உறவினர் சிலரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாய் வருகை தந்தவர்களை, வாழ்த்த வந்தவர்களை அவரால் முறையாக உபசரிக்க இயலாமல் போயிற்று.

மகள் ஆமினா பர்வினின் திருமணமும் அவ்வாறே! கவிஞர் அப்துல்ரகுமான் தலையேற்று வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்திவைத்தார். உறவினர்கள் அனைவரும் வருகை தர  சென்னையில் ஒரு அரங்கத்தில் நடைபெற்றது.

ஒரு தொலைக்காட்சியின் செய்தியாளா் இஸ்லாமிய சமுதாயத்தில் நிலவும் ’தலாக்’ விவாகரத்து முறை பற்றி நோ்காணல் செய்ய வந்தார். கவிஞரின்  ஒப்புதல் பெற்ற பின்னர் செய்தியாளா் அனுப்பப்பட்டார். இன்குலாப் செய்தியாளரிடம் கேட்ட கேள்வி, ”நீங்கள் என்னை ஒரு இஸ்லாமியராகக் கருதி வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் இன்குலாப்பாக பேசுவேன்” என்றார்.

செய்தியாளா் சொன்னார் “நான் இன்குலாபின் கருத்தை அறியவே வந்திருக்கிறேன்”

“தலாக் ஆணதிகாரக் கோடூரத்தின் உச்சம். பெண்களை உயிருள்ள மனுசிகளாக எண்ணாமல் அடிமைகளாகக் கருதுகிற தலாக் முறைக்கு  எந்தக் காரணகாரியமும் இல்லை. காரணகாரியமில்லை என்பதுதான் அதற்கான ஒரே காரணம்” என்று விமா்சித்தார். மத அடிப்படைவாதிகள் எத்தகைய எதிர் வினை கொண்டு சீறியிருப்பார்கள் என்பதை உணா்ந்து கொள்ளலாம்.

மக்களுக்காக இந்தவாழ்வு என நிர்ணயமாகிவிட்ட பின், செயல்முறைப் பூர்வமாய், சுய முரண்களற்ற வாழ்வாய் ஆக்கிக்கொண்ட ஒரு வாழ்வியல்ப்  போராளி.

4

”வரலாற்றில் நான் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக நுழைந்து பார்க்கிறேன். எனக்கு வரலாறு என்பது மன்னர்களின் பீடுகளும் பெருமைகளும் அல்ல: ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சும் கண்ணீரும் கோபமும் தான் நான் பார்க்கிற வரலாறு.அதைப் பார்க்கும்போது ராஜராஜன் பெருமையோடு என்னால் ஒன்றித்து நிற்க முடியவில்லை:  அந்தப் பெருமையில் என்னால் பங்கேற்க இயலவில்லை”

நாதியற்ற அனைத்து மக்களின் குரலை அவா் ஒலித்தார். சாதிய ஆணவத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், நிற வேற்றுமையால் ஒடுக்கப்படும் கறுப்பர், ஆணதிகாரத்தால் ஒடுக்கப்படும் பெண்டிர், ஆதிக்கக் குழுக்களால் சிதைபடும் தொழிலாளர், மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழர் - இவர்களும் இவர்கள் போன்றோரும் என நாதியற்றோர் என்ற இந்த  வரிசை நீளமானது.
“வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரியக்
கறுப்பனாய் இருந்து பார்
ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறுதெரிய
தமிழனாய் இருந்து பார்
பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்
பறையனாய் இருந்து பார்
வல்லாங்கு செய்யப்பட்ட
பெண்ணாய் இருந்து பார்
வன்முறை ஏன் என்ற காரணம் புரியும்“
 - ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சை, கொதி நிலையை விவரிக்கும் அவருடைய கோட்பாட்டிலிருந்து, பெண் விடுதலை பற்றிய அவரது பார்வை வெளிப்படுகிறது.

பிரச்சனைகளின் நெருஞ்சிக்காடான சமகால வாழ்வியலில்,  அதிலும் ஆண் மையவாதப் பிரச்சனைகளின் நெருஞ்சிபூத்த கானலில் இன்று எந்தப் பெண்தான் கைம்பெண்ணாக, ஒத்தைப் பாரியாக, அபலையாக, ஏதிலியாக  இல்லை? இறக்கை வெட்டப்பட்ட கிளிகளாய் கூண்டுக்குள்ளே கிடக்கிறார்கள். அது குடும்பமாயினும் சமுதாயமாயினும்  கூண்டு தான்.
“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே
மயானம் போற வரை தோசை சுட்டவளே”
உழைப்பு, உழைப்பு, உழைப்பே தான் வாழ்க்கை. காலில் வெள்ளெழும்பு தெரியும் வரை, கண்ணில்  ஒளித்திரை மங்கும் வரை  பெண் உழைக்கிறாள். மண்டையிலுள்ள மயிர் உதிரும் காலம் மட்டும் மாவிடித்தாள்; மயானம் ஏகும் காலம் வரையும் தோசை சுட்டுப் போட்டாள்.பெண்ணினத்தின் மேல் சற்றும் ஈவிரக்கமில்லாமல் சாக்குழிக்குள் தள்ளும் சுரண்டல் நீடிக்கிறது.  இந்தச் சொலவடை அல்லது வழக்காறு மாற்றுச் சிந்தனைக் குரல் ;  இதனுள் தங்கியிருப்பது தன்துயரை ஒரு பெண்  வெளிப்படுத்தும் துயர வீரியம். ஆம், துயரத்துக்குள்ளும் ஒரு வீரியம் உண்டு.
இது ஒரு பெண்ணின் பாடு மட்டுமல்ல; காலந்தோறும் கேட்கும்  கோடிப் பெண்களின் முறைப்பாடு இது. முந்திய நிலைகளிலிருந்து ஒரு அங்குலமாவது இந்த சமுதாயத்தை உயா்த்த வேண்டுமென்ற சிந்திப்பு நோ்மறையாகவோ, எதிர்மறையாகவோ  கையளிக்கப்படுதல் முக்கியமானது.

