சிந்திக்காத மூளை செயலற்றுப் போகும் - சிந்திக்காத மனிதன் அடையாள மற்றுப் போவான்

(24 பிப்ரவரி  2018ல், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம், புதிய தேசியவாதம்” நூல் வெளியீட்டு உரை. 




வடக்கு மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினர்; எழுத்தாளர் நிலாந்தன் தலைமை, யாழ்ப்பல்கலைத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் அருந்தாகரன், அரசறிவியற் துறைத் தலைவர் கலாநிதி கே.டி. கணேசலிங்கன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி டி கிருஷ்ணமோகன், சட்டத்துறைத் தலைவர் கே.குருபரன் ஆகியோர் வெளியீட்டுரை ஆற்றினார்கள். நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். நெஞ்சம் நிறைத்தது இந்நூல் வெளியீடு!)


தமிழ்மண்ணில் கால்வைக்கும் முன் இந்த வரலாற்று அரசியல் ஆய்வாளர் அவரது எழுத்துக்களால் அறியப்பட்டிருந்தார். எழுத்துக்கள் காற்றை விட வேகம் கொண்டவை. கால்களை விட உறுதியானவை.

அவர் எங்கே தமிழ்நாட்டு மண்ணில் கால்வைத்தார்? எல்லா ஏதிலியருக்கும் எது சாசுவதமோ அந்த நீர்க்கடலில், 2009- முள்ளிவாய்க்காலின் பின் தப்பிவந்து கடல்தண்ணீரில் காலூன்றினார்.



நான் பார்க்கக் கிடைத்த அவரது முதல் நூல் 'சமஸ்டியா தனிநாடா'. எழுத்துக்கள் வழி அறிந்த அவரை நேரில் தரிசித்தது 'மண்டபம்' அகதி முகாமில்.


இந்திய சாத்தான்களின் படையெடுப்பு 1987 - ஈழத்தில் நிகழுமுன்னரே அவரது 'இந்தியாவும் ஈழவிடுதலைப் போராட்டமும்' என்ற நூல் வெளியாகியிருந்தது. (சுகந்தம் வெளியீடு, யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் -1985). இந்திய நுழைவு 'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்'– என்ற சாணக்கியத்தைக் கொண்டுள்ளது என அப்போது கணித்திருந்தார். இச்சிறு நூலை பரவலாய்ச் சென்று சேரவேண்டுமென்ற அவாவில் டிசம்பர் 2008ல் பத்து ரூபாய் விலையிட்டு, ஈராயிரம் படிகள் அச்சிட்டு 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் சார்பில் வெளியிட்டோம். அவ்வேளை நான் 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் செயலராக இருந்தேன்.


'1985இல் வெளியிடப்பட்டதாயினும், ஒரு சரியான சமூக ஆய்வு காலங்கடந்து நிற்குமென்பதற்கு சான்று இந்நூல். 2008 டிசம்பர் 3-ல் ஒரு முக்கியமான நிகழ்வு பதிவு செய்யப்பட்டது. உலகின் 103 நாடுகள் கூடி, ஹிரோசிமா நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்த நிலையில் அதிகக் கதிர் வீச்சுக் கொண்டதும், ஆபத்தானதுமான கொத்துக் குண்டுகள் வீச்சு நிறுத்தப்பட வேண்டுமென உடன்படிக்கை செய்தன. உலகத்தால் நிராகரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை இலங்கை இராணுவம் வீசி, கொத்துக் கொத்தாய் ஈழத்தமிழர் உயிர் பறிக்கிற இப்போதும், தன்இரை ஒன்றே குறியாய் அசையும் மலைப்பாம்பான இந்திய நிலையை விளக்கிட இந்நூல் இப்போதும் தேவைப்படுகிறது' என நூலின் மீள்பதிப்பில் குறிப்பிட்டிருந்தேன்.

இலங்கை ராணுவத்துக்கும் போராளிகளுக்குமான யுத்தம் உச்சத்திலிருந்த போது மு. திருநாவுக்கரசு எழுதிய, 'இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராஜதந்திரம்' என்ற எட்டுப்பக்க அளவுள்ள சிறு வெளியீடு – பத்தாயிரம் படிகள் அச்சிட்டு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பாக தமிழகமெங்கும் இலவசமாக விநியோகித்தோம்.


