தமிழக மீனவர் பிரச்னை - ஐவர் மரண தண்டனை - தீர்வு எது?
குற்றச் செயலுக்கு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தண்டனைச் சட்டத்தைக் கொண்டியங்குகிறது. ‘ஹீராயின்’ போன்ற போதைப் பொருள் கடத்தலுக்கும் விற்பனைக்கும் சில அரபு நாடுகள் மரண தண்டனை விதித்துள்ளன. மரண தண்டனை அறிவித்துள்ள நாடுகளில் இலங்கை ஒன்று.
இலங்கை இராணு ஆட்சி கொண்டிருக்கிற ஒரு தீவு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் என்பதும் சனநாயகம் என்பதும் அங்கு ஒரு தோற்றம் மட்டுமே. இராணுவத்தில் மட்டுமல்ல, அனைத்துக் கட்டமைப்புகளிலும் உண்மையான இருப்பு இராணுவ முகமே! நீதித்துறையும் தப்பிக்கவில்லை. மாகாண சபைகளின் நிதி அதிகாரத்தைப் பறித்து மைய அரசின் கைப்பிடிக்குள் வைக்கும் ஒரு தீர்மானத்தை இராசபக்ஷே அரசு கொண்டு வந்தபோது, அரசுக்கு எதிரான தீர்ப்பு வழங்கினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டார நாயகா. அதுதான் அவரைப் பழியெடுத்தலுக்கு உண்மையான காரணம். மற்றவை வலிந்து சோடிக்கப்பட்டவை. உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் ஒழுங்கு மீறல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறே நிறைவேற்றி ஷிரானி வெளியேற்றப்பட்ட துயரக் காட்சிதான் இலங்கை நீதித்துறை.
தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மீனவர்களுக்கும் சட்டப்படி மரணதண்டனை விதித்துள்ளோம் என வாதிடுவார்களானால், அது அபத்தமானது. சட்டம் தாண்டியும் நீதியை இராஜபக்ஷேக்கள் வளைப்பார்கள் என்பதற்கு ஷிரானிக்கு நிகழ்ந்த பதவிப் பறிப்பு சான்று.
வடக்கு - கிழக்கு தமிழரின் தாயகம். இணைப்பு என்ற சொல்லுக்கே இடமில்லை. தமிழரின் வாழ்விடத்தைப் பிரிக்கக் கூடாது என்பதுதான் பிரச்னை: சிங்கள அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கை தனித் தனியாகப் பிரித்து, முதலில் கிழக்கு மாகாணத்தைச் சிங்கள மயமாக்கி, பின்னர் வடக்கையும் சிங்களர் எல்லைக்குள் கொண்டு வருவதில் குறியாக இருந்தனர். 1987-ல் இந்தியப் படையெடுப்புக்குப் பின், அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் 13-ம் அரசியல் சட்டத் திருத்தம் கையெழுத்தானது. அதன் முதல் வாசகம் மண் பற்றியதாகும்.
“பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கும் காலம் வரை, தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும்” என இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்தார். “தற்காலிகம் அல்ல, நிரந்தர இணைப்பு” என்று வற்புறுத்தினார். அப்போது பிரபாகரன் பக்கமாக நெருங்கி வந்து, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, காதோரமாக “இலங்கையின் சிங்களத் தீவிரவாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்துவதற்கு அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் நிரந்தர இணைப்புத்தான்” என்றார். அப்போதைக்கு ராஜிவ் சொன்னதை ஏற்றுக்கொண்டாலும் பின்னர் விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படையுடன் போரிட அதுவே அடிப்படையாயிற்று.
13-வது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டு, கிழக்கும் வடக்கும் தனித்தனி அலகுகளாக இலங்கை அதிபர் அறிவிக்கை மூலம் தற்காலிமாக இணைக்கப்பட்டது. அரசியல் யாப்புத் திருத்தம் என்பதால் உண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றியிருக்க வேண்டும். ஜெயவர்த்தனா மிகமிக தந்திரமாக கையாண்டார். அதிபர் அறிவிக்கை மூலம் தற்காலிக இணைப்பை மேற்கொண்டார்.
