நான் அங்கே எப்பவுமே சவப்பெட்டி கேக்கிற ஆளாத்தான் போனேன்


ஈழப் போராளி சுகுமார் வாசகங்களால் நிறைந்தவன். அவன் உச்சரிக்கும் வார்த்தைகளும் அவனைப் பற்றிய பிறர் உச்சரிப்புகளும் உயரமானவை. வாழ்வினைச் சாதனையால் நிறைவு செய்வது என ஒரே மதியாய் இருந்தான். இனவிடியல் காண யுத்தகளம் செல்லுதற் பொருட்டு, போராளி இயக்கத்தில் இணைதல் முதல் காலடி வைப்பாக ஆகியது. களப்பயிற்சிக்கு வந்த இடத்திலும் அவரவர் குணவாகுகளிலிருந்து விடுதலை பெறாமலிருந்த சூழலில், அவன் தன்னை ஒரே வீச்சில் தகுதிப்படுத்திக் கொண்டான். மற்றவர்கள் காட்டிக் கொடுத்தபோது மௌனமாய் பொறுமையாய் ஏற்றான். மற்றவர்கள் தண்டனை அடைந்தபோது தோள்களால் தாங்கினான். உடல்வயதை விட அவனுடைய மனவயது அதிகம். போராளிப் பயிற்சி எடுக்கிறபோது, மெய்யாய்ச் சொன்னால் ' மலையைப் பெயர்க்கிற' வேலை அது. அப்போது பயிற்சியில் காயம்பட்டோருக்கு உதவினான்.

'வேப்பிலைக் கொத்தில் குருத்துப் பக்கங்களை முறிச்சு எடுத்தான் சுகுமார். பொலிதின் பை எடுத்து வந்து அதில் சுற்றி வைத்தான். நுனிக் குருத்தைக் கிள்ளி ஒவ்வொரு நாளும் மற்றவர்க்கு சப்பித்தின்னக் கொடுத்தான். அதுக்குக் கீழ் உள்ளதைக் கிள்ளி வைச்சு குத்திக் கசக்கி, மருந்து கட்டுற நாளில் மத்தியானமே நாகேந்திரன் புண்ணைக் கழுவி புண்ணிலை அந்தச் சாற்றை விட்டு புண்ணைக் காய விட்டான். அடுத்த கிழமை முடிவில் புண் பெரும்பாலும் காஞ்சு போட்டது.'

**

இனி சுகுமாருடைய வாசகங்கள்;

முத்தெடுக்கிறதென்றால் மூச்சடக்கித்தான் ஆகவேணும்.

**

'நானிருக்கேக்க கொண்டுவாற காசில்தான் வீட்டில் கஞ்சியாவது காய்ச்சிக் குடிச்சதுகள். எனக்கே அது கால்வயித்துக்குக் காணாது. நான் களவா பாண் வாங்கியும் சில நேரம் சாப்பிடுவேன். பிறகு இயக்கத்துக்கு வந்திட்டன். இப்ப நான் வயிறார சாப்பிடுறன். அதுகளுக்கு என்னால கிடைச்ச கஞ்சியும் இப்ப கிடைக்காது. நான் மட்டும் திண்றால் சரியா.'

**

'வானத்தில நிலவு ஏணை மாதிரித் தூங்குது. இதில் ஏறிப்படுக்க எத்தனை பேருக்குத் தெரியும்? வானம் மனசுக்கு இதனமான ஒரு விசயம் இல்லையா? இளகின மனசுகளுக்குத்தான் அப்பிடி. அதிகப் பணமுள்ளவர்களுக்கு அப்படியில்லை. மற்றவனை எட்ட இன்னும் பணம் போதாது என்ற கவலை அவர்களுக்கு. அந்த முயற்சியில் மணமிறங்கி விசயங்களைப் பாக்கவோ கேக்கவோ, அவையளுக்கு அவகாசம் இருக்கிறதில்லே... பொதுவா ஏழைகளுக்கு வானம் ஒரு கொடைதான். ஆனாலும் முதல்ல வயிறு நிறைய வேணும். வயிறு நிறையாட்டி உன்னுடைய ஏணை அதுகளுக்கு வெறும் சட்டியாகவோ, பிச்சைப் பாத்திரமாகவோ தான் தெரியும்.

**

ஒருவன் போராட வருவதற்கென்று முடிவெடுக்கையில், மனிசனுக்குள்ள இருக்கிற மிருகத்தனமான மனம் அவனிட்ட இருந்து பின் தள்ளப்பட்டு, மனிசத்தனமான, இரக்கத்தனமான, தவறுகளை எதிர்த்துக் கேள்வி கேக்கிற மனம் அவனைத் தூண்டியிருக்க அவன் வந்திருக்கலாம். ஆனால் அது மீண்டும் சக்தியிழந்து போகலாம். மிருக மனசிட்டயிருந்து மனசைப் பேண முடியாமற் போகலாம். அதுக்காக அவன் முடிவெடுத்த தருணத்தில் அவன் மனிசனாக இருந்தான் என்ற உணர்வு பொய்யாயிராது.

**

நாலு பெடியளுக்கு ஒரேயொரு பொம்பிளைச் சகோதரம் அக்கா. அதால எனக்கு அக்காவில் தான் பாசம். அவளுக்கும் என்னில பாசம். அந்தச் சட்டைகளெல்லாம் அக்கா அக்கம் பக்கத்துல வாங்கினது தான் ... செருப்புக் கூட அப்படித்தான். அக்காட்ட நல்லதென்று இருந்தது நாலஞ்சு வருசத்துக்கு முன்னம் வாங்கின ஒரு ரோஸ்கலர் சட்டை தான்.

