வாழ்ந்து கெட்டவர்கள்: பா.செயப்பிரகாசத்தின் அம்பலகாரர் வீடு

கடந்த ஒரு மாதமாக அந்த நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தாலும் சரி, அவரிடம் பேச வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலும் சரி என்னைக் கொஞ்சம் தயார் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது.

இணைப்புக் கிடைத்தவுடன் அவர் வழக்கமாகச் சொல்லும், ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘சாமியே சரணம்’ என்று சொல்கிறார். அவர் சொல்கிற அந்த வார்த்தைகளை நானும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார். இப்படி எதிர்பார்ப்பது இவர் மட்டுமல்ல. தமிழ் நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ‘ஐயப்பன் பக்தி’ பண்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்.

தாங்கள் மாறிய நிலைக்கு மற்றவர்களையும் மாற்றும் நிர்ப்பந்தத்தைப் பக்திமான்களும், அவர்கள் வணங்கும் கடவுளும் கொடுக்கிறார்கள் என்ற வகையில் பக்தியும் கடவுளும் ஒருவிதத்தில் வரவேற்கப்பட வேண்டியனவே. இந்தப் பக்தியும் கடவுளும் ஏற்படுத்தும் மாற்றம் நிரந்தரமான மாற்றமாக இருந்தால் அதை மறுத்துப் பேசும் வல்லமை எந்த நாத்திகனுக்கும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அவை அவர்களிடத்தில் தற்காலிகமாகவே இருக்கிறது என்பதானாலேயே நாத்திகவாதமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பக்தியும் கடவுளும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றம் நிரந்தரமானதாக இல்லை என்பதுதான் அதன் பலவீனம். கோயிலுக்குப் போகிற போது பக்திமானாக இருக்கும் ஒரு மனிதன் கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாகவும், போதையூட்டும் கருத்துக்களைச் சொல்லும் திரைப்படக்காரனாகவும் இருக்கிறான். பக்திக்கான இடம் என்று சொல்லப்படும் இடங்களே தவறுகள் நடக்கின்ற இடமாக இருக்கின்றன. தவறுகள் என்பன என்ன என்று கேட்டால் மற்றவர்களுக்குத் தீங்கும், துன்பமும் ஏற்படுத்தாமல் இருப்பது என்றுதான் பதில்கள் கிடைக்கின்றன. 

தன்னளவில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் என்பது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குத் துன்பம் அளிக்கக் கூடாது என்பதே முக்கியம். அந்த ஒழுக்கம் நிரந்தரமானதாக ஆகும் போது வாழ்க்கை அர்த்தமாகிறது. அப்படி வாழ்கிறவர்களே வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று பொருள் என்பதாக எல்லாச் சமய நம்பிக்கைகளும் சொல்கின்றன. ஆனால் வெளிப்படும் எந்தப் பக்தியும் நிரந்தரமாக இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. நிரந்தரமாக இல்லாத பக்தியைக் காட்டியே பக்தி போலியானது என்ற வாதம் கிளம்புகிறது.

ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் அந்த நண்பரே இந்த நாளில் மட்டுமே மது, மாமிசம் போன்ற நடவடிக்கைகளை விட்டு விலகி இருக்கிறார். தொலைபேசி அழைப்பின் போது ‘ வாழ்க வளமுடன்’ என்று அதுவரை சொல்லித் தொடங்குவதற்குப் பதிலாக ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று தொடங்குகிறார். மலைக்குப் போய்விட்டு வந்தவுடன் எல்லாவற்றையும் திரும்பவும் விட்டு விடுவார். இந்த விரதகாலப் பக்தியை ஏன் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்ற கேள்வியை எப்போதும் அவர் கேட்டுக் கொண்டதில்லை. கேட்டுக் கொள்ளப் போவதுமில்லை. நிரந்தரமாகப் பின்பற்ற முடியாத ஒன்றை வாழ்க்கையின் பகுதியாக ஆக்குதல் இயலாது என்கிற போது சாதாரணமனிதர்கள், சாதாரணமனிதர்களாக இருக்கிறார்கள். பக்திமான்களாக ஆவதில்லை.

‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று தொடங்கினாலும் சரி, ‘வாழ்க வளமுடன்’ என்று சொன்னாலும் சரி நான் ‘வணக்கம்; சொல்லுங்க’ என்று தான் தொடங்குவேன். உங்களையெல்லாம் மாத்தவே முடியாதய்யா என்று அலுத்துக் கொள்வார். ‘ நீங்க முதல்ல மாறுங்க; அந்த மாற்றத்த நிரந்தரமாக்குங்க; அப்புறம் மத்தவங்கள மாத்திறதப்பத்தி யோசிங்க’ என்று சொன்னால் சிரித்துக் கொண்டு பேச வந்த விசயத்துக்குப் போய்விடுவார். பேசி விட்டு ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி முடிப்பார்.

வளமான வாழ்வு இதுதானே ஒவ்வொரு மனிதனின் லட்சியமும். எது வளம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதிலைத் தருவார்கள் என்பதும் நிச்சயம். நல்ல குடும்பம்;அமைதியான வாழ்க்கை; நோய் நொடி வருவதற்கு முன்பே மரணம் என்பது ஒருவருக்கு லட்சியமாக இருக்கலாம். இன்னொருவருக்கோ தனது பெயர் உலகம் உள்ளவரை இருக்க வேண்டும்; அப்படியான காரியங்களைச் செய்துவிட வேண்டும் என்ற இலட்சியங்கள் இருக்கலாம். வளமான வாழ்வு எது என்ற கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் கிடைக்கலாம். ஆனால் ‘ வாழ்ந்து கெட்ட குடும்பம்’ என்ற சொற்சேர்க்கைக்கு வெவ்வேறு பதில்கள் கிடைக்காது என்றே நினைக்கிறேன். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்து நொடித்துப் போன குடும்பத்தையே அப்படிச் சொல்வார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

கிராமங்களில் காடுகறை, நிலபுலன், மாடுமனை, தோட்டம்துரவு என எல்லாம் பெற்று வாழ்ந்த ஒரு குடும்பம் சாப்பிடுவதற்கே வழியின்றிப் போகும் நிலையையே வாழ்ந்து கெட்ட குடும்பம் எனச் சொல்வார்கள். அப்படிக் கெட்டுப் போனதற்கான காரணங்கள் அந்தக் குடும்பத்திற்குள்ளேயே இருந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான நடைமுறை. குடும்ப உறுப்பினர்களின் தவறான அணுகுமுறைகள் காரணமாகக் கெடுதல் நேரலாம். அல்லது மாறிவரும் சூழலைப் புரிந்து கொள்ள மறுத்துப் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடிக்கும் போதும் ஒரு குடும்பத்திற்குக் கெடுதல்கள் ஏற்படக்கூடும்.

காரணம் இன்னதென்று தெரியாமலே காணாமல் போகும் குடும்பங்களின் நிலையைப் பார்த்து விதி வலியது எனச் சொல்லி மனிதர்கள் ஆறுதல் அடைந்து கொள்வார்கள். விதியைக் காரணம் காட்ட முடியாது தவிக்கும் படைப்பாளி, அந்தக் குடும்பத்து மனிதர்களின் கடந்த காலத்தைப் பாராட்டி , அவர்கள் மீது இரக்கத்தைத் தூண்டும் கதையாக்கித் தருவான். அப்படியான கதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஏராளமாக உள்ளன.

கிராமத்துப் பண்ணைகள் அல்லது பெருந்தனக்காரர்களின் அன்பையும், பரிவையும் பலபடப் பாராட்டி, இப்போது இப்படி ஆகி விட்டார்கள் என வருத்தப்படும் கதைகள் நமது கிராமங்களின் ஒரு முகத்தை மட்டுமே காட்டக் கூடியன. அதன் இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டும் என்றால், வாழ்ந்து கெட்டுப் போனதற்கான காரணங்களைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். அப்படிச் சொன்ன கதைகள் தமிழில் அதிகம் இல்லையென்றே சொல்லலாம்.