மாகாண சபை ஏற்பாடுகளையோ, தற்காலிக இணைப்பையோ, சட்டத் திருத்தத்தையோ, சிங்கள ஆளும் வர்க்கமும் சிங்கள மக்களும் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார்கள்.
“தற்காலிக இணைப்பை நாடாளுமன்றச் சட்டமியற்றல் வழியாக மேற்கொள்ளாமல் அரசிதழ் வாயிலான அதிபர் அறிவிப்பு மூலம் செய்யப்பட்டது செல்லுபடியாகாது” என உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியது. வடக்கும் கிழக்கும் தனித்தனிப் பிரதேசம், தமிழர் தாயகமல்ல என்று உச்சநீதிமன்றம் வாயிலாகவே வெளிப்படச் செய்தது தான் ஜெயவர்த்தனாவின் இராசதந்திரம். ஒரு ஜெயவர்த்தனேவின் இராச தந்திரம் அல்ல, அவ்வாறு எண்ணினால் நாம் ’திருநெல்வேலி அல்வா’ சாப்பிட்டவர்களாவோம். 1948-முதல் அரசாண்ட இலங்கை அதிபர்களின், சிங்களரின் தொடரும் இராச தந்திரம் அது.
சிங்கள அரச நோக்குக்கு இனையாக செயல்படுவதுதான் அங்குள்ள நீதிமன்றம் என்பதற்கு இது இன்னுமொரு சான்று. இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடித்து வரும் சிங்கள ராசதந்திரம் 13-வது அரசியல் சட்டத்திருத்தம் என்ற இந்திய ஒப்பந்தத்தையும் செல்லாக் காசாக்கியது.
தமிழக மீனவர் ஐவரின் தூக்குத் தண்டனையும், சிங்கள இராசதந்திர அடிவைப்புகளில் ஒன்று என உணரவேண்டும். எதற்கு, ஏன் என அறிதலில்தான் இந்தியா எங்கு, எப்படி மாட்டுப்பட்டுள்ளது என்பதின் உண்மை தெரிய வரும். மீனவர் பிரச்னையை, இப்போது எழுந்துள்ள ஐவர் தூக்கத் தண்டனையை தனியான ஒன்றாகக் காணக்கூடாது. அது ஒரு கண்ணி மட்டுமே. பிரச்சினையின் முழுக்கண்ணிகளையும் வரிசையிடுகிறார் அரசியல் ஆய்வாளரான மு. திருநாவுக்கரசு. (“இலங்கை இனப் பிரச்சினையின் அடிப்படைகள், தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும், சமஸ்டியா தனி நாடா, தேசியமும் சன நாயகமும், ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும்" - போன்ற பல நூல்களின் ஆசிரியர் இவர்.)
தமிழக மீனவர் பிரச்சினையின் வேரை அறிதலுக்கு, இந்தியாவின் இந்துப் பெருங்கடல்சார் அரசியலின் பூர்வீகத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்.
இந்தியாவின் நட்புநாடு எனத் தன்னைக் கூறிக்கொண்டாலும் அது நடைமுறையில் இந்திய விரோதக்கொள்கையின் அடிப்படையில் நட்புறவைப் பேணுகிறது. அதற்கு இப்போதுள்ள கடைசி உதாரணம் சீனச்சார்பு உறவாகும்.
ஈழத்தமிழர்கள் வெறுமனெ அரசியல் வரலாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் தொப்புள்கொடி உறவு மட்டுமல்ல. அதற்கு மேலாய் இந்தியாவிற்கான கடல்சார் பாதுகாப்பு கவசமாகவும் உள்ளனர். ஈழத்தமிழர்கள் இவ்வகையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கான நிரந்தர நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர். இதனை உணராத இந்தியா சிறுபான்மை இனமான தமிழரைப் பலி கொடுத்து இந்திய - இலங்கை உறவைப் பேண எண்னுகிறது.
அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு, இந்தியாவின் விட்டுக்கொடுப்புகளே இலங்கையின் தமிழின அழிப்புப் போக்குக்கு அடிகோலின என மேற்கூறிவாறு வரையறை செய்கிறார். இதனடிப்படையிலேயே தமிழக மீனவர் பிரச்சினையையும் காணவேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஐவர் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படலாம். ஐவரும் விடுவிக்கப்பட்டாலும் வியப்பில்லை. ஏனெனில் 1976-முதல் இலங்கையில் ஒருவரும் தூக்கிலிடப்பட்டதில்லை. ஆனால் மரணதண்டனைச் சட்டம் மட்டும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் மீனவர் பிரச்னை ஒரு போதும் விடிவு காணப் போவதில்லை. மீனவர் பிரச்னையை உயிரோட்டமாய் வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் இந்திய ஆட்சியாளர்களை - பின்புலத்திலிருந்து இயக்கும் ஆளும் வர்க்கக் குழுக்களைத் தன் கவுட்டுக்குள் இடுக்கிக் கொண்டு நடக்கிறது இலங்கை. காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளைக் கைக்கொள்வது சிங்கள ராசதந்திரம்.
அனைத்து உள்நாட்டுக் கொள்கைகளைப் போல் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்காக வகுக்கப்படுவதுதான் இந்தியாவின் அரசியல் கொள்கை. இந்திய முதலாளி வர்க்கம் பாகிஸ்தானில் முதலீடு செய்யவில்லை. அது பகைநாடு. சீனாவில் முதலீடு செய்ய வழியில்லை. அது பல நாடுகளையும் கொள்ளையிடும் வல்லரசு. இலங்கை அப்படியில்லை. இந்தியப் பன்னாட்டு முதலைகளின் நீச்சல் குளம் இலங்கைத் தீவு. எல்லைப் பிரச்னை முதல் பாகிஸ்தானுடனான எல்லாப் பிரச்னைகளிலும் சுடச் சுடப் பதிலளிக்கும் இந்தியா, சீனாவுடன் அருணாசலப் பிரதேச எல்லையில் மல்லுக்கட்டி நிற்கும் இந்தியா, இது போன்ற அணுகுமுறைகளில் ஐந்து சதவீதம் கூட இலங்கை விசயத்தில் கடைப் பிடிப்பதில்லை.
இதில் தமிழக மீனவர்கள் வாழ்ந்தாலென்ன, செத்தாலென்ன ஈழத்தில் தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை விரும்பிய இந்தியா தமிழக மீனவன் சாகடிக்கப்படுவதும் தனக்கு ஆதாயம் தானே என்று பார்க்கும். நடுக் கடலில் தமிழக மீனவ துள்ளத் துடிக்க சாகடிக்கப்படும் வேளையில், இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ் மன்னன் இராசேந்திர சோழனின் பெருமிதத்தை தனக்காக்கிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது. கடற்படை நடத்தி, கடல்கடந்து நாடுபல கொண்ட சோழனின் ஆயிரமாண்டு விழா. அவனுடைய கடல்வீரத்தைக் கெளரவிக்க இந்தியக் கடற்படை விழா நடத்தும் என அறவித்த்து நடுவணரசு. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 85-ஆம் ஆண்டுவிழா, இராசேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டுவிழா இரண்டையும் இணைத்து தமிழகமெங்கும் பேரணி நடத்திக் கொண்டாடினார்கள் - நவம்பர் 9, 2014-ல்.
இராசராச சோழனுக்கும், அவன் மகன் இராசேந்திர சோழனுக்கும் முடிசூட்டும் தமிழ்ப்பெருமிதத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர் மு. கருணாநிதி. 2ஜி அலைக்கற்றையில் மாட்டிக்கொண்ட அவரது இப்போதைய ஏலாமை நமக்கு வெளிச்சமாகியுள்ளது.