**

ஒருத்தன் கஷ்டப்பட்டா அவனுக்கு உதவி செய். இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடு. எழும்பி நிற்கிறவன் விழுந்தவனைத் தூக்கு. ஏன் இதுக்குள்ளே புண்ணியத்தைச் சேர்த்து அதை வியாபாரம் ஆக்கிறாங்கள்? மனிதத் தனத்தை வியாபாரம் ஆக்கிப் போட்டாங்களே! தாய் புள்ளைக்குப் பால் கொடுத்தா தாய்க்குப் புண்ணியம் என்டா சொல்லிக் குடுக்கிறியள். இல்லையே, தாய்மை என்றுதானே சொல்லுறியள். அதுமாதிரி இருக்கிறவன் இல்லாதவனுக்குக் குடுக்கிறது.. மனிசத் தனமென்டாவது சொல்லுங்களேன். தாய்மை என்பது மகத்துவமானது போல் மனிசத்தனமென்பதும் மகத்துவமானது.

**

வீட்டுக்குப் பிள்ளையா நான் எடுத்த முடிவு முதல்ல பிழையா இருக்கலாம். ஆனால் ஒரு மனிசனா நா எடுத்த முடிவு பிழையா?

**

சண்டை நடக்குது, பொடியளெல்லாம் செத்துச் செத்து வாறாங்கள். அவர்களுக்கும் இப்படி எத்தனை பொறுப்புகள், விருப்பங்கள் என்றிருந்திருக்கும். வாழ்ந்து முடிச்சவையா போராட ஏலும். ஒரு பக்கம் தியாகங்கள் நடக்க, நாங்கள் அதுக்குள்ள சுழிச்சோடி எங்கட குடும்பங்களை உயர்த்திடலாம் என்று நினைக்கிறது ஒரு துரோகம்.

**

நீ யோசிச்சுப்பார், ஆனையிறவுத் தோல்விக்கு அடிபட்டவனா காரணம்? அடிபடப் போகாதவன்தான் காரணம். சண்டைக்குப் போனதாலேயே அறுநூறு பேர் செத்தவங்கள். நாம் சண்டைக்குப் போகாததாலே செத்தவங்கள். வாழ்க்கை அவலங்களுக்குச் சிங்களவனேயா காரணம்? நாமும் தான் காரணம்.

**

எல்லோரும் பாதுகாப்புக்கு தங்க வீட்டச் சுத்திதான் அணை கட்டப் பார்க்கிறோம். அது முட்டாள்தனம். அணையை வெள்ளம் உடைக்கிற இடத்தில் கட்டவேணும். உடைக்கிற இடத்திலே கட்டினாத்தான் நிப்பாட்டலாம்'

2

'நஞ்சுண்ட காடு' நெடுங்கதை தொடங்குகிறது. தொடங்கியது கதையா? வரலாறா? வலித்து வலித்து வாழ்ந்த சுகுமார் என்ற மனிதனின் கதையைத் தொடங்குகிறார் போராளியாய், படைப்பாளியாய் வாழ்ந்த குணா.கவியழகன். அவரில், அவராக வாழ்ந்த சுகுமாரின் கதை.

'வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக் கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளி விசிறும் வித்தையா கற்றேன் கனவுலகக் கதை சொல்ல? இல்லையந்த வாழ்வைத் தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே கால நீட்சியில் திரட்சியுற்று, திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை? இல்லையே! இதுவும் வலித்து வலித்து வாழ்ந்த மனிதனின் கதை. வலியென்றா காண்பீர், இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை.'

'கதையெனில் பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசும் வித்தையா கற்றேன் கனவுலகக் கதைசொல்ல' என முதல் கட்டமாக வாசகர்களைப் பிரித்து நிறுத்துகிறார் குணா கவியழகன். அவர் சொல்லப் போவது போர்க்கள வரலாறு. வீரத்தை, வீரம் விளைவித்த மகிழ்ச்சியை, கூடவே கொண்டு வந்து நிறுத்திய வலியை, இடிபாடுகளைக் காண்பதற்கும் கிரகிப்பதற்கும் மனுசத்தனம் வேண்டும். அதில்லாதவரை விலகி நிற்கக் கேட்டுக் கொள்கிறார்.

ரணம், நிணம், வலி, வேதனை, கொலை, சாவு என மானுட வாழ்வின் அன்றாட நிரலினால் பாதிப்புக்குள்ளாகி - போரியிலை வாழ்வியலாகக் கொண்ட நாடு. உடன் செல்ல, உணர்ந்து கொள்ள பாரம்பரிய இலக்கிய வாசிப்பு போதாது. மதியநேர உணவுக்குப் பின்னான தூக்கத்துடன், மாலை நேர மந்தமாருத மயக்கத்துடன், வாசிப்பு செய்யும் கனவுலக வாசிகளை விலக்குகிறார்.

விசத்தின் கதை இது. பகை உமிழ்ந்த நஞ்சினை, போராடிப் போராடி தமது மக்களுக்கும் தமக்கும் பாதுகாப்பான ஒளிரும் இரத்தினக் கல்லாய் மாற்றித் தரும் போராளிகளின் கதை இது.

ருசிய எழுத்தாளர் ஷோலகாவின் 'அவன் விதி' புதினம் இவ்வாறு தான் தொடங்குகிறது. யுத்த வரலாற்றின் ஊடாக வருகிற வாழ்வுக் கதை . யுத்தத்தின் சுழிப்பு அந்திரேயை மட்டுமல்ல, குடும்பத்தை, ருசிய சமுதாயத்தை உள்ளிழுத்துச் சுருட்டிய பின், வாசகர்களுடன் ஷோலகாவ் நேர் உரையாடுதல் போலவே, தமிழீழக் கதை சொல்லி குணா. கவியழகன் பேசுகிறார். சுகுமாரின் சகபோராளியான இனியவன் என்னும் பெயரின் வழியாய் சொல்லப்படுகிறது.