இவ்விரு வெளியீடுகளையும் நூலாக வெளியிட வேண்டுமென்னும் தனது விருப்பை வெளிப்படுத்தி – எனக்கு அனுப்பி, அச்சிடுதற்கான நிதி உதவி அளித்தவர் பிரான்சில் வாழ்ந்த மறைந்த போராளி கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி. அரவிந்தன். அவருடைய பின்புலமும் தூண்டுதலும் இல்லாதிருந்தால், இவ்விரு நூல்களையும் தமிழகம் கண்டிருக்க இயலாது. நண்பர்கள் கி.பி.அரவிந்தனும், இ.பத்மநாப அய்யரும் இந்நூல் மீள்பதிப்பாக்கிட காரணகர்த்தாக்கள்.



2002 அக்டோபரில் 'மானுடத்தின் தமிழ்க் கூடல்' மாநாட்டுக்கு நாங்கள் ஐவர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது கூட மு. திருவை நாங்கள் சந்திக்கவில்லை. நேரில் சந்திக்க இயலாதவாறு – விடுதலையை நோக்கிய நெடும்பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்! அவருடைய ஆய்வு எழுத்துக்களின் அணிவகுப்பில் எக்காலமும் சுகந்தம் பரப்பி எம்மை ஈர்த்த வாசகப் பூக்கள் இவை சில:

  • ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு.
  • ஆய்வு – அது காலத்தை முந்தும் செயல். அது காலத்தை உந்தும் செயலும் ஆகும்.
  • ஒரு பொருளில் அல்லது செயலில் காணப்படும் ஒழுங்கு அல்லது விதியைக் கண்டறிவதன் மூலம், அதனைக் கையாள அல்லது எதிர்கொள்ள நம்மை நாம் தகவமைத்துக் கொள்ளலாம் என்பது ஆய்வின் இறுதி இலக்கு.
  • இயக்கக் கூட்டுக்குள் சனநாயகம், இயக்கங்களுக்குள் சனநாயகம், பொது தலைமைப் பீடத்துள் சனநாயகம் - என எங்கும் சனநாயகம் நிலவினால்தான், சனநாயக ரீதியாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் தான் சரியான வெற்றியை அடைய முடியும். இல்லையெனில் தோல்வியைத் தான் தழுவவேண்டி ஏற்படும்.
  • ஈழத்தில் ஆயுதந்தாங்கிய இயக்கங்களை விரிவடைய வைப்பதில், இந்தியாவுக்கு இரண்டு தந்திரோபயங்கள் உண்டு. முதலாவது - இயக்கங்களின் விரிவடைவால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாதல். இரண்டாவது - இவ்வியக்கங்கள் சோசலிஸத் தமிழீழ அரசை அமைக்கக் கூடியளவு பலம் பெறாது செய்தல்.
  • சிந்தனைச் சுதந்திரமே சோசலிசத்தின் ஊற்றுக்கண். முதலாளித்துவ அமைப்பிற்கும் இன ஒடுக்கு முறைக்கும் எதிரான கூரிய ஆயுதம் சிந்தனைச் சுதந்திரம்தான்.
  • உலகளாவிய வாணிகத்தில் ஈடுபடுகிற எந்த ஒரு அரசும், நாடும் ஏகாதிபத்தியமே.
  • சனநாயகம் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும் -  மண்ணில் கீழிருந்து மேலேறும் கொடி போல. மேலிருந்து கட்டளையாய் கீழிறங்குவது அதிகாரம் - தூக்குக் கயிறு போல!
  • தேசியம் என்பது மக்களை அரசியலில் பங்காளிகளாக்கும் ஓர் அரசியல் பண்பாட்டுச் செயல்முறை.
  • எல்லாத் தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருப்பது போல், எல்லாவற்றிற்கும் ஒரு மயானம் இருப்பது போல், பூமிக்கும் ஒரு மயானம் இருக்கிறது. எந்தச் சூரியன் பூமியின் உயிர் வாழ்வுக்குக் காரணமாக இருக்கிறதோ அந்த சூரியனே பூமிக்கு மயானமாகவும் அமைந்து விடுகிறது.