தமிழர் வீரம் என்பதற்காய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரோ, இந்தியக் கடற்படையோ எடுக்கவில்லை விழா. தன் தந்தை தொடங்கி வைத்த சமஸ்கிருத மயமாக்கலை உச்சத்திற்குக் கொண்டு சென்றவன் இராசேந்திரன். சதுர்வேதி மங்கலம், பிரம்ம தேயம் என பிராமணக் குடியிருப்புகளை உழவர்கள் நிலங்களைப் பறித்து, விரட்டியடித்து உண்டாக்கிக் கொடுத்தவன்.சோழர் ஆட்சிக் காலத்தில் நிலப்பறிப்பினை எதிர்த்து உழவர் கலகங்கள் நடந்தன. கோயில்களை இடித்தார்கள் கோபம் கனன்ற மக்கள். வர்ணாசிரமத்தை உயரத்திப் பிடித்து, சமஸ்கிருத்தத்தை தலைமேல் சுமந்து, தமிழை ஓரங்கட்டிய ‘புண்ணிய காரியம்’ நடத்திய பேரரசனுக்கு - விழா எடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்தியக் கடற்படை, இராசேந்திர சோழனுக்கு மரியாதை செய்ததோடு, மட்டுமில்லை, தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கைக்கடற்படையையும் ரொம்ப மரியாதையாக நடத்துகிறது. இதுவரை 800 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதை தடுத்த நிறுத்தியதில்லை. நிலத்திலும் தமிழரைக் கொல்லும் சிங்கள அரசு, நீரிலும் கொல்லத் துணை போகிறது இந்தியக் கடற்படை.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையா? ஈழத் தமிழ்ப் பகுதியா?
இந்தியாவின் பாதுகாப்பு சிங்களவரா? ஈழத் தமிழ்மக்களா?
தாயகத் தமிழரின் தொப்புள்கொடி உறவுகளாக இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல; புவியியல் ரீதியாக இந்தியாவை நோக்கியுள்ள நீண்ட கடற்கரையும், கடல் பரப்பும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசத்தினுடையவை. இந்தக் கடற்பகுதியும் தமிழர்களும் தர இயலாத பாதுகாப்பை தென்னிலங்கைச் சிங்களவரும், மறுதிசை நோக்கித் திரும்பியுள்ள கடற்பரப்பும் தந்து விடுமா? கடல் எல்லை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இருந்தது. எங்கள் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துச் செல்லலாம் என்பது அவர்களின் செயல்பாடாக இருந்தது. மீன்பிடி என்ற போர்வையில் உளவுபார்க்க வருகிறவர்களை அவர்கள் அனுமதித்ததில்லை.
“ஈழத்தமிழர்கள் வெறுமனே அரசியல், வரலாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் தொப்புள் கொடி உறவு மட்டுமல்ல. அதற்கு மேலாய் இந்தியாவிற்கான கடல்சார் பாதுகாப்பு கவசமாகவும் உள்ளார்கள்.” என்று எடுத்துக்காட்டுவார் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.
ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில்தான், தமிழக மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு அடங்கியுள்ளது.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்போர், இலங்கையுடனான கொள்கையை வகுப்பதில் தலைகீழாய் மாற்றம் செய்யவேண்டிய நேரமிது. தமிழீழம் அமையத் துணைசெய்வதின் வாயிலாக, தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். இலங்கை போன்ற பச்சோந்திகளால், கழுத்தறுப்புவாதிகளால் இந்துப் பெருங்கடல் சார் பாதுகாப்பு சாத்தியமேயில்லை.
“இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும்.”
என தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை, அப்படியே வழிமொழிந்திட - ஐ.நா.வுக்குப் பரிந்துரைக்க இந்தியா இனியாவது முன்வரவேண்டும்.