யுத்தகளத்தில் மனித உயிருக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. கொல்லுவதும், கொல்லப்படுவதும் மட்டுமே அவ்விடத்தில் முனைப்பான காரியங்கள். இரண்டாம் உலகயுத்தத்தில் குடும்பம் முழுதும் பலி கொள்ளப்பட்டு மீந்திருந்த 'அவன் விதி' நாயகன் அந்திரேய் பேசுகிறான். ஜெர்மானியர்கள், ருசிய மக்களை எதற்காக கொன்றார்கள்?

'அவர்கள் எதற்காக கொன்றார்கள் என்றா கேட்கிறீர்களா? நான் ருசியன் என்பதற்காக. நான் இன்னும் உயிரோடு உலகில் இருக்கிறேன் என்பதற்காக. அவர்கள் பொருட்டு உழைத்தேன் அல்லவா அதற்காக. எடுத்தற்கெல்லாம் உதையும் குத்தும். எதிர்த்துப் பார்த்தால் அடி, தவறுதலாகக் காலடி வைத்தால் அடி, அவர்கள் விரும்பின மாதிரித் திரும்பாவிட்டால் அடி. அடிக்கிற அடியில் உயிரைப் பறித்து விட வேண்டுமென்பதற்காகவே அடித்தார்கள். ரத்தக் குழாய் வெடித்து அடிபட்டுச் சாக வேண்டுமென்பதற்காகவே அடித்தார்கள்.'

இந்தக் கொலைச் செயல்களை அப்படியே கொண்டு போய் சிங்கள வெறியர்களுக்குக் கொழுவிக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போரினை விட, இப்போது கொலைத் தொழில் நுட்பங்கள் வெள்ளமாய்ப் பெருகியுள்ள சமகாலத்தில், சிங்கள வெறியர்கள் என்ன விரல் சூப்பும் குழந்தைகளா?

இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு போர்க்கள வீரனாக அந்திரேய் நின்று கொண்டிருக்கையில், குடும்பம் கண்காணாத் திசையில் தூக்கி எறியப்பட்டு சிதைகிறது. 'நஞ்சுண்ட காடு' கதையில் வரும் சுகுமார்களுக்கு நடக்கிறது போலவே.

'இரவு கன்ரரின் பின்புறத்தில் ஏற்றப்பட்டு 'கைதடி' வெளியில், காற்று முகத்தில் அறைந்து தலைமயிர் பறக்க, சேர்ட் பட படக்க இருந்த உணர்வுக்கும், பின் மழையில் நனைந்து நித்திரையில் வழிந்தபோது இருந்த உணர்வுக்கும் இப்போது இருக்கும் உணர்வுக்கும் எத்தனை வித்தியாசம்?'

இயக்கப் பயிற்சி எடுக்கும் வித்தியாசமான உணர்வில் சுகுமார் பயணிக்கிறான். அவரவர் விருப்பத்தின் பேரில்தான் போராளி வாழ்க்கைக்கு பேர் தந்தார்கள். ஆனால் 13 பேரில் ஒருவன் வரும்போது இடையிலேயே பூநகரி ஜெற்றியிலோ அல்லது வாகனம் வேகம் குறைந்த ஏதாவது ஒரு முடக்கிலோ குதித்துப் பின்வாங்கி ஓடிவிடுகிறான். அதுபோலவே பயிற்சியணியில் குழுத்தலைவராக இருப்பவன் வன்மம் கொள்வது, ஒருவர் துன்பத்தில் மற்றவர் இன்பம் அடைவது, காட்டிக் கொடுப்பது, துணை நிற்பது என இயல்பான மனிதர்கள் வருகிறார்கள். செதுக்கி வடிவமைக்கப்பட்ட, அளவாய் தைக்கப்பட்ட போராளிப் பொம்மைகள் இல்லை அவர்கள். தலைமையேற்க முந்துகிறவர்கள், காட்டிக்கொடுப்பதால் தண்டனை பெறுகிறவர்கள், தண்டனை பெற்றவருக்கு உதவுபவர்கள் எனப் பலர் அவரவரின் வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணியில் வெளிப்படுகிறார்கள். வேதச் சமயத்திலே பிறந்து வேதப் பாதிரியாய் ஆக பெற்றோர் விரும்பிய சுசீலன், அந்தத் துறவை விட இந்தத் துறவு அர்த்தமுள்ளதென நினைக்கத் தொடங்கினான். அது மக்களுக்காக என்றால் இதுவும் மக்களுக்காகத்தானே. அதில் ஆண்டவனைப் பற்றிப் போதிக்கலாம். இதில் ஆண்டவன் போல அவர்களைக் காப்பாற்றலாம்.

'இப்படியெல்லாம் யோசிச்சன். சூசையப்பர் வாள் வச்சிருக்கேல்லையா சாத்தான்களை விரட்ட, நான் துவக்கு வச்சிருப்பேன் சாத்தான்களை விரட்ட என்று நினைச்சன். வந்திட்டன்'

ஒவ்வொரு போராளியும் வந்த வாழ்வின் பின்னணி ஒப்புதல் வாக்குமூலமாய் வருகிறது. தங்களைப் போன்ற சக போராளிகளோடு இயல்பான அளவளாவுதலில் தெரியப் பண்ணுகிறார்கள். அவரவரின் யதார்த்த குணங்களோடு காட்டப்படுகிறார்கள்.

'பயிற்சி முகாமில் கழிப்பறை போவது பெரிய நரக இம்சை. கக்கூசிருக்கும் காரியம் இனி கைகூடி வராது. பள்ளிக்கூடத்திலிருந்தபோது பகிடியென்று சொல்லித் திரியும் ராஜ்ஜின் வசனம் 'தம்பி நீ எழுவாய், இங்கிருப்பதால் பயனில்லை' நினைவுக்கு வந்தது. தூக்கிப் பிடித்த சாரத்தால் மூக்கைப் பொத்தி அம்மளாச்சியே, நான் என்னெண்டுதான் இனி கக்கூசிருக்கப் போறேனோ என்றென் கண்முட்டியது '

சுகுமார் வந்த சேர்ந்த முதலாவது நாளின் சம்பவம் விரிகிறது.