2

அவர் எழுதிய நூல்கள் எத்தனை? குடிபெயர்தல் என்னும் உள்நிகழ்வு, புலம்பெயர்தல் என்னும் புறநிகழ்வு - இரண்டின் கணிகளையும் சுவைத்து உயிர்பிழைத்தல் அஞ்ஞாதவாசம். இரு நிகழ்வின் காரணமாகவும் அங்கங்கு தன் எழுத்துக்களை அனாதைகளாக விட்டுப் போவது இவரின் இயல்பாகி விடுகிறது. எ. கா: பிரான்சிலிருந்து வெளியான 'எரிமலை' என்ற இதழில் வெளிப்பட்ட இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாய் வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த நிறுவனமயம் குறித்த கட்டுரை. இக்கட்டுரை அவருடைய எந்த நூல்களுக்குள்ளும் தொகுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

ஈழத்திலிருந்து வெளிவந்த வீரகேசரி, ஈழநாடு, உதயன், திசை போன்ற நாளிதழ்கள், வெளிச்சம், தளிர் போன்ற பருவ இதழ்கள் காரணன், உதயன், சர்மா – இன்னோரன்ன பெயர்களில் இவரின் அரசியல் எழுத்துக்களுக்கு வாகனமாகியுள்ளன.

ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியரான ஜெயராஜூடன் இணைந்து உதயன் - விஜயன் என்ற பெயரில், 'இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்' என்ற முக்கியமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

இலங்கை இனப்பிரச்சனை யுத்தத்திற்கு இந்து மகாசமுத்திரம் எத்தகைய பங்காற்றுகிறது என்பதை இந்நூல் உலகுக்கு முரசரைந்து சொல்லுகிறது.

'முதல்நிலை அர்த்தத்தில் உலகம் என்றால் வர்த்தகம். வர்த்தகம் என்றால் கப்பல். கப்பல் என்றால் கடல். கடல் என்றால் இந்து சமுத்திரம். இந்து சமுத்திரம் என்றால் இலங்கை, ஏகாதிபத்திய முற்றுகை.'

என்ற கருதுகோளை முன்னிறுத்துகிறார். சமகாலக் கருதுகோள்களை, கோட்பாடுகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய வரலாறு, சமுதாய நிலைமைகளிலிருந்து மட்டுமே தோண்டக் கூடாது. இருநூறு ஆண்டுகளுக்கும் முந்தியதிலிருந்தும் வகுக்கக் கூடாது. கடந்த 20 ஆண்டுகள் நிலைமைகளிலிருந்து கணிக்க வேண்டும். யதார்த்த நிலைகளிலிருந்து, அதாவது உண்மைநிலைகளிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்தின் கோட்பாடுகளும் விளக்கப்பட வேண்டும். புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு எந்த ரீதியில் போகிறது என்பதை அப்போது தான் தெளிவாகக் கணிக்க முடியும். மு. திருவின் அனைத்து எழுத்துக்களும் இவ்வகை அரசியல், வரலாற்று ஆய்வுகள் தாம்.

  • தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் -1985
  • இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் -1987  
  • புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு -1990
  • இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள் - இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை -1990
  • ஜே ஆரால், ஜே ஆருக்காக, ஜே. ஆருடைய -1994
  • சமஷ்டியா, தனிநாடா? -2005
  • கொழும்பு -2007
  • தேசியமும் சனநாயகமும் -2010,
  • இலங்கை யாப்பு -2017
  • நீங்கள் ஏந்தியிருக்கும் 'பூகோளவாதம் - சர்வதேச வாதம்- புதிய தேசிய வாதம்' -2018 

பொருண்மைகளின் ஆழத்திலிருந்தும், உலக ஞானத்தின் தொடர்ச்சியிலிருந்தும் இவருடைய எழுத்துக்கள் எழுகின்றன.

தேசியம் ஒரு நீதிக் கோட்பாடு. சனநாயகம், பண்பாடு பற்றிய நீதிநெறிதான் தேசியமாகும். ஆதலால் தேசியப் போராட்டமென்பது அநீதிக்கு எதிரான போராட்டமாக, அநாகரிகத்திற்கு எதிரான போராட்டமாக, சனநாயத்தை நிலைநாட்டுதற்கான போராட்டமாக அமைகிறது. தேசியத்தின் மிக அடிப்படையான விசயம் மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்காளிகளாக்குவது தான்.