பெண் விடுதலை தனியாக இல்லை: கூட்டுழைப்பில், கூட்டு முயற்சியில் சாதிக்கப் படவேண்டும். கூட்டுக் கரங்களால் பொதுச் சமூகத்தில் நிலவும் தன்மீதான இழிவைப் பெண் நீக்கிக் கொள்ளும்போது, அங்கு  மனுசி பிறப்பாள்.

அவளின் ஒன்றுபட்ட செயற்பாடு , கூட்டுமுயற்சி  கக்கத்துப் பிள்ளையாக இன்னொரு கடமையையும் இடுக்கிக் கொண்டிருக்கிறது. அது ஆணை மனிதனாக்கும் கடமை,  ஆண்மைய வாதக் கருத்திலிருந்து ஆணை விடுவிக்கும் போராட்ட முயற்சி. ஆண்மையவாதக் கருத்தியல் பெண்ணுக்குள்ளும் இருக்கிறது. கொஞ்ச நஞ்ச மல்ல, அவள் அதுவாகவே இயங்குகிறாள். பெண்ணுடல்தான் எல்லாமும், அது தாண்டி அவள் எதுவுமில்லை என்ற கருத்து ஆண்மையக் கருத்தாக மட்டுமன்று, பொதுச் சமூகத்தின் புரிதலாக, நடமுறையாக உள்ளது.  பெண் எனப்படுபவள் உடல் தான் எல்லாமும், அவள் உள்ளத்தில் ஒன்றுமில்லை என நினைக்கிறான். அதனால் அவளை எளிதாக  வளைத்து விடுகிறான். முதலில் உள்ளத்துக்குள் நுழைதல், பின்னர் உடலை வசப்படுத்தல் எளிதாகிறது. குரூரம் கொண்ட ஆண்மைய வாதக் கருத்தியலிலிருந்து ஆண், பெண் இருவரும் வெளியேற வேண்டும். பெண்னுடைய ஒவ்வொரு அசைவும் போராட்டமும் இந்த வெளியேற்றத்துக்கானதாய் அமையவேண்டும். ஆணின் கருத்திலும் செயற்பாட்டிலுமான வலுவந்தத்தை எதிர்த்து நிற்பதாய், ஆதிக்கம் செலுத்தவதின் வழி ஆண் பெறுவது வெற்றிகள் அல்ல; தோல்விகளே என அவனுக்கு உணரச் செய்வதாய் அமையவேண்டிய காலமிது.

பெண்ணை நோக்கிப் பேசுகையில் இன்குலாப், இதை உள்ளடக்கி உணரவைப்பார்.
“சற்றே திறந்த  இமைகளுக்குள்ளே
பழையகனவுகள் எவையேனும் இருந்தால்
துடைத்தெறி.
திரும்பும் திசையெல்லாம் தடுத்து நிறுத்தும்
புழுதிமண்டிய குட்டிச்சுவர்களை
உடைத்தெறி;
விடுதலைசெய்
உன்னையும்  என்னையும்”
ஆணாக இயங்குகிற ஒவ்வொருவரையும் விடுதலை செய்யவேண்டியது என்னும் அர்த்தப்பொதிவை ‘உன்னையும் என்னையும்’ என்ற சொல்லாடல் உள்ளடக்கியிருக்கும்.

போராடும் குணம் அவருக்குள் கிடந்தது; அது பற்றி அவர் எடுத்துரைப்பார்;
“கருவறைத் திரையை முட்டிக் கிழித்தேன்
அம்மவின் முகம் கண்டேன்
போராட்டம் என் பிறப்பின் நியதி
போராட்டம் என் வாழ்வின் நியதி
போராட்டம் என் முடிவின் நியதி
எனது வாழ்க்கை களவாடப் பட்டது
எனது புன்னகை கைது செய்யப் பட்டது
என்னில் பிறரையும்  பிறரில் என்னையும்
காணும் வாழ்க்கையைக்
கைவசப் படுத்துவதற்கே போராட வேண்டும்
பாறையை ஊற்றுத் தண்ணீர் பிளக்கும்
மரத்தில் நெருப்பு விழிக்கும்
எல்லம் போராடும் நீயும் போராடு.”
அடிமைத்தனம், ஒடுக்குமுறை உள்ள மட்டும் அவர் மீண்டும் வருவார் - கவிதையாக, எழுத்தாக, கதையாக, நாடகமாக!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?