முதல்நாள் இரவில் படுக்கும்போது மணி 2.46. தலைமாடு பதிவாகவும், கால்மாடு உயர்த்ததாகவும் இருந்தது. போதாக்குறைக்கு கழட்டிய அரை ஈர உடுப்பைச் சுற்றி தலையணையாக்கிப் படுத்தான். கால்மாடு போர்த்துவிட அம்மா இல்லை. இனிமேல் அம்மாவும் இல்லை. போர்வையும் இல்லை

'இனி சனம் உங்களை இயக்கப் பொடியள் போறாங்கள் என்று சொல்லுங்கள்'

பயிற்சி மாஸ்டர் சொன்னபோது மனம் அவர்களுக்கு ஒருதரம் அந்தர இடத்தில் நின்றது. உண்மையிலேயே அந்த வசனம் நினைக்க நினைக்க கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது.

இயற்பெயர்கள் மறந்துபோக இயக்கப் பெயர்கள் சூட்டினார்கள். நேற்று வரை தனது வட்டத்தில் வழங்கிய தாய், தந்தை சூட்டிய பெயர் இல்லாமல் போகும். எதிரி அறியாமல் செயல்கள் செய்ய, மக்கள் அறியும்படி காரியங்களை முன்னெடுக்க புனை பெயர்கள் தேவையாகின்றன. பயிற்சி பெறும் எல்லோருக்கும் துவக்கு (துப்பாக்கி) தருகிறார்கள். துவக்கு தந்த நாள் மனதுக்குப் பிடிபடாத சந்தோசம். எல்லோரது முகங்களும் பூத்திருந்தன. துவக்கெண்டால் சும்மாவா? துவக்கைப் பிடித்தால் அதுக்கொரு தனி வீரம் பிறக்கும். துவக்கு ஏந்தி,

'புலிவீரர் புதுவீரர் உருவாகின்றார்

புயலோடும் போராடும் புலியாகின்றார்'

பாடல் ஒலிக்க பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சி நிறைவுபெறும் கட்டத்தில் அந்தப் பகுதியின் படையணித் தளபதி இளம்போராளிகள் மத்தியில் உரையாடுகிறார்.

'இப்ப நீங்களும் போராளி. நானும் போராளி, நாம் எல்லோரும் ஒரே எண்ணத்தோடும், குறிக்கோளோடும் வந்திருக்கிறோம். நம்முடைய வீரமும், தியாகமும் நிச்சயம் நம்முடைய நாட்டை விடுதலை செய்யும்.'

தளபதி ஒன்றை மறக்காமல் வைத்திருக்கிறார். தான் சஞ்சரிக்கும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல்கிறார்.

'உங்களுடைய தனிமனித திறமை எப்படியொரு இயக்கத்தின் பலமாகவோ, இனத்தின் பலமாகவோ மாறுமோ, அப்படியே உங்களுடைய தனிமனித ஒழுக்கயீனங்கள் நமது இயக்கத்தின் பலவீனமாகவும் மாறும். புலிகளுக்கென்று ஒரு பழக்கவழக்கம், பண்பாடு, ஒழுக்கம் அடையாளமாக இருக்கிறது. அத்தகைய இயல்புள்ள ஒரே குடும்பத்தவராக இந்தப் பயிற்சி முடிந்ததும் இருக்க வேணும்.'

அவர் உரை புதிய உற்சாகத்தைக் கொடுப்பதாக மாறியது.

'ஒழுக்கம் இல்லாத ஓர்மம் வீரமாடா? அதுக்குப் பேர்வேற, சண்டித்தனம், காடைத்தனம், ரவுடித்தனம்.''

இவர்களுக்குப் பயிற்சி தந்த மாஸ்டரின் கோபமான முகபாவத்தில் வெளியான வாசகம் புலிகளின் பொது ஒழுக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

பயிற்சியின்போது பலதையும் உள்வாங்கி உணரும் திறன் வாய்க்கிறது. அனுபவப் பாடம் போல் உசத்தியானதாக போதனைப்பாடம் ஒருபோதும் இருப்பதில்லை. பயிற்சியின்போது காகம் கரைகிறது. காகம் கரைவதைக் கொண்டு பயிற்சிமுகாம் எங்கிருக்கும் எனக் கண்டுகொள்கிறார்கள். 'காகம் வந்திருக்கிறதென்றால் நாங்கள் இருக்கிறது நடுக்காட்டில் இல்லை. எங்கேயோ காடு கரையில்தான் இந்தப் பயிற்சி முகாமிருக்கு. அப்ப ஊர் மனை கிட்ட இருக்க வேணும்' என்று யூகித்து உணருகிறான் சுகுமார். இந்த நடமாட்டமெல்லாம் நேரடி அனுபவங்களைப் பெற்றவர் யாரோ அவர்களுக்கே புலப்படும். நேரடி அனுபவம் வாய்க்காத ஒருவர் நிச்சயமாக கதை சொல்ல முடியாது. கதை சொல்லக் கூடாது.

பயிற்சி நிறைவு பெற்று படையணித் தாக்குதல் நடத்தி வெற்றியின் வெள்ளோட்டத்தின் பின் அணி பிரிகிறது. வேறுவேறு முனைகளுக்கு வேறு வேறு பணிகளுக்குப் பிரிக்கப்படுகிறார்கள்.

நான் சுகுமாரைப் பிரிய வேண்டியதாயிற்று என்கிறான் இனியவன்.

