பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2009 - இந்தியா

இந்திய நாடாளுமன்றத்தின் முன் பேரணி-மறியல் போராட்டம், 17-02-2009 & 18.02.09

இந்திய அரசே!
1. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனக் கொலைப் போருக்குத் துணை போகாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
4. கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு! தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக்கொடு!

இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ஈழத் தமிழர் தோழமைக் குரல் சார்பில் தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன் பேரணி-மறியல் போராட்டம் நடத்துவதற்காக போராட்டக் குழுவினர் சென்னை, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 15-2-2009 காலை 9 மணியளவில் தில்லி புறப்பட்டனர்.

ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர் திரு. பா.செயப்பிரகாசம் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர் தியாகு, கவிஞர் தாமரை, பேராசிரியர் சரசுவதி ஆகியோர் முன்னிலையில் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வே.ஆனைமுத்து, திரைக்கலைஞர்கள் மன்சூர் அலிகான், ரமேசு கண்ணா முதலானோர் வாழ்த்திப் பேசி வழியனுப்பி வைத்தனர். கோரிக்கை முழக்கங்களோடு விடைபெற்றுப் புறப்பட்ட போராட்டக் குழுவில் எழுத்தாளர்களும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் தமிழுணர்வாளர்களுமாக 150 பேர் இடம் பெற்றனர். மேலும் சிலர் தனித்தனியே தில்லி சென்று போராட்டக் குழுவுடன் சேர்ந்து கொண்டனர்.

17-02-2009 காலை 10 மணியளவில் புதுதில்லி "மந்தி அவுஸ்' என்னுமிடத்திலிருந்து புறப்பட்ட பேரணியில் சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், தில்லிவாழ் தமிழர்களும் தமிழகக் குழுவினருடன் சேர்ந்து கொண்டனர்.

தடையை நீக்கு! தடையை நீக்கு!
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

கொல்லாதே! கொல்லாதே!
ஈழத் தமிழரைக் கொல்லாதே!

இந்திய அரசே!
கொலைகாரச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்காதே!
பயிற்சி கொடுக்காதே!
ஆதரவு கொடுக்காதே!

காந்தி தேசம் கொடுக்குது!
புத்ததேசம் கொல்லுது!

பதுங்குகுழியில் தமிழனாம்!
குண்டுபோட இந்தியனாம்!

இந்திய அரசே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

பயங்கரவாதி யாரடா?
ராசபட்சே தானடா!
மன்மோகன் சிங் தானடா!
சோனியா காந்தி தானடா!

இந்திய அரசே!
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடு!

இம்முழக்கங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுப்பியவாறு பேரணி நாடாளுமன்றச் சாலையில் முன்னேறிச் சென்றது. வழிநெடுகிலும் மக்கள் ஆர்வத்துடன் முழக்கங்களை செவிமடுத்தனர். ஆங்கிலத்தில் அச்சிட்ட ஈழத் தமிழர் வரலாறு, ஈழப் போராட்டத்தின் நியாயம், விடுதலைப் போர்க்களப் பணி பற்றிய வெளியீடுகள் மக்களுக்குத் தரப்பட்டன. தீக்குளித்த வீரத்தமிழன் முத்துக்குமாரின் உருவப் படங்களையும், தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வண்ணப் படங்களையும், மும்மொழிகளிலும் கோரிக்கை முழக்கப் பதாகைகளையும் ஊர்வலத்தினர் எடுத்துச் சென்றனர். பேரணி நாடாளுமன்றத்தை நெருங்குவதற்கு முன்பே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை இரவிச் சந்திரன், டாக்டர் கிருஷ்ணன், தில்லிப் பல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

இரண்டாவது நாளாக 18.02.09 இல் அதே நான்கு கோரிக்கையை வலியுறுத்தி "மந்தி அவுஸி'லிருந்து நாடாளுமன்றச் சாலை வழியாக "ஜந்தர் மந்தர்' வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் படங்களை உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் முழக்கமெழுப்பிச் சென்றனர்.

“Sonia Gandhi!
Kill us!
We are also Tamils!”

''சோனியா காந்தியே!
எங்களையும் கொலை செய்!
நாங்களும் தமிழர்களே!''

என்றெழுதிய பெரிய பதாகை பேரணியின் முன் எடுத்துச் செல்லப்பட்டது. இது தில்லி மக்களிடையே பெரும் பரபரப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியது.

இந்தியத் தலைநகரில் தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் பலமுறை நடந்துள்ள போதிலும், ஈழத் தமிழர் தோழமைக் குரலின் இந்தப் போராட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!'' என்ற கோரிக்கை முதன்முதலாக எழுப்பப்பட்டது. தலைவர் பிரபாகரனின் படங்களை ஊர்வலத்தினர் உயர்த்திச் சென்றதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

மாலை 4 மணியளவில் முடிவுற்ற பேரணியில் அமைப்பாளர் பா. செயப்பிரகாசம், தியாகு, பேராசிரியர் மருதமுத்து ஆகியோர் ஈழப் போராட்டம் குறித்தும் இந்திய அரசின் துரோகம் குறித்தும், கோரிக்கை குறித்தும் விளக்கிப் பேசினர். தில்லியை உலுக்கிய இப்போராட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஈழத் தமிழர் தோழமைக்குரல் தமிழகம் திரும்பியது - அடுத்தடுத்த போராட்டங்களுக்கான திட்டத்தோடும் திட்டவட்டமான உறுதியோடும்!



