கதைசொல்லி - 32 வது இதழ் குறித்த பார்வை

அன்புள்ள திரு கே.எஸ்.ஆருக்கு,

வணக்கம்.
கதைசொல்லி 32- வது இதழ் பற்றிய கருத்து இணைத்துள்ளேன். பாராட்டியே சொல்லத் தோன்றுகிறது. விமர்சனமாக எதுவுமில்லை.

நட்புடன்
பா.செயப்பிரகாசம்.


கதைசொல்லி - 32 வது இதழ்
கதை சொல்லி – 32
ஒரு எழுத்துப் பேரணி
பா.செயப்பிரகாசம்

‘எண் வழிச் சிற்றதழ்’ - போட்டுக்கொள்வது ஒரு வகையில் சௌகரியம்: புத்தி பூர்வ சௌகரியம் கொள்வதற்கான ஏற்பாடு. ‘பெரிய சீத்துவம்’ பிடிச்ச வேலையாயிருக்கே என்று தோணுகிற நேரத்தில் தள்ளி வைத்துக் கொள்ளலாம்: நேரம், உழைப்பு, சிந்திப்பு - களுக்குத்   தோதாக இதழைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

எண்வழிச் சிற்றிதழா? எத்தனை எண்ணத்துக்குச் சென்றடையப் போகிறது என்று எண்ணுகிற பேர்வழிகள் இந்தக் கூட்டுக்குள் அடையமாட்டார்கள். றெக்கைக் கட்டிப் பறந்தால் தெரிகிற மாதிரி வானம் அவர்களுக்கு வேண்டும். ஒருச்சாய்த்துப் பறந்து விடுவார்கள். இவர்களுக்குப் புத்தியில் பட ஒன்னு சொல்லலாம்; சின்னச் சின்னக் குரல்கள், கலகத்தின் முதல் குரல்கள். சின்னச் சின்னத் தொண்டைக் குழியிலிருந்து கசிகிற குரல்கள் – ஏதோன்றுக்குமே தொடக்கப் புள்ளிகளாகின்றன.

இலக்கியப் பரப்பில் முன்னரே அறியப்பட்ட, அவ்வாறு அறியப்படாத இருபேர்களினதும்   பேரணியாய் “கதைசொல்லி இதழ் – 32” அமைந்து விட்டிருக்கிறது. இந்த இதழின் இணைவு தன்னியல்பாய் ஒருங்கிணைந்த வனமாய் மலர்ந்துவிட்டது. அவரவருக்கு எது பிரியமோ, அது கிடைக்கும் வனம்.

முதலில் கி.ரா.
உரைநடைக்கு முந்தியது பேச்சு: காற்றில் கலந்து ஓசையாய் ஆகிவிடக்கூடாதே, என்பதற்காக பேச்சைப் பதிவாக்க எழுத்து உண்டானது: போகப்போக பேச்சைப் பதிவு செய்வதிலிருந்து பிறண்டு, எழுத்து தனக்கெனத் தனி ரூபம் கொண்டு, கொழுத்து அலைகிறது. அந்த உரைநடை வண்டியை நிறுத்தி - திசைத்திருப்பி வைத்தார் கி.ரா.

‘உரைநடை’ என்று, சொல்லில் உரைத்தல் என்றிருக்கிறதே, அந்தப் பேச்சு மொழியை ஏனய்யா விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார். உரைநடையில் அவர் போட்ட ‘பேச்சு மந்திரம்’ வட்டார வழக்கு மந்திரம். இப்போது கவிதையிலும் பலிக்க ஆரம்பித்துவிட்டது.

“கரிசல் மண்ணில் உக்கிரபாண்டி என்னும் இளைஞர் முளைத்து வந்திருக்கிறார்; உக்கிரபாண்டி என்ற நாகம்பட்டிக்காரர் அவருடைய ஊர்மக்கள் பேசுகிற மொழியிலிருந்து புதுக்கவிதையைப் பெற்றெடுத்துத் தந்திருக்கிறார்” வாழ்த்தி வரவேற்றிருக்கிறார் கி.ரா. “எங்ஙனாப் பட்ட பயமழை” என்ற கவிதையை எடுத்துப் போட்டிருக்கிறார்.