'ஈழப் போராளிகள், யுத்தமற்ற, யுத்தம் விரட்டப்பட்ட ஒரு பூமியைத் தரிசனம் செய்யவே விரும்பினார்கள். எத்தனை போர்க்களங்கள், எத்தனை இழப்புக்கள், எத்தனை துயரங்களை இந்தப் போர் வாழ்வில் பார்த்தாகி விட்டது. வாழ்ந்தாகிவிட்டது. பொது நியாயம் ஒன்றில் எல்லா இழப்புகளும் அர்த்தம் பெற்றிருந்தன. தவறுகள் கூட நியாயப்படுத்தப்பட்டிருந்தன. அதனில் அதுவே தர்மமும்.' - இவ்வாறு போராளி இனியவன் எண்ண ஓட்டம் போகிறது.

அவ்வாறு தான் ஆயிற்று. சிலர் எதிர்பாராத இடத்தில் சந்தித்தார்கள். சிலர் வீரச் சாவு எய்தினார்கள். சிலர் ஊனமடைந்து அவலம் கொண்டார்கள்.

தாய், தந்தை, தம்பி, அக்கா, தங்கை என்ற ஒரு குடும்பத்தில் பாத்திரங்கள் எல்லோரும் பின்னணிப் படைகள். இந்த சொந்த ரத்த ஓட்டம் சீராக இருக்கிற போது- போராளிகள் நோயெதிர்ப்புக் குணம் கொண்டோராய் களத்தில் நிற்பார்கள்.

ஒரு போராளி இருக்கும் வரை எந்தக் குடும்பமும் அநாதையில்லையென சுகுமார் உதிர்த்த சொல் உண்மையாயிற்று. இடப்பெயர்வினால் தென்மராச்சியில் இருந்தபோது அவர்களுக்கு ஒரு தங்குமிடம் கிடைக்க வழி செய்ய இனியவனுக்கு சாத்தியமாயிற்று. அதன் பின் எட்டு வருசங்கள். தென்மராச்சி, கிளிநொச்சி எனப் பெயர்ந்து பெயர்ந்து அலைந்தபின் அமைதிக்காலத்தில் கூடு திரும்பியது குடும்பம்.

உலை ஏற்ற முடியாத அந்தக் குடில் மாதந்தோறும் ஒவ்வொருத்தராய்ப் பாடை ஏற்றியது. ஷோலகோவின் அவன் விதியை விட கொடூரமானதாய் அக்காவின் விதி நடந்தது.

அவள் வாழ்ந்த கொட்டில் இனியவன் நினைவுகளில் விரிந்து அச்சமூட்டியது. இருண்டு வெறுமை தோய்ந்து கிடந்த குடில். அதன் நிசப்தம் சிறு ஒலியையும் பேரொலியாகக் காட்டியது. ஆறுதல் அளிக்க வார்த்தையில்லை. வழியுமில்லை, ஒரு மனிசன் கேட்க முடியாத கதையை, இனியவன் அந்த அக்காவிடமிருந்து கேட்க நேர்ந்தது, அவன் அடிவயிற்றைப் பிசைந்தது.

முதலில் தாயின் இறப்பு - சவப்பெட்டி கேட்க திருகோணமலைத் தொடர்பகப் பொறுப்பாளைரைத் தேடிப் போனாள் அக்கா.

தாய் இறந்து, இறுதிச்சடங்கு முடிந்த அடுத்த சில நாளில் தந்தையின் சாவு. உலையேற்றவே வக்கற்று இருந்த அந்தக் குடும்பம் தந்தையைப் பாடையேற்ற எங்கே வழி தேடுவது? கருணையுள்ளம் கொண்ட அதே திருகோணமலைப் பொறுப்பாளர் உதவ சவப்பெட்டி கிடைத்தது.

மூன்றாவது சீனன் குடாவில் சுகுமார் வீரச்சாவு. அந்தத் திருகோணமலைப் பொறுப்பாளரும் போராளிகளும் வீட்டுக்காரர்களாய் நின்று காரியம் செய்தார்கள்.

மூத்த அண்ணன் மகன் சுரேஷ் படித்து வளர்ந்து தலையெடுத்தால்தான் குடும்பத்துக்கு எதிர்காலம் என்றிருந்த நிலையில் மலேரியாக் காய்ச்சல் வந்தது. போதிய மருத்துவ உதவியும் சத்தான சாப்பாடும் இல்லாத பன்னிரண்டு வயது சுரேஷ் மரணித்தான். திருகோணமலைப் பொறுப்பாளரிடம்தான் மீண்டும் போனாள். நான்காவது தடவையும் சவப்பெட்டி கேட்கவே அவர் கலங்கிப் போனார்.

'நான் அங்கே எப்பவுமே சவப்பெட்டி கேக்கிற ஆளாத்தான் போனேன்' அக்கா அழுதாள்.

ஒரு விடுதலை இயக்கத்துக்கு மண், புவியியல், அரசியல் சூழல், மக்கள்- போன்றன அடிக்களனாக அமைகின்றன. அத்தனையையும் சரியாகக் கணித்து, தனித்துவமான வழிமுறைகள், நடைமுறை கைக்கொண்ட இயக்கத் தலைமையினால் விடுதலை சாத்தியமாகும். சாத்தியமாவதும், ஆகாமல் போவதும் மக்களின் அர்ப்பணிப்பு சார்ந்த விசயம் மட்டுமேயல்ல.

'நல்லது, நானும் போர்முனைக்குப் போய்ப் படாத பாடெல்லாம் பட்டுத் தீர்ந்தேன் அண்ணே. அளவுக்கு மேலேயே, ஆம்'

போராளிகள் சுகுமார், இனியவனின் பேச்சுப் போல் தோன்றலாம். அச்சு அசலாய் அது ஒரு போராளியினுடையது தான். உயிர், குடும்பம், துணை, தன் உயிரின் புதிய தளிர் எனப் பரித்தியாகம் செய்த 50 ஆயிரம் போராளிகளின் அச்சு அசலான வாசகம் போல்தான் இருக்கிறது. ஆனால் அவர்களினுடையது அல்ல. ஷோலகாவின் 'அவன் விதி' நாயகன் அந்திரோய் தான் இவ்வாறு உதிர்த்தான்.