சமூக யதார்த்தத்தை விமரிசன பூர்வமாகப் படம் பிடிக்கும் எழுத்தாளர் என அறியப்பட்ட பா.செயப்பிரகாசத்தின் அம்பலகாரர் வீடு என்ற கதையும் அடிப்படையில் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதையே. நாடோடியாக ஊர் ஊராய் அலையும் ஒரு அம்மன் கொண்டாடியின் பார்வையில் அந்த அம்பலகாரர் வீட்டின் வீழ்ந்த நிலையைப் பேசும் கதைக் கூற்று முறை வாசகர்களிடத்தில் ஏற்படுத்தும் உணர்வு உயர்ந்த பட்சம் இரக்கம் என்பதை மறுக்க முடியாது. தமிழின் சிறந்த கதைகளைப் பட்டியலிடும் பலரும் இந்தக் கதையையும் அந்தப் பட்டியல்களில் சேர்த்துள்ளனர் என்பதை நானறிவேன்.

தனது கதாபாத்திரத்தின் மீது வாசகர்களிடத்தில் இரக்க உணர்வைப் பெற்றுத் தருகிறது என்ற வகையில் அம்பலகாரர் வீடு சரியாக எழுதப் பட்ட கதையே என்றாலும், அந்தக் குடும்பம் – வளமாக வாழ்ந்த அந்தக் குடும்பத்தின் அந்த வாரிசுத் தனது உடலை விற்றுக் கிடைக்கும் காசையே அம்மன் கொண்டாடிக்குத் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்ட காரணம் என்ன? என்ற தளத்திற்குள் செல்லவில்லை என்ற அடிப்படையான பலவீனத்தையும் கொண்ட கதை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

கதை, கவிதை, கட்டுரை, விமரிசனம் எனப் பல தளங்களில் எழுதித் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பா.செயப்பிரகாசம் கரிசல் கிராமம் ஒன்றில் பிறந்து சென்னையில் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடர்ந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதையும், அந்நடவடிக்கைக்காக எழுதுவதையும் நோக்கமாகக் கொண்ட பா.செ. கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். கவிதைத் தன்மை கொண்ட உரைநடையில் கதைகள் எழுதியவர். அவரது அம்பலகாரர் வீடு கதையின் தொடக்கமே ஒரு கவிதையின் தொடக்கமாகத் தான் இருக்கிறது. இனிக் கதையின் முக்கியப் பகுதிகளைக் காணலாம்:

“நிசப்தங்கள் பூத்துள்ள முன்னிரவில், அவன் அந்த ஊர் போய்ச் சேர்ந்தான். அதன் எல்லையை மிதித்த போது உலகம் எல்லாவித அழகுகளோடும் பூத்திருப்பதாய் அவனுக்குத் தோன்றியது” இது கதைத் தொடக்கம் . அந்தக் கதை “மேலவாசல் வழியாகவே காற்சிலம்புகள் ஒலிக்க அவன் வெளியேறினான். அவன் விட்டுச் சென்ற அக்கினிச் சட்டியும் உடுக்கையும் சாட்டையும் அங்கேயே அனாதைகளாய்க் கிடந்தன” என அக்கதை முடிகிறது. இவ்விரு கூற்றுகளுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பா.செயப்பிரகாசம் ஆசிரியர் கூற்றாகக் கூறுவதை வாசித்துப் பார்க்கலாம்.

**************
ஊர் மேல்கோடியிலிருக்கும் பிள்ளையார் கோயிலில் போய் நின்று அவன் காற்சிலம்பை அணிந்து கொண்டான். மின்னல் துண்டுகள் போல், நெற்றியிலும், மார்பிலும் தோளிலும் கைகளிலும் திருநீறு பூசிக் கொண்டான்.