தமிழீழ அரசு அமையுமானால் கச்சத் தீவு பிரச்னையும், தமிழக கடலோடிகள் பிரச்சினையும் லகுவாகத் தீர்க்கப்படமுடியும். இந்துப் பெருங்கடல் பரப்பு – தமிழீழ அரசுக்கும் இந்திய அரசுக்கும் பொதுப்பரப்பாக பேணப்பட முடியும். அதில் மீன்பிடி சம்பந்தமான வரையறைகள் இணக்கப்பாட்டுடன் செய்து கொள்ள இயலும். சுதந்திரமாக தமிழீழ மீனவர்களும், இந்திய மீனவர்களும் மீன்பிடி தொழில் நடத்த உறுதியான ஏற்பாடாக இது அமையும்..
நடுமண்டையில் உளிவைத்து ஓங்கி அடித்தாற்போல், இந்தியா தமிழீழ ஒற்றுமையைச் சிதைக்க, இந்தியா - தமிழ்நாட்டு ஒற்றுமையைக் கூறு போட மீனவர் பிரச்னையை கைவசப்படுத்தியுள்ளது இலங்கை. மீனவர் பிரச்னை நிரந்தரமாகத் தீர்க்கப்படவும், இந்துப் பெருங்கடல் பரப்பு இந்தியாவின் பாதுகாப்பாக அமையவும் தனி ஈழ அரசு அமைதல் ஒன்றே தீர்வு.
இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.
நன்றி: உயிர் எழுத்து - டிசம்பர் 2014

- இது இந்தியாவின் பாதுகாப்பு, வெளிவிகாரக் கொள்கை ஆகிய நோக்குநிலையில் இருந்தும், இலங்கை அரசின் அரசியல் உள்நோக்கங்களின் அடிப்படையிலிருந்தும் எழுந்துள்ள ஒரு பிர்ச்சினையே தவிர மீனவர் பிரச்சனை அல்ல.
- பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இந்தியா மற்றும் இந்து சமுத்திரத்தின் மீதான பிரித்தானிய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கடல்சார் இராணுவக் கேந்திர நிலையமாக இலங்கைத் தீவை பிரித்தானியர் தம் கைவசம் வைத்திருந்தனர். பிரித்தானியரின் இக்கடல்சார் கேந்திரப் பாதுகாப்புக் கொள்கையானது ”சமுத்திரத் திட்டம் (Oceanic Theory)” என அழைக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையும் போது இலங்கைத்தீவும் 1948ஆம் ஆண்டு ஒரு தனித் தேசமாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் ஒரு பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த இக் கடற்பரப்பானது சுதந்திர இந்தியாவின் சகாப்தத்தில் இரு தேசங்களின் கடற்பரப்பாக மாறியுள்ளது.
- இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இலங்கை அரசானது இந்திய ஆட்சியாளர்களின் மனங்களில் கசப்பை ஏற்படுத்தவல்ல பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டதன் மூலம், இலங்கையின் கடற்பரப்பில் திருகோணமலையில் பிரித்தானியர் கடற்படைத் தளத்தையும், கொழும்பு கட்டுநாயக்காவில் பிரித்தானியர் ஒரு விமானப்படைத் தளத்தையும் அமைக்க அனுமதித்தது. இது இலங்கை அரசின் மீது இந்திய அரசுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஊட்டவல்ல விடயமாக அமைந்தது. இக்கால கட்டத்தில் இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் பின்வருமாறு சிந்தித்தனர். பிரித்தானியர் கடைப்பிடித்த ‘கடல்சார் சமுத்திரப் பாதுகாப்புத் திட்டமானது’ சுதந்திர இந்தியாவும் பின்பற்ற வேண்டிய கொள்கையென வரையறை செய்தனர். இதற்கமைய இலங்கைத் தீவானது இந்தியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு புள்ளியாகக் கருதி அதற்கேற்ப அதனைக் கையாள வேண்டுமென்ற ஒரு முடிவுக்கு வந்தனர்.