அந்திராய் சொன்னான் 'சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டைப் பார்த்த வண்ணம் வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை.

இருட்டானாலும் சரி, இல்லை சூரியன் பளிச்சென்று ஒளிசெய்யும் போதானாலும் சரி... எனக்கு விடை எதுவும் கிடைப்பதில்லை. இனி ஒருபோதும் விடை கிடைக்காது.'

வலது பக்க முழங்காலின் கீழ்ப்பகுதியில் காயப்பட்டு, எலும்பு முறிந்து கால் முழுக்கப் பத்துப் போட்டு – வயிற்றிலும் பிளாஸ்டர் ஒட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த சுகுமார், இனியவன், இன்னும் மருத்துவமனை முழுதும் நிறைந்திருந்த போராளிகளின் மனநிலை 'அவன் விதி' அலைவரிசையில் இருந்தது. நோயாளிகள் நிலையில் கிடக்கிற போராளிகள் பேசமுடியாது. பேசமுடியாப் போராளிகளும் பேசமுடிந்த ஒன்பதாம் கட்டில்காரன் தேர்ந்தெடுத்துப் பாடும் பாடல்களும் 'அவன் விதி' நினைப்பைக் கொண்டிருக்கின்றன.

'அழுக்கான சுவரில் கரிக்கோடுகளின் கிறுக்கல்கள் தெரிகின்றன. வாழ்க்கை எங்கெல்லாம் பயணிக்கிறது. தன்விதியை யார்தான் அறியமுடிகிறது. யாரிந்த மனிதர்களுக்கு விதி செய்கிறான், கடவுளா? யுத்தமல்லவா எங்கள் மனிதர்களுக்கு விதி எழுதிப்போகிறது' இனியவன் என்ற பாத்திரத்தின் குரலாக வெளிப்படும் இவ்விசனம், 60-ஆண்டுக்காலப் போரிடும் இனத்தின் வாழ்வு குறித்த சரியான வசனம்.

மருத்துவமனையில் போய்ப் படுத்த நாளன்று, ஏணைப்பிறை சரிந்து வானத்தில் விழுந்து கிடந்தது. அன்றுதான் இனியவன் கேட்டான்.

'அக்கா சுகமாமோ?'

'ஓம்' என்றான் ஒற்றைவரியில்.

'வீட்டை யார் பாக்கினம்?'

'ஒருத்தரும் இல்லை. அம்மான்ர (மாமா) சம்பாத்தியத்திலதான் ஓடுது'

'அண்ணா?'

'கலியாணம் செஞ்சிட்டானாம்' சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பினான் அவன்.

'அப்பாக்கு இப்ப எப்பிடி?'

'அப்பாக்கு கொஞ்சும் சுகமாம், எழும்பி நடக்கிறாராம்'

'தம்பிகள் படிக்கிறாங்களோ?'

'எனக்கடுத்தவனும் இயக்கத்துக்குப் போய்ட்டானாம்'

மற்ற பக்கம் திரும்பிப் படுத்தான். இனியவனுக்கு தொடர்ந்து கதைப்பது நல்லதா, விடுவது நல்லதா என்று தெரியவில்லை. அக்கா மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் செல்கிறாள்.

காயம்பட்டு மருத்துவமனையில் கிடக்கிற சுகுமாரைப் பார்க்க வந்தாள் கீதா. அவன் முகம் கொடுத்துப் பேசவில்லை.

'ஏன் நீ கதைக்கேல்ல. தெளிவா கதைச்சு விட்டிருக்கலாமே?'

'கதைச்சா இதை விட வேதனையா முடியும். இயக்கத்துக்கு வந்த அன்றே காதலுக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு. பிறகும் பக்கத்தில் முற்றுப் புள்ளி வைச்சா, அது தொடராய்ப் போயிடும். வசனம் முடிஞ்சதா ஆகாது'

வாழ்க்கையின் விதியை யுத்தம் எழுதிப்போகிறது. எதிரி தொடுத்த யுத்தமும் அதை நாம் எதிர்கொண்ட விதமும் என்பது இதன் பொருள். யுத்தத்தின் வசம் வாழ்க்கையை ஒப்படைத்து விடுகிறது ஒரு இனம். பிறகு மருத்துவமனையிலிருந்து அவரவர் படையணிக்குத் திரும்புகிறார்கள்.

ஒரு கடிதம் வந்து சேருகிறது.

'அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம்.

முக்கியமான கடமையில் நான் ஈடுபடத் தொடங்கியிருக்கிறேன். சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த என் மனம் உன்னால் அமைதியடைந்திருக்கிறது. என் கடமையில் வலிமையோடு மனதைச் செலுத்த உதவி செய்யும்... ஒரு போராளி இருக்கும் வரை எங்கள் குடும்பங்களும் அநாதைகள் அல்ல என்று நம்புகிறேன்... விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக் கூடும் என எண்ணுகிறேன்.. மறுபடியும் உன்னைச் சந்திக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

நன்றிகளுடன் நண்பன், சுகுமார்.'

அதுவே சுகுமாரின் இறுதிக் கடிதம். கரும்புலி அணியினர் களச் சாவு அடைவதற்கென்று வியூகத்தில் நுழைகிறார்கள். மீண்டு வரமுடியாத ஒரு முனைக்கு சுகுமார் போய்விட்டான்.