அக்கினிச் சட்டியை எடுத்து மூட்டினான். அதில் புதிது புதிதாக கொழுந்துகள் பூப்பதை, வேடிக்கை பார்த்துக் கொண்டே தொடரும் குழந்தைகளை அங்குக் காணோம். ஊர் அடங்கி முதல் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தான்.

‘மேல வீட்டு’ அம்பலகாரர் இறந்த போது, பண்டிதர்கள் பாராயணம் செய்து வர, பக்திப் பாடல்கள் பெருகி ஒலிக்க, கண்கலங்கி ஊர் நடந்து வர, ஊர்வலம் நடந்ததை அவன் பார்த்திருக்கிறான்.
அவருடைய சாவுக்குப் பின், சாமிகொண்டாடி அந்த ஊரை மிதிக்கவில்லை. ஐந்து வருஷங்கள் நீண்ட யாத்திரையில் கழித்தான். திரும்பி வந்தபின் அறிவு பூர்வமாக நிறைந்திருந்தான். அவனுக்குச் சொல்வதற்கு நிறைய இருந்தன. இனியொரு வாசலில் போய் பிச்சைப் பாத்திரம் ஏந்தக் கூடாது என்று கூட அவன் முடிவெடுத்தான். ஆனால் ஊர்க்களங்களில் மல்லிக்காய் அடிப்பு நடத்தும் கோடையில், நட்சத்திரம் சிரிக்கும் ஒரு இரவில் பழையபடி அவன் அக்கினிச் சட்டி ஏந்திக் கொண்டான். ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்தான்.

ஐந்து வருஷங்களுடைய மரணத்தின் பின் இந்த ஊருக்கு வந்ததால் இந்த ஊரின் நிகழ்காலங்கள் அவனுக்கு மறைந்து போயிருந்தன.

********************

மேலவாசல் வழியாகவே அவன் உள்நுழைந்தான். அந்த வீட்டின் மேல்வாசல் வழியாக நுழைந்து, கீழ்வாசல் வழியாக ஊருக்குள் போகலாம். பிச்சைக்காரர்கள், யாத்திரீகர்கள், அம்பலகாரர் வீட்டில் தான் முதல் பிச்சை வாங்க வேண்டும். ஏகாலி( வண்ணான்) குடிமகன் (அம்பட்டன்), அஞ்சுமணிக்காரன், பெத்தாயில்லோ என்று மகுடியுடனும் சுரைக் குடுவையுடனும் வரும் பாம்பாட்டி, எல்லோரும் அம்பலகாரர் வீட்டில் மேலவாசல் வழியாக நுழைந்து, கீழ் வாசல் வழியாக வெளியேறும்போது பாத்திரங்கள் நிறைந்து, ஒரு கணவாய் வழியாக வெளியேறும் குளிர்ந்த காற்றைப் போல் முகமலர்ச்சியுடன் வெளியேறினார்கள்.

முற்றத்தில் நின்ற அவன், மச்சு வீட்டை நோக்கி ‘அம்மணி’ என உருகும் குரலில் அழைத்தான். நீண்ட நேரம் அவன் அருள் கொண்டு ஆடினான்.பின் ‘அம்மணி’ என உள்நோக்கி அழைத்தான். உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு எவ்வளவு வளமான நிலங்கள்; சொன்னசொல் கேட்கும் நிலங்கள்! அவனே பார்த்திருக்கிறான். இரண்டாம் களையெடுப்பு முடிந்த காலங்களில் அந்தப் புஞ்சை நிலங்களைத் தரிசிக்க வேண்டும். இரவு நட்சத்திரங்களை வைகறையில் அள்ளியெடுத்து ஆயிரங்கைகளில் பூமியில் தூவி விட்டது போல் பூத்துச் சிரிக்கும் கொத்தமல்லிக்காடுகள், தூர்பிடித்து மதமதப்பில் கரும்புத் தட்டை போல் கொழுத்துள்ள கம்மம் புஞ்சை; மகசூல் வீட்டுக்கு வரும் காலங்களில், வீட்டில் அங்கங்கே சிந்திக் கிடக்கின்ற நவதானிய வகைகள்.