இந்த கரிசல் சீமையில் மழை மகாத்மியம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. மானாவாரிக் காடுகள் எனப் பெயர்சூட்டி அழைக்கப்படுகிற பிரதேசமெங்கு பார்த்தாலும் இந்த மழை ஒன்னுமாதிரி இல்லை. ஓரிடத்துக் கொழிப்பு; ஓரிடத்து இழவு.

​”மேகத்தைத்தான் காமிக்கி. மழையைக் காட்ட மாட்டங்கு.மழையைக் காட்டுனா, மனுசமக்கா தைரியமாகிக் கீரும்.”

இது எங்க ஊர் பொம்பிளையாளுக பேசுற பேச்சு; ஆம்பிளையாட்கள் சொல்லுக்கும் என்ன குறைச்சல்.

“டவுன்ல ஓயாம மழை பெய்யுது. ஆமா. அங்ஙன நீங்கதான வெதைக்கிறீங்க, பயிரடிக்கிறீங்க. கருதறுக்குறீங்க. விவசாய வேலையெல்லாம் மும்மரம்மா ஒன்னு விடாம எடுத்துச் செய்றீங்க. எங்களுக்கு பெய்ய என்ன கிரகமா?”

“நம்ம கிரகம் சரியில்லை, அதனால்தான் பெய்யலேன்னு பேசிக்கிறாங்க.”

“மழைக்குத்தான் கிரகம் சரியில்லை: டவுன்ல பெய்யுது: இல்லன்னா கடல்ல கொட்டுது. நாங்க தன்னால இடுப்பொடிஞ்சி போய்க் கெடக்கோம். இருக்கிறதெல்லாம் பூமாதேவிக்குக் கொண்டுபோய்ப் போட்டாச்சு. நாம பூமா தேவியைப் பாக்க, பூமாதேவி நம்ம முகத்தைப் பாக்க ஒரே வேதனையாக் கெடக்கு”

மானாவாரி விவசாயம் நீரை நம்பி செத்துப்போய்விட்டது. செத்துப்போன பிணத்துக்கு, ஈவிரட்டி, உயிரூட்ட முடியுமா என்று சம்சாரி திணறிக் கொண்டிருக்கிறான். மேல இருந்து ஒரு மழை.உக்கிரபாண்டியின் வட்டாரக் கவிதையை வாசித்ததும் “எப்பேர்ப்பட்ட பய கவிதை” - என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

எடப்பாடிகளுக்கு இனிதாய் ஆகியிருக்கிறதும் - எம் மக்களை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறதுமான  “எட்டுவழிச் சாலை” பற்றி ’இயற்கை சிவத்தின்’ “தொண்டாங்கயிறு” - கவிதையைச் சேலத்தின் தேசிய கீதம் என்று சொல்லலாம்: நாட்டார் இசை என்றும் சொல்லலாம்; “தொண்டாங்கயிறு” என்றால் தூக்குக் கயிறு.
“ஊரெல்லாம் ஒப்பாரி, எங்க போய் நிக்கிறது
யாரன்னு தேத்துறது
இதுக்கு மேல ஆகாதய்யா,
ஒந்தொனைக்கு நானும் வர
இந்தத் தொண்டாங் கவுறு போதுமய்யா”
கவிதை முடிவில், ஒரு கேள்வி எழுகிறது - ’தொண்டாங் கயிறு’ யாருக்கு?

“நாட்டார் வழக்கில் கவிதைகள் எழுதும்போது, எனக்குள் புதைந்து கிடந்த முன் ஜென்மத்தைப் புரட்டிப் பார்த்ததுபோல் பல பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன்.” (தடம்: பிப்ரவரி, 2019) என்கிறார் நவீனா. புதிய வருகைபோல் தெரிந்தாலும் இலக்கியத்துக்குப் புத்தியவர் அல்ல: தமிழில் கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல தளங்களில் இயங்கிவரும் நவீனா, “நாட்டார் வழக்குகளில் படைப்பிலக்கியம்” பற்றிய ஞானத்தோடு இயங்குகிறார்; உக்கிரபாண்டி போல் பல விடிவெள்ளிகள் முளைத்துவிட்டன. இப்போது பேச்சு நடையிலேயே படைக்கத் தொடங்கிவிட்டோம் என்று கி.ரா சொல்வது உண்மையாகி வருகிறது.