தேசியவாதம், என்பது புறத்தோற்றத்தில் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையைக் கொண்டிருக்கும். இங்கு ஒரு மொழி, இன, பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கை முறைகள் என்பனவற்றை அவனது வாழ்விலிருந்தும், அதற்கான அரசியலிலிருந்தும் பிரிக்க முடியாது. அது அவனது பிறப்புரிமையாகும். இனம், மொழி அவன் பிறப்புரிமை, அவனுக்குரிய பிரதேசமும் பிறப்புரிமை, வாழ்க்கை முறையும் பிறப்புரிமை, சனநாயகமும் பிறப்புரிமை, பிற மனித உரிமைகளும் பிறப்புரிமை.

அவருடைய ஆய்வு ஈழத்தமிழருக்குத் தேவையானது எதுவோ, அத்திசையில் பயணிக்கிறது. தேவை வேறு விருப்பம் வேறு. தேவை யதார்த்தம் சார்ந்து பிறப்பது. இன்றையதினத்தில் ஈழத்தமிழரின் தேவை உள்ளிழுப்பதற்கும் வெளிவிடுதற்குமான சுவாசிப்புக்கான சிறிது காற்று. 

தேசிய வாதம் - பலவகையானது எனப் பட்டியலிடுகிறார். காலனியத்தையும் தேசியவாத விவரிப்புக்குள் தொகுக்கிறார். காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் எழுந்து வந்த இடைமாறு காலத்தையும் குறிப்பிடுகிறார். 'காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் விடுதலையின் பின்னான தேசியவாதம் ஒரு வகையாகவும், மேற்படி அடிமைநாடுகளில் விடுதலையின் பின் காலனிய எஜமானிய நாடுகள் கைக்கொண்ட தேசியவாதம் ஒரு வகையாகவும் அமைந்தன' எனத் தெளிவுபடுத்துகிறார்.

காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தால் விடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகள் - மீண்டும் மறுவகையான காலனிய ஆதிக்கத்துக்குள் போய் முடிந்தன. இந்நாடுகளின் உள்பரப்புக்குள் காலனியநாடுகளின் நேரடி ராணுவப் பிரசன்னம் இல்லை. அவனுடைய போலிஸ் இல்லை. நேரடி ஆட்சி இல்லை. ஆனால் விடுதலையான நாடுகளின் அரசு, ஆட்சி உறுப்புக்கள், நிதிமூலதனம், வணிகம் மூலம் உள்ளிறங்கிக் கொண்டிருக்கிறான். விடுதலைபெற்ற நாடுகளின் அரசியல் தலைமைகள் மூலம், பொருளாதார அடியாட்கள் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், உலகமய வணிக உத்திகள் மூலம் இது சாத்தியமாகிறது.

கென்யாவின் கூகி -வா – தியாங்கே நோபல் விருது பெற்ற எழுத்தாளர். ஒரு எழுத்தாளன் முற்கால ஞானிபோல், சமூகத்தின் மனச்சாட்சியாகச் செயல்படவேண்டும் என்பார். விடுதலை பெற்ற கென்யா மீண்டும் பின்காலனியமாக மாற்றப்பட்டது. கென்யாவில் ஏகாதிபத்திய, பின்காலனிய அசைவுகள் குறித்து நோபல் பரிசு பெற்ற நாவலான அவரது 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' நூலிலிருந்து சில வாசகங்கள்:

• 'என் சொந்த நாட்டுக்கு முன்வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால், இந்த நாட்டின் பின்வாசல் வழியாக நுழைவேன். முன்னைக் காட்டிலும் ஆழமாக வேரூன்றக் கூடிய விதைகளை விதைப்பேன்:

  • இன்றோடு என் முகத்தை மறைத்துக் கொள்வேன். நடக்கும் கூத்துக்கள் எல்லாவற்றின் திரைமறைவிலும் நானிருந்து கொள்வேன். கதவுகளிலும் சன்னல்களிலும் நீதான் நிற்பாய். உன்முகம் எப்போதும் வெளியே தெரியும்.
  • உங்களுடைய சாவிகளை உங்களிடமே ஒப்படைத்த பின்னும், என்னுடைய ஆணைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறீர்கள். சாவிகளை நான் வைத்திருந்த காலத்தை விட, என் மூலதனத்திலிருந்து அதிக விகிதத்தில் தருகிறீர்கள்.
  • திருட்டும் கொள்ளையும் தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல். திருட்டும் கொள்ளையும் இல்லையென்றால் இன்று அமெரிக்கா எங்கே இருக்கப் போகிறது? இங்கிலாந்து என்னவாக இருக்கும்?  பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்?
  • மற்றவர் விதைத்த நிலத்தில் நீ அறுவடைசெய். மற்றவர் வியர்வையில் விளைந்ததை நீ நாணயமாக்கு. இன்னொருவன் வெட்டிய கிணற்றில் நீரை எடு. மற்றவர் கட்டிய வீட்டில் நீ குடியேறு. மற்றொருவர் கஷ்டப்பட்டு நெய்த   ஆடையை நீ உடுத்து.
  • தாய்த்திருநாட்டின் வாயிலைப் பாதுகாத்து வந்த அறிவுமையங்கள் தகர்க்கப் பட்டுவிட்டன. ஞானக்கண் தானே அவியும்படி விடப்பட்டது. பண்பாட்டுக் காவல்பீடங்கள் நொறுக்கப்பட்டு விட்டன. இந்த நாட்டு இளையோர் கேடயங்களையும் ஈட்டிகளையும் பரணில் போட்டுவிட்டார்கள்.
  • பண்பாட்டு ஏகாதிபத்தியம் மனரீதியான குருட்டுத் தனத்தையும் செவிட்டுத் தனத்தையும் உருவாக்குகிறது. மக்கள் சொந்த நாட்டில் என்ன செய்யவேண்டும், எப்படிச் சுவாசிக்க வேண்டுமென்பதைக் கூட வெளிநாட்டுக்காரன் வந்து சொல்லிக் கொடுக்கவேண்டுமென்கிறது.
  • இன்றிலிருக்கிறது நாளையின் களஞ்சியம். நாளை என்பதோ இன்று நாம் விதைப்பதன் அறுவடையே'

விடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் கதி இதுதான். ஒரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் அடிமையாயிருந்து விடுதலை பெற்ற நாடுகள், இப்போது பன்னாட்டு மூலதனத்துக்குள் மாட்டுப்பட்டன. 'எந்த வீட்டின் வாசலில் உரைகல் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் மொன்னைக் கத்தி இருக்க முடியாது' என சுயமரியாதை உணர்வைத் தீட்டிக் கொண்ட தலைமைகள் இல்லை. மொன்னைக் கத்திகளாகவே இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும்போல் சுயநலம்காக்கும் மொன்னையாக இருக்க முடியாது, இருக்கமாட்டேன் என மு. திருநாவுக்கரசு கூர்தீட்டிக் கொண்டேயிருக்கிறார். அவர் தீட்டுவது அறிவாயுதம். அது சாக்ரடீஸ் போன்ற ஞானிகள் ஏந்திய அறிவாயுதம்.

ஒரு கிரேக்கவாசகத்தை மு. திரு. அடிக்கடி மேற்கோள் இடுவார். 'பித்தன் தன்னைப் பற்றிப் பேசுவான். அற்பன் அடுத்தவனைப் பற்றிப் பேசுவான். சாமானியன் சம்பவங்களைப் பற்றிப் பேசுவான். ஞானி பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுவான்.'

மு. திரு. பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறார். தனது மக்களைப் பற்றி, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் தமிழ்ப் பிரதேசம் வாழ நேர்கிறது பற்றிப் பேசுகிறார். தமிழ்ப்பிரதேசம் தனியாய் இல்லை, இந்தப் பிரபஞ்சத்துக்குள், இந்தப் பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது. இந்த நூலில் வரலாற்றியல், அரசியல், புவியியல், சர்வதேச இயல், உலகமய இயல் போன்றவைகளினூடாக தமிழர் வாழ்வியலைத் தேடுகிறார். புதுப்புதுக் கருதுகோள்களை வரையறுக்கிற போது – புதிய புதிய சொல்லாடல்களைக் கண்டடைகிறார்.

எத்தனை கடினமான, மலைப்பாறை போன்ற தத்துவார்த்த, கோட்பாட்டு விஷயங்களாயினும் எளிமையாய் எடுத்துரைக்கும் சிடுக்குகளற்ற மொழி இவரின் கைவசப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் நமது தாய்மார்கள் ஆட்டில் பால் கறப்பார்கள். ஆட்டை லாவிப் பிடித்து, பின்னத்தங் கால்களை இரு தொடைகளுக்கிடையில் இடுக்கிக் கொண்டு, கனத்த காம்புகளில் பால்கறக்கும் லாவகம் இது. அரிய, சீரிய மடி கனத்த பொருண்மையையும் புதிய சொல்லாடல்களுக்குள் இடுக்கிக் கறந்து எடுத்துரைத்து விடுகிறார்.