- இந்த வகையில் இலங்கை அரசை தமது பாதுகாப்பு வளையத்திற்குள் சினேகபூர்மாக வைத்துப் பேணுவதற்கு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு உபாயத்தை மேற்கொண்டனர். அதாவது இதன் நிமித்தம் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியான விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதன் மூலம் அதனுடனான நட்புறவைப் போஷித்துப் பாதுகாப்பினைப் பேணலாமென முடிவு செய்தனர்.
- இன்று பீஜித்தீவில் வாழும் இந்திய சனத்தொகையில் 40 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் ஆவர். இவர்கள் இந்தியாவின் பலபகுதிகளிலிருந்து அவ்வப்போது இத்தீவில் சென்று குடியேறியவர் ஆவர். இவர்களை இந்திய அரசு திருப்பி அழைக்க ஒப்புக் கொள்ளுமா எனில், இல்லை செய்யவில்லை. ஆனால் 150 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை இலங்கை மண்ணில் கொண்டிருந்த மலையகத் தமிழ் மக்களை இந்தியாவிற்குத் திரும்பி அழைக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது. நோக்கமென்னவெனில் இலங்கை அரசுக்கு விட்டுக் கொடுத்து அதன் நட்பைப் போஷித்து அதன் மூலம் இலங்கைத் தீவை இந்தியாவின் பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட ஒரு புள்ளியாகப் பேணலாம் என்கின்ற பிழையான கணிப்பேதான்.
- 1974-ல் கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்தது இந்தியா. யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஆதரவாக தொடர்ந்து செயல்படும் இலங்கையைத் தடுத்த நிறுத்த, கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதன் மூலம் இலங்கையுடன் நல்லுறவைப் பேணமுடியும் எனப் பிழையான முடிவினை மேற்கொண்ட இந்திரா காந்தி செய்து கொண்ட பேரம் இது.
இந்தியாவின் நட்புநாடு எனத் தன்னைக் கூறிக்கொண்டாலும் அது நடைமுறையில் இந்திய விரோதக்கொள்கையின் அடிப்படையில் நட்புறவைப் பேணுகிறது. அதற்கு இப்போதுள்ள கடைசி உதாரணம் சீனச்சார்பு உறவாகும்.
ஈழத்தமிழர்கள் வெறுமனெ அரசியல் வரலாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் தொப்புள்கொடி உறவு மட்டுமல்ல. அதற்கு மேலாய் இந்தியாவிற்கான கடல்சார் பாதுகாப்பு கவசமாகவும் உள்ளனர். ஈழத்தமிழர்கள் இவ்வகையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கான நிரந்தர நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர். இதனை உணராத இந்தியா சிறுபான்மை இனமான தமிழரைப் பலி கொடுத்து இந்திய - இலங்கை உறவைப் பேண எண்னுகிறது.
அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு, இந்தியாவின் விட்டுக்கொடுப்புகளே இலங்கையின் தமிழின அழிப்புப் போக்குக்கு அடிகோலின என மேற்கூறிவாறு வரையறை செய்கிறார். இதனடிப்படையிலேயே தமிழக மீனவர் பிரச்சினையையும் காணவேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஐவர் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படலாம். ஐவரும் விடுவிக்கப்பட்டாலும் வியப்பில்லை. ஏனெனில் 1976-முதல் இலங்கையில் ஒருவரும் தூக்கிலிடப்பட்டதில்லை. ஆனால் மரணதண்டனைச் சட்டம் மட்டும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் மீனவர் பிரச்னை ஒரு போதும் விடிவு காணப் போவதில்லை. மீனவர் பிரச்னையை உயிரோட்டமாய் வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் இந்திய ஆட்சியாளர்களை - பின்புலத்திலிருந்து இயக்கும் ஆளும் வர்க்கக் குழுக்களைத் தன் கவுட்டுக்குள் இடுக்கிக் கொண்டு நடக்கிறது இலங்கை. காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளைக் கைக்கொள்வது சிங்கள ராசதந்திரம்.