இன்றைய நாளிதழில் (10.02.2019) ஒரு செய்தி: நாகை மாவட்ட வேதாரண்யம் அடுத்த குரவப்புலத்தில் பெண் உழவரான சிவரஞ்சினி, தனது வயலில் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் 340-ஐயும் அறுவடைக்கு வந்த நாட்களில், வயல் கண்காட்சி நடத்தியுள்ளார். நீரின்றி அசையாது நெற்பயிர் என்பது ‘பசுமைப் புரட்சியின்’ நெல் ரகங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாய் இருக்கலாம். நீரின்றியே வளருகிறவை, வறட்சியைத் தாங்கி செழிக்கிறவை நமது வெள்ளக்குட வாழை, கருங்குரவை, காட்டுயானம், பூம்பாளை, பெரும்பாளை நெல்ரகங்கள்.

கே.எஸ்.ஆர் குறிப்புகளில் அத்தனை நெல் ரகங்களையும் பட்டியலிடுகிறார்: யார், யார் என்னென்ன வகைகளை மீட்டெடுத்துள்ளனர் என்கிற விவரமும் தருகிறார். ‘அடேங்கப்பா’, இத்தனை ரகமா என நம்மை அதிசயிக்கச் செய்கிறார். நெல்லில் தொடங்கும் நடை பயணம், அப்படியே நாட்டுப்புறப் பாடல்கள், சொலவடைகள், கூத்து என நமது பூர்வீகத்துக்குத் தாவித் தாவிப் போகிறது: பத்திரப்படுத்த வேண்டிய குறிப்புகள்!

ஈழம் இன்னும் இழவு வீடாக இருக்கிறது: அரசியல் தலைமைகளது ‘துஷ்டி’ கேட்டுப் போகும் மனப்பான்மை இன்னும் மாறிடவில்லை. ஒவ்வொரு தமிழன், தமிழச்சியின் வாழ்க்கையும் முள்ளிவாய்க்கால்களாகத் தொடருகின்றன என்ற ஆறாத் துயரத்தை நமக்குள் இறக்குகிறது வினோதினியின் ‘உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்’க் கதை.

உப்புக்காற்று பட்ட காயம் காந்தலெடுக்கும். குளுந்த, தன்மயமான, இளநீர் போன்ற காற்று கண்ணீரைத் துடைத்துப் போகும்: காற்று அல்ல. நம நமவென்று வேதனை உண்டாக்குகிறது; யுத்தம் தன் கண்களை மூடி ஓய்வின் சாலையில் பயணிப்பதாகவும், சுபீட்சத்தின் நிழலைப் பருகி மக்களெல்லாம் நிம்மதி கொள்வதாகவும், சிங்கள ஆட்சியாளர்கள் புழக்கத்தில் விட்ட பல கதைகள் அங்கு  உலவிக் கொண்டிருக்கின்றன.ஆனால் வாழ்வின் பின்னுள்ள காயங்கள், கண்ணீரை எடுத்து எடுத்துத் தருகின்றன. என்ன ஒரு மொழி, என்ன ஒரு எடுத்துவைப்பு. துளி கூட, உணர்ச்சி வசப்படாத, ஆத்திரம் கொள்ளாத, அபூர்வமான நடை.

வினோதினி - வெளிநாட்டில் வாழுகிறார் என்கிறார் ஒருவர்: இல்லை மன்னாரில் என்கிறார் கே.எஸ்.ஆர் எங்கிருந்தாலும் இங்கிருந்தே கைக்குலுக்கத் தோன்றுகிறது !

சாமியிடிகள் பலவிதம்.பாலிய காலத்தில் கண்ட ருத்திர மூர்த்திகளின் பதிவு - இன்னும் கலைக்கப்படாத ஒப்பனைகளாய் நம்முள் கிடக்கிறது.

“ஆஜானுபாகுவான உடலமைப்பு: புலி வேஷக்காரர் போல் உடலெங்கும் அடர்த்தியான மஞ்சள் பூச்சு; இடுப்பில் சின்னதாய் ஒரு சிகப்புத் துண்டுக்கட்டு: கழுத்தில் வேப்பிலை மற்றும் பூமாலைகள்: நெற்றியில் பட்டை பட்டையாய் குங்குமத் தீற்று. செக்கச் செவேலென வெளியில் துருத்திய நாக்கு: அரிவாள் மீசை: காலில் சலங்கை. கையில் நீளச் சாட்டை”

இப்படியான கோலத்தில் அவதார போதராஜூ - சாட்டையைச் சுழற்றி, தீடீரெனக் கோபமும் ஆவேசமுமாய் வெறிபிடித்தவன்போல், ஆக்ரோசமாய் கூச்சலிட்டவாறு - விண்முட்டும் பறையொலிக் கேற்ப - சதங்கையொலி - ஜதியாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதித்து குதித்து ஆடும் சாமியாடி போதராஜூ - இப்போது எந்த அடையாளமும் இல்லை: அவன் மாடர்ன் போதராஜூ.