3

நவீன தேசியவாதம் - என்ற புதிய எல்லையை அடைகிறார். அந்த வெளிவட்டத்துள், 1.சமூக சனநாயக தேசியவாதம் 2.சமூக நலன் பேண் தேசியவாதம் 3.ஆக்கிரமிப்புத் தேசியவாதம் என மூன்று உள்வட்டங்களைப் போடுகிறார். புதிய வரலாற்றுக் கட்டத்தில் உண்டானவை இம்மூன்று தேசிய வாதங்களும்.

'தேசியவாதம் தோற்றம் பெற்றபின்பு தான் மார்க்சியம் தோன்றியது. மார்க்சீயம் தேசியவாதத்துடன் இணைந்து தனக்குரிய அறிவியல் பாதையில் தேசியத்தை வழிநடத்தத் தொடங்கிற்று. அந்த இடத்தில்தான் தேசியவாதம் சமூக ஜனநாயக தேசியவாதமாக உருப்பெறத் தொடங்கியது. இது இடதுசாரிப் பாதையில் தேசியவாதம் முன்னெடுக்கப்படத் தொடங்கிய பரிமாணத்தைப் பெற்றது. இதுதான் புதிய தேசியவாதம்'

இந்தச் சமூக ஜனநாயக தேசியவாதம், சமூக நலன் பேண் தேசியவாதம் தவிர மூன்றாவது தனிப் பாதையைக் கொண்டது தேசிய வெறிகொண்ட 'ஆக்கிரமிப்புத் தேசியவாதம்' - இட்லர், முசோலினி, மிலோசவிக் போன்றோரது தேசிய இனவெறி அரசியல் – ஒரு புதிய அரசியல் பதத்தின் மூலம் அர்த்தப்படுத்தப்படுகிறது. இவர்களது தேசிய இனவெறி அரசியலானது இராட்சஸ தேசியவாதம் என்கிறார். இந்த இராட்சஸ தேசியவாதப் புள்ளியில் இன்று மாட்டுப்பட்டவர்களாக நாம் நிற்கிறோம். இராட்சஸ தேசியவாதத்துக்குள் மாட்டுப்பட்ட நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றுவிட்டன.

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று சொல்லி நிறுத்தி வழிபோனீரே
என்று தனித்துவிடப்பட்ட அபலையாய் நாம் மட்டும் புலம்பித் தவிக்கிறோம். ஒருபெண்ணாகப் பிறந்ததற்கு அவள் பட்ட பாட்டைப்போல் பட்டுத் தவித்துக் கொண்டுள்ளோம்.

பனிப் போரின் பின்னான காலத்தில் தேசிய இனவிடுதலை சாத்தியமாகி 23   நாடுகள் விடுதலை பெற்றன. சதத் ஹசன் மாண்டோ என்ற உருது எழுத்தாளர். பிரிவினைக்கு முன் அவர் மும்பையில் வாழ நேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகள் பிரிந்தன என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்தான் சொன்னார்,

'இருநாடுகள் பிரிந்தன என்று எழுதாதே! இரு நாடுகள் உதயமாகின என்று எழுது' என்றார்.  தேசிய இன வரலாற்றில் அதிக அளவிலான தேசிய இனங்களின் நாடுகள் உதயமாகிய வரலாற்றுக் காலம் இது.

2009- முள்ளிவாய்க்காலின் பின் மனித உரிமை அவையில் தமிழினப் படுகொலை பற்றிய விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாய் தீர்மானத்தை முன்மொழிந்த நாடு கியூபா.

மார்க்சியம் தேசிய இன விடுதலையை ஆதரிக்கிறது. ஆனால் மார்க்சியத்தின் பெயரைக் கூறும் அல்லது அந்தப் பாரம்பரியத்தைக் கொண்ட ருசியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் தேசிய இன ஒடுக்குமுறையைச் செய்கிற அரசுகளுக்கு இணக்கமாய் இனவெறி ஆதிக்கத்தை ஆதரிக்கின்றன. ஓர் இனத்தை இன்னொரு இனம் ஒடுக்குவதை எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் போட்டுச் சென்ற கோடு.