அனைத்து உள்நாட்டுக் கொள்கைகளைப் போல் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்காக வகுக்கப்படுவதுதான் இந்தியாவின் அரசியல் கொள்கை. இந்திய முதலாளி வர்க்கம் பாகிஸ்தானில் முதலீடு செய்யவில்லை. அது பகைநாடு. சீனாவில் முதலீடு செய்ய வழியில்லை. அது பல நாடுகளையும் கொள்ளையிடும் வல்லரசு. இலங்கை அப்படியில்லை. இந்தியப் பன்னாட்டு முதலைகளின் நீச்சல் குளம் இலங்கைத் தீவு. எல்லைப் பிரச்னை முதல் பாகிஸ்தானுடனான எல்லாப் பிரச்னைகளிலும் சுடச் சுடப் பதிலளிக்கும் இந்தியா, சீனாவுடன் அருணாசலப் பிரதேச எல்லையில் மல்லுக்கட்டி நிற்கும் இந்தியா, இது போன்ற அணுகுமுறைகளில் ஐந்து சதவீதம் கூட இலங்கை விசயத்தில் கடைப் பிடிப்பதில்லை.
இதில் தமிழக மீனவர்கள் வாழ்ந்தாலென்ன, செத்தாலென்ன ஈழத்தில் தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை விரும்பிய இந்தியா தமிழக மீனவன் சாகடிக்கப்படுவதும் தனக்கு ஆதாயம் தானே என்று பார்க்கும். நடுக் கடலில் தமிழக மீனவ துள்ளத் துடிக்க சாகடிக்கப்படும் வேளையில், இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ் மன்னன் இராசேந்திர சோழனின் பெருமிதத்தை தனக்காக்கிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது. கடற்படை நடத்தி, கடல்கடந்து நாடுபல கொண்ட சோழனின் ஆயிரமாண்டு விழா. அவனுடைய கடல்வீரத்தைக் கெளரவிக்க இந்தியக் கடற்படை விழா நடத்தும் என அறவித்த்து நடுவணரசு. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 85-ஆம் ஆண்டுவிழா, இராசேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டுவிழா இரண்டையும் இணைத்து தமிழகமெங்கும் பேரணி நடத்திக் கொண்டாடினார்கள் - நவம்பர் 9, 2014-ல்.
இராசராச சோழனுக்கும், அவன் மகன் இராசேந்திர சோழனுக்கும் முடிசூட்டும் தமிழ்ப்பெருமிதத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர் மு. கருணாநிதி. 2ஜி அலைக்கற்றையில் மாட்டிக்கொண்ட அவரது இப்போதைய ஏலாமை நமக்கு வெளிச்சமாகியுள்ளது.
தமிழர் வீரம் என்பதற்காய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரோ, இந்தியக் கடற்படையோ எடுக்கவில்லை விழா. தன் தந்தை தொடங்கி வைத்த சமஸ்கிருத மயமாக்கலை உச்சத்திற்குக் கொண்டு சென்றவன் இராசேந்திரன். சதுர்வேதி மங்கலம், பிரம்ம தேயம் என பிராமணக் குடியிருப்புகளை உழவர்கள் நிலங்களைப் பறித்து, விரட்டியடித்து உண்டாக்கிக் கொடுத்தவன்.சோழர் ஆட்சிக் காலத்தில் நிலப்பறிப்பினை எதிர்த்து உழவர் கலகங்கள் நடந்தன. கோயில்களை இடித்தார்கள் கோபம் கனன்ற மக்கள். வர்ணாசிரமத்தை உயரத்திப் பிடித்து, சமஸ்கிருத்தத்தை தலைமேல் சுமந்து, தமிழை ஓரங்கட்டிய ‘புண்ணிய காரியம்’ நடத்திய பேரரசனுக்கு - விழா எடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்தியக் கடற்படை, இராசேந்திர சோழனுக்கு மரியாதை செய்ததோடு, மட்டுமில்லை, தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கைக்கடற்படையையும் ரொம்ப மரியாதையாக நடத்துகிறது. இதுவரை 800 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதை தடுத்த நிறுத்தியதில்லை. நிலத்திலும் தமிழரைக் கொல்லும் சிங்கள அரசு, நீரிலும் கொல்லத் துணை போகிறது இந்தியக் கடற்படை.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையா? ஈழத் தமிழ்ப் பகுதியா?