கம்ப்யூட்டர் விநாயகர், ஏரோப்பிளேன் விநாயகர்: மோட்டார் சைக்கிள் விநாயகர்: பாகுபலி விநாயகர் என விநாயகர் சதுர்த்தி விழாக்களில் உருவ மாற்றங்கள். கோயில்கள், தெய்வ சந்நிதானங்களில் எல்லாம் ‘மாடர்ன்’ நடனங்கள். சீரழிவாய் மாறியதை நயமான சொல் ரூபங்களில் வெளிப்படுத்துகிறார் சாந்தா தத்தின் “போதராஜூ”.

எல்லா வாழ்க்கையும் முக்கியமானவை: பேசப்படவேண்டியவை . ஒன்னுக்கும் பிரயோசனமில்லை என எடுத்து வீசப்பட்டவையும் கூட  எவ்வளவு உன்னதமானதாய், அர்த்தமுள்ளதாய் ஆகிறது என்பது புலப்படுகிறது ஹேமி கிருஷின் ’ஒப்பனை’ யில்.

அப்படியானதொரு ஒதுக்கப்பட்ட, அலட்சியப் படுத்தப்பட்ட ‘கூத்துக் கட்டுகிற மாமாவைப்’ பற்றி சொல்லிப் போகிறார். “எதையோ செய்ய நினைத்து, எதுவிலோ முடிந்த கதைகள் இங்கு நிறைய உலவுகின்றன: முடிவதுதான் நிஜம். நினைத்துச் செயல்பட்டதெல்லாம் கற்பனையாகப் போய்விடுகிறது.மாமாவும் விதிவிலக்கல்ல” என்கிறார் கூத்துக் கட்டி ஆடுகிற மாமாவின் இறப்பைப் பற்றி ஹேமி கிருஷ். மாமாவின் வாழ்க்கையை சுயானுபவமாகவே நினைவும் நிகழ்ச்சியுமாக - தடுமாற்றமில்லாத ஒரு சொல்முறையைக் கையளித்துவிடுகிற ஹேமி கிருஷை இனித் தேடித் தேடிப் படிக்கவேண்டும்.

வீடு என்பது பெருங்கனவு.ஆனால் துளசிக்கு தவமாக இருந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து தவமிருந்த வீடு, இறுதியில் அவளுக்கு வாய்த்து விடுகிறது: வயது வந்த பருவ மகளுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே அது எப்படிச் சிறையாக மாறிப்போகிறது என்பதை மன ஓட்டமாகத் தன்னியல்பாய் விவரித்துச் செல்கிற ஒரு பெண்னியக் கதை - துளசி பாக்கியவதியின் ’சிறை’.

அடுக்கடுக்காய் அணிவகுக்கும் சிறப்புக்களுள்ள 32-ஐப் பற்றி சொல்லிக் கொண்டு போகலாம்: எழுத்துப் பேரணியின் சீர்களை சொல்லச் சொல்ல வெளி இன்னும் நீண்டு கொண்டு போகிறது.

கி.ரா.96 - நிகழ்வு புதுச்சேரி ”மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில்” விமரிசையாய் நடந்தேறுகிறது. கி.ரா.பிரபாகரின் “கரிசல் மண்ணின் மறக்க முடியாத மனிதர்கள்” நாவலை எழுத்தாளர் இளம்பாரதி வெளியிட - முதல் படியைக் கே.எஸ்.ஆர் பெற்றுக் கொள்கிற - கி.ரா வழங்கிய ஏற்புரையுடன் நிறைவுறுகிற நிகழ்வுகளைச் சித்தரித்துக் காட்டும் கடைசி நான்கு பக்கங்கள் - எழுத்து அணிவகுப்பின் உச்சம்!

நன்றி: கே.எஸ்.ஆர் - 18 பிப்ரவரி 2019

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்