பனிப்போர்க் காலம், பனிப்போரின் பின்னான காலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அந்தக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமானது உள்ளும், புறமும் முற்றிலும் தனிமைப்படுத்தபட்டு மிகப் பரிதாபகரமாக கிருமிகளைக் கொல்வது போல ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தமிழ் மக்கள் தரப்பிலும், 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. உள்ளக விசாரணை அறிக்கையின் வாயிலாகவும் தெரிய வந்தது. 21-ஆம் நூற்றாண்டில் கேட்பாரின்றி நடந்தேறிய பாரிய இனப்படுகொலையானது மிகப்பெரிய மனித அவலமாகவும், பெரும் அநீதியாகவும், பெரும் துயரமாகவும் அமைந்தது.

இனப்படுகொலைக்கு உள்ளான இந்த அப்பாவி மக்களுக்காக நீதி கேட்க எந்தவொரு அரசும் இல்லை என்பது மட்டுமன்றி, இம்மக்களையும், அவர்களது இன்னல்களையும் பயன்படுத்தி தத்தமது தேவைகளை உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் பூர்த்தி செய்து கொள்ளும் கேவலம் இன்றைய துயர்தோய்ந்த யதார்த்தமாய் காணப்படுகிறது. இப்போது தான் ஏகாதிபத்திய சர்வதேசங்களைப் பார்த்து
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்றுசொல்லி நிறுத்தி வழிபோனீரே 
நம் மக்கள் கேட்கிறார்கள்.

இந்த இடத்தில் உள்நாட்டுத் தலைமை ஏற்ற தேசியவாதிகள் தமது சமூக, அரசியல் ஆதாயங்களுக்கு ஏற்ப உள்வாங்கிக் கொண்டனர். அரசியல் ஆதாயம் மட்டுமல்ல, அவரவர் சார்ந்த சமூக ஆதாயம் என்ற சொல்லாடலை மு. திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். சிங்களப் பிரதேசமாயினும் தமிழ்ப் பிரதேச தேசியமாயினும் 'சமூக ஆதாய அடிப்படை' இருக்கிறது. சாதி, மதம், குடும்பம், உடமை என ஆசிய சமூகத்தில் அர்த்தம் கொள்கிறது.

சமகாலத்தில் இந்தப் புவியியலுக்குள், சர்வதேச அசைவுக்குள், நாம் எந்தப் புள்ளியல் நிற்கிறோம்? இந்தப் புள்ளியைக் கண்டடைவதும், செயல்படுத்த முன்னேறுவதும் நம் வேலை என மு. திரு கேள்வி எழுப்புகிறார்.

2009ல் அரங்கேறியது இனப்படுகொலை. அது இனப்படுகொலை அல்ல, இலங்கையை நிலைப்படுத்த மேற்கொண்ட புத்திசாதுரிய நடவடிக்கை என்ற நாடகமும் ஐ.நா. வில் அரங்கேற்றப்பட்டது. ஆனால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மையையும் சர்வதேச சமூகத்தின் முன் ஓர் உலக அபிப்ராயமாக வடிவம் பெற்றது. இன்று சர்வதேச விசாரணை என்பதும் கானல் நீராகி தமிழருக்கான பரிகார நீதியும் குப்பைக் கூடைக்குப் போயுள்ளது. அமெரிக்கச் சதிக்கு சர்வதேசமும் உடன் போனது.

ஐ.நா. தயாரித்த அறிக்கையும், அதன்மீது பின்பு அமெரிக்கா முன்வந்து தானாகவே போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை முன்னெடுக்க முற்பட்டபோது, சர்வதேச சமூகத்தின் எங்கோ ஓர் மூலையிலாவது நீதிக்கோர் இடமுண்டு என்ற நப்பாசை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இலங்கை ஆட்சி மாற்றத்தோடு அமெரிக்க அரசின் தீர்மானம் தடம்மாறத் தொடங்கியதும் சர்வதேச சமூகத்தின் மீதும், நீதி, ஜனநாயம் என்பவற்றின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை அற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது.