இந்தியாவின் பாதுகாப்பு சிங்களவரா? ஈழத் தமிழ்மக்களா?
தாயகத் தமிழரின் தொப்புள்கொடி உறவுகளாக இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல; புவியியல் ரீதியாக இந்தியாவை நோக்கியுள்ள நீண்ட கடற்கரையும், கடல் பரப்பும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசத்தினுடையவை. இந்தக் கடற்பகுதியும் தமிழர்களும் தர இயலாத பாதுகாப்பை தென்னிலங்கைச் சிங்களவரும், மறுதிசை நோக்கித் திரும்பியுள்ள கடற்பரப்பும் தந்து விடுமா? கடல் எல்லை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இருந்தது. எங்கள் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துச் செல்லலாம் என்பது அவர்களின் செயல்பாடாக இருந்தது. மீன்பிடி என்ற போர்வையில் உளவுபார்க்க வருகிறவர்களை அவர்கள் அனுமதித்ததில்லை.
“ஈழத்தமிழர்கள் வெறுமனே அரசியல், வரலாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் தொப்புள் கொடி உறவு மட்டுமல்ல. அதற்கு மேலாய் இந்தியாவிற்கான கடல்சார் பாதுகாப்பு கவசமாகவும் உள்ளார்கள்.” என்று எடுத்துக்காட்டுவார் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.
ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில்தான், தமிழக மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு அடங்கியுள்ளது.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்போர், இலங்கையுடனான கொள்கையை வகுப்பதில் தலைகீழாய் மாற்றம் செய்யவேண்டிய நேரமிது. தமிழீழம் அமையத் துணைசெய்வதின் வாயிலாக, தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். இலங்கை போன்ற பச்சோந்திகளால், கழுத்தறுப்புவாதிகளால் இந்துப் பெருங்கடல் சார் பாதுகாப்பு சாத்தியமேயில்லை.
“இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும்.”
என தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை, அப்படியே வழிமொழிந்திட - ஐ.நா.வுக்குப் பரிந்துரைக்க இந்தியா இனியாவது முன்வரவேண்டும்.
தமிழீழ அரசு அமையுமானால் கச்சத் தீவு பிரச்னையும், தமிழக கடலோடிகள் பிரச்சினையும் லகுவாகத் தீர்க்கப்படமுடியும். இந்துப் பெருங்கடல் பரப்பு – தமிழீழ அரசுக்கும் இந்திய அரசுக்கும் பொதுப்பரப்பாக பேணப்பட முடியும். அதில் மீன்பிடி சம்பந்தமான வரையறைகள் இணக்கப்பாட்டுடன் செய்து கொள்ள இயலும். சுதந்திரமாக தமிழீழ மீனவர்களும், இந்திய மீனவர்களும் மீன்பிடி தொழில் நடத்த உறுதியான ஏற்பாடாக இது அமையும்..
நடுமண்டையில் உளிவைத்து ஓங்கி அடித்தாற்போல், இந்தியா தமிழீழ ஒற்றுமையைச் சிதைக்க, இந்தியா - தமிழ்நாட்டு ஒற்றுமையைக் கூறு போட மீனவர் பிரச்னையை கைவசப்படுத்தியுள்ளது இலங்கை. மீனவர் பிரச்னை நிரந்தரமாகத் தீர்க்கப்படவும், இந்துப் பெருங்கடல் பரப்பு இந்தியாவின் பாதுகாப்பாக அமையவும் தனி ஈழ அரசு அமைதல் ஒன்றே தீர்வு.
இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.
நன்றி: உயிர் எழுத்து - டிசம்பர் 2014
கருத்துகள்
கருத்துரையிடுக