இவைகளையெல்லாம், அவன் நினைத்துப் பார்த்தான். பெரிய அம்மணி இப்போது இல்லை. அவர்கள் சமாதியாகி நீண்டநாள் ஆகியிருக்க வேண்டும். வருசம் ஒருமுறை அங்கே வரும்போதெல்லாம் பெரிய அம்மணியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறுபெண், அம்மணியின் பெரிய உருவத்திற்காகக் கீழே வேரில் பூத்த சின்ன பூப்போல் நின்றிருப்பதை அவன் பார்த்திருக்கிறான். சுடர்வீசும் அச்சிறுமி அவனிடம் கை நீட்டித் திருநீறு வாங்கி வாயில் போட்டுக் கொண்டதை அவன் கண்டிருக்கிறான். அருள் வழியும் அழகு, அவள் முகத்தில் பொலிவதைப் பார்த்து ‘தேவி’ என்று பாசத்தோடு கூப்பிட்டான். தொடர்ந்து “மாரியம்மன் கொண்டாடி” வந்திருக்கேன் தேவீ” என்றான்.

கொஞ்ச நேரம் அவன் உடுக்கையை நிறுத்தினான். அந்த இடைவெளியில் வீட்டினுள் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. இளமையின் நளினத்தில் நனைந்து வந்த அந்தக் குரல் ரகசியமாக ஒலித்து மறுவினாடி தீய்ந்து போனது. வீட்டிற்குள்ளிருந்து ஆடைகளின் சரசரப்பும், காலடிச் சத்தமும் கேட்டது. ஆண்குரலின் மங்கிய மெதுவான பேச்சு கேட்பதைக் கூர்ந்து கவனித்தான். பின்புறக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்த போது, வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு ஆண், கட்டைச் சுவரேறிக் குதித்து வெளியேறுவதைக் கண்டான். அவன் இருளோடு இருளாய் மறைந்து விட்டான்.

********************

பெரிய அம்மணியும், அம்பலகாரத் தம்பிரானும் உலவிய முற்றத்தில், கொடிய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை வாலிபன் வெளியேறிய சிறிது நேரத்திற்குள் அவன் உணர்ந்தான். கண்கள் கண்ணீரால் மறைய சாமி கொண்டாடி சிலையாகி நின்றான். தேவி அவன் கையில் ஒரு வெள்ளிக் காசை வைத்துத் தடுமாறிய குரலில் சொன்னாள். “ இன்று இவ்வளவுதான் கிடைத்தது”.

சாமி கொண்டாடி வேதனையால் விம்மினான். ‘தேவீ! என் சின் அம்மினி’ என்று தழுதழுத்த குரலில் கூறினான். “யாருமே இல்லையா அம்மணி?”

பக்கத்தில் நார்ப்பெட்டியில், மற்ற ஊர்களில் அவன் வாங்கிய தானியமும், கொஞ்சம் ரூபாய்களும் நிறைந்திருந்தன. நார்ப்பெட்டியோடு எடுத்து அம்மணியின் முன் வைத்துவிட்டு இருகைகளையும் கூப்பியபடி அவன் சொன்னான். “ தேவி அடியேனின் காணிக்கை”. சொல்லிவிட்டு அவன் வெளியேறினான். மேலவாசல் வழியாகவே காற்சிலம்புகள் ஒலிக்க அவன் வெளியேறினான். அவன் விட்டுச் சென்ற அக்கினிச் சட்டியும் உடுக்கையும் சாட்டையும் அங்கேயே அனாதைகளாய்க் கிடந்தன.

********************

நன்றி: அ.ராமசாமி

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