'எது எப்படி இருப்பினும், தமிழ் மக்கள் இதற்காக சீனா பக்கம் போக முடியாது. யதார்த்தத்தில் அப்படி அதற்கு ஒரு இடமுமில்லை. இந்தியாவோ, அமெரிக்காவோ தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டத் தவறியிருந்தாலும், அவர்களை நோக்கி நீதியின்பால் போராடி அவர்களின் உதவியுடன்தான் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அரசுகளில் தங்கி நிற்காது அந்த அரசுகளின் மக்களிடம் செல்ல வேண்டும். பொருத்தமான சர்வதேச இராஜதந்திர வழிமுறைகளைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு நீதியின்பால் பற்றுறுதியும், ஆளுமையும், செயற்திறனும், தீர்க்கதரிசமும் கொண்ட தலைமை தமிழ் மக்களுக்கு அவசியம்' என வலியுறுத்துகிறார்.

தனது புவியியல் அமைவிடம் ஒன்றை வைத்து உலக அரசியலை காலத்துக்குக் காலம் தன் வசப்படுத்திவரும் இலங்கையின் இராஜதந்திரம் வல்லமை பெற்றது. அதன் இராசதந்திரத்துக்கு முன் தமிழ்த் தலைமைகளின் வீரம், விவேகம் கால் தூசு பெறாது. சிங்கள ராஜ தந்திரம் பற்றி இம்மாதிரி விரிவான ஆய்வை இவர் போல் செய்தவர் எவருமிலர்.

ஈழத்தமிழர்கள் தங்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதுணையானது என்பதை   எப்போதும் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். இதன்படி இந்தியாவின் சொந்தப் பாதுகாப்பு நலன் சார்ந்த அடிப்படையிலும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு.

இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும் என்பது அவரது கருத்து.

தமிழ்த் தலைமைகள் இவைபற்றிச் சிந்திக்க - மூளையைக் கசக்கிக் கொள்ளத்தான் வேண்டும். மூளையை இயக்கச் சிரமப்பட்டு சும்மா குந்தியிருந்து - காக்காய் உக்காரப் பனம் பழம் விழும் என்று காத்திருக்கப் போகிறோமோ? சிந்திக்காத மூளை துருப்பிடித்துப் போகும். சிந்திக்காத மனிதன் அடையாளமற்றுப் போவான்.

இராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் தேசிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும் என்று மு. திரு. கருதுகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.

ஒரு பிரச்சனையில் உண்மையான ஈடுபாடு அவசியம். மக்களுக்கு உண்மையாக இருத்தல், மக்களுக்கு ஊழியம் செய்தல், மக்களில் கலத்தல்   மாத்திரமே ஒரு பிரச்சினையின் உண்மையான ஈடுபாட்டின் இலக்கணம்.  அர்ப்பணிப்பு மட்டும் போதாது. காலந்தோறும் மாறும் நிலைமைகள் பற்றிய ஆய்வு நோக்கு, அதனடியான இராசதந்திர முன்னெடுப்பு    முன்னோடிகளுக்கு முக்கியம்.

'கலப்புல் மேய்ந்தாலும் காடை காட்டிலே' என்பார்கள். உலகளாவிய பார்வை கொண்டு சர்வதேசமெங்கும் சுற்றி வந்தாலும், அவருடைய கால் ஈழப்பிரதேசத்தில் வந்து நிற்கிறது. அவருடைய நாக்கு விடுதலையின் புதிய பாடலை இசைக்கிறது.

இன்னொரு கதை உண்டு.

ஏழு மலை கடந்து, ஏழு வனம் கடந்து, ஏழு சத்தா சமுத்திரம் கடந்து, நடுவிலே ஒரு கடல். கடலின் நடுவில் ஒரு தீவு. தீவு நடுவில் ஒரு நாழிக் கிணறு. நாழிக்கிணற்றில் கூடு கட்டி வாழும் ஒரு கிளி. கிளியில் தங்கியிருக்கும் அந்த முனியின் உயிர் - என்றொரு தொன்மக் கதை உண்டு.  கதையில் வருவது போல் – புவியியல், அரசியல், ஆட்சியியல் என உலகெல்லாம் வலம்வந்த போதும், இந்தச் சிறுதீவின் ஈழநிலத்தில்தான் தங்கியிருக்கிறது மு. திரு என்ற குறுமுனியின் உயிர். விடுதலை உச்சரிப்பில்தான் அதன் உயிர்ப்பு.

'அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்'– என்ற மு. திருவின் எச்சரிக்கைகைய, கவலையை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி: பொங்குதமிழ் - 2 மார்ச் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