'கடிதம், சுகுமார் ஈடுபட்டிருக்கும் முக்கியப் பணி தொடர்பாக நான் எண்ணியது சரியாக இருக்கலாம் என்பதை மேலும் ஊர்சிதப்படுத்தியது. நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ இனம் புரியாத இறுக்கம். அதிகம் மூச்சை உள்ளிழுத்து நான் விடுபட முயன்றேன். எனக்கு அவனைத் தெரியும். அவனின் மனம் அசையும் கோணம் தெரியும். அதை வைத்துத் தான் இப்படி எண்ணத் தோன்றியது. சுகுமாரின் மனக் கோலத்தை நான் அறிந்திருந்தேன். உணர்ந்திருந்தேன். ஒருவேளை நான் கடவுள் ஆகினால் அவனின் மனதையே எல்லா மனிதர்களுக்குமாக படைத்திருப்பேன். இந்த தற்கொலை யுத்ததாரியின் மனதை பூமியின் மனிதர்களுக்குப் படைத்திருந்தால், யுத்தம் இல்லாத பூமி ஒரு வேளை சாத்தியமாகியிருக்கக் கூடும்.'

இனியவன் அறிந்திருந்தான். சுகுமார் மீண்டு வரப்போவதில்லை என்ற சேதியை, இழப்பு பற்றிய உறுதியோடும் உறுதியின்மையோடும் காத்திருக்கிற அக்காவுக்கும் குடும்பத்துக்கும் வெளிப்படுத்தும் கடமை சுமந்து இனியவன் செல்கிறான். உரையாடும் திராணியற்ற  அக்காவின், குடும்பத்தின் நிலைகுறிக்கும் கடைசிப் பகுதிகள் கொடுமையினும் கொடுமையானவை.

'தம்பி இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது. குடும்பத்தில் பொறுப்பான ஆளில்லாட்டி அந்தக் குடும்பம் வழிப்படாது. ஆனால் தம்பியை நான் வரச்சொல்லிக் கேட்டதில்லை. அவன் என்னசெய்தாலும் சரியாகத்தான் செய்வான். நியாயம் அறிஞ்சுதான் எதையும் செய்வன்... ம்... எல்லாத்துக்கும் விலையிருக்கு. விடுதலை கிடைச்சா இந்த நாட்டின் பெறுமதியா இழந்து போன உயிர்களிருக்கும். ஆனால் அந்த உயிர்களின் பெறுமதியை யார் விளங்குவினம், அதுதான் எங்கட குடும்பத்தின்ற வாழ்க்கை.'

விட்டு விட்டு வந்த வார்த்தைகளின் முடிவில் திரும்பவும் அழுதாள்.

கட்டுண்டு போயிருந்த உணர்வின் வீச்செல்லைக்குள்ளிருந்து விடுபட இனியவனுக்கு ஒரே வழிதான் தெரிந்தது.

'நான் வெளிக்கிட வேணுமக்கா. இன்னொரு நாளைக்கு வாறேன்'

சொன்னானே தவிர இன்னொருநாள் சந்திக்கும் துணிவு அவனுக்கில்லை.

அக்கா என்னும் அமுதசுரபிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொலைத்து நிற்கப் போகிறோம். அமுதசுரபி ஜீவனுள்ளது. அது பேசும், அசையும், சிரிக்கும். அமுதசுரபிகளை நடைப் பிணமாக்கி, எலும்புக்கூடுகளை ஏந்திய கைகள் எற்றுக்கு?

சுகுமார் - களப்போராளி. அக்கா பின்புலப்போராளி.

அக்கா ஒரு குறியீடு. ஈழத்து மொத்த மக்களுக்குமான அடையாளமாகி நிற்கும் இரு சித்திரங்களில் ஒரு சித்திரம் சுகுமார். இன்னொரு சித்திரம் அக்கா. இன விடுதலைக்காக விழுந்த விதைகளில் சத்தான விதை எது? களத்தில் விழுந்த விதைகளா? களத்தைத் தாங்குதற்கு வீட்டில் விழுந்த விதைகளா?

இழப்புகளுக்கான அறுவடை இழப்புகளை ஈடுசெய்யும் விடுதலையின் உதயம் மட்டுமே. சுகுமார் சொல்வது போல், விலைகொடுக்காது விடுதலை சாத்தியமாகாது என்பதை நாம் விளங்கிக் கொண்டிருந்தாலும், ஈழவிடுதலை ஒன்றே அந்த இழப்பை ஈடுசெய் நீதியாக இருக்க முடியும்.

நம்மிடையே ஒரு குறள் உண்டு
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்
- இராச தந்திர நகர்வுகளின் அடிப்படை இந்தக் குறள்.

வினைவலி என்னும் விடுதலை வலிமையை அறிந்திருந்தோம்.

(இங்கு 'நாம்' என்பது- சுகுமாரின் சிந்திப்பு நிலையிலிருந்து- அனுபவத் தொகுப்பிலிருந்து - விடுதலையை எதிர்நோக்கும் தளத்திலிருந்து எழுந்து வரும் ஒரு சொல்)

தன் வலிமையின் அளவை, இருப்பதினும் அதிகமாய் எண்ணியிருந்தோம்.

மாற்றான் வலிமையை முழுமையாய்க் கணித்திடவில்லை. பாரம்பாரியத் தாக்குதலும் ஆயுதங்களும் வஞ்சகமும் கொண்டிருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே என்ற இந்த வரிசை முடிந்து போயிற்று. இவர்கள் எல்லோரினும் கூடுதல் தந்திரோபாயமுடன், சர்வதேச அரவணைப்பும் நவீன கொலைத்தொழில் நுட்பமும், இராணுவப் பெருக்கமும், அனைத்துக்கும் மேலாய் ஒன்றுதிரட்டி ஊத்தமான சிங்கள இனவெறியும் கொண்டு இராசபக்சே ஆட்டமேடைக்கு வந்திருந்தான்.

துணைவலியின் சாரம் ஐக்கிய முன்னணித் தந்திரம். துணைச் சக்திகளின் ஒன்றுதிரட்டலை நிராகரித்தோம். பூபாகத்தில் எந்த ஒரு எழுச்சியும், விடுதலைப் புரட்சியும், இனவிடுதலையும் ஐக்கிய முன்னணி இன்றி சாத்தியப்பட்டதில்லை. துணைவலியைத் தேடி, நாடி நாம் நடக்கவில்லை.