தமிழினப் பாதுகாப்பு மாநாடு - சென்னை 11.10.09




பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் ஈழவிடுதலைக்காக ஒன்றிணைந்து "தமிழர் ஒருங்கிணைப்பு" என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த பல மாதங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் முன்முயறச்சியில், "தமிழினப் பாதுகாப்பு மாநாடு" என்ற மாநாடு ஏற்பாடாகியது. சென்னை மன்றோ சிலை அருகிலிலிருந்து 11.10.09 காலை 11.00 மணியளவில் "தமிழினப் பாதுகாப்புப் பேரணி" நடைபெற்றது. பேரணிக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, மநாட்டு ஆயத்தக் குழு செயலர் அய்யநாதன், பேராசிரியர் சரசுவதி, ஓவியர் புகழேந்தி, இயக்குநர் புகழேந்தி, எழுத்தாளர்கள் சூரியதீபன், அமரந்த்தா உள்ளிட்ட பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

காஞ்சி மக்கள் மன்றத்தினரின் கலைக் குழு பறையாட்டம் அடித்து முன் செல்ல, தலைவர்கள் பின்னால் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் கலந்து கொள்ள தஞ்சை, சிதம்பரம், திருத்துறைப்புண்டி, ஓசூர், மதுரை என பல்வேறு ஊர்களிலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் வாகனங்களில் வந்திருந்தினர்.

ஈரோட்டிலிருந்து தமிழகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பேருந்துகளில் வந்திருந்தனர். சென்னை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்பு, ஈழஅகதிகள் முகாம் வாசிகள், அம்பத்தூர் திருவள்ளுவர் தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளும் பேரணியில் பங்கு பெற்றன.












மாலையில், தமிழினப் பாதுகாப்பு மாநாடு பொதுக் கூட்டம் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு இதழாளர் அய்யநாதன் தலைமை தாங்கிப் பேசினார்.


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் - 20 ஆகஸ்ட் 2009, வியாழக்கிழமை மாலை 6.00 மணி


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு சென்னை அமைந்தகரை, புல்லா அவென்யு சாலையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனத் தலைவர் மரு.ச.இராமதாசு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் கா.இராமமூர்த்தி மற்றும் பாரதிராசா, மா.நடராசன், பசுபதி பாண்டியன், மெல்கியோர், வெள்ளையன், இளமுருகனார், இராசேந்திர சோழன், செயப்பிரகாசம் உள்படப் பலர் உரையாற்றினர்.

பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலகத் தமிழர்கள் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

தமிழர் வரலாற்றில் முதன் முறையாக உலகத் தமிழர்கள் பிரகடனம் அறிவிக்கப்பட்டு  இருக்கிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். சென்னையைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே ஒன்றுகூடி உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்க இருக்கிறார்கள்.


பேராசிரியர் க.பஞ்சாங்கம் மணிவிழா - 07.02.2009, புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கு

புதுச்சேரிப் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களுக்கு அகவை அறுபதாண்டு நிறைவை ஒட்டி அவரின் மாணவர்கள் ஏற்பாட்டில் மணிவிழா 07.02.2009 அன்று  புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கில் நடைபெற்றது. கவிஞரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாராக இருந்தவரும் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சிற்பி தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழகம் புதுச்சேரி சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் பஞ்சாங்கத்தின் நூல்களையும் அவரின் மாணவர்கள் எழுதிய நூல்களையும் கவிஞர் சிற்பி வெளியிட்டார். புதுவை அரசின் மேனாள் கல்வி அமைச்சர் சிவக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கி.இராசநாராயணன், இரவிக்குமார் (ச.ம.உ) பாரதிபுத்திரன், பாலா, காவ்யா சண்முகசுந்தரம், த.பழமலய், கேமச்சந்திரன், ஆ.திருநாகலிங்கம், ந.முருகேசபாண்டியன், கேசவ பழனிவேலு, இரவிசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் பழ.அதியமான், கவிஞர் பச்சியப்பன், பேராசிரியர் ஆரோக்கியநாதன், பழ.முத்துவீரப்பன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் இரவிக்குமார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பேராசிரியர்கள், படைப்பாளிகள் வந்திருந்தனர்.

நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் - 26, 27 டிசம்பர் 2009

பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது.

நடராசன், வைகோ ம.தி.மு.க, ராமதாசு பா.ம.க, மகேந்திரன் வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத் இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன் த.தே.பொ.க, வைத்திலிங்கம் இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன் (பா.செயப்பிரகாசம் ), பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன் புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன் முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள்.



26 ஆம் தேதி காலை "முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் சூரியதீபன் பேசினார்.

இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், குமரிமாவட்டம்
கலை இலக்கிய மூன்று நாள் முகாம் - மே 22-24, 2009

சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம்

மே 23, சனி
இரண்டாம் அமர்வு – பண்பாட்டு அரசியல்

தமிழ்தேசியம் – ஈழத்தை முன்வைத்து
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

தலித்திய நோக்கில் தேசிய இனங்களின் எழுச்சி
முனைவர் எஸ்.ஸ்டாலின் ராஜாங்கம்

நிலம்- மொழி-தேசம்
முனைவர் டி.தர்மராஜன்
விவாத துவக்கம்
மா.பென்னி, த.ம.பிரகாஷ், அ.ஜகநாதன்


















தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் - மக்கள் கலை விழா - சனவரி 29, 2009 மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள், மதுரை





ஜூலை 2009 - "உயிர் உறைந்த நிறங்கள்: தமிழீழத்தின் ஓர் இரத்தப் பதிவு" ஓவியக் காட்சி




30 அக்டோபர் 2009 - எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் திருமணத்தில் வாழ்த்திப் பேசும் பா.செ









கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்