எதிரிக்கு ஒரு நாடு இருக்கிறது. ஒரு நாட்டில் நின்று, அவன் உலகத்து நாடுகளை வளைக்கிறான். சற்று முன்பிருந்தது நமக்கு ஒரு நாடு. அதற்கு ஒரு அரசும் இருந்தது. அரசிருந்த வேளையில் பேசும் வலிமை வேறு. அப்போது நமக்குக் காதுகொடுக்க, கைலாகு கொடுக்க சிலராவது வந்தார்கள். அதனால் அப்போது நார்வே இடையில் வந்தது.

ஆறு, ஆணைக்கட்டு, நீர்த்தேக்கம், மதகு – என நீர்நிலைகள் வளம் அவனுக்கு. கண்பார்வைக்கும் படாது, கைக்கும் எட்டாது, மேகங்கள் எட்டி எட்டி ஓடுகின்றன நமக்கு.
அதோ மேகங்கள்
மழையைக் கொண்டு போகிறது
நம்முடைய குளங்கள் வறண்டுவிட்டன
நம்முடைய பயிர்கள் வாடிவிட்டன
விடாதே, மேகங்களை மடக்கு,
பணிய வை
கவிஞர் மு.சுயம்புலிங்கம் கவிதையில் காட்டிய காரியத்தை, இன்று நாம் அரசியலில் செய்யவேண்டிருக்கிறது. மழை என்பது பருவநிலை. அரசியல் பருவங்கள் நமக்குச் சாதகமாக இல்லாதபோது, பருவங்களைப் பணியவைக்க, நம் காட்டில் மழை பெய்ய வைக்க, இராசதந்திர முன்னெடுப்புக்கள் எவை, என்னென்ன என சிந்திக்க வேண்டிய காலத்தில் நிற்கிறோம்.

இது போல் எண்ணிக்கையில்லா போராளிகள், மக்களின் சாவுகளின் பின், குடும்பங்களின் சிதிலங்களுக்குப் பின், தலையாய விடுதலைப்போரின் பின்னடைவுக்குப் பின், சில கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பத் தூண்டுகிறது இந் நெடுங்கதை. அவைகளைத் தனக்குள் கொண்டிருக்கிறது களப் போராளியும் படைப்பாளியுமாய் வாழ்ந்த குணா. கவியழகனின் எழுத்து. இலட்சியம், தியாகம், அர்ப்பணிப்பு, இழப்புகள், ஒழுக்கவிதிகள் மட்டும் விடுதலைப் போரின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தீர்மானிக்க இவை போதா. விடுதலைப் போரை முன்னகர்த்தும் இராசதந்திரக் கோட்பாடுகளை சமகாலம் கோருகிறது. வெறும் இராசதந்திரங்களினால் இனவெறியன் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது, இராசதந்திரம் என்னும் கருதுகோள் இல்லாததினாலே பின்னடைவுக்குச் சென்றோம் என்ற சுயவிமர்சனம் இந்நெடுங்கதைக்குள்ளிருந்து கிளம்புகிறது.

உலகத்திடம், ஐ.நா அவையின் முன், அதன் உறுப்பு நாடுகளிடம் ஈழத் தமிழர்களுக்கான, 'ஈடுசெய் நீதியைக்' கோருகிற வேளையில், இயக்கங்களின் போக்கில் புதிய நடைமுறையைக் கோருவதே – அகநிலை 'ஈடுசெய் நீதியாக' இருக்க முடியும்.

'எது தோல்வியெனக் காணப்படுகின்றதோ அதனையே தனது வெற்றிக்கான தளமாக்கிக் கொள்ள வல்லவன் எவனோ அவனே நிகரற்ற சாதனையாளன் ஆவான்' என்கிறார் அரசியல் ஆய்வாளர் சண்முகவடிவேல். அவ்வாறு நிகழாது போயின், குணா.கவியழகன் 'என்னுரையில்' பதிந்திருப்பது போல் நிகழும்.
நண்ப,
உனது மரணம் விடுவிக்கப்படாது விடின்
மனுக்குலத்தில் தமிழ்ச்சாதி மண்ணாகிப் போகும் காண்
(யுத்தம் உச்சத்திலிருந்த 2008-ஆம் ஆண்டில், 'ஏணைப் பிறை' என்னும் தலைப்பில் இக்கதைப் பிரதியைவெளியிட கவிஞர் கி.பி. அரவிந்தன் பிரான்சிலிருந்து இணையத்தில் அனுப்பியிருந்தார். 'போர்க் களஇலக்கியம்' எனத் தலைப்பிட்டு அதற்கொரு அணிந்துரையும் நான் எழுதி அச்சிட ஏற்பாடு செய்திருந்தேன். இந்நிலையில் கி.பி.அரவிந்தன் தனது பதிவில் குறிப்பிடுமாறு போல 'வன்னியிலிருந்து இரு தடவைகள் தடைஉத்தரவை' இந்நூல் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. 2009-இல் போர் முடிவுற்ற பின், அரசபயங்கரவாதத்தின் பிடிக்குள் மாட்டுப்பட்டிருந்த சூழலில் படைப்பாளி ஒப்புதல் தர இயலவில்லை. முள்வேலிமுகாமிலிருந்து விடுபட்டு புலம்பெயர்ந்த பின், அவரது ஒப்புதலுடன், அகல் பதிப்பக வெளியீடாக (348-ஏ, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-14) வந்திருப்பது கி.பி அரவிந்தனின் இடைவிடா முற்சிக்குக்கிடைத்த வெற்றி எனக் கருதுகிறேன்)

நன்றி: பொங்கு தமிழ் - பகுதி 1, பகுதி 2

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?